9/13/2005

விடாது துரத்தும் கேள்விகள்

என்னுடைய முந்தைய கேள்விகளில் இரண்டுக்கு பதில் வரவில்லை ஆதலால் அவற்றை இங்கு முதல் இரண்டு கேள்விகளாக கேரி ஓவர் செய்கிறேன்.

1. ஓட்டப் பந்தயத்தில் ராமமூர்த்திக்கு முதலிடம் கிடைத்தது ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏன் இந்த அக்கிரமம்?

2. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?

3. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).

4. ஆங்கிலத் தேர்வில் ஆசிரியர் ராமுவிடம் entertainment-க்கு ஸ்பெல்லிங் கேட்டார். ராமு e n t e r t a i n m e n t என்று நிறுத்தி நிதானமாகக் கூற ஆசிரியர் கோபத்துடன் wrong get out என்று கத்த, ராமு வெளியேறினான். இதே மாதிரி மற்ற சரியான விடைகள் கூறிய ஒவ்வொரு மாணவனிடமும் இதையே கூற அவர்களும் வகுப்பிலிருந்து வெளியேறினர். கடைசியில் கஸ்தூரிரங்கன் மட்டும் சமாளித்து வகுப்பில் தங்கினான். எப்படி?

5. ஒரு குதிரை பாதிரியாரைத் தாண்டி குதித்து ஒரு மனிதன் மேல் விழ அவன் மறைந்து போனான். பாதிரியார் ஒன்றுமே நடக்காதது போல தன் வேலையைக் கவனித்தார். என்ன விஷயம்?

6. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் வெளிப்புறம் பெயின்ட் அடிக்க வேண்டியிருந்தது. பெயின்டர் வெளியே தொங்கவிடப்பட்ட நூலேணியின் கடைசி படிக்கட்டின் மேல் நின்று வேலை செய்கிறார். அப்படிக்கட்டு நீர்மட்டத்தின் மேல் இரண்டு அடி உயரத்தில் உள்ளது. கடல் ஏற்றம் (hightide) காரணமாக நீர்மட்டம் 10 அடி உயருகிறது. பெயின்டர் நீரில் கால் நனையாமல் இருக்க எவ்வளவு படிகள் மேலே ஏற வேண்டியிருக்கும்? ஒவ்வொரு படியும் ஒரு அடி உயரம்.

7. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாத்தா, இரண்டு தந்தைகள், இரண்டு மகன்கள், ஒரு பேரன் ஆகியோர் வேட்டைக்கு செல்கின்றனர். 12 வாத்துக்கள் கிடைக்கின்றன. ஆளுக்கு எவ்வளவு வாத்துக்கள் கிடைக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/12/2005

நவ்யா மாதிரி ப்ராக்டிகலாக இருங்கள்

தங்கர்பச்சான் பற்றி பேச மறுக்கும் நவ்யா

இயக்குநர் தங்கர்பச்சானை திரைப்பட நடிகர், நடிகைகள் நடத்திய விதம் குறித்து தமிழ் தேசியவாதிகள் கொதித்துப் போயுள்ள நிலையில், அந்தப் பிரச்சினைக்கு மூல காரணமான நவ்யா நாயர், அதைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

"இந்தப் பிரச்சினை குறித்து எந்த எதிர்வினையும் ஆற்ற விரும்பவில்லை. சினிமாவில் நடிகைகளுக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதேபோல் இயக்குநர்களுக்கும் ஒரு கண்ணியம் இருக்கிறது. அந்தப் பிரச்சனை இப்போது முடிவடைந்து விட்டது. எனவே அதைப் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை" என்று கூறி அடுத்த டாபிக்குக்குத் தாவியவர்,

"நான் பதினைந்து வயதில் நடிக்க வந்தேன். அப்போது சினிமாவில் நடித்தால் போதும் என்று இருந்தேன். இப்போது நல்ல கதையா என்று கேட்டு நடிக்கிறேன். 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். 'அமிர்தம்' படத்தில் இயல்பில் நான் எப்படிப்பட்ட பெண்ணோ அதேபோல் நடிக்கிறேன்.

2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது குறித்து எனக்கு எந்தக் கவலையோ, பயமோ கிடையாது. கமர்ஷியல் படங்களையும் இவற்றையும் குழப்பிக்க விரும்பலை.

எனக்கு கிளாமர் வேடம் எடுபடுமா என்பது நான் கிளாமரா நடிக்கும்போதுதான் தெரியும். மக்களுக்கு நான் அவ்வாறு நடிப்பது பிடிக்கவில்லை என்றால் நான் அதை நிறுத்தி விடுவேன்.

'அழகிய தீயே' படம் எனக்கு தமிழில் நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறது. அடுத்தடுத்து நல்ல வேடங்களில் நடித்து, தமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பேன்" என்றார்.

பார்க்க ஸ்டில்லுடன்: http://www.keetru.com/cinema/sep-05/nayar.html

நாமும் உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பதை விட்டு விட்டு வேறு ஏதாவது நல்ல வேலையைப் பார்ப்போமே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/11/2005

வாடகை நூலகங்கள்

எழுபதுகளில் வாடகை நூலகங்கள் என் வாழ்வில் பெரும் பங்கு வகித்தன. பிரிட்டிஷ் கௌன்சில், அமெரிக்க நூலகம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு நூலகங்களில் உறுப்பினராக இருந்தாலும் அங்கெல்லாம் கிடைக்காத புத்தகங்கள் வாடகை நூலகங்களில் கிடைத்தன.

இந்த வகையில் சென்னை லாயிட்ஸ் ரோடில் (அவ்வை ஷண்முகம் சாலை) இருந்த (இன்னும் இருக்கும்?) ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி மிக முக்கியமானது. அதன் உரிமையாளர் பழனி என்பவர். அதிகம் படிக்காதவர். இருப்பினும் புத்தகங்களை தேர்வு செய்து தன் நூலகத்தில் சேர்ப்பதில் மன்னன். ஒரு பேட்டியில் அவர் கூறினார்: "ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும்போதே அது தேறுமா தேறாதா என்பதை என் உள்ளுணர்வு கூறிவிடும்". நல்லவனுக்கு நல்லவன், அடாவடிப் பேர்வழிக்கு அடாவடி என்று அசத்தியவர். இந்த நூலகத்திலிருந்து நான் 1974-81 காலக் கட்டத்தில் பல புத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறேன். நான் சாதாரணமாக மிக சீக்கிரம் புத்தகங்களைத் திருப்புவதால் ரீடிங் சார்ஜ் எனக்கு கம்மிதான். நான் உள்ளே வந்ததுமே அவர் நான் எடுக்கும் புத்தகங்களுக்கு ரீடிங் சார்ஜை தானே நிர்ணயிடத்து விடுவதாகத் தன் உதவியாளர்களிடம் கூறிவிடுவார். நானும் ஒரு சமயத்தில் இரண்டு புத்தகங்களுக்கு மேல் எடுத்ததில்லை.

அதே போல 1971-74-ல் பம்பாயில் இருந்த போது அங்கு மாதுங்காவில் இருந்த துரை லெண்டிங் லைப்ரரி எனக்கு நிரம்பப் பிடிக்கும். அதன் உரிமையாளர் துரைக்கு என்னிடம் ஒரு அபிமானம். ஒரு முறை எதிர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த என்னை ஆள் விட்டனுப்பிக் கூப்பிட்டார். என்னடாவென்று பார்த்தால் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell-லின் புத்தகம் அவரிடம் புதிதாக வந்திருந்தது! நானும் அங்கு பலவகைப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.

சீரியஸ் புத்தகங்கள், வேடிக்கை புத்தகங்கள், காமிக்ஸ் (ஆர்ச்சி காமிக்ஸ், டாட், லோட்டா, காஸ்பர், வெண்டி த குட் விட்ச், ரிச்சி ரிச் முதலியன, அவற்றைக் கட்டுக் கட்டாக எடுத்துப் போய் படிப்பேன்.). திடீரென்று ஒரு நாள் துரையிடம் போய் "ரொம்ப போர் அடிக்கிறது துரை, சரோஜாதேவி புத்தகம் ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டால் கூட அசர மாட்டார். தமிழிலும், ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலத்திலும் அம்மாதிரி புத்தகங்கள் ஏராளம். என்ன, "உங்களை புரிஞ்சுக்கவே முடியல சார்" என்று கூறிக் கொண்டே கேட்டப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார்.

அதெல்லாம் ஒரு பொற்காலம். இப்போதும் லெண்டிங் லைப்ரரிகள் உள்ளன. எனக்குத்தான் அங்கெல்லாம் போகும் பொறுமை போய் விட்டது. கணினி வந்ததில் இது ஒரு கஷ்டம். அதுவே நம் நேரத்தை ஆக்கிரமித்து விடுகிறது. புத்தகங்கள் மாறவில்லை. நான்தான் மாறி விட்டேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/10/2005

அன்பே ஆருயிரே (அஆ)

வழக்கத்துக்கு மாறாக ஒரு புது படத்தை இரண்டாம் நாளே பார்த்தேன். நான் சூர்யாவின் அன்பே ஆருயிரையே குறிப்பிடுகிறேன். எங்களூர் (நங்கநல்லுர்) வேலன் தியேட்டரில் டிக்கட் சுலபமாக கிடைத்தது. வழக்கத்துக்கு மாறான கூட்டமும் இருந்தது.

படத்தின் கருத்து நல்லதுதான் ஆனால் அது தவறான ஆளிடம் சிக்கியதுதான் சோகம். மணிரத்தினம், சுஜாதா, கமல் காம்பினேஷனில் இப்படம் நன்றாக சோபித்திருக்கும். இங்கு குரங்கு கையில் பூமாலையாக ஆயிற்று. படம் முழுக்க ஒரே கூச்சல், பாடல் வரிகள் புரியவே இல்லை. தியேட்டரில் இருந்த விசிலடிச்சான் குஞ்சுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கினர் என்றுதான் கூற வேண்டும்.

மன வேறுபாட்டால் காதலர் பிரிகின்றனர். இன்டர்வல். பிறகு நீல உடையில் கடல் மேல் நடந்த வண்ணம் மறுபடி சந்திக்கின்றனர். அவர்கள் நாயக மற்றும் நாயகியின் நினைவுகளாம். நினைவுகளின் அரசன் நம்பியார் வேறு அங்கு வந்து அவர்களுக்கு விளக்குகிறார். அதாவது நினைவுகள்தான் காதலர்களை ஒன்று சேர்க்குமாம். காதலியின் நினவு காதலனிடம் போராட வேண்டுமாம் and vice versa. காதலன் காதலியையோ, காதலி காதலனையோ நினைவு கூர்ந்தால்தான் ஒருவர் மற்றவரின் நினைவை பார்க்க இயலுமாம்.

காதலியின் நினைவுக்கு வெற்றி சீக்கிரம் கிட்டி விடுகிறது. காதலனின் நினைவோ காதலியைச் சுற்றி அலைகிறது. அவள் பார்வைக்கு அது தென்படுவதில்லை. அவ்வப்போது நினைவுகள் கூடிப் பேசி ஆலோசனை செய்கின்றன. எப்படி கதை முடிகிறது? வெள்ளித் திரையில் காண்க.

சொதப்பல் 1. Living together (cohabitation in French) அதாவது கல்யாணமாகாமல் ஓர் ஆணும் சேர்ந்து ஒரு பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது என்ற கோட்பாடு தமிழகத்தில் இன்னும் வேறூன்றவில்லை. பேசாமல் அவர்களைக் கணவன் மனைவியாகவே சித்தரித்திருக்கலாம். ஏதோ அமெரிக்கக் கதையை சுட்டது போலத் தோன்றுகிறது. சிறிது உழைத்து இந்தியாவுக்கு ஏற்றதாகக் கதையை மாற்றாமல் ரொம்பவும் படுத்தி விட்டார் சூர்யா.

சொதப்பல் 2. சண்டைக் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. ரொம்பவும்தான் கிராஃபிக்ஸை நம்பியிருக்கிறார்கள்.

பிளஸ் பாயிண்டுகள். இரண்டே காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி நினைவில் நிற்கிறார். சூர்யா காதலியின் நினைவுடன் பேசிக் கொண்டே செல்லும் போது விஷயம் புரியாத மற்றவர் குழம்புவது தமாஷ். என்ன யோசித்தும் வேறு ஒன்றும் தோன்ற மாட்டேன் என்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது