1/19/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 19.01.2013

சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு
சிலுக்கு செயலாக இருந்தபோது நான் படித்தது, இங்கு இற்றைப்படுத்தப்படுகிறது..

பாற்கடலில் எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளார் பாம்பணையின் மேல். அவர் காலை பிடித்தவாறு லக்ஷ்மி. பிரும்மதேவன் சூழ தேவர்கள் வருகின்றனர்.

தேவர்கள்: பிரபோ அபயம் நாடி இங்கு நாங்கள் வந்தோம்.

மகாவிஷ்ணு: வாருங்கள் தேவர்களே, என்ன விஷயம்?

தே: பூலோகத்தில் கலி ரொம்பவும் முற்றியாகி விட்டது பிரபோ. நீங்கள் சொன்ன சம்பவாமி யுகே யுகே கான்சப்ட் படி நீங்கள் இன்னொரு அவதாரம் எடுக்கும் நேரம் வந்து விட்டது.

: (திடுக்கிட்டு): என்ன பூலோகமா, அது இன்னுமா இருக்கிறது?

தே: இப்படிச் சொன்னால் எப்படி பிரபோ, நீங்கள் அறியாததா?

: ஓக்கே, ஓக்கே டென்ஷன் வேண்டாம். எனது முகநூலில் ஸ்டேடஸ் பார்க்க மிஸ் ஆகிவிட்டது. இப்போ கொஞ்சம் பிசியாக இருக்கிறேன், பிறகு பார்க்கலாமே

தேவர்கள் இதை எதிர்த்து கோஷம் போட ஆரம்பிக்கிறார்கள்.

- மகாவிஷ்ணு அண்ணாச்சி, உங்க வாக்குறுதி என்னாச்சி?
- தூங்கியது போதும் அண்ணாச்சி, காரியம் வேணும் அண்ணாச்சி!
- சம்பவாமி யுகே, யுகே, பூலோகத்துள் நீங்கள் புகே, புகே.

இவ்வாறாக பலர் பல கோஷங்கள் போட, ஒருவர் மட்டும் “சிலுக்கு, சிலுக்கு, சிலுக்கு! வராட்டா ஆகும் பொடுகு பொடுகு, பொடுகு!” என கத்திக் கொண்டே நடனமாடுகிறார்.

பிறகு மகாவிஷ்ணு வாக்களிக்கிறார் என வைத்துக் கொளுவோம். ஆனால் அவருக்கு கடைசி கோஷம் குறித்து மண்டை காய்கிறது. அச்சமயம் அப்பக்கம் “நாராயண, நாராயண” எனக் கூறிக்கொண்டே வ்ரும் நாரதர் விஷ்ணுவுக்கு விளக்குகிறார். ”பிரபோ, இதுதான் இப்போ பூலோகத்தில் ஃபேஷன். எல்லாத்திலேயும் சிலுக்கை இழுப்பதுதான் அது”. சிலுக்கு பற்றி மேலும் கூற, மகாவிஷ்ணு சிந்தையில் ஆழ்கிறார்.

அப்போது லக்ஷ்மிதேவி கேட்கிறார், “பிரபோ என்ன யோசனை”?

மகாவிஷ்ணு கூறுகிறார், ”சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு”.

“யூ டூ”? என கோபிக்கிறார் மகாலட்சுமி.

பிறகு மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து, எல்லோரையும் நல்லவர்களாக்கிவிட, நாட்டில் இனிஷியேட்டிவ் எடுப்பவர்கள் இல்லாமல் போகிறார்கள், எல்லாமே பக்தி பஜனை கூடங்களாகின்றன என்றெல்லாம் கதை போகிறது..

கதையின் நீதி யாது எனக் கேட்டால் கெட்டதும் முக்கியம் என்றே வருகிறது. நீங்களே சொல்லுங்கள், வில்லன், வில்லி இல்லாமல் கதை போகுமா?

சோ அவர்கள் அதிமுக பக்கமே அதிகமாகச் சாய்கிறார் 
இப்போதிருக்கும் நிலைமையில் வேறு என்ன செய்ய முடியும்? நான்கு பிள்ளைகளில் நல்லவன் யாரென ஒரு தகப்பனைக் கேட்க அவனோ, கூரைமேல் தீப்பந்தத்துடன் நிற்பவனே நல்லவன் எனக் கூறுவதாக ஒரு கதையும் உண்டு.

நான் ஏற்கனவேயே கூறியது போல, ”மோதி மாதிரி எல்லோரும் இருப்பதில்லையே, ஆகவே அவர் மாதிரி ஒருவர் நமக்கு முதல்வராக கிடைக்காதவரை ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருவரும் தேறவில்லை எனக்கூற ஐந்து நிமிட்ங்கள் கூட ஆகாது. ஆனால் அவ்வாறு இருப்பது காரியத்துக்காகாது.

இதைத்தான் சோ பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி வருகிறார். அவரது செயல்பாடுகளும் இம்மாதிரித்தான்.

மேலும் ஜெவுக்கு செம்பு அடிப்பதால் அவருக்கு என்ன லாபம்? தன் சுய தேவைகளுக்காக சோ அவர்கள் யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லையே. அதை நாம் மறக்கக் கூடாது”.

Form 26 AS:
வரவர இந்த வருமானவரித்துறையின் லொள்ளுக்கு அளவில்லாமல் போயிற்று. சில பணவரவுகளுக்கு முதலிலேயே வரி பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்த வேண்டியது பணம் தருபவரது கடமை. இதை TDS (Tax deduction at source) என்பார்கள். நமக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட் தருவார்கள். அதுதான் படிவம் 16 ஏ. பல கம்பெனிகள் இங்குதான் அழும்பு செய்யும். வரியை பிடிப்பார்கள், ஆனால் கருவூலத்தில் அதை செலுத்த சரியான நேரத்தில் மாட்டார்கள். படிவம் எண் 16 ஏ தராமல் நம்மைத் தொங்கலில் விடுவார்கள். அதை வாங்குவதற்குள் நமது தாலி அறுந்து போகும்.

அதற்குத்தான் அரசு படிவம் 26 ஏஎஸ் கொண்டு வந்தது. அதை நாம் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கென் பல வழிமுறைகள் உண்டு. திடீரென அதிலும் குழப்பம் வந்தது. அக்டோபர் 31, 2012-க்கு பிறகு இப்படிவத்தில் இற்றைப்படுத்தலே இல்லை. முட்டி மோதி விசாரித்ததில் அப்படிவத்தின் தளம் மாற்றப்பட்டது எனத் தெரிகிறது. (சொல்லவே இல்லை!)  புதிய தளத்தில் மறுபடி பதிய வேண்டும். நேற்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் மன்றாடிய பின்னர்தான் அதுவும் நடந்தது.

எனது கேள்வி இதுதான். படிப்பறிவு பெற்ற நாமே இப்பாடுபடும்போது, மற்றவர்கள் என்ன செய்வார்கள்? எல்லோருமே வரி ஆலோசகர்களை நியமித்துக் கொள்ள இயலுமா?

மானிய விலையில் வருடத்துக்கு 9 கேஸ் சிலிண்டர்கள் எனச் சலுகை உயர்வு:
நிலைமையில் தெளிவு இல்லை. ஒரே கெடுபிடிதான். இத்தனைக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் சப்சிடிதான். தற்சமயம் வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 398 ரூபாய்கள். ஆனால் உண்மையாகவே அதன் விலை சுமார் 890 ரூபாய்கள்.

என்ன நடக்கிறதென்னவென்றால், துண்டு விழும் ரூபாய்கள் சப்சிடி ஆகும். அவ்வாறு சப்சிடி பெறுபவர்கள் எல்லோருமே தினக்கூலிகள் அல்ல. இது முற்றிலுமே ஓட்டு பொறுக்கும் பிரச்சினை.

இண்டேனுக்கு அரசு அளிக்கும் த்கையும் திருப்திகரமாக இல்லை.ஆகவே இந்த சிலிண்டர்களை நிரப்புவதில் இண்டேனுக்கும் அக்கறை இல்லாமலிருப்பது புரிந்து கொள்ள்ளக் கூடியதே. சுதந்திரச் சந்தையில் உள்ளே புகுந்து அரசு குளறுபடி செய்வதற்கான உதாரணமாகவே இதை எடுத்து கொள்ளலாம்.

இதற்கு என்ன வழி? எனக்குத் தோன்றுவதை கூறுகிறேன். பேசாமல் இந்த சப்சிடியை மொத்தமாக ஒழியுங்கள், அல்லது கணிசமாகக் குறையுங்கள். இண்டேன் கம்பெனிக்கு அரசு தரும் விலையும் யதார்த்தத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு பாருங்கள், இந்த கோட்டா முறையெல்லாம் ஒழிந்து மக்களும் தேவையின்றி பதுக்க மாட்டார்கள்.

1949-ல் ஜெர்மன் ஃபெடெரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு, Reichmark விலக்கப்பட்டு Deutschmark வந்து, ரேஷன் முறையும் ஒழிக்கப்பட்டது. அதுவரை காலியாக இருந்த கடைகளில் எங்கிருந்தோ பொருட்கள் வந்து ஷெல்ஃப்களை அலங்கரித்தன. அதுவரை அரசு சப்சிடி சார்ந்த குறைந்த விலையால் பொருட்களை விற்பவருக்கு ஊக்கம் இல்லாமல் இருந்ததே முந்தைய நிலைக்கு காரணம் என்பது பின்னால் புலப்பட்டது.

இவ்விஷயத்தில் இந்திய உதாரணங்களுக்கும் பஞ்சமில்லை  மோதி பதவிக்கு வந்த சமயத்தில் குஜராத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழக அரசு வழ்ங்கும் மின்சாரம் போல எப்போதாவதுதான் வந்தது.

மோதி ஒரே ஒரு ப்ரபோசலை வைத்தார், பணம் கட்டுங்கள் 24 மணிநேர மின்சாரம் என்று. அவர்களும் ஒத்து கொண்டனர். குஜராத் இப்போது விவசாயத் துறையில் அமோகமாக முன்னேறியுள்ளது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அதே மாதிரி சமீபத்தில் 1952-ல் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற ராஜாஜி அவர்கள் செய்த முதல் காரியம் ரேஷன் முறையை விலக்கிக் கொண்டதே. அதனால் பல பொருள் விரயங்கள் தடுக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அது அமுலுக்கு வந்தது. 1964 வரை ரேஷன் முறை இல்லாமல்தான் இருந்தது. அவ்வாண்டு ரேஷன் மீண்டும் வந்ததிலிருந்து இன்றுவரை நிலைமை விரயங்களுடன் அப்படியே உள்ளது. நமக்கெல்லாம் இன்னொரு ராஜாஜி அல்லது மோதி தேவை.

ஆக, சப்சிடி சிலிண்டர்களது எண்ணிக்கை வருடத்துக்கு 6 என கட்டுப்படுத்தியது நல்ல, சரியான ஸ்டெப்தான். ஆனால் வழமையான ஓட்டுப் பொறுக்கும் அரசியலால் இப்போது அது ஆண்டுக்கு 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழப்பங்கள் தொடர்கின்றன..  இப்போதைய நிலவரப்படி சப்சிடி சிலிண்டர்களை வினியோகிப்பது 6/9 குழப்பத்தால் நிறுத்தப்பட்டுள்ளது என அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்



.


-

4 comments:

ப.கந்தசாமி said...

உண்மை.

காத்தவராயன் said...

// நமக்கெல்லாம் இன்னொரு ராஜாஜி அல்லது மோதி தேவை//

எங்களுக்கு இன்னொரு காமராஜரே போதும்.
ராஜாஜியோ மோதியோ தேவையில்லை.

Muthu said...

((
// நமக்கெல்லாம் இன்னொரு ராஜாஜி அல்லது மோதி தேவை//

எங்களுக்கு இன்னொரு காமராஜரே போதும்.
ராஜாஜியோ மோதியோ தேவையில்லை.
))

ஆனா நாங்க அப்படி யாராச்சும் தப்பி தவறி வந்துட்டா ஒண்ணு "குலக்கல்வி கொண்டுவந்த குல்லுகபட்டர்"-ன்னோ, "அண்டங்காக்கை"-ன்னோ உச்சகட்ட நாகரீகத்தோட அவங்களை "வரவேற்று" உபசரிப்போம். அப்புறம் உபசரிப்பு முடிஞ்சு அவங்களா ஒரு ஓரமா ஒக்காத்தி வெச்சுட்டு நாங்க மேல போன (மேல் லோகம் இல்லைங்க) உடனே கால் மேல கால் போட்டுக்கிட்டு "மானாட மயிலாட" ரசிக்க ஆரம்பிச்சிடுவோம்.

'தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு'-ன்னு சும்மாவா சொன்னங்க ?

k.rahman said...

சோ அதிமுக பக்கம் சாய குடாது என்று நினைத்தால் அதை விட முட்டாள் தனம் எதுவும் இல்லை. ஆனால் அவர் அதிமுக காரனகேவே மாறி விட்டார் என்பது தான் வருத்தமான விஷயம். இந்த இரண்டு வருடங்களில் ஏதாவது ஒரு விஷயமாவது அவர் அதிமுகவை எதிர்த்து எழுதி இருக்கிறாரா துக்ளகில்? ஜெயலலிதா செய்வது ஒரு துக்ளக் ஆட்சி. இதை எதீர்து பேச தைரியம் இல்லாத சோ எல்லாம் ஒரு பத்திரிகையாளன்!. (வேறு யாரவது இருந்தால் தூ என்று வார்த்தையை முடித்திருப்பேன். சோ என்பதால் சொல்ல வில்லை.) இதில் தைரியமாக பேச குடியவர் என்ற பெயர் வேறு இவருக்கு. பேசமால் நமது எம்ஜீஆர் - வார இதழ் என்று அவர் பத்திரிகை பெயரை மாற்றி விடலாம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது