ஜெயமோகன் அவர்களால் தன் நண்பர் ஷாஜி அவர்கள் இசைபற்றி எழுதிய புத்தகத்தை வெளியிடும் விழாவுக்கும் கூடவே பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களால் மெஹ்தி ஹசனின் கஸல் அளிப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அவரது பதிவில் பார்த்ததுமே தீர்மானித்து விட்டேன் இதற்கு போயே ஆக வேண்டியதுதான் என்று.
அதற்கு இரு காரணங்கள். ஒன்று ஜெயமோகனை பார்த்தே ஆகவேண்டும், பார்த்து என்னை சங்கடத்தில் ஆழ்த்தியதைப் பற்றி கூறிடல் வேண்டும் என்பதே. இன்னொரு காரணம் அவரால் அன்புடன் ஒரு பதிவில் ஹென்பெக்டாக குறிப்பிடப்பட்டு அவரால் விளையும் 25 பிரச்சினைகளைப் பற்றியும் அறிந்த பிறகு அவரையும் பார்த்தே ஆக வேண்டும் என்பதாகும்.
நிகழ்ச்சி 12.04.2008 மாலை ஆறு மணிக்கு மயிலை லஸ் சர்ச் சாலையில் உள்ள சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெற்றது. அதை ஸ்பான்சர் செய்தது St. Gobain கண்ணாடி தயாரிப்பாளர்கள். (அது சம்பந்தமான ஒரு விளம்பரத்தைத்தான் அன்பே சிவம் படத்தில் மாதவன் அதை தயாரித்ததாகக் கமலிடம் கூறுவார் என்பதை இங்கே போகிற போக்கில் கூறிவிட்டு போகிறேன்) நான் அங்கு போய் சேர்ந்த நேரம் மாலை 5.45 அளவில். அரங்கத்தினுள் 20 பேர் இருந்தால் அதிகம். பிரபஞ்சன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவரிடம் ஜெயமோகன் வந்து விட்டாரா எனக் கேட்டேன். அவர் வரமாட்டார் என்ற பதில் கிடைந்து ஏமாற்றமே அடைந்தேன். ஆக நான் வந்த முதல் காரணம் நிறைவேறப் போவதில்லை. இருந்தாலும் இரண்டாவது காரணம் அப்படியே இருந்தது. ஆகவே இருந்து பார்த்து விடுவோம் என அரங்கத்தில் அமர்ந்தேன். அது நல்லதாக போயிற்று. எப்படி என்பதை பிறகு கூறுகிறேன்.
மாலை 6.10 ஆன பிறகும் நிகழ்ச்சி துவங்குவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த எம்.எஸ்.வி. அவர்களைப் பார்த்து ஒரு வணக்கமும் போட்டேன். சமீபத்தில் 1964-ல் வெளிவந்த சர்வர் சுந்தரம் படத்தில் காண்பிக்கப்பட்ட "அவளுக்கென்ன அழகிய முகம்" என்ற பாடல் ரிகார்ட் ஆகும் காட்சியை திரையில் காண்பித்திருந்தார்கள். அதில் வந்த எம்.எஸ். விஸ்வநாதன் எப்படி இளமைத் துடிப்போடு இருந்தாரோ அதே துடிப்புடன் இப்போதும் இருப்பதாகக் கூறினேன்.
சிறிது நேரம் வெளியில் வந்தேன். ஷாஜி அவர்களது புத்தகம் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். 120 ரூபாய்க்கான அந்த புத்தகத்தை 100 ரூபாய்க்கு தந்தார்கள். அதை வேகமாக வாங்கி, பிறகு அருகில் இருந்த ஷாஜி அவர்களிடம் புத்தகத்தில் கையொப்பம் வாங்கினேன். ஷாஜி அவர்கள் உயிர்மையில் ரெகுலராக இசை பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே அது. அவர் தமிழ் நன்றாக அறிந்தவர் என்றாலும் தான் ஆங்கிலத்தில் எழுதித் தந்த கட்டுரைகளை ஜெயமோகன் அவர்கள் தமிழில் மூலமே மொழிபெயர்ப்பு செய்து கொண்டார் என்பதை அறிந்த நான், "பேஷ், மனிதர் மேலாண்மையின் கோட்பாடுகளை நன்றாகவே கடைபிடித்துள்ளார்" என எண்ணினேன். அவரை அப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன் என்றாலும் அவர் ஜெயமோகனது பதிவின் மூலம் எனக்கு நிரம்பவே பரிச்சயமாகப் போனதை அவரிடம் குறிப்பிட்டேன். என்னுடன் கூடவே தான் வாங்கிய புத்தகத்தில் கையொப்பம் வாங்கிய வேணுகோபால் என்பவர் அறிமுகம் எனக்கு கிடைத்ததை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்பதிவில் வரும் படங்களுக்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டவன். பிறகு நாங்கள் இருவரும் உள்ளே சென்று அமர்ந்தோம்.
ஒரு வழியாக மாலை 6.45-க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பிறகு விறுவிறென நிகழ்ச்சிகள் நடந்தன. தொகுப்புரை வழங்கியவர் வெங்கட் என்பவர். அழகான தமிழில் போடு போடென்று போட்டார். அரங்கத்தில் செல்பேசி வைத்திருப்பவர்கள் அவற்றை ஒலியில்லா செயல்பாட்டில் வைத்து கொள்ள சொன்னார். பிறகு நிகழ்ச்சிக்கு அறிமுகம் தந்து அதன் நிரலை சுருக்கமாகக் கூறினார். விருந்தாளிகள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். ஒவ்வொருவரை பற்றியும் அவரது திறமைகள் மற்றும் சாதனைகளை ஓரிரு வரிகளில் கூறி அழைத்தது மிக்க நன்றாகவே இருந்தது. அவ்வாறு மேடைக்கு அழைக்கப்பட்டவர்கள். எம்.எஸ். விஸ்வநாதன், பி.பி. ஸ்ரீனிவாஸ், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், ரமேஷ் விநாயகம், கார்த்திக் மற்றும் ஷாஜி அவர்கள்.
வரவேற்புரையை வழங்கியது வாய்ப்பாடகர் முரளீதர் அவர்கள். நேர்மையாக தான் ஆங்கிலத்தில்தான் பேசப்போவதாக கூறிவிட்டார். சிறப்பான உரையாற்றினார்.
முரளீதர் உரையாற்றுகிறார். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக: ஷாஜி, பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், எம்.எஸ்.வி., பி.பி.எஸ்., பெயர் தெரியவில்லை, மனுஷ்யபுத்ரன்)
பிறகு வந்திருந்த விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளை St. Gobain சார்பில் வந்திருந்த திரு ஆர். சுப்பிரமணியன் வழங்கினார்.
இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும். பேச்சுக்களை குறிப்பெடுத்து கொள்ள தயார் நிலையில் வரவில்லை. வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில் டாட்ட இண்டிகாம் அகலப்பட்டை இணைப்பில் ஏற்பட்ட ஒருபிரச்சினை காரணமாக குழப்பமான மனநிலையில் இருந்தேன். ஆகவே நோட்டு புத்தகம் எதுவும் எடுத்து வரவில்லை. கடைசி நிமிடத்தில் சுதாரித்து எனக்கு முந்தைய வரிசையில் இருந்த நபரது கையிலிருந்த நிகழ்ச்சி நிரல் காகிதத்தை அவரிடம் கேட்டு வாங்கினேன். அவரிடம் நான் பதிவு போடப் போவதை கூறி அதை என்னிடமே வைத்து கொள்ள அனுமதி பெற்றேன். அவர் பெயரை கேட்க மறந்து விட்டேன். முதலில் அவருக்கு என் நன்றி. ஆகவே எல்லா பேச்சுக்களையுமே அப்படியே போடும் நிலையில் இல்லை. பதிவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
பிறகு புத்தகத்தைப் பற்றிப் பேச ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். முதலில் உயிர்மை பதிப்பகத்தின் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசினார். பிறகு இசைமேதை எம்.எஸ்.வி. அவர்கள் வந்தார். புத்தகம் பற்றியும் ஷாஜி பற்றியும் பேசிவிட்டு தனக்கு வேலை இருப்பதால் சீக்கிரம் செல்ல வேண்டியிருப்பதாகவும், பிறகு நிகழப்போகும் கஸலுக்கு வந்து சேர்ந்து கொள்வதாகவும் கூறிவிட்டு புறப்பட்டார். (பிறகு நிஜமாகவே திரும்பியதையும் குறிப்பிட்டாக வேண்டும்).
பிறகு பேசிய பி.பி.எஸ். அவர்கள் சொல்லில் அடஙாத இசையை ஷாஜி அவர்கள் இப்புத்தகத்தால் சொல்லில் அடக்கியதை குறிப்பிட்டார். ஷாஜி அவர்களது இப்புத்தகத்தைப் பற்றி தான் இந்த நிகழ்ச்சிக்காக எழுதிய ஒரு கவிதையையும் அவரிடம் அளித்தார். கஸல் என்னும் பாடல் அமைப்பைப் பற்றியும் பேசினார். எம்.எஸ்.வி. க்கு தான் பட்ட நன்றிக்கடனை நெகிழ்ச்சியாகக் கூறினார். பிறகு தான் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று பாடவிருப்பதால் சீக்கிரம் செல்ல வேண்டும் எனக் கூறி புறப்பட்டார். அப்போது அவரை சற்றே நிறுத்திய கார்த்திக் அவருக்கு புகழாரமாக "பறவைய்லே அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு" என்ற பல்லவியில்ருந்து ஆரம்பித்து ஒரு பத்தி பாடினார். சும்மா சொல்லக்கூடாது கார்த்திக்குக்கு நல்ல குரல் வளம்.
பிறகு "தலைகீழ் விகிதங்கள்" புகழ் நாஞ்சில் நாடனும் பேசினார். தனக்கு இசை பற்றி பேச தகுதி இல்லையென்றும் தான் பார்வையாளன் மட்டுமே என்றும் கூறிய அவர் தான் பம்பாயில் இருந்தபோது கச்சேரிகளுக்கு சென்று கேட்க பணமின்றி இருந்ததையும் கேட்டில் டிக்கட்டை கிழித்து உள்ளே அனுப்பும் நண்பன் துணையோடு பல கச்சேரிகளை கேட்க நேர்ந்ததையும் நினைவு கூர்ந்தார்.
பிறகு பேசியது பிரபஞ்சன் அவர்கள். எஸ்.ஜானகி மற்றும் ஏ.எம்.ராஜாவை வார்த்தைகளில் உறையச் செய்துள்ளார் ஷாஜி என்று குறிப்பிட்டார்.
பிரபஞ்சன் உரை நிகழ்த்துகிறார். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக: கார்த்திக், ஷாஜி)
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இசை என்றால் தனது புரிதல் சினிமா இசையோடு நின்றுவிடுகிறது. அதுவும் இசை சத்தமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணினாராம். அவர் டி.எம்.எஸ். அவர்கள் நடித்த பட்டினத்தார் படத்தை பார்க்க்ப் போனபோது கூட இருந்தவர் "யாரப்பா இவர்? இவருக்கு போய் ஏன் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் மாறி மாறி பாடுகின்றனர் என்றாராம்.
பிறகு பேசியவர் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்கள்.
இப்போது தொகுப்புரை வழங்கிய வெங்கட் அவர்களைப் பற்றி சில வார்த்தைகளை கூறியே ஆக வேண்டும். ஒவ்வொருவர் பேசிமுடித்ததும் அவர்கள் பேசியதை ஓரிரு வாக்கியங்களில் சுவைபட சுருக்கி கூறிவிட்டு அடுத்தவரை பேச அழைத்தது அழகாக இருந்தது.
நன்றியுரை அளிக்க வந்தவர் புத்தக ஆசிரியர் ஷாஜி அவர்கள். மனுஷன் பெரிய லிஸ்டையே வத்திருந்தார். ஒவ்வொருவராக நன்றி கூறினார். ஆங்கிலத்தில்தான் பேசப்போவதாக முதலிலேயே கூறிவிட்டு பேச ஆரம்பித்தார். முதலில் ஜெயமோகன் வந்து பேச இருந்ததாகவும் பிறகு அவரை பற்றிய சர்ச்சைகளால் அவரால் வர இயலவில்லை என்றதும் தூக்கி வாரிப் போட்டது. "ஆகா இதுக்காகவே ரூம் போட்டு யோசித்து தொல்லை விளைவிக்க நினைச்சுருங்காங்கப்பூ" என எனக்குள் வடிவேலு பாணியில் கூறிக் கொண்டேன். எம்.எஸ்.வி. அவர்களை அவர் இசையமைப்பாளர் என்பதை விட நல்ல பாடகராகவே அதிகம் நினைப்பதாகக் கூறினார். பி.பி.ஸ்ரீனிவாஸ் பல்மொழிப்பாடகர் என்று குறிப்பிட்டார். மனுஷ்யபுத்திரனால்தான் தான் எழுதப் புகுந்ததாகவே கூறினார். சில சமயங்களில் சில கட்டுரைகளை தாமதமாகத் தரலமா என்று கேட்டபோது ஒப்பு கொள்ள மறுத்து தன்னை எழுத வைத்ததை நன்றியுடன் குறிப்பிட்டார்.
பிறகு டீ பிரேக் என்றார்கள். வெளியில் சென்றால் யாரை முதலில் பார்த்தேன் என்று கூறட்டுமா. ஜெயமோகன்தான் அது. நேரே அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவருக்கு என்னை தெரியும். இருவரும் முதல் தடவையாக சந்திக்கிறோம். சர்ச்சைக்கு உள்ளான கட்டுரைகளை அவர் வாபஸ் பெற்றிருக்கக் கூடாது என்றும், வில்லிலிருந்த புறப்பட்ட அம்புகள் போன்றவை அவை என்றும் கூறினேன். ஆக, நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை போல நான் காத்திருந்தது நன்மைக்கே. பிறகு எஸ்.ராமகிருஷ்ணனையும் பார்த்து பேசினேன். என்னை அவரிடம் இவர்தான் டோண்டு ராகவன் என்று ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார்.
இதற்குள் நேரம் ஆகிவிட்டபடியால் பிறகு நடந்த கஸல் நிகழ்ச்சிக்கு நான் இருக்க இயலவில்லை. அது பற்றி வரும் வரிகள் எனக்கு போட்டோக்கள் தந்துதவிய வேணுகோபால் அவர்கள். அவரை அதுபற்றி எழுதுமாறு நான் கேட்டதற்கிணங்க அன்புடன் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இப்போது அவரது சொற்களில் (ஆங்கிலத்தில் அவர் எழுதியதை நான் தமிழாக்கம் செய்துள்ளேன்):
"ஸ்ரீனிவாஸ் அவர்கள் சுமார் 5 அல்லது 7 கஸல்களை பாடினார் என நினைக்கிறேன். ஹரிஹரன் அவர்களால் லதா மங்கேஷ்கருக்காக எழுதப்பட்ட கஸலையும் அவர் பாடினார். ஷாஜி அவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார், ஏனெனில் பாக்கிஸ்தானின் மெஹ்தி ஹசனின் மிகப்பெரிய விசிறி ஹரிஹரன் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் அவர். பிறகு மராட்டிய மொழியிலும் ஒரு கஸல் பாடினார். எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு பக்க வாத்தியம் வாசித்தவர்கள் நன்றாக வாசித்தனர். எல்லோருமே கேரளாவை சேர்ந்தவர்கள்".
இப்போது மீண்டும் டோண்டு ராகவன். நன்றி வேணுகோபால் அவர்களே.
ஸ்ரீனிவாஸ் அவர்களது கஸல் அளிப்பு
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
10 hours ago
4 comments:
PRAMADHAM Sir,
Thanks for the details.
I am personally thankful to you for your EFFORTS, ALL ALONG.
God Bless you sir.
Vanakkam and Greetings on this Tamil New Year and for all the Pleasent times ahead.
Warm Regards and affly,
srinivasan. v.
நன்றி ஸ்ரீனிவாசன் அவர்களே,
உங்களுக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரியதாகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thank you sir, it could not have written better!
I wish I had more fotos.
Venu.
நன்றி வேணுகோபால் அவர்களே. என்னை நீங்கள் முதல்தடவையாக நேற்றுத்தான் பார்த்தீர்கள். இருந்தாலும் எனது வேண்டுகாளை மதித்து ஃபோட்டோ அனுப்பியதற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment