2/17/2008

The great Indian novel - 1

சஷி தாரூர் அவர்கள் எழுதிய The great Indian novel என்னும் புத்தகத்தை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலிருந்து சமீபத்தில் 1993-ல் எடுத்து வந்தபோது அதை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் ஒன்றும் இல்லை என்பதுதான் நிஜம். அதே போல அதை படித்து முடித்ததிலிருந்து இன்று வரை அதை மறக்க முடியவில்லை என்பதும் நிஜமே.

The great Indian novel என்ற தலைப்பே மகாபாரதம் என்னும் சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பே. பாரதம் என்பது பாரதக்கதை என்ற பொருளில் உள்ளது. (இடவாகு பெயர் என்று இதை தமிழிலக்கணத்தில் குறிப்பார்கள். சிலப்பதிகாரத்தில் மதுரைக் காதையில் "கூடலூர் துயிலெழுப்ப" என்று வரும். அதாவது கூடலூராகிய மதுரை விழித்து கொண்டது என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் 1962-ல் எனது புதுக்கல்லூரியில் எங்கள் தமிழாசிரியர் அயூப் அவர்கள் குறிப்பிட்டு இதை இடவாகு பெயர் எனவும் குறிப்பிட்டார். நான் குறுக்கிட்டு அதையே இரு பெயரொட்டு பண்புத்தொகையாகவும் கூறலாம் என்பதை நிறுவி அவரிடம் சபாஷ் பெற்றதை தன்னடக்கம் கருதி இங்கு மேலும் விளக்காது விடுகிறேன்).

ஆக, எங்கு விட்டேன்? ஆம் The great Indian novel.

இந்த புத்தகம் நேற்று திருவல்லிக்கேணி கஸ்தூரி சீனிவாசன் நூலகத்தில் மறுபடியும் கிடைக்கப் பெற்றேன். இதைப் பற்றி ஓரிரு பதிவுகளாவது போட்டு எல்லோரையும் டரியல் ஆக்கிவிடுவது என்ற எண்ணத்தில் உள்ளேன்.

மகாபாரதத்தில் இல்லாதது வேறு எந்த நூலிலும் கிடையாது என்பது சிலரது துணிபு. உயர்வு நவிர்ச்சி அணியாக அதைக் கொண்டாலும், அதில் சற்று விஷயம் இருப்பதை மறுக்க இயலாது. அதே தன்மையைத்தான் சஷி தாரூரும் பயன்படுத்தி இந்த நவீனத்தை எழுதியுள்ளார். இந்திய சுதந்திர் போராட்டத்தை மகாபாரதத்தில் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். எனது நண்பர் ஆடுதுறை ரகு அவர்களது பெரியப்பா டி.பி.கிருஷ்ணமாச்சாரி அவர்களது் மாப்பிள்ளை வரதன் அவர்களிடம் இந்த புத்தகத்தை நான் மிகவும் உயர்வாகப் பேசி படிக்க வைத்தேன். இரண்டே நாட்களில் அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "என்ன டோண்டு இம்மாதிரி மகாபாரதத்துக்கு அபசாரம் செய்யும் புத்தகத்தை எனக்கு சிபாரிசு செய்யலாமா" என்று அழாக்குறையாகக் கேட்டார். சஷி தாரூரின் ஆங்கில நடைக்காகவே நான் அதை சிபாரிசு செய்ததாகக் கூற, நடை நன்றாகவே இருப்பதாகவும் ஆனாலும் மகாபாரதத்தை இம்மாதிரி இழிவுபடுத்தியது தனக்கு வருத்தத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன்.

பல இடங்களில் ஆங்கில மூலத்தை அப்படியே தரவேண்டியுள்ளது. முக்கியமாக வார்த்தை விளையாட்டுகளில் வேறு வழியே இல்லைதான். முடிந்த/தேவையான இடங்களில் அவற்றுக்கு சமமான தமிழ் வார்த்தை விளையாட்டுகள் தர எண்ணம் கொண்டுள்ளேன். போதுமான பின்புலன் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். ஆகவே இப்போது புத்தகத்துக்கு வருகிறேன்.

நாவலின் ஆரம்பத்தில் வேத வியாசர் வருகிறார் (கதையில் அவர் V.V.) என்று சுருக்கி அழைக்கப்படுகிறார். இந்த இடத்தில் அவர் ராஜாஜியை உருவகப்படுத்துகிறார் என நினைக்கிறேன்.
இதை நான் சொல்ல என்ன காரணம்? ஏனெனில் சஷி தார்ரூர் இந்த புத்தகத்தை எழுதுவதற்காக ராஜாஜி அவர்களால் எழுதப்பட்ட மகாபாரதத்தை மிகவும் ஆழ்ந்து படித்திருப்பதாகக் கூறியுள்ளார். வேறு காரணங்களும் உண்டு அவை பற்றி வேறு தருணத்தில் தேவையானால் கூறுவேன்.

சஷி தாரூரின் இப்புத்தகத்தின் முதல் சில வரிகளைப் பார்ப்போம்.

They tell me India is an underdeveloped country. They attend seminars, appear on television, even come to see me, creasing their eight-hundred rupee suits and clutching their briefcases, to announce in tones of infinite understanding that India has yet to develop.
முதல் வரியிலேயே கதை ஜிவ்வென்று பறக்க ஆரம்பிக்கிறது. இந்தியா முன்னேற்றமெல்லாம் அடைந்து பிறகு அதற்கப்புறம் வரும் தளர்வையும் அடைந்து விட்டது என வியாசர் கூறுவதை வந்தவர்களால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இது பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்ற ஆவலில் வியாசர் தன் நண்பர் பிரும்மாவிடம் இது பற்றி கூறி தான் சொல்வதை அப்படியே எழுதும் திறன் கொண்ட ஸ்டெனோகிராஃபர் வேண்டுமென்று கேட்க அவர் கணபதி என்னும் தென்னிந்திய ஸ்டெனோவை அனுப்ப, The great Indian novel பிறக்கிறது. மகாபாரதமாகத்தான் ஆரம்பிக்கிறது. ஆனாலும் அதில் உள்ள தெய்வீகத் தன்மைகள் இதில் காணவில்லை. சாதாரண வாசகர்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு தாராளமாக இடமளிக்கப்படுகிறது.

வியாசர் தனது கதையுடனேயே துவங்குகிறார். இவரது தந்தை தீர்த்த யாத்திரை செய்யும் முனிவர் பராசரர். தாய் சத்யவதி. செம்படவர் தலைவனின் மகள். அவளை பராசரர் தன்னுடன் உடல் உறவு கொள்ள அழைக்க அவள் முதலில் தயங்குகிறாள். வீட்டுக்கு வரும் பிராமண அதிதிக்கு சிசுருஷை செய்ய வீட்டு பெண்ணையே அனுப்பி அதில் அப்பெண் கர்ப்பமாவதையும் ஏற்கும் காலமதான் அது. (இது தவறு என்பது இக்கால நடைமுறைப்படி, ஆனால் அக்காலத்தில் அவ்வாறுதான் இருந்தது). ஆனால் சத்தியவதி விஷயத்தில் பராசரர் அவள் வீட்டுக்கு வரவில்லை, வழியிலேயே சத்யவதியைப் பார்த்து அழைக்கிறார். ஆகவே அவள் தயங்குகிறாள். அவள் மீண்டும் கன்னித்தன்மை பெறுவாள் என்பதை பராசரர் உறுதி செய்ய, அவளும் உடன்படுகிறாள். அதனால் பிறந்தவரே வேத வியாசர். பிறகு சத்தியவதி சந்தனுவை மணந்து, கதை வேறு திசையில் பயணிக்கிறது.

சந்தனு சத்தியவதியை பெண் கேட்க, அவள் தந்தை அதற்கு விலையாக அவளுக்கு பிறக்கும் குழந்தையே அரசனாக வேண்டும் என்று கேட்க, தனது மகன் தேவவிரதன் இருக்கும்போது அது செய்ய இயலாது போக, தேவவிரதன் பிரும்மச்சரியத்தை ஏற்று பீஷ்மனாக உருவாதல் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது சஷி தாரூர் பீஷ்மராக யாரை குறிப்பிடுகிறார் என்று பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

இந்த சந்தனு சஷி தாரூரின் கதையில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு சமஸ்தான அதிபதியாக வருகிறார். தனது அரண்மணைக்கு திரும்பி வந்த சந்தனு சோகத்துடன் இருக்க தேவவிரதன் (கதையில் அவர் பெயர் கங்கா தத்தா) தந்தையுடன் கூட சென்றவர்களிடமிருந்து விசாரித்து விஷயமறிந்து கொண்டு சத்தியவதியின் இடத்துக்கே செல்கிறார்.

இது விஷயமாக சஷி தாரூர் எழுதியதின் நேரடி மொழிபெயர்ப்பை இங்கே தருகிறேன்.

"கங்கா தத்தாவும் தனியாக பயணிக்கவில்லை. பிற்காலத்தில் அவர் எப்போதும் அகிம்சைவாதிகள் சூழ இருப்பார். ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். அவருடன் கூட அவருக்காக சௌகரியங்களை தியாகம் செய்த மேட்டுக்குடியினர்தான் செல்வார்கள். வியர்வை நாற்றம் கொண்ட ஏழைகள் அல்ல. ஆனால் இக்கதை நடக்கும் காலத்தில் அவர் மந்திரிகள் புடைசூழ செல்கிறார். எது எப்படியானாலும் அவருக்கு கூட்டம் என்றால் பிடிக்கும். பிற்காலத்தில் இறக்கப் போவதும் ஒரு கூட்டத்தின் முன்னிலையில்தான்".

இப்போது தெரிகிறதா, சஷி தாரூர் பீஷமராக யாரைக் கூறுகிறார் என்று? ஆம், மகாத்மா காந்திதான் அது.

என்ன, மகாபாரதத்தில் பிரிட்டிஷ் அரசு வரவில்லை. ஆனால் இந்த The great Indian novel-ல் அவர்களும் வருகின்றனர். கதையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பயணிக்கிறது.

அடுத்து வரும் பகுதிகள் பின்னால் வரப்போகும் பதிவுகளில். அவற்றில் யாரை யாராக இந்த நாவலில் உருவகப்படுதுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். அதற்கு முன்னால் மீண்டும் ஒரு முறை இந்த நாவலைப் படிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Siva said...

டோண்டு சார், வணக்கம்! உங்க பதிவெல்லாம் கொஞ்ச நாளா படிச்சுட்டு வரேன்! முதல்ல, உங்க blog நல்லா இருக்கு, கிட்டத்தட்ட தினமும் வந்து பாக்கறேன்! (ஆனா பின்னுட்டம்ஸ் இப்போ தான் முதல் முறை பண்ணறேன்). உங்க பதிவுகள்ள இதுவரைக்கும் படிச்சதுல பிடிச்சது தவிர்க்க வேண்டிய நபர்கள் தான்! சரியாத்தான் சொல்லியிருக்கீங்க! நல்ல எதார்த்தமா எழுதறீங்க. நடையும் ஈசியா இருக்கு (obviously). More than that, the way you handle people (?!) like komanams, shows maturity (unga vayasukku indha maturity natural தான்) [இதுக்கு 'தோ! நேத்து தான் பிறந்தேன்'-ன்னு சொல்லிடாதீங்க. அப்பிடீன்னா நான் இன்னும் பொறக்கவே இல்ல.]

இப்போ நான் ராஜாஜியின் மஹாபாரதத்தை நான்காவது முறைய படிச்சுட்டு வரேன். rajshri.com- லயும் வீடியோ பார்த்துட்டு இருக்கேன். நீங்க சொல்ற இந்த புத்தகத்தை நான் படிச்சதில்லை! படிக்கணுமா இல்லையான்னு உங்களோட அடுத்த பதிவை பார்த்துட்டு யோசிக்கறேன்!
Best Wishes,
சிவசங்கரன்.

Anonymous said...

//பல இடங்களில் ஆங்கில மூலத்தை அப்படியே தரவேண்டியுள்ளது. முக்கியமாக வார்த்தை விளையாட்டுகளில் வேறு வழியே இல்லைதான்//

மொழிபெயர்ப்பாளர் டோண்டுவே சொல்லி விட்டால் சரிதான் :-) நல்ல ஆரம்பம். கலக்குங்கள்!

Anonymous said...

சார் டவுசர் கிழிஞ்சி போச்சு.
நிறைய பாத்திரங்கள் இருப்பதால், ரொம்ப குழப்பமாக இருக்கிறது. இன்னும் ஒரு நாலு முறை படிக்கணும் முழுசா புரிவதற்க்கு.

இடவாகு பெயர் சூப்பர், இது மாதிரி ஒவ்வொரு பதிவிலும் ஒரு இலக்கண பாயிண்டுக்கு விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும். பள்ளியில் படிக்காம பெயில் மார்க் வாங்கியவர்களுக்கு உதவும்.

உங்கள் தமிழ் சேவைக்கு நன்றி!

dondu(#11168674346665545885) said...

இப்புத்தகத்தை பற்றி பல பதிவுகள் எழுத இயலும். இருப்பினும் ரொம்ப பேசினால் போர் அடிக்கும். ஆகவே நானே ஒரு கட்டுப்பாடு விதித்து கொள்கிறேன் எனக்கு. இது வரை நடந்த பகுதிகளில் வரும் வார்த்தை விளையாட்டுகள் சிலவற்றை அவை அடங்கியுள்ள பதிவின் பின்னூட்டமாக தர முயற்சிக்கிறேன். உதாரணத்துக்கு பராசரர் மற்றும் சத்தியவதியின் நடுவில் வந்த உறவை விளக்கும் வரிகள்.

சத்தியவதி பராசரரிடம் தனது எதிர்காலத்துக்கான பாதுகாப்புக்கு வழி கேட்கிறாள். அதை சஷி இவ்வாறு எழுதுகிறார்.
//'I have never done this before' she breathed. 'I am still a virgin and my father will be furious if I cease to be one. If you take me, what will become of me? How can I show my face amongst my people again? Who will marry me? Please help me', she added, fluttering her eyelashes to convey that though her flesh was willing, her spirit was not weak enough.//

அதுதான் சஷி தாரூர். The spirit is willing but the flesh is weak என்று எல்லோருகம் சாதாரணமாக குறிப்பிடுவதை அனாயாசமாக தலைகீழாக்குகிறார்.

இன்னொரு உதாரணம் வேத வியாசரின் சொற்களில். வார்த்தை விளையாட்டு இல்லாவிடினும் அருமையான ஆங்கில நடைக்கு உதாரணமாக தருகிறேன்.
//After less than a month of suckling, I was taken away from my mother, who had to begin her journey home. My father had taught her several lessons from the ancient texts, including one or two related to the inscrutabilities of virginity. Upon her return, to quell the rumours in the village, her father had Satyavati examined by the senior midwife. Her hymen was pronounced intact.
Brahmins knew a great deal in those days.//

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//My father had taught her several lessons from the ancient texts, including one or two related to the inscrutabilities of virginity. Upon her return, to quell the rumours in the village, her father had Satyavati examined by the senior midwife. Her hymen was pronounced intact.//

இது என்ன கொடுமை சார். இந்த கதையும் பரிசுத்த ஆவி கும்பலின் கதை மாதிரி இருக்கே.
ஆனாலும் ரொம்ப ரீல் விடறாங்க சார். நம்ம நாட்டு படங்கள், ஹாலிவுட் எல்லாம் இதுகிட்ட தோத்து போச்சு.

இருந்தாலும் இதுக்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும் கொடுக்கலாம். hymen-reconstruction surgery அந்த காலத்திலே செய்திருக்க வேண்டும்.
http://en.wikipedia.org/wiki/Hymenorrhaphy

வால்பையன் said...

ஆகா, விமர்சனமே அனல் பறக்கிறதே!
இந்த புத்தகத்தின் தமிழ் பதிப்பு கிடைகிறதா?

வால்பையன் a

Anonymous said...

Good for people to know.

mathileo said...

அன்புடன், தங்களின் பதிவுகளை தற்போதுதான் காணும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. த்ங்களின் உள்ளார்ந்த அலசல்கள் மிகவும் அருமை.இனி பின்னூட்டங்கள் தொடரும். மேலும் தங்களை அறிமுகம் செய்த ‘கடுகு’ அவர்களுக்கு ந்ன்றி!
மதி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது