6/30/2005

திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன்

சில நாட்களாக மன அழுத்தம் அதிகரிக்கச் செய்த நிகழ்வுகள் நடந்து விட்டன. இன்று மனதைப் பிடிவாதமாக சில மணி நேரம் அமைதியாக வைத்திருந்தேன். பல் மின்னஞ்சல்கள் ஆறுதலாக வந்தன. மன் உற்சாகம் என்னும் அம்புறாத்துணியில் ஒவ்வொரு அம்பாக வந்து சேர்ந்தன. அவை இன்னும் வருமா? தெரியாது. ஆனால் அதற்குள் என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாத என்மனத்திரையில் தோன்றி ஆசுவாசப்படுத்தினான். சிறிது நேரம் உலகக் கவலைகளை மறந்து தன் சகா திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன் திருக்கல்யாண உற்சவத்திற்கு சமீபத்தில் நான் சென்று திரும்பியதைப் பற்றி பதிவு போட ஆணையிட்டான். அதை விட இந்த தாசனுக்கு வேறென்ன வேலை முக்கியமாக இருக்க முடியும்? இதோ வந்தேன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதனே.

இம்மாதம் 14-ஆம் தேதி செவ்வாயன்று காலை 8 மணிவாக்கில் கிளம்பி நேரே வைத்தீஸ்வரன் கோவில் சென்றோம். அங்கு அங்காரகன் மற்றும் ஈசன் சன்னிதிகளில் அர்ச்சனை. மாலை மாயூரம் பாம்ஸ் ஹோட்டலில் ரூம் போட்டோம். பிறகு தேரழுந்தூர் மற்றும் சிறுபுலியூர் சென்றோம். அதற்கு முன்னால் மாயவரத்தான் அவர்களின் தந்தையிடம் தொலைபேசினேன். அன்புடன் அவர் என்னிடம் பேசினார். தேரழுந்தூரில் 50 வருடங்களாக ஓடாத தேரை ஓட வைத்தது பற்றியும் கூறினார். அறைக்கு திரும்ப இரவு ஆகிவிட்டது.

அடுத்த நாள் காலை மயூரனாதர் கோவில் மற்றும் திருஇந்தளூர் கோவில் தரிசனம். திருஇந்தளூரில்தான் நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனுக்கு சாப விமோசனம் கிட்டியதாக ஐதீகம். பரிமளரங்கநாதப் பெருமாள், பரிமள ரங்கநாயகி மற்றும் புண்டரீகவல்லித் தாயார்கள். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றத் தலம்:

பிறகு கும்பகோணம் சென்றோம். மதியம் 3.30-க்கு உப்பிலியப்பனுக்கும்
பூமித்தேவித் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம். என்னைச் சேர்த்து
இரண்டு உபயதாரர்கள். கண்கொள்ளா காட்சி, பெருமாளும் தாயாரும் மாலை
மாற்றியது. பெருமாளும் தாயாரும் யுகயுகமாகக் காதலிப்பவர்கள். அவர்கள் கல்யாணத்தைச் செய்து வைக்க முந்தையப் பிறவில் நல்ல காரியம் செய்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்து கும்பகோணத்தில் எங்கள் அறைக்குத் திரும்பும்போது மாலை 7 ஆகி விட்டது. வியாழன் காலை சென்னை திரும்பினோம்.

மனதுக்கு நிறைவான யாத்திரை. செய்ய நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது.
எல்லாம் எம்பெருமான் அருள். வந்த உடனேயே பதிவு போட நினைத்தேன். அதைச் செய்ய விடாமல் பிரச்சினை மேல் பிரச்சினையாக வந்தது. சிறிது தாமதித்து இப்போது பதிவிடுவதும் நல்லதுக்குத்தான். மனதுக்கு ஒரு நிறைவு. பிரச்சினை என்ன பிரச்சினை புடலங்காய்? அவை எல்லாம் இப்போது துச்சமாகத் தோன்றுகின்றன. இருந்தாலும் ஒன்றைக் கூற வேண்டும். இம்மாதிரி நெருக்கடியானத் தருணங்களில் நண்பர்கள் கொடுக்கும் ஆதரவு பின்னூட்டங்கள் மனதை நிறையச் செய்து இப்பதிவை போடச் செய்தன. எல்லோருக்கும் இப்போது நன்றி கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

Arun Vaidyanathan said...

Dear Dondu,
Its nice that you are coming out of all these things...Good!
One doubt though....how can you spell this 'திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன்' without any spelling mistake every time :) This is like a tongue twister for me!
Have a great day!

Balaji-Paari said...

//பிரச்சினை என்ன பிரச்சினை புடலங்காய்? அவை எல்லாம் இப்போது துச்சமாகத் தோன்றுகின்றன//

கலக்கிட்டீங்க..இது இது தான் உங்க கிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கின்றது.

சூப்பர் இராகவன் சார். தொடர்ந்து இந்த sprit-லேயே எழுதுங்க. கலக்குங்க.


பாலாஜி-பாரி

குமரேஸ் said...

டோண்டு ராகவன் அவர்களே,

உங்கள் பிரச்சனைக்கு இத்தளம் ஒருதீர்வு தரலாம், இப்போதுதான் கண்ணில் பட்டது, நானே நேரமின்மையால் இன்னமும் முற்றாக ஆரயவில்லை.

http://blogcomments.noipo.org/

பத்மா அர்விந்த் said...

நீங்கள் நான் வசித்த ஊர்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். வைத்தீஸ்வரன் கோவில், தேரழுந்தூர், கும்பகோணம், ஒப்பிலியப்பன் கோவில்!! பழைய நினைவுகள்.

enRenRum-anbudan.BALA said...

Raghavan Sir,
nalla pathivu !!

It gave the feeling of actually being in the company of the LORD !

So, pl. move on, from now on :-)

பினாத்தல் சுரேஷ் said...

kalakkungga!

intha pisthappasangaLai mathikkamal iruppathuthan best solution enRu thOnRugiRathu. (retrospect, of course)

இராதாகிருஷ்ணன் said...

//பிரச்சினை என்ன பிரச்சினை புடலங்காய்? அவை எல்லாம் இப்போது துச்சமாகத் தோன்றுகின்றன.// அவ்வளவுதாங்க, சும்மா நீங்க வழக்கம்போல எழுதிக்கிட்டிருங்க.

Arun Vaidyanathan said...

Oh my God,
I just now saw it...You went upto Vaitheeswarankoil !?!?!?!? You could have called my parents. Vaitheeswaran Koil is a great temple.

Regards,Arun

SHIVAS said...

//மதியம் 3.30-க்கு உப்பிலியப்பனுக்கும்
பூமித்தேவித் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம்//

உப்பிலியப்பன் என்று ஏன் சொல்வானேன்? ஒப்பில்லா அப்பன் என்றே சொல்லலாமே... அப்புரம் நம்ம மக்கபடை அங்கு சென்று உப்பு இல்லாமல் சோறு செய்து படைக்குங்கள்.

dondu(#11168674346665545885) said...

வருக காஞ்சி பிலிம்ஸாரே. பிலிம் காட்டுவதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்? நானே உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள நினைத்தேன். இங்கு சில சில்லறைப் பிரச்சினைகள் இருந்தன. சரி உங்கள் பின்னூட்டத்திற்கு வருகிறேன். நீங்கள் தெரிந்து கூறினீர்களா இல்லையா என்பது தெரியாது. இத்தலப் புராணத்தை முதலில் கேளுங்கள்.

மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்து அவரை மகளாய் பெற்றார். சீதையைப் போல அவரும் பூமியிலிருந்து மார்க்கண்டேயருக்கு கிடைத்ததால் அவருக்கு பூமிதேவி என்று பெயர். அவள் திருமணப் பருவத்துக்கு வரும்போது கிழ வேடத்தில் திருமால் மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். வந்தவர் யார் என்று தன் ஞான திருஷ்டியால் புரிந்து கொண்டார் மார்க்கண்டேயர். அவரிடம் பவ்வியமாக நீரோ முதியவர் என் மகளோ மிகச் சிறியவள், உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாதவள் என்று கூற எம்பெருமானும் உப்பில்லாத பண்டமே எமக்கு சிறப்பு என்று கூறி திருமகளை மணந்தார்.

ஆகவே இக்கோவிலில் பிரசாதங்களில் உப்பு இருக்காது. ஆனால் என்ன ஆச்சரியம்! அவை மிக ருசியாகவே உள்ளன. அதுவும் புளிய்போதரையின் சுவையே சுவை.

தன் மனைவியால் முடியாது என நினைத்த காரியத்தையே தனக்கு தேவையில்லை என்று கூறிய திருமாலின் அருள் அளவற்றது. மார்க்கண்டேயருக்கு இல்லாத ஞானமா? ஆனால் பாருங்கள் அவரும் தன் பெண் எப்போதும் குழந்தை என்ற அஞ்ஞானத்தில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படிபட்டப் பெண்? உலகத்துக்கே உணவு அளிக்கும் அன்னபூரணி அல்லவா அவள்! ஒரு பெண்ணின் தகப்பனின் மன நிலையை என்னைப் போன்ற பெண்ணின் தகப்பன் புரிந்து கொள்ளவில்லையென்றால் எப்படி?

ஒப்பில்லா அப்பனின் இப்பெருமையை நான் பதிவிலேயே போடத் தவறி விட்டேன். அதை நினைவுபடுத்தியதற்கு நன்றி. ஆகவே உங்கள் பின்னூட்டத்துக்கு முன்னுரிமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருண் அவர்களே, திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன், என் உள்ளம் கவர்கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் என்ற திருநாமங்களை எனக்குள்ளேயாவது அல்லது சற்று உரக்கக் கூறும்போது எனக்குள் தனி உற்சாகம் ஏற்படுகிறது.

அனுமன் ராம ஜபம் செய்யும்போது யாரும் அவனை வெற்றிகொள்ள முடியாது, ராமன் உட்பட என்று விளக்க ஒரு கதை உண்டு. அதை சமீபத்தில் 1954-ல் என் நான்காம் வகுப்பாசிரியர் திரு பாஷ்யம் ஐயங்கார் உணர்ச்சியுடன் என் வகுப்பு தோழர்களுக்கும் எனக்கும் கூறியிருக்கிரார்.

எழுத்து பிழை? நான் அக்கோணத்தில் யோசிக்கவில்லை. சாதாரணமாக நான் கற்று கொண்ட மொழிகளில் நான் விரைவாகத் தேர்ச்சி பெற்றதற்கு நான் அம்மொழி இலக்கணங்களில் அதிகக் கவனம் செலுத்தியது ஒரு முக்கியக் காரணமாகும். இதில் எழுத்து பிழைகளைத் தவிர்ப்பது இயல்பாகவே வந்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SHIVAS said...

நீண்ட ஒரு விளக்கத்துக்கு மிக்க நன்றி திரு.டோண்டு அவர்களே. திருவானைக்கால் சிலந்தி சிவலிங்கத்தை காத்த புராணத்தை விட சுவாரசியமாக உள்ளது.

//உப்பில்லாத பண்டமே எமக்கு சிறப்பு என்று கூறி திருமகளை மணந்தார்//

அதனால் தான் என்னவோ ஒவ்வொரு நாங்கு நிமிடத்திற்கும் ஒரு பெண் இந்தியாவில் "கற்பழிக்கப்பட்டாலும்" இந்த உப்பில்லா பண்டங்களையே உண்ட திருமாலுக்கு சுரனையே வராமல் தன் திருமகளுடன் ஹாய்யாக பள்ளி கொண்டுள்ளார் போல் இருக்கிறது.
என்னவோ போங்கள் ஐயா, இப்படி இன்னும் எத்தனை வருடங்களுக்கு நம் பிள்ளைகளுக்கு புராணங்களையும் புருடாக்களையும் சொல்லப் போகிறோம். உங்களை போன்ற மெத்த படித்தவர்களே இன்னும் இப்படி செய்தால் எப்படி?

தவறேதும் இருந்தால் மன்னிக்கவும். நன்றி

dondu(#11168674346665545885) said...

"தவறேதும் இருந்தால் மன்னிக்கவும். நன்றி"

ஏன் இத்தனைப் பெரிய வார்த்தைகள் காஞ்சி அவர்களே? நாம் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்ட மின்னஞ்சல்கள் மூலம் நான் ஒன்றை அறிந்து கொண்டேன். நீங்கள் மிகவும் மென்மை சுபாவம் கொண்டவர். இந்தியக் குடியுரிமையை விடாது வைத்திருப்பேன் என்று கூறியதிலிருந்தே நீங்கள் எவ்வளவு தேசபக்தியுடையவர் என்பது தெரிந்து விட்டது. நீங்கள் மேலே எழுதியதில் என்ன தவறு இருக்க முடியும்? உங்கள் கருத்தை நாணயமாகக் கூறியிருக்கிறீர்கள்.

ஆனால் இம்மாதிரிக் கேள்விகளுக்கு நேரடி பதில் என்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. "விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர்" என்ற ரேஞ்சில்தான் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் ஒன்று கூறுவேன். ஆத்திகதுடன் நாத்திகமும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அவை ஒரே நாணயத்தின் இரு பக்கம் என்று சிறிதும் தயக்கமின்றிக் கூறலாம்.

நீங்கள் கூறியதைவிட இன்னும் கடுமையான சொற்களில் ஜாபாலி, சார்வாகன் ஆகியோர் பேசிவிட்டனர். பல ஆத்திகர்கள் நாத்திகர்களாவதும், அதே போல பல நாத்திகர்கள் ஆத்திகர்களாவதும் நாம் பார்த்திருக்கிறோம்.

எது உண்மை? யாருக்கு தெரியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

J. Ramki said...

//நீங்கள் நான் வசித்த ஊர்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். வைத்தீஸ்வரன் கோவில், தேரழுந்தூர், கும்பகோணம், ஒப்பிலியப்பன் கோவில்!! பழைய நினைவுகள்.

இது ஆரு..புதுசா கீது... மாபியா கும்பல் பலம் எகிறுதுங்கோ...

டோண்டு ஸார், மாயவரம் பெரிய கோயில் போனீங்களா? காளியாகுடி காபி சாப்பிட்டீங்களா?

dondu(#11168674346665545885) said...

"டோண்டு ஸார், மாயவரம் பெரிய கோயில் போனீங்களா? காளியாகுடி காபி சாப்பிட்டீங்களா?"

மயூரநாதர் கோயில் அற்புதம். ஆனால் நாங்கள் அங்கு சென்ற நேரம் (காலை 9.30 மணியளவில்) கோவிலில் ஒருவருமே இல்லை. 9 மணி பூஜை முடிந்து விட்டதாம். அடுத்து 12 மணி உச்சி வேளை பூஜைதானாம். அதற்காகக் காத்கிருக்க இயலவில்லை, ஏனெனில் நாங்கள் திருவ்ண்ணகர ஒப்பில்லா அப்பன் சன்னிதிக்கு உடனே செல்ல வேண்டியிருந்தது. ஆனாலும் காலாரச் சுற்றினோம் கோயிலில்.

காளியாகுடி காபி? அது என்ன? ஏதாவது தவற விட்டு விட்டோமா? அடுத்த தடவை அங்கு செல்லும்போது பார்த்து விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

wichita said...

//நீங்கள் நான் வசித்த ஊர்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். வைத்தீஸ்வரன் கோவில், தேரழுந்தூர், கும்பகோணம், ஒப்பிலியப்பன் கோவில்!! பழைய நினைவுகள்.

இது ஆரு..புதுசா கீது... மாபியா கும்பல் பலம் எகிறுதுங்கோ...


she is with kumbakonam mafia, not with mayavaram mafia :).kumbakonam
mafia is exclusively meant for intellectuals unlike mayavaram mafia :)

G.Ragavan said...

டோண்டு இந்தப் பதிவை எப்படியோ தவற விட்டு விட்டேன். மிகவும் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். பெற்ற மனம் பித்து என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

நேரம் கிடைக்கையில் ஒப்பிலியப்பனையும் உப்பில்லா புளியோதரையையும் பார்க்க வேண்டும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது