9/09/2005

IDPL நாட்கள் - P.G.Zalani

சிலரைப் பார்த்த உடனேயே பிடித்து விடும். அவர்களுக்கும் நம்மை அதே போல பிடித்து விடுவது மிக அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். நான் இப்போது பி.ஜி. ஜலானியைப் பற்றிப் பேசப் போகிறேன்.

ஐ.டி.பி.எல்லுக்கு அல்ஜீரியாவில் சில ஒப்பந்தங்கள் கிடைக்கும் போலிருந்ததால் ஒரு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதற்கான நேர்முகத் தேர்வுக் குழுவின் தலைவர் ஜலானி அவர்கள். ஜே.என்.யூ-விலிருந்து ஒரு பிரெஞ்சுப் பேராசிரியை இதற்காகப் பிரத்தியேகமாக வந்திருந்தார். நாங்கள் இருவரும் பிரெஞ்சில் சரளமாகப் பேசுவதை ஜலானியும் மற்றவரும் ஆர்வமாகப் பார்த்தனர். பிறகு வேலை சம்பந்தமாகப் பேசினோம்.

ஜலானி:"ராகவன், நீங்களோ ஒரு இஞ்சினீயர். அத்துறையை விட்டு ஏன் மொழித் துறைக்கு வர ஆசைப் படுகிறீர்கள்?"
நான்: ஐயா, மொழி பெயர்க்கப் போவது என்னவோ இஞ்சினீயரிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தானே. என் இஞ்சினீயரிங் அறிவு தேனீரில் சர்க்கரைப் போல கரைந்திருக்கும். ஆகவே அத்துறை அறிவை இழக்க மாட்டேன்.

அவருக்கு இந்த பதில் பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் விடவில்லை.

ஜலானி:"எனக்கென்னவோ பிரெஞ்சு மொழி பெயர்ப்பு வேலை அதிக நாட்கள் நீடிக்கும் என்றுத் தோன்றவில்லை. இங்கு இஞ்சினியர் வேலை ஒன்றும் காலியாக உள்ளது. அதையும் எடுத்துக் கொள்ளுகிறீர்களா?"
நான்: "கண்டிப்பாக".

"இஞ்சினியர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்" என்ற டெஸிக்னேஷன் எனக்குத் தெரிந்து இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இனிமேலும் யாருக்காவது அது கிடைக்கும் என்று தோன்றவில்லை. இத்தனைக்கும் மூல காரணங்களில் ஒருவராக இருந்த ஜலானி எப்போதும் என் நன்றிக்குரியவர். இப்போது ஐ.டி.பி.எல். நாட்களைப் பற்றிக் கூறுவேன்.

மொழி பெயர்ப்பாளர்கள் உலகில் சில விஷயங்கள் எப்போதும் கண்டிக்கப்படும். அவற்றில் ஒன்று தாய் மொழியிலிருந்து அன்னிய மொழியில் மொழி பெயர்ப்பதாகும். இந்த விஷயத்தில் ஆங்கிலத்தை நாம் தாய் மொழியாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கலாம், ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சிற்கல்ல. ஆனால் இத்தடையைப் பற்றி நான் சமீபத்தில்தான் தெரிந்துக் கொண்டேன்.

நல்ல வேளை 1981-ல் ஐ.டி.பி.எல்லில் சேர்ந்தப் போது இது எனக்குத் தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால் நான் ஐ.டி.பி.எல்லில் குப்பை கொட்டியிருக்க முடியாது. அறியாமையே இவ்விஷயத்தில் ஒரு வரமாய் அமைந்தது.

இங்கு மொழி பெயர்ப்பு வேலை இருவகைப்பட்டது. அல்ஜீரியாவிலிருந்து ஒப்பந்த சம்பந்த ஆவணங்கள் வரும். அவை பிரெஞ்சு மொழியில் இருக்கும்.

நான் அவற்றை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க வேண்டும். ஐ.டி.பி.எல் வல்லுனர்கள் தங்கள் பதிவுகளை ஆங்கிலத்தில் கொடுக்க நான் அவைகளை பிரெஞ்சில் மொழி பெயர்க்க வேண்டும்.

இங்கும் நான் முதலில் வேலை செய்த மத்தியப் பொதுப்பணித் துறையின் தொழில் நுட்பமே பின்பற்றப் பட்டதால் நான் ஒரு கஷ்டமுமின்றி வேலை செய்ய முடிந்தது. ஐ.டி.பி.எல்லுக்கும் மிகத் திருப்தி. எனக்கு முன் அங்கு வேலை செய்த மொழி பெயர்ப்பாளரின் செயலின்மை அவர்களை அவ்வளவு பாதித்திருந்தது. அவர் பிரெஞ்சு மொழியில் எம்.ஏ. தேர்ச்சி பெற்றவர். இருந்தாலும் தொழில் நுட்ப விஷயங்களில் ஒன்றும் தெரியாதவர்.

பிறகு இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் என்ற பெயரில் அங்கு நான் 12 வருடம் வேலை செய்தேன். 2 வருடங்கள் பிறகு அல்ஜீரியா வேலை இல்லை என்றாயிற்று. இங்குதான் திரு ஜலானியின் தீர்க்க தரிசனம் வெளிப்படையாயிற்று. அடுத்த 10 வருடங்கள் இஞ்சினியராக வேலை செய்தேன்.

பெரிய வேலை ஒன்றுமில்லை. நிறைய ஓய்வுதான். நான் பாட்டுக்கு சந்தோஷமாக வெளி மொழி பெயர்ப்பு வேலைகளை மேற் கொண்டு என் வாடிக்கையாளர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டேன். 1990-ல் திடீரென ஒரு நாள் ஒரு பிரெஞ்சு நிபுணர் 21 நாட்கள் எங்கள் ரிஷிகேஷ் தொழிற்சாலைக்கு வேலை விஷயமாக வந்துத் தங்கினார். அவருக்கு நான் துபாஷியாகச் சென்றேன்.

எங்கள் டைரக்டர் நான் சரளமாக பிரெஞ்சு பேசுவது குறித்து மிக வியப்படைந்தார். அவர் என்னிடம் "ராகவன் இங்கு கடந்த 7 வருடங்களாக ஒரு பிரெஞ்சு வேலையும் இல்லை என்பதை நான் அறிவேன். நீங்கள் என்னவென்றால் நேற்றுதான் தொடர்பு விட்டது போல பிளந்து கட்டுகிறீர்களே" என்று கேட்டார்.

அவரிடம் உண்மையைக் கூற முடியுமா? அவரை நான் "நீங்கள் எப்போதாவது சைக்கிள் ஒட்டியிருக்கிறீர்களா?" என்று கேட்டதற்கு அவர் தான் சிறு வயதில் ஓட்டியிருப்பதாகக் கூறினார். "இப்போது கூடத் தேவையானால் நீங்கள் சைக்கிள் ஓட்ட முடியும். அது போலத்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஒரு மொழியில் தேர்ச்சி பெற்ற பிறகு அதை மறப்பது என்பது இயலாது" என்றேன். வேறு என்னதான் கூறியிருக்க முடியும்?

பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் நான் பெற்ற திறமை மற்றும் என் பொறியியல் அறிவு நான் இப்போது வேலை ஓய்வுக்குப் பிறகும் சுறுசுறுப்பாய் இருக்க உதவுகின்றன. பண வரவுக்கும் கடவுள் கிருபையால் பஞ்சமில்லை. எல்லாம் என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

ரவியா said...

சாரே! சில பதிவுகளை மறுப்பதிப்பு செய்கிறீர்களா? ஏற்கனவே படித்துவிட்டேனே !

dondu(#11168674346665545885) said...

சாரே! சில பதிவுகளை மறுப்பதிப்பு செய்கிறீர்களா?
ஆமாம். ஒரு காரணமாகத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது