சமீபத்தில் 1985- மே மாதத்தில் நடந்த என் மச்சினி கல்யாணம் வீடியோ கவரேஜ் செய்யப்பட்டது. எங்கள் குடும்பத்தில் முதல்முறையாக வீடியோ கவரேஜ். வீடியோ வந்ததும் எல்லோரும் போட்டு பார்த்தனர், என்னைத் தவிர. நான் அச்சமயம் வீட்டில் இல்லை. பிறகு டில்லி திரும்ப சென்று விட்டேன். மறுபடியும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்பவும் வந்தேன். அப்போதுதான் அந்த வீடியோ பார்த்தேன். அதில் மகா கோரமான குண்டன் ஒருவனைக் கண்டு யாராக இருக்கும் என திகைப்புடன் பார்க்க, நீதான் அது என்று என் தங்கை கூறினாள். பயங்கர ஷாக் எனக்கு. 39 வயதில் இவ்வளவு பருமனா என்ற திகைப்பு. அடுத்த ஆண்டு 40 முடியப் போகிறது. எல்லா சுகவீனங்களும் வருமே என்ற பயம் வேறு.
டில்லி திரும்பியதும் மருத்துவரை பார்த்ததில் அவரும் எனது பயத்தை உறுதி செய்தார். தினசரி வேகமாக நடக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறே நடக்க ஆரம்பித்தேன். தினசரி 90 நிமிடங்கள், காலையில் 45 நிம்டங்கள் மாலையில் 45 நிமிடங்கள். குளிர்க்காலம் ஆதலால் டில்லியில் நண்பகலில் கூட நடக்கலாம். ஆனால் மெதுவாக ஊர்ந்த நடை சரிப்படாது என்று மருத்துவர் கூறியதை முதலிலேயே உணர்ந்தேன். எங்கள் ஐ.டி.பி.எல். வளாகத்தில் இரண்டு முறை சுற்றினால் 3 கிலோ மீட்டர் போல வரும். நடை என்னமோ தலைதெறிக்கும் வேகத்தில்தான்.
பிறகு எங்கு சென்றாலும் நடை என்று மாறிற்று. காலையில் நடை. பிறகு வீட்டிலிருந்து எங்கள் கம்பெனி பஸ் வரும் இடம் மூன்றரை கிலோ மீட்டர். அதற்கு நடை. மாலை அதே இடத்திலிருந்து வீட்டுக்கு நடை. மதியம் ஐ.டி.பி.எல்.-ல் நடை என்றெல்லாம் அமர்க்களம்தான். இன்னொரு விஷயமும் செய்தேன். அதுதான் டிபனை அடியோடு நிறுத்தியது. காலையில் ஒரு கப் காப்பி, மதியம் வீட்டிலிருந்து எடுத்து சென்ற 4 இட்லிகள்/ஒரு கப் தயிர் சாதம், ஐ.டி.பி.எல். கேண்ட்டீனில் காலை, மாலை இரண்டு கப் டீ, இரவு உணவு என்று வழக்கம் ஆயிற்று. ஆக, உடற் பயிற்சி கூடவே சாப்பாடு குறைப்பு என இருமுனைத் தாக்குதல். முதலில் பெல்ட் லூஸ் ஆனதில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. பிறகு ஒரே தூரத்தை கடக்க எடுத்து கொண்ட நேரம் குறைய ஆரம்பித்தது எனது வேகம் அதிகரித்ததைக் காட்டியது. ஆனால் தினமும் என்னைப் பார்த்து வந்த மற்றவர்கள் கண்ணுக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அக்டோபரில் ஆரம்பித்த செயல்பாட்டின் பலன் அடுத்த மார்ச்சில்தான் மற்றவர்களுக்கு புலப்பட்டது. அன்றைய தினம் ஞாபகத்தில் உள்ளது. திடீரென என் சக அதிகாரி Bargava என் தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். மற்றவர்களும்தான். பகலில் ஐ.டி.பி.எல். வளாகத்தில் நான் வெறிபிடித்த வேகத்தில் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். எனது எடை முதலில் 90கிலோகிராம். அது இப்போது 74 ஆயிற்று. முதலில் ஒரு மணி நேரத்தில் ஆறு கிலோமீட்டர் நடக்க முடிந்தது. அதுவே மணிக்கு எட்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்தது.
1986 ஏப்ரல் 4-ஆம் தேதி எனக்கு பிறந்த நாள். 40 வயது பூர்த்தி ஆயிற்று. மருத்துவரை பார்த்ததில் அவருக்கும் மகிழ்ச்சி. எனது வாழ்நாளை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அதிகரித்துள்ளேன் என மதிப்பிட்டார். ரத்த அழுத்தம் ஒரு இளைஞனது ரத்த அழுத்தம் போல உள்ளது என்றும் கூறினார். அந்த மே மாதம் சென்னை சென்ற போது எல்லோருக்கும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அதே மாதம் எனது மைத்துனன் திருமண வீடியோவில் என்னை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு திருமணங்களும் சரியாக ஒரு ஆண்டு இடைவெளியில். எனது முரட்டு வைத்தியம் ஆரம்பித்தது அக்டோபர் 1985-ல்.
எனது முரட்டு வைத்தியம் மூன்றாம் பதிவில் குறிப்பிட்ட சைக்கிள் ஓட்டியதும் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகாது.
இத்தருணத்தில் இன்னும் சில விஷயங்களைக் கூறவேண்டும. டிசம்பர் 1985-ல் டைம் பத்திரிகையில் உடல் பருமனை குறைப்பது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் என்னென்ன செய்ய வேண்டும் என்று 1, 2 3 என்று எண்ணிட்டு எழுதியிருந்தார்கள். அப்படியே நான் என்னையறியாமலேயே செய்து வந்திருக்கிறேன். முதலில் நான் கன்சல்ட் செய்த மருத்துவர் இதில் ஒரு சிறிய தவறு செய்தார். அதாவது வேகமாக நடக்க வேண்டும், அதுவும் மணிக்கு ஐந்து மைல் என்று (அதாவது மணிக்கு 8 கிலோமீட்டர்). இது பருமனாக இருப்பவர்களுக்கு சாத்தியமே இல்லை. ஆகவே பலர் அதைரியமடைந்து முயற்சியை ஆரம்பத்திலேயே கைவிடுகின்றனர். நான் எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன். சம்பந்தப்பட்டவடர் மூச்சு திணறாமல் எவ்வளவு வேகமாக விடாது செல்ல முடியுமோ அந்த வேகத்தில் நடந்தால் போதும். பிறகு உடல் எடை குறையக் குறைய வேகம் தானாகவே அதிகரிக்கும். மருத்துவர் சொன்ன வேகத்தை அடைய நான் 16 கிலோகிராமுக்கு மேல எடை குறைக்க வேண்டியிருந்தது.
இதில் முக்கிய விஷயம் எடை மற்றும் வேகத்தை பெருக்கி வரும் அளவுதான். இதை momentum = mass x velocity என்று குறிப்பிடுவார்கள். இதை ஏனோ யாரும் வெளிப்படையாக எழுதுவதில்லை. உதாரணத்துக்கு நான் மேலே குறிப்பிட்ட டைம் பத்திரிகை கட்டுரையில் ஒரு மணி நேரம் நடந்தால் 300 கலோரிகள் செலவழியும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அளவு எந்த எடைக்கு பொருந்தும் என்று எங்குமே கூறவில்லை. 90 கிலோ எடையள்ள ஒருவனும் 74 கிலோ எடையுடைய மற்றவனும் ஒரு மணி நேரம் ஒரே வேகத்தில் நடந்தால் ஒரே அளவு கலோரிகள் செலவழியாது. அதற்கு குறைந்த எடையுடையவன் அதிக வேகத்தில் நடக்க வேண்டும். ஆகவே நான் கூறுவது அதிகப் பொருத்தம் உடையது. அவரவர் தங்கள் அதிகப் பட்ச வேகத்தில் மூச்சு திணறாமல் நடந்தாலே உடல் மீதி விஷயங்களைப் பார்த்து கொள்ளும்.
இந்த குறைந்த எடையை அடுத்த 6 ஆண்டுகளுக்கு தக்க வைத்து கொள்ள முடிந்தது. பிறகு எனது செயல்பாட்டில் சுணக்கம் வர, எடையும் மெதுவாகக் கூட ஆரம்பித்தது. அதுவும் 1993-ல் விருப்ப ஓய்வு பெற்றதும் சைக்கிள் விடுவதும் நின்றது. என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தும் எனக்கு் அதைச் செய்யும மனவுறுதி இல்லாது போயிற்று. இப்போதுதான் போன அக்டோபரிலிருந்து மறுபடி இந்த முரட்டு வைத்தியத்தை ஆரம்பித்துள்ளேன். முதலில் ஒரு கிலோமீட்டர் கடக்க 11 நிமிடங்கள் ஆயின. இன்று 8 நிமிடங்கள் 50 வினாடிகள். காலை 50 நிமிடங்கள் மாலை 50 நிமிடங்கள். இன்னும் எடை பார்க்கவில்லை. கால்சட்டை லூஸ் ஆக ஆரம்பித்துள்ளது.
சென்னை வந்ததும் இதை பல முறை ஆரம்பித்து பாதியில் விட்ட நான் இப்போது என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் கடந்த 2 மாதங்களாக செய்து வருகிறேன். சாதாரணமாக சில தினங்கள் வரிசையாக மழை பெய்து எனது உறுதியைக் குலைக்கும். இம்முறை அதையும் மீறியுள்ளேன். கையில் கடிகாரம் இல்லாது, செல்பேசி எடுத்து கொள்ளாது, பணத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துகொண்டு கொட்டும் மழையில் பலமுறை சென்று விட்டேன். உடலுக்கு ஒரு கெடுதலும் வரவில்லை. ஆக, மழையால் வேலை கெட்டது என்று இனிமேல் இருக்காது. இதில் என்ன வேடிக்கை என்றால் போடா ஜாட்டான் என மழையை ஒதுக்கியது மேலும் உற்சாகத்தையே அளிக்கிறது. நம் கட்டுப்பாட்டிலேயே எல்லா விஷயங்களும் உள்ளன என்ற எண்ணமே மகிழ்ச்சியை வரவழைக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன் நான் செய்த இந்த முரட்டு வைத்தியத்தின் பயன் எனது சோம்பேறித்தனத்தால் மறைந்ததால் அதுபற்றி இதுவரை பதிவிடவில்லை. இப்பதிவைக் கூட இத்தருணத்தில் போடுவதா வேண்டாமா என பலமுறை யோசித்தேன். சரி போட்டுவிடுவோம் என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்ற எண்ணம். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்னும் நிலையில் இந்த நிர்ப்பந்தமும் துணை செய்யும் என நம்புகிறேன்.
மீதி தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
2 hours ago
34 comments:
Intresting
Regards Neewin Tajudeen
ஆக டோண்டுவுக்கு டவுசர் கழண்டுக்கப்போவுது சீக்கிரமாவே.
வாழ்த்துக்கள் சார்
//ஆக டோண்டுவுக்கு டவுசர் கழண்டுக்கப்போவுது//
அதனால் என்ன, பழைய டவுசர்கள் ஒவ்வொன்றாக பொருந்த ஆரம்பிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களது புதிய முரட்டு வைத்தியத்தின் பலனால் நீண்ட ஆண்டுகள் நீங்கள் வாழ வாழ்த்துக்கள் டோண்டு சார்!
முரட்டு வைத்தியங்களுக்கு என்றே தனி வலைப்பூ ஒன்றினை நீங்கள் ஆரம்பிக்கலாம். எல்லா முரட்டு வைத்தியங்களும் கலக்கல். குறிப்பாக சைக்கிள் பதிவு செம அசத்தல்...
//அதில் மகா கோரமான குண்டன் ஒருவனைக் கண்டு யாராக இருக்கும் என திகைப்புடன் பார்க்க, நீதான் அது என்று என் தங்கை கூறினாள். //
வடிவேல் ஜோக் தான் நியாபகம் வருது.
வடிவேல் : எப்படி சார் நான் பில்லா இல்லன்னு கண்டுபிடிசிங்க.
போலிஸ்: அவென் பயங்கர கருப்ப இருப்பான் ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்க..
இப்பதிவைக் கூட இத்தருணத்தில் போடுவதா வேண்டாமா என பலமுறை யோசித்தேன். சரி போட்டுவிடுவோம் என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்ற எண்ணம்.
என்ன சார்? ஏதாவது நடக்கும் என்பதற்கா பதிவிடுகிறீர்கள்? :-)
இந்த முரட்டு வைத்தியம் என் தாத்தா கூட சொல்லிக்கொடுத்தார்,ஆதாவது ஜுரம் வந்தால் பச்சை தண்ணீரில் குளிப்பது & தயிர் சாதம் சாப்பிடுவது என்று பல.
16 கிலோ குறைப்பு அதிசியமாகத்தான் இருக்கு.
Correct Cure
These kinds of medicines (walking, cycling etc) are capable of long life for human being, Thanks for DONDU sir for posting such a curable experience on which many muddled people never understand except to make a folly funny comments which of no funny! But it shows they are the person who is of no inclination in tendency of taking the very meaningful way! This is how the wrong notion of socialism and communism came into exited to demise very soon.
இதில் முரட்டு வைத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை;பொதுவாக நமக்கு மற்ற விதயங்களில் இருக்கும் அளவுக்கு மன உறுதி உடற்பயிற்சியைத் தொடர்வதில் இருப்பதில்லை...நான்கு நாள் செய்து விட்டு பின்னர் விட்டு விடுவோம்.
ஊக்கமும் நாளடைவில் குறையும்.அதுதான் காரணம்...
நான் கூட எனது கல்லூரிக் காலத்திலிருந்து சுமார் 15 வருடங்கள் தொடர்ந்த உடற்பயிற்சியை 1 1/2 ஆண்டுகளாக விட்டுவிட்டேன்;அதாவது வேண்டும் என விடவில்லை,அதற்கான ஊக்கம் குறைய எடை 85 கிகி ஆயிற்று..
இப்போது 2 மாதங்களாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.
ஆனால் உடற்பயிற்சியின் தன்னம்பிக்கை தரும் மகிழ்ச்சி அலாதியானது;அதை அனுபவித்தவர்களே அதனை உணர்வார்கள்..
நன்றி லக்கிலுக். ஏற்கனவே நான் உங்களுக்கு கொடுத்த ஆலோசனையை மறுபடி தருகிறேன். அதுதான் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்வது. உடலுக்கு மிகவும் நல்லது. அதை வைத்து ஃபிகர் செட் செய்ய சொன்னது சும்மா வேடிக்கைக்காக சொன்னது. அதை மட்டும் மறந்து விடவும்.
மழையிலும் ஒரு முறை ஐ.டி.பி.எல்-லிலிருந்து வீட்டுக்கு 20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் விட்டிருக்கிறேன். பணம், செல்பேசி, கைக்கடிகாரம் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவரில் வைக்க வேண்டும் அவ்வளவே. மழை நீர் உடலை ஒன்றும் செய்யாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்ன சார்? ஏதாவது நடக்கும் என்பதற்கா பதிவிடுகிறீர்கள்? :-)//
நான் சொல்ல வந்தது வேறு விஷயம். இப்போது மறுபடி இந்த முரட்டு வைத்தியத்தை ஆரம்பிக்காது பதிவை மட்டும் போட்டிருந்தால் வெறுமனே கேலி செய்யப்பட்டிருப்பேன். யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். நானும் பழைய வைத்தியத்தின் பலன்களை இழந்ததில் சற்று அதைரியமாகத்தான் இருந்தேன். இப்போது பதிவை போடுவது இம்முறை வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை வந்ததாலேயே.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பெண்மணி தன் பையனை அழைத்து வந்திருக்கிறார். அவன் ரொம்பவும் இனிப்பு தின்பதாகவும் அவனுக்கு இவர் புத்திமதி கூற வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அவரோ சில நாட்கள் கழித்து வரச்சொல்லி விட்டு அப்பெண்மணியை அனுப்பியுள்ளார்.
பிறகு மறுபடியும் அப்பெண்மணி தன் பையனுடன் வந்தபோது இனிப்பை தவிர்க்கும்படி அவனுக்கு அறிவுறை கூறியுள்ளார். ஏன் முதலிலேயே கூறவில்லை என்று அவரிடம் கேட்டபோது, அப்பெண்மணி முதலில் வந்த சமயம் தானே இனிப்பை விரும்பி உண்டதாகவும், அதை தானே இப்போது நீக்கி விட்டதால் அறிவுறை கூற இயன்றது எனக் கூறினார்.
நான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகமுடியாதுதான். ஆனாலும் அவரை என்னால் இயன்ற அளவு பின்பற்றலாம் அல்லவா? மேலும் இப்போது இந்த நிலையில் பதிவை போட்டு விட்டதால் எப்படியாவது எனது ஈகோவை காப்பாற்றவாவது முரட்டு வைத்தியத்தை தொடர்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வடிவேல் ஜோக் தான் நியாபகம் வருது.
வடிவேல் : எப்படி சார் நான் பில்லா இல்லன்னு கண்டுபிடிசிங்க.
போலிஸ்: அவென் பயங்கர கருப்ப இருப்பான் ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்க..//
நேற்றுத்தான் இந்த காமெடி க்ளிப்பை பார்த்தேன். நன்கு சிரித்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் கூறுவது 100% உண்மை அறிவன் அவர்களே. உடற்பயிற்சியின் பலன்களை தக்க வைத்து கொள்வதுதான் பிரச்சினை. சிலருக்கு எவ்வளவுதான் உணவு உண்டாலும் பருக்காத உடல்வாகு. ஏனெனில் அவர்களது metabolic rate அதிகம். சாப்பிட்டது எல்லாமே சக்தியாக மாறி அவ்வப்போது முழுதாக செலவாகிவிடும். இது பற்றி வேறு பதிவிடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பெண்மணி தன் பையனை அழைத்து வந்திருக்கிறார்//
இதை எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் ஹதீஸ் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். நீங்களோ அல்லது தங்கள் பதிவைப் படிக்கும் இஸ்லாமியர்களோ இதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
//இதை எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் ஹதீஸ் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். நீங்களோ அல்லது தங்கள் பதிவைப் படிக்கும் இஸ்லாமியர்களோ இதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.//
அதாவது முகம்மது நபி அவர்கள் வாழ்வில் நடந்திருப்பதாக என கேட்டிருக்கிறீர்கள். அது உண்மையாகவே இருக்கும் வாய்ப்பு மிக அதிகமே. ஏனெனில் தன் அறிவுறையைத் தானே பின்பற்றவேண்டும் என்று நினைப்பவர்கள் பெரியவர்களே. அவர்களுள் முகம்மது நபி அவர்களும் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?
நண்பர் நல்லடியாரோ சுவனப்பிரியனோ இதற்கு தெளிவான பதில் கூற இயலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு திரு டோண்டு சார். 30 வயதை கடந்த அனைத்து பதிவர்களுக்கும் பயனுள்ள பதிவு.
//அதுதான் டிபனை அடியோடு நிறுத்தியது.//
பொதுவாக காலை சிற்றுணவை தவிர்ப்பது தவறென்று கேள்விப்பட்டிருக்கிறேன்... அதனால் வயிறு சம்பந்தமான உபாதைகள் வருமென கேள்வி..
தங்கள் அனுபவம்?
//அதாவது முகம்மது நபி அவர்கள் வாழ்வில் நடந்திருப்பதாக என கேட்டிருக்கிறீர்கள்//
ஆம், அப்படித்தான் அந்த நண்பர் கூறினார்.
//பொதுவாக காலை சிற்றுணவை தவிர்ப்பது தவறென்று கேள்விப்பட்டிருக்கிறேன்... அதனால் வயிறு சம்பந்தமான உபாதைகள் வருமென கேள்வி..
தங்கள் அனுபவம்?//
அதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அதுகூட முரட்டு வைத்தியமெல்லாம் முடிந்த பிறகுதான் கேள்விப்பட்டேன்.
என்னைப் பொருத்தவரை ஒரு பக்க விளைவும் இல்லை. வயிற்றில் அல்சர் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் சொன்னது பொருந்தும்.
நான் செய்த முறை மெழுகுவர்த்தியை இரு முனைகளிலும் எரிப்பதே. அதாவது உடற்பயிற்சியை செய்து, அதே சமயம் சாப்பாட்டையும் குறைப்பதே. முக்கியமாக நொறுக்கு தீனியை. உதாரணத்துக்கு நமக்கு தினசரி 5000 கலோரிகள் சக்தி தேவைப்பட்டால், 4500 கலோரிகள் மட்டும் எடுத்து கொள்வது. அதாவது 500 கலோரிகள் பற்றாக்குறை வேண்டும். அப்போதுதால் உடல் நம்மிடம் படிந்துள்ள கொழுப்பிலிருந்து மீதி கலோரிகளை எடுக்கும், உடலும் மெலியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்,
ஊக்கம் தரும் பதிவுக்கு நன்றி.
உங்களுக்கு 100 ஆயுசு பாலா அவர்களே. இப்போதுதான் உங்களை பற்றி நினைத்தேன். ஏன் என்று கூற இயலுமா? க்ளூ: இன்று சனிக்கிழமை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திருவல்லிக்கேணி விஜயம், நூலகத்துக்கு, அதானே ? :)
சரியான ஊகம் பாலா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
<== வேகமாக நடக்க வேண்டும் என்று கூறினார். ==>
அப்படி இல்லாங்காட்டி தினசரி ப்ளாக் எழுதனும்னு எதுவும் சொல்லலியா?
<==அன்றைய தினம் ஞாபகத்தில் உள்ளது ==>
இல்லாட்டிதான் ஆச்சரியம்.
<== வீடியோவில் என்னை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ==>
அதாவது உடல் எடை குறையனும்னா முதலில் கல்யாண வீடியோவில் நம்மை நாமே பார்ககணும். அப்படித்தானுங்களே.
இவ்வளவு வேகமா நிறைய பதிவு எழுதறீங்களே.அது என்ன முரட்டு பதிவு வைத்தியமா?
அப்பாடா,நம்மாலும் ஒரு "கும்மி" அடிக்க முடியுது =)
<==
அறிவன் /#11802717200764379909/ said...
இதில் முரட்டு வைத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை; ==>
அதானே.நமக்கு பிடிச்சத முடிஞ்ச அளவுக்கு செய்யப்போறோம்.
//மீதி தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள்.//
இதில் உள்ள sarcasm எனக்கு புரியவில்லை!
//ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பெண்மணி தன் பையனை அழைத்து வந்திருக்கிறார்//
Idhu gandiyin vaalvil nadanthadu allava?
ரவீஷா அவர்ளே,
இதில் என்ன கேலி இருக்கிறது? பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html
மற்றவர்கள் என்னைப் பற்றி மறைமுகமாக கேலி செய்ய என் அப்பன் பெயரை கூறுகிறார்கள். அவர்கள் அறியாமலேயே புண்ணியம் செய்கிறார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Idhu gandiyin vaalvil nadanthadu allava?//
இந்தக் கதை பல மாமனிதர்கள் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது apochryphal வகையைச் சார்ந்தது. அதற்கு ஒரு உதாரணம் ஜார்ஜ் வாஷிங்டன் செர்ரி மரத்தை வெட்டியதாகக் கூறப்படும் கதை.
முக்கிய நீதி என்னவென்றால் தான் பிறருக்கு கூறும் அறிவுறையை தானே கடைபிடிக்க வேண்டும் என்பதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன டோண்டுவாள், சாட்சாத் ஆச்சர்யமா இருக்கு. நல்ல பதிவு எல்லாம் போட ஆரம்பிச்சுட்டேள்.
ரெக்கை கட்டி பறக்குதப்பா டோண்டு ஐயர் சைக்கிளு.
<==
இப்பதிவைக் கூட இத்தருணத்தில் போடுவதா வேண்டாமா என பலமுறை யோசித்தேன். சரி போட்டுவிடுவோம் என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்ற எண்ணம். ==>
ரொம்ப தன்னடக்கம்கிறது இதுதானோ?
சும்மா 100 பின்னூட்டத்துக்குமேல வந்தாலும் அசராம பதிலடி கொடுக்கிற டோண்டு ஐயாவா இது? நமபவே முடியல்லே
<== அதை வைத்து ஃபிகர் செட் செய்ய சொன்னது சும்மா வேடிக்கைக்காக சொன்னது. ==>
எடை குறையறத விட்டுத்தள்ளுங்க.பிகர் எப்படி செட் செய்றதுன்னு ஒரு பதிவு போடுங்க.அப்பாவிங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் =)))
//ரொம்ப தன்னடக்கம்கிறது இதுதானோ?//
அப்படியில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழ் பதிவர்கள் யாரும் நான் சமீபத்தில் 1986-ல் 16 கிலோவுக்கு மேல் எடையை குறைத்தேன் என்றால் நம்பும்படியாக எனது தோற்றம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் எனது சோம்பேறித்தனம்தான். ஆக, நான் முயற்சிகள் மறுபடி ஆரம்பித்து வெற்றியடையலாம் என்னும் நம்பிக்கை வந்தவுடன் பதிவு போடுவதுதான் நலம். இப்போது நிலை சற்று டெலிக்கேட். மறுபடியும் சோம்பேறித்தனம் வரக்கூடாது. ஆகவே எனக்கே நான் ஒரு செக் வைத்தேன். இப்போது நான் சொன்னபடி நடக்காவிட்டால் மிகுந்த கேலிக்குள்ளாக வேண்டியிருக்கும். அது நடக்காமல் பார்த்து கொள்ள ஊக்கமும் வரும்.
Just a small persuasive push towards weight loss.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பிகர் எப்படி செட் செய்றதுன்னு ஒரு பதிவு போடுங்க.அப்பாவிங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் =)))//
செய்யலாம்தான். ஆனா அப்ப எல்லோரும் என்னை அடப்பாவின்னு திட்டுவாங்களே. =)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போ இந்த வெட்டி தற்பெருமை பதிவினால் யாருக்கு என்ன பயன்? மகாத்மா காந்தி என்று நினைப்பா? ஜெர்மன்லயும் ஜப்பானி மொழியிலயும் காசு மட்டும் சுருட்டி பாக்கட்ல போட தெரியுது.
லக்கிலுக்
<===
dondu(#11168674346665545885) said...
//பிகர் எப்படி செட் செய்றதுன்னு ஒரு பதிவு போடுங்க.அப்பாவிங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் =)))//
செய்யலாம்தான். ஆனா அப்ப எல்லோரும் என்னை அடப்பாவின்னு திட்டுவாங்களே. =)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
==>
நீங்கள் எப்படி பதிவிட்டாலும் திட்டப் போறாங்க.அப்புறம் எதுக்கு உங்களூக்கு தயக்கம்?
Post a Comment