8/29/2011

ஜெர்மன் கற்றுக் கொள்ளுங்கள், சந்தோஷமாகவும் இருங்கள் - 18+ க்கு மட்டும்

சந்தோஷமாக இருந்தீர்களா என்னும் கேள்வியை மணப்பெண்ணின் தாய் தன் மகளிடம் முதலிரவுக்கு அடுத்த நாள் வைப்பாள் (சுற்றிலும் புருஷாள் யாரும் இல்லையே என்பதைப் பார்த்துத்தான்). தலைப்பில் நான் சொன்னதன் அர்த்தமும் அதுதான்.

கீழே உள்ள வீடியோவை காலஞ்சென்ற லோரியோட் என்பவர் ஜெர்மன் கற்றுக் கொடுக்க ஏதுவாக தயாரித்தார். மேலும் பல வீடியோக்கள் உள்ளன, ஆனால் ஆங்கில துணைத் தலைப்புகளுடன் இதுதான் எனக்கு கிடைத்தது.



துணை தலைப்புகளின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

அயல் நாட்டவருக்கான ஜெர்மன் மொழி பாடங்கள்

லோரியோட்: நாம் இப்போது அயல் நாட்டவருக்கான ஜெர்மானிய பாடத்தின் தொலை கல்வியளிப்பை தொடர்வோமாக.
நடு லெவல் மாணவருக்கான 8-வது பாடத்தில் நாம் உள்ளோம்.
இதில் வரையற்ற சுட்டிடைச்சொல்லுக்கும் (indefinite article) மற்றும் ஆறாம் வேற்றுமை மறுபெயருக்கும் (possessive pronoun) இடையே உள்ள வேறுபாடுகளை பார்ப்போம். கூடவே நிகழ்கால வினைச்சொல்லின் வெவ்வேறு உருவங்களையும் பயில்வோம்.

டோண்டு ராகவனின் விளக்கம். இப்போது ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பலான காரியத்துக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். பெண் அந்த ஆணின் மனைவி அல்ல, வேறொருவனின் மனைவி. இருவரும் இப்போது பேசுவது மேற்கூறிய விளக்கத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது.

ஆண்: உன் பெயர் என்ன?

பெண்: என் பெயர் ஹைடலோர (Heidelore)

ஆண்: ஹைடலோர என்பது முதல் பெயர்.

பெண்: ஆம். எனது இரண்டாம் பெயர் ஷ்மோல்லெர் (Schmoller). என் கணவரது பெயர் விக்டோர் (Viktor).

ஆண்: என் பெயர் ஹெர்பெர்ட் (Herbert)

லோரியோட்: நிகழ்கால வினைச்சொல் விஷயத்தில் வலிவான மற்றும் வலுவற்ற வினைச்சொற்கள் ஒரே மாதிரி முடிவடையும். இருத்தல் மற்றும் தன்னிடம் வைத்திருத்தல் (to be and to have) ஆகிய இரு துணை வினைச்சொற்கள் விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் எண்களைக் கையாளுவதையும் கவனத்துடன் செய்ய வேண்டும்.

(டோண்டு ராகவனின் விளக்கம்: இங்கு தரப்படும் இலக்கண சம்பந்தமான கலைச்சொற்கள் ஜெர்மன் மொழிக்கே உரியனவாகும். தமிழில் அதற்கு சமமான சொல் எனக்குத் தெரியவில்லை).

பெண்: எங்களிடம் ஒரு மோட்டார் வண்டி உண்டு. என் கணவர் அலுவலகத்துக்கு ரயிலில் செல்கிறார்.

ஆண்: என் வயது 37, எனது எடை 81 கிலோகிராம்.

பெண்: விக்டர் உங்களை விட 5 வயது பெரியவர், மற்றும் அவரது எடை உங்களுடையதை விட ஒரு கிலோ அதிகம். அவரது ரயில் காலை 07.36 மணிக்கு புறப்படுகிறது.

ஆண்: எனது மாமாவின் எடை 79 கிலோ. அவரது வண்டி 06.45-க்கு புறப்படுகிறது.

பெண்: எனது கணவர் சம்பளத்துக்கு ஓரிடத்தில் முழு நேர வேலை செய்கிறார். அவரது வேலை மாலை 5.30 மணிக்கு முடிவடைகிறது.

ஆண்: எனக்கு மூன்று அத்தை பெண்கள் உண்டு. அவர்களது மொத்த எடை 234 கிலோ.

லோரியோட்: அன்பான பார்வையாளர்களே, இப்போது வினைச்சொற்களை வைத்து நாம் “இப்படி இருந்தால் இது நடக்கும்” என்னும் ரேஞ்சில் வாக்கியங்கள மைப்பதை பார்ப்போம் (subjunctive mood). கூடவே இது வரை கற்றதையும் மீண்டும் பயிற்சி செய்வோம்.

பெண்: விக்டோரிடம் மட்டும் மாதாந்திர சீசன் டிக்கெட் இருந்திருந்தால் அவர் மாலை 6.45-க்கே வந்திருப்பார்.

ஆண்: எனக்கு மட்டும் நான்கு அத்தை பெண்கள் இருந்திருந்தால் அவர்களது மொத்த எடை 312-ஆக இருந்திருக்கும்.

அச்சமயம் இரண்டாவது ஆண் உள்ளே வருகிறான்.

இரண்டாவது ஆண்: என் பெயர் விக்டோர், எனது எடை 82 கிலோ.

முதலாம் ஆண்: என் பெயர் ஹெர்பெர்ட். எனது வண்டி மாலை 07.25-க்கு புறப்படுகிறது.

பெண்: அவர்தான் என் கணவர்.

முதலாம் ஆண்: அங்கு கழட்டி வைத்திருப்பது எனது டிரவுசர்கள்.

இரண்டாம் ஆண்: என் கையில் நான் பையை வைத்திருக்கிறேன்

லோரியோட்: இன்றைக்கு இவ்வளவுதான் பாடம். ஒன்றை மறக்காதீர்கள், ஒற்றை சப்த பெண்பால் பெயர் சொற்கள் மிக மென்மையாகவே திரிக்கப்படும்


இங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இலக்கண விதிகளை மறத்தல் அரிது.

அன்புடன்,
டோண்டு ராகவன்






தும்மல் சம்பந்தமாக தும்மித் தும்மியவாறு ஒரு பதிவு

திருக்குறள் பற்றிய எனது இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்:
ஊடல் பற்றிய அதிகாரங்களில் வரும் தலைவியிடம் தலைவன் படும்பாடு இருக்கிறதே, அதைச் சொல்ல வேண்டும்.

திடீரென தலைவன் தும்ம தலைவி தன்னையறியாது "நீடூழி வாழி" என்று வாழ்த்துகிறாள். திடீரென நினைத்து கொண்டு "எந்தச் சிறுக்கி உன்னை நினைத்தாள்? இவ்வாறு திடீரென ஏன் தும்மினாய்" எனக் கேட்டு டார்ச்சர் செய்கிறாள்.
"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தும்மலை அடக்கினால் "யாரை என்னிடமிருந்து மறைக்கிறாய்"? என்ற கேள்வி அம்பாக வருகிறது.
"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

அவள் அழகையே கூர்ந்து பார்த்தால் கூறுகிறாள் வேறு எந்த பொம்பளையோட என்னை ஒப்பிடுகிறீர் என்று
"நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினர் என்று


இப்பதிவு மேலே உள்ள வரிகளிலிருந்து தும்மலை மட்டும் எடுத்துக் கொள்கிறது. தும்மினால் நீடூழி வாழி எனக்கூறுவது தமிழகத்துக்கு மட்டும் உரித்ததன்று. எல்லா கலாச்சாரங்களிலும் உண்டு என்பதை அறிகிறேன். ஜெர்மனியில் தும்மினால் Gesundheit என்பார்கள், ஆரோகியமாக இரும் என்பது அதன் பொருள். பிரெஞ்சுக்காரர்களோ santé எனக்கூறுவார்கள், அதே பொருள்தான் அங்கும்.

ஒற்றைத் தும்மல் அபசகுனம், இரட்டைத் தும்மல் நல்ல சகுனம் எனக் கூறுவோரும் உளர். திருமணத்தில் தாலி கட்டும்போதும் சரி, மற்ற மங்கள தருணங்களிலும் சரி, கெட்டி மேளாம் கெட்டி மேளம் எனக் கத்தி மேள, நாதஸ்வர சத்தத்தை அதிகரிப்பதன் ஒரு முக்கிய நோக்கமே யாராவது அச்சமயத்தில் (வேண்டுமென்றே) தும்மினால் அத்தும்மல் காதில் விழாதிருக்கும் பொருட்டே, என எனது தமக்கையாரின் மாமனார் காலம் சென்ற புருஷோத்தமாச்சாரியார் என்னிடம் தும்மிக் கொண்டே கூறியுள்ளார்.

எனது பெரியப்பாவின் மூத்த மாப்பிள்ளை கையில் காப்பி கொடுத்தவுடனேயே அதன் வாசனை அவருக்கு அடுக்கடுக்காக தும்மலை வரவழைத்து விடும். பூனை அலர்ஜி உள்ளவர்களது அடையாளமே அவர்கள் பூனை அருகாமையில் போடும் அடுக்குத் தும்மல்களே. சிலருக்கு பூக்களின் மகரந்தத் துகள்கள் தும்மல்களை வரவழைக்கும்.

அது சரி, இச்சமயம் திடீரென ஏன் இப்பதிவு என தும்மிக் கொண்டே கேட்கிறான் முரளி மனோகர். அதாகப்பட்டது, அக்சூ என்னும் தலைப்பில் வந்த இந்த ஜெர்மானிய இடுகைதான் எனது இப்பதிவுக்கு காரணம்.

இப்பதிவர் சூரியனை நேரில் பார்த்தாலே தும்ம ஆரம்பித்து விடுவாராம். அவர் எழுதுகிறார், Es heißt sinnigerweise ACHOO syndrome (dt: „Hatschi-Syndrom“), das Akronym steht für Autosomal Dominant Compelling Helio-Ophthalmic Outbursts of Sneezing. Ich kann mir richtig vorstellen, wie die (amerikanischen?) Wissenschaftler in feuchtfröhlicher Runde zusammensaßen und so lange tüftelten, bis sie beim fünften Bier tatsächlich jedem Buchstaben von Achoo ein sinnvolles Wort zugeordnet hatten. Auf Deutsch heißt das Phänomen übrigens ganz trocken „Photischer Niesreflex“.

இந்த ACHOO-வுக்காக பல நிபுணர்கள் ரூம் போட்டு யோசித்து Autosomal Dominant Compelling Helio-Ophthalmic Outbursts என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் என அவர் கிண்டலுடன் கூறுகிறார். தான் குழந்தையாக இருக்கும்போது உலகத்தில் எல்லோருக்குமே அப்படித்தான் என அவர் நினைத்திருந்தாராம். பிறகுதான் அப்படியெல்லாம் இல்லை என விஷயம் தெரிந்ததாம்.

இது எப்படி வந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் இது பரம்பரையாக தொடரும் நிலை என்றும் கூறும் அவர், தனது இரு பையன்களில் மூத்தவனுக்கும் இது இருக்கிறது ஆனால் இளையவனிடம் இன்னும் அதை பார்க்கவில்லை என்று கூறுகிறார். அதற்குள் அவர் கணவர் இளையவனுக்கும் அது இருப்பதை தான் கண்டுணர்ந்ததாகக் கூறினார் என்பதையும் சேர்க்கிறார்.

சமீபத்தில் 1976-ல் வந்த மன்மத லீலை என்னும் படத்தில், கமலஹாசனின் மாமனார் ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு அவர் வீட்டு சமையல்காரியுடன் சினேகம் என்றும், அவர் ஒரு காரியம் செய்யலாமா எனக் கேட்கும்போது சமையற்காரி ஒரு தும்மல் போட்டால் செய்ய வேண்டாம் என்றும், இரட்டைத் தும்மல் போட்டால் செய்யலாம் என்றும் பொருள் என படத்தில் காட்டியிருப்பார்கள். படத்தில் ஓரிடத்தில் மகேந்திரனின் கழுத்தை நெறிக்க அவர் முயலும்போது, சமையற்காரி ஒற்றைத் தும்மல் போட அவர் நிராசையுடன் முயற்சியை கைவிடுகிறார். அதனால் மகேந்திரன் ஓவராக மகிழ்ச்சியடைய, சமையற்காரி இரட்டைத் தும்மல் போட, கழுத்து நெறிப்பு குதூகலத்துடன் தொடர்கிறது.

இதற்கு மேல் எழுதினால் கழுத்தை நெறிப்பதாக முரளிமனோகர் கூறுவதால் இத்துடனேயே நிப்பாட்டிக்கிறேன்.

தும்மலுடன்,
டோண்டு ராகவன்



8/28/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.08.2011

சபாஷ் மேனேஜர்
கணினிமயமாக்கப்படும் முன்னால் ஆலந்தூர் மாநகராட்சியினர் கையால் எழுதித்தான் ரசீதுகள் தந்து வந்தனர். அப்போதெல்லாம் வரி செலுத்தும்போது பழைய ரசீதை காண்பிக்க வேண்டும். நான் 2001-ல் சென்னைக்கு வந்த புதிதில் தண்ணீரை பொருத்தவரை என்னால் 1999-க்கான ரசீதை மட்டுமே காட்ட முடிந்தது. எல்லா வரிகளையும் கட்டியிருந்தாலும், 1999-லிருந்து கணக்கிட்டு அதிக தொகை செலுத்த வேண்டியிருந்தது.

கணினிமயமாக்கப்பட்டதில் இந்தப் பிரச்சினை ஒழிந்தது. அசெஸ்மெண்ட் என்ணைக் உள்ளிட்டாலே கணினியானது வரிசெலுத்திய முழுவிவரங்களையும் தரும்.

ஆனால் பிரச்சினை வேறு ரூபத்தில் வந்தது. எனது சொத்துவரி, பாதாள சாக்கடை வரிக்கான பக்கங்களில் எனது சரியான முகவரி கொடுக்கப்பட்டிருந்தாலும், தண்ணீர் வரி விஷயத்தில் மட்டும் சம்பந்தமேயில்லாத வேறு ஒரு முகவரி காணப்பட்டது. வருடத்துக்கு ஒருமுறை வரி செலுத்தும் நானும் முதல் சில முறைகள் இதை கவனிக்கவில்லை. பிறகு கவனித்து கேட்டால், கணினியில் டேட்டா எண்ட்ரி செய்தபோது தவறாக குறித்து விட்டார்கள் எனக் கூறப்பட்டது.

அதை சரி செய்ய நான் ஆலந்தூர் நகராட்சிக்கு இம்மாத துவக்கத்தில் சான்றுகளுடன் சென்றேன். என்னிடம் பேப்பர்களை வாங்கிய க்ளெர்க்கும் எல்லாம் சரி செய்யப்படும் என்று உறுதி கூறினார். ஆனால் பத்து நாட்கள் ஆகியும் ஒன்றும் செய்யப்படவில்லை. மீண்டும் நகராட்சிக்கு போய் பார்த்தால் அந்த க்ளெர்க் வேறு இடத்திற்கு மாற்றல் பெற்று சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. மேனேஜரை பார்த்தால், அவரோ சம்பந்தப்பட்ட புது க்ளெர்க்கை பார்க்கச் சொன்னார். அப்பெண்மணியோ தனக்கு இன்னும் பேப்பர்கள் தரப்படவில்லை என சாதித்தார். மீண்டும் மேனேஜர்.

இப்போது மேனேஜர் செய்ததுதான் நான் மிகவும் எதிர்பாராதது. அப்பெண்மணியைக் கூப்பிட்டு, என் கைவசம் இருந்த எனது நகல்களை பெற்று, கணினி அறைக்கு சென்று அப்போதே தேவையான மாறுதல்களை செய்யச் சொன்னார். அவரும் செய்து விட்டார். மேனேஜருக்கு நன்றி கூறினேன். அவரோ, இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. வரி செலுத்துபவர்களையெல்லாம் தேவையில்லாமல் அலையவிடக்கூடாது என்று தான் எண்ணியதாலேயே அதை செய்யச் சொன்னதாகக் கூறினார்.

சபாஷ் மேனேஜர்.


Form 26 AS பிரச்சினைகள்
Tax deducted at source (TDS) சார்பாக நமக்கு வரும் தொகைகளிலிருந்து வாடிக்கையாளர் பிடித்தம் என்னவோ செய்து விடுகிறார்கள். ஆனால் படிவம் 16-A தருவதற்கு மட்டும் மிகவும் பிகு செய்து கொள்வார்கள். ஜூலை-31-க்குள் அதை பெறுவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

எனது வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் எனக்கு படிவம் 16 ஏ தரும்போது Form 26 AS பற்றி கூறினார், நான் அதற்கான பதிவுகள் செய்து கொண்டால் இம்மாதிரி படிவம் 16 ஏ பெற அலைய வேண்டாம் எனக் கூறினார்.

நானும் அதையெல்லாம் செய்து கொண்டு பார்த்தால், வங்கி எனக்கு தந்த படிவம் 16-ஏ-கூறுவதற்கும் படிவம் 26 ஏஎஸ் கூறுவதற்கும் சம்பந்தமே இல்லை என தெரிய வந்தது. வங்கியில் efiling செய்யும்போது சொதப்பியுள்ளனர். இப்போது நான் அதை சரி செய்ய விண்ணப்பம் தந்து வங்கியை படுத்தி வருகிறேன். போயும் போயும் இந்த பெரிசிடம் போய் படிவம் 26 ஏஎஸ் பற்றி கூறினோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டிருப்பார் அந்த அதிகாரி என நினைக்கிறேன்.

ஜனலோக்பால் குறித்த சிந்தனைகள்
இது பற்றி பலரும் எழுதி வைத்து விட்டார்கள். நான் முக்கியமாக படிப்பது சோ மற்றும் ஜெயமோகனையும்தான். இருவரது நிலைப்பாடுகளுமே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இருவரது எண்ணங்களுமே அவற்றைப் படிக்கும்போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளன. மேலும் இன்புட்டுகளை பெற்றுதான் நான் கருத்து கூற வேண்டும். இப்போது நிலைமையை அவதானித்து வருகிறேன். பார்ப்போம்.

பேரறிவாளன், சாந்தன், முருகன்
நான் இப்பதிவில் கூறியதற்கு தொடர்ச்சி.

ஜெயமோகன் கூறியது போல, “இந்திய நீதித்துறையின் உயர் மட்டத்தில் நீதிபதிகள் அடிப்படைநேர்மையுடனும் நீதிபதி என்ற இடம் குறித்த பெருமிதத்துடனும்தான் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தைய பல வழக்குகளை அதற்கு உதாரணமாக கூறலாம். திருப்பூர் சாயக்கழிவு வழக்கு முதல் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை கோடிகளைக் கொட்டத் தயாராக இருக்கும் குற்றவாளிகளால் நீதிபதிகளை நெருங்கவே முடியவில்லை என்பதே அதற்குச் சான்று. இன்றும் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியப் போக்கையும் அரசியல்வாதிகளின் ஆணவத்தையும் கட்டுப்படுத்தும் சக்தியாக நம் நீதிமன்றங்கள் இருப்பது எத்தனையோ வழக்குகள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதித்துறை இன்றைய ஊழல்மிக்க இந்தியாவின் பெருமிதம் மிக்க முகங்களில் ஒன்றுதான்.

ஆகவே எனக்கு இந்திய நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை உண்டு. இந்திய நீதித்துறையின் உச்சிவரைச் சென்ற ஒரு வழக்கில் அநீதி இழைக்கப்பட்டிருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதிலும் சர்வதேசக் கவனம் பெறும் வழக்குகளில் அந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடையாது. போதிய ஆதாரங்களை கொடுக்காமல் நீதிமன்றத்திலிருந்து ஒருவரை அரசால் தப்பவைக்கமுடியும், ஆனால் ஒரு நிரபராதியை அப்படி எளிதாக தண்டிக்கச் செய்யமுடியாது.

ஒரு குறிப்பிட்ட இன-மொழி-சமூகக் குழுவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்படும்போது, அது எவ்வளவு பெரிய சமூகக் குற்றமாக இருந்தாலும், அதை உணர்வுபூர்வமான ஒரு விஷயமாக அந்த குழுவினர் எடுத்துக்கொண்டு இந்திய நீதித்துறைக்குக் களங்கம் கற்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்சல் குரு போன்று பாராளுமன்றத் தாக்குதலில் எளிய மக்களை கொன்று குவித்த தேசவிரோதச் சதிகாரர்களைக்கூட உச்சநீதிமன்றம் வரை எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசு தண்டிக்க தயங்குகிறது. காரணம் அது இங்கே மதப்பிரச்சினையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இந்தப் போக்கு மிகமிக ஆபத்தானது. காலப்போக்கில் நீதிநடைமுறைப்படுத்தப்படுவதையே இல்லாமலாக்கும். நீதி நிகழும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் இருந்து அழிக்கும். ஆகவே இம்மூவரும் நிரபராதிகள் என்றும் நீதிமன்றம் இந்திய அரசின் கைப்பாவையாக அநீதியில் ஈடுபட்டுள்ளது என்றும், வடவர் தமிழரைக் கொல்கிறார்கள் என்றும் இன்று செய்யப்படும் பிரச்சாரம் மிகப்பிழையானது. இந்த காலியான உணர்ச்சி வேகம் நடைமுறையில் இன்று மரண முனையில் நிற்கும் இம்மூவருக்கும்கூட பெரும் தீங்கு செய்யக்கூடியது.

ஆகவே ராஜீவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இங்கே எழுப்பபடும் நீதிமன்றம் மீதான அவதூறும் சரி, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிரிவினைவாதக் கசப்புகளை உருவாக்கும் குறுகிய அரசியல்முயற்சிகளும் சரி, அதை ஒட்டி உருவாகும் மனக்கொந்தளிப்புகளும் சரி என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவையே”
.

ஆனால் அதற்காக அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக அவர் கூறும் காரணங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எதிர்வினையாக நண்பர் ராஜன் முன்வைக்கும் கருத்துகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே, “இளம் வயதில் செய்து விட்டது. ஆகவே தவறிழைத்தவர்களாகக் கருதப் பட வேண்டும் என்ற அதே நியாயத்தையே நாளைக்கு இவர்களையெல்லாம் விட இள வயதில் பலரையும் கொன்ற கசாப்பும் வைக்கக் கூடும் அல்லவா? மனிதாபிமானத்தில் இதைச் சொல்லலாம் சட்டப் படி இதை சொல்ல முடியாது. இன்று இந்த அடிப்படையில் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால் நாளைக்கே இதே அடிப்படையில் கசாபுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். இப்படியே நீட்டித்தால் யாருக்கும் மரண தண்டனை என்றே வழங்கி விட முடியாது. நன்கு வளர்ந்த கல்மாடி கூட எனக்கு அல்சைமர் ஆகவே நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார். ஆக இளம் வயதில் செய்தவர்களுக்கு எல்லாம் தவறிழைத்தவர்கள் நியாயமும் முதிய வயதில் செய்பவர்களுக்கு எல்லாம் ஞாபக மறதி நோயையைக் காரணம் காட்டியும் மன்னிப்பு வழங்கி விடலாம் என்ற கோரிக்கை பின்னாளில் வலுவாகி விடும்.

அடுத்ததாகச் சொல்லப் படுவது இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் இன்றும் வலுவோடு இயங்கி வருகின்றன ஆகவே அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் மன்னிப்பு வழங்க முடியாது ஆனால் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது ஆகவே இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் ஏதும் அபாயம் இருக்க முடியாது என்பது. இதை நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் தமிழ் நாட்டிலும் இணையத்திலும் வெளிநாடுகளிலும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போராடும் எவரும் அவ்வாறு பேசவில்லையே. புலிகள் இயக்கம் மீண்டும் முன்னெப்பொழுதையும் விட வலுவாக மீண்டும் எழும் அது தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கும் என்றுதானே வை கோபாலசாமி, சீமான் இவர்களுக்கு ஆதரவாகச் அயல்நாடுகளில் செயல்பட்டு வருபவர்கள் வரை மேடைக்கு மேடை இந்திய ஒருமைப்பாடுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இன்று இவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்கா விட்டால் நாளைக்கு இந்திய வரை படத்திலேயே தமிழ் நாடு இருக்காது என்றெல்லவா மிரட்டல் விடுக்கிறார்கள். ஆக இவர்கள் ஈடுபட்ட வன்முறை இயக்கம் அழிந்து விட்டது நாளைக்கு மீண்டும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக எழாது என்பதற்கான எந்தவொரு அறிகுறியையும் இவர்கள் எவரது நடவடிக்கையிலும் நான் காணவில்லையே. இந்த சூழலில் எப்படி இந்த அமைப்பே அழிந்து வரலாற்றின் பக்கங்களில் ஒன்றாக ஆகிப் போனதாக உறுதியாகச் சொல்கிறீர்கள்? அதை அவர்களில் எவருமே சொல்லவில்லையே? மாறாக இந்த இயக்கம் இன்னும் பெரிய இயக்கமாக மாறும் என்றுதானே சொல்லி வருகிறார்கள்? அழிந்து விட்டது இனி இவர்களால் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை நீங்கள் சொல்வதை விட இவர்களுக்கு மன்னிப்பு கேட்ப்பவர்கள் அல்லவா உறுதியாகச் சொல்ல வேண்டும். அவ்வாறான ஒரு உறுதி மொழியையும் இது வரையும் அவர்கள் தரப்பில் இருந்து நான் கேட்க்கவில்லையே. ஆகவே இந்தக் கருதுகோளையும் ஏற்றுக் கொள்ள என்னால் இயலவில்லை.

மரண தண்டனை என்பது வருத்தத்திற்குரியதுதான். இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாமா மன்னிக்கலாமா என்பதை ராஜீவுடன் தேவையில்லாமல் உயிரிழக்க நேர்ந்த மக்களின் குடும்பங்கள் முடிவு செய்யட்டும். இளம் வயதில் செய்த தவறு என்பதை ஏற்றுக் கொண்டால் அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இயக்கம் அழிந்து விட்டது ஆகவே அபாயம் இல்லை என்பதை உறுதி செய்யும் வண்ணம் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்களின் நடவடிக்கை இல்லை. ஆகவே இதற்கு ஒரே வழி பாதிக்கப் பட்டவர்களிடம் கேட்ப்பது மட்டுமே. அதற்கு சட்டத்தில் இடமிருக்காது. கசாப்பையும், அப்சல் குருவையும் சிறையில் நீண்ட காலம் வைப்பது இந்தியர்களின் பாதுகாப்புக்குப் பெருத்த அச்சுறுத்தலாகவே முடியும். நாளைக்கு ஒரு விமானக் கடத்திலிலோ இன்னும் பல பயங்கரவாத தாக்குதல்களிலும் மிரட்டல்களிலும் கொண்டு போய்ச் சேர்க்கும். ஜெயலலிதா இன்று தமிழர்கள் என்பதினால் இன ரீதியாக மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் நாளைக்கே இன்னும் ஒரு முதல்வரிடம் மத ரீதியாக மன்னிப்பு வழங்கச் சொல்லும் கோரிக்கையும் எழும் அதுவும் ஒரு தவறான முன்னுதாரணத்தையே ஏற்படுத்தும்”
.

மீண்டும் டோண்டு ராகவன். நகலெடுத்து ஒட்டினாலும் அவையும் என் கருத்துக்களுடன் ஒத்துப் போவதாலேயே அவ்வாறு செய்துள்ளேன். அது சரி, கசாப்பையும் அஃப்சல் குருவையும் எப்போது தூக்கிலிடப் போகிறார்களாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/25/2011

டோண்டு பதில்கள் - 25.08.2011

pt has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 18.08.2011":

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. ஊழல் புரிந்தவர்களுக்கும் திகார்; அதை எதிர்ப்பவர்களுக்கும் திகாரா?
பதில்: ஊழலை நிறுவனப்படுத்திய இப்போதைய ஆட்சியாளர்கள் பார்வையில் அன்னா ஹசாரே குற்றவாளிதானே.

கேள்வி-2. திராவிடக் கட்சிகளுடனான கூட்டணிக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: ராமதாஸ்
பதில்: யாரிடம் மன்னிப்பு கேட்கிறார்? ஒரு வேளை மகனிடமா? அதாகப்பட்டது,
“மகனே உனக்கு ராஜ்யசபை உறுப்பினர்/மந்திரி பதவி வாங்கி தராததற்கான மன்னிப்பு கேட்கிறேன்” என்பதாக இது இருக்குமோ?

கேள்வி-3. முதல்வருடன் சேர்ந்து நிற்போம்: வைகோ
பதில்: கொஞ்ச நாட்கள் கழித்து சேர்ந்து நிற்போம் என்பது சோர்ந்து நிற்பதாக ஆகாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-4. ஊழலை ஒழிக்க மந்திரக்கோல் எதுவும் இல்லை: பிரதமர்
பதில்: ஊழலை ஒழிக்க எந்த முயற்சியுமே செய்யாமல் இருப்பவருக்கு இந்தப் பேச்சும் ஒரு கேடா?

கேள்வி-5. வெளிநாட்டவர் பணிபுரிய சிங்கப்பூரில் கடுமையான விதிமுறைகள்
பதில்: ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் நம் நாட்டில் பங்களாதேஷியினர் பிரச்சினை செய்வது போல அங்கும் வருமே?

கேள்வி-6. DO YOU THINK ANNA HAZARE'S ANTI-GRAFT CRUSADE WILL BE RESOLVED SATISFACTORILY?
பதில்: ஆம் என்று இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது, ஆனால் அவ்வாறு ஆக அரசியல்வாதிகள் விட்டுவிடுவார்களா?

கேள்வி-7. DO YOU SEE GOLD PRICES HEADING FOR A CORRECTION IN NEAR FUTURE?
பதில்: தங்கம் விலை உயர்ந்தது உயர்ந்ததுதான். குறைய வாய்ப்பே இல்லை.

கேள்வி-8. AFTER RATING DOWNGRADE, IS THE US NOW LOOKING FOR AN OVERNIGHT MIRACLE?
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அமெரிக்கா இருக்கிறது. அதன் நம்பிக்கைகளுள் இதுவும் ஒன்று.

கேள்வி-9. SHOULD ALL POLITICAL PARTIES CLARIFY THEIR STAND ON JAN LOKPAL BILL?
பதில்: 6-ஆம் கேள்விக்கான பதில்தான் இங்கும்.

கேள்வி-10. IS THE EUROZONE DEBT CRISIS A BIGGER WORRY THAN US?
பதில்: ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை அவை.


ரமணா
கேள்வி-11. ஊழல் எதிர்ப்பு வலுக்கிறதே நாடு முழுவதும் என்னவாகும்?
பதில்: நல்லதே நடக்கும் என எண்ணுவதைவிட நாம் வேறென்ன செய்ய முடியும்?

கேள்வி-12. கபில் சிபில் அவர்களின் சமீபத்திய பேட்டிகள் பற்றி?
பதில்: அவர் யாருக்கெல்லாம் ஆதரவாக நின்று பேட்டிகள் கொடுத்தாரோ, அவர்கள் எல்லாம் சந்தியில் நிற்கிறார்கள், உதாரணம் ராசா.

கேள்வி-13. அதிமுக தலைவியின் திடீர் குற்றச்சாட்டு மத்திய அரசு மீது சரியா?
பதில்: மத்திய அரசு குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டதல்ல.

கேள்வி-14. காங்கிரசின் அதிரடி தலைவர் இளங்கோவனின் அதிரடி சமீபத்திய பேச்சுகள்?
பதில்: சோனியா முறைத்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகிறவர்தானே அவர்?

கேள்வி-15. ரசிகனால் கட்டபட்டுள்ள எம்ஜிஆரின் கோவில் பற்றி?
பதில்: வடிக்கட்டிய முட்டாள்தனம்.

கேள்வி-16. லாரி ஸ்டிரைக் வாபஸ் யாருக்கு வெற்றி?
பதில்: பயனர்களுக்கு.

கேள்வி-17. இளங்கலை படிப்புக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு சரியா?
பதில்: சரி இல்லை.

கேள்வி-18. தமிழ் புத்தாண்டு மாற்றம் பற்றிய கருணாநிதி கருத்து சொல்லும் போது ?
பதில்: இந்துக்களின் நம்பிக்கையில் கை வைப்பதற்கு இவர் யார்? கோவில்களுக்கு வேறு ஆணையிடுகின்றனர், ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு பூஜைகள் செய்யக் கூடாது என்று.

இந்துக்களை திருடர்கள் எனக்கூறிய இவர் இந்து மதத்தில் இருக்க வேண்டும் என யார் அழுதார்கள்?

கேள்வி-19. செப்டம்ர் 15ல் இலவச மழை போலுள்ளதே?
பதில்: யார் வீட்டு துட்டை யார் இலவசமாக தருவது? இது கண்டிக்கத் தக்கது.

கேள்வி-20. கருணாநிதிகட்டிய புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவ மனையாக்கும் ஜெ. யின் திடீர் முடிவு எப்படி?
பதில்:மருத்துவமனை என்றால் அதன் முன்வரைவிலேயே அதற்கான சாத்தியக்கூறுகளை மனதில் வைத்து கட்டுமானம் செய்திருக்க வேண்டும். பொறியாளனாகிய எனக்கு இது சரி வருமா என்பதில் ஐயம் உண்டு. வேறு ஏதாவது அரசு அலுவலகங்களை அமைத்திருக்கலாம்.

thenkasi has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 18.08.2011":
கேள்வி-21. இந்தப் பாடல் வரிகளுக்கு நிகழ்கால அரசியல்/பொருளாதார‌ சூழ்நிலையின் அடிப்படையில்டோண்டு அவர்களின் விளக்கம் என்ன?
“மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்” 
பதில்: ராமதாஸ் மற்றும் கலைஞரை வைத்து காமெடி கீமெடி ஏதும் செய்யலைதானே?


மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/23/2011

திமுக அரசின் கோமாளித்தனமான ஆணை ரத்தானது மனதுக்கு நிறைவைத் தருகிறது

இனி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

இனி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆண்டு தோறும் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின் பொழுது தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதை ரத்து செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எனவே வழக்கம்போல் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இச்செய்தி எனது மனதுக்கு நிறைவைத் தருகிறது. புலவர்களை கேட்டுத்தான் தான் அம்மாதிரி செய்ததாக கருணாநிதி அவர்கள் இப்போது முனகி வருகிறார்.
எனது இப்பதிவில் குறிப்பிட்டது போல, “தமிழ்ப்புத்தாண்டு அதனுடைய சரியான தினத்துக்கு வைக்கப்படுமா? இந்துக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட கலைஞர் தோற்றதற்கு நான் மகிழ்வது இந்த விஷயத்துக்காகவும்தான்”, என நான் அப்போது வைத்த கேள்விக்கு ஜெயலலிதா அவர்கள் சரியான பதிலை தந்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

அன்புடன்,

டோண்டு ராகவன்

8/20/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.08.2011

மீண்டும் மகரநெடுங்குழைகாதன்
தமிழ்பதிவுலகில் குறுக்கெழுத்துப் போட்டி வைத்தால், கொடுக்கப்படும் பல சமிக்ஞைகளில் மிகச் சுலபமானது “மகரநெடுங்குழைகாதனின் பக்தர் (மூன்றெழுத்து) என்பதாகும். எல்லோரும் சுலபமாகவே “டோண்டு” என்னும் விடையை அதற்கான கட்டங்களில் பூர்த்தி செய்து விடுவார்கள்.

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை தரிசித்து விட்டு நேற்றுதான் சென்னை திரும்பினேன்.

2005-ல் அவனை முதன்முதலாக தரிசித்த பிறகு மீண்டும் ஒரு முறை சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்றாலும், அச்சமயம் நாங்கள் கோவிலை அடையும் தருணம் நடை சாத்தும் நேரம். அவசர அவசரமாக ஓடிச் சென்று தரிசிக்கவும், திரை போடவும் சரியாக இருந்தது. என் மனம் மிகச் சஞ்சலம் கொண்டது. அடுத்த நாளைக்கு வர இயலாத அளவு வேறு நிகழ்வுகள்.

ஆகவே இம்முறை நான் மிகப்பிடிவாதமாக முதலிலேயே கூறிவிட்டேன், அவன் ஆலயம்தான் முதல் பிரையாரிட்டி என்று. அதே போல தரிசிக்கவும் முடிந்தது. இப்போதுதான் மனம் அமைதி கொண்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று (16.08.2011) காலை 9.30 மணியளவில் எனது காரில் புறப்பாடு. மாலை நாலரை மணியளவில் மதுரை. ஷட்டகர் வீட்டுக்கு செல்லும் முன்னால் போகும் வழியிலே ஒத்தக்கடை நரசிம்மர், கள்ளழக்ர் ஆலய தரிசனம். அடுத்த நாள் காலை மதுரையிலேயே கூடலழகர் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில். பிறகு 11 மணியளவில் கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டது. மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி. ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு, அங்கிருந்து நவதிருப்பதிகளுக்காக புறப்பாடு. முதலில் ரெட்டைத் திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன், திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி தரிசனங்கள். பாக்கியிருந்தவை ஸ்ரீவைகுண்டம், நத்தம் மற்றும் திருப்புளிங்குடி. ஆனால் அப்போது (மாலை 6 மணியளவில்) திடீரென பெய்த பேய்மழையில் மின்சாரம் அந்த ஏரியா முழுக்க கட். ஆகவே திருநெல்வேலிக்கே திரும்பினோம்.

வியாழன்று காலைக்கு விட்டுப்போன அந்த 3 கோவில்களுக்கும் சென்று திரும்பினோம். பிற்பகல் இரண்டு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள், பத்ரசாயி கோவில்களுக்கு சென்றோம். அங்கிருந்து மதுரை. நேற்று காலை 10 மணியளவில் மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு மாலை வந்து சேர்ந்தோம்.

மடிக்கண்iனி மற்றும் ரிலையன்ஸ் டேட்டா கார்டின் உபயத்தால் அவ்வப்போது எனது மொழிபெயர்ப்பு வேலைகளையும் பார்க்க முடிந்தது. விட்டுப்போன சீரியல்களையும் (முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தென்றல் ஆகியவை) பார்த்துக் கொள்ள முடிந்தது.

இண்டேன் கேஸ் புக்கிங் செய்தல்
இப்போதெல்லாம் கேஸ் புக்கிங் செய்வது எளிமையாக்கப்பட்டு விட்டது. நமக்கு சிலிண்டர் தரும் கம்பெனிக்கு போன் செய்யும் தொல்லை இல்லை. இண்டேனின் மையப்படுத்தப்பட்ட சேவை மையத்துக்கு போன் செய்தால் போதும். என்ன, அதை செல்பேசி மூலமாகத்தான் செய்ய வேண்டும்.

நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் புக் செய்யலாம். இண்டெர்-ஆக்டிவ் முறையில் அது நிகழ்கிறது. முதன் முறையாகச் செய்யும்போது, உங்களுக்கு சிலிண்டர் தரும் ஏஜென்ஸியின் ஏதேனும் ஒரு டெலிஃபோன் எண்ணை அழுத்தச் சொல்வார்கள். பிறகு அவர்களே கம்பெனியின் பெயரைக் கூறி, சரி பார்ப்பார்கள். பிறகு உங்கள் பயனர் எண்Nணை அழுத்த வேண்டும். அதையும் சரிபார்த்த பிறகு, உங்கள் புக்கிங்கை ஏற்று புக்கிங் எண்ணைக் கூறி, பிறகு அதையே எஸ்.எம்.எஸ் ஆகவும் அனுப்புவார்கள். தேவைப்பட்டால் உங்கள் செல்பேசி எண்ணையே ரிஜிஸ்தர் செய்து கொள்ளலாம். ஆனால் அடுத்த முறைக்கு அதே செல்பேசியிலிருந்துதான் புக் செய்ய வேண்டும். இரண்டே ஸ்டெப்புகளில் உங்கள் புக்கிங் நடந்து முடிந்து விடும்.

இதில் நான் இடைஞ்சலாகப் பார்ப்பது செல்பேசி தொலைந்து போனால் வரும் சிக்கல்களே. அவற்றுக்கும் ஏதேனும் வழிவைத்திருப்பார்களாக இருக்கும். இப்போது நல்ல விஷயம் என்னவென்றால், டெலிவரி பையன்கள் சிலிண்டர்களை டீக்கடைகளுக்கு தரும் ஓல் பஜனை வேலைகள் நடக்காது. நமது புக்கிங்கை சிலிண்டர் தரும் வரைக்கும் மானிட்டர் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு சந்தேகம். செல்பேசி எல்லோரிடமும் இருக்குமா? அதை இயக்கத் தெரியாதவர்கள் கதி?

பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்கு தண்டனை
எப்போதோ பைசல் செய்திருக்க வேண்டிய விஷயம். அப்படி இப்படி என எல்லோருமாக இழுத்து விட்டார்கள். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதோ அல்லது ஆயுள் தண்டனையாக அதை ஆக்குவதோ உடனடியாக செய்யப்பட்டிருக்க வேண்டும். 20 ஆண்டுகள் எல்லாம் டூ மச்.

 அது என்ன எல்லோரும் சோனியா காந்தி மனது வைக்க வேண்டும் என்கிறார்கள்? ராஜீவ் மட்டுமா கொல்லப்பட்டார்? கூடவே பலரும் இறந்தார்கள்தானே. அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலும் தேவைதானே. யாருமே இதை யோசித்ததாகத் தெரியவில்லையே.

எனக்குள்ள ஒரே வருத்தம் என்னவென்றால், முதல் குற்றவாளியான பிரபாகரன் தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்ததுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/18/2011

டோண்டு பதில்கள் - 18.08.2011

ரமணா has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 04.08.2011":

கேள்வி-1. கருணாநிதியின் குடும்பத்தில் அதிக கலக்கத்தில் யார்?
பதில்: கருணாநிதி, obviously.

கேள்வி-2. வைகை புயல் வடிவேலு ?
பதில்: புயலே புயலில் காணாமல் போகும் நிலை.

கேள்வி-3. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமைதி?
பதில்: இவ்வாறு இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு உகந்ததல்ல

கேள்வி-4. தமிழக அரசின் முதல் பட்ஜெட் எப்படி?
பதில்: இலவசங்களை அறிவிக்கும் நிர்ப்பந்தம், ஆகவே அடுத்த பட்ஜெட்டில்தான் சரியான நிலையை அவதானிக்க இயலும்.

கேள்வி-5. சென்னை சிங்கப்பூராயிடும் போலுள்ளதே?
பதில்: நிறைய சீனாக்காரங்க வந்து குடியேறினால்தான் உண்டு.

கேள்வி-6. சமச்சீர்கல்வி என்னவாகும்?
பதில்: எல்லோரையும் சமமாக கீழே கொண்டு செல்லாதிருக்கும்வரை இது ஆதரவுக்குரியதே.

கேள்வி-7. நில அபகரிப்பு வழக்குகள் சரியா?
பதில்: பழி வாங்கும் நோக்கத்தில் இல்லாது, செய்த குளறுபடிகளை திருத்துவதாக இருக்கும் பட்சத்தில், அதாவது அழகிரி அண்ட் கோவுக்கு தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவை சரியே

கேள்வி-8. மத்திய அரசு இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்?
பதில்: கூட்டுக் களவாணிகள் ஒரேயடியாக பிய்த்துக் கொண்டு போகாத வரைக்கும் தாக்கு பிடிக்கும்.

கேள்வி-9. அன்னா ஹாசாரேவை தேர்தல் வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ் ?
பதில்: அன்னா ஹசாரேவை எதில் சேர்ப்பது என்பது எனக்குப் புரியவில்லை.

கேள்வி-10. அரிசி, ஆடு, மாடு, கிரைண்டர், மிக்ஸி, பேன், லேப்டாப், தாலிக்கு தங்கம் அடுத்து?
பதில்: ரூம் போட்டாவது யோசித்து மேலும் இலவசங்களை அதிகரித்தாலும் வியப்படைவதற்கில்லை.

pt has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 11.08.2011":
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-11. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள கடைசி பாதாள அறையைத் திறந்தால், கோயில் பொக்கிஷங்கள் கொள்ளை போகும் ...
பதில்: பத்மநாபசாமியின் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடியாகவே முடியும் என நம்புகிறேன்.

கேள்வி-12.  தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி விலை ஏற்றத்தால் எரிச்சல்
பதில்: மிகவும் கவலையளிக்கக் கூடிய செய்திதான் இது.

கேள்வி-13. லண்டனில் ஆரம்பித்த கலவரம் மற்ற ஊர்களுக்கு பரவி, இங்கிலாந்து தேசமே எரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் ஒளிபரப்பாகின்றன.
பதில்: சமீபத்தில் 1968-ல் பாரீசிலும் இப்படித்தான் கலவரம் மூண்டது. காலனி ஆதிக்க செய்த நாடுகள் பல சரித்திர காரணங்களுக்காக முன்னாள் காலனி மக்களுக்கு தத்தம் நாட்டில் குடியுரிமை அளிக்க வேண்டியிருக்கிறது. பல முறை கலாச்சார மோதல்கள் நடக்கின்றன, சில சமயங்களில் இம்மாதிரி கலவரங்களாக மாறுகின்றன.

கேள்வி-14. புத்தகங்களில் கிழித்தல், திருத்தல் தீவிரம் 16ம் தேதி முதல் சமச்சீர் பாடம்
பதில்: முதலிலேயே அரசு செய்திருக்க வேண்டிய விஷயம் இது. தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம்.

கேள்வி-15. தெலுங்கானா மாநிலம் அமைக்க தற்கொலைக்கு தயார் - விஜயசாந்தி
பதில்: யாருடைய தற்கொலைக்கு அவர் தயாராம்?

கேள்வி-16. IS INDIA HEADED INTO A RECESSION?
பதில்: அதைத்தான் நானும் அஞ்சுகிறேன்.

கேள்வி-17. CAN TECHNOLOGY BE BLAMED FOR THE LONDON RIOTS?
பதில்: தொழில்நுட்பம் என்பது நடுநிலைமை வகிப்பது. அதை பயன்படுத்துவோரை பொருத்துத்தான் நன்மை தீமை எல்லாம்.

கேள்வி-18. DO YOU THINK ANNA WILL WIN THE WAR AGAINST 750 PARLIAMENT MEMBERS ON LOKPAL BILL?
பதில்: No.

கேள்வி-19. RAJA'S REVELATIONS IN 2G SCAM: IS PM'S INTEGRITY QUESTIONED?
பதில்: பிரதமரது நாணயத் தன்மை எப்போதிலிருந்தே சந்தேகத்துக்குரியதாகி விட்டதே, இப்போ என்ன புதிதாக நடந்து விட்டது?

கேள்வி-20. DO YOU THINK INDIANS ARE MORE INFLUENCED BY WESTERN BRANDS?
பதில்: மேல்நாட்டு மோகம் பல இந்தியர்களை ஆட்கொண்டுள்ளது. அவர்களுக்கு உங்கள் கேள்வி பொருந்தும்.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/11/2011

டோண்டு பதில்கள் - 11.08.2011

thenkasi
கேள்வி-1. ஸ்டாலினுக்கு கோவையில் எதுவுமே கிடைக்க​வில்லையே?
பதில்: அழகிரி என்னும் செக் இருக்கும் வரையில் அவருக்கு எதுவும் கிடைக்காது.

கேள்வி-2. ஆ.ராசா, கனிமொழி சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறார்களா? அவர்களுக்கு பொழுது எப்படிப் போகிறது ?
பதில்: திகார் தலைமை அதிகாரிக்கு போக வேண்டிய கேள்வி இது.

கேள்வி-4. தயாநிதி மாறனின் திஹார் விஜயம் தள்ளிப் போவதன் மர்மம் என்ன?
பதில்: விஜயம் எந்த அடிப்படையில் என கருதுகிறீர்கள்? விசிட்டராகவா அல்லது சிறைவாசியாகவா?

கேள்வி-6. திஹார் சிறை கண்ட தியாகி கனிமொழி மத்திய அமைச்சராக வாய்ப்பு உள்ளதா ?
பதில்: அடுத்த தேர்தலில் திமுக ஜெயித்தால், அழகிரி ஸ்டாலின் அனுமதித்தால், why not?

கேள்வி-7. மனைவி, துணைவி என்று இந்தக் கிழவர் எத்தனை காலம் தான் ஊரை ஏமாற்றுவார் ?
பதில்: மனைவி, துணைவி எல்லாம் அவரது சொந்த விஷயம்.
:
கேள்வி-9. தா.கி. வழக்கில் நீதி கிடைக்குமா ? அஞ்சா நெஞ்சன் சிறை புகும் காலம் எப்போது ?
பதில்: இதில் சட்டச் சிக்கல்கள் உண்டு. நான் அறிந்தவரை double jeopardy என்று ஒரு விஷயம் இருக்கிறது.

கேள்வி-10. அண்ணா நகர் ரமேஷ் வழக்கு என்னவாயிற்று ? இதில் தளபதியின் பங்கு என்ன ?
பதில்: நான் என்ன புலன் விசாரணை பத்திரிகையாளரா, இதையெல்லாம் தெரிந்து கொள்ள?

BalHanuman
 கேள்வி-11. சிகிச்சைக்கு அமெரிக்கா போன சோனியா பொறுப்பை ராகுல் காந்தியிடம் கொடுக்கிறார்.. ஆனால் இந்தக் கருணாநிதி ஸ்டாலினுக்கு அல்வா தவிர வேறு எதுவும் கொடுப்பதாகத் தெரியவில்லையே ?
பதில்: ராகுல் அவர் அன்னையின் ஒரே பிள்ளை. ஆனால் ஸ்டாலின்?

கேள்வி-12. ஜாபர் சேட்டுக்குப் பரிந்து பேசும் கருணாநிதி "இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரான ஜாபர் சேட்" என்று புலம்ப ஆரம்பித்துள்ளார். இந்த ஆள் திருந்தவே மாட்டாரா ? தலித் என்ற அடை மொழி கொடுத்து ஆ.ராசவைக் காப்பாற்ற முயன்றவர் தானே இவர் ?
பதில்: கோமணத்தை இறுக்கக் கட்டி, மலத்தை அடக்க முயலுகிறார்.

கேள்வி-13. ஜூனியர் விகடனில் வெளியாகி உள்ள கருணாநிதி குடும்பத்தின் சொத்து விவரங்களைப் பார்த்தீர்களா ? சொக்கா... கண்ணைக் கட்டுதே.....
பதில்: திரைக்கதை வசனம் எழுதித்தானே இத்தனையையும் சம்பாதித்ததாக அவர் கூறுவார்?

கேள்வி-14. அஞ்சா நெஞ்சனிடம் இருந்து மதுரையை மீட்க முடியுமா ?
பதில்: அஞ்சாநெஞ்சன் வெத்துவேட்டு என்பது தெரிந்த பின்னுமா இந்த கேள்வி?

கேள்வி-15. சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவர் பற்றி உங்கள் கருத்து ?
பதில்: அந்த ஏரியாவில்தான் எங்கள் பொறியியல் கல்லூரியின் அலும்னி கிளப் உள்ளது. பழைய மாணவர்கள் கெட் டுகதர்களுக்கு செல்வதுண்டு. நீங்கள் குறிப்பிட்ட சுவரை நான் பார்த்ததாக நினைவில்லையே.

pt
 டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-16. தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு : ராமதாஸ், திருமாவளவன் பேச்சு

பதில்: தமிழ் ஈழம் பெறுவதில் இலங்கையில் உள்ள தமிழரிடமேயே கூட ஒத்த கருத்து இல்லை. மேலும் அது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பது இங்குள்ளவர் கருத்து.

கேள்வி-17. மும்பை: மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு
பதில்: கவலை தரும் செய்தி.

கேள்வி-18. நியூயார்க்கில் சோனியாவுக்காக பிரார்த்தனை
பதில்: நல்லபடியாக பிழைத்து வரட்டும் என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்?

கேள்வி-19. அமெரிக்க போர் விமானங்கள் அனுமதியின்றி பிரவேசம்: இலங்கை கண்டனம்
பதில்: கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஷயம்தானே.

கேள்வி-20. 2ஜி முறைகேடுகளுக்கு பிரதமரை பொறுப்பாக்க முடியாது: மான்டேக்
பதில்: ஆம், அவரை பொறுப்பாக்க முடியாதுதான். ஏனெனின் அவர் பொறுப்பற்றவர்.

கேள்வி-21. ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு
பதில்:


கேள்வி-22. விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி 
பதில்: எல்லா முதன் மந்திரிகளும் அதைத்தான் கூறுகிறார்கள், இதில் என்ன புதுசு?


கேள்வி-23. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்'
பதில்: ஆண்டுக்கு 4 சிலிண்டருக்கு மேலே என்றால் மானியம் கட் என்றுதானே படித்தேன்.


கேள்வி-24. அதிகம் பால் கொடுக்கும் வெளிமாநில கலப்பின பசு இறக்குமதி : ஒரு பசு ரூ.30,000
பதில்:  அவ்வளவுதானா?


கேள்வி-25. கைதாகாமல் தவிர்க்க "வாஸ்து' உதவியை நாடிய நேரு
பதில்: தப்பிச்சுப்போக, வீட்டின் பின்னால் வேறு ஏதாவது வாசல் அமைத்திருப்பாரோ?



மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/04/2011

டோண்டு பதில்கள் - 04.08.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.

பதில்: மக்களாட்சியின் பலமே அதுதான். அம்மாதிரி பலம் தம்மிடம் இருப்பதை மக்கள் மறப்பதுதான் அதன் பலவீனமும் கூட.

கேள்வி-2. ஆ. ராசாவின் உத்தரவுப்படியே நடந்தேன்: சித்தார்த்த பெகுரா
பதில்: ராசா சொன்னதை சித்தார்த்த பெகுரா செய்தார். தனக்கு முந்தியவர்கள் செய்ததை ராசா செய்தார். சோனியா சொல்வதைத்தான் மன்மோகன் செய்வார். இப்படியேதான் சொல்லிக் கொண்டு போவதை ஆங்கிலத்தில் அழகாக paasing the buck என்பார்கள்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் அலுவலக மேஜை மேல் the buck stops here என்ற வாசகம் கொண்ட அட்டை இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அம்மாதிரி இங்கும் வந்தால் தேவலை.

கேள்வி-3. சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவுக்கு அக்கறை அதிகம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாதம்
பதில்: ஜெயலலிதா கூறுவது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆயினும் செய்த முறையில் சில சொதப்பல்கள் வந்து விட்டன.

கேள்வி-4. எடியூரப்பா குடும்ப அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக ரூ.30 கோடி நன்கொடை: சந்தோஷ் ஹெக்டே
பதில்: எடியூரப்பாவால் பாஜகாவுக்கு சங்கடமே.

கேள்வி-5. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக
பதில்: இருந்தால் இரு இல்லாவிட்டால் போ என ஒருவரிடம் கூறிய பிறகு, வேறு வழியின்றி அவர் போவது போலத்தான் இந்தச் செய்கை உள்ளது. அது இருக்கட்டும், பாமக கொ.ப.செ பதிவர்கள் இன்னும் பம்முகிறார்களே என்ன சமாச்சாரம்?

காங்கிரஸ் திமுக கூட்டணியில் திமுகவுக்கும் இதே நிலைதான். என்ன செய்வது, அதுதான் அரசியல்.

கேள்வி-6.கடந்த சில மாதங்களாக விவாதப் பொருளாக இருந்துவந்த திருப்பூர் சாய ஆலைக் கழிவுநீர் பிரச்னைக்குக் கடைசியாக ஓர் இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளது.
பதில்: தமிழக அரசுக்கு பாராட்டு, மோதியின் குஜராத்துக்கு நன்றி. தினமணியின் மேலதிக ஆலோசனைகளைப் பரிசீலனை செய்வது அவசியம்.


கேள்வி-7. மூன்றாவது அணி: பா.ம.க. முடிவுக்கு திருமாவளவன் ஆதரவு
பதில்: எந்த மாதிரி ஆதரவாம்? தான் வெளியில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு பாமகாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் நிலைக்கு செல்ல மாட்டார் என நம்புவோமாக.

கேள்வி-8. ஆகஸ்ட் 18-லிருந்து லாரி ஸ்டிரைக்
பதில்: கோரிக்கைகளில் வலு இருப்பதாகத் தோன்றுகிறது.

கேள்வி-9. மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு
பதில்: ஆட்சியில் இருந்தால் ஆர்டிகிள் 356-க்கு விரோதம், எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சிக்கு எதிராக அதை பிரயோகம் செய்ய ஆதரவு, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

கேள்வி-10. ஆற்றல், அறிவினை வளர்க்க துணை புத்தகங்கள் மட்டுமே: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்
பதில்: ஆகவே அவற்றைத் தெரிவு செய்வதில் கவனம் தேவை.

கேள்வி-11. ரூ.22 கோடியில் ஏரி, கால்வாய் புனரமைப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
பதில்: நல்ல விஷயம்தானே, ஆனால் இந்த நடவடிக்கைகள் டூ லேட் என நினைக்கிறேன்.

கேள்வி-12. காங்கிரஸ் கட்சியினருக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். 
பதில்: கருணாநிதி இப்படிச் சொல்லித்தான் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளோணும்.

கேள்வி-13. அமெரிக்க கடன் உச்சவரம்பு விவகாரம்: குழப்பம் நீடிக்கிறது
பதில்: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என அமெரிக்கா புலம்பும் நிலையில்தான் உள்ளது.

கேள்வி-14. 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும்: கபில் சிபல்
பதில்: நடக்குமா? வங்கி நடத்தத் தேவையான மனப்பக்குவம் தபால் நிலையங்களுக்கு வருமா?

சாதாரண தபால் சேமிப்புக் கணக்குகளில் கையெழுத்து சரியில்லை என தாங்கள் பெர்சனலாக அறிந்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் கூட அரசு அதிகாரத்தனமாக அவர்கள் செய்யும் அலம்பல் அதிகமே என பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். இப்போது மாறியிருந்தால் யாராவது சொல்லுங்கப்பூ.

கேள்வி-15. எதிர்க்கட்சிகளும் யோக்கியமில்லை: பிரதமர்
பதில்: அது சரி, அரசியலில் யார்தான் யோக்கியம்? இப்போ ஆட்சியிலே இருக்கிறவங்களைப் பற்றி பேசுங்கப்பூ.

கேள்வி-16. கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்
பதில்: பின்னே என்ன கொஞ்சுவாங்களாமா?

கேள்வி-17. பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு
பதில்: பிரதமரை விசாரிப்பிலிருந்து விலக்குவது என்பது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கோட்பாட்டுக்கே விரோதமானது.

கேள்வி-18.  ஏ.டி.எம்., மிஷின் அலேக்:நூதன திருடர்கள் கைவரிசை
பதில்: அதற்காகத்தான் நான் ஏடிஎம்மே வேண்டாமென்று இருக்கிறேன்.

கேள்வி-19. அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை
பதில்: சிவில் வார் என்று வரும்போது கூடுதல் இழப்புகள் (collateral damages) வரத்தான் செய்யும்.

கேள்வி-20. ஆம்னி பஸ்களுக்கு ஈடுகொடுக்கத் திணறும் அரசு விரைவு பஸ்கள்
பதில்: ஆம்னி பஸ்களுக்கு உரிய அனுமதி வழங்கி, ரெகுலரைஸ் செய்ய வேண்டும்.

ஆனால் அவை கூட பிரயாணிகளை திராட்டில் விடுகின்றன. அரசு பஸ்களிலோ சீட்டில் ஆணிகள் உடைகளைக் கிழிக்கின்றன.


மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது