8/28/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.08.2011

சபாஷ் மேனேஜர்
கணினிமயமாக்கப்படும் முன்னால் ஆலந்தூர் மாநகராட்சியினர் கையால் எழுதித்தான் ரசீதுகள் தந்து வந்தனர். அப்போதெல்லாம் வரி செலுத்தும்போது பழைய ரசீதை காண்பிக்க வேண்டும். நான் 2001-ல் சென்னைக்கு வந்த புதிதில் தண்ணீரை பொருத்தவரை என்னால் 1999-க்கான ரசீதை மட்டுமே காட்ட முடிந்தது. எல்லா வரிகளையும் கட்டியிருந்தாலும், 1999-லிருந்து கணக்கிட்டு அதிக தொகை செலுத்த வேண்டியிருந்தது.

கணினிமயமாக்கப்பட்டதில் இந்தப் பிரச்சினை ஒழிந்தது. அசெஸ்மெண்ட் என்ணைக் உள்ளிட்டாலே கணினியானது வரிசெலுத்திய முழுவிவரங்களையும் தரும்.

ஆனால் பிரச்சினை வேறு ரூபத்தில் வந்தது. எனது சொத்துவரி, பாதாள சாக்கடை வரிக்கான பக்கங்களில் எனது சரியான முகவரி கொடுக்கப்பட்டிருந்தாலும், தண்ணீர் வரி விஷயத்தில் மட்டும் சம்பந்தமேயில்லாத வேறு ஒரு முகவரி காணப்பட்டது. வருடத்துக்கு ஒருமுறை வரி செலுத்தும் நானும் முதல் சில முறைகள் இதை கவனிக்கவில்லை. பிறகு கவனித்து கேட்டால், கணினியில் டேட்டா எண்ட்ரி செய்தபோது தவறாக குறித்து விட்டார்கள் எனக் கூறப்பட்டது.

அதை சரி செய்ய நான் ஆலந்தூர் நகராட்சிக்கு இம்மாத துவக்கத்தில் சான்றுகளுடன் சென்றேன். என்னிடம் பேப்பர்களை வாங்கிய க்ளெர்க்கும் எல்லாம் சரி செய்யப்படும் என்று உறுதி கூறினார். ஆனால் பத்து நாட்கள் ஆகியும் ஒன்றும் செய்யப்படவில்லை. மீண்டும் நகராட்சிக்கு போய் பார்த்தால் அந்த க்ளெர்க் வேறு இடத்திற்கு மாற்றல் பெற்று சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. மேனேஜரை பார்த்தால், அவரோ சம்பந்தப்பட்ட புது க்ளெர்க்கை பார்க்கச் சொன்னார். அப்பெண்மணியோ தனக்கு இன்னும் பேப்பர்கள் தரப்படவில்லை என சாதித்தார். மீண்டும் மேனேஜர்.

இப்போது மேனேஜர் செய்ததுதான் நான் மிகவும் எதிர்பாராதது. அப்பெண்மணியைக் கூப்பிட்டு, என் கைவசம் இருந்த எனது நகல்களை பெற்று, கணினி அறைக்கு சென்று அப்போதே தேவையான மாறுதல்களை செய்யச் சொன்னார். அவரும் செய்து விட்டார். மேனேஜருக்கு நன்றி கூறினேன். அவரோ, இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. வரி செலுத்துபவர்களையெல்லாம் தேவையில்லாமல் அலையவிடக்கூடாது என்று தான் எண்ணியதாலேயே அதை செய்யச் சொன்னதாகக் கூறினார்.

சபாஷ் மேனேஜர்.


Form 26 AS பிரச்சினைகள்
Tax deducted at source (TDS) சார்பாக நமக்கு வரும் தொகைகளிலிருந்து வாடிக்கையாளர் பிடித்தம் என்னவோ செய்து விடுகிறார்கள். ஆனால் படிவம் 16-A தருவதற்கு மட்டும் மிகவும் பிகு செய்து கொள்வார்கள். ஜூலை-31-க்குள் அதை பெறுவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

எனது வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் எனக்கு படிவம் 16 ஏ தரும்போது Form 26 AS பற்றி கூறினார், நான் அதற்கான பதிவுகள் செய்து கொண்டால் இம்மாதிரி படிவம் 16 ஏ பெற அலைய வேண்டாம் எனக் கூறினார்.

நானும் அதையெல்லாம் செய்து கொண்டு பார்த்தால், வங்கி எனக்கு தந்த படிவம் 16-ஏ-கூறுவதற்கும் படிவம் 26 ஏஎஸ் கூறுவதற்கும் சம்பந்தமே இல்லை என தெரிய வந்தது. வங்கியில் efiling செய்யும்போது சொதப்பியுள்ளனர். இப்போது நான் அதை சரி செய்ய விண்ணப்பம் தந்து வங்கியை படுத்தி வருகிறேன். போயும் போயும் இந்த பெரிசிடம் போய் படிவம் 26 ஏஎஸ் பற்றி கூறினோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டிருப்பார் அந்த அதிகாரி என நினைக்கிறேன்.

ஜனலோக்பால் குறித்த சிந்தனைகள்
இது பற்றி பலரும் எழுதி வைத்து விட்டார்கள். நான் முக்கியமாக படிப்பது சோ மற்றும் ஜெயமோகனையும்தான். இருவரது நிலைப்பாடுகளுமே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இருவரது எண்ணங்களுமே அவற்றைப் படிக்கும்போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளன. மேலும் இன்புட்டுகளை பெற்றுதான் நான் கருத்து கூற வேண்டும். இப்போது நிலைமையை அவதானித்து வருகிறேன். பார்ப்போம்.

பேரறிவாளன், சாந்தன், முருகன்
நான் இப்பதிவில் கூறியதற்கு தொடர்ச்சி.

ஜெயமோகன் கூறியது போல, “இந்திய நீதித்துறையின் உயர் மட்டத்தில் நீதிபதிகள் அடிப்படைநேர்மையுடனும் நீதிபதி என்ற இடம் குறித்த பெருமிதத்துடனும்தான் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தைய பல வழக்குகளை அதற்கு உதாரணமாக கூறலாம். திருப்பூர் சாயக்கழிவு வழக்கு முதல் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை கோடிகளைக் கொட்டத் தயாராக இருக்கும் குற்றவாளிகளால் நீதிபதிகளை நெருங்கவே முடியவில்லை என்பதே அதற்குச் சான்று. இன்றும் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியப் போக்கையும் அரசியல்வாதிகளின் ஆணவத்தையும் கட்டுப்படுத்தும் சக்தியாக நம் நீதிமன்றங்கள் இருப்பது எத்தனையோ வழக்குகள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதித்துறை இன்றைய ஊழல்மிக்க இந்தியாவின் பெருமிதம் மிக்க முகங்களில் ஒன்றுதான்.

ஆகவே எனக்கு இந்திய நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை உண்டு. இந்திய நீதித்துறையின் உச்சிவரைச் சென்ற ஒரு வழக்கில் அநீதி இழைக்கப்பட்டிருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதிலும் சர்வதேசக் கவனம் பெறும் வழக்குகளில் அந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடையாது. போதிய ஆதாரங்களை கொடுக்காமல் நீதிமன்றத்திலிருந்து ஒருவரை அரசால் தப்பவைக்கமுடியும், ஆனால் ஒரு நிரபராதியை அப்படி எளிதாக தண்டிக்கச் செய்யமுடியாது.

ஒரு குறிப்பிட்ட இன-மொழி-சமூகக் குழுவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்படும்போது, அது எவ்வளவு பெரிய சமூகக் குற்றமாக இருந்தாலும், அதை உணர்வுபூர்வமான ஒரு விஷயமாக அந்த குழுவினர் எடுத்துக்கொண்டு இந்திய நீதித்துறைக்குக் களங்கம் கற்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்சல் குரு போன்று பாராளுமன்றத் தாக்குதலில் எளிய மக்களை கொன்று குவித்த தேசவிரோதச் சதிகாரர்களைக்கூட உச்சநீதிமன்றம் வரை எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசு தண்டிக்க தயங்குகிறது. காரணம் அது இங்கே மதப்பிரச்சினையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இந்தப் போக்கு மிகமிக ஆபத்தானது. காலப்போக்கில் நீதிநடைமுறைப்படுத்தப்படுவதையே இல்லாமலாக்கும். நீதி நிகழும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் இருந்து அழிக்கும். ஆகவே இம்மூவரும் நிரபராதிகள் என்றும் நீதிமன்றம் இந்திய அரசின் கைப்பாவையாக அநீதியில் ஈடுபட்டுள்ளது என்றும், வடவர் தமிழரைக் கொல்கிறார்கள் என்றும் இன்று செய்யப்படும் பிரச்சாரம் மிகப்பிழையானது. இந்த காலியான உணர்ச்சி வேகம் நடைமுறையில் இன்று மரண முனையில் நிற்கும் இம்மூவருக்கும்கூட பெரும் தீங்கு செய்யக்கூடியது.

ஆகவே ராஜீவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இங்கே எழுப்பபடும் நீதிமன்றம் மீதான அவதூறும் சரி, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிரிவினைவாதக் கசப்புகளை உருவாக்கும் குறுகிய அரசியல்முயற்சிகளும் சரி, அதை ஒட்டி உருவாகும் மனக்கொந்தளிப்புகளும் சரி என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவையே”
.

ஆனால் அதற்காக அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக அவர் கூறும் காரணங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எதிர்வினையாக நண்பர் ராஜன் முன்வைக்கும் கருத்துகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே, “இளம் வயதில் செய்து விட்டது. ஆகவே தவறிழைத்தவர்களாகக் கருதப் பட வேண்டும் என்ற அதே நியாயத்தையே நாளைக்கு இவர்களையெல்லாம் விட இள வயதில் பலரையும் கொன்ற கசாப்பும் வைக்கக் கூடும் அல்லவா? மனிதாபிமானத்தில் இதைச் சொல்லலாம் சட்டப் படி இதை சொல்ல முடியாது. இன்று இந்த அடிப்படையில் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால் நாளைக்கே இதே அடிப்படையில் கசாபுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். இப்படியே நீட்டித்தால் யாருக்கும் மரண தண்டனை என்றே வழங்கி விட முடியாது. நன்கு வளர்ந்த கல்மாடி கூட எனக்கு அல்சைமர் ஆகவே நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார். ஆக இளம் வயதில் செய்தவர்களுக்கு எல்லாம் தவறிழைத்தவர்கள் நியாயமும் முதிய வயதில் செய்பவர்களுக்கு எல்லாம் ஞாபக மறதி நோயையைக் காரணம் காட்டியும் மன்னிப்பு வழங்கி விடலாம் என்ற கோரிக்கை பின்னாளில் வலுவாகி விடும்.

அடுத்ததாகச் சொல்லப் படுவது இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் இன்றும் வலுவோடு இயங்கி வருகின்றன ஆகவே அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் மன்னிப்பு வழங்க முடியாது ஆனால் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது ஆகவே இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் ஏதும் அபாயம் இருக்க முடியாது என்பது. இதை நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் தமிழ் நாட்டிலும் இணையத்திலும் வெளிநாடுகளிலும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போராடும் எவரும் அவ்வாறு பேசவில்லையே. புலிகள் இயக்கம் மீண்டும் முன்னெப்பொழுதையும் விட வலுவாக மீண்டும் எழும் அது தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கும் என்றுதானே வை கோபாலசாமி, சீமான் இவர்களுக்கு ஆதரவாகச் அயல்நாடுகளில் செயல்பட்டு வருபவர்கள் வரை மேடைக்கு மேடை இந்திய ஒருமைப்பாடுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இன்று இவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்கா விட்டால் நாளைக்கு இந்திய வரை படத்திலேயே தமிழ் நாடு இருக்காது என்றெல்லவா மிரட்டல் விடுக்கிறார்கள். ஆக இவர்கள் ஈடுபட்ட வன்முறை இயக்கம் அழிந்து விட்டது நாளைக்கு மீண்டும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக எழாது என்பதற்கான எந்தவொரு அறிகுறியையும் இவர்கள் எவரது நடவடிக்கையிலும் நான் காணவில்லையே. இந்த சூழலில் எப்படி இந்த அமைப்பே அழிந்து வரலாற்றின் பக்கங்களில் ஒன்றாக ஆகிப் போனதாக உறுதியாகச் சொல்கிறீர்கள்? அதை அவர்களில் எவருமே சொல்லவில்லையே? மாறாக இந்த இயக்கம் இன்னும் பெரிய இயக்கமாக மாறும் என்றுதானே சொல்லி வருகிறார்கள்? அழிந்து விட்டது இனி இவர்களால் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை நீங்கள் சொல்வதை விட இவர்களுக்கு மன்னிப்பு கேட்ப்பவர்கள் அல்லவா உறுதியாகச் சொல்ல வேண்டும். அவ்வாறான ஒரு உறுதி மொழியையும் இது வரையும் அவர்கள் தரப்பில் இருந்து நான் கேட்க்கவில்லையே. ஆகவே இந்தக் கருதுகோளையும் ஏற்றுக் கொள்ள என்னால் இயலவில்லை.

மரண தண்டனை என்பது வருத்தத்திற்குரியதுதான். இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாமா மன்னிக்கலாமா என்பதை ராஜீவுடன் தேவையில்லாமல் உயிரிழக்க நேர்ந்த மக்களின் குடும்பங்கள் முடிவு செய்யட்டும். இளம் வயதில் செய்த தவறு என்பதை ஏற்றுக் கொண்டால் அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இயக்கம் அழிந்து விட்டது ஆகவே அபாயம் இல்லை என்பதை உறுதி செய்யும் வண்ணம் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்களின் நடவடிக்கை இல்லை. ஆகவே இதற்கு ஒரே வழி பாதிக்கப் பட்டவர்களிடம் கேட்ப்பது மட்டுமே. அதற்கு சட்டத்தில் இடமிருக்காது. கசாப்பையும், அப்சல் குருவையும் சிறையில் நீண்ட காலம் வைப்பது இந்தியர்களின் பாதுகாப்புக்குப் பெருத்த அச்சுறுத்தலாகவே முடியும். நாளைக்கு ஒரு விமானக் கடத்திலிலோ இன்னும் பல பயங்கரவாத தாக்குதல்களிலும் மிரட்டல்களிலும் கொண்டு போய்ச் சேர்க்கும். ஜெயலலிதா இன்று தமிழர்கள் என்பதினால் இன ரீதியாக மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் நாளைக்கே இன்னும் ஒரு முதல்வரிடம் மத ரீதியாக மன்னிப்பு வழங்கச் சொல்லும் கோரிக்கையும் எழும் அதுவும் ஒரு தவறான முன்னுதாரணத்தையே ஏற்படுத்தும்”
.

மீண்டும் டோண்டு ராகவன். நகலெடுத்து ஒட்டினாலும் அவையும் என் கருத்துக்களுடன் ஒத்துப் போவதாலேயே அவ்வாறு செய்துள்ளேன். அது சரி, கசாப்பையும் அஃப்சல் குருவையும் எப்போது தூக்கிலிடப் போகிறார்களாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

thenkasi said...

எல்லோருக்கும் உதவிடும் பல வாழ்வியல் செய்திகளை அள்ளித்தந்திடும் பெரிய வாசகர் வட்டத்தை கொண்ட டோண்டு வின் "நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்"
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

D. Chandramouli said...

Ten years ago, my opinion was that capital punishment should be abolished mainly for two reasons: 1. Life is God-given and we, humans, have no right to take it away. 2. What if there was a miscarriage of justice? Can we restore one's life?

However, my view now is that there could be exceptions like in the case of Kasab, not only because he was responsible for heinous acts but also for the persistent dangers to our society if he is kept alive, like what happened during BJP regime.

Yes, Capital Punishments cannot be wished away, but should be applicable for extreme cases, and I hope that the courts are competenet to decide on such cases.

Arun Ambie said...

மரண தண்டனை விஷயமாக முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முதல்வர் ஜெயல்லிதாவுக்கு எழுதியதாக ஒரு கடிதம் இணையத்தில் உலவுகிறது. அதில் மரண தண்டனை தவறு என்றும், மரணதண்டனையிலிருந்து மூவரைக் காப்பாற்றினால் இறைவன் அருள் புரிவான் தமிழினமே வாழ்த்தும் என்றெல்லாம் கிருஷ்ணய்யர் சொல்லியிருப்பதாகவும் இருக்கிறது. ராஜீவின் குடும்பத்தினர் கொலையாளிகளை மன்னித்துவிட்டனர் ஆகவே அரசு மன்னிப்பதில் என்ன தவறு என்பது மற்றொரு கேள்வி. சம்பவத்தில் மாண்ட கோகிலவாணி என்கிற குழந்தை, அன்றைய செங்கை சரக டிஐஜி முகமது இக்பால் உள்ளிட்ட 9 காவலர்கள், சுதந்திரப் போராட்ட்த் தியாகி லீக் முனுசாமி, மற்றும் படுகாயமடைந்தும், நிரந்தர ஊனாமடைந்தும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான "ஆம் அத்மிக்கள்" இந்தக் கொடியோரை மன்னித்தனரா? அந்த ஆம் ஆத்மிகளுக்கெல்லாம் காங்கிரசுக் கட்சியோ, காந்தி குடும்பமோ என்ன செய்தனர்? ஒரு இரங்கல் கடிதம் கூட எழுதவில்லை. பொதுவாக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. தமிழர் நலன் என்று இந்த மூவருக்காக முழங்கும் சிலரும் இறந்து போன தமிழர்களின் மரணத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? மறப்போம் மன்னிபோம் என்பது வாதமானால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் சம்பந்தப்பட்ட மூவரும் மன்னிப்புக் கேட்டனரா? தூக்குமேடைக்குப் போகிறவனெல்லாம் பகத்சிங் என்றும், அரசு அமைப்பை எதிர்த்துப் போராடுகிற அனைவரும் செ குவவேரா என்றும் உருவகப்படுத்திப் பேசுவது சிவப்புச் சட்டை போட்டவனெல்லாம் கம்யூனிஸ்டு என்பதைப் போல ஒரு உருப்படாத வாதம்.

Simulation said...

//ஜனலோக்பால் குறித்த சிந்தனைகள்
இது பற்றி பலரும் எழுதி வைத்து விட்டார்கள். நான் முக்கியமாக படிப்பது சோ மற்றும் ஜெயமோகனையும்தான். இருவரது நிலைப்பாடுகளுமே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இருவரது எண்ணங்களுமே அவற்றைப் படிக்கும்போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளன. மேலும் இன்புட்டுகளை பெற்றுதான் நான் கருத்து கூற வேண்டும். இப்போது நிலைமையை அவதானித்து வருகிறேன். பார்ப்போம்.//

சோ அவர்களை நீங்கள் வெகு, வெகு உயர்ந்த பீடத்தில் வைத்திருப்பதால், இன்னமும் ஹன்னா ஹசாரே குறித்த அவரது கருத்தினைக் குறித்து உங்களுக்கு குழப்பம் இருக்கின்றது போலும். இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், நீங்கள் அவதானித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். "சோ ஒன்றும் புனித பிம்பம் அல்ல, அவருக்கும் சறுக்கல்கள் ஏற்ப்டும். அவரும் ஒரு மனிதர்தானே. அதனால் சில, பல விஷயங்களில் உளறிக் கொட்டுவார்" என்று எண்ணத் தொடங்குங்கள். உங்களுக்குத் தெளிவு கிடைக்கும். அது சரி. சோவுடன் ஏதாவது ஒரு விஷயத்திலாவது முரண்படுகின்றீர்களா? வேண்டுமென்றால் இதற்கு உங்கள பதிலை வியாழன்று "கேள்வி-பதில்" வரைவுக்கு எடுத்துச் செல்லுங்கள். - அன்புடன் சிமுலேஷன்

dondu(#11168674346665545885) said...

//"சோ ஒன்றும் புனித பிம்பம் அல்ல, அவருக்கும் சறுக்கல்கள் ஏற்ப்டும். அவரும் ஒரு மனிதர்தானே. அதனால் சில, பல விஷயங்களில் உளறிக் கொட்டுவார்" என்று எண்ணத் தொடங்குங்கள். உங்களுக்குத் தெளிவு கிடைக்கும். அது சரி. சோவுடன் ஏதாவது ஒரு விஷயத்திலாவது முரண்படுகின்றீர்களா?//
அப்படியெல்லாம் இல்லை. சோ அவர்களை நான் பல ஆண்டுகளாகவே அவதானித்து வருகிறேன். எண்பதுகளின் துவக்கத்தில் எல்லோருமே புலிகளை ஆதரித்தபோது அவர் மட்டும் எதிர் கருத்துக்களை கூறினார். ஆனால் அவர்தான் சரியாகக் கூறினார் என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன். அதே போலத்தான் வி.பி.சிங் விவகாரமும்.

எந்த ஒரு போராட்டமும் அதற்கான எதிர்ப்பையும் மீறித்தான் வர வேண்டும். அந்த வகையில் அன்னாவுக்கான எதிர்ப்புகளையும் நான் பார்க்கிறேன்.

ஏதாவது ஆரம்பியுங்கள் என ஜெயமோகன் கூறுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. சோ, ஜெயமோகன் இருவருமே என் மனதில் உயர் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

எனது அவதானம் நில்லாமல் நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BADRINATH said...

//ஆனால் அதற்காக அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக அவர் கூறும் காரணங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ////
ஜெமோ ஓர் இலக்கிய வாதி... அவர் அப்படித்தான் பேசுவார்...
நீர் ஒரு மதவாதி நீர் உம் நோக்கில் சரியே....

periyar said...

//அது சரி, கசாப்பையும் அஃப்சல் குருவையும் எப்போது தூக்கிலிடப் போகிறார்களாம்?//

டோண்டு,
பாகிஸ்தான் செனெட் "உடனடியாக கசாப்புக்கு இந்தியா மன்னிப்பு வழங்கி மனித நேய அடிப்படையில் அவனுக்கு இந்திய உளவுத் துறையில் ஒரு சீனியர் போஸ்ட் போட்டுக் கொடுக்க வேண்டும்" என்ற தீர்மானத்தை ஒரு மனதாக கொண்டுவரப்போகிறார்களாம்.
தீவிரவாதிகளின் உணர்வை என்றுமே மதிக்கவேண்டும் என்ற உன்னத கொள்கையுடைய யூ பி ஏ,பாகிஸ்தானின் 40 மில்லியன் பயங்கரவாதிகளின் ஒருமித்த உணர்வினை மதித்து சரியான முடிவை எடுக்கப்போகிறார்களாம். நம்பிக்கையோடு இருங்க.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது