1/27/2005

On the sunny side of a one-way street - காரின் முன் கண்ணாடியில் ஒரு 'ட'

வில்ஸன் மேலும் கூறுகிறார்:

<<என் தந்தை உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வேட்பாளராக நின்றார். அவருக்கு எங்கள் ஊரில் நல்ல செல்வாக்கு. தேர்தல் வேலைகள் சூடு பிடித்தன. நானும் பள்ளி நேரம் போக அவருடனேயே நேரத்தைக் கழித்தேன். அவருடன் காரில் சென்று வாக்காளர்களைப் பார்ப்பது, வாக்காளர் ஸ்லிப்களை நிரப்புவது, பிட் நோட்டிஸ் வினியோகித்தல் இத்யாதி, இத்யாதி.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

நான் பள்ளியிலிருந்து நேராக என் தந்தையின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தேன். நான் உள்ளே நுழையும்போது என்னைத் தாண்டி அதுவரை நான் பார்த்திராத நால்வர் வெளியே சென்றனர். என்னுடைய ஹல்லோவை அவர்கள் சட்டை செய்யாமல் விர்ரென்று அந்த இடத்தை விட்டு அகன்றனர். நான் உள்ளே சென்று "யார் அப்பா அவர்கள்?" என்றுக் கேட்டேன். எனக்கு அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. நான் கேட்டதை கவனிக்காதது போல அவர் நான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் அவரை ஒன்றும் கேட்கவில்லை.

தேர்தல் நெருங்க, நெருங்க ஏதோ சரியாக இல்லதது போன்ற உணர்வு எனக்கு வர ஆரம்பித்தது. அது வரை எங்களை கண்டதும் ஆர்வமாக வரவேற்றுப் பேசும் வாக்காளர்கள் எங்கள் பார்வையைத் தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் இதை கவனிக்காத நான் மெதுவாக நிலைமையின் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன்.

தேர்தலுக்கு முந்தைய நாள் எல்லா வேலைகளையும் முடித்தப் பின்னால் நான் என் தந்தையுடன் காரின் முன்ஸீட்டில் அவருடன் அமர்ந்துக் கொள்ள அவர் காரை மெதுவாக வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தார்.
அவர் ஒன்றும் பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

திடீரென்று என்னை நோக்கி அவர் கேட்டார்:
"இந்த தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நான் கூறினேன்: "நிச்சயம் வெற்றி நமக்குத்தான். இந்த ஊரில் உங்களுக்க் நல்லச் செல்வாக்காயிற்றே".
அவர்: "இல்லை வில்லியம், இம்முறை தோல்விதான்"
நான்: "ஏன் அப்பா?"
அவர்: "அன்றொரு நாள் நான்கு பேர் என் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தனர். நான் அவர்கள் கட்சி சார்பில் நிற்க வேண்டும் என்றுக் கூறினர். அவர்கள் கூ க்ளுக்ஸ் கான் (Ku klux khan) என்றத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீக்ரோக்களுக்கெதிராய் வன்முறை செயல்கள் நடத்துபவர்கள். நான் மறுத்து விட்டேன். அவர்களுக்கு இங்கு நல்லச் செல்வாக்கு உண்டு. என்னை ஜெயிக்க விட மாட்டார்கள்"

எனக்கு என்னக் கூறுவது என்றே புரியவில்லை.

என் தந்தை தனகுத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார்.

"இந்த நாட்டில் என்ன நடக்கிறது? ஆபிரஹாம் லிங்கன் போன்ற மாமனிதர்கள் கட்டிக் காத்த இந்த நாட்டின் நிலை இப்படியா ஆக வெண்டும்?" என்றுக் கத்திக் கொண்டே தன் கார் முன் கண்ணாடியை ஒரு குத்து விட்டார். "சிலீர்" என்ற சப்தத்துடன் கண்ணாடி உடைந்து அதில் "ட" வடிவில் ஒரு ஓட்டை விழுந்தது.

திடீரென்று என் தந்தையின் ஆவேசம் அடங்கியது. "என்ன இவ்வாறு ஆகி விட்டதே" என்று ஒரு குழந்தையைப் போல் என்னை நோக்கிக் கேட்டார்.

நேரே டாக்டர் வீட்டுக்குப் போய் ஒரு தையல் போட்டுக் கொண்டு வீடு போய் சேர்ந்தோம். அதற்கு முன்னால் அவர் என்னிடம் தேர்தல் பற்றி உன் அம்மாவிடம் எதுவும் கூறாதே" என்று என்னைக் கேட்டுக் கொண்டார். "நீயே ஏதவது கதை கூறிச் சமாளி" என்றும் கூறினார். என்னுடையக் கதை கட்டும் திறமையில் அவ்வளவு நம்பிக்கை அவருக்கு. முக்கியமாகக் கார் கண்ணாடி உடைந்ததற்கு அம்மா என்ன கூறுவாரோ என்று வேறு அவருக்குப் பயம்.

வீட்டுக்குச் சென்றோம். அப்பாவின் கையில் கட்டைப் பார்த்ததும் அம்மாவுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் களேபரத்தில் திட்டவும் மறந்துப் போனார்.

"என்ன வில்லியம் என்ன நடந்தது" என்று அவர் தலையை கோதியபடி கேட்டார்.
நான் முந்திக் கொண்டு "ஒன்றும் இல்லை அம்மா, நம் ஊர் கால்பந்தாட்டக் குழு நேற்று ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்கள். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே அப்பா வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று நம்மூர் குழுவின் முன்னணி வீரர் எவ்வாறு தாவி பந்தை உதை விட வேண்டும் என்றுக் காண்பிக்கப் போக, அவர் கையால் முன் கண்ணாடியைக் குத்தினார்" என்று உளறினேன்.
"அப்பா, பிள்ளை இருவருக்கும் வேறு வேலையில்லை" என்று எங்களை மொத்தமாகத் திட்டி விட்டு அம்மா அடுக்களைக்குள் சென்றார்.

என் தந்தை என்னை நன்றியுடன் பார்த்தார். அத்தருணத்தில் நான் பையனிலிருந்து ஒரு வளர்ந்த ஆளாக மாறியதை உணர்ந்தேன்.

தேர்தல்? அதில் எதிர்ப்பார்த்தத் தோல்விதான். ஆனாலும் அவ்வளவு அதிர்ச்சியைத் தரவில்லை>>

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது