12/19/2006

எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றுவது?

டோண்டு ராகவனது இந்த மீள்பதிவுக்கு தூண்டுகோல் எஸ்.கே. ஐயாதான். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக. அவர் எனது இந்தப் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம்தான் காரணம்.

தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மொழி பெயர்க்கக் கூடாது என்னும் எண்ணம் இப்போது கோலோச்சுகிறது. இக்கேள்வி என்னைப் பொருத்தவரை தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் அல்லது பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பதை குறிக்கும். தமிழ் ஆங்கிலம் இரண்டும் என்னைப் பொருத்தவரை தாய்மொழி ஸ்தானத்தில் உள்ளன. ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் சிலர் கேட்கிறார்கள்.

இது ஒரு நல்ல கேள்வி. ஏன் கூடாது என்பதற்கான வாதங்களை முதலில் வைக்கிறேன்.

முதலில் ஒன்றைக் கூறி விட வேண்டும். இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த எதிர்ப்பு கிட்டத்தட்ட 100 சதவிகிதம் சரியே. ஆகவே அதை முதலில் பார்ப்போம்.

இவற்றில் மொழியின் நெளிவு சுளிவுகளுக்கு அதிக இடம் உண்டு. உதாரணம் ஹாரி பாட்டர் புத்தகங்கள்.

என்னைப் போன்ற மொழி பெயர்ப்பாளர்கள் தலைகீழாக நின்றாலும் அதன் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பை அவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது.

அதே போல விளம்பர வாசகங்களையும் கூறலாம். "இது என்னப் புதுக் கலர்" என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொருவராகக் கிழே விழுந்து துணிகளை அழுக்காகிக் கொள்வார்கள். அருமையான தமிழாக்கம். ஹிந்தியில் கேட்கவே வேண்டாம். அவ்வளவு அற்புதம். அதே போல "எல்லோரும் உஜாலாவுக்கு மாறிவிட்டார்கள்" என்ற வாசகமும்தான்.

தாய் மொழிக்காரர்களால்தான் இது முடியும். இங்கும் கிட்டத்தட்ட என்றுதான் கூறினேன். ஏனெனில் மேலே கூறியது எப்போதும் பொருந்தாது.

உதாரணத்துக்கு மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன் அவர்கள் ஜெர்மனில் மொழி பெயர்த்த அகிலனின் கதையை எடுத்துக் கொள்ளலாம். இது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். (தேசிகன் என்னும் மாமனிதர்). (இதுவும் மீள்பதிவு செய்யப்பட உள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் கூறுவேன்).

நிச்சயமாக ஒரு ஜெர்மானியனால் இக்கதையை மொழி பெயர்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழறிவு பெற்ற ஜெர்மானியர் கிடைப்பது அரிது. அவ்வளவுதான்.

தொழில் நுட்பங்களை உள்ளிட்டுக் கலைச் சொற்கள் மிகுந்த ஒரு கட்டுரையை மொழி பெயர்க்க மொழியறிவு மட்டும் போதாது. விஷய அறிவும் வேண்டும்.

அப்போது கூட ஒன்று கூறுவேன். மொழியறிவு மற்றும் விஷய அறிவும் சேர்ந்து அமையப் பெற்றால் தாய் மொழியில் மொழி பெயர்ப்பவர்கள் அதிகம் ஆதரிக்கப்படுவர்.

ஆனால் இங்கு விஷய அறிவுக்கு முக்கியத்துவம் அதிகம். என்னுடைய உதாரணத்தை எடுத்துக் கொண்டால் நான் 12 வருடம் வேலை செய்த ஐ.டி.பி.எல்லில் பிரெஞ்சுக்காரர்கள் கிடையாது. ஆகவே கம்பெனி இந்திய மொழி பெயர்ப்பாளர்களுடன் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

அதில் எனக்கு முன்னால் இருந்தவரால் ஈடு கொடுக்க முடியவில்லை நான் ஈடு கொடுத்தேன். ஏனெனில் நான் ஒரு பொறியாளன் கூட. முன்னவர் வெறுமனே பிரெஞ்சில் எம்.ஏ. அவ்வளவுதான். என் மொழிபெயர்ப்பு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது.

ஆனால் தற்சமயம் இணையத்தின் உதவியால் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பு வேலை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆகி விட்டது. ஆகவே இப்போதைய நிலையில் தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மாற்றம் செய்வது அவ்வளவாக ஆதரிக்கப்படுவதில்லை.

இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அதைச் செய்கிறோம். காரணம் என்ன? விலைதான் அது.

ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு மொழி பெயர்ப்பாளர் ஒரு இந்திய மொழி பெயர்ப்பாளரை விட பல மடங்கு பணம் அதிகம் வாங்குவார். அங்கு விலைவாசி அப்படி. பணமும் அன்னியச் செலாவணியில் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே நாங்கள் இங்கும் தேவைப் படுகிறோம்.

வீரமாமுனிவர் என்னும் மாமனிதர் இத்தாலியப் பாதிரியார். தமிழ் கற்றுக் கொண்டு விவிலிய வேதத்தை தமிழில் மொழி பெயர்த்தார். பாராட்டத் தக்க முயற்சி. ஆனாலும் கண்ணதாசன் அவர்களால் எழுதப் பெற்ற ஏசுவின் கதையைப் போல சரளமானத் தமிழில் இருந்திருக்காது.

இங்கும் கால தேச வர்தமானங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. வீரமாமுனிவர் காலத்தில் மேல் நாட்டு மொழிகள் அறிந்த தமிழர்கள் மிகக் குறைவு. ஆகவே அப்போதைக்கு அவர் மொழி பெயர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அது இப்போது பிரார்த்தனை நூல் ஆனதால் இப்போது அதை மாற்ற யாருக்கும் ஆசை வராது. இங்கு மொழியின் நெளிவு சுளிவுகளூக்கு மேலாக மற்றக் கருத்துக்கள் ஆட்சி செய்கின்றன.

இன்னும் ஒன்று கூறுவேன். நாம் எழுதுவது இந்திய ஆங்கிலம். அதில் எழுதுபவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிக்காரர்கள். ஆகவே அவர்கள் எழுதும் ஆங்கிலம் அவர்கள் தாய்மொழியால் பாதிக்கப்பட்டிருக்கும். எஸ்.கே. ஐயா எழுதிய "The world is not dark just because the cat has closed it eyes!!" இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதை பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட தமிழ் மொழி தெரிந்த டோண்டு ராகவன் போன்றவர்களே சிறந்தவர்கள்.

ஆக இக்கேள்விக்கு பதில் எளிதானதல்ல. மொழி பெயர்ப்பாளர்களின் இணையத் தளங்களில் இது பற்றிய விவாதங்கள் இப்போதும் சூடு பறக்க நடந்துக் கொண்டிருக்கின்றன.

See:

http://www.proz.com/post/134603#134603

I am the Raghavan, whose posting is highlighted in the above link. Do read the other posts too in that thread.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

வடுவூர் குமார் said...

பல மொழிமாற்றுக் கதைகள் கூட படிக்கும் போது ஒட்டாமல் இருப்பதும் அது அதன் தன்மையுடன் இல்லாததே காரணம்.
நிகழ்வுகள் மற்ற தேசங்களில்/மாநிலங்களில் நடைபெரும் போது அது இங்கு புழக்கத்தில் இல்லாததாலும்,ஒரு அன்னியத்தன்மை வந்துவிடுகிறது.
எதுவானாலும் அந்தந்த மொழியில் படித்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

dondu(#11168674346665545885) said...

"எதுவானாலும் அந்தந்த மொழியில் படித்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து."

100 சதவிகித உண்மை இது. மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மானியத் திரைப்படங்கள் சப்டைட்டில்களுடன் போடும்போது அவை எனது ஜெர்மன் புரிதலை தடை செய்யக் கூடாது என்பதற்காகவே கண்ணாடியை கழற்றி விட்டுத்தான் படம் பார்ப்பேன். அப்போதுதான் சப்டைட்டில்கள் படிக்கும் ஆர்வம் வராது.

ஆனால் எல்லோராலும் அது முடியாது அல்லவா? அதற்குத்தானே மொழி பெயர்ப்பு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Giri said...

Dondu avargale,

One very general question.

When literal translations work and when they don't?

Can you give some instances from good books and their translations? It would be very helpful.

Giri said...

Some problem in blogging. I login to my ID and commented the previous comment - it displays as user 'kalakkanaadi'.

Giridharan
http://rgiri.livejournal.com

dondu(#11168674346665545885) said...

கிரிதரன் அவர்களே,

உங்கள் பிரச்சினை புரியவில்லையே. பிளாக்கர் கணக்கு இல்லாமல் நீங்கள் எனது பதிவுக்கு வரவே இயலாது. முக்கியமாக http://rgiri.livejournal.com மூலம் வர இயலாது.

ஒருவேளை காலக்கண்ணாடி உங்கள் பிளாக்கர் கணக்கு வலைப்பூவாக இருக்கலாம். அல்லது உங்கள் நண்பராக இருந்து உங்கள் கணினியிலிருந்து செயல்பட்டு லாக் அவுட் செய்ய மறந்திருக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது