1/28/2005

வில்ஸனுக்கு ஒரு கடிதம் - Februray, 1968

அவர் பிறந்த நாள் 12 பிப்ரவரி, 1906. ஏற்கனவே கூறியது போல லிங்கனுக்கும் அவருக்கும் ஒரே நாளில் தன் பிறந்த தினம். நான் இப்புத்தகத்தைப் படித்து முடித்தது 2, பிப்ரவரி, 1968.

அவருக்குப் பிறந்த தின வாழ்த்து அனுப்ப எண்ணினேன். அமெரிக்க நூலகத்துக்குச் சென்று "ஹூ ஈஸ் ஹூ இன் அமெரிக்கா"-விலிருந்து அவர் முகவரியைப் பெற்றேன். 65 பைசாவுக்கு ஒரு ஏரோக்ராம் வாங்கி அவருக்கு வாழ்த்து அனுப்பினேன். 12-ஆம் தேதிக்குள் போய் சேர்ந்து விடும் என்றுக் கணக்குப் போட்டேன். அது என்னடாவென்றால் 8-ஆம் தேதியே போய் சேர்ந்து விட்டது. அவர் உடனடியாகப் போட்ட பதில் எனக்கு 12-ஆம் தேதி வந்தது.

என் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். தன் பிறந்த தினத்தன்றுத் தன் அக்கா வீட்டிற்கு செல்லப் போவதாகவும், அவரிடம் என் கடிதத்தைப் பற்றிக் கூறப்போவதாகவும் எழுதியிருந்தார். இந்த அனுபவம் நான் பிற்காலங்களில் பல எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதுவதற்கு முன்னோடியாக அமைந்தது.

ஒரு சிறு திருத்தம், வில்ஸன் புத்தகத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய ஒருப் பதிவில். வில்ஸனின் ஊர் ஈவான்ஸ்வில். ப்ளூமிங்டன் அவர் 1968-ல் இருந்த ஊர். இது இப்போது நினைவுக்கு வந்தது இன்னொரு ஹைப்பர்லிங்கால்தான்.

அவர் எனக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்: " என் பிறந்ததினத்துக்கு ஈவான்ஸ்வில் செல்கிறேன். அங்கு வசிக்கும் என் அக்காவிடம் உங்கள் கடிதத்தைப் பற்றிக் கூறுவேன். அவள் மிகவும் மகிழ்ச்சியடைவாள்."

விடாது ஹைப்பர்லிங்க்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/27/2005

இது என்னப் புதுக் கதை?

இதற்கு முந்தையப் பதிவில் ஒரு தமாஷ் அனுபவம் ஏற்பட்டது. பதிவுப் பெட்டியில் நான் எழுத வேண்டியதை எழுதி "அச்சடி" என்ற பட்டனைச் சொடுக்கினால், "இப்பக்கம் அச்சடிக்க முடியாது" என்ற அறிவிப்பு வந்தது.
சரி என்று "பின்னால்" அம்பைச் சொடுக்கி மறுபடி பதிவை எழுதி அச்சடிக்கச் சொன்னால் அதே அறிவிப்பு.
இவ்வாறு எட்டு முறை முயன்ற பின் என் ப்ளாக்குக்குச் சென்றால், இப்பதிவு எட்டு முறை ஆகியிருந்தது தெரிய வந்தது.
அதில் ஏழை அழிக்க நேரம் ஆகி விட்டது.
சாதாரணமாக "உங்கள் பதிவு 100% அச்சடிக்கப்பட்டது" என்றுதானே வர வேண்டும்? பிறகு ஏன் வேறு செய்தி வர வேண்டும்?
ஒண்ணும் நேக்குப் புரியல்லேப் போங்கொ!

அன்புடன்,
டோண்டு ராகவன்

On the sunny side of a one-way street - காரின் முன் கண்ணாடியில் ஒரு 'ட'

வில்ஸன் மேலும் கூறுகிறார்:

<<என் தந்தை உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வேட்பாளராக நின்றார். அவருக்கு எங்கள் ஊரில் நல்ல செல்வாக்கு. தேர்தல் வேலைகள் சூடு பிடித்தன. நானும் பள்ளி நேரம் போக அவருடனேயே நேரத்தைக் கழித்தேன். அவருடன் காரில் சென்று வாக்காளர்களைப் பார்ப்பது, வாக்காளர் ஸ்லிப்களை நிரப்புவது, பிட் நோட்டிஸ் வினியோகித்தல் இத்யாதி, இத்யாதி.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

நான் பள்ளியிலிருந்து நேராக என் தந்தையின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தேன். நான் உள்ளே நுழையும்போது என்னைத் தாண்டி அதுவரை நான் பார்த்திராத நால்வர் வெளியே சென்றனர். என்னுடைய ஹல்லோவை அவர்கள் சட்டை செய்யாமல் விர்ரென்று அந்த இடத்தை விட்டு அகன்றனர். நான் உள்ளே சென்று "யார் அப்பா அவர்கள்?" என்றுக் கேட்டேன். எனக்கு அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. நான் கேட்டதை கவனிக்காதது போல அவர் நான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் அவரை ஒன்றும் கேட்கவில்லை.

தேர்தல் நெருங்க, நெருங்க ஏதோ சரியாக இல்லதது போன்ற உணர்வு எனக்கு வர ஆரம்பித்தது. அது வரை எங்களை கண்டதும் ஆர்வமாக வரவேற்றுப் பேசும் வாக்காளர்கள் எங்கள் பார்வையைத் தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் இதை கவனிக்காத நான் மெதுவாக நிலைமையின் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன்.

தேர்தலுக்கு முந்தைய நாள் எல்லா வேலைகளையும் முடித்தப் பின்னால் நான் என் தந்தையுடன் காரின் முன்ஸீட்டில் அவருடன் அமர்ந்துக் கொள்ள அவர் காரை மெதுவாக வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தார்.
அவர் ஒன்றும் பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

திடீரென்று என்னை நோக்கி அவர் கேட்டார்:
"இந்த தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நான் கூறினேன்: "நிச்சயம் வெற்றி நமக்குத்தான். இந்த ஊரில் உங்களுக்க் நல்லச் செல்வாக்காயிற்றே".
அவர்: "இல்லை வில்லியம், இம்முறை தோல்விதான்"
நான்: "ஏன் அப்பா?"
அவர்: "அன்றொரு நாள் நான்கு பேர் என் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தனர். நான் அவர்கள் கட்சி சார்பில் நிற்க வேண்டும் என்றுக் கூறினர். அவர்கள் கூ க்ளுக்ஸ் கான் (Ku klux khan) என்றத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீக்ரோக்களுக்கெதிராய் வன்முறை செயல்கள் நடத்துபவர்கள். நான் மறுத்து விட்டேன். அவர்களுக்கு இங்கு நல்லச் செல்வாக்கு உண்டு. என்னை ஜெயிக்க விட மாட்டார்கள்"

எனக்கு என்னக் கூறுவது என்றே புரியவில்லை.

என் தந்தை தனகுத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார்.

"இந்த நாட்டில் என்ன நடக்கிறது? ஆபிரஹாம் லிங்கன் போன்ற மாமனிதர்கள் கட்டிக் காத்த இந்த நாட்டின் நிலை இப்படியா ஆக வெண்டும்?" என்றுக் கத்திக் கொண்டே தன் கார் முன் கண்ணாடியை ஒரு குத்து விட்டார். "சிலீர்" என்ற சப்தத்துடன் கண்ணாடி உடைந்து அதில் "ட" வடிவில் ஒரு ஓட்டை விழுந்தது.

திடீரென்று என் தந்தையின் ஆவேசம் அடங்கியது. "என்ன இவ்வாறு ஆகி விட்டதே" என்று ஒரு குழந்தையைப் போல் என்னை நோக்கிக் கேட்டார்.

நேரே டாக்டர் வீட்டுக்குப் போய் ஒரு தையல் போட்டுக் கொண்டு வீடு போய் சேர்ந்தோம். அதற்கு முன்னால் அவர் என்னிடம் தேர்தல் பற்றி உன் அம்மாவிடம் எதுவும் கூறாதே" என்று என்னைக் கேட்டுக் கொண்டார். "நீயே ஏதவது கதை கூறிச் சமாளி" என்றும் கூறினார். என்னுடையக் கதை கட்டும் திறமையில் அவ்வளவு நம்பிக்கை அவருக்கு. முக்கியமாகக் கார் கண்ணாடி உடைந்ததற்கு அம்மா என்ன கூறுவாரோ என்று வேறு அவருக்குப் பயம்.

வீட்டுக்குச் சென்றோம். அப்பாவின் கையில் கட்டைப் பார்த்ததும் அம்மாவுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் களேபரத்தில் திட்டவும் மறந்துப் போனார்.

"என்ன வில்லியம் என்ன நடந்தது" என்று அவர் தலையை கோதியபடி கேட்டார்.
நான் முந்திக் கொண்டு "ஒன்றும் இல்லை அம்மா, நம் ஊர் கால்பந்தாட்டக் குழு நேற்று ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்கள். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே அப்பா வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று நம்மூர் குழுவின் முன்னணி வீரர் எவ்வாறு தாவி பந்தை உதை விட வேண்டும் என்றுக் காண்பிக்கப் போக, அவர் கையால் முன் கண்ணாடியைக் குத்தினார்" என்று உளறினேன்.
"அப்பா, பிள்ளை இருவருக்கும் வேறு வேலையில்லை" என்று எங்களை மொத்தமாகத் திட்டி விட்டு அம்மா அடுக்களைக்குள் சென்றார்.

என் தந்தை என்னை நன்றியுடன் பார்த்தார். அத்தருணத்தில் நான் பையனிலிருந்து ஒரு வளர்ந்த ஆளாக மாறியதை உணர்ந்தேன்.

தேர்தல்? அதில் எதிர்ப்பார்த்தத் தோல்விதான். ஆனாலும் அவ்வளவு அதிர்ச்சியைத் தரவில்லை>>

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/25/2005

ஒரு வழிப் பாதையின் சூரியப் பக்கம், part-2

வில்லியம் இ வில்ஸன் மேலும் கூறுகிறார்:

<<நான் சிறுவனாக இருந்தப் போது டிஃப்தீரியா வந்து செத்துப் பிழைத்தேன். ஆனால் என் அக்காவுக்கு நடந்ததைப் பார்த்தால் எனக்கு வந்தது ஒன்றுமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அவள் மெதுவாகக் குருடாகிக் கொண்டிருந்தாள்!

முதலில் எங்கள் யாருக்கும் அவள் பிரச்சினை புரியவில்லை. அவள் மார்க்குகள் குறைய ஆரம்பித்தன. என் தாய் தந்தையர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பிறகுதான் அவள் முழுக்கவும் பார்வை இழக்கப் போகிறாள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்தது.

அப்போது எனக்கு 12 - 13 வயது இருக்கும். அவளுக்குப் 15 வயது.

மருத்துவரைப் பார்த்தப் பிறகு அவள் தனியே தன்னறையில் இருந்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, கையை முன்னால் பரப்பிக் கொண்டு மெதுவாக நடந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு 12 வயதுப் பையன் தன்னுடைய அக்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு மையமானப் பிரியம் எனக்கும் உண்டு. அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு எரிச்சல் கலந்தப் பொறுமையுடன் அவளிடம் "என்ன செய்யறே?" என்றுக் கேட்டேன். அவள் அதற்கு "குருடியாக இருக்கப் பயிற்சி செய்றேன்" என்றுக் கூறினாள்.

இப்போது தான் இவ்வரிகளை எழுதும்போது ஏதாவது அவளிடம் ஆறுதலாகக் கூறினேன் என்று சொல்ல எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. ஏதோ கேலியாக அவளிடம் பேசிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடிப் போனதுதான் நான் செய்தது.

அவள் முழுக் குருடியானாள். அவள் அதற்கு மனத்தளவில் தயாருமானாள். அவள் கண்கள் அழகானவை. பார்வை இல்லை என்பது புதிதாகப் பார்ப்பவர்களுக்கு முதலில் புரியாது. வீட்டின் எல்லா மூலைகளும் அவளுக்கு அத்துப்படி. உடல் வலிமை அதிகம் இல்லாதவள். ஆகவே அவளால் தன்னை வழிநடத்திச் செல்ல ஒரு பார்க்கும் நாயைக் கையாள முடியாமல் போனது.

என் தந்தை எங்கு நாங்கள் வெளியே சென்றாலும் அவளுக்கு தெருக்க்காட்சிகளைப் பொறுமையாக விளக்குவார். எனக்குத்தான் மிகவும் போர் அடிக்கும்.

அவர் சளைக்காமல் பொறுமையாக அவளுக்கு எங்கள் ஊரில் (ப்ளூமிங்க்டன், இந்தியானா மாநிலம்) எல்லா தெருக்கள், கட்டிடங்கள், கடைகள் முதலியவற்றை விளக்குவார். இதன் பலன் பின்னால் தெரிந்தது.

1944-ல் எங்கள் அன்னை மறைந்தார். அடுத்த 4 தனிமையான வருடங்களை ஒரு வழியாகக் கழித்து எங்கள் தந்தையும் தன் அருமை மனைவியைப் பின் தொடர்ந்தார்.

இந்த 4 வருடங்களில் என் தந்தைக்கு மறதி அதிகம் வர ஆரம்பித்தது. தெருவில் போய்க் கொண்டே இருப்பார். திடீரென்று வீட்டுக்குத் திரும்பும் வழி மறந்து விடும். ஊரில் எல்லோருக்கும் அவரைத் தெரியும். இருந்தாலும் யாரையும் போய் உதவி கேட்க அவர் தன்மானம் இடம் கொடுக்காது.

ஆகவே அருகில் உள்ள ஏதாவத் டெலிஃபோன் பூத்துக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் செய்து என் அக்காவைக் கூப்பிடுவார்.
"வீட்டிற்கு வரும் வழி மறுபடியும் மறந்து விட்டேன் பெண்ணே. நான் இப்போது கோல்ட்ஷ்டைன் மளிகைக் கடை வாசலில் இருக்கிறேன்" என்பார்.
அக்கா உடனே கூறுவாள்: "கவலைப் படாதீங்கப்பா. அந்த மளிகைகடையை அடுத்தக் கடை ஜானின் தையற்கடை. அதை அடுத்து ஒரு சந்து. அதில் நேரே சென்றால் அது ஒரு பெரியத் தெருவில் முடியும். வலப் பக்கம் திரும்பி வந்தால் நான்காவது கட்டிடம்தான் நம் வீடு."

இவ்வாறாக என் தந்தை முன்பு பொறுமையுடன் செய்தது அவருக்குச் சாதகமாகவே முடிந்தது.>>

இப்புத்தகத்திலிருந்து பிறகு மேலே பேசுவேன். ஆனால் ஒன்று. கண்ணை மூடிக் கொண்டு யோசிக்கும்போது இப்புத்தகத்தைப் படித்த 1968-ஆம் வருடத்திற்கே போய் விடுவேன். என்னை அந்த அளவுக்கு இப்புத்தகம் கவர்ந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது