3/03/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.03.2012

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்
அதை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். ராணி மங்கம்மாவின் மரணம் வரைக்கும் படித்து முடிந்தாகி விட்டது. இம்மாதிரியான தகவல்கள் அதிகம் நிறைந்த நாவல் படிக்கும்போது மனதுக்கு ஒரு வித களைப்பு வருவது தவிர்க்க இயலவில்லை. எல்லா தகவல்களையும் ஜீரணிக்க அவகாசம் தேவைப்படும். நாவலை எப்போது முடிப்பேன் எனத் தெரியவில்லை. எனது படிப்புக்கு குந்தகம் வரக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே அது பற்றிய மதிப்புரைகளை படிப்பதை தவிர்த்துள்ளேன். பார்ப்போம்.

“அன்புடன் டோண்டு ராகவன் அவர்களுக்கு” எனக் குறிப்பிட்டு வெங்கடேசன் அவர்களது கையொப்பத்துடன் புத்தகத்தைப் பெறமுடிந்தது. ஆனால் அவர் என்னைப் பார்த்ததில்லை. அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக புத்தகத்தை வாங்கி அவர்கள் மூலமாகவே வெங்கடேசன் அவர்களிடம் எனது வேண்டுகோளையும் வைத்ததில் அவர் அன்புடன் கையொப்பமிட்டுத் தந்தார். அவருக்கு முதற்கண் என் நன்றிகள்.

பேபால் பணவினியோக சேவை
பேபால் பற்றி பல பயமுறுத்தும் கதைகளை படித்ததன் பலனாக அதை பாவிப்பதை இத்தனை நாட்களாக தவிர்த்து வந்துள்ளேன். இப்போதுதான் துணிந்து அதை பயன்படுத்தத் துவங்கியுள்ளேன். வெளி நாட்டில் இருந்து வரும் சிறு தொகைகளுக்கு அது மிகவும் லாபகரமானது என்று இப்போது தோன்றுகிறது. அதையும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே. எது எப்படியானாலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிறு தொகைகள் இப்போது எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவை எனது பேபால் கணக்குக்கு வந்து விட்டன. இனிமேல் எனது வங்கிக் கணக்குக்கு வருவதுதான் பாக்கி. ஏதோ வந்த வரையில் லாபம்.

Those who cannot remember the past are condemned to repeat it
வரலாற்றை அலட்சியம் செய்யலாகாது. இல்லாவிடில் வரலாற்றின் பிழைகளை நாம் மறுபடியும் செய்ய வேண்டியிருக்கும்.

இப்போ நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம், சாதி பற்றி பேசவே மறுப்பதன் மூலம். பெரும்பான்மையானோர் இன்னமும் சாதியை பிடித்துக் கொண்டு ஏன் தொங்குகிறார்கள் என சிணுங்கும் “முற்போக்காளர்கள்” என தங்களை தவறாக புரிந்த் கொண்டிருப்பவர்கள் கோபப்படலாம். ஆனால் நான் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நடந்தவற்றை நாம் மறுக்கவியலாது. நான் ஏற்கனவேயே இப்பதிவில் குறிப்பிட்டபடி எந்த மதத்தவராயினும் சாதி போன்ற குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாது. இது எல்லா நாடுகளிலும் ஏதேனும் ஒரு ரூபத்தில் பரவியுள்ளது. என்ன நம்ம ஊரில் சாதி, மர்ற ஊர்களில் இனக்குழுக்கள் அவ்வளவுதான்.

பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே புழங்கும் சாதிகள் வரலாற்று உண்மைகளே அதை திட்டியாவது ஒழிப்போம் என்பது குழந்தைத்தனமானது. நிற்க.

நான் இங்கு கூற நினைப்பது வரலாற்றை நாம் பூசி மொழுகலாகாது என்பதே. இரண்டாம் உலக யுத்தத்தில் டங்கிர்க் என்னும் இடத்தில் பிரிட்டிஷ் துருப்புகள் பலமாக அடிவாங்கின. இங்கிலாந்துக்கு அது மகத்தான தோல்வி. இருப்பினும் அதைப் பற்றி அதிகமாகப் பேசுவதும் இங்கிலாந்துக்காரர்களே. அதன்றி அதை கம்யூனிஸ்டுகள் செய்வதுபோல வரலாற்றுப் பாடங்களிலேயிருந்து ஒதுக்கினால் பின்னால் ஒருகாலத்தில் அதே தவறை இங்கிலாந்துக்காரர்கள் மீண்டும் செய்யும் வாய்ப்பு அதிகம்.

ஆக நான் கூறுவது என்னவென்றால் சரியோ தவறோ நடந்ததை அப்படியே ஒப்புக் கொண்டு தவற்றை திருத்துவதே புத்திசாலித்தனம். நம்மூர் சரித்திர பாடங்களை பள்ளிகளுக்காக எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் அது. செய்கிறார்களா? இல்லையே. பல குழுக்களை திருதி செய்யும் நோக்கத்தில் பூசி மெழுகுவதுதான் நடக்கிறது. இந்தியாவின் பழஙால சிறப்புகளை எடுத்துரைக்க தயக்கம் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

radhakrishnan said...

டோண்டு சார்,
காவல் கோட்டம் படித்து களைப்பை
அதிகமாக்கிக் கோள்ள வேண்டுமா?
சிறு புத்தகங்களாகப் படிக்கக் கூடாதா?
உடல் நலம் எப்படி? அசோகமித்திரனின்
18வது அடசக்கோடு மீண்டும் படியுங்களேன். அருமையாக இருக்கிறது.
உடல் நலம் பேணவும்

dondu(#11168674346665545885) said...

2காவல் கோட்டம் படித்தீர்களா? ஹரிஹரர், புக்கர் மற்றும் வித்யாரண்யர் கதை நான் கேள்விப்பட்டதற்கு மாற்றாகவே உள்ளதே.

உடல்நலம் தேவலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

radhakrishnan said...

காவல் கோட்டம் இன்னும் படிக்கவில்லை. நணபர் படித்ததும் தருவார்.ஏற்கனவே புத்ததகங்கள் அதிக
மாக உள்ளதால்வாங்க தயக்கமாக உள்ளது. இதை எஸ்.ரா. ஏன் மிகவும் கிழித்தார். உள் அரசியல் இருக்குமோ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது