6/09/2006

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் - 1

சமீபத்தில் 1954-ஆம் வருடம் நடந்த நிகழ்ச்சி ஒன்று இன்னும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. வியாழனன்று கல்கி வரும், வெள்ளியன்று விகடன் வரும். எனக்கும் என் அக்காவுக்கும் இந்த இரண்டு நாட்களும் சண்டை மண்டை உடையும். அது ஒரு செவ்வாய்க் கிழமை. தீபாவளி இன்னும் சில நாட்களில் வர இருந்தது. வீட்டில் சாமான்களை ஒழித்து வைக்கும் வேலை மும்முரமாக நடந்து வந்தது. (ஒழிப்பது என்றால் இந்த காண்டக்ஸ்டில், தேவையானவற்றை எடுத்து அடுக்கி, தேவையில்லாதவற்றை தூக்கி எறிவது).

நான் சாதாரணமாக இந்த வேலைக்கு டிமிக்கி கொடுத்து ஓடிவிடுவது வழக்கம். அன்று வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அவ்வாறெல்லாம் செய்ய முடியவில்லை. எங்கள் அன்னை எங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு பரிசு கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். என்னவென்று கூற மறுத்தார். வேலை எல்லாம் முடிந்ததும் பரிசும் கொடுத்தார். கல்கி மற்றும் விகடனின் புது இதழ்கள். தீபாவளியை முன்னிட்டு அவை முன்பே வெளியாகியிருந்தன. எங்களுக்கு தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்திருந்தார்.

இங்கு ஏன் இதை கூற வந்தேன் என்றால் அக்காலக் கட்டத்திலிருந்தே பத்திரிகை தொடர் கதைகளை படிப்பதில் எனக்கு மிகப் பிரியம். அப்போது கல்கியின் அமரதாரா தொடர்கதை வெளியாகிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு இன்று வரை எவ்வளவோ மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. இருப்பினும் புத்தகம் படிக்கும் ஆசை போகவேயில்லை. எனக்கு பல எழுத்தாளர்கள் பிடிக்கும். அவர்களை பற்றி ஒரு வரிசைக்கு பதிவுகள் போட எண்ணம்.

முதலில் நான் தேர்ந்தெடுப்பது ரமணி சந்திரன் அவர்கள். ஏன் என்று தெரியவில்லை, எனது அபிமான எழுத்தாளர்களில் பலர் பெண்கள். வரும் பதிவுகளில் வர இருப்பவர்கள் அனுராதா ரமணன், ஜோகிர்லதா கிரிஜா, லஷ்மி, அனுத்க்தமா, ராஜம் கிருஷ்ணன் ஆகியோர்.

இப்போது ரமணி சந்திரன். அவர் பல வருடங்களாக எழுதி வந்தாலும் சில ஆண்டுகள் முன்னால்தான் அவர் என் கவனத்தைக் கவர்ந்தார். குமுதத்தில் "வல்லமை தந்து விடு" என்ற தொடர்கதை. அப்போது தில்லியில் இருந்தேன். தமிழ் பத்திரிகைகள் ஒழுங்காகக் கிடைக்காது. துளி ஏமாந்தாலும் சில இதழ்கள் விட்டு போய் விடும். ஆனால் ரமணி சந்திரனின் இக்கதை வெளிவந்த காலத்தில் நான் ஒரு குமுதம் இதழைக் கூட மிஸ் செய்யவில்லை. அதே போல குங்குமம் பத்திரிகையில் அவர் தொடர்கதை வந்து கொண்டிருந்த சமயத்தில், பத்திரிகை நிர்வாகம் கொடுத்த தாராள பரிசு பொருட்களால் ஒரு இதழ் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே கோபம். பத்திரிகைக்கே போன் செய்து எனக்கு விட்டுப் போன தொடர் கதையின் பக்கங்களை ஃபேக்ஸ் செய்ய கேட்டுக் கொள்ள அவர்களும் அவ்வாறே செய்தனர்.

அதைப் பற்றி அறிந்த சக பதிவாளர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. எனக்கும் ஒரே ஆச்சரியம். ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா என்று. அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல் புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள். அவர் கதைகளின் டெம்பிளேட் ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த டெம்பிளேட் அது. கதா நாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள். இப்போது வரும் சீரியல்கள் நாயகி மற்றும் வில்லிகள் போல இல்லை அவர்கள். அவர்கள் செயல்பாடுகள் உற்சாகம் விளைவிப்பவை. விதியே என்று அழுது கொண்டு உட்காராது ஆக்கம் புரிபவர்கள் அவர்கள்.

கவித்துவமான தலைப்புகள் கொடுப்பவர் ரமணி சந்திரன் அவர்கள். இப்போது அவள் விகடனில் வரும் தொடர்கதையின் தலைப்பு "வெண்ணிலவு சுடுவதென்ன". மற்ற கதைகளில் சில பின்வருமாறு:

"தவம் பண்ணி விடவில்லையடி", "கனவு மெய்ப்பட வேண்டும்", "கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு", "மை விழி மயக்கம்", "நேசம் மறக்கவில்லை நெஞ்சம்", "காத்திருக்கிறேன் ராஜகுமாரா", "எனக்காக நீ", "பொன்மானைத் தேடி", "விடியலைத் தேடி", "கானமழை நீ எனக்கு", "தரங்கிணி", "அழகு மயில் ஆடும்", "நாள் நல்ல நாள்", "இனி வரும் உதயம்", "கிழக்கு வெளுத்ததம்மா', "என் உயிரே கண்ணம்மா" போன்றவை.

அதெல்லாம் சரி, இப்போது என்ன திடீரென இந்தப் பதிவு என்கிறீர்களா? எதேச்சையாக பத்ரி அவர்களின் பதிவு ஒன்றைப் பார்த்தேன். அதன் சுட்டிகளைச் சொடுக்கியதில் நான் முதலில் கொடுத்த பதிவும் வந்தது. ஆகவே இப்போது இப்பதிவு. அங்கு போய் பின்னூட்டம் கொடுப்பதற்கு பதிலாக இங்கே புது பதிவு போடுவது அதிகம் உகந்தது எனப் படுகிறது. என்ன சரிதானே சுரேஷ் கண்ணன் மற்றும் கிருஷ்ணசைதன்யா அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

பொன்ஸ்~~Poorna said...

டோண்டு சார்,
ரமணிசந்திரன் எனக்கும் பிடிக்கும்.. நீங்க சொல்வது போல் பிரச்சனைகளை எதிர்த்து நிற்கும் அதே சமயத்தில் புரட்சிப் பெண் என்று கொடி பிடிக்காத பெண் கதாநாயகிகள்.. ஒரு மாதிரி டெம்ப்லேட் கதைகள் தான்.. ஆனாலும் கொஞ்சம் வருத்தமான நேரங்களில் படித்தால் உற்சாகமாகி விடும், இன்றைய சீரியல் கதாநாயகிகளுக்கு எவ்வளவோ மேல்...

பொதுவா ரமணிசந்திரன் பெண்கள் மட்டுமே படிப்பது என்று நினைத்திருந்தேன். ரமணிசந்திரனை உங்க லிஸ்ட்ல முதலாக பார்க்கத் தான் ஆச்சரியமாக இருக்கிறது. :)

dondu(#11168674346665545885) said...

வில்லன்கள் திட்டத்துக்கு மேல் திட்டம் போட்டு ஜெயித்து கொண்டிருக்க, மற்றவர்கள் மூக்கால் அழுது கொண்டிருக்க என் கோபம் எப்போதுமே பின்னவர்கள் மேல்தான். எல்லா அட்டூழியங்களும் வில்லன் அல்லது வில்லி செய்வாராம். கடைசி அத்தியாயத்தின் பிற்பகுதியில் மன்னிப்பு கேட்பார்களாம், மன்னிக்கவும் படுவார்களாம். அடித்துக் கொள்ள ஆயிரம் கைகள் வேண்டும்.

நான் ஏற்கனவே கூறியது போல எனக்கு பிடித்த அபிமான எழுத்தாளர்களில் எழுத்தாளிகள்தான் அதிகம்.

Taylor Caldwell, J.K.Rowling பற்றி நான் எழுதப் போகும் பதிவைப் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத / சம்பந்தமுடைய ஒரு தகவல் :

எழுத்தாளர் ரமணிசந்திரன், ராணி வார இதழ் ஆசிரியர் அ.மா.சாமி (குரும்பூர் குப்புசாமி / அன்புள்ள அல்லி புகழ் (?!)) அவர்களின் மனைவியின் சகோதரி (என்று கேள்வி!)

dondu(#11168674346665545885) said...

எனக்குத் தெரியாத தகவலை தந்ததற்கு நன்றி மாயவரத்தான் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

டோண்டு சார்

ரமணிசந்திரன் நாவல்கள்/லஷ்மி நாவல்கள் அனைத்திலும் பெண்கள் traditional values உள்ளவர்களாகவே காட்டபடுவார்கள்.எனக்கு அதனாலேயே அந்த நாவல்கள் பிடிக்காமல் போய்விட்டது.குறிப்பாக லட்சுமி நாவலில் வரும் பெண்கள் பழங்கால பத்தினி பெண்களை நினைவுபடுத்துவர்.

dondu(#11168674346665545885) said...

traditional values என்பது deault-ஆக உள்ள இந்த நிலையில், அதனுள் இருந்து கொண்டும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காது இருப்பவர்கள் ரமணி சந்திரன்/லஷ்மி கதை நாயகிகள். அதனாலேயே எனக்கு அவர்களை பிடிக்கும். இதைச் செய்ய அதிக மனத்திடம் தேவைப்படும்.

அன்புள்ள ,
டோண்டு ராகவன்

அருள் குமார் said...

//எனக்கும் என் அக்காவுக்கும் இந்த இரண்டு நாட்களும் சண்டை மண்டை உடையும். // உங்கள் வீட்டிலாவது 2 பேர்தான்! 'கோகுலம்' -ல் ஆரம்பித்த சண்டை குமுதம், ஆவி, கல்கியில் முடிந்தது. அதுவும் கல்லூரி படிப்புக்காக நான் வேறு ஊருக்கு சென்றதால்!

dondu(#11168674346665545885) said...

உங்கள் வீட்டில் நீங்கள் சகோதர சகோதரியர் எத்தனை பேர் அருள்குமார் அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

டோண்டு சார்,
இந்தப் பதிவுக்குச் சற்றும் சம்மந்தம் இல்லாத கேள்வி. வைணவ சம்பிரதாயத்தில் தாயார் இல்லாமல் பெருமாள் மட்டும் தனியாக இல்லை. தாயார் தன் முதலில்.அதற்கு அவர்கள் திருமண் இடாமல் வெறும் ஸ்ரீசூர்ணம் மட்டும் இடுவதே சான்று என்று முத்தமிழ்க் குழுமத்தில் ஒரு கேள்விக்கு நான் பதில் தந்திருந்தேன். நம்ம இந்த வார நட்சத்திரம் திரு செல்வன் அவர்கள் இருவிதமான சம்பிரதாயம் இருப்பதாகவும், மற்றொன்றில் பெருமாள் தான் முக்கியம் எனவும் கூறுகிறார். உங்கள் பதிலப் பின்னூட்டமாகவோ அல்லது பதிவாகவோ கொடுக்கமுடிந்தால் நன்றி.

dondu(#11168674346665545885) said...

கீதா சாம்பசிவம் அவர்களே,

நீங்கள் குறிப்பிட்ட முத்தமிழ் குழுமத்தின் சுட்டி தர இயலுமா? முதற்கண் எனக்கு கேள்வியே புரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

Sir,
It is googles.muththamizhkuzhumam.I'll give you in detail by today night. Now I am in a hurry. Sorry for the disturbance.

Geetha Sambasivam said...

டோண்டு சார்,
திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய லட்சுமியானவள் ஆதிலட்சுமி. மற்ற லட்சுமிகளின் தன்மையில் இருந்து மாறுபட்டவள். அவளே எல்லாவற்றுக்கும் மூலம். மகத்தானவள். ஆதியானவள். கருவும் உருவும் தோன்றும் முன்னர் அவ்வாறு எதுவும் இன்றித் தோன்றியவள். எங்கும் நிறைந்திருப்பவள். திருவான இவளை மணந்ததாலேயே விஷ்ணுவைத் திருமால் என்கிறோம். இவள் பெருமாளை விட முக்கியமானவள். வைணவர்கள் இடும் திருமண் காப்பில் உள்ள திருமண் பெருமாளின் சொரூபம். நடுவில் இடும் ஸ்ரீசூர்ணம்தான் தாயார்-அதவது திருமகள். திருமண் இடும்போது வெறும் திருமண் மட்டும் இட்டால் போதாது. அதோடு சேர்த்து ஸ்ரீசூர்ணமும் இடவேண்டும். ஆனால் ஸ்ரீசூர்ணம் தனியாக இடலாம். ஏன் என்றால் அவள் தாய் ஸ்ரீசூர்ணத்தில் இருக்கிறாள். பெருமாள் இல்லாமல் தாயை வழிபட்டால் போதும். ஆனால் தாயார் இல்லாமல் பெருமாளைத் தனியாக வணங்கிப் பிரயோஜனம் இல்லை. இதுதான் நான் எழுதினது.
அதற்குத் திரு செல்வன் அவர்கள் வைணவ சம்பிரதாயத்தில் தாயாரைவிடப் பெருமாள் மட்டும் போதும் என்று வணங்கும் சம்பிரதாயம் சிலரிடம் உண்டு என்கிறார். இதற்குத் தான் சந்தேகம் கேட்டேன். புரியும்படி எழுதி இருப்பதாக நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

கீதா சாம்பசிவம் அவர்களே,

உங்கள் கேள்வியை இரண்டு நாட்களுக்கு முன்னால் என் நண்பர் திரு டாக்டர் ராகவன் அவர்களிடம் வைத்தேன். அவர் சென்னை பல்கலை கழகத்தில் வைணவத் துறையின் தற்போதையத் தலைவர். அவரை பொருத்தவரை திருமணும் ஸ்ரீசூர்ணமும் ஒன்றாகத்தான் இட வேண்டும். மற்றப்படி லஷ்மி, திருமால் உருவகம் ஒன்றும் இருப்பதாகக் கூறவில்லை. மறுபடி உங்கள் இப்போதைய விளக்கத்தை வைத்து கேட்கிறேன்.

தேவையானால் அதே வைணவத் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் நரசிம்மாச்சாரியையும் கேட்பேன். ஓரிரு தினங்கள் அவகாசம் தரவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி திரு டோண்டு அவர்களே, இப்போது தான் திரு செல்வனும் சில சுட்டிகளைத் தந்திருக்கிறார். அவற்றையும் படிக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

கீதா அவர்களே,

மறுபடியும் டாக்டர் ராகவன் கிடைக்கவில்லை. ஆகவே நான் ஏற்கனவே கூறியபடி டாக்டர் நரசிம்மாச்சாரியிடம் இக்கேள்வியைக் கேட்டேன்.

நீங்கள் கூறியதை அவர் உறுதி செய்தார். செல்வன் அவர்கள் கூறியதையும் அவர் உறுதி செய்தார். அதாவது மாத்துவர்களுக்கு (மத்வாசாரியார் சிஷ்யர்கள்) விஷ்ணுதான் முக்கியம்.

ஆனால் ராமானுஜர் வழிவந்தவர்களுக்கு தாயாருடன் சேர்ந்துதான் விஷ்ணுவை வழிபட வேண்டும். ஆகவே ஸ்ரீசூர்ணத்தை தனியாக இடுவதை ஒத்துக் கொள்ளலாம், ஆனால் ஸ்ரீசூர்ணம் இல்லாது திருமண் மட்டும் இடக்கூடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிவமுருகன் said...

வணக்கம் டொன்டு சார்,

நாங் கூட ஏதோ ஆறு பதிவுல மாட்டிகிட்டு அதை அரம்பிச்சுடீங்களோன்னு நினைத்துவிட்டேன்.

பலதடவை உங்கள் பதிவை படித்தாலும் இப்ப தான் முதல் தடவை பின்னூட்டம் இடுகிறேன்.

(சும்மாவா எழுத்தாளர்கள பத்தில எழுதுறீங்க)

dondu(#11168674346665545885) said...

கீதா அவர்களே,

மீன்டும் டாக்டர் ராகவனுடன் பேசினேன். அவர் கூறுகிறார், திருமண் சிறிசூர்ணம் உருவகத்துக்கு ஒரு எழுத்து வழி ஆதாரமமும் கிடையாது. அதெல்லாம் சம்பந்தப்பட்ட குழுவினர் வழக்கமாக ஏற்படுத்திக் கொண்டதுதான். மற்றப்படி மாத்துவர்களின் பெருமாளை முன்னிறுத்தும் கோட்பாடும் உண்மையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாதங்கி said...

வணக்கம் டோண்டு சார்,
அகலிகை (கௌதமர் மனைவி) மற்றும அகல்யா (அகல்யா சீதே தாரா ,மண்டோதரி திரௌபதி ) இருவரும் வெவ்வேறு பெண்மணிகள் என்று என் தோழி உறுதியாகச் சொல்கிறார். கொஞ்சம் விளக்குங்களேன்.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் மாதங்கி அவர்களே. எனக்குத் தெரிந்து ஒரு அகல்யா (அகலிகை)தான்.

அகலிகை கதை என்னை எப்போதும் சோகத்தில் ஆழ்த்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கயல்விழி said...

ரமணிச்சந்திரன் நல்ல எழுத்தளர் தான், இருந்தாலும் இவர் கதைகளைப்படிக்க எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. ஸ்மால் டவுன் பெண்களைப்பற்றியே இவர் கதை இருக்கிறது. சிட்டி பெண்கள் இதை எல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்டோம். இப்போது நாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும், ரமணிச்சந்திரனின் கதாநாயகிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் அதிக சம்மந்தம் இல்லை.

அது ஏன் இவருடைய கதாநாயகிகளுக்கு ஆண்கள் என்றாலே பிடிப்பதில்லை என்பதும் புரியவில்லை. நிஜ உலகத்தில் இன்றைய காலக்கட்டத்தில் அத்தனை ஒழுக்கமான பெண்களும் இருப்பதில்லை, ஆண்களும் இருப்பதில்லை. வேண்டுமானால் நடிக்கலாம்.

மேலும் இவருடைய புத்தகத்தின் முதல் இரண்டு பக்கங்களை படித்தாலே போதும், கதை என்ன? எப்படி முடியும் போன்ற தகவல்களை சொல்லிவிடலாம். She is just very boring in my opinion.

இனியாள் said...

Naanum kayalvizhiyin karuththukalai prathibalikiren, eninum kaiyil kidaikkum ramani chandranin puthagangalai padikamal vittathuillai. :)
enna thaan kurai sonnalum avaigalai padikkum aval illamal irukathu, ippothu kooda avar kathaigalin pdfs engeyavathu kidaikuma endre theda varum pothu padiththa pathivu thaan ithuvum .

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது