7/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 111 & 112 - இறுதி எபிசோடு))

எபிசோடு - 111 (30.06.2010) சுட்டி - 2
நாதனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். நாதன் அசோக்குக்கு நேர்ந்த கஷ்டங்களை நினைத்து உருகுகிறார். காதம்பரி வந்து பார்க்கிறாள்.

வையாபுரியிடம் பணம் கொடுத்து ஏமாந்த அந்த தொழிலதிபர் சிங்காரத்தை கூப்பிட்டனுப்புகிறார். தன்னிடம் அடியாளாக சேரும்படி கேட்கிறார். சிங்காரம் மறுத்து விடுகிறான். அவன் ஏற்கனவே அடியாளாக இருந்தவன்தானே, அதுவும் இறந்துபோன நல்லத்தம்பியின் சகோதரன் வையாபுரியிடம்தானே என கேட்க, சிங்காரம் வையாபுரியும் நல்லத்தம்பியும் ஒரே ஆள் எனக் கூறிவிடுகிறான். திடுக்கிட்ட அந்தத் தொழிலதிபர் அப்போது தான் கொன்றது வையாபுரியையா என திகைப்புடன் கேட்க, சிங்காரம் இப்போது திடுக்கிடுகிறான்.

இது பற்றி அறிந்த நாதன் வக்கீலிடம் உடனே அந்த தொழிலதிபரை அரெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். இதிலெல்லாம் அவசரப்படக்கூடாது என வக்கீல் அறிவுரை கூறுகிறார்.

கொலை செய்தவன் யாரெனத் தெரிந்தும் ஏன் இன்னும் தாமதம் என நண்பர் கேட்க, சோ அவசரப்பட்டால் காரியம் நடக்காது. இதில் சாதுர்யமாக நடந்து குற்றவாளியை பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 112 (01.07.2010) (இறுதி எபிசோடு) சுட்டி - 2

சிறைச்சாலையில் பார்வையாளர்கள் பகுதி. அசோக்கைப் பார்க்க அந்த சன்னியாசி வருகிறார். அசோக் அவரை வணங்கி தனக்கு ஏற்பட்ட சோதனைகளை கூறுகிறான். எல்லாமே பரமன் செயல் எனக்கூறி, அவர் அசோக்குக்கு கையாலயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துக் கூறி அவன் வசிஷ்டர் எனவும் கூறுகிறர். பிறகு அவர் நாரதராக சுயவுருவம் பெற, அசோக் வசிஷ்டரின் ரூபத்தைப் பெறுகிறான்.

எங்கே பிராமணன் என்பதை அவர் தேடியதன் பலனை கூறுமாறு நாரதர் வசிஷ்டரிடம் கேட்க, அவரோ கலியுகத்தில் முழுமையான வர்ணரீதியான பிராமணனாக வாழ்தல் துர்லபமே எனக்கூறிவிடுகிறார். பிறகு அங்கிருந்து இருவருமே மறைகின்றனர். உள்ளே வரும் காவலாளி அவர்கள் எங்கே என பிரமிக்கிறான்.

அசோக் நல்லவன், நேர்மையாளன் ஆனால் அவனை பைத்தியம் எனக்கூற வைத்தீர்களே எல்லோரையும், இப்போது திருப்திதானா என சோவின் நண்பர் கேட்க, அப்படித்தால் லோகம் நினைக்கிறது. இன்றையச் சூழ்நிலையில் வர்ண ரீதியான பிராமணன் என ஒருவன் வாழ முற்பட்டால் அவன் பைத்தியக்காரனாகத்தான் பார்க்கப்படுவான். ஏன் நேர்மையாக இருப்பவனுக்கும் அதே கதிதான் என சோ கூறுகிறார்.

வர்ணங்கள் என்பவை சாதிகள் அல்ல. நால்வகை குணநலன்களையே அவை குறிக்கின்றன. ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை எனக் கூறும் சோ அவற்றுக்கான சான்றுகளை பல இடங்களிலிருந்தும் சுலோகமாகவும் மேற்கோள்களாகவும் காட்டுகிறார். இவை எல்லாம் ஒன்றும் தான் கண்டுபிடித்தவையல்ல், சொன்ன விவரங்கள் எல்லாமே பல இடங்களில் தேடிப்படித்து, விஷயம் அறிந்தவர்களிடம் கேட்டு தான் உணர்ந்தவை மட்டுமே என்றும் இதில் தனக்கு வேறு கிரெடிட் எதுவும் இல்லை எனவும் அவர் கூறி, இந்த சீரியல் வெற்றிகரமாக எடுக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் (ஜெயா டிவி, வெங்கட், தயாரிப்பாளர் சுந்தரம் ஆகியோர்) நன்றி கூறுகிறார்.

எங்கே பிராமணன் முதல் பகுதியில் கடைசி எபிசோட் என்பதை நான் முதலிலிருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை நான் அவ்வாறு காண இயலவில்லை. ஆகவே இந்த சீரியல் இம்மாதிரி முடிந்தது என்னையும் ஆச்சரியத்திலும் ஏமார்றத்திலும் ஆழ்த்தி விட்டது. காரணம் கதையில் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்.

எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை.

பொறுமையாக எனது எங்கே பிராமணன் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் படித்த எல்லோருக்கும் என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/30/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 109 & 110)

எபிசோடு 109 (28.06.2010) சுட்டி - 2
அசோக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்திலேயே வக்கீல் கடைசியாக அந்த அஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணவிருக்கிறார், எல்லாமே நல்லபடியாக முடியும் என நாம் நம்புவோம் என நீலகண்டன் கூற, அந்த பிரும்மாஸ்திரத்துக்கு தனது நமஸ்காரம் என காதம்பரி கூறியதைக் கேட்கும் சோவின் நண்பர் பிரும்மாஸ்திரம் பாக்கி எல்லா அஸ்திரங்களிலும் பெரிதா என்னும் கேள்வியை வைக்கிறார்.

அந்த மாதிரி பொது புத்தியில் அமைந்து விட்டது என சோ கூறுகிறார். ஆனால் இன்னும் பல அஸ்திரங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நாராயணாஸ்திரம். அது பிரும்மாஸ்திரத்தை விடவும் பெரிது எனக்கூறாவிட்டாலும் அது பற்றிய வர்ணனைகள் அவ்வாறு நினைக்கவும் தூண்டலாம். அதே போல பிரும்மசிரஸ் என்ற இன்னொரு அஸ்திரமும் இருக்கிறது. அதை செலுத்தினால் அணு ஆயுதப்பிரயோகத்தின் அத்தனை கெட்ட பலன்களும் விளையும் என்பதும் கூறப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறும் சோ உதாரணமாக அஸ்வத்தாமனும் அருச்சுனனும் ஒருவரையொருவர் அழிக்கவிட்ட அந்த பிரும்மசிரஸ் அஸ்திரம் சம்ப்பந்தமாக இன்னும் கூறுகிறார்.

சிறையில் அசோக்கைப் பார்க்க வருகிறாள் காதம்பரி. ஒரு வேளை அசோக்தான் அக்கொலையை செய்திருப்பானோ என்ற தனது சந்தேகத்தையும் அவள் வெளிப்படையாகக் கேட்க, அசோக் திட்டவட்டமாகவே தான் அக்கொலையைச் செய்யவில்லை எனக்கூறுகிறான். எல்லாம் கடவுள் செயல் என அவன் மேலும் கூற, அதை புரிந்து கொள்ளமுடியவில்லை என அவள் கூறுகிறாள். அவன் திருவிளையாடலை யார்தான் அறியவியலும் என்றும் அசோக் கூறுகிறான்.

அசோக் எவ்வளவு வேதங்கள் படிச்சிருக்கான், அவனே அதை புரியவில்லை என்றால் என்ன அர்த்தம் என நண்பர் கேட்க, ஒருவன் தனக்கு எல்லாம் புரிந்தது எனக்கூறினால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை எனப் பொருள் என்று சோ பதிலளிக்கிறார். ஒருவன் ஒரு விஷயம் தனக்குப் புரியவில்லை என்று கூறினால் அவன் அதைத் தேடி புரிந்து கொள்ள இயலும். அந்த அடக்கம்தான் தேவை, அது அசோக்கிடம் இருக்கிறது என்கிறார், சோ.

அது இருக்கட்டும், இந்தப் பெண் காதம்பரி அசோக்கைப் பற்றி என்ன நினைக்கிறாள் என சோவின் நண்பர் கேட்க, ஒரு பெண்ணீன் மனத்தை அறிய தேவர்களாலும் இயலாது என்னும் பொருள்பட அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொல்கிறார்.

திருமணத்துக்கு முன்னால் அவன் ஒரு விசித்திரப்பிறவி என்றே தானும் பலரைப் போலவே நினைத்ததாகவும், ஆனால் இப்போதுதான் அவன் எப்படிப்பட்ட ஞானஸ்தன் என்று தான் உணர்ந்ததாகவும், அவனுக்கு மனைவியானது தான் செய்தச் பெரும்பாக்கியம் என்றும் காதம்பரி உணர்ர்ச்சி பொங்கக் கூறுகிறாள்.

தான் தண்டனை அனுபவிக்க வேண்டியது அவன் சித்தம் என்றால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அப்படியின்றி இந்த நாடகத்தின் உச்சக்கட்டத்தில் அவன் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்த்தினாலும் அது பற்றியும் தான் ஒன்றும் செய்யவியலாது என்றும் அசோக் கூற, காதம்பரி அன்றைய தினலம் கோவிலில், கொட்டும் இடிமழையில் தங்களை ஆசீர்வதித்த அந்த தெய்வீக சன்னியாசி பற்றிக் பேசுகிறாள். அன்று விடியற்காலை அவர் தனது கனவில் வந்து எல்லாமே நல்லபடியாக முடியும் எனக்கூறிச் சென்றதாகவும் அவள் கூறுகிறாள்.

இதற்குள் பார்வையாளர் நேரம் முடிய, அசோக் செல்ல வேண்டியதாகிறது. அவன் சென்றதும் அவனுக்கே தெரியாமல் அவன் பற்றிய அந்த முயற்சியை அவனது வக்கீல் எடுக்கவிருப்பதையும், தான் உட்பட எல்லோருமே அத்ற்கு ஒப்புதல் தந்ததையும் எண்ணி அதற்காக அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோடு - 110 (29.06.2010) சுட்டி - 2
அசோக்கின் வக்கீல் இப்போது தனது பிரும்மாஸ்திரத்தை எடுத்து வீசுகிறார். நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அது தேவையின்றி ஏதெனும் அற்புதம் நிகழ்ந்திருக்கலாகாதா என ஆதங்கப்பட்ட எனக்கு இப்போது மன்ம் சஞ்சலமடைவதை தவிர்க்க இயலவில்லை. அதாவது அசோக் மனநலம் குன்றியவன் ஆகவே அவனது செயல்களுக்கு அவன் பொறுப்பில்லை என்பதே அவர் வாதம். ஒரு தேர்ச்சி பெற்ற திறமையான வக்கீலுக்கு ஏற்ப அவர் தனது வாதங்களை முன்வைக்கிறார்.

அசோக் பணத்தையும் மண்ணையும் ஒன்றாக பாவித்து பணத்தை வீசி எறிந்தது, புத்தகங்களால் பலன் இல்லை என காலேஜ் புத்தகங்களை எரித்தது, தெருவில் போகும் ப்சு மாட்டை நந்தினி என அழைத்து அதனுடன் பேச முயன்றது (இதைக்கூடவா சேர்த்தார்கள் எனப் பொங்கிய என்னை முரளி மனோகர் தடுத்து பேசாமல் பாரு சீரியலை, இல்லாவிட்டால் இந்த எபிசோடுக்கு நான் பதிவு போடுகிறேன் எனச்சொல்லி என்னை அடக்கினான்), பணக்காரன் மகனாக இருந்தும் பிட்சை எடுத்தது, மனநல மருத்துவர்கள் அவனுக்காக எழுதித் தந்த மருந்துகளின் லிஸ்ட், இன்னும் பல விஷயங்களை வக்கீல் அடுக்கிக் கொண்டே போக கைலாயத்தில் உமா, நாரதர், விஸ்வாமித்திரர் புடை சூழ் வீற்றிருக்கும் பரமசிவன் இதெல்லாம் கேட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரிப்பது எனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன்.

வக்கீல் கூறக்கூற காதம்பரி, வசுமதி, நீலக்ண்டன் ஆகியோர் மனம் புழுங்குவதை காண முடிகிறது. நடுவில் இதை மேலும் காண இயலாத சாம்பு சாஸ்திரிகளோ வேம்புவை வெளியில் இழுத்துச் சென்று தனது ஆற்றாமையை அவரிடம் சொல்லி பிரலாபிக்கிறார். வேம்பு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்கிறார். வர்ண ரீதியான பிராமணனாக வாழ முயன்றால் பைத்தியம் என்றுதான் பட்டம் கட்டுவார்களா என அவர் பொங்க, அவரை மிக சிரமப்பட்டு சமாதானம் செய்து வேம்பு கோர்ட்டுக்குள் இழுத்துச் செல்கிறார்.

அசோக்கை அரசு மனநல மருத்துவர் மூலம் பரிசோதிக்கச் செய்து பிறகு என்ன செய்வது என்பதை ஆராயலாம் என கோர்ட் கூறி கலகிறது. நாதன் டிஸ்சார்ஜ் ஆகலாம் என நீலக்ண்டன் கூற, அவரோ அசோக் கேஸ் பற்றி விசாரிக்க, நடந்ததைக் கூறுகிறார் நீலகண்டன்.

சாம்புவின் மகள் கருவுற்றிருப்பதை செல்லம்மா வீட்டில் உள்ளோருக்கெல்லாம் கூறி சர்க்கரை வழங்க அந்த சந்தோஷத்தில் சாம்புவால் பங்கு கொள்ளவியலவில்லை. அசோக்குக்கு நடந்த அநீதியை நினைத்து மனம் குமைகிறார் அவர். வர்ணரீதியான பிராமணன் என்றால் அவன் பைத்தியம்தானா என செல்லம்மா ஆதங்கத்துடன் கேட்க, சோவின் நண்பரும் அதே கேள்வியை வைக்க அவர் ஆமோதிக்கிறார். பாரதியாரை எல்லோரும் பைத்தியம் என்றுதானே கூறினார்கள், ஆனால் அவரோ மற்றவர்களை விட வித்தியாசமாகத்தானே வாழ்ந்தார்.

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாட பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலெ - நான்
வீழ்வேன் னென்று நினைத்தாயோ!

என்றுதானே கடைசிவரை நின்றார். அதே போல அசோக் இங்கே ஆன்மீக உலகில் நிலைகொண்டு இருக்கிறான். அவனை பைத்தியமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் பிரச்சினை அவனுக்கல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறர்.

அர்த்த சாத்திரம் எழுஹிய சாணக்கியர் முக்கிய மந்திரி பதவியை வகித்தவர். ஆனால் அவர் வாழ்ந்தடோ ஒரு சிறு குடிசை. ஆனால் அதே போல இப்போது ஒரு மந்திரி நிஜமாகவே குடிசையில் இருந்தால் யாருமே அவரை மதிக்க மாட்டார்களே. அதுதான் உலகம்.

இருப்பினும் செல்லம்மாவுக்கு ஆறவேயில்லை. என்னதான் இருந்தாலும் ஒரு வக்கீலே தன் கட்சிக்காரர் பற்றி இவ்வாறு கூறலாமா எனக் கேட்க, சாம்புவோ அசோக்கை தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க அவருக்கு வேறு வழி தோன்றவில்லை என்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/27/2010

எங்கே பிராமணன் சீரியலில் அசோக்காக நடிக்கும் அஃப்சரின் பேட்டி

தினமலர் 27.06.10 தேதியிட்ட வாரமலரில் வந்த இச்செய்தி/பேட்டியை அப்படியே எடுத்துப் போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தினமலர்.

ஜெயா, "டிவி'யில் திங்கள் முதல் வியாழன் வரை, இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும், "எங்கே பிராமணன்?' தொடரை, பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். வேதங்களில் சொல்லப்படும் வகையில், முழுமையாக வாழும் பிராமணன் எங்கு இருக்கிறார் என்று, இத்தொடரின் முதல் பாகத்தில் தன் தேடலை நடத்தும் அசோக் என்ற அந்த இளைஞன், இரண்டாம் பாகத்தில், முழு பிராமணனாக தானே வாழ்ந்து காட்டினால் என்ன என்ற சவாலை ஏற்று, அதன்படி வாழ்கிறார்.

இந்துக்கள் மட்டுமின்றி, எல்லா சமயத்தினரும் தொடர்ந்து, இந்த தொடரைப் பார்த்து, ரசித்து வருகின்றனர். "அசோக்' பாத்திரத்தில் ஒன்றி, எந்தவித அலட்டல், ஓவர் ஆக்டிங் இல்லாமல், அந்த தனித்தன்மை வாய்ந்த பாத்திரத்திற்கு சிறப்பு செய்கிறார். அசோக்காகவே மாறி விட்ட நடிகர் அப்சர், ஒரு இஸ்லாமிய இளைஞர். பேட்டியிலிருந்து:

திருநெல்வேலியைச் சேர்ந்த என் தந்தை ஷாகுல் ஹமீது, தமிழக அரசில் இன்ஜினியராகப் பணியாற்றினார். தமிழ் மீது அவருக்கு அபார பற்று. தாய் மொழியில் ஞானம் இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதில், முழு நம்பிக்கை கொண்டவர். எனவேதான், ஓரளவு வசதி இருந்தும், கான்வென்ட் பள்ளிகளில் எங்களை சேர்க்காமல், தமிழ் மீடியத்தில் தான் நாங்கள் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

பள்ளி, கல்லூரி மாணவராக இருக்கும் போதே நடிகனாக, கலைத்துறையைச் சேர்ந்தவனாகத்தான் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளியில் படிக்கும் போதே, தூர்தர்ஷனில் அங்கீகரிக்கப்பட்ட நடிகனாக, ஆண்டுக்கு ஓரிரு, "டிவி' நாடகத்தில் நடித்தேன்.

பிரபல நடிகர் வி.கோபால கிருஷ்ணனின் கோபி தியேட்டர்ஸ்காக நாடகங்கள் எழுதும் பிரபல நாடக ஆசிரியர் விவேக் சங்கரின், "நித்தம் ஒரு யுத்தம்' மேடை நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகத் தின் அரங்கேற்றத்திற்கு வந்திருந்த நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, "வேதம் புதிது' கண்ணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் என்னைப்பற்றி சொல்ல, ஏவி.எம்.,மின், "நிம்மதி உங்கள் சாய்ஸ்' தொடரில், கதாநாயகியின் தம்பி மணி பாரதி பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து, 2000த்தில், இயக்குனர் வெங்கட் இயக்கத்தில், ஏவி.எம்., மின், "சொந்தம்' 260 எபி சோடுகள் தொடரில், அண்ணிக்கு (மோனிகா) சப்போர்ட் பண்ணும், "பிரபா' என்ற பாத்திரத்தில் நடித்தேன். விகடன் டெலிவிஸ்டாசின், சுந்தர் கே. விஜயன் இயக்கிய, "அலைகள்' ஹிட் தொடரில், 400 எபிசோடுகளுக்கு மேல் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"எங்கே பிராமணன்?' தொடரில் எனக்கு நடிக்க சான்ஸ் எப்படி கிடைத்தது என்பதற்கு என்னை விட, இயக்குனர் வெங்கட் பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

"எங்கே பிராமணன்?' தொடரில், அசோக் பாத்திரத்தில் நடிக்க, அப்சரை எப்படி செலக்ட் செய்தீர்கள்? என்று டைரக்டர் வெங்கட்டை கேட்டபோது...

அசோக் ஒரு அசாதாரணமான இளைஞன். இளம் வயதிலிருந்தே, ஒரு குறிக்கோளோடு வேதங்களில் குறிப்பிட்டிருப்பது போன்று, எல்லா நியதிகளையும் கடைபிடித்து, முழு பிராமணனாக வாழ முயற்சிப்பவன். சாந்தமான முகம்; அலட்டிக் கொள்ளாத சுபாவம் கொண்ட இளைஞன்தான் அந்த காரெக்டருக்கு பொருத்தமாக இருக் கும். அப்சரின் முகம், குறிப்பாக அவரது கண்கள் ரொம்ப பவர்புல் லாக, பொருத்தமாக இருந்ததால், அவரை செலக்ட் செய்தேன்.

தன்னுடைய பாத்திரத்தை நன்கு உணர்ந்து, சீரியல் முழுவதும் நன்றாக நடித்திருக்கிறார். நிறைய ஹோம் ஒர்க் பண்ணினார். ஓவர் ஆக்டிங் செய்யாமல், கச்சிதமாக நடித்திருக்கிறார். வசனங்களை எளிதில் மனப்பாடம் செய்து, காட்சிக்கு ஏற்ப குரல் மாடுலேஷனோடு, தேவையான எக்ஸ் பிரஷனோடு பேசியிருக்கிறார். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவர் அப்சர்.
இந்த தொடரின் மற்றொரு ப்ளஸ் பாயின்ட் - ஒவ்வொரு எபிசோட்டிலும் சோ தோன்றி அளிக்கும் விளக்கங்கள்... வேதங்கள், உபநிஷத்துக் கள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை மற்றும் தமிழில் தெய்வீகப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து ஸ்லோகங்களை சொல்லி, விளக்கம் தருகிறார்.

இந்து கலாசாரத்தில் கடைபிடிக்கப்படும் பல வழக்கங்கள், விரதங்கள், சடங்குகள், பூஜை முறைகள், நம்பிக்கைகள் உள்பட பல விஷயங் களுக்கு கேள்வி பதில் பாணியில், பலருக்கும் தெரியாத விளக்கங்களை எளிய நடையில் தருகிறார்.

சோவை சந்தித்து பேசியிருக்கிறீர்களா? என்று அப்சரை கேட்டதற்கு, "நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை. டைரக்டர் வெங்கட், தொடருக்கான படப் பிடிப்பு ஆரம்பிக்கும் போது, தொலைபேசியில் சோவை அழைத்து, அவரோடு என்னை பேசச் சொன்னார். "உங்க ஆசிர்வாதம் வேணும் சார்!' என்றேன். "ஆல் தி பெஸ்ட்; நல்லா பண்ணுபா...' என்று, வாழ்த்தினார். "உன் காரெக்டருக்கு வேஷ்டியை, கணுக்காலுக்கு மேலே தூக்கி கட்டணும்; தழைய, தழைய கட்டறது மரியாதை இல்லை...' என்றார். ஒரு டயலாக்கை அவர் எடுத்துச் சொல்லி, எப்படி குரலை மாடுலேட் பண்ணி, ஏற்றி இறக்கி பேசணும்ன்னு சொல்லிக் கொடுத்தார்.

மிகவும் தூய்மையான, வியக்கத்தக்க இளம் பிராமணராக நீங்கள் நடித்திருப்பது பற்றி, உங்கள் சமுதாயத்தினரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது?

"இஸ்லாம்' என்ற சொல்லுக்கு சமாதானம், சகோதரத்துவம் என்று தான் அர்த்தம். 2008ல் இருந்து இரண்டு ஆண்டுகளாக எங்கே பிராமணன் முதல் பாகம், இரண்டாம் பாகங்களில் நடித்து வருகிறேன். எந்த ஒரு முஸ்லிம் சகோதரரோ, சகோதரியோ இந்த தொடரில் நான் நடித்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்க வில்லை; மாறாக, ஏராளமான முஸ்லிம் நண்பர்கள், சகோதரிகள் என் நடிப்பை, மனதார பாராட்டியிருக்கின்றனர்.

சகிப்புத் தன்மை, இஸ்லாமின் முக்கிய அங்கம். 99.99 சதவீதம் இஸ்லாமியர்கள் அப்படித்தான் வாழ்கின்றனர்; நினைக்கின்றனர். 0.01 சதவீதத்தினர் மாற்றுக் கருத்து கொண்ட வர்களாக இருக்கலாம்; வாழலாம். அதை வைத்து, முஸ்லிம் சமுதாயத்து மக்கள் எல்லாரும் அப்படித் தான் என்று நினைப்பது, வருந்தத்தக்க விஷயம்.

இந்த தொடரில் நடிப்பதன் மூலம், இந்து, இஸ்லாம் இரு மதங்களிலும், பொதுவாக எவ்வளவு விஷயம் இருக்கிறது என்று பார்க்க முடிகிறது.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே; வெற்றி வரும் போது பெருமகிழ்ச்சியும், தோல்வி ஏற்படும் போது துவண்டு போகவும் கூடாது என்று வேதங்களும், உபநிஷத்துக்களும் சொல்கின்றன. நடப்ப தெல்லாம், இறைவன் நாட்டப்படி தான் நடக்கிறது என்கிறது இஸ்லாம். "ஒருமித்த கருத்துக்கள், வேறு வேறு வார்த்தைகளிலே இந்து மதத்திலும், இஸ்லாமியத்திலும் சொல்லப்படுகின்றன.

பிரார்த்தனைகள், ஹோமங்களில், "ஓம் சாந்தி, ஓம் சாந்தி!' என்று சொல்கின்றனர். "சலாம் அலைக்கும்' என்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவரை வரவேற்கும் போதும், முகமன் கூறும் போதும் சொல்கின்றனர்; அதற்கு சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் என்று அர்த்தம்.
நம் சொந்த மதத்தையும், பிற மதங்களைப் பற்றியும் அக்கறையாக தெரிந்து கொண்டால், மக்களிடையே வேறுபாடுகளே இருக்காது.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் நீங்கள் கற்றது என்ன?நிஷ்காம கர்மா. வேலையையும் சரி, வேறு எதையும் சரி... எமோஷன் இல்லாமல், பற்று இல்லாமல் செய்யணும். வாழ்க்கையில் தினமும் செய்யும் வேலைகளில் இந்த சிந்தனையை நான் கடைபிடிக்கிறேன்; டென்ஷன் இல்லாமல், ரிலாக்ஸ்டாக இருக்கிறேன்.

நாம் விரும்புகிற மாதிரி நடக்க வில்லை; அதற்கு எதிராக நடந்தாலும், கடவுளின் விருப்பம் தான் நடந் திருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. எல்லாம் நடந்தது, நான் ஒரு கருவி மட்டும் தான், நாம் இல்லை யென்றாலும் அது நடந்து விடும். நம்மால் தான் சாதிக்க முடியும் என்பதில்லை; நாம் இல்லா விட்டாலும், இன்னும் சிறப்பாக நடக்கும் என்று உணர்ந்தால், நம் ஈகோ பிரச்னை தீர்ந்துவிடும். வாழ்க்கை எளிதாகி விடுகிறது.


இந்த சீரியலில் வரும் எல்லோருக்குமே வேஷப்பொருத்தம் பிரமாதம், அதிலும் அசோக் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் அஃப்சர் அற்புதமாக நடிக்கிறார். எனது கேள்வி பதில் பதிவுகளில் ஒன்றில் இது சம்பந்தமாகக் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் இதோ:

கேள்வி: பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா?
பதில்: நடிப்புத்தானே! இதில் என்ன பிரச்சினை? சோப்ராவின் மகாபாரதத்தில் அர்ஜுனனாக நடித்தது ஒரு இசுலாமியர். அதற்கென்ன இப்போது? பம்பாய் படத்தில் இசுலாமியராக கிட்டியும் இந்துவாக நாசரும் நடித்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?


இப்போது மனப்பூர்வமாகவே கூறுகிறேன், அஃப்சரைத் தவிர இப்போது வேறு யாரையும் இந்தப் பாத்திரத்திற்கு என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. அவருக்கு எனது பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாஆஆஆஆஆ பிரமிக்க வைத்தப் படம்



தில்லியில் இருக்கும்போதே கேபிள் டீவி வந்ததும் தூர்தர்ஷனுக்கு குட்பை கிட்டத்தட்டச் சொல்லிவிட்டேன், டிடி-5 தமிழ் சேவைகள் தவிர. இங்கு சென்னைக்கு வந்ததும் அதுவும் போயிந்தி. எல்லாமே கேபிள் சேனல்தான்.

அதே போல முழுநீள ஹிந்திப் படங்கள் பார்ப்பதும் கிட்டத்தட்ட போயே போயிந்தி. ஆகவே தேசீய தூர்தர்ஷனில் இந்த முழுநீள ஹிந்திப் படத்தைப் பார்த்தது ரொம்பவுமே தற்செயலான நிகழ்வுதான். விஷயம் என்னவென்றால் எங்கள் கேபிள் கனெக்‌ஷனில் கோளாறு, வெறுமனே தூர்தர்ஷன் தேசீய சேனல் மட்டுமே வந்தது. ஏதோ கேஷுவலாக சேனலைப்போட, அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்தா பாஆஆஆஆ படம் என்று பார்த்ததும் சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என ஒரு ஆர்வத்தில் பார்க்க அம்ர்ந்தேன்.

இப்படம் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் என்னை இதற்கு முன்னால் பார்க்க விடவில்லை. Progeria ennum நோயின் பாதிப்பால் 12 வயது கூட நிரம்பாத வோரோ என்னும் சிறுவன் 90 வயது கிழவனின் வளர்ச்சி மற்றும் சிதைவுகளைப் பெறுவது என்பது கொடுமையான செயலே. ஆகவே முதலிலேயே இது மனதை பாதிக்கும் படம் என்பது தெரிந்ததால் இதை நான் பார்க்காமலேயே தவிர்த்தேன். அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.

ஆனால் இன்று என்னவாயிற்று எனத் தெரியவில்லை. முதல் சீனில் படம் பார்க்க ஆரம்பித்த நான் அப்படியே ஆழ்ந்து அமர்ந்து விட்டேன். அப்படியே கேபிள் கனெக்‌ஷன் சரியானாலும் இப்படத்தை முடித்தபிறகுதான் மீதி சேனல்கள் என்பதையும் என் வீட்டம்மாவிடம் ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டு அமர்ந்தேன்.

தந்தையும் தாயும் திருமணமாகாமலே பிரிய, மகன் பிறந்ததையே தந்தை அறியாது பிற்காலத்தில் அவனைக் கண்டு ஏதோ ஒரு பாசத்தில் அவனுடன் இணைவது போன்ற கதைகள் சாகுந்தல காலத்திலிருந்தே வந்து விட்டது. இந்த பிளாட்டில் எண்ணற்றத் திரைப்படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. அதற்கென்றே ஒரு தனி அப்பீலும் இருக்கிறது. ஆனால் பிறந்த மகன் இவ்வளவு பெரிய ஊனத்துடன் பிறப்பது அதிகம் முறை வந்ததில்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட குழந்தையாக வருவது நமது ஒன் அண்ட் ஒன்லி அமிதாப்தான்.

ப்ரொஜேரியா நோயால் பீடிக்கப்பட்ட இக்குழந்தை வோரோ முதலிலிருந்தே இளம் அரசியல்வாதியான அமோலைக் கவர்ந்து விடுகிறான். ஆனால் அவன்தான் தனது சொந்த மகன் என்பதை அவன் அப்போது அறியவில்லை. அக்குழந்தையின் அன்னை வித்யாவுக்குத் தெரியும் ஆனால் அவளோ அவனிடம் தன் பிள்ளையைக் காட்டுவதாக இல்லை. மற்றப்படி கதை சாதாரணமாக இம்மாதிரி பிளாட்டுகளில் உள்ளபடியே செல்கிறது. இருப்பினும் எங்குமே தேவையற்ற மெலோட்ராமாக்கள் இல்லை.

ஓரோதான் தன் மகன் என்பதை அமொல்ல் அறிந்து காட்சி ஒரு கவிதை என்றால், கடைசிக் காட்சியில் தன் அன்னை தந்தையை வோரோ சப்தபதி செய்ய வைக்கும் காட்சி ஒரு காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படம் முடிந்து டைட்டில்ஸ்கள் ஓடி முடிந்தவரை பிரமித்துப் போய் அமர்ந்திருந்த நான் சற்று நேரத்துக்கு வேறு எந்தக் காட்சிகளையும் காண விரும்பாமல் டிவியை ஆஃப் செய்து விட்டு இப்பதிவை ஒரே மூச்சில் போட்டு முடித்தேன்.

இந்த வேஷத்துக்கான மேக்கப் போட்டுக் கொள்ள அமிதாப் பட்ட கஷ்டங்களைக்காண இந்த வீடியோவைப் பார்க்கலாம். இம்மாதிரி ஒரு படத்துக்காக உயிரைக் கொடுத்து மேக்கப்புகள் போட்டு நடிக்கும் அமிதாப், கமல் (ஔவை ஷண்முகி), விக்ரம் (சேது), சூர்யா (பேரழகன்) ஆகிய கலைஞர்கள் இருக்கும்போது இந்தியத் திரைப்படத்துக்கு ஏது குறை?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது