1/30/2011

டோண்டு பதில்கள் 30.01.2011

கேள்விகளின் எண்ணிக்கை இருபதை தாண்டியதால் இப்போதே பதில்கள் வந்து விட்டன.

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி 1. படம் ஓடுகிறதோ, இல்லையோ சம்பளத்தை ஏற்றுவதை நிறுத்துவதே இல்லை ஹீரோக்கள். ஒவ்வொரு படம் நஷ்டம் அடையும் போதெல்லாம் தன் சம்பளத்தை மட்டும் ஏற்றிக் கொண்டே இருக்கிறார் என்று முன்னணி நடிகர் ஒருவரை பற்றி மேடையிலேயே புலம்பி தள்ளினார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
பதில்: இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் அந்த குறிப்பிட்ட நடிகரை புக் செய்யாமல் போய்விடுவாரா ஏ.எம். ரத்தினம்? எல்லாமே சப்ளை அண்ட் டிமாண்ட் பொருத்துத்தான். நடிகர்களிலும் தொடர்ந்து ஓரிரு பங்கள் ஊற்றிக் கொண்டால் அவர்களை சீந்துபவர்களே இருக்க மாட்டார்கள். அப்போது அவர்கள் சம்பளம் தாராளமாகக் குறையும்.

கேள்வி-2. சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.
பதில்: திரையுலக அரசியலில் இந்த கூத்தெல்லாம் சகஜமப்பா. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ரசிப்போம் அவ்வளவே.

கேள்வி-3. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்திய சினிமாவில், ரஜினியை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரஜினி இல்லாமல், ஷங்கரால் தனியா ‘ரோபோ’ பண்ணி இருக்க முடியாது. ரஜினியை இனி யாரும் தாண்டிப் போக முடியும்னு தோணலை!”-நாகார்ஜுனா
பதில்: ரோபோ ரஜனியின் காமெடி நன்றாக இருந்தது என கேள்விப்பட்டேன். நான் இன்னும் அப்படம் பார்க்கவில்லை. ஆகவே ஒன்றும் கருத்தில்லை.

கேள்வி-4. உயரத்தில் பூண்டு விலை..-ஒரு கிலோ பழைய பூண்டு, 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பதில்: நான் சில நாட்களுக்கு முன்னால் பூண்டு வாங்கினேன். விலை 280 ரூபாய்.

கேள்வி-5. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளில் தே.மு.தி.க.,வுக்கு 36 தொகுதிகள் உட்பட, 16 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்வதற்குரிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை அ.தி.மு.க., துவக்கியுள்ளது.\
பதில்: ஏதாவது செய்து இப்போதைய திமுக ஆட்சி போவதே நல்லது.

கேள்வி-6. பதினோராவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்குள் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுகின்ற அவல நிலையை ஒழிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
பதில்: வெளியில் கிளம்பும் அவசரத்தில் இருக்கும் கணவன் உள்ளே தயாராகிக் கொண்டிருக்கும் தன் மனைவியிடம் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப்படுத்த, உள்ளிருந்து கொண்டே மனைவி கத்துகிறாள், “5 நிமிஷத்துலே வரேன்னு ஒரு மணியா சொல்லறேனே, காதில் விழவில்லையா”?

கேள்வி-7. மூழ்கப்போகும் சென்னை – நெருங்கிவரும் அபாயம்-தட்பவெப்ப நிலை மாற்றங்கள் அனைத்திற்கும் “கடலில் ஏற்படும் மாற்றங்களே’’ காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதில்: அண்டார்டிகா பனிக்கட்டிகள் உருகத் தொடங்கி விட்டதாகவும், அப்புறம் சென்னை போன்ற நகரங்களுக்கு சங்குதான் என தீவிரமாக கூறப்படுகிறது. கவலைக்குரிய விஷயம்தான்.

கேள்வி-8. ”உலகமெல்லாம் வாழும் தமிழ்ச் சொந்தங்களே… உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்​குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்​துக்கு நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஆகும்!” என்ற பீடிகையுடன் ‘ஈழத்தில் இனக்கொலை.. இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் வைகோ.
பதில்: இலங்கையில் உள்ள தமிழர்களிலேயே தமிழ் ஈழம் குறித்து ஏகோபித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லையே.

கேள்வி-9. இதுவரைக்கும் பணத்துக்காக நடிச்சாச்சு. இனிமேல் பணம் அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. நல்ல நடிகைன்னு பேர் வாங்கணும் என்று கதை சொல்ல போனவர்களின் மயிர் சிலிர்க்கும்படி பேசுகிறாராம்.-ஸ்ரேயாவின் இந்த திடீர் மாற்றம்
பதில்: அம்மாதிரி பேசும் அளவுக்கு அம்மணிக்கு அப்படி என்ன வயதாகி விட்டதாம்?

கேள்வி-10. கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிட்டதட்ட எல்லா நடிகர்களும், நடிகைகளும் ‘ட்விட்டர், பேஸ் புக்’ தங்களுடைய அன்றாட சம்பவங்களை எழுதி வருகின்றனர். அதில் சிலர் தேவையற்ற கருத்துக்களை எழுதி சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. சமீபத்தில் ‘ட்விட்டர், பேஸ் புக் எதிலும் நான் எழுதுவது கிடையாது. ஆனால் என் பெயரில் போலியாக யாரோ இதை நடத்துகின்றனர்’ என்கிறார் அசின்.
பதில்: நாட்டுக்கு ரொம்ப முக்கியமான தகவல்தேன்.

ராம்ஜி_யாஹூ
கேள்வி-11. டோண்டு அவர்களால் இணையத்தில், பதிவுகளில் நேர ஒழுங்கை கடைபிடிக்க முடிகிறதா அல்லது இணைய அடிமையா? உதாரணத்துக்கு, இன்று ஒரு மணி நேரம் மட்டுமே இணையம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கினால், ஒரு மணி நேரம் முடிந்ததும் கணினியை அணைத்து விடும் பழக்கம்/சுய கட்டுப்பாடு இருக்கிறதா?
பதில்: ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு குறையாமல் கணினியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கணினி திறந்தால் இணையத்தைத் திறப்பது டீஃபால்ட்டான செயல். எனது வேலை அப்படிப்பட்டது. ஆன்லைன் அகராதிகள் திறந்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கூடவே கூகள் டாக். வேலை செய்து க்ண்டிருக்கும்போது வரும் மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே அவ்வப்போது அவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கணினியும் இணையமும் மாறிவிட்ட நிலையில் நீங்கள் சொல்வது போல கணினியை அணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

என்ன, மொழிபெயர்ப்பு வேலைகள் வேணமட்டும் இருக்கும் நிலையில் தமிழ்மணம், வலைப்பூக்கள் ஆகியவற்றை பாவிப்பது தன்னாலேயே கட்டுப்படுகிறது. அவ்வளவே.

Arun Ambie
கேள்வி-12. மஹாராஷ்ட்ராவில் ஓரு உதவி கலெக்டர் உயிரோடு கொளுத்தப்பட்டிருக்கிறார். அரசு, தண்டனை இவை பற்றிய அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லவே இல்லையே? Any way to get out of this?
பதில்: தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றிருக்கலாமே அந்த கலெக்டர் என்று பிரலாபிக்கத்தான் முடிகிறது.

அப்படியே குற்றவாளிகளை பிடித்தாலும் சாட்சிகள் பிறழாமல் இருக்க வேண்டும், தூக்கு தண்டனை அளிக்கப்பட்டால் அதை வருடக்கணக்காக நிறைவேற்றாது இருக்கும் சொதப்பல்கள் நடக்காமல் இருக்க வேண்டும். தருமபுரி மாணவிகள் எரிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகியும் இன்னும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனரே. அது மட்டுமா பார்லிமெண்ட் தாக்கப்பட்ட வழக்கு, மும்பை ஹோட்டல் தாக்குதல் வழக்கு ஆகியவற்றில் தூக்கு தண்டனை பெற்றவர்களை சிறையில் பிரியாணி போட்டு வளர்க்கிறார்களே. அப்படியிருக்க குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்?


Surya
கேள்வி-13. சமீபத்தில் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தென் மாவட்டங்களில் உள்ள பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்ததையும் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டதையும் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். முதல்வர் தந்தை பெரியாரின் கருத்தை ஒட்டி தன் சொந்தக் கருத்திலிருந்து மாறுபட்டாலும் வீட்டுப் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார் என மகிழ வேண்டுமா? அல்லது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா என்று வருத்தப் பட வேண்டுமா?
பதில்: அது அப்படித்தான். ஊராருக்கு மட்டுமே உபதேசம். நெற்றியில் பொட்டு வைத்தால் கேலிபேசும் முதல்வர், தொப்பி போட்டுக் கொண்டு நோன்புக கஞ்சி குடிப்பது போலத்தான் எல்லாமே.

கேள்வி-14. ஜெயலலிதா முன் போல் இல்லாமல் மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களை மதித்துப் பழக ஆரம்பித்துள்ளார் என்ற பரவலான அபிப்பிராயம் பரவி வருகின்றது. இது நிலைத்து இருக்குமா? உங்கள் கருத்து என்ன?
பதில்: இப்போதைக்கு எதிர்கட்சியாக செயல்படும் ஜெ ஆட்சிக்கு வந்தால் இம்முறை எவ்வாறு செயல்படுவார் என்பதையும் பார்த்த பிறகுதான் இது பர்றி கருத்து கூற முடியும்.

கேள்வி-15 கனிமொழி அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்டு இருக்கின்றீர்களா? சமீபத்தில் அவர் கலைஞர் டீ.வி. பட்டி மன்றத்தில் பேசக் கேட்டேன். அவர் பேச்சுத் திறன் சராசரிக்கும் கீழே என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: கலைஞரின் மகள் என்ற ஒரு தகுதிதான் அவரது ஒரே பெரிய தகுதி. மற்றப்படி தன்னளவிலேயே ஒன்றும் பெரிதாக அவர் சாதித்ததாக தெரியவில்லை எனக்கு.

கேள்வி-16. சோவின் உடல் நிலை குறித்து உங்கள் கட்டுரையில் வந்த குறிப்பைக் கண்டு வருத்தமுற்றேன். துக்ளக்கைப் பொறுத்த வரை அவர் succession plan வைத்திருக்கிறாரா? ஆண்டவன் அவருக்கு நிறைந்த ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும். துக்ளக் அவருடன் நின்று விடக் கூடாது.
பதில்: ஆமென்.


thenkasi
அடிக்கடி கழக பேச்சாளர்களால் பேசப்படும் கீழ்கண்ட வாசகங்களுக்கு உண்மையான அர்த்தம் இன்றைய சூழலில்?
கேள்வி-17. தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டலும் நான் உங்களை கவிழ்க்க மாட்டேன், கட்டுமரமாய் மாறி உங்களை காத்திடுவேன் காலம் உள்ள வரை.

பதில்: இவ்வாறு கூற கலைஞருக்கே காப்புரிமை உண்டு. அதையும் மீறி எந்த கழகக் கண்மணி பேசுவது? அவரிடம் போட்டுக் கொடுத்திடுவோமில்ல!

அப்படியே கடலில் தூக்கிப் போட்டால் தமிழர்கள் சோற்றாலடித்தப் பிண்டங்கள் என புலம்புவதும் அதே வாய்தான் என்பதையும் மறக்காமல் இருப்போமாக.

கேள்வி-18. இருப்பது ஓர் உயிர் அது போவதும் ஒரு முறைதான்.
பதில்: எல்லோருக்குமே இருப்பது ஓர் உயிர்தான். இவர் மட்டும் பூனையா என்ன? ஒன்பது உயிர்கள் வைத்திருப்பதற்கு?

கேள்வி-19. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.
பதில்: அவரது இதயத்தில் இருப்பவர்களும் உடலோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாகி விடுவார்களோ?

கேள்வி-20. உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்.
பதில்: குடும்பத்தினருக்கு பதவி, மேலும் பதவிகள் பெற தில்லியில் முகாம் போடுதல்

கேள்வி-21. தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடோம்.
பதில்: தமிழ் காட்டுமிராண்டி மொழி எனச்சொன்ன கன்னடிய பலீஜா நாயுடு நாயக்கரை மட்டும் தந்தை என அழைப்போம்.

கேள்வி-22. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
பதில்: அவர்களை சிரிக்க வைத்து நாம் மேலும் மேலும் சிரிப்போம். ஏழைகளுக்குத்தான் இலவச டிவி இருக்கவே இருக்கிறதே.

கேள்வி-23. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
பதில்: சன் டிவி தவிர.

கேள்வி-24. கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு
பதில்: யாரிடம் கேட்கிறாய், எதற்குக் கேட்கிறாய் என்று அடுத்த வசனம் வந்தால் பரவாயில்லையாமா?

கேள்வி-25. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி.
பதில்: மத்தியில் கூட்டணி ஆட்சி பாவித்து கொள்ளையில் பங்கு. மாநிலத்தில் மைனாரிட்டி தனியாட்சியை பாவித்து கொள்ளையில் ஏகபோக உரிமை, அவ்வளவுதானே? தீர்ந்தது விஷயம்.

கேள்வி-26. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்.
பதில்: அதை மனப்பூர்வமாக சொன்னவர் சமீபத்தில் 1969 பிப்ரவரியில் மறைந்து விட்டார். இப்போதெல்லாம் ஒன்றே கொள்கை, அதுதான் ஆட்சியுரிமை.


மேலும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

R.Gopi said...

//கேள்வி-22. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.//

********

அப்டின்னா ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு, துணிமணி கொடுத்து, கையில் கொஞ்சம் காசும் கொடுத்து மகிழ்விப்பாரா?

அட, நீங்க வேற அவர் வீட்டுக்கு வெளில நிக்கற ஏழைகளை எல்லாம் வீட்டுக்குள்ள கூப்பிட்டு, அவங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டி விட்டு, அவங்க சிரிச்சதும் இவரு அவங்கள விரட்டிட்டு, சாப்பிட உக்காந்துடுவாரு...

***********

“தல” இந்த ஸ்டைல் தானே டோண்டு சார்!!?

pt said...

டோண்டு சாரின் விமர்சனம்?
1.எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.
2.சூர்யாவோட உள்ளங் கையில் பூமத்திய ரேகையே ஓடிக் கொண்டிருக்கிறது என்று பெருமூச்சு விடுகிறது கோடம்பாக்கம்! அந்தளவுக்கு டாப் ரேஞ்சில் இருக்கிறது அவரது ஆசையும் லட்சியமும்! அதற்கேற்றார் போலதான் கேட்கிறாராம் தனது சம்பளத்தையும்.
3.போர்க்குற்றவாளி என பல நாடுகளாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரி்க்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது
4.சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் சட்டத்திற்கு புறம்பாக, பலகோடி அளவிலான பணத்தை பதுக்கியவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தலைநகர் டில்லியில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது
5.இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் முகம்மது அலி ஜின்னா அல்ல, மாறாக, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர்தான் என்று கூறியுள்ளார் சமீப காலமாக சர்ச்சையாகவே பேசி வரும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்

ரமணா said...

1.கடந்த ஆண்டு 31,735 கோடி லாபம் பெற்றதாய் வரவு செலவு அறிக்கை -2009-2010-அறிவிக்கும் எண்ணெய் நிறுவனங்கள், எங்களுக்கு நஷ்டம் எனவே தான் பெட்ரோல் விலையை ஏற்றுகிறோம் என் சொல்லுவது நியாயமா?
2.ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 ரூபாய் மத்திய மாநில அரசு வரிகள்
இது சரியா?அரசே இப்படி செய்யலாமா?
3.சதவிகித அடிப்படையில் உள்ள வரியை ஒரு லிட்டருக்கு இவ்வளவு என நிர்ணயம் செய்ய் மறுப்பது நியாயமா?
4.வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பண லிஸ்டில் அரசியல் வாதிகள் பெயரும் இருப்பததால் தானே இந்த கண்ணா மூச்சி ஆட்டம்?
5.ஆன்லயின் வர்த்தகத்தால்தான் உணவுப் பொருட்களின் விஷ விலையேற்றம் என தெரிந்த பிறகும் யாரைக் குஷிபடுத்த இது தொடர்கிறது?
6.இந்தியாவிலே பெட்ரோலுக்கு தமிழகத்தில் தான் 30 % வரி விதிக்கபடுகிறதாமே?
7.காங். தலைவர் இளங்கோவனின் திடீர் பல்டி?
8.பாமக மதில் மேல் பூனையா?
9.திமுக காங் கேட்கும் 100 தொகுதிகளை கொடுக்குமா?
10.ஸ்டாலின் அழகிரி திடீர் சமாதானம்
தொடருமா,தொடர்ந்தால் எது வரை?

hayyram said...

விகடன் பேட்டியில் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்றால் "எல்லோரையும்" போல ரெண்டும்தான் என்கிறார் கமல். தன்னைப்பற்றி மட்டும் பேசாமல் ஏன் எல்லோரையும் வம்பிழுக்கிறார் இந்த அதிகப்பிரசங்கி

hayyram said...

//இருப்பது ஓர் உயிர் அது போவதும் ஒரு முறைதான்// எப்போ?

//உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு// தமிழனுக்கு?

//உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்.// ஊழல் செய்யும் உறவுக்கு கைகொடுத்து காப்போம். ஊழல் செய்தாலும் அமைச்சர் பதவிக்கான உரிமைக்கு குரல் கொடுப்போம்.

//தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடோம்.
பதில்: தமிழ் காட்டுமிராண்டி மொழி எனச்சொன்ன கன்னடிய பலீஜா நாயுடு நாயக்கரை மட்டும் தந்தை என அழைப்போம்// நச்சென்ற பதில்

//ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்// டாஸ்மாக் போதையில் அவன் சிரித்தால் தானே பதவி போதையில் நாம் இறைவனைக் காணலாம்!

//எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
பதில்: சன் டிவி தவிர// நறுக்

//கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு// ஊழல் செவது கடமை, உண்மையை தலைமைக்குச் சொல்லி விடுவது கண்ணியம், முறையாக பங்கு கொடுத்து விடுவது கட்டுப்பாடு.

//மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி.// மத்தில் அடிக்கும் கொள்ளைக்கு பங்கு கொடுப்போம், மாநிலத்தில் அடிப்பதை நாங்களே வைத்துக் கொள்வோம்.

//ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்// ஊழலே குலம், பணமே தெய்வம்.

hayyram said...

//கேள்வி-2. சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.
// பாபர் மசூதி இடிப்பும் பின்விளைவையும் வைத்து படமாக்க நினைத்து கைவிட்டார் கமல். சர்ச்சைகளையும் அதற்கான விளைவுகளையும் எண்ணி மட்டுமே தவிர்த்ததாகவும் பயமில்லை என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் அதிகப்பிரசங்கி கமல். மீசையில் மண் ஒட்ட வில்லை என்கிறார். ஒத்துக்கொள்வோம். ஹேராம் படத்தில் "உன் ஜின்னாவோடு பாகிஸ்தானுக்கு போங்கோ" என்று வசனம் வைத்து விட்டு இன்று வரை மதவாத அடையாளம் விழுந்து விட்டதாக நினைத்து அதற்கு சப்பை கட்டு கட்ட இந்து எதிருப்பு கருத்துக்களை அடிக்கடி உதிர்த்து வருகிறார் இண்டெலெக்ஷுவல் இடியட் கமல். தன்னுடைய மன்மதன் அம்பு படத்தில் "ஏன் சார் கள்ளத்தொடர்பு வைத்திர்ப்பவனெல்லாம் காவி கலர்லயே ட்ரெஸ் போடுறான்? ஒரு வேளை ரிலீஜென் காரணமாக இருக்குமோ?" என்று வசனம் வைக்கிறார் இந்த மீசையில் மண் ஒட்டாத வீரர். ஏன் பாதிரியார்கள் ஓரினச்சேர்க்கையும் , கண்ணியாஸ்திரீகளை கற்பழித்த செய்திகளும், பாலகர்களை வன்புணர்ச்சி செய்த பாதிரியார் பற்றி செய்திகளும் இவருக்கு தெரியவே இல்லையா என்ன? காவியை மட்டும் தாக்கி பேசும் இந்த மீசையில் மண் ஒட்டாத வீரர் பாதிரியை கேலி செய்து வசனம் வைக்க மட்டும் தைரியம் இல்லை. இவர்களைப் போன்ற திருடர்கள் சிண்டு மூட்டி விட்டுக்கொண்டே இருப்பதால் தான் இந்துக்களுக்கு எதிரான செயல்கள் செய்யப்படுவது என்பது ஒரு ஃபேஷனாகவே போய் விட்டது.

ezhil arasu said...

1952 ல் தொடங்கி 2011 வரை நிகழ் பெற்ற அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய கேள்விகளுக்கு உங்களின் நேர்மையான பதில் என்ன?
1)அண்ணாவுக்கு பிறகு வாழ்கின்ற திறமையான தலைவர் யார்?
2)கலைஞரிடம் தங்களுக்கு பிடித்த அம்சம் என்ன,என்ன?
3)அவரது எந்தத் திறமை கண்டு அதிசியக்கிறீர்கள்?
4)அவரிடன் என்ன மாற்றம் வந்தால் நல்லது என எண்ணுகிறீர்கள்?
5)2006-2011 ஆட்சி காலத்தில் உங்களை மிகவும் நெருடியது எது?
6)விடுதலைப் புலிகள் விசயத்தில் அவரின் அணுகுமுறை சரிதானே?
7)தனிப் பெரும்பான்மை அவருக்கு
கிடைக்குமா?
8)அவரது நலத் திட்டங்களில் எது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதாக சொல்வீர்கள்
9)குடும்பத்தில் ஏற்படும் பூசல்களை அவர் கையாளும் விதம் எப்படி?
10)தனது இல்லத்தை தானமாய் கொடுத்தது கண்டு?

Arun Ambie said...

//காவியை மட்டும் தாக்கி பேசும் இந்த மீசையில் மண் ஒட்டாத வீரர் பாதிரியை கேலி செய்து வசனம் வைக்க மட்டும் தைரியம் இல்லை. //

தேவர் மகனில் ஒரு வசனம் வரும். "ஒம்ம மீச என்ன மசுருன்னு நெனச்சீரா? நெனச்சா முறுக்கதுக்கும் நெனச்சா எறக்கதுக்கும்?" அடிக்கடி standஐ மாற்றிக்கொள்ளும் நீயெல்லாம் வீரனா என்பதற்கு மதுரை வட்டார slang அது.

வியாபாரம் படுத்துவிடும் என்று மிரட்டினால் பணியும் சூரன் கமல் என்று தெரிந்துவிட்டது. இனிமேல் குரல் கொடுத்தாலே கவிழ்ந்துவிடும் அந்த பகுத்தறிவு வீரம். காமெடி நல்லாருக்கா, சிரிக்கணும், அழுகாச்சி நல்லாருக்கா மூக்க சிந்தணும். படம் முடிஞ்சு வந்துட்டா போடான்னுடணும்! அம்புட்டுத்தேன்!!

ஞாஞளஙலாழன் said...

அடுத்ததும் கேள்வி-பதில் வகையான பதிவு தானா? கொஞ்சம் போரடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு மாற்றம் எதிர்பார்க்கலாமா?

dondu(#11168674346665545885) said...

//அடுத்ததும் கேள்வி-பதில் வகையான பதிவு தானா? கொஞ்சம் போரடிக்கத் தொடங்கிவிட்டது.//

எனக்கும்தேன்.

விஷயம் வேறொன்றுமில்லை. நிறைய வேலை; யோசித்து பதிவு போடும் அளவுக்கு நேரமோ பொறுமையோ இல்லை. ஆகவேதான் இம்மாதிரி கேள்வி பதில்களாக வருகின்றன.

கேள்விகள் வரவர அவற்றுக்கு உடனே பதிலளித்து விடுவதால், வேலை ஒட்டுமொத்தமாக குவிதல் இல்லை. ஆனால் ஒரு தனி டாபிக் என்றால் அதற்காக ஒரேயடியாக எழுத வேண்டியிருக்கும்.

பார்க்கலாம், மாற்றம் ஏதாவது தரவியலுமா என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

இந்தக் கேள்விக்கு பதில்?

நக்கீரன் பாண்டியன் said...

அடுத்த தேர்தலில் திமுக,காங் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என
பெரும் நம்பிக்கையில் உள்ளதாக வரும் செய்திகளின் அடிப்படையில்,திமுகவின் தலைவர் அடுத்த முதல்வராய் ஸ்டாலினை வழிமொழிந்தால், தேர்தல் நாள் அறிவிக்கப்ட்டதும், இவர்களின் ரியாக் ஷன் எப்படி இருக்கும்?

1. மகன் அழகிரி
2.மகள் கனிமொழி
3.பேரன் தயாநிதி
4.துரை முருகன்
5.வீரபாண்டி ஆறுமுகம்

virutcham said...

கமல் மீது இங்கே நிறைய பேருக்கு கட்டுக் கடங்காத கோபம் போல் தெரிகிறது.

நம்ம கிட்டே இருக்கும் கண் மூடித்தனமான ஹீரோ வொர்ஷிப் தான் பலரையும் தன் எல்லை தாண்டி நடக்க வைக்கிறது.
ரஜினியோ கமலோ வேறு நடிகர்களோ அவர்கள் நடிகர்கள் என்ற அளவிலே பார்க்காமல் ஒரேயடியாய் தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.
கமலின் நாத்திகம் மட்டும் அல்ல ரஜினியின் ஆத்திகமும் ஒரு வியாபாரமாகே தெரிகிறது. அதிலும் ரஜினியின் படங்களில் ஆன்மிகக் காட்சிகள் அபத்தம். அதுக்கு கமலின் நாத்திகமே தேவலை.

இதுக்கு உங்கள் கருது என்ன ராகவன் சார்

Anonymous said...

Dear Sir,

Please see this site : http://www.maamallan.com/

Mr.Maamaan, saws Jeyamohan is a copy CAT and some of my Kerala friends here also telling Jeymo is copy CAT,he copied from OLD Dead writters articles/Kathaigal.
Honestly , What do you say on this?

S.Ravi

Unknown said...

/dondu(#11168674346665545885) said...

//அடுத்ததும் கேள்வி-பதில் வகையான பதிவு தானா? கொஞ்சம் போரடிக்கத் தொடங்கிவிட்டது.//

எனக்கும்தேன்.

விஷயம் வேறொன்றுமில்லை. நிறைய வேலை; யோசித்து பதிவு போடும் அளவுக்கு நேரமோ பொறுமையோ இல்லை. ஆகவேதான் இம்மாதிரி கேள்வி பதில்களாக வருகின்றன.

கேள்விகள் வரவர அவற்றுக்கு உடனே பதிலளித்து விடுவதால், வேலை ஒட்டுமொத்தமாக குவிதல் இல்லை. ஆனால் ஒரு தனி டாபிக் என்றால் அதற்காக ஒரேயடியாக எழுத வேண்டியிருக்கும்.

பார்க்கலாம், மாற்றம் ஏதாவது தரவியலுமா என.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

மீண்டும் நங்க நல்லூர் பஞ்சாமிர்தம் டைப்பில் வாரம் ஒரு பதிவு போட்டால் வாசகர்களால் பெரிதும் ரசிக்கப்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் கேட்டது,படித்தது,ரசித்தது,உங்கள் மனதை பாதித்த செய்திகள் பற்றிய பதிவு

நாட்டு நடப்புகளை பற்றிய தகவலகளை தொகுத்து வழங்கலாம்.

உதாரணமாக:

பெட்ரோல் விலை உயர்வும் அது தொடர்பான உண்மைகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் அது தொடர்பான உண்மைகள்
அரசின் இலவச திட்டங்கள் அது தொடர்பான உண்மைகள்
கறுப்புப்பண விவகாரம் அது தொடர்பான உண்மைகள்
இட ஒதுக்கீடு சலுகைகள் அது தொடர்பான உண்மைகள்.

வாசகர்களின் ஆரோக்கியமான விவாதம் மட்டும் அனுமதிக்கப் பட வேண்டும்.

Jay said...

//கேள்வி-24. கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு
பதில்: யாரிடம் கேட்கிறாய், எதற்குக் கேட்கிறாய் என்று அடுத்த வசனம் வந்தால் பரவாயில்லையாமா?//

கடமை,கண்ணியம்,தட்டுப்பாடு

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது