6/07/2008

கர்ணன் - 1

பிறப்பிலிருந்தே விதியால் வஞ்சிக்கப்பட்டவன் என்று கர்ணனைக் கூறலாம். அவன் அன்னை குந்திபோஜ மன்னனின் மகள் குந்தி. அழகும், அறிவும் வினயமும் ஒன்றாகப் பெற்றவள் அவள். அவள் பாண்டுவை மணம் முடிக்கும் முந்தைய காலத்தில் ஒரு முனிவர் குந்திபோஜனின் விருந்தாளியாக வந்து தங்குகிறார். அவருக்கு பணிவிடை செய்வதற்காக அரசன் தன் மகள் குந்தியை நியமிக்கிறான். அவளும் முனிவருக்கு சிரத்தையுடனும், வினயத்துடனும் சேவை செய்ய, அவர் மனம் மகிழ்ந்து குந்திக்கு அவர் 6 மந்திரங்களை உபதேசிக்கிறார். அவை முறையே கதிரவன், யமன், வாயு, இந்திரன், இரண்டு அசுவினி தேவதைகளை குறித்து இயற்றப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை குந்தி தேவி நியமத்துடன் உச்சரித்தால் அந்த தேவதை வந்து அவளுக்கு புத்திர பாக்கியம் கொடுக்கும் என்பதையும் முனிவர் அவளுக்கு கூறிவிட்டு சென்று விடுகிறார். அவற்றை ஏன் அவர் அவளுக்கு உபதேசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஒரே பதில் அவர் தன் ஞானதிருஷ்டி மூலம் பின்னால் நடப்பதை அறிந்து குந்திக்கு அவற்றை அளித்தார் என்பதே. இப்பதிவு அதைக் குறித்து அல்ல.

இளம் பெண்ணுக்கே உரித்தான ஆவல் குந்தியிடமும் இருந்தது. தனக்கு ஒரு முனிவரால் உபதேசம் செய்யப்பட்ட மந்திரத்தை பரிசோதிக்க எண்ணி கதிரவனை வேண்டி குந்தி தேவி விளையாட்டாக உச்சரிக்க கதிரவனே அவள் முன்னால் தோன்றினான். அவள் அஞ்சினாள். தான் விளையாட்டுக்கு செய்ததாகவும், ஆகவே அவன் திரும்பிப் போகுமாறு வேண்ட, கதிரவன் ஒத்து கொள்ளவில்லை. ஏனெனில் அந்த மந்திரத்தின் சக்தி அப்படிப்பட்டது. அவளுக்கு தான் குழந்தை அளித்தே ஆகவேண்டும் என்றும், குழந்தை பெற்றாலும் அவள் கன்னிமைத் தன்மை இழக்க மாட்டாள் என்றும் கூறி அவளுக்கு குழந்தையை கொடுத்து செல்கிறான். திருமணமாகாத நிலையில் குழந்தையைப் பெற்ற குந்தி ஊர்ப்பழிக்கு அஞ்சி, குழந்தையை ஒரு கூடையில் வைத்து, நதியில் விட்டு விடுகிறாள். அங்கிருந்து ஆரம்பிக்கிறது கர்ணன் வாழ்க்கையில் விதியின் விளையாட்டு. அது பற்றித்தான் இப்பதிவு.

திருதிராஷ்டிரன் ராஜ்ஜியத்தில் தேரோட்டியாக பணிபுரிந்தவனால் கண்டெடுக்கப்பட்டு அவன் செல்லப் புதல்வனாக வளர்கிறான். சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் ஒரு காட்சி. குழந்தை கர்ணனிடம் ஒருவன் விளையாட்டாக கைநீட்டி விளையாட, குழந்தை தன் கையிலிருக்கும் காப்பை அவனுக்கு தருகிறான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவன் பிற்காலத்தில் கொடை வள்ளலாக வருவதை அக்காட்சி அழகாகக் காட்டுகிறது. பிறகு வளர்ந்து துரோணரிடம் தனக்கும் போர் வித்தைகள் கற்றுத் தருமாறு யாசிக்க அவர் மறுத்து விடுகிறார். பிறகு பரசுராமரிடம் செல்கிறான். அவரோ பிராம்மணரைத் தவிர சத்திரியர்களுக்கு கற்றுத் தராத கொள்கையுடையவர். ஆகவே அவரிடம் தான் பிராம்மணன் என்று பொய் கூறி எல்லா அஸ்திரங்களையும் பெறுகிறான். பிற்காலத்தில் தனது மகன் அருச்சுனனுக்கு போட்டியாக இவன் வருவான் என பயந்த இந்திரன் சூழ்ச்சி செய்து, அவனை பரசுராமரிடம் போட்டு கொடுக்கிறான். பரசுராமரும் தன்னை ஏமாற்றி அவன் வித்தை கற்றது, முக்கியமாக பிரும்மாஸ்திரம் அவனுக்கு உயிராபத்து வரும் காலத்தில் மறந்து போகக்கடவது என சபித்து விடுகிறார்.

அதே இந்திரன் தனது சூழ்ச்சியால் கர்ணனுக்கு இன்னொரு முனிவர் மூலம் சாபம் வருமாறு செய்கிறான். அவன் கடைசி யுத்தம் செய்யும்போது தேர்க்கால் மண்ணில் அழுந்தும் என்ற சாபம்தான் அது. இது போதாது என்று இந்திரன் அவனது உடலுடனேயே ஒட்டீயிருந்த கவச குண்டலத்தை யாசகமாகப் பெற்று செல்கிறான். பாரதப்போர் துவங்கும் முன்னால் கண்ணன் குந்தி தேவியை கர்ணனிடம் அனுப்பி அவனது பிறப்பின் ரகசியத்தை அவனிடம் கூறி, அவனை பாண்டவர் பக்கம் இழுக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அருச்சுனனைத் தவிர மற்ற தம்பியரைக் கொல்லக்கூடாது என்ற வரத்தையும், நாகாஸ்திரத்தை அருச்சுனன் மேல் ஒருமுறை மட்டுமே பிரயோகிக்க வாண்டும் என்னும் வரம் பெற தூண்டுகிறான். அவளும் வரங்களைப் பெற்று வருகிறாள். நாகாஸ்திரத்தை முதன் முறை ஏவியபோது கண்ணன் தேரை தரையில் அழுந்த செய்து அது அருச்சுனனின் கிரீடத்தைத் தட்டிச்செல்கிறது. மறுபடியும் அதை பிரயோகிக்க கர்ணன் மறுத்து விடுகிறான். ஆகவே கோபம் கொண்ட தேரோட்டி சல்லியன் அவன் இறக்கும் தருவாயில் அவனை தேர் தரையில் அழுந்திய நிலையில் பாதியிலேயே விட்டு செல்கிறான். கடைசி காலத்தில் பிரும்மாஸ்திரம்மும் மறந்து போகிறது. இருப்பினும் கர்ணனைக் கொல்ல இயலவில்லை. தருமதேவதையே அவன் மேலும் செலுத்தும் பாணங்களை அவனுக்கு மாலையாக விழ வைக்கிறாள். இப்போதுதான் கண்ணனின் கடைசி யுக்தி வெளியில் வருகிறது. ஒரு கிழ வேதியன் உருவெடுத்து அவனது தர்மத்தின் பலன்களை யாசகமாகக் கேட்க கர்ணனும் தனது தர்மத்தின் எல்லா பலன்களையும், குறிப்பாக இந்த கடைசி தர்மத்தின் பலனையும் அவனுக்கு தானமாக அளிக்கிறான். அவனுக்கு கண்ணன் விசுவரூப தரிசனம் அளித்து, அருச்சுனனிடம் பாணம் செலுத்துமாறு கூற அவனும் அஞ்சனா அஸ்திரத்தை விடுத்து கர்ணனைக் கொல்கிறான்.

பிறகு உண்மை தெரிந்து எல்லோரும் புலம்ப, அருச்சுனன் தான் தன் அண்ணனைக் கொன்றேன் எனக் கதற, கண்ணன் அவனிடம் அப்படியெல்லாம் அவன் பெருமை கொள்ளும் நிலையில் இல்லை என்பதை அழகாக விளக்குகிறான்.

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா' என்ற அற்புதமான பாடல் வரிகளில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்தக் கத்துக்குட்டி டோண்டு ராகவன் இத்தனை நேரம் வளவளவென்று எழுதியதை மிக அழகாக சுருக்கி வலுமிக்க அணு ஆயுதமாகத் தருகிறார். அப்பாடல் காட்சியை காண்போம், இந்தச் சிறியோன் டோண்டு ராகவன் எழுத முயன்று தோற்றது எவ்வளவு அழகாக இங்கு கூறப்பட்டது என்பதை பார்ப்போமா?

கர்ணனைப் பற்றி இன்னும் ஒரு பதிவாவது வரும் என்று கூறி தற்போதைக்கு விடைபெறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

சிபி அப்பா said...

கதை என்றுப் பார்த்தால் கர்ணன் பாத்திரம் மிகச் சிறப்பாகப் படைக்கப் பட்டுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. கர்ணன் திரைப்படமும், நடிகர் திலகத்தின் நடிப்பும் அருமை அருமை, காலத்தை வென்றவை. இதிகாசங்கள் யாவும் உண்மை என்று சொல்ல வரும் போது தான் பிரச்சனை.

Anonymous said...

சார் சூபர் பதிவு... படிச்சிட்டு எனக்கு தெரியம விசில் அடிச்சிட்டேன்

மாதங்கி said...

ஆம்.

கர்ணனை நான் கொன்றேன் என்று அர்ச்சுனன் மார்தட்டிக்கொள்ளும்போது அவனிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கி அவனை ஏற்கனவே கொன்றுவிட்டார்கள் என்று கண்ணன் கூறுவதாக எங்கோ படித்த ஞாபகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒருத்தருக்கு டிப்ஸ் கொடுத்து பிச்சக்காரனாக்காதீர்கள் என்று ஒரு பதிவு.
பின் கர்ணணைப் பற்றி ஒரு பதிவு.
ஒன்னும் புரியலை.
ஐயமிட்டு உண்
ஏற்பது இகழ்ச்சி - போலத்தானா?

dondu(#11168674346665545885) said...

//ஐயமிட்டு உண்
ஏற்பது இகழ்ச்சி - போலத்தானா?//
அதுதான் டோண்டு ராகவன். வாழ்க்கையில் வெறுமனே கருப்பு வெளுப்பு மட்டும் இல்லை. நடுவில் பல வண்ணக் கலவைகள் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

thenkasi said...

//
சிபி அப்பா said...
கதை என்றுப் பார்த்தால் கர்ணன் பாத்திரம் மிகச் சிறப்பாகப் படைக்கப் பட்டுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. கர்ணன் திரைப்படமும், நடிகர் திலகத்தின் நடிப்பும் அருமை அருமை, காலத்தை வென்றவை. இதிகாசங்கள் யாவும் உண்மை என்று சொல்ல வரும் போது தான் பிரச்சனை//

இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல முடியாது.
கால வெள்ளோட்டத்தில் சில சரிந்திர சான்றுகள் மறைந்து இருக்கலாம்.கவிஞர்கள் கொஞ்சம் மிகுதியாக புனைந்திருக்கலாம்.பிற்கால சேர்க்ககைகள் சேர்ந்திருக்கலாம்.
புராணங்களில் சொன்னவைகள் ஒன்று ஒன்றாக கண்டுபிடிக்கப் படுகிறதே.

உதாரணமாக:
அஸ்திரங்கள்: பிரம்மா,அக்னி,வாயு,நாகா, ...

இவைகளின் சக்திகளை நாம் எல்லோரும் தொலக் காட்சி மற்றும் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.( ராமாயணம்,மகா பாரதம்)

மேலை நாடுகளில் சில ஒரு ரசாயன(chemical )குண்டு வைத்துள்ளதகவாகவும்.அதை உபயோகித்தால் மனித உயிர்களுக்கு சேதம் இல்லை ஆனால் மின் சாதங்கள்,மின் அணு சாதனங்கள் அத்துனயும் செயலிழந்து விடுமாம்(பத்திரிக்கை தகவல்).நமது தகவல் சேர்க்கை எல்லம் அதோ கதிதான்.

மேலும் டெல்லிக்கு பக்கத்தில் பாரதப் போர் "குருச்சேத்திரம்"நடந்த இடத்தில் பிதாமகர் பீஷ்மர்" அம்புப் படுக்கையில் படுத்திருந்த இடம் இருப்பதை பார்த்ததாக என் நண்பர் சொல்லியுள்ளார்.

உண்டு என்றால் உண்டு
இல்லை என்றால் இல்லை


இந்து மத புரானக் கதைகள் போல் முகமதிய,க்ருத்துவ கடவுள் சார்ந்த புரானக் கதை களிலும் இதே மாதிரி அதிசயக் செய்திகளும் உண்டு.ஆனால் இதே மாதிரி பகுத்தறிவு பிரச்சாரங்கள் அந்த மதத்தவர்களால் பெரும் பாவாமாக கருதப்படுகிரது. இதை சாத்தானின் வேலை என்பார்.

ஆனால் வலைபூ பதிவுகளை பார்த்தால்!
ஆன்மீக ஆதரவு மிகக் குறைவாகவே உள்ளது காரனம் புரிய வில்லை. கோவில்களில் எல்லம் பக்த்ர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
பக்தி,சோதிடம்,யோகக் கலை சார்ந்த புத்தங்கள் விற்பனை படு ஜோராய் இருக்கிரது.சன் டீவி கூட ஆன்மிகச் செம்மலாய் மாறிவிட்டது.

பொதிகைத் தென்றல் said...

குணவதி குந்திதேவியின் குருச்சேவை கண்டு
குதூகலம் பெற்றிட்ட அருந்தவ முனிவர்

அளித்திட்ட ஆறுவரத்தின் பலமறிந்து சோதிக்க
அருளினான் கர்ணனை ஆதவனும் பிரியமுடன்

ஊரார் பழிப்பர் என்பதால் ஆற்றிலே
ஊர்வலமாய் பாதுகாப்புடன் மிதக்கச் செய்ய

பங்காளி திருதிராஷ்டிரனின் தேரோட்டி பார்க்க
பண்புடன் தேரோட்டி மகனாய் வளர்ந்திட

பரசுராமன் கோபம் சாபமாய் உருப்பெற
பகவான் பிரம்மனின் அஸ்திரம் பலமிழக்க

இந்திரனும் கண்ணனும் ஜாலவித்தை பண்ணி
இமயத்தை மிஞ்சும் பாதுகாப்பை பறித்திட

அன்னையும் பிறப்பின் ரகசியம் சொல்லி
அருமை பாண்டவர் உயிர் காத்திட

வரமிரண்டு பெற்று வாழ்த்திச் சென்றிட
வரும்விதி தெரியாமல் வாழ்ந்து மறைந்த


கர்ணனின் கன்ணிர்க் காவியப் பதிவுக்கு
கதைசொல்லும் பண்பின் போற்றுதலுக்கு நன்றி.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

டோண்டு ஐயா !
மகாபாரதத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை ! யாருமே கெட்டவர்களும் இல்லை !
இதுதான் மகாபாரதத்தின் சிறப்பு !
மகாபாரதத்தில் வரும் பாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கர்ணன் பாத்திரமே .
தானத்திற்கே உதாரணமாக சிதரிக்கபட்டுள்ளான் கர்ணன் !
அன்புடன்
அருவை பாஸ்கர்

Anonymous said...

1.உலகில் நல்லவர்கள் கஷ்டப்படுவதும்,தீயவர்கள் ஆலவட்டம் போடுவதும் கடந்த 50 வருடங்களுக்கு மேலகப் பார்த்து அனுபவுத்து வருகிறேம்.பெரியவர்களைக் கேட்டால்
அது அவரவர் பூர்வ ஜெனமப் புண்யம் என்கிறார்?தங்கள் கருத்து யாது?

2.அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்வான் என படித்து கேட்டு இருக்கும் உலகில்,நிதர்சனமாக நடத்தாக செய்தி இல்லையே?

3.நமது பிள்ளைகளை கோவிலுக்குப் கூப்பிட்டால்,பெரியார்பக்தர்கள்,இடது சாரி கட்சிகளின் புரட்சி சிந்தாந்தங்கள் பக்கமே செல்கின்றனர்(ஆனால் இது இந்து மதத்தில் மட்டும் தான்)?

4. ஐந்து முறை அல்லவை தொழவில்லை என்றாலும்,ஞாயற்றுக் கிழ்மை சர்ச் க்கு வரவில்லை என்றாலும் அது பெரிய பாவமாகக்/நாகரிக மற்ற தன்மையாகக் கருதும் போது இந்து இளஞர்கள்,25 வயதுக்கு உட்பட்டோர்?


5.ஆனால் வடஇந்தியாவில் பக்தி பரவசம் எல்லாக் கோவில்களிலும் கொடிகட்டிபறக்கிறது.மதுரா,காசி,அயோத்தி போன்றா அடிக்கடி செய்திகளில் பேசப்படும்கோவில்களுக்குக்ச் செல்லும் போது அங்கு உள்ள பக்திநிலை நம் உடலுக்குள் ஒரு சக்தியை முடுக்கி கிவிடுவதாக தெரிவதன் காரணம்?


6. வடஇந்தியக் கோவில்களில் முருகப் பெருமான் வழிபாடு இல்லையே?காரணம் யாது.

7.தமிழ்கத்தில் சிறு கிராமங்களான,சிவைசலம்,கடையம்,மன்னார்கோவில்,களக்காடு,நவத்திருப்பதி தலங்கள்... பெரிய பிரமாண்ட கோவில்களும்,அழகு சுவாமி சிலைகளும்,சிற்ப மண்டபங்களும் இருக்கும் போது வடைஇந்தியாவில் சுவாமிகள் சிலைகள் அழகு ததும்பும் பொம்மைகள் போல் இருப்பது காரனம் யாது?

8.சிவன் சொத்து குல நாசம் என்பர் ஆனல் கோவில் சொத்தை ஆண்டு அனுபவித்து வரும் அனைத்து பிரிவினரும் வழமாக வாழ்வதைப் பர்க்கும் போது?

9.தென் மாவட்டங்களில் இந்துப் பெண்களை மதம் மாற்ற செய்யும் தந்திரம் வேகமாய் அரங்கேறுவது தெரியுமா?

10.பக்தி இலக்க்யங்களை அருளி சமயக் குரவர் நால்வர்,பன்னிறு ஆழ்வார்கள்,64 நாயன் மார்கள் இவர்களின் தொடர்ச்சி இனி எப்போது
மலரும்

+Ve அந்தோணி முத்து said...

thenkasi said...

//இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல முடியாது.
கால வெள்ளோட்டத்தில் சில சரிந்திர சான்றுகள் மறைந்து இருக்கலாம்.கவிஞர்கள் கொஞ்சம் மிகுதியாக புனைந்திருக்கலாம்.பிற்கால சேர்க்ககைகள் சேர்ந்திருக்கலாம்.
புராணங்களில் சொன்னவைகள் ஒன்று ஒன்றாக கண்டுபிடிக்கப் படுகிறதே.//

ஆம்..! முற்றிலும் உண்மையான வார்த்தைகள்.

கர்ணன் நிஜமாகவே இருந்தானா...
இல்லையா... அவன் சம்மந்தப்பட்டவற்றை பிறை
நம்புகிறார்களா? என்பது பற்றி
நான் கவலைப்படவில்லை.

நான் நம்புகிறேன்.

கர்ணன் இருந்தான்...! இன்னமும் இருக்கிறான்.

அனைத்துக்கும் மேலான கடவுள் எனும் அந்தப் பிரபஞ்ச மகாசக்தியை
நான் பெயர் சொல்லி அழைப்பதில்லை.


அப்படிப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்றால்...
நான் "கர்ணன்" என்றுதான்
அழைப்பேன்.

இந்த உலகின் அனைத்து உயிர்களிலும் கர்ணன் வாழ்கிறான்


கர்ணனைப் பற்றி இன்னும் எழுத வேண்டும்.

உங்களின் "கர்ணனை" படிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி டோண்டு சார்.

கர்ணன் அனைவருக்கும் நன்மை அருளட்டும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது