9/09/2005

அன்னிய மொழிகளுடன் என் அனுபவங்கள்

நான் ஜெர்மன் கற்றுக் கொண்டப் பிறகு யுத்தக் காலத் திரைப்படங்களைப் பார்க்கும் போது ஜெர்மானியர் தோற்றுப் போகும் போது வருத்தமாக இருக்கும். மொழி என்பது ஒரு கலாச்சாரத்துக்கு ஒரு ஜன்னல் என்பது உண்மையே. இதைத் தவிர வேறு பலன்களும் உண்டு.

நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக பணி புரிந்த காலத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. புதிதாக வந்த கோட்டகப் பொறியாளருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. நான் என்ன செய்தாலும் தவறு கண்டு பிடித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அவர் அறையில் வைத்து பெரிய ஆலோசனை நடந்துக் கொண்டிருந்தது. வழக்கம்போல என்னுடைய யோசனைகள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று அவர் பார்வை என் கையில் இருந்த ஒரு குண்டுப் புத்தகத்தின் மேல் விழுந்தது.

அதை நோக்கிக் கரம் நீட்ட அவர் கையில் புத்தகத்தைக் கொடுத்தேன். புரட்டிப் பார்த்தார். "இது என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது?" என்று கேட்டார்.

"ஜெர்மன்" என்று பதில் சொன்னேன். "உங்களுக்கு ஜெர்மன் தெரியுமா?" என்று கேட்டார்.

நான் பதில் கூறுவதற்குள் என் மேலதிகாரியான உதவிப் பொறியாளர் "ஜெர்மன் மட்டுமல்ல, பிரெஞ்சும் ராகவனுக்குத் தெரியும்" என்று கூறினார்.

உடனே அவர் என்னைப் பார்த்த பார்வையில் ஒரு புது மரியாதை தெரிந்தது. பேச்சு மறுபடியும் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்த விஷயத்துக்குத் திரும்பியது. ஆனால் இம்முறை நான் சொன்னதை அதிகக் கவனத்துடன் கேட்டுக் கொண்டார்.

அன்றிலிருந்து அவர் என்னை நடத்தும் முறை முற்றிலும் மாறி விட்டது. அது வரை என்னை நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருந்தவர் என்னை உட்காரச் சொல்லுவார்.

ஐ.டி.பி.எல்லில் அனுபவம் வேறு மாதிரியானது. அங்கு சென்றது பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் வேலைக்கு. ஆனால் நேர்முகத் தேர்வில் எனக்கு இஞ்சினியர் வேலையும் கொடுக்கப்பட்டது. "மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்" என்று போஸ்டிங் கிடைத்தது.

அங்கு எனக்கு முன் இருந்த மொழி பெயர்ப்பாளரை ரொம்பத்தான் ஏய்த்து வந்தனர். அந்தப் பெண்மணி பிரெஞ்சில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். ஆனால் தொழில் நுட்ப வர்ணனைகளைப் பற்றி ஒன்றும் அறியாதவர்.

நான் போன பிறகு நிலைமை தலைகீழ் ஆனது. நான் வேலை தெரிந்த பொறியாளன் என்பது அங்கு என் மரியாதையை அதிகரித்தது. அதிலும் ஆஃபீஸராக வேறு ஆகியிருந்தேன். கேட்க வேண்டுமா?

இக்கம்பெனியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபோது கைவசம் வேறு வேலை ஆஃபர் இல்லாது ஓய்வு பெற்றது அக்காலக் கட்டத்தில் நான் மட்டுமாகத்தான் இருக்கும். ஆனால் கைவசம்தான் தொழில் இருந்ததே. ஆகவே கவலை இல்லாது முன்னேற முடிந்தது. அடுத்த 8 வருடங்கள் டில்லியிலேயே குப்பை கொட்ட முடிந்தது. 2001-ல் சென்னைக்கு வந்து இன்னும் அதிகமாக முன்னேற முடிந்தது எல்லாமே கடவுள் அருள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

ஜென்ராம் said...

//எல்லாமே கடவுள் அருள்//
என்ன சார், அப்பன் மகர நெடுங் குழைக்காதர் அருள் என்று சிறப்பு சேர்க்காமல் கடவுள் என்று பொதுப் பெயரில் போட்டு விட்டீர்கள்?

தெருத்தொண்டன் said...

//ஜெர்மானியர் தோற்றுப் போகும் போது வருத்தமாக இருக்கும்//

பாசாங்கு இல்லாம உண்மை பேசறீங்க டோண்டு..உங்க பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்த்துட்டு வர்றவங்களுக்கு உங்களுக்கு இப்படி வருத்தம்தான் வரும்னு நல்லாத் தெரிஞ்சிருக்கும்..

dondu(#11168674346665545885) said...

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனக்கு நடக்கும் நல்லவை மற்றவை எல்லாமே என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஜெர்மானியர் தோற்றுப் போகும் போது வருத்தமாக இருக்கும்//
"உங்களுக்கு இப்படி வருத்தம்தான் வரும்னு நல்லாத் தெரிஞ்சிருக்கும்.."

ஜெர்மன் மொழி கற்கும் வரை அவர்களை வில்லன்கள் ரூபத்தில்தான் பார்த்தேன். அந்தக் கண்ணோட்டம் அவர்கள் மொழி கற்றதும் மாறியது என்பதைக் குறிப்பிட்டதன் நோக்கமே அன்னிய மொழி கற்றதனால் ஆய பயனென்கொல் என்று கேட்பவர்களுக்காக எழுதப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கயல்விழி said...

பல மொழிகளில் புலமையுடன் இருப்பது சிறப்பே. முந்தி நாங்கள் ஒரு சிலர் சிங்களம் கற்கக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தது தான் நினைவிற்கு வருகிறது. உங்கள் அநுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி டோண்டு ஐயா.

dondu(#11168674346665545885) said...

எல்லா மொழிகளுமே சிறப்பானவைதான். எங்களூரில் ஒரு தலைமுறையே ஹிந்தி கற்காமல் இழப்பை சந்தித்தது.

ஹிந்தியை எதிர்த்து ஹிந்தி அரக்கி என்றெல்லாம் பேசிய தலைவரின் பேரன் ஹிந்தி படித்து தில்லியில் மந்திரியானார். அவர் பேச்சைக் கேட்டவர்கள் முட்டாள்கள் ஆனதுதான் மிச்சம்.

ஆனால் ஒன்று. தத்தம் பிள்ளைகளுக்குத் தமிழ்க்கல்வி அளிக்க வேண்டும் என்று இப்போது ஜல்லியடிப்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். பத்திரிகை நிருபர்கள் கிழித்து விடுகிறார்கள், அத்தகையத் தலைவர்களின் பேரப் பசங்கள் மட்டும் ஆங்கிலப் பள்ளியில் படிப்பதை பற்றிக் கேட்டு மானத்தை வாங்கி விடுகிறார்கள்.

ஆகவே தொண்டர்களுக்கு நான் கூறிக் கொள்வது இதுதான்.

தலைவர்களைப் போல ப்ராக்டிகலாக இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எது நல்லதோ அதையே செய்யுங்கள். தமிழ் வழிக் கல்வி கொடுப்பதோ கொடுக்காமல் இருப்பதோ உங்கள் முடிவு மற்றும் சௌகரியத்துக்கேற்ப இருக்கட்டும். மூன்றாம் மனிதர்கள் அறிவுரை கூற விடாதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது