8/29/2011

தும்மல் சம்பந்தமாக தும்மித் தும்மியவாறு ஒரு பதிவு

திருக்குறள் பற்றிய எனது இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்:
ஊடல் பற்றிய அதிகாரங்களில் வரும் தலைவியிடம் தலைவன் படும்பாடு இருக்கிறதே, அதைச் சொல்ல வேண்டும்.

திடீரென தலைவன் தும்ம தலைவி தன்னையறியாது "நீடூழி வாழி" என்று வாழ்த்துகிறாள். திடீரென நினைத்து கொண்டு "எந்தச் சிறுக்கி உன்னை நினைத்தாள்? இவ்வாறு திடீரென ஏன் தும்மினாய்" எனக் கேட்டு டார்ச்சர் செய்கிறாள்.
"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தும்மலை அடக்கினால் "யாரை என்னிடமிருந்து மறைக்கிறாய்"? என்ற கேள்வி அம்பாக வருகிறது.
"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

அவள் அழகையே கூர்ந்து பார்த்தால் கூறுகிறாள் வேறு எந்த பொம்பளையோட என்னை ஒப்பிடுகிறீர் என்று
"நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினர் என்று


இப்பதிவு மேலே உள்ள வரிகளிலிருந்து தும்மலை மட்டும் எடுத்துக் கொள்கிறது. தும்மினால் நீடூழி வாழி எனக்கூறுவது தமிழகத்துக்கு மட்டும் உரித்ததன்று. எல்லா கலாச்சாரங்களிலும் உண்டு என்பதை அறிகிறேன். ஜெர்மனியில் தும்மினால் Gesundheit என்பார்கள், ஆரோகியமாக இரும் என்பது அதன் பொருள். பிரெஞ்சுக்காரர்களோ santé எனக்கூறுவார்கள், அதே பொருள்தான் அங்கும்.

ஒற்றைத் தும்மல் அபசகுனம், இரட்டைத் தும்மல் நல்ல சகுனம் எனக் கூறுவோரும் உளர். திருமணத்தில் தாலி கட்டும்போதும் சரி, மற்ற மங்கள தருணங்களிலும் சரி, கெட்டி மேளாம் கெட்டி மேளம் எனக் கத்தி மேள, நாதஸ்வர சத்தத்தை அதிகரிப்பதன் ஒரு முக்கிய நோக்கமே யாராவது அச்சமயத்தில் (வேண்டுமென்றே) தும்மினால் அத்தும்மல் காதில் விழாதிருக்கும் பொருட்டே, என எனது தமக்கையாரின் மாமனார் காலம் சென்ற புருஷோத்தமாச்சாரியார் என்னிடம் தும்மிக் கொண்டே கூறியுள்ளார்.

எனது பெரியப்பாவின் மூத்த மாப்பிள்ளை கையில் காப்பி கொடுத்தவுடனேயே அதன் வாசனை அவருக்கு அடுக்கடுக்காக தும்மலை வரவழைத்து விடும். பூனை அலர்ஜி உள்ளவர்களது அடையாளமே அவர்கள் பூனை அருகாமையில் போடும் அடுக்குத் தும்மல்களே. சிலருக்கு பூக்களின் மகரந்தத் துகள்கள் தும்மல்களை வரவழைக்கும்.

அது சரி, இச்சமயம் திடீரென ஏன் இப்பதிவு என தும்மிக் கொண்டே கேட்கிறான் முரளி மனோகர். அதாகப்பட்டது, அக்சூ என்னும் தலைப்பில் வந்த இந்த ஜெர்மானிய இடுகைதான் எனது இப்பதிவுக்கு காரணம்.

இப்பதிவர் சூரியனை நேரில் பார்த்தாலே தும்ம ஆரம்பித்து விடுவாராம். அவர் எழுதுகிறார், Es heißt sinnigerweise ACHOO syndrome (dt: „Hatschi-Syndrom“), das Akronym steht für Autosomal Dominant Compelling Helio-Ophthalmic Outbursts of Sneezing. Ich kann mir richtig vorstellen, wie die (amerikanischen?) Wissenschaftler in feuchtfröhlicher Runde zusammensaßen und so lange tüftelten, bis sie beim fünften Bier tatsächlich jedem Buchstaben von Achoo ein sinnvolles Wort zugeordnet hatten. Auf Deutsch heißt das Phänomen übrigens ganz trocken „Photischer Niesreflex“.

இந்த ACHOO-வுக்காக பல நிபுணர்கள் ரூம் போட்டு யோசித்து Autosomal Dominant Compelling Helio-Ophthalmic Outbursts என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் என அவர் கிண்டலுடன் கூறுகிறார். தான் குழந்தையாக இருக்கும்போது உலகத்தில் எல்லோருக்குமே அப்படித்தான் என அவர் நினைத்திருந்தாராம். பிறகுதான் அப்படியெல்லாம் இல்லை என விஷயம் தெரிந்ததாம்.

இது எப்படி வந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் இது பரம்பரையாக தொடரும் நிலை என்றும் கூறும் அவர், தனது இரு பையன்களில் மூத்தவனுக்கும் இது இருக்கிறது ஆனால் இளையவனிடம் இன்னும் அதை பார்க்கவில்லை என்று கூறுகிறார். அதற்குள் அவர் கணவர் இளையவனுக்கும் அது இருப்பதை தான் கண்டுணர்ந்ததாகக் கூறினார் என்பதையும் சேர்க்கிறார்.

சமீபத்தில் 1976-ல் வந்த மன்மத லீலை என்னும் படத்தில், கமலஹாசனின் மாமனார் ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு அவர் வீட்டு சமையல்காரியுடன் சினேகம் என்றும், அவர் ஒரு காரியம் செய்யலாமா எனக் கேட்கும்போது சமையற்காரி ஒரு தும்மல் போட்டால் செய்ய வேண்டாம் என்றும், இரட்டைத் தும்மல் போட்டால் செய்யலாம் என்றும் பொருள் என படத்தில் காட்டியிருப்பார்கள். படத்தில் ஓரிடத்தில் மகேந்திரனின் கழுத்தை நெறிக்க அவர் முயலும்போது, சமையற்காரி ஒற்றைத் தும்மல் போட அவர் நிராசையுடன் முயற்சியை கைவிடுகிறார். அதனால் மகேந்திரன் ஓவராக மகிழ்ச்சியடைய, சமையற்காரி இரட்டைத் தும்மல் போட, கழுத்து நெறிப்பு குதூகலத்துடன் தொடர்கிறது.

இதற்கு மேல் எழுதினால் கழுத்தை நெறிப்பதாக முரளிமனோகர் கூறுவதால் இத்துடனேயே நிப்பாட்டிக்கிறேன்.

தும்மலுடன்,
டோண்டு ராகவன்



2 comments:

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
சங்க இலக்கியப் பாடலை அடிப்படையாக வைத்து, தும்மல் பற்றிய வேற்று மொழிக் குறிப்புக்களையும் பகிர்ந்திருக்கிறீங்க.

ஆங்கிலேயர்கள் தும்மும் போது Bless you என்று சொல்லுவார்கள்.

BalHanuman said...

1976-ல் வந்த மன்மத லீலை உங்களுக்கு சமீபத்தில் வந்த படமா :-)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது