சமீபத்தில் அறுபதுகளில் குமுதத்தில் படித்தது இக்கதை. தலைப்பு மறந்து விட்டது. எழுதியவர் பெயரும் மறந்து விட்டது. இப்போது யோசித்து பார்க்கும் போது இதை எழுதியது அக்காலக் கட்டத்தில் குமுதத்தில் செயலோடிருந்த அந்த மும்மூர்த்திகளில் ஒருவராக இருக்கலாம். அதாவது எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன் மற்றும் ஜ.ரா. சுந்தரேசன் இவர்களில் ஒருவர். இவர்கள் மூவராகச் சேர்ந்ததுதான் அரசு என்று கூறியவர்களும் உளர். நிற்க.
கதாபாத்திரங்களின் பெயர்களும் நினைவுக்கு இல்லையாதலால் நானே பெயர் சூட்டி விடுகிறேன். அதே போல கதையின் கருத்துதான் முக்கியம் என்பதாலும், கதையின் வாக்கியங்களும் அப்படியே நினைவுக்கு வராததாலும், இப்போது கதையை என் வாக்கியங்களில் தருகிறேன்.
கமலாவுக்கு சுய இரக்கம் மிக மிக அதிகம். அதே சமயம் அவளது பிரச்சினைகளும் அதிகம் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். அவள் அம்மாதான் சிரமப்பட்டு அவளையும் அவள் அண்ணனையும் கரையேற்றினார். கமலாவுக்கு வரன் பார்க்கும் சமயம் அவள் அண்ணா சொல்ப சம்பாத்தியத்தில் இருந்தார்.
ஆனால் நல்ல வேளையாக ஒரு பணக்கார வாலிபன் அவள் அழகைப் பார்த்து, விரும்பி சீர் செனத்தி எதுவுமின்றி அவளை கைப்பிடித்தான். ஆனால் புகுந்த வீட்டிலோ அவள் மாமியாருக்கு இம்மாதிரி ஏழை வீட்டில் பெண்ணெடுத்தது பற்றி கழுத்து மட்டும் குறை. போதாக்குறைக்கு கமலாவின் மூத்த ஓரகத்திகள் இருவர் வீட்டிலிருந்தும் அமரிதமான வகையில் சீர் வந்தது நிச்சயமாக கமலாவுக்கு சாதகமான சூழ்நிலையைத் தரவில்லை.
சில ஆண்டுகள் கடந்தன. கமலாவுக்கு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. இரண்டு குறை பிரசவங்கள். அவள் உடல்கட்டும் குலைந்தது. மாமியாரின் குத்தல் பேச்சுகள் வேறு. எல்லா விஷயங்களும் அவளை ஒரு ஹிஸ்டீரியா நோயாளியாக மாற்றியன. தன்னிரக்கம் அவளுள் பொங்கியது. காச்சு மூச்சென்று கத்தி சாமான்களை விட்டெறிந்து என்றெல்லாம் நிலைமை மாற ஆரம்பித்தது.
அன்று நிலைமை மோசமாகியது. காலையிலிருந்தே கமலாவின் தலைக்குள் ஏதோ ரீங்காரம் செய்வது போன்ற உணர்வு. அவள் கணவன் கோபாலன் பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவள் அவனிடம் ஏதோ கூற அவன் பேப்பரிலிருந்து கண்ணை எடுக்காமல் வெறுமனே உம் கொட்டிக் கொண்டிருந்தான். கமலாவின் கையிலிருந்த காப்பி தம்ளர் பறந்து சுவற்றை பதம் பார்த்து கீழே விழுந்து காப்பி எங்கும் சிதறியது. கோபாலன் நடுங்கி போனான்.
"ஒன்றுமில்லை, உங்கள் மனைவி கோபம் அடையாமல் பார்த்து கொள்ளுங்கள். நான் இப்போது போட்டிருக்கும் ஊசி அவரைத் தூங்கச் செய்யும் என்று கூறிவிட்டு லேடி டாக்டர் ஃபீஸ் வாங்கிக் கொண்டு சென்றார். அடுத்த சில நாட்கள் அவ்வளவாக பிரச்சினை இல்லை. கமலாவின் நாத்தனார் ஊரிலிருந்து வந்திருந்ததால் கமலாவின் மாமியாருக்கு தன் மகளுடன் பேசவே நேரம் போதவில்லை, ஆகவே கமலாவுடன் சண்டை இல்லை. கமலாவும் மௌனமாக இருக்க ஆரம்பித்தாள்.
அன்று கமலாவின் அண்ணன் சிரஞ்சீவி அவளைப் பார்க்க வந்திருந்தார். சற்று தன்னுடன் வெளியே வருமாறு கூறி அவளை நகரின் இன்னொரு பகுதிக்கு அழைத்து சென்றார். ஒரு வீட்டின் வாசலில் மணியை அழுத்த, "வாங்க சிரஞ்சீவி, ரொம்ப நாளாச்சு பார்த்து" எனக் கூறியவாறு அவரையும் கமலாவையும் உள்ளே வருமாறு பணித்தார் ஒரு தலை நரைத்த பெண்மணி.
வீட்டை மிக துப்புரவாக வைத்திருந்தார் அவர். சிறிய வீடுதான், சாமான்களும் அதிகம். ஆனால் அவற்றை நேர்த்தியாக வைத்ததில் இடநெரிசல் எதுவும் தெரியவில்லை. அவர்களை ஹாலில் அமரச் செய்து விட்டு உடனே வருவதாகக் கூறி உள்ளே சென்றார் அவர்.
"யார் இவர்" எனக் கண்ணாலேயே கமலா சிரஞ்சீவியைக் கேட்க, அவர் அப்புறம் கூறுவதாகக் கூறினார். பிறகு அப்பெண்மணியை சரஸ்வதி என்று அவளுக்கு அறிமுகப்படுத்தினார். தன் தங்கையையும் சரஸ்வதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். சரஸ்வதி மிருதுவாகப் பேச ஆரம்பித்தார். அவர் கைவினைப் பொருகள் பல செய்து பல கடைகளுக்கு அனுப்புபவர். கணிசமான வருமானம். அவர் பொருட்களுக்கும் கிராக்கி அதிகம். சிரஞ்சீவி வேலை செய்யும் கடை கூட அவரது வாடிக்கையாளரே. இதெல்லாம் கமலா அடுத்த அரை மணி நேரத்தில் தெரிந்து கொண்டாள். சரஸ்வதியின் கணவர் இறந்து பல வருடங்களாகி விட்டன. ஒரே ஒரு பிள்ளை. போலியோ நோயால் கால் சூம்பி விட்டது. இருந்தாலும் அவனைப் படிக்க வைத்து அவன் இப்போது வேலைக்கும் போகிறான்.
திரும்பி வரும் சமயம்தான் சிரஞ்சீவி சரஸ்வதியைப் பற்றி மேலும் விவரங்கள் கூறினார். அவர் கணவ்ர் வண்டி ஓட்டுனர். குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளாகி அவர் இறந்த சமயம் சரஸ்வதி நிறைமாத கர்ப்பிணி. தனது ஒரே பிள்ளை விபத்தில் போனது சரஸ்வதியின் சனியன் பிடித்த ராசி என்று அவ்ரது மாமியாரின் நிஷ்டூரப் பேச்சுகள் வேறு. கைவசம் பணம் இல்லை. கைக்குழந்தையுடன் மிக அவதிக்குள்ளானார் சரஸ்வதி. இந்த அழகில் குழந்தைக்கு வேறு போலியோ அட்டாக்.
இருப்பினும் மனம் தளராது பாடுபட்டார். ஒரு கைவினைத் தொழிற்கூடத்தில் வேலை. அங்கு நன்கு கற்றுக் கொண்டு எல்லா பொறுப்புகளையும் நிர்வகித்து முக்கிய பதவியும் பெற்றார். பிறகு தான் சேர்த்த பணத்தைக் கொண்டு தானே தொழில் தொடங்கி, போராடி இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.
இப்படி பேசிக் கொண்டே வந்ததில் நேரம் தெரியவில்லை. கமலாவும் சிரஞ்சீவியும் வீட்டுக்கு வரும்போது கோபாலன் வீட்டில் இல்லை. ஆபீசுக்கு சென்று விட்டிருந்தான். மாமியார் மட்டும் வாசல் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார். "என்ன இப்படி பொறுப்பில்லாமல் போனால் என்ன அர்த்தம்? ஆம்படையான் ஆபீசுக்கு போறப்போது பக்கத்தில் இருந்து எல்லாம் எடுத்து கொடுத்து உதவி செய்யாமல் இந்த மாதிரி வெளியில போறது எதில் சேர்த்தி" என்று நிஷ்டூரமாகப் பேசினார். பேசாமல் உள்ளே வந்தாள் கமலா. அவள் கண்களில் கண்ணீர். சிரஞ்சீவிக்கே சற்று பயம் வந்து விட்டது. மறுபடியும் இந்தப் பெண் பொருட்களை வீசி எறிய ஆரம்பிக்கப் போகிறாள் என பயந்தார். மாமியாருக்கு தெரியாமல் கமலாவிடம் அமைதியாக இருக்குமாறு கூறினார்.
அவளோ, "பாவம் அண்ணா சரஸ்வதி, எத்தனை கஷ்டப்பட்டு விட்டார்" எனக்கூறி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். அவள் அழட்டும் என அண்ணனும் அப்படியே விட்டு விட்டார். கமலா குணமாகும் அறிகுறிகள் அவருக்கு புலப்பட ஆரம்பித்தன.
இப்போது மீண்டும் டோண்டு ராகவன். கதை நன்றாக இருந்தால் கிரெடிட் அதை எழுதியவருக்கு. இல்லையென்றால் நான் அதை மீள்பதிவு செய்தலில் ஏற்பட்ட சொதப்பல்களே காரணம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
4 hours ago
8 comments:
மீள்பதிவு அந்த புத்தகத்தில் இருந்தா, இல்லை நினைவில் இருந்தா ?
அப்போ எல்லா விஷயங்களையும் நினைவுல இருக்குன்னா,
"ஜெனிபர்" அப்படீன்னு ஒரு கதையை குமுதத்தில் இருவது வருஷத்துக்கு முன்னால எழுதினது யாருன்னு நினைவுக்கு வருதா பாருங்க...
வாங்க ரவி. என்ன ரொம்ப சுலபமான கேள்வியைக் கேட்டுட்டீங்க?
ஜெனிஃபர் அமெரிக்க நாவல். எழுதியது சிட்னி ஷெல்டன். ஆங்கிலத் தலைப்பு: The rage of angels. தமிழில் ஜெனிஃபர், எனது சக மொழிபெயர்ப்பாளர் ரா.கி. ரங்கராஜன் அவர்களால் உருவாக்கப்பட்டது.
எனக்கு ரா.கி. ரங்கராஜனை நன்றாகத் தெரியும். என்ன, அவருக்குத்தான் என்னைத் தெரியாது.
மேல் தகவல்கள். இக்கதை தமிழில் தழுவப்பட்டு படமாக வந்தது. "மக்கள் என் பக்கம்" சத்ய ராஜ், ராஜேஷ், அம்பிகா, நிழல்கள் ரவி, ரகுவரன் மேலும் பப்ளிக் பிராசிக்யூட்டராக செந்தாமரை. விவரங்கள் போதுமா.
மற்றப்படி நான் மீள்பதிவு செய்த கதை என் நினைவிலிருந்து எடுத்தது. அதைத்தான் முதலிலேயே கூறினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தலைப்பு மறந்து விட்டது. எழுதியவர் பெயரும் மறந்து விட்டது.//
Surprise! Surprise! Dondu can forget too.
//வாங்க ரவி. என்ன ரொம்ப சுலபமான கேள்வியைக் கேட்டுட்டீங்க? //
Ravi, Better luck next time.
Note to self:
These days a lot of Hysteria cases are out there, be careful mate.
//மேல் தகவல்கள். இக்கதை தமிழில் தழுவப்பட்டு படமாக வந்தது. "மக்கள் என் பக்கம்" சத்ய ராஜ், ராஜேஷ், அம்பிகா, நிழல்கள் ரவி, ரகுவரன் மேலும் பப்ளிக் பிராசிக்யூட்டராக செந்தாமரை. விவரங்கள் போதுமா.//
மலையாளத்தில் 'ராஜாவிண்டே மகன்' என்ற பெயரில் மோகன்லால், ஊர்வசி நடித்து வெளிவந்த படத்தை காப்பிரைட் வாங்கித்தான் 'மக்கள் என் பக்கம்' எடுத்தார்கள்.
//Surprise! Surprise! Dondu can forget too//
சில சமயம் அம்மாதிரியும் ஆகும். உதாரணத்துக்கு சமீபத்தில் 1968-ல் படித்த ஒரு நாவல் எல்லீஸ் பீட்டர்ஸ் எழுதிய A Nice Derangement of Epitaphs (1965). கதை மனதில் நிற்க, தலைப்பு மற்றும் ஆசிரியர் பெயர் மறந்து விட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்னால் எதேச்சையாக அப்புத்தகம் பிரிட்டிஷ் கௌன்சில் நூலகத்தில் கிடைக்க, முதல் வரியைப் படித்ததுமே விளங்கி விட்டது. ஆகா 35 வருஷங்களுக்கு அப்பால் வந்து சந்தோஷப்படுத்தறாங்கப்பா என்று மகிழ்ச்சி அடைந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மலையாளத்தில் 'ராஜாவிண்டே மகன்' என்ற பெயரில் மோகன்லால், ஊர்வசி நடித்து வெளிவந்த படத்தை காப்பிரைட் வாங்கித்தான் 'மக்கள் என் பக்கம்' எடுத்தார்கள்.//
அப்ப சேர நாட்டவர்தான் சுட்டாங்கன்னு சொல்ல வரீங்களா? ஏன்னாக்க, எனக்கென்னவோ இதுக்கு போயி சிட்னி ஷெல்டனை அனுமதி கேட்டிருப்பாங்கன்னு தோணலை. அப்படியில்லை அவங்க வாங்கியிருக்காங்க அனுமதின்னு சொன்னாக்க சந்தோசம்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேரளாக்காரங்க எங்க் போயி அனுமதி கேட்டிருக்கப்போறாங்க ? சிட்னி ஷெல்டனை அவுஸ்திரேலியாவுல தான் தேடீயிருப்பாங்க...
அதைப்போயி நம்மாளு காசு கொடுத்து வாங்கி எடுத்திருக்கான் பாரு...
விஷயத்துக்கு வரேன், ஏன் கேட்டேன்னா, நான் முதன் முதலில் பாடப்புத்தகம் தவிர மற்ற நூல்கள் வாசிக்க ஆரம்பித்தது அப்போதிருந்து தான்...
அதுல அடிபட்டு விழும் ஒரு குருவியை ஹீரோயின் எடுக்கும் சம்பவமும் அதை ரா.கி.ர வர்ணிக்கும் விஷயமும் நேற்று என்னுடைய ஆபீஸில் அடிபட்டு விழுந்த குருவியை சில நேரம் வைத்திருந்தபோது நடந்தது...
:))
குருவி அடிப்பட்ட விஷயம் சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை. ஒன்று செய்யுங்களேன். இதையே ஒரு பதிவாகப் போடுங்களேன். இப்புத்தகத்தை பற்றிய உங்கள் ஞாபகமும் படிக்க சுவாரசியமாக இருக்கும் என்ப்தே நிஜம்.
அது சரி, குருவி பிழைத்ததா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment