11/14/2007

பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக

நான் இந்தப் பதிவில் இட்டப் பின்னூட்டம் இதுவரை வெளிவரவில்லை. அது பதிவரின் சாய்ஸ். ஆயினும் அக்கருத்தும் கூறப்பட வேண்டும் என்பதால் நான் அப்பின்னூட்டத்தையே இப்பதிவின் அங்கமாக வைக்கிறேன்.

"வேலைக்காரிகள் முக்கால்வாசி சமயங்களில் தம் குடும்பத்தினரின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர்கள். தன்னைப் போல தன் குழந்தைகள் ஆகக்கூடாது என்னும் ஆசையில் தங்கள் சக்திக்கு மீறி அவர்களைப் படிக்க வைப்பவர்கள். அவர்களை உங்கள் நகைச்சுவைக்கு பாத்திரமாகப் போட்டது நல்ல டேஸ்ட் அல்ல.

மேலும் இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. எங்காவது வேலைக்காரன் ஜோக்ஸ் பார்த்திருக்கிறீர்களா? இவ்வாறு பெண்களுக்கு இழிவு தரும் இம்மாதிரி ஜோக்ஸ்களை பெண்ணான நீங்களே போட்டிருப்பது கொடுமை.

வேறு எங்கிருந்தோ எடுத்து காப்பி பேஸ்ட் போட்டதால் மட்டும் உங்கள் பொறுப்பு மறைந்து விடாது
".

ஆனந்தவிகடன் எனக்கு பிடித்த பத்திரிகை. பல நல்ல விஷயங்கள் அதில் உள்ளன. ஆயினும் அவர்களிடம் எனக்கு பிடிக்காததே இந்த வேலைக்காரிகளை இழிவு செய்யும் ஜோக்குகள்தான். அது சம்பந்தமாக என்னால் பல உதாரணங்கள் காட்ட இயலும். ஆனாலும் அந்த உதாரணங்களையும் ஜோக்காக நினைத்து பலர் மகிழும் அபாயம் இருப்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.

ஒரு சராசரி வேலைக்காரி பல வீடுகளில் வேலை எடுக்கிறார். ஏன்? கிட்டே சென்று பார்த்தால் தன் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கவே இந்தப் பாடுபடுகிறார் என்பது தெரியவரும். உதாரணமாக என் வீட்டில் வேலை செய்பவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். முதல் தலைமுறையாக அவர்கள் குடும்பத்தில் படிப்பவர்கள் ஆகையால் வீட்டில் வைத்து சொல்லிக் கொடுக்க அவர்களது தாய் தந்தையரால் இயலாது. ஆகவே டியூஷன் வேறு வைக்கின்றனர். இதற்கெல்லாம் பணம்? கூடவே இன்னொரு கொடுமை. வேலைக்காரிகளின் கணவன்மார்கள் சாதாரணமாக தாம் சம்பாதிப்பதையெல்லாம் பெரும்பகுதி குடித்துவிட்டு தொல்லை செய்பவரகள். சமயத்தில் மனைவியிடமே குடிக்க காசு கேட்டு தொந்திரவு செய்பவர்கள்.

காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் நான்கைந்து வீடுகளில் வேலை செய்துவிட்டுத் திரும்ப வீட்டுக்கு வர எப்படியும் 12 மணியாகி விடும். அதற்கப்புறம்தான் சோறு ஆக்குவது, துணிதுவைப்பது எல்லாமே. சில வீடுகளில் இரண்டு வேளையும் செல்ல வேண்டியிருக்கும். அப்போது ஓய்வு எடுக்கக் கூட நேரம் இருக்காது. சிலர் பூக்களை மொத்தமாக வாங்கிவந்து மாலையாகக் கட்டி சம்பாதிக்கிறார்கள். பலரது குழந்தைகள் வேறு அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை எனில் அவர் வேலை செய்யும் வீடுகளுக்கு வந்து அம்மாவுக்கு உதவியாக இருப்பது வேறு நடக்கிறது.

இவ்வளவும் செய்து வருபர்களை குறியாக வைத்து ஜோக்ஸ் போடுவது அவசியம்தானா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2007

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி தோய்த்து எடுக்கப்படும் தயிர் பாலின் விலையை விட அதிகம். அதே போல தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து, மிகுந்து போன மோரை விற்று, வெண்ணையையும் விற்றால் இன்னும் அதிகப் பணம் கிட்டும். அதே வெண்ணையை நெய்யாக்கினால் கிடைக்கும் பணமும் அதைவிட அதிகமே. அதே நெய்யை, இன்னும் பல பொருட்களுடன் சேர்த்து பட்சணம் செய்தால் பிய்த்துக் கொண்டு போகும் என்பதை அடையார் காந்தி நகரில் இரண்டாம் மெயின் ரோட்டில் உள்ள க்ராண்ட்ஸ் இனிப்பகத்தின் முதலாளி நன்கு அறிவார். இந்த ப்ராசஸின் எல்லா காலக் கட்டங்களிலும் வெவ்வேறு பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கூறவும் வேண்டுமோ?

"இப்போது என்னதான் கூறவருகிறாய்" என்று முரளி மனோஹர் கூச்சலிடுவதால் நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

நான் கூறியது மதிப்புக் கூட்டலாகும். ஒரு சாதாரண நிலத்தில் தொழிற்சாலை கட்டினால், அது லாபம் ஈட்டினால் போட்ட முதல்களுக்கு பல மடங்கு லாபம் வருவதும் இந்த மதிப்புக் கூட்டலால்தான். பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது நம் நாட்டின் பஞ்சை லங்காஷயருக்கு ஏற்றுமதி செய்து ஆடைகளாக நெய்து, மதிப்பைப் பலமடங்கு கூட்டி நம்மூர் மார்க்கெட்டிலேயே விற்று ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தினார்கள்.

என்னுடைய உதாரணத்தையே இங்கும் எடுக்கிறேன். நான் பொறியியல் படித்து வேலை தேடும்போது எனது மதிப்பு x என்று வைத்து கொள்வோம். அது வெறுமனே எனக்கு மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியர் வேலை வாங்கிக் கொடுத்தது. பத்து ஆண்டுகள் அதே பதவியில்தான் இருந்தேன். அதன் கடைசி ஆண்டுகளில்தான் பதவி உயர்வுக்கான தேர்வைக் கொண்டு வந்தார்கள். நான் எடுத்த சுயமுடிவு காரணமாக அத்தேர்வை எழுதவில்லை. ஏனெனில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் வரும். எனது தந்தைக்கு ஒரே மகனாகிய நான் சென்னையை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்பதெல்லாம் பை தி வே நிகழ்ச்சிகள். இப்பதிவுக்கு அது வேண்டாம். மதிப்பு கூட்டலுக்கு நான் ஒத்துக் கொள்ளாததால் நான் அதே நிலையில் இருந்தேன். ஆனால் இது நிலையானதல்ல. என் தந்தையின் மரணத்துக்கு பிறகு என்னை சென்னையில் நிறுத்திக் கொள்ள முக்கிய விஷயங்கள் ஒன்றும் இல்லை. அச்சமயம் நான் அறிந்த ஃபிரெஞ்சு மொழி எனக்கு மொழிபெயர்ப்பாளர் வேலை வாங்கிக் கொடுத்தது. நான் அச்சமயம் 425-700 ஸ்கேலில் இருந்தேன். மொழிபெயர்ப்பாளன் மற்றும் பொறியாளனாக நான் சென்ற பதவியின் ஸ்கேல் 700-1300. பயங்கர அளவில் மதிப்பு கூட்டல் அல்லவா? (மதிப்பு 2x)

தில்லியில் பொறியாளர் மற்றும் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தபோதுதான் மதிப்புக் கூட்டல் எந்த அளவுக்கு நடந்தது என்பதை நேரிடையாக உணர முடிந்தது. அதாவது பொறியாளர்கள் இருப்பில் குறைவேயில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் இருப்பிலும் அதே கதைதான். பலர் உண்டு. ஆனால் இரண்டு வேலைகளையும் செய்பவர்கள்? தில்லியைப் பொருத்தவரை அச்சமயம் யாருமே இல்லை, என்னைத் தவிர என்றுதான் நினைக்கிறேன். ஆகவே எனது மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. (3x)

வீ.ஆர்.எஸ். வாங்கியதும் நிலை என்ன? எனது மதிப்பை இன்னும் அதிகமாக்கினால்தான் நான் கேட்கும் ரேட்டில் வேலை கிடைக்கும். அதற்கு என்ன செய்யலாம்? மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தரத் தயங்கும் அல்லது தர இயலாத சேவை அளிக்க வேண்டும். அதுதான் வாடிக்கையாளர் இடத்திற்கே சென்று மொழிபெயர்த்து தருவதாகும். (4x)

பிறகு சென்னைக்கு வந்து செட்டில் ஆனபோது அடுத்த மதிப்புக் கூட்டல் நடந்தது. முதல் முறையாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கி எனது தில்லி வாடிக்கையாளருக்கு சேவை தொடர்ந்து அளித்தேன். ஆக சேவை அளிப்பவர் வசிக்கும் இடம் எங்கிருந்தாலும் அவர் வேறு எல்லா இடங்களிலும் வசிக்கும் வாடிக்கையாளருக்கு சேவை அளிக்க இயலும் என்பதே நிஜமாயிற்று. பிறகு சொந்தக் கணினி வாங்க மதிப்பு இன்னும் கூடியது. தமிழ்ப் பதிவுகள் போடப்போட அதுவரை எடுக்காத தமிழ் மொழிபெயர்ப்புகளும் செய்ய முடிந்தது. ஆக, மதிப்புக் கூட்டல் விடாமல் நடக்கிறது. (5x, 6x...). போதுமா இது? நிச்சயம் போதாது. உலகமயமாக்கல் சூழ்நிலையில் ஒரே இடத்தில் நிலை கொள்வதற்கே ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

"வேறு உதாரணங்கள் கூறு, போதும் உன் சுய அலம்பல்", என்று முரளி மனோஹர் மறுபடியும் கோபிக்கிறான். ஆகவே இதோ மற்ற சில உதாரணங்கள்.

சாதாரணமான குப்பை வாருவதை காண்ட்ராக்ட் எடுத்து விஞ்ஞான முறைப்படி அதைக் கையாண்டு வெற்றி பெற்ற நிறுவனங்கள் இல்லையா. மனிதக் கழிவுகளுக்காக சுலப் சவுச்சாலய் நிறுவி ஓகோ என்றெல்லாம் வந்து விட்டார்களே. எனது இந்தப் பதிவையே பாருங்களேன். எந்த சேவையுமே அதன் மதிப்பு கூட்டப்படும்போது அதன் விலையும் அதிகரித்து நல்ல லாபம் கிட்டுகிறதல்லவா?

எந்தச் சேவையையும் அளிக்கும் விதத்தில் அளித்தால் அதன் மதிப்பு கூடும். உதாரணத்துக்கு கிராமங்களில் நாவிதராக இருந்து சில படி அரிசிகள் பெற்று செல்பவர்கள் நிலைக்கும் பியூட்டி பார்லர்கள் நடத்துபவர்கள் பொருளாதார நிலைக்கும் உள்ள வித்தியாசத்தையே பாருங்கள். அதே போல கிராமத்து வண்ணார்களுக்கும் நகரத்தில் டிரை கிளீனிங் நடத்துபவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தெருவோரம் அமர்ந்து வேலை செய்யும் செருப்பு ரிப்பேர் செய்பவருக்கும் பாட்டா கம்பெனிக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு எல்லாமே கூர்ந்து கவனிக்கத் தக்கவை. பல டூத்பிரஷ் கம்பெனிகள் தங்களது பிரஷ்கள் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்கின்றன. குடிசைத் தொழில் அடிப்படையில் செய்யப்படும் பிரஷ்கள் கம்பெனி பிராண்ட் நேம் பெற்றவுடன் அதன் விலை எந்த அளவுக்கு உயர்கிறது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/12/2007

உங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள்

மகாபாரதம் யுத்தம் முடிந்தது. யுதிஷ்டிரர் மன்னராகிறார். பாண்டவர்கள் தம் மனைவி துரோபதி பின்தொடர,பீஷ்மர் சாய்ந்திருக்கும் அம்புப் படுக்கைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு ஆசியளித்த பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு பல நல்ல விஷயங்களை உபதேசிக்கிறார். அப்போது துரௌபதி தன்னையும் அறியாது கேலிப் புன்னகை செய்கிறாள்.

பீஷ்மர் தான் கூறுவதை நிறுத்திவிட்டு துரோபதி அவள் ஏன் புன்னகை புரிந்தாள் எனக்கேட்க, அவள் கூறுகிறாள்.

"பிதாமகரே, இத்தனை நல்ல விஷயங்கள் கூறுகிறீர்களே, அவற்றில் ஒன்றுகூட நான் சபையில் மானபங்கம் செய்யப்பட்டபோது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா"?

பீஷ்மர் கோபப்படாது பதிலளிக்கிறார். "அம்மா, அச்சமயம் நான் துரியனின் உப்பைத் தின்று வந்தேன். அதனால் எனது ரத்தத்தில் அவனது கெட்ட எண்ணங்கள்தான் ஆட்சி புரிந்தன. நானும் சும்மா இருந்து விட்டேன். ஆனால் இப்போது அந்த கெட்ட ரத்தத்தை எனது அருமை அருச்சுனனின் பாணங்கள் வெளியேற்றி விட்டன. இப்போது நல்ல புத்தி திரும்பியது".

ஆனால் இந்த இடத்தில் நான் வேறு ஒரு விஷயத்தைப் பார்க்கிறேன். இந்த தர்மசங்கடம் பீஷ்மராகத் தேடிக்கொண்டது. அவரது தந்தை சந்தனு சத்யவதி என்னும் பெண் மேல் ஆசைப்பட, அவளை அவருக்கு மணமுடிக்க வேண்டுமென்றால் அவளுக்கு அவரிடம் பிறக்கும் மகனுக்குத்தான் பட்டம் என்று அவள் தந்தை நிபந்தனை விதிக்கிறார். தனது மகன் தேவவிரதன் இருக்க, இம்மாதிரி தாம் செய்வது தகாது என சந்தனுவும் அரண்மனைக்கு திரும்பிவிடுகிறார். இந்த விஷயத்தை தேவவிரதன் மூன்றாமவர் மூலமாக அறிந்து சத்யவதியின் தந்தையிடம் அவளை தன் தந்தைக்கு மணம் முடித்துத் தருமாறு கேட்கிறார். பட்டமும் சத்யவதியின் மகனுக்கே எனக் கூறுகிறார்.

ஆனால் சத்யவதியின் தந்தை ஒரு முன்ஜாக்கிரதை முத்தண்ணா. அவர் கூறுகிறார். "இளவரசே, நீங்கள் வாக்கு தவறாதவர். அது எனக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு பிறக்கும் மகன்களைப் பற்றி நான் ஏதும் கூற இயலுமா? அவர்கள் பிற்காலத்தில் எதிர்த்தால் என்ன செய்வது"?

இப்போதுதான் தேவவிரதன் கடுமையான சபதம் செய்கிறார், தான் எக்காரணம் கொண்டும் திருமணமே செய்யப்போவதில்லை என்று. வானத்திலிருந்து புஷ்பமாரி பொழிகிறது. பீஷ்மா என்று அவர்க்கு பெயரும் மாறுகிறது. அக்கதை மகாபாரதம் தெரிந்த கிட்டத்தட்ட எல்லோருமே அறிவர். ஆனால் அந்த சபதத்தால் அவருக்கு என்னென்ன தர்மசங்கடங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தால் மலைத்து போவீர்கள். சத்திய்வதியின் புதல்வன் விசித்திரவீர்யனுக்காக பெண்ணெடுக்கப் போன இடத்தில் குளறுபடி ஆரம்பிக்கிறது. அதுபற்றி விரிவாக இன்னொரு முறை கூறுகிறேன். ஆனால் இது சம்பந்தமாக அம்பையின் விரோதம் ஏற்பட்டு அவள் அடுத்த பிறவியில் சிகண்டியாக வந்து அவரது மரணத்துக்கு காரணமாகிறாள். அதுவும் வேறு கதை. இச்சிக்கல் வந்ததன் காரணமே பீஷ்ம பிரதிக்ஞைதான் என்று கூறினால் மிகையாகாது.

விசித்திர வீரியன் வாரிசின்றி இறக்க, சத்யவதியின் தந்தையே தனக்கு பீஷ்மர் செய்து தந்த சத்தியத்திலிருந்து அவரை மீட்டு, அவர் விசித்திர வீர்யனின் விதவைகளை மணம் புரிய வேண்டும் எனக் கேட்க, அப்போதும் மறுப்பது பீஷ்மர் தனக்குத்தானே வைத்து கொண்ட கட்டுப்பாடே. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, பொது நலனுக்குகந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்ள அவர் தவறியதே மகாபாரதப் போருக்கு அடிவகுக்கிறது.

யுதிஷ்ட்ரர் சூதாடியதும் அவர் செய்த ஒரு பிரதிக்ஞை காரணமே என்பதை எவ்வளவு பேர் அறிவீர்கள்? குல நாசம் ஏற்படப் போகிறது என்று தௌம்ய முனிவர் கூறிவைக்க, உறவினர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றப் போவதாக இவர் சபதம் செய்து தொலைக்க, துரியன் கேட்டுக் கொண்டபடி சூதாட்டம் ஆடத் துவங்க என்றெல்லாம் கதை போகிறது.

மீண்டும் பீஷ்மர். கௌரவ அரசவையில் துரோபதைக்கு அவமானம் செய்தது துரியன். அவனையும் துச்சாசனையும் செவுளில் நாலு அறை விட்டு துரோபதையைக் காத்திருக்கலாம் பீஷ்மர். ஆனால் செய்யாததற்கு காரணம் அத்தினாபுரத்து அரசனுக்கு துணையாக இருப்பதாகவும் அவர் கொடுத்த வாக்கு அவரது மூல சபதத்தின் ஒரு பகுதி.

இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். யுத்தம் என்று வரும்போது உங்கள் யுக்திகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். "முன்பு நீங்கள் வேறுமாதிரி செய்தீர்களே, இப்போது இம்மாதிரி செய்கிறீர்களே" என்று விஷயம் புரியாதவர்கள்/புரிந்தவர்கள் கேட்டாலும் அதை புறம் தள்ளிப் போகத் தெரிய வேண்டும். முக்கியமாக உங்களை ஒருவரும் டைப்காஸ்ட் (typecast) செய்ய இடம் தரலாகாது.

யுத்தம் என்று மட்டுமல்ல. எப்போதுமே டைப்காஸ்ட் ஆகாமல் தவிர்க்கவும். நீங்கள் நல்ல முறைகளைப் பிரயோகிப்பது உங்கள் நலனுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். மற்றவருக்கு தீமை செய்யலாகாது என்று இருப்பதன் முக்கிய நோக்கமே தனக்கும் அதே நிகழாலாம் என்ற பயமேயாகும்.

முக்கிய நோக்கம் இறுதி வெற்றி. அது வரும் வரைக்கும் நீங்கள் திசை திரும்பலாகாது. நாலு பேர் என்ன கூறுவார்களோ என யோசித்து கொண்டிருந்தால் அதோகதிதான். ஏனெனில் எதிரி அவ்வாறெல்லாம் யோசித்து நேரம் வீணாக்க மாட்டான்.

இதைச் சொன்னதும் நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. டாமும் ஹாரியும் நண்பர்கள். அவர்களது மனைவியரும் தோழிகள். நால்வருமாகச் சேர்ந்து உல்லாசப் பயணம் செல்கின்றனர். ஹோட்டலில் இரண்டு அறைகள் ஒவ்வொரு தம்பதிக்கும் புக் செய்துள்ளனர். போன இடத்தில் மழை. நால்வரும் ஹோட்டலுக்கு ஓடி வருகின்றனர். மின்சாரம் வேறு ஃபெயில் ஆக, எங்கும் இருட்டு. தட்டுத் தடுமாறி தத்தம் மனைவியருடன் டாமும் ஹாரியும் அறைகளுக்கு திரும்புகின்றனர். டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஐந்து நிமிடம் அதில் செல்ல, பிரார்த்தனை முடியவும் மின்சாரம் திரும்ப வரவும் நேரம் சரியாக உள்ளது. இப்போதுதான் டாமுக்கு தெரிகிறது தன்னுடன் தன்னறையில் வந்தது ஹாரியின் மனைவி என்று. துடிப்பாக கதவை நோக்கி அவன் ஓட ஹாரியின் மனைவி கூறுகிறாள். "டூ லேட் டாம். ஹாரி பிரார்த்தனையெல்லாம் செய்வதில்லை".

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/09/2007

சேமிப்பது சரியா, தவறா?

நான் போன ஆண்டு துவக்கத்தில் இட்ட இந்தப் பதிவைப் பார்க்கவும்.

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் அதியமான அவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஜப்பானியரின் சேமிக்கும் வழக்கத்தையும், அமெரிக்கரின் செலவு செய்யும் வழக்கத்தையும் குறித்து ஒரு பேராசிரியர் எழுதியதை மேற்கோள் காட்டியிருந்தார். அதை நான் கூகளில் தேட, கிடைத்த பல சுட்டிகளில் ஒன்றில் அதைப் பற்றி மேலே அறியலாம்.

14.11.2007 குமுதம் இதழின் இணைப்பில் சுஜாதா அவர்கள் பணத்துடன் தனது அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிலவரிகள். "என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன். எப்போதும் தேவைக்கு சற்றே குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்ப்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டி விடலாம்". கடைசி வரி தமாஷ் எஃபக்டுக்காகக் கூறியதாகவே கொள்கிறேன். ஏனெனில் பேங்க் பாஸ் புத்தகத்தை திறந்து காட்டுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும். மற்றப்படி சுஜாதா கூறுவதில் விஷயம் உள்ளது.

தாம்தூம் என்று செலவழிப்பவர்கள் சேமிக்கும் வழக்கம் உள்ளவரிடம்தான் கடனுக்கு என்று வந்து நிற்பார்கள். அவர்களை எப்படி எதிர்க் கொள்வது? நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்தபோது ஒரு பம்ப் ஆப்பரேட்டர் எல்லோரிடமும் கடன் வாங்குவதையே தொழிலாக வைத்திருந்தார். எல்லோரும் அவர் வந்து கடன் கேட்கும்போதே தங்கள் குறைகளைச் சொல்லி மூக்கால் அழுவார்கள். ஆனால் நான் மட்டும் சற்றே வித்தியாசமாக ரியேக்ட் செய்தேன். என்னிடம் கடன் கேட்டபோது சாதாரணக் குரலில் இல்லை எனக் கூற, அவர் "ஏன் சார் உங்களுக்கும் பணக்கஷ்டமா"? எனக் கேட்க, "நான் அதெல்லாம் இல்லை, ஆனால் உனக்குக் கடன் தர விருப்பமே இல்லை" என்று முகத்திலடித்தது போல கூறினேன். அதுவும் எல்லார் முன்னிலையிலும். அதிலிருந்து அவர் என்னிடம் மட்டும் கடன் கேட்பதில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் உதவுவது வேறு, இம்மாதிரி கடன் கொடுத்து ஏமாளியாவது வேறு.

சரி, பதிவுக்கு வருவோம். சேமிப்பது நல்லதா கெட்டதா? மேலே உள்ள உதாரணங்களில் அது கெட்டது போன்ற தோற்றம் அளிக்கலாம். மற்றவர் கடன் கேட்கும் பிரச்சினை நிச்சயம் உண்டுதான். அதற்காக நாமும் தாம் தூம் என்று செலவு செய்து விடலாமா? நமக்குத்தானே அது கெடுதல்? கடன் கேட்டால் அதை சமாளிக்க ஆயிரம் வழிகள் உள்ளன. சேமித்து நல்லபடியாக முதலீடு செய்தால் அதன் மூலம் அதிக வருமானம் வருமல்லவா? விலைவாசிகள் என்னவோ குறையப்போவதில்லை. செலவுக்கு மேலேயே வருமானம் இருக்குமாறு பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கான முறைகளில் ஒன்றுதான் சேமிப்பின் மூலம் நமது பணமே நமக்காக மேலும் பணம் ஈட்டுவதாகும். இன்னொரு வழி செலவுக்கு மேலே வருமானம் ஈட்ட வேண்டியதுதான் என்பதையும் கூறவேண்டுமோ?

அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.

எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் (என் மனைவியின் அண்ணன்) வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.

இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது