6/09/2008

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 08.06.2008

என் கார் காந்தி சிலை அருகே என்னை டிராப் செய்து விட்டு பார்த்தசாரதி கோவிலை நோக்கி விரைந்தது. மணி அப்போது மாலை 05.45. ரோடை கிராஸ் செய்து வழமையான இடத்துக்கு வந்தால் ஏற்கனவே ஜமா சேர்ந்து விட்டிருந்தது. நான் பார்த்தவர்கள் நினைவிலிருந்து எழுதுவது: பாலபாரதி, மருத்துவர் ப்ரூனோ, லக்கிலுக், சுகுணா திவாகர், விக்கி, ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி, பெண் பதிவர் (மலர்வனம் லட்சுமி என்று பெயரை நினைவுபடுத்திய லக்கிலுக்குக்கு நன்றி), வழக்கறிஞர் சுந்தரராஜன், அதிஷா, ஜோதிவேல், முரளி கண்ணன், ஜிங்காரோஜமீன், பைத்தியக்காரன், கடலையூர் செல்வம், கென் ஆகியோர். ஒரு மாதிரி செட்டில் ஆகி பேச ஆரம்பிப்பதற்குள் மழை பலமாக பிடித்து கொண்டது.

இங்கு எனது புதிய வழக்கம் உதவிக்கு வந்தது. வாக்கிங் போவதற்கு மழை தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே பாக்கெட்டில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையை எப்போதுமே மடித்து வைத்திருப்பேன். அதை வெளியே எடுத்து பிரித்து அதனுள்ளே என் செல்பேசி, பர்ஸ், வாட்ச் ஆகியவற்றை போட்டேன். பாலபாரதி தனது செல்பேசி, ஐபாட் ப்ளேயர் எல்லாவற்றையும் போட்டார். அவரை பின்பற்றி மற்றவர்களும் தத்தம் செல்பேசியை பையினுள்ளே போட்டனர். எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து கொண்டேன். மழை இன்னும் வலுத்தது. நான் என் வாழ்நாளில் செய்ய ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை நிறைவேற்றிக் கொள்ள நேற்றுத்தான் வாய்ப்பு கிடைத்தது. அதாவது நல்ல மழையில் கடலோரம் நின்று காலை நனைக்க வேண்டும் என்பதுதான் அது. கூட யாரும் வருகிறார்களா எனக் கேட்க ஒரே ஒருவர் மட்டும் வந்தார் (ஜோதிவேல் என்று நினைக்கிறேன்). சாவகாசமாக கடலை நோக்கி நடந்தோம். எங்கள் கூடவே ம்யூசிக்கும் தொடர்ந்தது. ஆதாவது ஒவ்வொரு செல்பேசியாக ஒலிக்க ஆரம்பித்தது. பையை திறக்க இயலாதபடி மழை. பரவாயில்லை என பேசிக்கொண்டே கடலை நோக்கி சென்றோம்.

திருவல்லிக்கேணியேலேயே பிறந்து முதல் 24 ஆண்டுகள் கழித்த எனக்கு நேற்றைக்கு வங்கக் கடல் தனது மிகவும் அழகான தோற்றத்தைக் காட்டியது. கையில் செருப்பை பிடித்து கொண்டு தண்ணீரில் இறங்கினேன். தன்ணீர் திரும்பச் செல்லும்போது காலி மணல் குறுகுறுவென கிச்சு கிச்சு மூட்டி, சமீபத்தில் 1950-ல் முதல் முறையாக நான் அனுபவித்த குதூகல உணர்வைத் தந்து, அந்த வயதையும் தந்தது. அதற்குள் செல்பேசிகள் விடாது அடிக்க ஆரம்பித்திருந்தன. நாதஸ்வர இசை ஒரு செல்பேசியியின் காலெர் ட்யூன். அதுதான் ரொம்பவும் அடித்தது. இருக்காதா பின்னே, பால பாரதியின் செல்பேசியாயிற்றே. அவரவர் மீட்டிங் நடக்கும் இடத்தை தேடி அலைந்து கொண்டிருப்பவருக்கு அவர்தானே பதில் சொல்ல வேண்டும்.

திரும்ப மனமின்றி திரும்பி கொண்டிருந்தபோது ஆவேசத்துடன் ப்ரூனோவும் இன்னொரு பதிவரும் கடலை நோக்கி எங்களைத் தேடி வந்து கொண்டிருந்தனர். நான் திரும்புவதற்கும் மழை நிற்பதற்கும் சரியாக இருந்தது. அவரவர் செல்பேசிகளை எடுத்து கொண்டனர். இப்போது பாஸ்டன் பாலாவும் அவர் நண்பர் மூர்த்தியும் வந்தனர் (இது வேறு மூர்த்தி). அவர் என் அருகில் அமர்ந்தார். இதற்குள் அதியமானிடமிருந்து ஃபோன். தனக்கு ஜுரம் என்றும் வர இயலவில்லை என்றும் தகவல் சொன்னார். பாஸ்டன் பாலாவுடன் பேச வேண்டும் என்றார். சட்டென்று அவர் கண்ணில் சிக்கவில்லை. பிறகு அவரை பேச வைக்கிறேன் என்று கூறி அதியமானது போனை கட் செய்தேன். பிறகு பாஸ்டன் பாலாவிடம் அதியமானின் எண்ணை கொடுத்தேன். அவரும் பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறினார்.

அதற்குள் முறுக்கு, பால் ஸ்வீட் ஆகியவை வினியோகிக்கப்பட்டன.

இந்த மழை செய்த கலாட்டாவில் பேச நினைத்ததையெல்லாம் பேச இயலவில்லை. அதியமான் வரவில்லை என்பதில் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஃபீலிங். இதற்குள் வீட்டம்மாவிடமிருந்து ஃபோன். எதிர்ப்பார்த்ததற்கு மிக முன்னதாகவே பார்த்தசாரதி கோவில் தரிசனம் முடிந்து விட்டது. கார் காந்தி சிலைக்கு அருகில் திரும்ப வந்து கொண்டிருந்தது. மனமேயில்லாமல் விடை பெற வேண்டியதாயிற்று.

ஆக மீட்டிங் என்றவரை ஏமாற்றமே. ஆனால் கடலோரமாக கொட்டும் மழையில் அலைகளை எதிர்நோக்கி நின்றது அழகான அனுபவம். அதுதான் நேற்றைய அனுபவத்தின் ப்ளஸ் பாயிண்ட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/08/2008

துஷ்யந்தன், சகுந்தலை விவகாரத்தில் உண்மையாகவே என்னதான் நடந்ததாம்?

நம்ம நாடோடி இருக்காரே, அவருக்குன்னு அற்புதமான சந்தேகங்களெல்லாம் தோன்றும். இப்பத்தான் துச்சாசனன் அவிழ்த்து போட்ட புடவைகள் என்னாயின என்பதைப் பற்றி அவர் எழுதியதைப் பார்த்தோம். அவர் சாகுந்தலத்தையும் விட்டு வைக்கவில்லை. அதையும் என் நினைவிலிருந்தே எழுதுவேன்.

சொர்க்கத்தில் கவி காளிதாசனுக்கு ரொம்பவும் புகழ். அவனது காவியங்களை அவன் வாயாலேயே பாடிக் கேட்பதில் இந்திரனுக்கு மிக்க மகிழ்ச்சி. அப்படித்தான் பாருங்கள், அன்று சாகுந்தலத்தின் காட்சிகளை சுவைபட கூறிக் கொண்டு வருகையில், எதிர்பாராத விதமாக முன்கோபத்துக்கு பிரசித்தி பெற்ற துர்வாச மகரிஷி இந்திர சபைக்கு வந்து பிரவேசிக்கிறார். காளிதாசன் திடுக்கிடுகிறான். பாவம் அவன், அப்போதுதான் சகுந்தலை தன் காதலன் நினைவாக இருந்த கோலத்தில் அதிதியாக வந்த துர்வாசரை கவனியாது போக, அவரும் கோபமுற்று, "நீ யார் நினைவால் என்னை கவனியாது மறந்து போனாயோ, அவன் நினைவிலிருந்து நீ மறையக் கடவாய்" என சாபமிட, அதை கவனித்த சகுந்தலையின் அண்ணன் சாரங்கனின் மனைவி பிரியம்வதா பதறிப் போய் முனிவரிடம் சாப விமோசனம் யாசிக்க, அதற்குள் கோபம் தணிந்த துர்வாசர், "சாபம் இட்டது இட்டதுதான், ஆனால் சகுந்தலையின் விரலில் துஷ்யந்தன் காந்தர்வ விவாகத்துக்கு அறிகுறியாக இட்ட அந்த கணையாழி அவள் கையில் இருக்கும் வரை என் சாபம் காத்திருப்பில் இருக்கும். அது தொலைந்தால் துஷ்யந்தன் அதை மறந்து விடுவான், ஆகவே சகுந்தலையிடம் சாபத்தைப் பற்றி கூறாது மோதிரத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்படி வேண்டுமானால் கூறிக் கொள்" என்று கூறிவிட்டு அகல்கிறார்.

இப்போது காளிதாசனுக்கு தர்மசங்கடமான நிலைமை. நாடோடி மேலே இவ்வாறு எழுதுகிறார்:

இந்திரன்: வாருங்கள் துர்வாச மகரிஷி அவர்களே. ஆசனத்தில் அமருங்கள்.

துர்வாசர்: சரி, சரி. மங்களம் உண்டாகட்டும் தேவேந்திரா. (கண்ணை இடுக்கிக் கொண்டு பார்க்கிறார்), யார் அது காளிதாசனா, என்னப்பா சௌக்கியமா?

காளிதாசன்: (மென்று விழுங்கியவாறு) வணக்கம் மாமுனிவரே. இந்திரரே, நான் விடை பெறுகிறேன், பிறகு வருகிறேன்.

துர்வாசர்: இரப்பா, காளிதாசா? ஏன் இப்படி பம்முகிறாய்? என்னமோ இந்திரனுக்கு படித்து காட்டிக் கொண்டிருந்தாயே, என்ன அது?

காளிதாசன்: சாகுந்தலம் நாடக காவியம் மகாபிரபோ.

துர்வாசர்: அடேடே, நானும் கேள்விப்பட்டிருகிறேன். நாடகத்தை எழுதியவனே படித்து காட்டுவது என்பது என்ன அரிய செயல். நானும் கேட்கிறேன். நான் வரும்போது எங்கு நிறுத்தினாயோ, அங்கிருந்தே ஆரம்பி.

காளிதாசன் அழமாட்டாக் குறையாக ஆரம்பிக்கிறான்.

சகுந்தலை தன் கணவன் துஷ்யந்தனை எண்ணி படுத்திருக்கிறாள். வெளியே துர்வாச மகரிஷியின் குரல்:

துர்வாசர்: அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன்.

சகுந்தலை காதில் வாங்காது தன் காதல் கணவனை நினைத்து படுத்திருக்கிறாள்.

துர்வாசர்: (கோபத்துடன்) அறிவற்ற பெண்ணே, என்னையா அலட்சியம் செய்தாய், யாருடைய எண்ணத்தில் இதை செய்தாயோ, அவன் உன்னை மறந்து போகக் கடவது.

காளிதாசன் இதை படிக்கக் கேட்ட துர்வாசர் கண்களில் நெருப்புப் பொறி பறக்கிறது.

துர்வாசர்: நிறுத்து துஷ்டனே. இது என்ன அபாண்டம். நான் அந்தக் குழந்தையை சபித்தேனா? நடக்காத கதை எழுதி என்னை அவமதித்து விட்டாய். பிடி சாபம்.

இந்திரன் (பதறிப் போய்): பொருத்தருள வேண்டும் மகரிஷே.

துர்வாசர்: (இன்னும் கோபம் தணியாது): இல்லாததை கூறினால் எப்படி பொறுப்பது? நான் கோபக்காரன் என்பதை ஒத்து கொள்கிறேன். அதுக்காக இப்படியா? இம்மாதிரி அக்குழந்தை தன் கணவனை எண்ணியுள்ளாள் என்பதைக்கூட தெரிந்து கொள்ளாது நான் இப்படி முட்டாள்தனமான சாபம் கொடுப்பேனா? இது என்ன சிறுபிள்ளைத்தனமா இருக்கு. அடேய் காளிதாசா, உண்மையில் என்ன நடந்தது என்பதை கேட்டறியாமல் நீ எப்படி இதை எழுதலாம்?

காளிதாசன் (சற்றே அசட்டு தைரியத்துடன்): அதை அறிவேன் முனிசிரேஷ்டரே. வேண்டுமானால் துஷ்யந்தனையே வரவழைத்து கேட்டு விடலாமே.

அப்படியே இந்திரன் துஷயந்தனையும் சகுந்தலையையும் வரவழைக்கிறான்.

துர்வாசர்: துஷ்யந்தா, நீ ஏன் சகுந்தலையை மறந்தாய்?

துஷ்யந்தன் (திடுக்கிட்டு): இதென்ன புதுக்கதை, நான் எங்கே அவளை மறந்தேன்? அவள் என் காதல் மனைவியல்லவா?

இந்திரன்: பின்னே ஏன் பரதன் காட்டில் தனியாக தன் அன்னையுடன் வசித்தான்?

துஷ்யந்தன்: வேறு ஒன்றும் இல்லை. நானோ அரசன், சகுந்தலையோ அரச குடும்பத்தை சேராத பெண். ஆகவே நாட்டு மக்கள் அவளை ராணியாக ஏற்று கொள்ள சமயம் தேவைப்பட்டது. அதனால்தான் அவளை தனியாக குடித்தனம் வைத்தேன். அவ்வப்போது வந்து போய் கொண்டிருந்தேன். பிறகு மந்திரி பிரதானிகள், அரசவை உறுப்பினர்கள் ஆகியோரது மனதை மாற்றி சகுந்தலையை அரண்மனைக்கு வரவழைத்தேன். அதற்கு சில ஆண்டுகள் பிடித்தன, அவ்வளவுதான்.

துர்வாசர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்கிறார்.

துர்வாசர்: என்னப்பா காளிதாசா, இந்த திருப்பம் எனக்கே பிடிக்கவில்லையே, உன் கற்பனையே நன்றாக இருக்கும் போலிருக்கே. ஆகவே அப்படியே இருக்கட்டும் எனக்கு ஆட்சேபணை இல்லை.

துஷ்யந்தன்: வேண்டுமானால் சபித்த முனிவரின் பெயரை வேண்டுமானால் மாற்றி விடட்டுமா?

துர்வாசர்: வேண்டாம், அப்படியே இருந்து விட்டு போகட்டும். நானும் காளிதாசனின் காவியத்தில் ஒரு பாத்திரம் என்பதும் எனக்கு கௌரவமே.

காளிதாசன் மறுபடியும் ஆரம்பிக்கிறான்:

"அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன்". துர்வாசரின் சாபம் இடம்பெற, அவையில் உள்ள எல்லோரும் (துர்வாசர் உட்பட) உச் கொட்டுகின்றனர்.

மீண்டும் டோண்டு ராகவன். இப்பதிவை போடும்போது, திடீரென ஒரு பயங்கர சந்தேகம் வந்தது. அதாவது சகுந்தலையின் அண்ணன் மனைவியின் பெயரில் சந்தேகம். பிரியம்வதா என்றுதான் ஞாபகம். இருந்தாலும் சரி செய்து கொள்ள நண்பர் இரா. முருகனுக்கு ஃபோன் செய்தேன். அவர் கேட்டு சொல்வதாகக் கூறினார். ஸ்டெல்லா மேரீஸ் காலேஜில் பொருளாதாரப் பேராசிரியையாக இருக்கும் என் தங்கைக்கு ஃபோன் செய்து கேட்க, அவளும் அக்கல்லூரி வடமொழி பேராசிரியரை கேட்டு பிரியம்வதாதான் என உறுதி செய்தாள். இந்த விஷயத்தை முருகன் அவர்களுக்கு ஃபோன் செய்து தெரிவிக்க, அவரும் நேர்று இரவு வேறு ஒரு காண்டக்ஸ்டில் பிரியம்வதா என்ற பெயரைக் கேள்விப்பட்டதாகவும், இன்று அதே பெயரைக் கேட்பது ஒரு ஹைப்பர் லிங்க் போல உள்ளது என்று கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/07/2008

கர்ணன் - 1

பிறப்பிலிருந்தே விதியால் வஞ்சிக்கப்பட்டவன் என்று கர்ணனைக் கூறலாம். அவன் அன்னை குந்திபோஜ மன்னனின் மகள் குந்தி. அழகும், அறிவும் வினயமும் ஒன்றாகப் பெற்றவள் அவள். அவள் பாண்டுவை மணம் முடிக்கும் முந்தைய காலத்தில் ஒரு முனிவர் குந்திபோஜனின் விருந்தாளியாக வந்து தங்குகிறார். அவருக்கு பணிவிடை செய்வதற்காக அரசன் தன் மகள் குந்தியை நியமிக்கிறான். அவளும் முனிவருக்கு சிரத்தையுடனும், வினயத்துடனும் சேவை செய்ய, அவர் மனம் மகிழ்ந்து குந்திக்கு அவர் 6 மந்திரங்களை உபதேசிக்கிறார். அவை முறையே கதிரவன், யமன், வாயு, இந்திரன், இரண்டு அசுவினி தேவதைகளை குறித்து இயற்றப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை குந்தி தேவி நியமத்துடன் உச்சரித்தால் அந்த தேவதை வந்து அவளுக்கு புத்திர பாக்கியம் கொடுக்கும் என்பதையும் முனிவர் அவளுக்கு கூறிவிட்டு சென்று விடுகிறார். அவற்றை ஏன் அவர் அவளுக்கு உபதேசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஒரே பதில் அவர் தன் ஞானதிருஷ்டி மூலம் பின்னால் நடப்பதை அறிந்து குந்திக்கு அவற்றை அளித்தார் என்பதே. இப்பதிவு அதைக் குறித்து அல்ல.

இளம் பெண்ணுக்கே உரித்தான ஆவல் குந்தியிடமும் இருந்தது. தனக்கு ஒரு முனிவரால் உபதேசம் செய்யப்பட்ட மந்திரத்தை பரிசோதிக்க எண்ணி கதிரவனை வேண்டி குந்தி தேவி விளையாட்டாக உச்சரிக்க கதிரவனே அவள் முன்னால் தோன்றினான். அவள் அஞ்சினாள். தான் விளையாட்டுக்கு செய்ததாகவும், ஆகவே அவன் திரும்பிப் போகுமாறு வேண்ட, கதிரவன் ஒத்து கொள்ளவில்லை. ஏனெனில் அந்த மந்திரத்தின் சக்தி அப்படிப்பட்டது. அவளுக்கு தான் குழந்தை அளித்தே ஆகவேண்டும் என்றும், குழந்தை பெற்றாலும் அவள் கன்னிமைத் தன்மை இழக்க மாட்டாள் என்றும் கூறி அவளுக்கு குழந்தையை கொடுத்து செல்கிறான். திருமணமாகாத நிலையில் குழந்தையைப் பெற்ற குந்தி ஊர்ப்பழிக்கு அஞ்சி, குழந்தையை ஒரு கூடையில் வைத்து, நதியில் விட்டு விடுகிறாள். அங்கிருந்து ஆரம்பிக்கிறது கர்ணன் வாழ்க்கையில் விதியின் விளையாட்டு. அது பற்றித்தான் இப்பதிவு.

திருதிராஷ்டிரன் ராஜ்ஜியத்தில் தேரோட்டியாக பணிபுரிந்தவனால் கண்டெடுக்கப்பட்டு அவன் செல்லப் புதல்வனாக வளர்கிறான். சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் ஒரு காட்சி. குழந்தை கர்ணனிடம் ஒருவன் விளையாட்டாக கைநீட்டி விளையாட, குழந்தை தன் கையிலிருக்கும் காப்பை அவனுக்கு தருகிறான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவன் பிற்காலத்தில் கொடை வள்ளலாக வருவதை அக்காட்சி அழகாகக் காட்டுகிறது. பிறகு வளர்ந்து துரோணரிடம் தனக்கும் போர் வித்தைகள் கற்றுத் தருமாறு யாசிக்க அவர் மறுத்து விடுகிறார். பிறகு பரசுராமரிடம் செல்கிறான். அவரோ பிராம்மணரைத் தவிர சத்திரியர்களுக்கு கற்றுத் தராத கொள்கையுடையவர். ஆகவே அவரிடம் தான் பிராம்மணன் என்று பொய் கூறி எல்லா அஸ்திரங்களையும் பெறுகிறான். பிற்காலத்தில் தனது மகன் அருச்சுனனுக்கு போட்டியாக இவன் வருவான் என பயந்த இந்திரன் சூழ்ச்சி செய்து, அவனை பரசுராமரிடம் போட்டு கொடுக்கிறான். பரசுராமரும் தன்னை ஏமாற்றி அவன் வித்தை கற்றது, முக்கியமாக பிரும்மாஸ்திரம் அவனுக்கு உயிராபத்து வரும் காலத்தில் மறந்து போகக்கடவது என சபித்து விடுகிறார்.

அதே இந்திரன் தனது சூழ்ச்சியால் கர்ணனுக்கு இன்னொரு முனிவர் மூலம் சாபம் வருமாறு செய்கிறான். அவன் கடைசி யுத்தம் செய்யும்போது தேர்க்கால் மண்ணில் அழுந்தும் என்ற சாபம்தான் அது. இது போதாது என்று இந்திரன் அவனது உடலுடனேயே ஒட்டீயிருந்த கவச குண்டலத்தை யாசகமாகப் பெற்று செல்கிறான். பாரதப்போர் துவங்கும் முன்னால் கண்ணன் குந்தி தேவியை கர்ணனிடம் அனுப்பி அவனது பிறப்பின் ரகசியத்தை அவனிடம் கூறி, அவனை பாண்டவர் பக்கம் இழுக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அருச்சுனனைத் தவிர மற்ற தம்பியரைக் கொல்லக்கூடாது என்ற வரத்தையும், நாகாஸ்திரத்தை அருச்சுனன் மேல் ஒருமுறை மட்டுமே பிரயோகிக்க வாண்டும் என்னும் வரம் பெற தூண்டுகிறான். அவளும் வரங்களைப் பெற்று வருகிறாள். நாகாஸ்திரத்தை முதன் முறை ஏவியபோது கண்ணன் தேரை தரையில் அழுந்த செய்து அது அருச்சுனனின் கிரீடத்தைத் தட்டிச்செல்கிறது. மறுபடியும் அதை பிரயோகிக்க கர்ணன் மறுத்து விடுகிறான். ஆகவே கோபம் கொண்ட தேரோட்டி சல்லியன் அவன் இறக்கும் தருவாயில் அவனை தேர் தரையில் அழுந்திய நிலையில் பாதியிலேயே விட்டு செல்கிறான். கடைசி காலத்தில் பிரும்மாஸ்திரம்மும் மறந்து போகிறது. இருப்பினும் கர்ணனைக் கொல்ல இயலவில்லை. தருமதேவதையே அவன் மேலும் செலுத்தும் பாணங்களை அவனுக்கு மாலையாக விழ வைக்கிறாள். இப்போதுதான் கண்ணனின் கடைசி யுக்தி வெளியில் வருகிறது. ஒரு கிழ வேதியன் உருவெடுத்து அவனது தர்மத்தின் பலன்களை யாசகமாகக் கேட்க கர்ணனும் தனது தர்மத்தின் எல்லா பலன்களையும், குறிப்பாக இந்த கடைசி தர்மத்தின் பலனையும் அவனுக்கு தானமாக அளிக்கிறான். அவனுக்கு கண்ணன் விசுவரூப தரிசனம் அளித்து, அருச்சுனனிடம் பாணம் செலுத்துமாறு கூற அவனும் அஞ்சனா அஸ்திரத்தை விடுத்து கர்ணனைக் கொல்கிறான்.

பிறகு உண்மை தெரிந்து எல்லோரும் புலம்ப, அருச்சுனன் தான் தன் அண்ணனைக் கொன்றேன் எனக் கதற, கண்ணன் அவனிடம் அப்படியெல்லாம் அவன் பெருமை கொள்ளும் நிலையில் இல்லை என்பதை அழகாக விளக்குகிறான்.

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா' என்ற அற்புதமான பாடல் வரிகளில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்தக் கத்துக்குட்டி டோண்டு ராகவன் இத்தனை நேரம் வளவளவென்று எழுதியதை மிக அழகாக சுருக்கி வலுமிக்க அணு ஆயுதமாகத் தருகிறார். அப்பாடல் காட்சியை காண்போம், இந்தச் சிறியோன் டோண்டு ராகவன் எழுத முயன்று தோற்றது எவ்வளவு அழகாக இங்கு கூறப்பட்டது என்பதை பார்ப்போமா?

கர்ணனைப் பற்றி இன்னும் ஒரு பதிவாவது வரும் என்று கூறி தற்போதைக்கு விடைபெறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/06/2008

டோண்டு பதில்கள் - 06.06.2008

அனானி (30.05.2008 காலை 07.45-க்கு கேட்டவர்):
1. ஒரே நாளில் பலர் பல நாள் கேட்ட கேள்விகளுக்கு பதில் எழுத (தட்டச்சு செய்ய)தங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறது? (சாதாரணமாக 10 கேள்விகளை தட்டச்சு செய்யவே 30-லிருந்து 45 மணித்துளிகள் ஆகிறதே. ஆங்கிலத் தட்டச்சு தெரிவதால் இது தங்களுக்கு சாத்தியமாகிறதா?) விளக்கவும்.
பதில்: பதில்களை நான் யோசித்து போடுவதால் அவற்றின் வாக்கியங்கள் எனது கட்டுப்பாட்டில் உள்ளன. I think at the typewriter என்று எனது தந்தை நரசிம்மன் அவர்கள் கூறுவார். அதாவது முதலில் எழுதி வைத்து கொண்டு அதை நகலெடுத்து தட்டச்சுவது இல்லை. ஆகவே எண்ண ஓட்டங்களுக்கேற்ப தட்டச்சு முன்னேறுகிறது. இம்மாதிரியான சிருஷ்டியில் ஈடுபடும்போது காலம் செல்வது மனதில் உறுத்தாது. உதாரணத்துக்கு உங்களது கேள்வியை மட்டுறுத்துவதற்கு முன்னரே நகலெடுத்து புதிய பதிவுப் பக்கத்தைத் திறந்து ஒட்டி விட்டேன். பதில் மனதுக்கு உடனே தோன்ற இப்போதே தட்டச்சும் செய்து விடுகிறேன். மற்ற கேள்விகளும் அம்மாதிரிதான் டீல் செய்யப்படுகின்றன. அவை வந்த உடனேயே இங்கு அதை நகலெடுத்து ஒட்டுவதால் கேள்விகளின் கேட்கப்படும் வரிசையில் அவற்றின் விடைகளும் வருகின்றன. சில கேள்விகளுக்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றால் அவற்றை அப்போதைக்கு அப்படியே விடுகிறேன். அடுத்து 7 நாட்கள் இருக்கின்றனவே. எப்போது விடை தோன்றுகிறதோ, உடனேயே பதிப்பதில் என்ன பிரச்சினை? மற்றப்படி ஆங்கிலத் தட்டச்சு எனக்கு தெரியாது. மொழிபெயர்ப்புக்காக கணினி வாங்கிய கடந்த ஆறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான ஆங்கில, ஃப்பிரெஞ்சு, ஜெர்மன், தமிழ்ப் பக்கங்களை நிரப்பிய பயிற்சிதான் எனது வேகமான தட்டச்சுக்கு காரணம். தமிழில் ஃபோனெட்டிக் முறையிலேயே நான் மிக வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது.

ஷிவாத்மா:
1. கீதையின் சாராம்சங்களை முன்னிறுத்தி ஒரு கேள்வி : கருமமே கண்ணானவன் பலன் எதிர்பாராமல் கடமையை செய்தல் இருக்க, தன் கடமை இதுதான், இன்னதுதான் என தெளிதல் எவ்வாறு? எப்படி? கர்மயோகியாக தீர்மானித்தவன் தன் கர்மம் பற்றின தெளிவு பெறுதல் எப்படி? உதாரணத்துக்கு: தந்தையாக இருந்தால்தானே, இருக்க தெளிந்தால்தானே தந்தையின் கடமை புலப்படும்?
பதில்: அதாவது கடமையை செய்கிறோம் என்ற உணர்வில் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா? ஆனால் அப்போது தேவையின்றி ஒரு கர்வம் உங்களுக்குள் புகும் வாய்ப்பு உண்டாகி விடுமே. உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொள்ளும் பாவனை ஆகிவிடுமே. தந்தையானவன் தன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்பது பொதுவிதி. அதற்கேற்ப நீங்கள் செயல்படும்போது சில பிரச்சினைகள் வரலாம். அதனால் எல்லாம் மனம் தளராது கடமையாற்றினால் பிரச்சினைகள் தானே விலகும் அல்லது ஏதாவது ஒரு வழியில் உதவி கிடைக்கும், அதுவும் நீங்கள் எதிர்பாராதபோது. ஒரு கடமை முடிந்ததா, அத்துடன் எல்லாம் முடிந்தது என சோம்பியிருக்கலாகாது. வேறு கடமைகள், சவால்கள் உங்கள் முன்னே வரும், அல்லது அவற்றை தேடிப்போகவும். மலைக்காது செயல் புரியவும்.

கூடுதுறை:
1) எப்படியும் ஏமாற்றத்தான் போகிறார்கள் என்று தெரிந்தும் நமது மக்கள் மட்டுமே எப்படி மோசடி கம்பெனிகள், லோன் வாங்கிதருகிறேன் என்பவர்கள், டேட்டா என்ட்ரி வேலை மற்றும் வீட்டிலிருந்தே வேலை ஆகிய வகைகளில் ஏன் பணம் போடுகிறார்கள்???
பதில்: நிறைய பேர் தெரிந்தே இதில் செல்கிறார்கள். உதாரணமாக மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் முதல் இரண்டு தளங்களுள் வருபவர்களுக்கு பணம் கிடைக்கும். அதற்குள் தாங்கள் வந்துவிடலாம் என்ற அசட்டு எண்ணமே இதற்கு காரணம். கொடுத்த துட்டுக்கு ஏற்ற ரேங்கில் புது கம்பெனியில் வேலை கொடுக்கும்போதே தெரிந்து கொள்ளலாமே இது மன்னார் அண்ட் கம்பெனி என்று. கல்ஃபுக்கு அழைத்து செல்கிறேன், மலேசியாவுக்கு அழைத்து செல்கிறேன் என்று பலர் பல முறை ஏமாற்றியதை பற்றி படித்த போதும் போய் புதிதாக ஏமாறுபவர்களை பார்த்தால் கோபம்தான் வருகிறது.
2)யட்சன் கேட்ட கேள்விபதில்களை பூராவையும் ஒரு பதிவில் அளித்தால் நமது நாத்திக சிகாமணிகள் சிறிதாவது புரிந்து கொள்வார்களே?
பதில்: போட்டால் போயிற்று.
3) நமது பாரதத்தையும் அமெரிக்கா மாநிலங்களை கோடு போட்டது பிரித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அல்லவா?
பதில்: சரிதான் சாதாரண சாலையே தலைவரது வீடு அல்லது நிலங்கள் குறுக்கே வந்தால் பணிவுடன் வளைந்து செல்கிறது. இந்த அழகில் மாநிலங்களின் எல்லையும் அமெரிக்கா மாதிரி அமைய இயலுமா. ஒன்று ஞாபகமிருக்கட்டும். அமெரிக்காவில் வெட்ட வெளிகள் அதிகம். ஆகவே நேர்க்கோடு எல்லாம் போட்டு கொள்ள முடியும். இங்கு அப்படியில்லை.
4)அனானி கேள்விகள் அதிகம் வருகிறேதே எப்படி??? கலைஞர் கேள்வி பதில்கள் பாணியா?
பதில்: கூடுதுறையே ஒரு அதர் ஆப்ஷனில் வருவதுதானே. இன்னொருவர் கூடுதுறை என்னும் பெயரில் அதர் ஆப்ஷனிலோ அல்லது அனானியாகவோ வந்தால் உங்களால் ஒன்றும் செய்ய இயலாதே. அதற்குத்தான் பிளாக்கராக வந்து போடுவதே நல்லது. உங்கள் ப்ரொஃபைலில் போட்டோ இருந்து, உங்கள் பிளாக்கர் டிஸ்ப்ளே பெயரில் என் விஷயத்தில் இருப்பதுபோல உங்கள் பிளாக்கர் எண்ணை அடைப்புக் குறிக்குள் போட்டால், உங்கள் அடையாளத்தை யாருமே திருட இயலாதே. மற்றப்படி கேள்விகள்தான் முக்கியம். வசைகள் இல்லாது கேள்விகள் வந்தால் அவை வந்த வரிசையில் ஏற்றப்படுகின்றன.

ஸ்ரீ:
1. How are you able to openly proclaim your caste, mock at Karunanidhi and support Modi openly? Have you ever faced any threats (other than the poli episode) or any attacks? How are you able to roam around freely after making strong remarks?
பதில்: நான் இருப்பது இந்தியாவில். இங்குள்ள ஜனநாயக உரிமை உலகில் வெகு சில மற்ற நாடுகளில்தான் உண்டு என்பதை மறக்கலாகாது. மேலும் நேருக்கு நேர் நின்று கருத்தை தைரியமாகக் கூறினால் ஒத்து கொள்வதில் மற்றவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.
2. What is the best advice you have ever got from anybody?
பதில்: சமீபத்தில் 1976-ல் நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் சி.ஆர்.பி.எஃப். வளாகத்தில் வேலை செய்தபோது ஒரு திருட்டு நடந்தது. அப்போது போலீஸ் நாய் வந்தது. எல்லோரும் அதைப் பார்க்க சென்றனர். நானும் போக முயன்றேன். என் நண்பர் காண்ட்ராக்டர் பால் பாக்கியசாமி அவர்கள் என்னை தடுத்தார். அவர் சிம்பிளாக ஒன்று சொன்னார். "ராகவன் வந்திருப்பது ஒரு நாய். உன்னிடம் ஏதேனும் உணவு வாசனை இருந்தாலும் உன் மேல் அது தாவும் வாய்ப்பு உண்டு. பிறகு உன்னை போலீசார் கவனிக்கும் கவனிப்பில், இந்திரா காந்தியை கொல்ல நடக்கப்போகும் முயற்சியில் உனக்கு பங்கு இருப்பதாக நீயே ஒப்பு கொண்டுவிடுவாய். ஆகவே அப்பக்கமே போகாதே. வந்திருப்பது ஆஃப்டர் ஆல் ஒரு நாய் என்பதை மறவாதே" என்றார். இதற்கு மேல் சிறந்த அட்வைஸ் இதுவரை யாரும் எனக்கு தரவில்லை.
3. Do you think intercaste marriages are workable in the long run? Do you think the current generation will be able to successfully use that as an antidote for casteism?
பதில்: கலப்பு திருமணத்தை எல்லோரும் ஆதரிக்கின்றனர் மற்றவர்கள் விஷயத்தில், ஆனால் தத்தம் திருமணத்துக்கு முறைப்பெண் மற்றும் முறைப்பையனையே நாடுகின்றனர். இதுதான் நான் பொதுவாக பார்த்த நிலைமை. கலப்பு திருமணம் பற்றி நான் போட்ட பதிவைப் பாருங்கள்.
4. what is your comment on the anbumani-venugpoal clash?
பதில்: அதுதான் முடிந்து விட்டதே. அன்புமணியும் மீசையில் மண் ஒட்டவிலை என்று கூறிவிட்டாரே.

அனானி: (30.05.2008 மாலை 09.46-க்கு கேள்வி கேட்டவர்):
1. சோ ராமசாமி அவர்களின் பேரில், சோ என்பதன் விரிவாக்கம் என்ன விளக்கவும்.(initial இல்லை என்பார்கள்)
பதில்: இது பற்றி சோ அவர்களே தனது "அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்" புத்தகத்தில் 50-ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார். பகீரதன் அவர்கள் எழுதிய 'தேன்மொழியாள்' என்னும் கதையை சோவின் ட்ரூப் நாடகமாக்கி போட்டபோது இவருக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. சோ எழுதுகிறார்: "தேன்மொழி நாடகத்தில் எனக்காக ஒரு சிறு பாத்திரம் சிருஷ்டி செய்யப்பட்டது. அதற்கான பெயரை என்னையே வைக்க சொன்னார்கள். வீட்டில் என்னை சிறுவயதிலிருந்தே 'சோ' என்றுதான் அழைப்பார்கள். வேறு பெயர் தோன்றாததால் அந்தப் பெயரையே வைத்து விடுமாறு சொன்னேன்". அவ்வளவுதான் விஷயம்.
2. இவரைப் போல் சொந்தப் பெயர் கடந்து ஒரெழுத்துப் பெயருடன் பத்திரிக்கை உலகில் பகழ் பெற்றவர் யாரேனும் உண்டா?
பதில்: யாராவது சீனாக்காரர் யீ, வூ, க்யூ என்று இருக்கலாம். யாருக்கு தெரியும்?
3. ஆங்கிலப் புலமை இருந்தும், வடஇந்திய அரசியல் விமர்சனத்தை தாங்கிய ஆங்கில நாளிதழ் தொடங்க ஏன் முயற்சி செய்யவில்லை? செய்து வெற்றி பெற வில்லையா? பிக்விக் என்னும் ஆங்கில பத்திரிகை நெருக்கடி காலக் கட்டத்தில் ஆரம்பித்தார். அது நிலைத்து நிற்கவில்லை. தனது ஆங்கில நடை மண்வாசனையுடன் இருக்காது, வெறுமனே தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தது போலிருக்கும் என்பதை உணர்ந்தவர் அவர்.
4. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து தைரியமாக (M.G.R ஆட்சி, ஜெயலலிதா அவர்களின் 10 ஆண்டுகால ஆட்சி, கலைஞரின் 10-15 கால ஆட்சி) விமரிசனம் செய்து வரும் சோ போல் வேறு யாரும் இருக்கிறார்களா?
பதில்:பயமில்லாமல் பணிபுரிபவர்கள் பலர் உள்ளனர். எனக்கு உடனே நினைவுக்கு வருபவர் நக்கீரன் கோபால்.
5. சில அரசியல் கட்சிகளை தீவிரமாக எதிர்த்து விமர்சித்ததால் ரசாயனம் கொண்டு அவர் தலை முடி வளரா வண்ணம் செய்தாக ஒரு வதந்தி பரவியது (சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால்) அதில் உண்மை உண்டா? கட்டுக் கதைதானா?
பதில்: வடிகட்டின பொய்.
6. திரைப் படத்துறையில் "நாகேஷ்" மேல் கோபம் கொண்டு MGR, சோ அவர்களுக்கு தன் படங்களில் முன்னுரிமை வழங்கியும் ,நடிப்புத் திறமை இருந்தும் (நகைச்சுவையில்) பெரிய வெற்றி கிட்டவில்லையே? (என் அண்ணன், தேடிவந்த மாப்பிள்ளை, அடிமைப்பெண்,....)
பதில்: அதற்கான மனோபாவம் சோவிடம் இல்லை. எம்ஜிஆர் அவர்களுக்கு நீங்கள்தான் இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அது சோவால் முடியாது. மற்றப்படி இருவரும் நண்பர்களே. தனிப்பட்ட முறையில் பல தலைவர்களுடன் நட்புடன் இருந்தாலும், அதை ஒரு முறைகூட தனது சொந்த லாபத்துக்காக உபயோகப்படுத்துபவ்ர் இல்லை சோ. அதுதான் அவர் பாட்டுக்கு தன் வேலையை கவனிக்கும் ஆற்றலை அவருக்கு தருகிறது.
7. முகமது பின் துக்ளக் வெற்றி பெற்றது போல் பின்னாளில் வெற்றி தொடராததற்கு" துக்ளக்" பத்திரிக்கையில் ஈடுபாடு காரணமா?
பதில்: என்ன கூறுகிறீர்கள்? இன்றுகூட சோ நாடகம் போட்டால் - போடமாட்டார் என்றுதான் நினைக்கிறேன் - அது ஹவுஸ்ஃபுல்லாகத்தான் இருக்கும். என்ன, அவரது விவேகா ஃபைன் ஆர்ட்ஸை சேர்ந்த எல்லோருக்குமே வயதாகி விட்டது என்பதால் நாடகம் போடுவது என்பது துர்லபமே.
8. துக்ளக் பத்திரிக்கையின் விற்பனைச் சரிவு "மாயவரத்தார்" கோபப்படுவது போல் உண்மையா?
பதில்: விற்பனை சரிவு ஒன்றும் என் கண்ணுக்கு புலப்படவில்லையே.
9. நக்கீரன், தராசு, நெற்றிக்கண் இவைகளின் செய்தி தரத்தைவிட துக்ளக் நன்றாக இருந்தும் இக்கால தலைமுறையினருக்கு பிடிக்கவில்லையா?
பதில்: துக்ளக்குக்கு எப்போதுமே இளைய தலைமுறை வாசகர்கள் உண்டு. இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். துக்ளக் ஆண்டு விழா கூட்டங்களுக்கு வரும் இளைஞர்களை பார்த்தாலே புரியும்.
10. ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் வாரத்துக்கு இரு முறை வந்து விற்பனையில் சக்கைப்போடு போடும் போது, துக்ளக்குக்கு என்ன ஆச்சு? கால மாற்றம் காரணமா?மக்கள் புது trend ஐ விரும்புவதாலா? (fast-faster-fastest)
பதில்: மேலே உள்ள கேள்வியின் பதில்தான் இதற்கும்.

அனானி (01.06.2008 காலை 05.06-க்கு கேட்டவர்):
1. கடைசியில் கர்நாடக அரசியலில் ஜாதியின் ஆதிக்கம்தான் (லிங்காயத் மற்றும் ஒக்கலிகர்)பா.ஜ.க.-வை ஆட்சிக் கட்டில் ஏற வழிவகை செய்துள்ளது.ஒக்கலிகர் வாக்குகளை காங்கிரசும்,ம.த.ஜ.தளமும் பிரிக்க மீண்டும் ஓட்டு சதவிதங்களின் வேடிக்கைதானே சார்?
பதில்: ஜாதி சமன்பாடுகளை பார்க்காத ஏதேனும் கட்சியை உங்களால் காட்ட இயலுமா?
2. தனது ஜாதித் தலைவர்கள் அரசியல் கொள்கை கொலைகளையும், கோமாளி வித்தைகளையும் செய்தாலும் ஓட்டுப் போடும் போது கண்ணை மூடும் போக்கு மாறினால்தான் நல்லது அல்லவா?
பதில்: அதில் என்ன சந்தேகம்?
3. குஜாரத்தில் இந்த ஜாதிப் பிரச்சனை,தாக்கம் சுத்தமாக இல்லையா? காந்தியின் பிறந்த மண்ணிற்காவது அந்தப் பெருமையுண்டா?
பதில்: யார் சொன்னது? குஜராத்திலும் ஜாதி சம்பந்தமான கணக்குகள் உண்டு. ஆனாலும் எல்லோரையும் அதை உபயோகித்தே மோடி அணைத்து சென்று நல்லாட்சியும் தருகிறார். அதாவது மோடி முதலில் வல்லவர் அத்துடனேயே நல்லவர். குஜராத்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
4. காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் போல் எடியூரப்பாவும் அண்டை மாநில தண்ணிர் பிரச்சனைகளை பேசி தீர்க்கலாம் என்பது பிரச்சனையின் தீவிரத்தை குறைத்து கடைசியில் நமக்கு உலகம் போற்றும் பொறுமைக்காரன் பட்டம் கொடுக்கவா?
பதில்: கர்நாடகாவில் யார் முதல்வராக வந்திருந்தாலும் தமிழகத்துக்கு பிரச்சினை தீராது. பெங்களூரு குடிநீர் திட்டமும் ஹொகனேக்கல் திட்டமும் ஒன்றாக பேசப்பட்டு இருபக்க ஒப்புதல்களுடன் தீட்டப்பட்டன. அப்போதே பெங்களூரு திட்டம் முடிந்து விட்டது. தமிழக அதிமுக, திமுக அரசுகள் முறைபோட்டு தூங்கின. இப்போது நாம் அனுபவிக்கிறோம் என்பதுதான் நிஜம்.
5. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை கட்டுப் படுத்தும் நோக்கோடு செயற்கையாக பெட்ரோல் விலையுர்வினை தனது வல்லமையை பயன்படுத்தி அமெரிக்கா செய்ய முயல்வதாக வல்லுனர்களின் கருத்தை ஜு.வி ல் பார்த்தீர்களா? அணுஆயுதத்தடை மற்றும் 123 ஒப்பந்தங்களில் இந்தியாவின் கையெழுத்து கிடைக்காது என்றா கோபமா?
பதில்: அமெரிக்காவுக்கு இத்தனை செல்வாக்கு கிடையாது.

தென்காசி விஸ்வநாதன்:
1. புதிய குடியிருப்புகளில் வாழும் சொந்தக்காரார்களால் உருவாக்கப்பட்டு நன்றாக பராமரித்து வரும் இந்து பிள்ளையார் கோவில்களை, வருமானம் கூடிவிட்டது எனக் காரணம் கூறி இந்து அறநிலயத்துறையின் கட்டுப்பாட்டில் எடுப்பதை நீதிமன்றம் மூலம் தடுக்கமுடியாதா?
பதில்: தடுக்கலாம், தடுக்க வேண்டும்.
2. அங்கு பூஜை, புனஸ்காரங்கள் முன்பு நடந்தது போல் இல்லை எனும் காரணத்தை நீதிமன்றம் ஏற்குமா? சட்டம் என்ன சொல்கிறது? சட்டத்தின் முன் அனைவரும் சமாம் என்பது இதில் என்னாயிற்று?
பதில்: அதுதான் இந்திய அரசின் போலி மதசார்பற்ற தன்மை.
3. அரசால் சர்ச், மசூதி இவைகள் மேல் கைவக்க முடியவில்லையே? மைனாரிட்டி
தரும் சட்ட பலமா?அவர்களின் ஓட்டு பல ஒற்றுமையா?

பதில்: மேலே உள்ள கேள்வியின் பதில்தான் இதற்கும்.
4. கடவுளை மற, கடவுள் கிடையாது எனும் பகுத்தறிவு கட்சிகளின் ஆட்கள் அறங்காவலராய் அமர்ந்து செய்யும் அநீதிகளை கூட தடுக்க முடியாத கையாலாகாத்தனம் எப்போது மாறும்?
பதில்: உங்கள் கோபங்களையெல்லாம் ஓட்டளிப்பில் காட்டுங்கள். அன்றைக்கு பார்த்து சிவாஜி ஸ்பெஷல் ஷோவுக்கெல்லாம் ஓடக்கூடாது.
5. இந்துக்களில் கடவுள் நம்பிக்கை யுள்ளவர்கள்,கடவுளை பூஷிப்பபவர்கள் இப்போது மிக அதிமாக கோவில்களில் தெரிகிறார்கள். தங்களைப் போன்ற பெரியவர்கள், ஆன்மிக வதிகள்,உண்மையான சாமியார்கள்,மத குருக்கள், துணை கொண்டு பக்தியில் பிரகாசிக்கும் பல இனப் பிரிவு ,குறிப்பாக தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயம்,மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்,நாயுடு இனம், ஆகியோரின் உண்மை பக்தியை அடிப்படையாக வைத்து வரும் தேர்தலில் எல்லாக் கழகங்களுக்கும் எதிர் வாக்குகள் மூலம் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் ஒரு நல்ல மாற்றம் வருமா?
பதில்: என்னை பெரியவர்களில் பிரிவில் சேர்க்க எந்த பிரமேயமும் இல்லை. அதற்கான தகுதி எனக்கில்லை. ஒன்றுமில்லை இந்துக்கள் சேர்ந்து பகுத்தறிவு வாதி கட்சிகளை ஓரிரு தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தாலே போதும். அது கூட இல்லாமல் கருணாநிதி அவர்கள் ராம சேது லெவலுக்கு வந்து விட்டார்.

தென்காசி:
1. தமிழகத்தில் முதல் நிலை அந்தஸ்து பெற்ற கோவில்களில் பழனி,திருச்செந்தூர் ஆகியவற்றின் ஆண்டு வருமானம் பல லட்சங்கள் என்றபோது அங்குள்ள சீருடைப் பணியாளர்கள் பக்தர்களிடம் காசு கேட்டு கை யேந்துவது ஏன், நல்ல சம்பளம் கொடுக்கப்படவில்லையா? இல்லை எல்லோருக்கும் உள்ள் பற்றாக் குறையா? கையூட்டு கைங்கரியங்களும் விடுதிகளில், சிறப்பு வழிபாடு, பிரசாத ஸ்டால் ஆகியவற்றில் லஞ்சம் போற்றி போற்றி என வேறு அப்பகுதி ஊழியர்கள், திருந்தவே மாட்டார்களா?
பதில்: எனது இப்பதிவில் உள்ள பின்னூட்டங்களைப் பார்க்கவும்.
2. சரி பாவம் ஊழியர்கள் தமிழகத்தின் தாரக மந்திரமே கூடி கொள்ளையடி என்று ஆகிவிட பிறகு என்ன சொல்ல? ஆனால் வேதம் படித்த கடவுள் தண்டிப்பார் என்பதில் நம்பிக்கை உள்ள பரம்பரை முக்காணி ஐயர்களும் பக்தர்களை ஏமாற்றலாமா?
பதில்: மேலே உள்ள கேள்வியில் பதில் உள்ளது.
3. இவர்களையெல்லாம் கேரள கோவில்களுக்கு refresher training or in service training கொடுத்தால் நல்லது?
பதில்: அங்கும் சபரிமலை கோவிலில் பிரச்சினைகள் உண்டு போலிருக்கே.
4. நமது கோவில்களில் பணம் படைத்தவருக்கு தரப்படும் முன்னுரிமைகள் தேவையா?
பதில்: இது ஒரு தவிர்க்க முடியாத நிலையாகி விட்டது. திருப்பதி கோவிலில் இப்போதும் தர்ம தரிசனம் உண்டு, ஆனால் அதற்கு கிட்டத்தட்ட இரண்டு நாள் பிடிக்கும் என அறிகிறேன். ஆகவே ஸ்பெஷல் டிக்கெட்டுகள்.எல்லாமே ஒரு வியாபாரம் போல ஆகிவிட்டது. அதனாலேயே பெரிய கோவில்களுக்கு போக எனக்கு பிடிப்பதில்லை.
5. ஆந்திரா,கர்நாடக,கேரளா கோவில்களில் அனுசரிக்கப்படும் ஆசாரம், அனுஷ்டானம், அர்ச்சகர்களின் அர்ப்பணிப்பு, பக்தி பரவசத்தோடு செயல்படும் முழு அன்னதானங்கள் இங்கே வேறுமாதிரி இருப்பதற்கு பகுத்தறிவு அரசியல் கட்சிகளும் காரணமா? நமது அர்ச்சகர்களே அரசியல்வாதி போல் நடந்தால்?
பதில்: காலம் கலிகாலம் என்றுதான் கூற வேண்டும்.

அனானி (04.06.2008 காலை 05.33-க்கு கேட்டவர்):
1. டோண்டு ஐயாவும்,பெரியவர் மாயவரத்தாரும் பெருமைபட்ட தாமரையின் கர்நாடக வெற்றிக்கு 1000 கோடிக்கு மேல் செலவழித்த கர்நாடக"வைகுண்ட ராமன்கள்" கள் குவாரி அதிபர்கள் ரெட்டி சகோதரர்கள் பற்றி செய்தி பற்றி கருத்து என்ன?
பதில்: டப்பு இல்லாது தேர்தல்களில் எப்படி வெற்றிபெற இயலும் என நினைக்கிறீர்கள்?
2. ஹோகனேக்கல் கொண்டான் எடியூரப்பா அவர்கள் கர்நாட மாநில "கலைஞர்"(tamil nadu c.m) போல் மொழி,கலாச்சாரம்,தண்ணிர் உரிமை,வாழும் பகுதிகளின் உரிமை இவைகளுக்காக எந்த தியாகமும் செய்வேன் என பேச ஆரம்பித்துவிட்டார் பார்த்தீர்களா?
பதில்: அவருக்கு அண்டை மாநிலத்திலேயே நல்ல முன்னுதாரணம் இருக்கிறாரே.
3. இனி காவேரிப் பிரச்சனை விடாக்கண்டன் கொடாக்கொண்டன் கதைதானா?
பதில்: எப்போதும் போல நிலைமை தொடரும் என அஞ்சப்படுகிறது.
4. குஜராத் முதல்வர் மோடி அவர்களின் ஆட்சி, நிர்வாக,பொருளாதார முறைகளை அங்கு சென்று தெரிய முயலுவதாக செய்திகள். ஆனால் வாஜ்பாய் அவர்களின் வழி நடப்பேன் என்கிறாரே,அத்வானிஜிக்கு எதிரானவரா? (அத்வானிக்கும் -வாஜ்பாயுக்கும் சுமுகம் இல்லை என்பதாக செய்திகள் வந்தன)
பதில்: மோடி ஸ்டைலில் லஞ்சம் இல்லாத, விரைந்து செயல்படும் ஆட்சி நடத்த முடிந்தால் அது கர்நாடக மக்களின் அதிர்ஷ்டமே.
5. ஜாதகப்படி "எடியூரப்பா-எட்டியூரப்பா " மாறியதால் இந்த வெற்றி என்கிறார்கள். பரவாயில்லை (யாகங்கள் நடத்துவோருக்கு நல்ல நேரம்-ஸ்ரீதரின் "காதலிக்கநேரமில்லை" படத்தில் டி.எஸ்.பாலையா சொன்னது மாதிரி பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது). ஏற்கனவே நமது தமிழக அரசியல் (1967 க்குப் பின் வந்த திராவிட கழகங்களின் ஆட்சி, கட்சி இவைகளில் புதிய அணுகுமுறை(கூட்டணி வெற்றிகளை அட்சரசுத்தமாக கணிக்கும் ராஜதந்திரம், மொழிப்பற்று, பிற்பட்டடோர்நலம் பேணல், தண்ணிர் உரிமை காத்தல், இதில் அவர்(அண்ணன் எ(ட்)டியூரப்பா) நல்ல தேர்ச்சி பெற்றுள்ளவர் (பெரிய பிற்பட்ட லிங்காயத் இனத்தை சேர்ந்தவர்) என அவர் வாழ்க்கை வரலாறு சொல்லும் போது நம்மீது "எட்டி" காயாய் காய்ந்து விடக்கூடாது? ("எட்டிக்காய் கசக்கும்" என்பார்கள்)
பதில்: உங்கள் கேள்வி என்ன என்பதையே மறந்து விட்டேன். :))))

அனானி (05.06.2008 காலை 04.28-க்கு கேட்டவர்):
1. 85 வது பிறந்த நாள் கொண்டாட்ட கலைஞரின் ஏற்புரையில் மத சார்ர்பற்ற அரசு-மதநல்லிணக்க அரசு என்று கூறி உள்ளதை பார்க்கும் போது சூரியத்தாமரை மீண்டும் அரசியல் வானில்?
பதில்: இப்போதைக்கு பாஜக திமுக கூட்டு வரும் எனத் தோன்றவில்லை.
2. சேது பாலத்திற்கு கூட "சேது ராம்" என பேர் சூட்ட தயாரய் விட்டார் பார்த்தீர்களா? அனுபவத்தின் கனிவின் உச்சமா?
பதில்: எத்தைத் தின்னா பித்தம் தெளியும்!!!!!
3. துக்ளக், இல கணேசன் போன்ற தாமரை நலவிரும்பிகள் சூரியனின் அருகாமையின் சொந்தங்களை நெருங்குவதாக வரும் பத்திரிக்கை செய்திகள் பற்றி கருத்து யாது, வரவேற்கிறீர்களா?
பதில்: இதில் நிறைய wishful thinking மட்டுமே உள்ளது என நினைக்கிறேன்.
4.அரசியலில் எதுவும் நடக்கலாம்.அப்படி நிலை உருவாகி தேர்தலில் வந்தால் (NDF ல் கலைஞர்) தங்களின் நிலை யாது? வரவேற்பீர்களா? அவரது மீது விமர்சனத்தை தொடர்வீர்களா?
பதில்: வரட்டும், பார்க்கலாம்.
5. விபரீத காலம் விபரீத புத்தி எனச் சொல்லி நடுநிலை வைப்பீர்களா?
(கலைஞரின் அரசியல்,பொது வாழ்வு, நாத்திகம், ஆட்சிமுறை, இட ஒதுக்கீட்டுக் கொள்கை, சிறுபான்மை நலம் பேணுதல், ஆதிக்க சக்திகள் பற்றிய கலைஞரின் பேச்சு ஆகியவற்றில் மீது தங்கள் விமர்சனங்கள் அனல் கக்குகின்றன)

பதில்: கலைஞர் தமிழறிஞர் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதற்குமேல் கருத்து கூற எதுவும் இல்லை.

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது