3/30/2005

தமிழர்களைப் பற்றிப் பெரியார் அவர்கள் கூறியவை

எனக்கு விஸ்வாமித்ரா அவர்களிடமிருந்து டிஸ்கியில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை யூனிகோடில் மாற்றிக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றில் சிலவற்றை நான் கேள்விப் பட்டிருந்தாலும் பல எனக்குப் புதியவையே. பகுத்தறிவுப் பகலவன் என்று அழைக்கப்படுபவர் செயல்பாடுகளையும் அதே பகுத்தறிவு கொண்டு ஆராய முற்படுவது தவிர்க்க முடியாது. ஆகவே விஸ்வாமித்ரா அவர்கள் கூறியதைப் பார்க்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஓவர் டு விஸ்வாமித்ரா:

"தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
சொன்னது யார்? ஆரியர்களா? தமிழை வெறுப்போர்களா? வட நாட்டுக்காரர்களா? சம்ஸ்கிருதுதத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்களா? காஞ்சி மடாதிபதியா? மும்பை எக்ஸ்பிரஸ் எடுக்கும் கமலஹாசனா?

இல்லை ஐயா,. இல்லை, தமிழர்களின் தந்தை என்றும் பெரியார் என்றும் ஒரு கூட்டத்தினரால் அழைக்கப் படும் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்னும் கன்னடியர். இப்படிப் பட்ட ஒரு ஆசாமியை, தமிழர்களை கருங்காலிகள் என்று அழைத்தவரையே, தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று அழைத்தவரையே கொஞ்சம் கூட வெட்கமின்றி, மான ரோஷமின்றி, தமிழர் தலைவர் என்று ஒரு கூட்டம் அழைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது. அவரது உண்மையான முகம் என்ன? அவர் தமிழர்களை பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்? மேலே படியுங்கள்.

'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
ஈ.வே.ரா.வின் முழக்கம்

தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில்
பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை,
தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.

சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில்
உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து
எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப் படவில்லை.

உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள், தனது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்னும் புத்தகத்தில், திரட்டியிருக் கொடுத்திருக்கும் மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம். .

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் அமையச் செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக் கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்து திருச்சி
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.

யார் இந்த கி.ஆ.பெ.?

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.

ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.

அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை பின்வருமாறு:-

அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.

இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்' என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.

இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர்,
திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து
வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும்
திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.

எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள்,
கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா
என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.

ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

இனியேனும் சொல்வாரா?

இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?

பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.

மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?

இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி
வைதிருப்பதே போதுமான சான்றாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி
மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற
'பித்தலாட்டக் கருங்காலி'களின் கோரிக்கையாகும்.

(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)


இன்று ராமதாசையும், திருமாவையும் தமிழுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்று அழைக்கும் கூட்டம், தமிழர்களைக் கருங்காலிகள் என்று அழைத்த ஈ வெ ராவை எப்படி அழைக்கப் போகிறார்கள்? யார் தமிழ்நாட்டில் பித்தலாட்டக் கருங்காலிகள்? முறையாகத் தமிழ் படித்த அறிஞர்களை கருங்காலி என்று அழைத்தவரைப் போய் தமிழர் தந்தை என்று அழைப்பது அறிவீனம் அல்லவா? மூளைச்சலவை செய்யப் பட்டோரே சற்றே சிந்தியுங்கள்.

விஸ்வாமித்ரா"

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/29/2005

Viewing of blogs in PDF

எழுத்துருப் பிரச்சினையைத் தவிர்க்க காசி அவர்கள் அன்புடன் அளித்த பி.டி.எஃப். க்கான நிரலை டெம்ப்ளேட்டில் இட்டு ஸேவ் செய்தேன். மறுபடி பப்ளிஷ் செய்ய வேண்டும் என்றுக் கூறப்பட்டது. அப்படியே சொடுக்கினால் ரி-பப்ளிஷிங் 0% லேயே இருக்கிறது. செட்டிங்குகள் சேவ் ஆகி விட்டன ஆனால் அதனால் என்னப் பயன்? ஆகவே இப்பதிவை இட்டு ரி-பப்ளிஷ் செய்துப் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

3/24/2005

என்னைத் துரத்தும் இன்னொருக் கனவு

நான் முன்பு குறிப்பிட்டக் கனவைப் போலன்றி இன்னமும் இது அவ்வப்போது வந்துப் போகிறது.

அதாவது நான் இன்னும் பொறியியல் பரீட்சைகள் அதனையும் பாஸ் செய்யவில்லை என்று திடீரென்று கல்லூரியிலிருந்துக் கார்டு வரும். நீங்கள் நான்காம் வருடக் கணக்குப் பேப்பர் இன்னும் க்ளியர் செய்ய வேண்டியுள்ளது. தவறுதலாக உங்களுக்கு டிகிரி கொடுத்து விட்டோம் என்று அதில் குறிப்பிட்டிருக்கும்.

நான்காம் வருடக் கணிதமா? அதில் என்னக் கற்றுக் கொண்டேன் என்பது அப்போது நினைவுக்கு வராது. அந்த நிலையில் பரீட்சை எழுதுவதாவது? சுழிதான். இதன் வேரியேஷனாக எங்கள் தமிழ் வாத்தியார் நரசிம்மாச்சாரி வேறு கனவில் வந்து, தமிழ் பரீட்சைக்குத் தயாரா என்றுக் கேட்க, பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பது கூட மறந்து விடும்.

முழித்துக் கொண்டப் பிறகு சிறிது நேரம் கழித்துத்தான் யதார்த்த நிலைக்கு வர இயலும். மறுபடி பரீட்சை எழுதியப் பிறகுதான் இக்கனவு நிற்குமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/22/2005

உள்ளம் கொள்ளை கொண்ட மகரநெடுங்குழைகாதன்

நவதிருப்பதிகளில் ஒன்று தென்திருப்பேரை. ஆழ்வார்திருநகரியிலுருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

என் இணைய நண்பர் ஒருவர் பிறந்து வளர்ந்த ஊர். அவர் எனக்குச் சில நாட்கள் முன் அனுப்பிய மின்னஞ்சலில் அதைக் குறிப்பிட்டு அவ்வூர் கோவிலில் வீற்றிருக்கும் மகரநெடுங்குழைகாதன், குழைகாதுவல்லி நாச்சியார் மற்றும் திருப்பேரை நாச்சியாரைக் கண்டு சேவிப்பதின் சிறப்பைப் பற்றிக் கூற, அங்கு செல்ல மனம் விழைந்தது. சமயம் வரும்போது போய்ப் பார்க்கலாம் என்றிருந்தேன்.

ஆனால் உள்ளம் கொள்ளை கொள்ளும் பகவானின் எண்ணம் வேறாக இருந்தது. எப்போதோ என்ன இப்போதே என்று நிச்சயம் செய்து விட்டான்.

கடந்த வியாழக் கிழமை திடீரென அங்குச் செல்ல நினைத்ததுதான் தாமதம். நூல்பிடி கணக்காக காரியங்கள் நடந்தன. பகல் 12 மணிக்குக் கிளம்பலாம் என்று முடிவு செய்யும்போது மணி 10.30. என் இணைய நண்பருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதில் அவரால் முடிந்தத் தகவல்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டேன். அங்கு மொத்தம் 9 கோவில்கள். நவதிருப்பதி என அழைக்கப்படுபவை. எல்லாம் ஆழ்வார்கள் பாடல் பெற்றத் தலங்கள். எல்லாவற்றையும் ஒரே நாளில் பார்க்க வேண்டுமென்றால் நன்குத் திட்டமிடல் வேண்டும். மின்னஞ்சல் அனுப்பி 10 நிமிடத்தில் அந்த நண்பரின் தொலைபேசி அழைப்பு அமெரிக்காவிலிருந்து வந்தது. மதுரையில் இருக்கும் தன் வீட்டிற்குச் சென்று அங்குத் தங்குமாறு அழைப்பு விடுத்தார். அவர் தந்தை எனக்கு எல்லா உதவியையும் செய்வார் எனக் கூறினார்.

கார் திருச்சியைத் தாண்டும்போது நண்பரின் தந்தையுடன் செல்பேசியில் தொடர்பு கொண்டேன். அவரோ நேராக தன் வீட்டிற்கு வந்து தங்கி அடுத்த நாள் தென் திருப்பேரை செல்லலாம் என்று அன்புடன் அழைப்பு விடுத்தார். அழைப்புக்கு நன்றி கூறி ஹோட்டலிலேயே தங்கி விடுகிறேன் என்றுக் கேட்டுக் கொண்டேன். மதுரையில் ஹோட்டலில் அறை எடுத்ததும் அவருடன் மறுபடி தொடர்பு கொண்டு அவர் வீட்டு முகவரி பெற்றுச் சென்றேன். அன்பான வரவேற்பு. அவர் எனக்காக ஒரு அருமையான நிரல் செய்துக் கொடுத்து, தென் திருப்பேரையில் இருக்கும் அவர் மச்சினர்கள் வீட்டிற்குச் செல்லுமாறுக் கூறினார். அவர்களில் பெரியவர் என் நண்பரின் மாமனார்.

தென்திருப்பேரை கொள்ளை அழகுடைய ஊர். தாமிரபரணியின் மடியில் நல்ல சுகவாசம். அவ்வூர் மக்கள் மற்றும் அவரை தரிசிக்க வரும் பக்தர்களின் உள்ளம் கவர் கள்வனாம் மகரநெடுங்குழைகாதனைக் காண ஆயிரம் கோடிக் கண் வேண்டும் என்றால் மிகையாகாது. தலப் புராணத்தின்படி வேதவித்துக்களின் வேதபாராயணம் மற்றும் குழந்தைகளின் விளையாடும் ஒலிகளைக் கேட்பதற்காக பகவான் கருடனிடம் சற்றே விலகி அமரும்படிக் கூறினாராம். இதைக் கூறுகையில் நம்மாழ்வார் எழுதுகிறார்:

"வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தி தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர் காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருந்த வேதவொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே"

என் இணைய நண்பரின் மூதாதையர் செய்துக் கொடுத்த தங்க கருடர் அற்புதம். பிறகு ஒரு நாள் சாவகாசமாக வந்து எல்லாவற்றையும் மறுபடிப் பார்க்க ஆசை.

தென்திருப்பேரையைத் தரிசிக்கக் காலைப் பொழுது முழுதும் கழிந்தது. மற்ற 8 திருப்பதிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டிருந்ததால் மாலையில் பார்க்க முடிந்தது. பிறகு அங்கிருந்து திருச்செந்தூர் சென்றோம். என் நண்பர், அவர் தந்தை மற்றும் மாமனார் ஆகியோர் செய்த உதவி மிகப் பெரியது. என்னை நேரில் பார்க்காமலேயே என்னிடம் நட்பு கொண்டார் இந்த நண்பர். இணையத்துக்கு இத்தனை இணைக்கும் சக்தியா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/15/2005

ஜூலை 1949-ல் நடந்தது என்ன?

ஜூலை 1949 திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது. அம்மாதம்தான் ஈ.வே.ரா. அவர்கள் மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார். அதை எதிர்த்தனர் அண்ணாத்துரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர். அதன் விளைவாக தி.மு. க. பிறந்தது என்பது மேலோட்டமாகப் பார்க்கப்படும் செய்தி.

அறுபதுகளிலும் இத்திருமணம் விவாதிக்கப் பட்டு வந்தது. 1964-ல் வெளியானப் படம் "பணக்காரக் குடும்பம்". எம்.ஜி.ஆர். நடித்தது. அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடி விட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். அதைப் பற்றி எழுதும் போது குமுதம் தி.மு.க. வினர் இன்னும் பெரியார் திருமணத்தால் தங்களுக்கு ஏற்பட்டப் பாதிப்பிலிருந்துத் திரும்பவில்லை என்று விமரிசனம் செய்தது. அதே படத்தில் கடைசிக் காட்சியில் கதாநாயகனின் தந்தை அவனுடன் வந்து சேர்ந்துக் கொள்ளும் போது, குமுதம் அதே விமரிசனத்தில் "திருந்தி வந்தப் பெரியார்" என்று ஒரு உப-தலைப்பைக் கொடுத்தது. இது நான் நேரடியாகப் படித்தது.

அப்போதிலிருந்தே இது சம்பந்தமாகப் பலரிடம் வெவேறுத் தருணங்களில் சந்தேகங்கள் கேட்டு வந்தேன். அதைப் பற்றி இங்கு இப்போதுக் குறிப்பிடுகிறேன்.

முதல் சந்தேகத்தைப் பார்ப்போம். திருமணம் என்பது ஒருவர் தனிப்பட்ட விவகாரம். ஈ.வே.ரா. அவர்களோ மணியம்மை அவர்களோ சிறு குழந்தைகள் அல்ல. தங்கள் நல்லது கெட்டது தெரிந்தவர்கள். சுய விருப்பத்தில் செயல்பட எல்லா உரிமைகளும் உடையவர்கள். இதில் அண்ணத்துரை அவர்களோ, சம்பத் அவர்களோ எதிர்ப்புத் தெரிவிக்க என்ன முகாந்திரம் இருந்திருக்க முடியும்?

இதற்கு இரு பதிலகள் கிடைத்தன. முதல் பதில் சொத்து விவகாரம் பற்றியது. அதாவது தி.க. பெயரில் சேர்ந்த சொத்து வகையறாக்கள் யாருக்குப் போய் சேர வேண்டியது? அவை பெரும்பாலும் கொள்கை அடிப்படையில் நன்கொடைகளாகப் பெறப்பட்டவை. இது கை விட்டுப் போகப் போகிறதே என்றுதான் அண்ணாவும் மற்றவரும் செயல்பட்டனர் என்று ஒரு பதில் கூறியது. மேலும் தி.க. தேர்தலில் போடியிடாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். அண்ணா முதலியானோர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரம் பெற ஆசைப் பட்டனர். அதை நிறைவேற்றிக் கொள்ள இத்திருமணத்தை ஒரு சாக்காகப் பயன் படுத்தினர் என்றும் கூறப் பட்டது.

ஜூலை 10 1949-ல் மதுரையில் நிறைவேற்றப் பட்ட ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டதின் சுருக்கம் இதோ. "திரு நாயக்கர் அவர்கள் தன் 72-ஆம் வயதில் ஒரு 30 வயதுப் பெண்ணை மணம் செய்ய முடிவெடுத்தது கழகத்தால் போற்றப்படும் லட்சியங்களுக்கு எதிரானது. கழகத்தை அழிக்கக் கூடியது. திருமண எண்ணத்தைக் கைவிடுமாறுக் கேட்டக் கழகத்தின் முக்கியத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்காத திரு நாயக்கர் அவர்களின் பிடிவாத்ப் போக்கு துரதிர்ஷ்டவசமானது". (11 - 07 - 1949 ஹிந்துவில் வெளியான செய்தியின் தமிழாக்கம் என்னுடையது).

இரண்டாம் பதில் இதோ. அச்சமயம் பலப் பொருந்தாத் திருமணங்கள் நடந்தன. அதாவது 50 வயதுக்காரர் 14 வயதுப் பெண்ணை மூன்றாம் அல்லது நான்காம் தாரமாகத் திருமணம் செய்துக் கொள்வது சர்வ சாதாரணம். இத்திருமணங்களை எதிர்த்து தி.க. ஒரு தார்மீகப் போராடமே நடத்தி வந்தது. பெரியார் அவர்களே அவற்றைக் கண்டித்து எழுதியும் இருக்கிறார். அச்சமயத்தில் பெரியார் இவ்வாறு செய்தது அக்கட்சியினரை ஒரு கேலிக்குரியப் பொருளாக்கி விட்டது. "எனக்கு புத்திசாலிகள் சீடர்களாகத் தேவையில்லை. முட்டாள்களே போதும்" என்று பெரியார் அக்காலக் கட்டத்தில் கூறியதாகவும் செய்திகள் படித்துள்ளேன்.

இன்னொரு தருணத்தில் தி.மு.க. வினரைக் கண்ணீர் துளிகள் என்றும் பெரியார் கேலி செய்திருக்கிறார். இதையும் நான் படித்துள்ளேன். அவர் எதிர்ப்பு 1967 வரை நீடித்தது. இன்னும் கூறப் போனால் 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராடத்தின் போது ஹிந்தியை ஆதரித்து விடுதலையில் கட்டுரைகள் கூட வந்தன. நான் அக்காலக் கட்டத்திலேயே அவற்றை நேரடியாகப் படித்துள்ளேன். அப்போது அவர் "பச்சைத் தமிழன்" காமராஜ் அவர்களைத் தீவிரமாக ஆதரித்தவர்.

தனிப்பட்ட முறையில் பெரியார் அவர்களும் சரி அண்ணா அவர்களும் சரி தங்கள் வீட்டிற்கு எதிர்த் தரப்பாளர்கள் யார் வந்தாலும் பொறுமையாகவும் அன்பாகவும் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார்கள் என்றே நான் அறிவேன். என் தந்தை நிருபர் என்ற முறையில் இருவரிடமும் பழகியிருக்கிறார். அவர் எனக்கு இதை எனக்குக் கூறியிருக்கிறார்.

அப்படிப் பட்ட இருவர் எதிர் முகாம்களில் இருந்ததன் பின்னணி தமிழக வரலாற்றில் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். இது பற்றி ஏதாவது நடுநிலைப் பதிவுகள் உண்டா? அவை எங்கு கிடைக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/11/2005

சுனாமி பற்றி ஒரு டாகுமென்டரி

இது முதலில் பொதிகையில் தமிழில் வந்தது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில் பி.சி. ராமகிருஷ்ணா அவர்களால் படிக்கப்பட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை (13-03-2005) காலை 10 மணிக்கு தூர் தர்ஷன் நேஷனல் சேனலில் ஒளி பரப்பப்பட உள்ளது என்று அறிந்தேன். முடிந்தால் பார்க்கவும்.

இது சம்பந்தமாக நான் பிப்ரவரி 16-ஆம் தேதி சில கடல் காற்றுகளைப் பற்றி வெளியிட்டப் பதிவுக்கானப் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

என்னப் பிரச்சினை?

சந்திரவதனா கூறுவது போல இன்று எப்பதிவுக்கும் பின்னூட்டம் இடவே முடியவில்லை. அதே எர்ரர் மெஸ்ஸேஜ்தான் வருகிறது. நேற்று இரவு என்னால் ஒரு புதிய பதிவு இட இயலவில்லை. நான்கைந்து முறை முயற்சித்து விட்டு விட்டேன். இன்றுக் காலை பார்த்தால் அதே பதிவு பல முறை வந்திருந்தது. ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை அழிக்க வேண்டியிருந்தது.

நிலைமை சீக்கிரம் சீராகும் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்னால் சேர்க்கப்பட்டது:
ப்ளாக்கர் சப்போர்டுடன் என்னுடைய முழு கடிதப் பரிமாற்றம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Hi there,
We wanted to let you know that we've received your support request. We
make every effort to respond quickly to all our users problems and
questions.
While you're waiting for us to respond, please check Blogger Status to see
if anything's up with our system: http://status.blogger.com/
Also be sure to check the Known Issues page, which lists issues we're
aware of and working on: http://help.blogger.com/bin/answer.py?answer=791
Lastly you can browse Blogger Help - http://help.blogger.com/ - many
common questions are answered there.

Thanks for your patience,
Blogger Support

Narasimhan Raghavan to Blogger
More options Mar 11 (10 hours ago)

Sir,
Believe me, I did all the things suggested by you before putting in
the request under consideration.
By the way this problem was temporarily resolved in my blog, but then
it came back
I am sure that you will definitely help.
Regards,
N.Raghavan

Blogger Support to me
More options Mar 11 (7 hours ago)

Hello,
Thank you for reporting this error. We are working on getting the comment
pages up and running normally again as soon as possible. We apologize for
the inconvenience.

Sincerely,
Blogger Support

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/09/2005

புரட்சிக்காரர் W.P.K. ஐயங்கார்

இவர் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் நாங்கள் குடியிருந்தப்போது அந்த வீட்டின் சொந்தக்காரர். வருடம் 1968. எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.

சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.

முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.

இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.

மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயைழும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.

அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.

எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.

இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது