11/02/2012

உணர்ச்சி வசப்படுதல் தவறா?

என்னுடன் திரைப்படம் பார்க்க வரும் நண்பர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு, கூடவே சங்கடமும் கூட. அதாகப்பட்டது, நான் சினிமாக்களில் உணர்ச்சிகரமான கட்டங்களில் கூச்சமேயின்றி கண்ணீர் விட்டு அழுதுவிடுவேன்.

ஏண்டா பொட்டை மாதிரி அழுது மானத்தை வாங்கறே என்பான் என் நண்பன் ராமச்சந்திரன்.. உறவினர்களுடான் சினிமா பார்க்கச் செல்லும்போது “டோண்டு அழறான் பாரு” என்று கூறுவது என் காதுகளில் விழுந்தாலும் நான் கேர் செய்ததில்லை.

சமீபத்தில் 1969-ல் வெளியான ஆராதனா படத்தில் காஹே கோ ரோயே என்னும் இப்பாடலின்போது பேசாமல் அரங்கை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று, அவ்வளவு அழுவாச்சி.



பாட்டு முடிந்ததும்தான் திரும்ப வந்தேன்.

அதை விடுங்கள் இந்த டோண்டு அப்படித்தான். நான் வேறொரு தருணத்தில் உணர்ச்சி வசபட்டது பற்றி இங்கே கூறியுளேன்.

அழுகை மட்டும்தான் உணர்ச்சி வசப்படுதலா? ஏன், சில சமயம் பெருமிதமும் அதை செய்யும். இன் ஃபேக்ட் அதை கூறுவதற்கான முன்னோடிதான் மேலே நான் எழுதியது.

ஃபிரெஞ்சில் ஃப்ரான்ஸ்வா காவன்னா என்னும் எழுத்தாளரிடம் அந்த மொழி குழந்தை மாதிரி விளையாடுவ்தை பார்த்த எனக்கு ஜெயமோகன் அவர்களிடம் தமிழ் விளையாடுகிறது என்ற ஸ்டேட்மெண்ட் விடுவதில் எத்தயக்கமும் இல்லை. அவரது காந்தியின் உடை பற்றிய பதிவிலிருந்தே உதாரணம் தருவேன். காந்தி சம்பந்தமான நமது பெருமிதத்தால் உணர்ச்சிவ்சப்பட்டேன் என்பதைக்கூற வெட்க்ப்படவில்லை.

அவ்வரிகள்:
காந்தி பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திக்கச்சென்றபோது சொன்ன அந்த இருவரிகளும் திட்டவட்டமாக அவரது எண்ணத்தைக் காட்டுகின்றன. தன்னுடைய உடை தனக்கு இயல்பானது என்கிறார் காந்தி. அந்த உடையே தான் என்கிறார். அடுத்தபதில் இன்னும் நுட்பமானது. தன்னுடைய உடையையும் சேர்த்து மாமன்னர் அணிந்திருக்கிறார் என்பது சுரண்டப்படும் இந்தியாவாக அவரையும் சுரண்டும் பிரிட்ட்ஷ் சாம்ராஜ்யமாக மாமன்னரையும் நிறுத்திவிட்டது. இந்தியாவை பிரிட்டன் சுரண்டி அழிக்கிறது என்பதற்கு அவர்கள் இருவரும் நிற்கும் படங்களே போதுமான ஆதாரமாக அமைந்தன. அவை வெளியானபோது காந்தியும் காங்கிரசும் சொல்ல விரும்பியவை அனைத்தையும் அவையே உலகமக்களிடம் சொல்லின.
===================================================================
சாதாரணமாக இருக்கையில் வேட்டிகட்டி சட்டை போட்டிருக்கும் மகாராஜாக்கள் தர்பாருக்குச் செல்லும்போது முழங்கால்வரை வரும் பளபளப்பான பூட்ஸுகளையும் அதற்குள் செருகும்விதமான தொளதொளப்பான கால்சட்டைகளும் அணிந்திருப்பதை காந்தி கவனிக்கிறார். லண்டனில் படித்த அவருக்குத்தெரியும் அது பிரிட்டிஷ் அரண்மனையின் சேவகர்களின் சீருடை என்று. அவர் அந்த மகாராஜாக்களிடம் பேசுகிறார். அப்போது தெரிகிறது அவர்களுக்கும் அது தெரியும் என்று.
‘எங்களுடைய துர்ப்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக்கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாகவேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம். ‘ என்று ஒரு மன்னர் சொல்கிறார். ’இருந்தாலும்கூட வேலைக்காரர்கள் மட்டுமே அணியக்கூடிய இந்தக் கால்சட்டையையும் பூட்ஸுகளையும் அணியத்தான் வேண்டுமா?’ என்று காந்தி வேதனையுடன் கேட்கிறார். ‘எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று துயரத்துடன் மகாராஜா பதில்சொல்கிறார்.
========================================================================
ஆம், உடையரசியலின் தொடக்கம் அங்கேதான். இந்திய மகாராஜாக்களை வேலைக்கார வேடமிட்டுத் தன் வேலைக்காரர்களுடன் சேர்த்து நிறுத்திய பிரிட்டிஷ் ஆதிக்க மனநிலைக்கு எதிரான கலகம் காந்தியின் உடை. தார்ப்பாய்ச்சிய ஒற்றை உடையும் மேல்துண்டுமாக அந்த வைஸ்ராயின் சபைக்குச் சென்றார் காந்தி. அதற்கு முன்பு அவர் தனக்குப்பின்னால் இந்தியதேசத்தையே அணிவகுத்து நிறுத்தியிருந்தார். தன் உடைமூலம் காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனத்திடம் சொன்னார் ’என்னை சமமாக மதித்து அமரச்செய்து என்னிடம் நீங்கள் பேசியே ஆகவேண்டும். முடியாதென்று சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று . ’நீங்கள் மகாராஜாக்களுக்கு வேலைக்கார வேடம் போட்டு நிற்கச் செய்யலாம். ஆனால் இந்தியாவின் ஏழைக்குடிமகனை நீங்கள் உங்களுக்குச் சமானமாக நடத்தியாகவேண்டும்’ என்று.
=======================================================================
காந்தி எவரையும் தன்னைவிடக் கீழாக நினைப்பவரல்ல, ஆகவே எவரையும் மேலானவராகவும் அவர் நினைக்கவில்லை. ஆனால் வரலாற்றுமனிதராக அவர் அக்கணத்தில் விஸ்வரூபம் கொண்டு எழுந்தார். யார் அந்த ஐந்தாம் ஜார்ஜ்? எங்கே அந்த போப் பதினொன்றாம் பயஸ்? இன்று வரலாற்றின் ஆழத்திலுறங்கும் கூழாங்கற்கள் அவர்கள். காந்தி ஒரு வரலாறு. ஒரு மலைச்சிகரம்.
=======================================================================
ஞானம்பெற்றபின் இல்லம்திரும்பும் புத்தரின் சிலை ஒன்றை மதுரா அருங்காட்சியகத்தில் காணலாம். யசோதரையும் சுத்தோதனரும் யானைகளும் அரண்னை முகடுகளும் அந்த நகரமேகூட புத்தரின் முழங்காலுக்குக் கீழேதான் இருக்கும். 1931 கோடையில் காந்தி தன் பாதங்களின் அளவுக்கே உயரமாக நின்ற மாமன்னரிடம் மிகமிகக் குனிந்துதான் பேசியிருப்பார். அவருக்கே உரிய கனிவுடன்.
==========================================================================
மீண்டும் டோண்டு ராகவன். மேலே சொன்ன வரிகள் என் பெருமித உணர்ச்சிகளைத் தூண்டி கண்களில் நீர் பெருக்கோடச் செய்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்
.

18 comments:

Anonymous said...

என்ன வியப்பு? 'காந்தியின் உடை' படித்து விட்டு, மேலே என்ன இருக்கிறது என்று பார்க்கப் போனால், டோண்டுவின் 'அழுகாச்சி'!! ஆனால், ஐயா, ஒண்ணும் மட்டும் சொல்லிக்கிறேன் - same blood :).

வருண் said...

இதில் தவறேதும் இல்லைங்க. வயதில் முதிர்ந்தவர்களுக்குத்தான் compassion அதிகம் இருக்கும். அவர்களே இதுபோல் அழுவார்கள். கொஞ்ச வயதில் உள்ளவங்க இதுபோல் மற்றவர்களுக்காக அழமாட்டாங்க. ஆனால், அவங்களே வயது முதிர்ந்தவுடன் இதுபோல் உணர்ச்சிவசப்பட்டு அழலாம். இது நம்மில் உள்ள "மனிதம்". நல்ல உணர்வுதான்.

dondu(#11168674346665545885) said...

@வருண்
சரியாபோச்சு, ஆராதனா படம் பார்த்த போது என் வய்து 23, கோவலன் கன்ணகி கதை என் அம்மா சொல்லக்க்கேட்டு நான் விக்கி விக்கி அழுதபோது வயது 5.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வருண் said...

oops! சினிமாப் பார்த்து அழும்போது உங்க வயதென்னனு நான் சரியாக கவனிக்கவில்லை. சாரி.. ஆனால் நான் சொன்னது உண்மைதாங்க..

முடிந்தால் இந்த தொடுப்பைப் பாருங்க.

Why Do We Become More Emotional and Cry More As We Get Older?

http://mistyhorizon2003.hubpages.com/hub/Why-Do-We-Become-More-Emotional-As-We-Get-Older

இராஜராஜேஸ்வரி said...

பெருமிதம் தந்த மகாத்மா காந்தி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

தவறே இல்லை - உற்சாகம் பிறந்தால்...

நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! எனக்கும் சினிமா அல்லது நாவல் படிக்கும் போது இப்படி அழுவாச்சி ஏற்படுவதுண்டு! காந்தி பற்றிய பகிர்வு மிகச் சிறப்பு!

Essex Siva said...

இந்த பதிவில் டோண்டு ஸார் (மீண்டும்) அழுவது முக்கியமல்ல அல்லது ஆண்கள் அதிகம் அழுகிறார்களா பெண்கள் அதிகம் அழுகிறார்களா என்பது முக்கியமல்ல, கட்டுரையின் சாரம்தான் முக்கியம்...அதைத்தான் நோட்டின் உள்ளிருக்கும் வெள்ளிக்கம்பி போல சொல்லவருகிறார் டோண்டு ஸார்

சிவா கிருஷ்ணமூர்த்தி

passerby said...

முதலில், உணர்ச்சி வசப்படுதல் என்றாலோ, அறிவைப் பயன்படுத்துவதைத் தள்ளிப்போடுகிறீர்கள் என்றுதான் பொருள். உணர்ச்சிவசப்பட்டவன் எதையும் செய்வான்: கொலையும் செய்வான். நீங்கள் வெறும் சினிமா பார்த்து உணர்ச்சிவசப்பட்டீர்கள். பரமக்குடியில் இன்றைய தினங்கள் குருதியைப்பார்த்தும், அல்லது குருதி கொட்டப்பட்டதாகக் கேட்டும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். அரசுப்பேருந்துகள், நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. உணர்ச்சி வசப்பட்டு 40 பேர் ஒரு கிராமத்தில் புகுந்து மக்களைத்தாக்க ஒரு முதியவர் கொல்லப்பட்டார். பலர் ஆசுபத்திரியில்.

எனவே, எதற்காக உணர்ச்சி வசப்படுகிறோம் என்பதும் முக்கியம். உணர்ச்சிவசப்படுதல் ஒரு மனித சுபாவங்களுள் ஒன்று. எல்லா சுபாவங்களுமே தவிர்க்க முடியாதவை. அவை நன்கு கவனித்து உடனே நிறுத்தப்படாவிடில் ஆபத்தே.

உங்கள் பல பல பதிவுகள் உணர்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான். உணர்ச்சிகளைக் கட்டி ஆளுபவனே அறிவாளி. அவனாலே உலகத்தோர் பலனடைவர்.

ஜெயமோஹன் காந்தியைப்பற்றி எழுதியதைப்படித்து உணர்ச்சிவசப்பட்டதாகச் சொல்லி அந்த எழுத்துக்களையும் காட்டுகிறீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால் அந்த எழுத்துக்களில் அல்லது கருத்துக்களில் பல தவறுகளைக்காண முடியும். உணர்ச்சிகள் அத்தவறுகளைக் காணவிடாதபடி தடுக்கும்.

உணர்ச்சிவசப்பட்டவன் கண்களுக்கு உண்மை பொய்யாகவும், பொய் உண்மையாகவும் தெரியும். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரக்காரன் என்பவன் உணர்ச்சிகளால் கடுமையாக இயக்கப்படுபவன்.

இனியாவது உணர்ச்சிகளைக்கட்டியாள பழகுங்கள்.

poornam said...

இதில் என்ன தவறு? நகைச்சுவை தரும் விஷயங்களைப் பார்த்தால்/படித்தால் சிரிப்பதில்லையா? கண்ணீரை மட்டும் ஏன் அடக்க வேண்டும்? இதழ்கள் வழி வெளி வரும் சிரிப்பை விடக் கண்கள் வழியே வெளி வரும் கண்ணீருக்குத்தான் பாரத்தை இறக்கி மனதைத் தூய்மைப் படுத்தும் சக்தி இருக்கிறது.

passerby said...

@poornam

சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சியைப்பார்த்து சிரிப்பதும், சோகக்காட்சியைப்பார்த்து அழுவதும் உணர்ச்சிவசப்படலல்ல‌. அவை உணர்ச்சிகள் மட்டுமே. அவ்வுணர்ச்சிகள் தேவை. இல்லாவிட்டால் மனிதனன்று. பலர் அவ்வுணர்ச்சிகளை மறைத்துக்கொள்வர். சிலர் காட்டுவர். வேறொன்றுமங்கில்லை.

அதே வேளையில் தன் தலைவனை ஹீரோவாக்கி வணங்கி அவனைப் பிறர் விமர்சனம் செய்வதைக்கேட்டு அவனைக்கொலவது உணர்ச்சிவசப்படல். முத்துராமலிங்கத்தேவரின் படத்தைப்பார்த்தாலே உணர்ச்சி வசப்படுகிறார்கள். எதிரில் நிற்பவனை அருவாளால் வெட்டுகிறார்கள். நேற்றைய முந்தைய தினம் ஒரு மருத்துக்கடைக்காரர் தன் கடையைத்திறக்க்கும்போது வெட்டிக்கொல்லப்பட்டார். அதே போல மற்ற ஜாதியினரும் அவர்தலைவர் படத்தைப்பார்த்தால் உணர்ச்சிவசப்படுகிறார்.

உணர்ச்சிவசப்படல் ஆபத்தானது. எங்கேயும் எப்போதும். உண்ர்ச்சிகளேயில்லாதவனிம் உணர்ச்சிவசப்படுபவனும் - இருவருமே ஆபத்தானவர்கள். உணர்ச்சிகளில்லாதவன் சைகோபாத். Analysing the pshycology of different pshycopaths, a prof in Cambride University wrote a famous book titled Zero Degrees of Tolerance in which his conclusion is that the psychopaths differ in degrees of cruelty in proportion to their capacity to entertain feelings and emotions. The less the capacity, the more the cruelty. Look at the face of Antony Hopkins. He makes it completely emotionless face to portray the crullest pshycopath in Hollywood Cinema Dr Hector. So, the prof wants to say that if only we succeed in making such people getting some capacity to feel and empathise, we wd succeed in making them better humans.

I just explained the importance of feelings and emotions. At the same time, there will be negative impact if the capacity is not controlled and feelings and emotions run riot. Paramakkudi massacre will be the result. The brutal killing of Police Inspector who was on duty there, is the tragic resut of emotions running riot. A mere objection on his part for the revellers go other route, infuriated them and they hacked him to death. Emotions that made them mad.

உணர்ச்சிகள் இருக்கலாம். உணர்ச்சி வசப்படல் இருக்கக்கூடாது. அப்படியே வசப்படாலும் சட்டென்று வெளிவந்து விடவேண்டும். முடியாதவர்கள் மனப்பக்குவமற்றோர். அவர்களைத்தான் அரசியல்வாதிகள், விளம்பரதாரர்கள் குறிவைக்கின்றனர். மாணவர் கலவரங்கள்; ஜாதி, மதக்கலவரங்கள் இப்படித்தான் முதிர்ச்சியடையா மனங்களைச் சுரண்டுகின்றன.

ஒரு நீதிபதி, டோண்டு இராகவனைப்போல உணர்ச்சிவசப்பட்டால் என்ன நடக்கும்? நீதி புரளும். நிரபராதி தண்டிக்கப்பட்டு. குற்றவாளி தப்பிப்பான். கற்றவன் என்பவனுக்கு அடையாளம் அவன் உணர்ச்சிகளைக் கட்டியாளுபவன். கல்லாதவன் உணர்ச்சிகளுக்கு அடிமை.

ஒருவன் சினிமாத்தியேட்டரில் போய் அது வெறும்கற்பனைக்காட்சி என்று உணராமல் பார்ப்பானாயின்,அவன் மனமுதிர்ச்சியடையாதவன். அப்படியே உணர்ந்து பார்ப்பானாயினும் கூட அதை அவனது சப் கான்ஸியஸ் இது வெறும் கற்பனை என்று சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும். He will always be in the awareness that it is reel, not real.

சின்ன வயதில் சினிமாத்தியேட்டரில் அழதேன் என்றால் பரவாயில்லை, 75 வயதில் எவரோ எழுதிய கருத்துக்களை காயதல் உவத்தலின்றி படித்து ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டேன் என்றால், என்ன பொருள்? எப்படி டோண்டு ராகவனை எடுத்துக்கொள்வது? நீங்கள் சொல்லுங்கள்.

If Dondu Raagavan gives preference to reason over emotions (not to say he shd completely erase emotions!), he will have to review many of his blogposts; and come to different conclusions.

வருண் said...

***ஒருவன் சினிமாத்தியேட்டரில் போய் அது வெறும்கற்பனைக்காட்சி என்று உணராமல் பார்ப்பானாயின்,அவன் மனமுதிர்ச்சியடையாதவன்.****

Well, when you get involved, you dont see them acting. You cry, you laugh you get angry, you feel sad and depressed when watching it. That's very normal for audience.

I guess we are all yet to get completely mature, and still growing up including passerby. :-)

poornam said...

passerby, உணர்ச்சி வசப்படுபவன் ஏற்படுத்துகிற அதே விதமான அல்லது அதை விட ஆயிரம் மடங்கு மோசமான பாதிப்பை அறிவு வசப்பட்டவனாலும் ஏற்படுத்த முடியும் அல்லவா?
நிற்க, டோண்டு என்ற தனி நபர் உணர்ச்சி வசப்பட்டதால் என்ன உற்பாதம் வந்து விட்டது? அவரது கருத்துகள் ஒன்றும் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடப் போவதில்லையே? பல விஷயங்களிலும் தான் உணர்ந்தது, அறிந்ததை அவர் பகிர்ந்து வருகிறார் அவ்வளவே! அது காந்தியின் உடையோ கூடங்குளமோ சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடோ எதுவானாலும் அது தான் தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஏகோபித்த குரல் என்று யாரும் நினைத்து மயங்கி விடப் போவதில்லை, படிக்கிறவர்களைத் தலைகீழாகக் கவிழ்த்து விடப் போவதில்லை. உணர்ச்சி வசப்பட்டுத் தவறாகவே எழுதியிருந்தாலும் மேற்படிப் பதிவுகளிலிருந்து கொள்ளை லாபம் எதையும் அவர் அடைந்து விடப் போவதுமில்லை, யாரையும் யாருக்கும் எதிராகக் கொலைக்குற்றம் செய்யத் தூண்டி விடவுமில்லை. எதற்கு இவ்வளவு டென்ஷனாகிறீர்கள்?

passerby said...

நீங்கள்தான் டென்சனாகி விட்டீர்கள் !

நான் டோண்டுவின் கேள்விக்குப் பதிலை ஒரு பொது விமர்சனமாக வைத்து உணர்ச்சிவசப்படலின் தீவிளைவுகளை விளக்குகிறேன். நீங்கள் டோண்டுவைப்பற்றியே எழுதுகிறீர்கள். அவர் தன் வாழ்வை வைத்து ஒரு பொதுக்கேள்வி கேட்கிறார். தான் உணர்ச்சிவசப்பட்டது தவறா என்று கேட்கவில்லை. உணர்ச்சிவசப்படுவ‌து தவறா என்றுதான் கேட்கிறார்.


நேற்று ஜாதிக்கலவரத்தில் குண்டுவீச்சில் காயமடைந்தோரில் மூவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதைக்கேள்வியுற்ற அஜ்ஜாதிக்காரர்கள் வழியில் போகின்ற வாகனங்களைத்தாக்கி, ஒரு வங்கியின் ஏடிம்மையும் உடைந்தெறிந்தனர்.

உணர்ச்சிவசப்பட்டால் மூளை சரியாக வேலை செய்யாது. உணர்ச்சிவசப்படுபவன் ஒரு மிருகத்துக்குச்சமமாவான் என்பதை அவன் செய்கைகள் உலகுக்குக் காட்டும். இதனால் டோண்டுவை மிருகம் போல‌ என்று சொல்கிறேனென நினைத்து டென்சனாகாதீர்கள்.

We may start from a personal point but should end in a general good point. Blogging, in the final analysis, should serve general good.

passerby said...

அறிவைப்பயனபடுத்தியும் கொள்ளையடிக்கலாம். அணுகுண்டை போட்டு ஊரையழிக்கலாமென்றுதானே சொல்ல வருகிறீர்கள்? செய்யலாம்.

அதே வேளையில் அறிவைப்பயன்படுத்தியும் என்பதில் உள்ள உம்மைத்தொகையைப் பாருங்கள். அறிவைப்பயன்படுத்துவோர் தெரிந்தே செய்வர். அவர்கள் நினைத்தால் அறிவைப்பயன்படுத்திக் கொள்ளையனைப்பிடிக்கலாம். அணுகுண்டை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம்.

உணர்ச்சிவசப்படுபவனுக்கு அந்த சாய்சே இல்லை. வெட்டு, குத்து, கொல்லு என்றுதான் போவான். ஜாதி, இன, மதக்கலவரங்களில் போய் பாருங்கள். எவராவது அறிவைப்பயனபடுத்த முடியுமா அந்தவிடங்களில்? மாப் சைகாலஜி என்பது உணர்வுகளில் அடைப்படையில்தான். அறிவு அங்கு செயலிழக்கப்படும். அதே வேளையில் அவர்களைத்தூண்டி விடுபவன் தன் அறிவைப்பயன்படுத்து, தூண்டி விட்டால் என்ன ஆதாயம் தன்க்கு என்று முடிவெல்லாம் எடுத்துத்தான் செய்வான்.

எனவே எப்படிப்பார்த்தாலும் உணர்ச்சிவசப்படல் பெருந்தவறாகும். பிறருக்கும் உலகத்துக்கும் நாசம்தான். Beware of it !

இதற்கும் டோண்டுவுக்கும் தொடர்பில்லை. அவரது தலைப்பிலுள்ள கேள்விக்குத்தான் பதிலது.

poornam said...

உங்கள் பல பல பதிவுகள் உணர்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான்.
இனியாவது உணர்ச்சிகளைக்கட்டியாள பழகுங்கள்.
சின்ன வயதில் சினிமாத் தியேட்டரில் அழதேன் என்றால் பரவாயில்லை, 75 வயதில் எவரோ எழுதிய கருத்துக்களை காயதல் உவத்தலின்றி படித்து ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டேன் என்றால், என்ன பொருள்? எப்படி டோண்டு ராகவனை எடுத்துக்கொள்வது? நீங்கள் சொல்லுங்கள்

நான் டோண்டுவின் கேள்விக்குப் பதிலை ஒரு பொது விமர்சனமாக வைத்து உணர்ச்சிவசப்படலின் தீவிளைவுகளை விளக்குகிறேன். நீங்கள் டோண்டுவைப்பற்றியே எழுதுகிறீர்கள். அவர் தன் வாழ்வை வைத்து ஒரு பொதுக்கேள்வி கேட்கிறார். தான் உணர்ச்சிவசப்பட்டது தவறா என்று கேட்கவில்லை. உணர்ச்சிவசப்படுவ‌து தவறா என்றுதான் கேட்கிறார். இதற்கும் டோண்டுவுக்கும் தொடர்பில்லை. அவரது தலைப்பிலுள்ள கேள்விக்குத்தான் பதிலது.

நீங்கள் சொல்வது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லையா?

poornam said...

1) நான் டென்ஷனாகவில்லை. வாழ்வென்பது உணர்ச்சி, அறிவு இரண்டின் வசமாகவும்- தேவைப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அமைய வேண்டும் என்பதே என் கருத்து. அறிவும் உணர்ச்சியும் சக்தியும் சிவமும் போல என்றும் கூறலாம். டோண்டு ஸாரை உதாரணம் காட்டினாலும் உண்மையில் நான் தான் பொதுப்படையாக வாதம் புரிகிறேன். நான் சொல்ல வந்தது, யாருக்கும் உபத்திரவமில்லாத விஷயங்களில் உணர்ச்சி வசப்படுவதில் என்ன தவறு என்பதுதான். நீங்கள் தான் எனது முந்தைய கமென்டில் நான் சுட்டிக்காட்டியது போல பொது விவாதம் என்று சொல்லிவிட்டு டோண்டு அவர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கிறீர்கள்.

2) //எனவே எப்படிப் பார்த்தாலும் உணர்ச்சிவசப்படல் பெருந்தவறாகும். பிறருக்கும் உலகத்துக்கும் நாசம்தான்.// தவறு, அது என்ன மாதிரி உணர்ச்சி என்பதைப் பொறுத்து தான் நாசமா இல்லையா என்று கூற முடியும். மிருகத்தனமல்லாத உணர்ச்சிகள் எவ்வளவோ உண்டு. டோண்டு அவர்கள் இந்தப் பதிவில் பகிர்ந்திருப்பது போல, காந்தி போல ஒரு மாமனிதரால் பாதிக்கப்பட்டு உணர்ச்சி வசப்படுபவர்களையும் கலவரத்தில் இறங்குபவர்களையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.

3) பல கலைஞர்கள்/ இலக்கியவாதிகள் உணர்ச்சி வசப்படுபவர்கள் தான். குழந்தை மனம் படைத்தவர்களும் கூட. (உணர்ச்சிகளை வென்று கலையை ஆண்ட ஞானிகள்- முத்துசுவாமி தீக்ஷிதர் போல மிகச்சிலர் உண்டு. அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள். நான் சொல்கிற கலைஞர்கள் பெருவாரியானவர்கள். நம் போன்ற சாமானியர்களுக்கு நாம் அன்றாடம் ரசிக்கிற படைப்புகளை விருந்தாக்குகிற இவர்கள் தாம் உண்மையில் எண்ணிக்கையில் அதிகம்.) அவர்களது மிருதுவான மனம் மிருதுவான உணர்ச்சிகளுக்கு வசப்பட்டு மேலும் மிருதுவாகும் போது கலை/ இலக்கியம் முழுமையடைந்து சமூகம் பெற்ற நன்மைகள் அநேகம். அவர்களின் உணர்ச்சிகளில் உருவான கலை/ இலக்கியப் படைப்புகள் உண்மையில் போராட்ட மயமான மனித வாழ்க்கையில் பாலை வனச் சோலை போல இன்பம் தந்து மனித இனம் இன்னும் வன்முறையிலும் கீழான செயல்களிலும் ஈடுபடாமல் காத்து வரவே செய்கின்றன. எனவே “உணர்ச்சிவசப்படுபவனுக்கு அந்த சாய்சே இல்லை. வெட்டு, குத்து, கொல்லு என்றுதான் போவான்.” என்ற வாதமும் தவறு. அறிவில் நல்ல அறிவு இருப்பது போல உணர்ச்சியிலும் நல்ல உணர்ச்சிகள் ஏராளமாக இருக்கின்றன.
4) சித்தார்த்தன் அறிவின் உச்சமாகிய ஞான நிலையை அடைந்து புத்தராகக் காரணம் துன்பப்பட்டவர்களைப் பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டதுதான். ஞான மார்க்கத்தில் அவரைச் செலுத்தியதே அவரது அளவற்ற கருணை உணர்ச்சிதான்.
5) நீங்கள், நான், திரு டோண்டு போன்றவர்களுக்கும் புத்தருக்கும் ஒரே வித்தியாசம் அவரது உணர்ச்சி துன்பப்பட்டவர்களைப் பார்த்து அறிவுரீதியான வறட்டு வாதங்களில் காலம் கழிக்க விடாமல் காத்தது. அவரது அறிவு பிறர் துன்பங்களுக்காக வீணே அழுது கொண்டிருக்காமல் ஞானத் தேடலில் செல்லும்படித் தள்ளியது.

passerby said...

Whatever is happening to DR? Is he alright? He has not come to his blog for more than a week.

Poornam pl find out and post here.

He has a helluva lot of well wishers in Tamil blogosphere who want to know.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது