இது சம்பந்தமான முந்தையப் பதிவுகள்:
1)
2)
மத்தியப் பொதுப்பணித்துறையில் வேலை செய்த போது முதல் மூன்றரை வருடங்கள் பம்பாயில் இருந்தேன். ரிஸ்க் இல்லாத வேலை,வெறுமனே கோப்புகளை நகர்த்தும் வேலை. சென்னைக்கு மாற்றல் பெற்று வந்ததும்தான் நிஜ வாழ்க்கையின் கஷ்டங்கள் புலப்பட்டன.
சென்னையில் இருந்த ஏழு வருடங்களும் கட்டுமான வேலையில்தான் இருந்தேன். மத்திய ரிஸர்வ் போலீஸுக்கான வளாகத்தை நிர்மாணிக்க வேண்டியது. 1974-ல் நான் அங்கு சென்றபோது ஒரு அத்துவானக் காடாயிருந்தது. பொருளாதார கெடுபிடிகளால் வேலையும் முடங்கிக் கிடந்தது. 1975-ல் நிலைமை சீராக வேலைகளும் ஜரூராக ஆரம்பித்தன. சிவில் வேலைகளுக்கு ஏதுவாக எலெக்ட்ரிகல் வேலைகளும் நடத்த வேண்டியிருந்தது. இதில் சிவில் பிரிவுக்கும் மின் பிரிவுக்கும் எப்போதும் கருத்து வேறுபாடு வரும்.
நான் திரு. வீரப்பன் என்ற உதவி பொறியாளரின் அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளனாகச் சேர்ந்தேன். அங்கு மொத்தம் 4 இளநிலைப் பொறியாளர்கள். வீரப்பன் அவர்கள் எனக்கு பல உபயோகமான விஷயங்களைக் கற்றுத் தந்தார். அவற்றில் முக்கியமானது மற்றவருடன் வாதம் புரியும்போது மனதில் பயம் இருப்பினும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான். முக்கியமாக சிவில் தரப்பில் ஸ்லாப் போடும் நேரத்தில் எங்களுக்கு நெருக்கடி வரும். அந்த நேரம் பார்த்து எங்கள் எலெக்ட்ரிகல் காண்ட்ராக்டர் சுணங்கிவிட்டால் ரொம்பக் கஷ்டமாகிவிடும். நாள்கணக்கில் சிவில் தரப்பில் முன்னேற்றம் இருக்காது. திடீரென நினைத்துக் கொண்டு விறுவிறுவென்று வேலை நடந்து ஸ்லாப் கம்பி கட்ட ஆரம்பிப்பார்கள். அதாவது இனிஷியேடிவ் அவர்களிடம்தான் இருந்தது. எங்களை மிரட்ட ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் வீரப்பன் அவர்கள் வீறு கொண்டு எழுவார்.
அவர்கள் ஒரு கடிதம் குறைகூறி எழுதினால் இவர் 4 கடிதங்கள் திருப்பி எழுதுவார். அவர்கள் வீக் பாயிண்டுகளாகப் பார்த்து தாக்குவார். அப்போது என்னிடம் ஒருமுறை கூறினார், அதாவது நமக்கு பயம் இருப்பது போல எதிராளிக்கும் இருக்கும். ஆகவே சீறவேண்டிய இடங்களில் சீறவேண்டும் என்பதே அது. பெரிய வளாகத்தில் பல இடங்களில் வேலை நடந்ததால் எங்களுக்கு ரொம்ப அலைய வேண்டியிருந்தது. இ.இ.யிடம் கூறி எங்கள் ஒவ்வொருவருக்கும் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். தவறு செய்தால் தாராளமாகத் திட்டுவார் ஆனால் அது வேலை சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். "என்னங்க இப்படி செய்துட்டீங்க" என்று ஆரம்பித்து விடுவார். அதே நேரம் தவறை எப்படி சரி செய்யலாம் என்பதையும் யோசிக்க ஆரம்பிப்பார். இ.இ. அவர்களிடம் போட்டுக் கொடுப்பது போன்ற வேலைகள் அவரிடம் கிடையாது.
கழிவுநீர் அகற்றும் பம்புகள் மற்றும் தண்ணீர் பம்புகள் எல்லாம் வாங்கி பொருத்த வேண்டியிருந்தது. எல்லாமே பம்புகள்தானே, எல்லாவற்றையும் ஒரு கோப்பிலேயே வகைபடுத்தி விடலாம் என்று நான் ஆலோசனை கூற, "ஃபைலில் கூட அவை ஒண்ணாயிருக்கக் கூடாதுங்க" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார் அவர்.
நான் அங்கிருந்த ஏழு வருடங்களும் அந்த வளாகத்தில் கட்டுமான வேலைகள் மும்முரமாக நடந்தன. தெருவிளக்குகள் நூற்றுக்கணக்கில் போடப்பட்டன. பல கட்டிடங்களுக்கு மின்னிணைப்பு தர கேபிள்கள் (உச்ச அழுத்தம், மற்றும் குறைந்த அழுத்தம்) போடப்பட்டன. மற்ற இளநிலைப் பொறியாளர்கள் வர, மாற்றம் பெற்று செல்ல என்று இருக்க நான் மட்டும் ஏழு வருடங்களும் அங்கேயே இருந்தேன். ஆகவே ஒவ்வொரு கட்டிடத்திலும் எது எப்போது நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள உதவிப் பொறியாளர்கள் என்னைத்தான் கூப்பிடுவார்கள். இங்கிருந்த காலக் கட்டத்தில் நான் நடத்திய டீ க்ளப்பை பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் நான் கீழ்கண்ட பின்னூட்டமாகக் குறிப்பிட்டுள்ளேன்:
"டீக்கடை வைப்பது கடினமா? நானே வைத்து நடத்தியிருக்கிறேன். வருடம் 1978. அப்போது நான் பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்தேன். வேலை செய்த இடம் ஆவடியில் உள்ள மத்திய ரிஸர்வ் போலீஸ் முகாம். கட்டுமானப் பணிகள் நடை பெற்று வந்தன. அருகில் இருந்த டீக்கடைக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். எனக்கு ஒரு திடீர் எண்ணம். அதாவது அலுவலக அளவிலேயே ஏன் ஒரு காபி க்ளப் ஆரம்பிக்கக் கூடாது? எங்கள் அலுவலகம் சிறியது. மொத்தம் ஏழு பேர்தான். ஒரு உதவிப் பொறியாளர், நான்கு இளநிலைப் பொறியாளர்கள், ஒரு எழுத்தர், ஒரு பியூன். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் வசூலித்தேன். 70 ரூபாய் வந்தது. வென்னீர் வைத்துக் கொள்ளவென்று ஒரு ஹீட்டர், கெட்டில் ஆகியவை ஏற்கனவே இருந்தன. லாக்டோஜன், ப்ரூ பொடி மற்றும் சர்க்கரை ஆகியவை வாங்கி வேலையை ஆரம்பித்தோம். தயார் செய்யும் வேலையை நானே ஏற்றுக் கொண்டேன். கணக்கும் நானே வைத்துக் கொண்டேன். எல்லோரையும் வைத்துக் கொண்டு சில முடிவுகளைக் கூறினேன். அவற்றில் முக்கியமானவை சில: அவரவர் க்ளாஸை அவர்களே கழுவிக் கொள்ள வேண்டும். பியூனும் க்ளப்பில் சம உரிமையுள்ள உறுப்பினர். அவரை மற்றவர் க்ளாஸை கழுவ விடக் கூடாது. அவரும் பணம் செலுத்த வேண்டும். முதல் மாதம் ஆன செலவுகளைக் கணக்கிட்டு அதற்கு மேல் ஒரு சிறு தொகையை லாபமாக வைத்து உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய தொகை கணக்கிடப் படும். அவர்கள் எடுத்துக் கொண்ட காப்பி ஒவ்வொரு வேளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிக்கப்படும். முதல் மாத முடிவில் கணக்கு பார்த்த போது ஒரு கப் காப்பி 25 பைசாவுக்கு வந்தது. யாருக்காவது விருந்தினர் வந்தால் அவர்களுடைய காப்பிக் கணக்கு சம்பந்தப் பட்டவர் கணக்கில் ஏற்றப்பட்டது. அதாவது எதில் எல்லாம் பின்னால் கருத்து வேற்றுமை ஏற்படும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் கவர் செய்தேன். பிறகு போர்ன்விடாவும் சேர்த்துக் கொண்டேன். பணத்தை ஒரு பெரிய கவரில் வைத்து அதன் மேல் பகுதியில் பேங்க் பாஸ்புக்கைப் போல வரவு செலவு கணக்கு எழுதப்பட்டது. இதெல்லாம் ஒரு ஒழுங்கு முறையில் செய்ததால் அதிக நேரம் பிடிக்கவில்லை. பக்கத்து அலுவலகங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இரட்டைக் கட்டணம்.
பியூனை மற்றவர் க்ளாஸைக் கழுவச் சொல்லக் கூடாது, அவரும் பணம் செலுத்தும் உறுப்பினர் என்றெல்லாம் ஆனதில் எங்கள் அலுவலகத்தில் டென்ஷன் இல்லை. அவ்வப்போது காலியாகும் டின்களை விற்றதில் தேவையானப் பணம் வந்தது.
நான் என் பதிவில் கூறிய ஆலோசனை நிறைவேற்ற முடியாதது அல்ல. மற்றவர் மனம் மாற வேண்டும் என்று யோசிப்பது பாதிக்கப்பட்டவர் முதல் அடி எடுத்து வைப்பதைத் தடுக்கும். அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து இரட்டை டம்ளர் கடைகளைப் புறக்கணித்துப் பெறும் வெற்றி அவர்கள் பெறப் போகும் மற்ற வெற்றிகளுக்கு அடிகோலும்."
இது வரை கூறலாமா வேண்டாமா என்றுத் தயங்கிய விஷயத்தை இப்போது கூறுவேன். எங்கள் அலுவலக பியூன் ஒரு தலித். அது எனக்கு அப்போது தெரியாது. நான் பொதுப்படையாக பியூனை க்ளாஸ் கழுவச் செய்யக் கூடாது என்று கூறியதற்கு முக்கியக் காரணம் எல்லோரும் சம உரிமை பெற்ற, பணம் செலுத்தும் உறுப்பினர்கள் என்பதே. பியூனுக்கு இலவசமாக காப்பி கொடுத்து கிளாஸ் கழுவச் சொல்லலாம் என்ற எதிர் யோசனை வைக்கப் பட்டப்போது, அதற்கு நான் க்ளப் அமைக்கும் யோசனையையே விட்டு விடத் தயார் என்று சிறிது கடுமையாகக் கூறினேன். உதவிப் பொறியாளர் எனக்கு ஆதரவு தெரிவித்தார். பியூனும் தான் பணம் செலுத்துவதையே விரும்புவதாகக் கூற எல்லாம் சுமுகமாக முடிந்தது. 1981-ல் ஐ.டி.பி.எல்லில் வேலை கிடைத்து நான் செல்லும் போதுதான் பியூன் தான் ஒரு தலித் என்பதையும், இரட்டை டம்ளர் முறை தங்கள் கிராமத்தில் இருந்தது என்றும், பணமும் செலுத்தி க்ளாஸையும் கழுவி வைக்க வேண்டியிருந்தது என்பதைப் பற்றியும் என்னிடம் கண்கலங்கக் கூறினார். எங்கள் க்ளப் விதி முறையால் தன் சுய மதிப்பு உயர்ந்ததாகவும் கூறினார்.
மேலும் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
1 day ago
5 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள் நாட்டாமை அவர்களே.
சோ அவர்கள் எழுதிய "வெறுக்கத்தக்கதா பிராமணீயம்" என்ற புத்தகத்தில் உங்கள் பல கேள்விகளுக்கு பதில் உள்ளன. சாதி பிறப்பால் வருவதில்லை என்பது பற்றி தெளிவாகவே யுதிஷ்டிரர் யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறுகிறார்.
என்னுடைய புரிதலின்படி ஜாதி (வர்ணம் என்று கூறுவது அதிகப் பொருத்தமாக இருக்கும்) என்பது ஒரு விதமான division of labor என்றுதான் படுகிறது. தகப்பன் தொழிலை பிள்ளை செய்வது காலப்போக்கில் வந்ததுதான்.
பார்ப்பனராக இருந்தாலும் பரசுராமரோ துரோணரோ அல்லது கிருபாச்சாரியாரோ ஷத்திரியர்களுக்கும் மேலான aLavil யுத்தம் செய்யும் திறமை பெற்றவர்கள். ஷத்திரியராகப் பிறந்த விஸ்வாமித்திரர் பிரும்ம ரிஷியானார்.
இப்போது ஹரே க்ரிஷ்ணா இயக்கத்தினர் தாங்கள் செய்வது சரியா என்று மெனக்கெட்டு யாரையாவது கேட்கும் வரை அவர்கள் செய்வது சரியே. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இம்மாதிரி அபிப்பிராயம் கேட்டு கொண்டிருந்தால் நீங்கள் செய்வது தவறு என்னும் ரேஞ்சில்தான் பதில் வரும். ஆகவே அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கும் வரை அவர்கள் செய்வது அவர்களை பொருத்தவரைக்கும் சரிதான்
அன்புடன்,
டோண்டு ராகவன்
மற்றவருடன் வாதம் புரியும்போது மனதில் பயம் இருப்பினும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான். //
இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். முக்கியமாக காவல்துறையினரை நேர்கொள்ளும்போது. பயத்தை வெளியே காட்டிவிட்டால் போதும். நம்மையே குற்றவாளி கூண்டில் நிறுத்திவிடுவார்கள்.
"காவல்துறையினரை நேர்கொள்ளும்போது. பயத்தை வெளியே காட்டிவிட்டால் போதும். நம்மையே குற்றவாளி கூண்டில் நிறுத்திவிடுவார்கள்."
அவ்வாறு நீங்கள் செய்ததால்தானே தஞ்சை போலீஸ் ஆய்வாளரை சமாளிக்க முடிந்தது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றாக சொன்னீர்கள்
குருதிப்புனல் படத்தில் கூட கமல் தைரியம் என்பது பயத்தைக் காட்டாமல் மறைப்பது என்பது போல கூறுவார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment