ஜெயமோகனின் இப்பதிவுதான் எனது இந்த இடுகையை தூண்டியது. அதில் எஸ்ரா அவர்கள் ஜெயமோகனை ஜெய்சங்கர், மலையாள நடிகர் ஜெயன், மேலும் தமிழ் நடிகர் மோகன் ஆகியோருடன் பல வெவ்வேறு காலகட்டங்களில் குழப்பிக் கொண்டது பற்றி சுவைபட எழுதியுள்ளார். போதாக்குறைக்கு அவரது மாமா வேறு ஜெயமோகன் எம்.எல்.ஏ. என அவரை தவறாகப் புரிந்து கொண்டு மாலை எல்லாம் வாங்கும் அளவுக்கு போனது இன்னும் நகைப்பை வரவழைத்தது.
இம்மாதிரி பல முறை நடந்துள்ளது. சுந்தரகாண்டம் உரை நடை புத்தகத்தை நான் எட்டு வயதில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜனகன் மகள் ராவணேஸ்வரனிடம் “ராகவனைத் தவிர வேறு எவரையும் நான் நிமிர்ந்து பார்க்க மாட்டேன்” என சூளுரைக்க, எனக்கு ஒரே ஆச்சரியம். நம்மைப் பற்றி இவ்வளவு அன்புடன் குறிப்பிடும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்ற திகைப்பு ஒரு புறம், ஜானகி இப்போது எங்கே என்ற ஆவல் ஒரு புறம். திடீரென என் பெரியப்பா மகன் அம்பிக்கும் ராகவன் என பெயர் என்பது நினைவுக்கு வர, எங்களில் யாரை சீதை குறிப்பிடுகிறாள் என்ற மயக்கம் வேறு பிறகு சேர்ந்து கொண்டது. பிறகு தெளிந்து கொண்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சமயம் என் தந்தை, பெரியப்பா ஆகியோரது ஒன்று விட்ட சித்தப்பாவின் மகன் வெங்கடேசன் சிறிய வயதில் ஜுரம் வந்து இறந்து போனான். என் பெரியப்பா அம்பியை அழைத்து வெங்கட வரதய்யங்காரிடம் போய் இம்மாதிரி நிலையில் நமக்கு எத்தனை நாள் தீட்டு என கேட்டு வா என் அனுப்பிக்க அவனும் ஒரே ஓட்டமாக ஓடி எதிர்வீட்டில் இருந்த அவனது பள்ளி ஆசிரியர் வெங்கட வரதைய்யாங்கரிடம் சென்று கோரிக்கை வைக்க அவரும் அலுப்புடன் பல புத்தகங்களை தேடி விடை கூறினார். சில மாதங்கள் கழித்து எங்கள் தாத்தாவின் திவசம் வர அதற்கு வெங்கட வரதையங்கரிடம் பிராமணார்த்தம் சம்பந்தமாக கேட்டு வர அதே அம்பி என் பெரியப்பாவால் அனுப்பப்பட்டான். அவன் அங்கு சென்று பார்த்தபோது ஆசிரியர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கூற அவரும், “இதென்ன கூத்து, எங்காத்து மாமா எப்போதிலிருந்து இந்த வேலையெல்லாம் ஆரம்பித்தார், நேக்கு தெரியவே தெரியாதே” என ஆச்சரியத்துடன் கூற, அவனும் திகைப்புடன் வீட்டுக்கு வந்து பெரியப்பாவிடம் அதை சொன்னான்.
அவர் திடீரென அவனிடம் அவன் எங்கு சென்றான் என கேட்க, அவனும் எதிர்வீட்டுக்கு சென்று கேட்டதாகக் கூற, அவர் சிரிக்க ஆரம்பித்தார். “அடே நான் சொன்னது நம்மாத்துக்கு உபாத்தியாயம் செய்ய வரும் வெங்கட வரதையங்கார் அவர் ராமேஸ்வரம் தெருவில் இருப்பவர்” என்று கூறியதுதான் குழப்பம் விலகியது. இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தின் பிரைவேட் ஜோக் கலெக்ஷனில் சேர்ந்து கொண்டது. அம்பியே அதை பலமுறை கூறி சிரித்திருக்கிறான்.
இதே போல எங்கள் ஆசிரியர் வி.என் ராகவாச்சாரியார் இன்னொரு ஆசிரியர் ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை என் வகுப்பில் இருந்த டி.எஸ். ராகவனிடம் கொடுத்து ரங்கராஜனிடம் சேர்ப்பிக்குமாறு கூற, அவனும் கர்ம சிரத்தையாக இன்னொரு செக்ஷனில் இருந்த தன் தோழன் ரங்கராஜனிடம் போய் அதை ஒப்படைத்தான். குழம்பிப் போன ரங்கராஜன் எங்கள் வகுப்புக்கு வந்து ஆசிரியருடன் பேச, அவரும் ராகவனைப் பார்த்து என்ன விஷயம் என கேட்க, :இவந்தான் சார் ரங்கராஜன்” என அவன் அழுத்தம் திருத்தமாகக் கூறினானே பார்க்கணும்.
இப்பதிவை பின்னாலிருந்து படித்த என் வீட்டம்மா ராகவன் என பெயர் வைத்தாலே இம்மாதிரித்தான் ஏதாவது ஏடாகூடம் செய்வார்கள் போல என நொடித்து விட்டு திரும்பியது வேறு கதை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நமது தேவைகள், நமது பாவனைகள்
-
அன்புள்ள ஜெ, இதை எழுதும்போதே பெரும் சோர்வொன்று வந்து ஆட்கொண்டுவிடுகிறது.
வாழ்வின் எல்லா பக்கங்களும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இலட்சியக் கனவுகளோடு
பேரிய...
19 hours ago
No comments:
Post a Comment