10/15/2005

ஆண், பெண் கற்புநிலை - 3

இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் ஆக்ரோஷமாக வரும் என்பதை முன்னாலேயே எதிர்பார்த்தேன். ஆகவே பிரச்சினை இல்லை. நான் கூற வந்ததை சொல்லிவிட்டு போகிறேன். பதிவு-2-ல் ஒருவர் பின்னூட்டமிட்டது போல் வேறு பெண்கள் யாரும் இப்பதிவுக்கு பின்னூட்டமிடவில்லைதான். ஏன் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

ஜனத்தொகையில் பாதிக்கு பெண்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் சரிசமமாக இல்லை என்பதால் பாதிக்கப்படுபவர்கள்தான் ஏதேனும் செய்ய வேண்டும். ஆண்களுக்கு தற்போதைய நிலை சௌகரியமாக இருக்கிறது என்பதால் அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. எல்லா பெண்களும் அவ்வாறு செய்வார்கள் என்று ஏன் பயப்பட வேண்டும்? நல்ல நிலைமையில் இருக்கும் பெண் ஒருவர் ஏன் தேவையில்லாது ரிஸ்க் எடுக்கப் போகிறார்? மாட்டிக் கொண்டால் அவர்களுக்குத்தானே கஷ்டம்?

பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும். இந்த பிரச்சினையை ஹிந்தி படம் "ப்ரேம் ரோக்"-ல் ராஜ் கபூர் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார்.

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்றெல்லாம் கேட்டார்கள். வராமல் இருக்க புள்ளி ராஜா ஆணுறை உபயோகிக்க வேண்டும் என அறிவுறை கூறினார்கள். ஆனால் எய்ட்ஸ் வந்துவிட்டால் புள்ளிராஜாவின் மனைவியின் கதி என்ன என்பதைக் கூறினார்களா? ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லலம் இப்போது கூற முடியுமா? கணவனுக்கு எய்ட்ஸ் வந்தால் மனைவி அவனிடம் விவாகரத்து பெற இது ஒரு காரணமாக அமையுமா? தெரியவில்லை. வழக்கறிஞர்கள் யாராவது கருத்து கூறலாம்.

நான் வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் SITA சட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அது இப்போது என் வலைப்பூவில் காணவில்லை. ஆனாலும் நல்ல வேளையாக என் வந்தகட்டில் சேமித்து வைத்திருந்ததால் அதை இங்கு மறுபடியும் இடுகிறேன். பதிவின் தலைப்பு:
"யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India"

எழுபதுகளின் துவக்கத்தில் சோ அவர்களால் எழுதப்பட்ட "யாருக்கும் வெட்கமில்லை" என்ற நாடகத்தைப் பார்த்தேன்.

கதாநாயகி பிரமீளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ரங்கநாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கநாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (வேண்டுமென்றே?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிப்பதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது என நினைக்கிறேன். இவ்வாறு யாராவது ரிட் பெட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
# posted by Dondu @ 8:55 PM, 1/9/2005"

இவ்வளவு சீரியசான பதிவுக்கு வந்த கருத்துக்களை பாருங்கள்.


2 comments
Comments:
இந்தச் சட்டத்தை விட்டுவிட்டு, மேலை நாடுகள் சிலவற்றைப்போல இதை ஒரு தொழிலாக அங்கீகரித்தால் என்ன விளைவுகள் உண்டாகும்?
# posted by Radhakrishnan : 4:19 AM

அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால் இந்தத் தொழிலையே சட்டப் பூர்வமாகுவது என்ற முடிவுக்கு ஆண்கள் வந்து விடுவார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.

இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்"

அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார்.

அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 11:16 AM
இந் நாடகம் திரைப் படமாக எடுத்தபோது பிரமீளா வேடத்தில் நடித்தவர் யாரென்று நினைவிருக்கிறதா?
# posted by Raviaa : 8:46 PM

ஏன் இல்லை?
சிவகுமார்: வக்கீல்,
ஜயலலிதா:பிரமீளா.

அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 12:43 PM"

இப்போதைக்கு நான் கூற நினைப்பது இவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

53 comments:

குழலி / Kuzhali said...

//இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா?
//
அப்படி இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வந்தால் எங்கேயாவது சென்று தணித்துக் கொள்ள வேண்டுமா என்ன?

ஏற்கனவே இக்கால இளைஞர்களை எல்லாம் என்னமோ வேறு வேலையில்லாமல் காம இச்சையில் அலைந்து கொண்டிருப்பது போல குஷ்பு முதல் பலரும் இந்த மாதிரி கூறி கேவலப்படுத்திக் கொண்டுள்ளனர், இப்போது நீங்களும்,

எத்தனை விழுக்காடு இளைஞர்கள் திருமணத்திற்கு முன் பாலுறவு இச்சையை தணித்துக் கொண்டுள்ளனர்? மிகக் குறைந்த விழுக்காடே அது... விதிவிலக்குகள் பொதுமை அல்ல, விதிவிலக்கை பொதுமை படுத்தி பேசுவதே பொழப்பாகிவிட்டது.

இலட்சக் கணக்கில் சம்பாதிக்கும் எத்தனை இளைஞர்கள் 30 வயதிலும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர் என்று தெரியுமா உங்களுக்கு? எனக்கு தெரியும்.

ஊரில் இல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் எங்களை கட்டுப்படுத்த எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையிலும் சுய ஒழுக்கத்துடன் கட்டுப்பாட்டுடன் வாழும் எங்களைப் போன்றவர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? நான் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவன், என் வாழ்க்கையில் இதுவரை நான் பழகிய இளைஞர்களில் 95% இளைஞர்கள் திருமணத்திற்கு முந்தைய பாலுறவு தொடர்பு இல்லாதவர்கள்.

போதுமய்யா போதும் விதிவிலக்குகளை பொதுமையாக பேசி மதில்மேல் பூனையாக குழப்பத்தில் இருப்பவர்களை மதில் தாண்டும் பூனையாக ஆக்காதீர்கள்.

dondu(#11168674346665545885) said...

"அப்படி இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வந்தால் எங்கேயாவது சென்று தணித்துக் கொள்ள வேண்டுமா என்ன?"

அப்படி என்று நான் கூறவில்லையே. உடல் இச்சையை தணித்துக்கொள்வது தவறில்லை என்பதுதான் என்னுடைய கட்சி.

எல்லோரும் உங்களை போன்று கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்? By the way நானும் அதே கட்டுப்பாட்டுடன் இருந்தவன்தான். இது உண்மை, ஆகவே கூறுகிறேன். பெருமைக்காகக் கூறவில்லை.

இப்போது மட்டும் எய்ட்ஸ் விளம்பரங்களில் என்ன கூறுகிறார்கள்? ஆணுறையை உபயோகியுங்கள் என்றுதானே? பிரத்தியட்ச நிலையை யோசித்து பேசுங்கள். உடல் இச்சையை தணித்துக் கொள்வது தவறு என்று பேசுவது பூனை தன் கண்ணை மூடிக்கொண்டிருப்பதை போலத்தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

மற்றப்படி நான் சொல்லி எல்லோரும் கேட்பார்கள் என்றெல்லாம் ஏன் பயப்பட வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மரத் தடி said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

"டோன்டு,
விபசாரத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்று எனக்கு புரியவில்லை."

அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால் இந்தத் தொழிலையே சட்டப் பூர்வமாகுவது என்ற முடிவுக்கு ஆண்கள் வந்து விடுவார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"எந்த சமூக விரோத தொழிழிலும் வாடிகையாளருக்கு குறைந்த அளவு தண்டனைதான் வழங்கபடுகிறது.கள்ளசாராயம் விற்பவனுக்கு கிடைக்கும் தண்டனயை விட குடிப்பவனுக்கு குறைந்த தண்டனை தான்.போதை மருந்து தொழிலிலும் விற்பவனுக்கு வாடிக்கையாளரை விட குறைவான தண்டனை தான்.
அது போல் தான் விபச்சாரத்திலும்."

எந்த ஊரில் ஐயா இருக்கிறீர்கள்? விபசாரத்தில் வாடிக்கையாளருக்கு தண்டனையே கிடையாது. குறைவான தண்டனைகூட கிடையாது. அதனால்தான் கேட்கிறேன், "ரங்கனாதனை செருப்பால் எப்போதுதான் அடிப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"போலீஸ் பிடித்தால் ஆணுக்கு தான் தண்டனை,'வாடிக்கையாளருக்கு' அல்ல.ஆக சட்டம் பெண்ணுக்கு பாரபட்சம் காட்டுவதில்லை"

அப்படியா, எவ்வளவு ஆண்கள் அம்முறையில் தண்டனை பெற்றார்கள் என்பதை கூற முடியுமா? விபசாரம் செய்த அழகிகள் என்றுதான் பேப்பர்களில் செய்தி வருகிறதே தவிர அழகர்களை பற்றி எங்கும் படித்ததாக நினைவு இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

test

தாணு said...

//விபசார தடைச் சட்டட்தை வாபஸ் பெற்றால் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும்// என்பது மிகவும் உண்மை. consumer என்ற group இருக்கும் வரை, இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதைதான். அதை ஒரு தொழிலாக அறிவித்து `விபசாரி' என்ற பதத்துக்கு மாறான `பாலியல் தொழிலாளர்கள்' என்ற பதத்தை நடைமுறைப் படுத்தலாம்.
குழலி போன்றவர்களின் தார்மீகக் கோபமும் நியாயமே.
அவரது பதிவில் ஒருமுறை அவரே சொன்னதுபோல், `விளிம்புகளில் உள்ளவர்களை விமர்சிக்கும் போது' சாமான்யர்களும் சங்கடப் பட நேர்வதுண்டு.
நாங்கள் சந்திக்கும் மனிதர்களில் இரு விளிம்புகளையும் பார்ப்பதால், இரு வேறு மனநிலையையும் நியாயப்படுத்த் முடிகிறது.

dondu(#11168674346665545885) said...

எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே தருகிறேன். ஒருவராவது என்னை சரியாக புரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மின்ன்ஞ்சல் இதோ:

Dear Dondu,
I could not post this in your blog as the anon posting is disabled for
known reasons. Please post this if its ok for you.
I understand that your emphasis here is on feminine sexuality, not on
free for all hedonism. If so, there is nothing wrong or amoral in that.
Millenniums have passed by, suppressing the feminine sexuality. Let our
society realize the wisdom of Valluvar at least now:

nAN ena onRO aRiyalam kAmaththAl
pENiyAr petpa seyin.
Verse: 1257

Regards,
Kumar
sarabeswar at yahoo.com

dondu(#11168674346665545885) said...

குமார் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. தன்னிலை விளக்கம் நான் கொடுக்க எண்ணியிருந்தேன். அதற்குள் உங்கள் பின்னூட்டம் வந்து விட்டது. அதையே என் தன்னிலை விளக்கமாக அளிக்கிறேன்.
பலர் மனதின் வேதனைகளுக்கு என் கற்புநிலை பற்றிய பதிவுகள் காரணமாகி விட்டன. அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"மன்னிப்பு கேட்க வேண்டியது உங்களை திட்டி எழுதிய நட்டு கழன்ட கேசுகள் தான்."
நன்றி நாட்டாமை அவர்களே. இருந்தாலும் உங்களை நோக்கி "நாட்டாமே, தீர்ப்பை மாத்தி எழுது" என்று குரல்கள் எழும்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை".

அன்புடன்,
டோண்டு ராகவன்

மரத் தடி said...
This comment has been removed by a blog administrator.
வால்டர் said...

சரபேஸ்வர் என்ற யாகூ ஐடி யாரு தெரியுமா? அந்த பய ஜாவா குமாரு. இந்தோனேசியா ஜாவாவில் இருக்கான். அவனும் ஐயன். அவன் ராயர் காபிக்கடையில் எழுதறான். அதான் இந்த ஐயனுக்கு ஜால்ரா போடுறான்.

dondu(#11168674346665545885) said...

நன்றி நாட்டாமை அவர்களே. காசியின் பதிவில் என்னை பற்றி கும்மோணம் கோவாலு என்ற பெயரில் வந்த பின்னூட்டத்தை படித்தேன். அதற்கு காசி அவர்கள் கொடுத்த பதிலையும் படித்தேன். காசி அவர்களுக்கும் என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் நீலகண்டன் said...

பெண்ணின் பாலியல் வெளிப்பாடுகள், அவளது பாலியல் வெளிப்பாட்டின் சக்தி ஆகியவை பல நூற்றாண்டுகள் அடக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அடக்கப்பட்ட சக்தி கிளர்ந்தெழுவது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. தொழில்நுட்பம், சமுதாய மாற்றம் ஆகியவை இதற்கு இன்று உறுதுணையாக உள்ளன. இத்தகைய மாற்றச்சூழலுக்கு தகுந்தாற்போல சமுதாய விதிகளும் பரிமாண மாற்றம் அடைவது அவசியம். அவ்வாறன்றி பாலியல் அடக்குமுறை மதிப்பீடுகளின் மேல் எழுப்பப்படும் சமுதாயம் தன்னகத்தில் கொடுமையான வன்முறையையே நியதியாக கொண்டு திகழும். வீழும்.
டோ ண்டு ராகவன் மற்றும் சகோதரர் குமார் ஆகியோர் கூறியவற்றுடன் முழுமையாக உடன்படுகிறேன்.

அரவிந்தன் நீலகண்டன்

dondu(#11168674346665545885) said...

நன்றி அரவிந்தன் நீலகண்டன் அவர்களே. வெள்ளம் பெருகி வரும்போது அணையிட முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒன்று, இப்போது உங்களையும் என்னுடன் சேர்த்து வசைபாட போலி டோண்டு வகையறாக்கள் வருவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பொழுது அவர்களே, செக்ஸ் மட்டும் வாழ்க்கையில்லை என்று கூறுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். செக்ஸ் ஒன்றுமே இல்லை என்பதும் தவறுதான். பசி போன்ற அடிப்படை உணர்வுதான் காம இச்சையும். அதில் ஆணுக்கு எல்லா உரிமையும் கொடுத்து விட்டு பெண்களை அம்போ என்று விடுவதை எதிர்த்துத்தான் என்னுடைய இப்பதிவுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அப்படி சட்டம் இல்லையென்றால் அவர்களிடம் இருப்பதையே கண்ட துண்டமாக வெட்டி போட்டு விட்டால் பின் என்ன செய்வார்கள்.அதற்கு தான் வழி தேட வேண்டும்!"

கௌரவர் சபையில் எழுந்து அற்புதமானக் கேள்வியைக் கேட்ட விகர்ணன் போல நீங்கள் எடுத்துரைத்த உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

1981-ஆம் வருடம் எழுத்தாளர் வாஸந்தி அவர்களைப் பார்த்து நான் கேட்ட கேள்வி:

"கற்பழிக்க வருபவனை பெண் குறிப்பிட்ட இடத்தில் உதைத்தால் பிரச்சினை தீருமே. நீங்கள் ஏன் அவ்வாறு உங்கள் கதாநாயகிகள் செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதாக எழுதக் கூடாது?" அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை.

இப்போது அக்கேள்வியை திரும்ப வைக்கிறேன்.

கற்பழிப்புக் காட்சியில் பெண் ஏன் பலவீனமானவளாக எப்போதும் காண்பிக்கப் படுகிறாள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"பொதுவாக ஆண்கள் பலமாக இருப்பதால்..."

பொதுவாகத்தானே, ஏன் ஒரு பெண் அவ்வாறு எட்டிஉதைப்பதாகக் காண்பிக்கக் கூடாது? தன்னை முத்தமிட முயன்ற வாலிபனின் நாக்கைக் கடித்து துண்டித்ததாக இப்போது ஒரு செய்தி படித்தேனே. நான் கூறிய இந்த ஐடியாவைப் பரப்ப வேண்டியது எழுத்தாளர்களின் கடமை.

"உன் பல், நகம் எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்து" என்று காந்தியடிகள் பெண்களுக்குக் கூறியிருக்கிறாரே.

"புன்னகை" படத்தில் நடிகர் ராமதாஸ் கற்பழிக்க வர, ஜயந்தி போராடாமல் சாவகாசமாகப் பாட்டு பாடுகிறார். என்ன கேவலம். பாலச்சந்தர் ஆண், அவர் அப்படித்தான் எடுப்பார் என்றுதான் எடுத்துக் கொள்ள தோன்றுகிறது.

அதை விடுங்கள். "Yours, mine and ours" என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. அதில் தத்தம் துணையை இழந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வார்கள். இருவருக்கும் அவரவர் குழந்தைகள் வேறு. இதை ஹிந்தியிலும் அப்படியே எடுத்தார்கள்.

ஆனால் இதையே தமிழில் "மழலைப் பட்டாளம்" என்றத் தலைப்பில் கலாகேந்திராவில் படம் எடுத்தார்கள். தமிழில் டைரக்டர் நடிகை லட்சுமி. கதையை சற்றே மாற்றினார்கள்.

அதாவது ஹீர்ரோவின் பசங்கள் அவனுடையதாம் ஆனால் ஹீர்ரோயின் வசம் இருந்த குழந்தைகள் அவள் அக்கா பெற்றதாம், இவள் கருக்கழியா கன்னியாம். என்ன பிதற்றல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வருக பொழுது அவர்களே. மழலைப் பட்டாளம் படத்தின் தயாரிப்பு பாலசந்தருடையது, டைரக்ஷன் லட்சுமி.

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பார்த்து ரசித்த நான் தமிழில் இம்மாதிரி முட்டாள்தனமாகக் கதையை மாற்றியதால் அதை பார்க்கவில்லை.

ஆங்கிலத்தில் ஹென்றி ஃபோண்டா என்று ஞாபகம். ஹிந்தியில் பேர்ள் பதம்ஸீ மற்றும் அசொக் குமார் என்று ஞாபகம். தமிழில் விஷ்ணுவர்த்தன் மற்றும் சுமித்திரா.

"இதற்கும் பெண்கள் பலவந்தபடுத்தப்படுவதற்கும்
ஒரு வித்தியாசமும் இல்லை."
ஆறு வித்தியாசங்கள் எல்லாம் இல்லை. ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆண் கர்ப்பமடைய முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஆண்களுக்கு மற்றொரு disadvantage
என்னவென்றால், இவர்களுடைய கதைகளை வெளியிட பத்திரிகைகள் ஆர்வம் காட்டாது"

ஆனால் பெண்கள் கதையை வெளியிட ஆர்வம் காட்டுவார்கள். அது பெண்களுக்கு disadvantage!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

மூணு பகுதியையும் படித்துப் பார்த்தேன். மிகவும் குழப்பம் அடைந்தேன். மொத்தத்தில் நீங்கள் சொல்ல வரும் கருத்து பெண் சுதந்திரத்தை பற்றி. இச்சை இருபாலருக்கும் உண்டு, அக கட்டுப்பாடுகளை கலைத்தெரியுங்கள், சுகம் வேண்டுமென்றால் பாதுகாப்பாக பெற்று கொள்ளுங்கள், இந்த குடும்பம் அமைப்புகள் தோன்றியது உங்களை கட்டுபடுத்த தான், ஆக சுமக்கும் கரு தன்னுடய தாக இருக்க வேண்டும் என்ற கட்டுபாடுத்தான். உங்களை கட்டி போடத்தான். இந்த ஆண் சமூகம் உங்களை வதைக்கிறது, ஆக குஷ்பு கூறியதை வழி மொழிகிறேன் என்று கூறி உள்ளீர்கள். நல்ல கருத்துக்களே!
ஆனால் அத்தனையும் ஆணின் மீது வைத்து அம்பை எய்துள்ளீர்கள். கல்யாணம் கட்டுப்பாடு, ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆண் சமூகம் படைத்த நியதிகள் எதுவும் தேவையில்லை, இச்சையை தனித்துக்கொள்ளலாம் எந்நிலையிலும் என்கிறீர்கள், ஆனால் இது பெண்ணுக்கு மட்டும் பொருந்தட்டும், ஆணுக்கு செருப்படி கொடுக்க சொல்கிறீர்கள். மொத்ததில் செக்ஸ் சுதந்திரம் பற்றி பேசிவிட்டு, அதை மாறி வரும் கற்பு நிலை என்று கூற முற்பட்டுள்ளீர்கள், மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, ஆனால் சுதந்திரம் பெண்ணுக்குத்தான் தேவை, ஆணுக்கில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறீர்களா, இல்லை நான் சொல்லி எவன் கேட்கப்போறான், அது நடக்கிறது நடந்துக்கிட்டுதான் இருக்கும். பொம்பளங்களுக்கு கவர் பண்ற மாதிரி இந்த கற்புநிலை பதிவை போடுவோம்னு போட்டீங்களா, இல்ல இந்த ஆம்பிளங்களை கொஞ்சம் Provocative பண்ணி பார்ப்போம்னு போட்டீங்களான்னு தெரியல்ல, அப்படியும் பொம்பளங்க பின்னோட்டம் போட யாரும் வரலைங்கறது தான் குறை, ஒன்னுரெண்டு பேரை தவிர! so message என்ன சொல்ல வறீங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்.

தப்பா நினைச்சிக்காதீங்க, கொஞ்சம் பின்னோட்டம் பெரிசா எழுதிட்டேன்:-)

dondu(#11168674346665545885) said...

"ஆனால் சுதந்திரம் பெண்ணுக்குத்தான் தேவை, ஆணுக்கில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறீர்களா..."

ஆணுக்குத்தான் ஏற்கனவே சுதந்திரம் இருக்கிறதே. புதிதாக எங்கே தேவை வந்தது. நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பெண் தேவைபட்டால் அதை எடுத்துக் கொள்வாள். இந்த எண்ணத்தையே ஆண்களால் ஜீரணிக்க முடியவில்லை. புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். கணவனுடன் அவளுக்கு பத்திரமான உறவு கிடைக்காது. இதற்கு இதுவரை யாரும் நேரடியான பதிலைக் கூறவில்லை.

நான் ஏற்கனவே கூறியது போல ஆசைநாயகிகளும் கள்ள புருஷர்களும் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நான் ஒன்றும் இல்லாததைக் கூறவில்லையே.

"பொம்பளங்களுக்கு கவர் பண்ற மாதிரி இந்த கற்புநிலை பதிவை போடுவோம்னு போட்டீங்களா, இல்ல இந்த ஆம்பிளங்களை கொஞ்சம் Provocative பண்ணி பார்ப்போம்னு போட்டீங்களான்னு தெரியல்ல"
இரண்டுமேயில்லை, உள்ள நிலையைக் கூறினேன் அதைப் பார்க்க ஒரு பெர்ஸ்பெக்டிவ் தேவைப்பட்டது, அதைக் கொடுக்க முயற்சி செய்தேன்.

பலர் ரொம்பத்தான் அலட்டிக் கொண்டனர். இதைத்தான் "protesting too much" என்று கூறுவார்கள். முக்கால்வாசி வெளிவேஷம்தான் என்று எனக்குப் படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஐயர் said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

1.meendum devadasi murai kondu varuvadhu இல்லை

2.marumanathai neengal yerkavillai. adharku padhil adultery seyyalam. இல்லை

3.baalya vivagathai atharikireergal endru therigiradhu. இல்லவே இல்லை

இதுதானா நீங்கள் படித்த லட்சணம்? நான் கூறியது ஒன்றே ஒன்றுதான், அதாவ்து சம்பந்தப்பட்ட பெண்ணே முடிவு எடுக்க வேண்டும்.

விவாகரத்து செய்து கொள்ள இதைக் காரணமாகக் காட்ட முடியுமா என்றுதான் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டேன். எனக்கு தெரிந்தவரை அம்மாதிரிக் காரணம் காட்ட முடியாது என்பதே.

பெண்களின் உடல் இச்சையை சமாளிக்கவே பால்ய விவாகங்கள் நடந்தன என்றுதான் எழுதினேன். அதுவும் பால்ய விதவைகளைப் பெருக்கியதால் கைவிடப்பட்டது என்றும் எழுதினேன். அடல்டரி செய்ய வேண்டும் என்று பெண் தீர்மானித்தால் குற்றம் ஆனால் ஆண் செய்தால் அவன் ஆம்பிளை இப்படி அப்படித்தான் இருப்பான் என்று எத்தனை டயலாக்குகளைக் கேட்டிருக்கிறோம். இந்த இரட்டை நிலையைத்தான் எதிர்த்தேன். இதில் பெரியாருடன் முற்றிலும் ஒத்துப்போகிறேன்.

இதில் தேவதாசிகளைப் பற்றி நான் எங்கே குறிப்பிட்டேன்? மறுபடியும் அம்மூன்று பதிவுகள் மற்றும் அவற்றின் எதிர்வினைகள் ஆகியவற்றைப் படித்து விட்டு வரவும்

வேறு ஏதாவது கேள்வி?

அன்புடன்,
டோண்டு ராகவன்



idhu dhan ungal stand . sariyaa?

முத்துகுமரன் said...

//'' பெண்களின் உடல் இச்சையை சமாளிக்கவே பால்ய விவாகங்கள் நடந்தன என்றுதான் எழுதினேன். ''//

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு....

எத்தனை உயர்வான பார்வை பெண்கள் மீது

பெண்களை பற்றி உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே.

இன்று பெண்ணியம் பேசும் பலரின் உண்மை முகம் இதுதான்..

dondu(#11168674346665545885) said...

"உங்கள் எண்ணப்படி வரன் பார்க்கும் பெண்வீட்டார், அவ்வரனுக்கு பல பெண்களுடன் "நெருக்கமான" பழக்கமிருக்கென்றறிந்தாலும் பெண்கொடுப்பரோ?"
அதையும் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், கதைகளில் படித்தும் இருக்கிறேன். ஆம்பிளை முன்னே பின்னேதான் இருப்பான் கால் கட்டுப் போட்டா சரியாயிடும் என்று பெண் வீட்டாரும் யோசித்து "நல்ல" இடங்களில் பெண்ணைக் கொடுத்தக் கதையும் உண்டு.

ஒரு உதாரணம் கூறுவேன். முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தன் அப்பாவிடம் தங்கள் உறவுப்பசங்கள் கூத்தியார் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு அவரும் அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்பது போல்தான் பேசுவார்.

பிள்ளை பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவனானால் இந்த விஷயம் பெரிய விஷயமே இல்லை என்பது போலத்தான் தீர்மானிக்கப்படும்.

"அல்லது உங்கள் எண்ணப்படி தகாத உறவு கொள்ளும் ஆண்கள் எல்லாம் தமக்கு எய்ட்ஸ் இருந்தால் உண்மை சொல்வரோ?"
எது எப்படியானாலும் அவளுக்கு கணவனிடம் பத்திரமான உறவு கிடைக்காது. அப்பண்ணுக்கு உடல் இச்சை இருக்கக் கூடாதா? அவர் சாமியாரிணியாகத்தான் இருக்க வேண்டுமா?அவர் என்ன செய்ய வேண்டுமென்று அவரே முடிவு செய்து கொள்வார். அதை பற்றிக் கூற மற்றவர்கள் யார் என்பதைத்தான் கூறினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"எத்தனை உயர்வான பார்வை பெண்கள் மீது
பெண்களை பற்றி உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே.
இன்று பெண்ணியம் பேசும் பலரின் உண்மை முகம் இதுதான்.."

நான் கூறியது யதார்த்தம். மனித இனத்தில் பாதி அளவில் இருக்கும் பெண்கள் எதிர்க்கொள்ளும் சங்கடங்களையே இங்கு கூறப் புகுந்தேன். பால்ய விவாகங்கள் நடந்ததற்கு முக்கியக் காரணமே நான் கூறியதுதான். பெண் ருதுவாவதற்கு முன்னாலேயே அவளுக்கு திருமணம் முடிக்காது இருந்தால் அவளே தனக்கேற்ற வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அன்று மனு சாஸ்திரத்திலேயே இருந்திருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

எனக்கா பெண்கள் மேல் கீழ்த்தரமான எண்ணம்? உம்மைப் போன்று பேசுவர்களுத்தான் கீழ்த்தரமான எண்ணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"திருமணம் என்பது சட்டபூர்வமாக உனக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று இருவர் அளிக்கும் உறுதிமொழி.உடன்பாடு.
அதை இருவரும் கட்டிகாக்க வேண்டும்.
இதுவே எனது தீர்ப்பு."
அதெல்லாம் சரி, வழக்கு என்று நம்மிடம் வந்தால்தானே தீர்ப்பு கூறுவது எல்லாம். இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களே முடிவு எடுத்துக் கொள்கிறார்கள். நான் கூறுவது யதார்த்த நிலை அவ்வளவே.

சலிப்பாக இருந்தாலும் நான் கூறிய ஒன்றை இங்கே மறுபடி கூற நேருகிறது.

உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம். அதுதான் இவ்வளவு நாட்களும் நடந்து வந்திருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பொழுது அவர்களே, முடிந்தால் தமிழில் எழுதுங்கள் இல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தயவு செய்து தமிழை லத்தீன எழுத்துக்களில் எழுதாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றப்படி நீங்கள் குறிப்பிட்ட சிக்கல்களைப் பற்றி என் பதிவிலேயே குறிப்பிட்டு, பாதுகாப்புடன் இருக்கக் கூறியாகி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

//உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.// சரியா சொன்னீங்க, அதை அடைவதில் எந்த சிரம்மும் யாருக்கும் இருக்கக் கூடாது. என்னைப் பொருத்தவரை, இது சமூகத்தில நடந்துக்கிட்டுத்தான் இருக்கு, இரு பாலருக்குமே. இதுல ஒன்னும் தவறில்லைங்கிற மனப்பான்மை எல்லாருக்கும் தோன்றிடுச்சி. மாறி வரும் moral Principle களே இதற்கு சாட்சி. புள்ளி ராஜாவானாலும், புள்ளி ராணியானாலும் அது பாட்டுக்கு நடக்கிறது நடந்துக்கிட்டுத் தான் இருக்கு டோண்டு சார்.

dondu(#11168674346665545885) said...

"என்னைப் பொருத்தவரை, இது சமூகத்தில நடந்துக்கிட்டுத்தான் இருக்கு, இரு பாலருக்குமே. இதுல ஒண்ணும் தவறில்லைங்கிற மனப்பான்மை எல்லாருக்கும் தோன்றிடுச்சி."
அவ்வளவுதான் விஷ்யம், அழகாகக் கூறிவிட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மறுபடியும் வலியுறுத்துவேன், அவரவர் எடுக்கும் முடிவுக்கு அவரவரே பொறுப்பு. விவாகரத்து செய்து கொள்வதா அல்லது செய்யாமலேயே வேறு இடத்துக்குப் போவதா என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணின் முடிவைச் சார்ந்ததே. அதற்கு பல பொருளாதாரக் காரணிகள் உண்டு. விவாகரத்தௌ செய்து கொண்ட பெண்களுக்கு கஷ்டம் அதிகம். ஆகவே என்ன முடிவு எடுப்பது என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

சட்டத்தின் இன்னொரு பக்கம் என்னவென்றால் அடல்ட்ரி செய்யும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை. பெண்ணுக்கு இல்லை. இது சாருஹாஸன் அவர்கள் கூறியது. சரியாகத்தான் இருக்கும். நானும் இவ்வாறுதான் வேறு பல சட்ட நிபுணர்கள் பேசுவதி கேட்டிருக்கிறேன்.

நிற்க. ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ நாம் யார்? நமக்கு யார் அந்த அதிகாரம் தந்தது?

எனது பதிவுகளின் நோக்கமே இரட்டை நிலைப்பாடு பெண்களுக்கு பாதகமாக இருந்ததை சுட்டிக்காட்டுவதேயாகும். அது ஏன் என்பதற்கு காரணத்தையும் எழுதியிருந்தேன். அதாவது பெண் கர்ப்பம் அடைகிறாள், ஆண் கர்ப்பமாவதில்லை. இது இயற்கை அவர்களுக்குத் தந்த உடற்கூறு.

இன்னொரு ஆணிடம் செல்லும் பெண் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாவதால் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினேன். மற்றப்பfடி தீர்ப்பெல்லாம் வழங்க எனக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அடுத்தவர் பதிவுகளில் உங்களை தவறாக எழுதாமல் இருந்தால் சரி!"

Thank you very much for expressing this wish for my sake. But I feel that you do not understand Poli Dondu or his chamchas. Anyhow, thanks.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

"பிடிபட்டால் பெண் வாடிக்கையாளர் தப்பிப்பார் ,கிகலோ மாட்டுவார் அது தான் சட்டம்.ஆனால் கிகலோ பிடிபடுவதில்லை.அது அவர் சாமர்த்தியம்."
அதே சாமர்த்தியத்தைத்தான் மாட்டிக் கொள்ளாத பெண்ணும் காண்பிக்கிறாள். நான் கூறியது போல அவள் விவாகரத்து பெற்றால் தேவையில்லாத (அவளுக்கு) காம்ப்ளிகேஷன்ஸ் வரும். அதை விடுத்து கமுக்கமாக இருந்து கொண்டால்? அவ்வளவுதான். அதைத்தான் மாட்டிக் கொள்ளாத பெண்கள் செய்கின்றனர். இன்னொரு உதாரணமும் தருவேன். ஆண் மலடன் ஆனால் பெண்ணைத்தான் பலரும் பழிக்கின்றனர். இப்போது பெண் போய் ஓசைப்படாமல் குழந்தை பெற்றுக் கொண்டு மேலும் அபவாதத்திலிருந்து தப்பிக்க நினைக்கிறாள். அவள் வரையில் அது நியாயம். உள் விஷயங்கள் ஆயிரம் இருக்கும். நமக்கு அவை தெரியாது இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அவர்கள் மேல் தீர்ப்பு சொல்ல வேண்டும்? இது என் கருத்து, அதாவது உங்கள் வார்த்தையில் என் தீர்ப்பு. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

"விபச்சாரிகளுக்கு அரசாங்கத்தின் ஒருதுறை ஆணுறை வழங்குகிறது.இன்னொரு துறை கைது செய்கிறது.இரு துறையும் அவரவர் கடமையை தான் செய்கின்றன. நீங்கள் சொன்னது தப்பு இல்லை.நானும் அதை தான் சொல்கிறேன்.போனால் ஆணுறை மாட்டிகொண்டு போ என்று சொல்வதால் போவதை ஆதரிக்கிறேன் என்று பொருளல்ல.செய்வது சட்டப்படி தவறு ஆனால் செய்தால் இப்படியாவது செய்து தொலை,மற்றபடி நீயாச்சு,போலிஸாச்சு என்று தான் சொல்கிறேன்."
வெறுமனே ஒரு பெண் தன் உடல் சுகத்துக்காகப் போவது சட்டப்படி கூட தவறு இல்லை. பணம் பெறுவதுதான் குற்றமாக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டமும் பாரபட்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ரிட் பெடிஷன் யாராவது போட்டால் முழுக்கவே விலக்கப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஆனால் தப்பு செய்யும் பெரும்பாலான பெண்கள் மாட்டிகொள்கிறார்கள்.தொழில்நுட்பம் தெரிந்தவன் சாமர்த்தியம் அவர்களுக்கு வருவதில்லை."
பெரும்பாலான என்று எப்படி நிச்சயமாகக் கூறமுடியும்? எவ்வளவு கேஸ்கள் நம் கண்ணுக்கு வராமல் போயினவோ யாருக்குத் தெரியும்?

மற்றப்படி நானும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கருத்தைத்தான் வைத்திருக்கிறோம் என்று எனக்கு படுகிறது. சிறு மாறுதல்கள் இருக்கலாம், ஆனால் அவை தவிர்க்க முடியாதவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுமிதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://madhumithaa.blogspot.com/2006/03/blog-post_24.html

நான் ஆண் பெண் கற்பு நிலை பற்றி 3 பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றைப் பார்க்கவும். முக்கியமாகப் பின்னூட்டங்களை மறக்காதீர்கள்.

பதிவு 3: http://dondu.blogspot.com/2005/10/3.html
பதிவு 2: http://dondu.blogspot.com/2005/10/2_14.html
பதிவு 1: http://dondu.blogspot.com/2005/10/1_11.html

இந்த மூன்று பதிவுக்கும் சேர்த்து 100க்கும் மேல் பின்னூட்டங்கள் வந்தன. அவற்றில் பெரும்பான்மையானவை ஆண்கள் இட்டதே. சிலர் பெண்களின் பெயரில் இட்டிருந்தாலும் அவற்றில் ஓரிருவரைத் தவிர எல்லோரும் பெண்கள் பெயரில் பின்னூட்டம் இட்ட ஆண்களே என்றுதான் எனக்குப் படுகிறது. அப்பின்னூட்டங்களில் ஒன்று கூட நீங்கள் இடவில்லை என்பதையும் பார்க்கிறேன். பிரச்சினை நாசுக்கானதுதான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்புநிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தருமி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://dharumi.weblogs.us/2006/05/01/222

i prefer she does -what is that word for that - barbitoed or something-you got what i mean
It is called Bobbitted, after the fellow Bobbit, whose wife deided, he shall no longer be a fellow.

கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது'-மன்னிக்கணும்; 'ப்' வரக்கூடாது')
ஒ வரக்கூடாது என்பதும் சரிதான், ஒ = ஒற்று மிகுதல்.

"திருமாங்கல்யம் அணிந்தால் நேரே மோட்சம்தானாம்."
யாருக்கு? கணவருக்கா?

ஆனால் நம் சக பிளாக்கர்களிலும் இந்த இரட்டை நிலைதானே தலை விரித்தாடுகிறது? ஆண் பெண் கற்பு நிலைகளை பற்றி நான் போட்ட 3 பதிவுகளையும் அவற்றுக்கு வந்த பின்னூட்டங்களையும் பாருங்களேன்.

http://dondu.blogspot.com/2005/10/1_11.html
http://dondu.blogspot.com/2005/10/2_14.html
http://dondu.blogspot.com/2005/10/3.html

உங்கள் பதிவு பிளாக்கரில் இல்லாததாலும், ஆகவே எலிக்குட்டி மற்றும் போட்டோ சோதனையெல்லாம் இங்கே பலிக்காததாலும், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்புநிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பிரபு ராஜதுரை அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html
"எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்கு தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர். இதில் ஒரு வேடிக்கை. திரைப்படங்களில் வில்லன்களை கைது செய்வது வரைதான் காண்பிக்க முடியும். அவர்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது பெரிய தலைவலி! விபச்சாரம் நடந்ததற்கு சாட்சிக்கு என்ன செய்வது. காவலர்களே கஸ்டமர்களை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். அப்படிப் போன கஸ்டமர் மீது ஒரு சென்னை நீதிபதி என்ன பொறாமையாலோ ஏகக் கடுப்பாகி, 'நீயும்தான் தவறு செய்திருக்கிறாய். போ! சாட்சிக்கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டுக்கு' என்று விட்டார். பின்னர் மனிதர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வெளியே வரவேண்டியதாகிவிட்டது (1972 MadLW (Cri) 211)."
இப்படிப்பட்ட சட்டமே தவறு என்றுதானே கூறுகிறேன். ஆகவே ஆணுக்கு சட்டப்படி தண்டனையில்லை என்று கூறுவது எவ்வாறு சரியான பதிலாகும்?

சட்டம் எப்படி வந்தது, ஏன் வந்தது என்றெல்லாம் அப்புறம் பாருங்கள். முதலில் நடைமுறையில் என்ன நடக்கிறது? பெண்ணுக்கு தண்டனை, வாடிக்கையாளர் ரங்கனாதனுக்கு செருப்படிக்கு பதில் ஸ்வீட் கொடுத்து உபசரிக்கிறார்கள். அதைத்தான் சோ அவர்கள் தன் நாடகத்தில் எழுதியிருக்கிறார், நானும் கேள்விகள் கேட்டேன்.

அது சரி, போலீஸ் செட்டப் செய்யும் சாட்சிகள் போலி என்று தெரிய வந்தால் அவர்களுக்கு பெர்ஜுரிக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை உண்டா இல்லையாமா? ஏற்பாடு செய்த குறிப்பிட்ட போலிஸாருக்கும் அதே தண்டனைதானே தர வேண்டும்? நடக்கிறதா?

"அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை."
அப்படியா நடைமுறையில் இருக்கிறது? அப்படிப்பட்டப் பெண்களைக் கூடத்தான் பிடிக்கிறார்கள். என்ன சார் கூறுகிறீர்கள்?

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்பு நிலை - 3 என்ற பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கேவிஆர் அவர்களே, அதே கேள்வியை நானும் பிரபுராஜ் அவர்களைக் கேட்கிறேன்.

அவருடைய பதிவில் (நான் கொடுத்துள்ள சுட்டியில்) போய் இதைத்தான் நானும் கேட்டேன்.

அவர் சுழற்றி சுழற்றி சட்டப்படி ஆண் வாடிக்கையாளரை பிடிக்க முடியாது என்று கூறுகிறார். அவர் அட்வகேட், சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆனால் நான் கூறுவது என்னவென்றால் அப்படிப்பட்ட சட்டமே அடிப்படையில் தவறு என்றுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கவிதா அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மாட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post.html
கவிதா அவர்களே, ஒரு பெண்ணைப் பார்க்கும்போது ஓர் ஆணின் பார்வை எங்கே போகும் என்பது தெரிந்ததுதானே. என்ன, சிலர் நாசூக்காக அதை செய்வார்கள், பலர் விழுங்கி விடுவது போல பார்ப்பார்கள். உங்கள் பதிவின்படி அது முடியாது என்றால் அப்படிப்பட்டப் பெண்ணை யார் விரும்புவார்கள் என நினைக்கிறீர்கள்? ஓர் ஆணுக்கு ஆண்மையில்லையென்றால் மட்டும் ஒரு பெண் அவனை ஏற்றுக் கொண்டு விடுவாரா?

இதில் ஆணென்றும் பென்ணென்றும் பார்க்க இயலாது.

எல்லோரும் ரொம்ப டென்ஷன் ஆயிட்டீங்க போலிருக்கு. ஒரு சிறு டைவர்ஷன் ரிலேக்ஸ் செய்ய.

சுஜாதா அவர்களால் எழுதப் பெற்று சமீபத்தில் 1991-ல் குங்குமத்தில் ஒரு தொடர்கதை வந்தது. கவித்துவமானத் தலைப்பு: "திசை கண்டேன், வான் கண்டேன்". அதில் நோவா கிரகத்திலிருந்து ஒருவன் (பெயர் பாரி என்று ஞாபகம்) பூமிக்கு ஏதோ வேலையாக வருகிறான். அவன் வந்த வாகனமும் அவனும் எப்போது வேண்டுமானாலும் மார்ஃபிங் மூலம் உருமாற முடியும். வாகனமும் அவனுடன் எப்போதும் பேசும். சற்று வசந்தின் குணம் அதற்கு.

அதில் ஒரு சந்தர்பத்தில் வாகனத்துக்கு ஒரு மனிதப் பெண் மேல் காதல் வந்து விடுகிறது. அப்பெண்ணுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தில் அது பெண்ணின் உருவெடுத்து மணமேடையில் அமர்ந்து தாலியும் வாங்கிக் கொள்கிறது. முதலிரவில் மாப்பிள்ளை அதன் மார்பகங்களை ரொம்பப் புகழ்ந்து பேசுகையில் "இது பிடிச்சிருக்கா, வெச்சுக்கோ" என்று அவற்றை திருகி எடுத்து கையில் கொடுத்து விடுகிறது. வீல் என்று கத்திக் கொண்டு மாப்பிள்ளை மயக்கமாகிறான்.

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

இதில் புதிதாய் பின்னூட்டம் இட்டதால் இது தமிழ்மணத்தில் தெரிந்து நான் இங்கு வந்தேன்.

விபச்சாரத்தைப் பற்றி ஒரு சிலி (Chile) யிலிருந்துவந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அங்கிறுக்கும் சட்டம், விபச்சாரிகளை தண்டிப்பதில்லையாம், வாடிக்கையாளர்களைத்தான் தண்டிக்கிறதாம்.

இதனால் விபச்சாரத்தில் ஈடுபடுபவர் எண்ணிக்கை குறைகிறதாம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிறார்கள்.

ஷங்கர்.

dondu(#11168674346665545885) said...

"அங்கிருக்கும் சட்டம், விபச்சாரிகளை தண்டிப்பதில்லையாம், வாடிக்கையாளர்களைத்தான் தண்டிக்கிறதாம்."

தேவலையே நல்ல சட்டமாக இருக்கிறதே. அது மட்டும் இங்கே வந்தால் இங்கிருக்கும் ஆணாதிக்க வெறியர்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Radha N said...

தற்காலத்தில், விலைமாதுவுடன் சேர்த்து பிடிபடும், வாடிக்கையாளர்களையும் காவல்துறையினர் கைது செய்வதாக நாளிதழ்களில் செய்தி கண்டிருக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

வாடிக்கையாளரையும் கைது செய்யலாம், ஆனால் சட்டப்படி தண்டனை வாங்கித் தர முடியுமா எனத் தெரியவில்லை. அவமானத்துக்கு பயந்து வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தட்சணைக்காகவும் இக்கைது பயன் படலாம் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கவிதா அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post.html


"நன்றி ராகவன் சார், இப்படி பார்ப்பது க்கூட 80% கல்யாணம் ஆனவர்களும், 40 -50 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுமே... திருமணம் ஆகாத இளைஞர்கள் இப்படி பார்ப்பது குறைவே...."

சரிதான், நீங்களாக அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டால் என்ன செய்வது? இதில் சதவிகிதத்தில் வேறு பேச்சு! திருமணம் ஆகாத இளைஞனாக நான் இருந்தவன் என்ற சொந்த அனுபவத்தை வைத்துக் கூறுகிறான். ஒரு ஆணின் வயதுக்கும் அவனது இது சம்பந்தமான பார்வைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பாய்ஸ் படம் பார்க்கவில்லையா? எவ்வளவு பி.ஹெச்.டி. எல்லாம் செய்கிறார்கள் இளைஞர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?

மாணவிகளுக்கு மார்க் போடும் மாணவர்கள் எதை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

Stefan Zweig என்ற ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய புத்தகம் Beware of pity என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதை படிக்கவும். திருமணம் என்பதை அனுதாபத்துக்கு செய்வது என்பதி விபரீதங்களை நீங்கள் பார்க்கலாம்.

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நேசகுமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nesakumar.blogspot.com/2006/05/blog-post_09.html

"தனக்கும் தன் கணவனுக்குமிடையே பிரச்சனை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் அவனைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தை மறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால் பெரும் தீங்குகள் ஏற்படும். அவற்றில் ஒன்று கணவன் தவறான வழிக்குச் செல்வது. சிலவேளை விவகாரம் அவளுக்கு எதிராகத் திரும்பி, கணவன் அவளுக்கு மேல் இன்னொருத்தியை மணப்பதைப் பற்றி வினயமாகச் சிந்திக்கத் தலைப்படலாம்."

அதே போல மனைவி உடலுறவுக்கு ஆசைபட்டு கணவனை அழைக்கும்போது அவனும் அவளை தண்டிப்பதாக நினைத்து மறுக்கலாம் அல்லவா. அப்போது பெண் வேறொரு ஆணின் துணையை பற்றி சிந்திக்க நேரிடும் அல்லவா? அப்போது ஏன் ஆண்களுக்கு மட்டும் அது போன்ற ஆணைகள் இல்லை? இது ஒன்றும் கற்பனையை மீறியது அல்ல. அரபு ஷேக்குகள் நூற்றுக் கணக்கில் மனைவியரை வைத்து பராமரிக்கின்றனர். ஜெனானாவில் உள்ள எல்லா பெண்களுக்கும் படுக்கை சுகம் ஒரு ஆணால் தர முடியுமா? முகம்மது இம்மாதிரியான இடத்தில் என்ன ஆணை கொடுக்கிறார் என்பதைக் கூறுங்களேன்.

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தாலும் கூட மனைவி அவன் அழைப்புக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமா? குரான் கூறுவதாக இங்கு வந்துள்ள வாக்கியங்களில் கையாலாகாத ஆணை பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. என்ன சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு.

இப்பின்னூட்டத்தின் நகலை எனது ஆண் பெண் கற்பு நிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரசிகவ் ஞானியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nilavunanban.blogspot.com/2006/06/nri.html
கொதித்துப் போயிருக்கிறீர்கள். ஆம், துரோகம் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதுதான். ஆனால் நீங்கள் கூறியதன் மறுபக்கம் அறிவீர்களா? கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் உள்ளூரில் வேறு துணை தேடிக் கொள்வதும் நடக்கிறது. ஏனெனில் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொது.

அதை தீர்த்துக் கொள்வதில் ஆணுக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை ஆனால் பெண்ணுக்கு அவை மிகவும் அதிகம் என்பது பற்றித்தான் நான் நான்கு பதிவுகள் போட்டேன். அது தமிழ்மணத்தில் தேனீர் கோப்பையில் புயலாக (storm in அ teacup) உருவெடுத்தது இப்பதிவிற்கு சம்பந்தப்படாதது. ஆகவே இங்கு அது வேண்டாம்.

இதற்கு என்ன செய்யலாம்? பையனை வெளிநாட்டுக்கனுப்பி அவன் அனுப்பும் பணத்தை தன் மற்ற குழந்தைகள், உறவுக்காரர்கள் எல்லோருக்கும் நல் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தலில் செலவிடும் பெற்றோர் யோசிக்க வேண்டும். ஒன்று அவன் தன் மனைவியையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது திருமணம் நாடு திரும்பியதும் செய்து கொள்ள வேண்டும். நடக்கும் காரியமா எனத் தெரியவில்லை.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவருக்கு என்ன நிர்ப்பந்தங்கள் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதில் மற்றவர்கள், கேட்டால் மட்டும் ஆலோசனை தர வேண்டும்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை எனது "ஆண், பெண் கற்பு நிலை - 3"ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Darren said...

உடல்சேவை செய்பவர்கள் மட்டும் இல்லை என்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு இன்னும் சீர்குலையும் இதுதான் உண்மை.இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள பலருக்கும் மனம் வராது.

சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் மருத்துவ சோதனைகள் மூலம் இதை நெறிப்படுத்தலாம் அதை விடுத்து பழங்கதை பேசி திரிந்தால் BIL GATES யிடம் AIDS தடுப்பு நிதிக்கு பிச்சைதான் எடுக்கவேண்டும்.

இன்றைய எதார்த்தம் இதுதான்.

dondu(#11168674346665545885) said...

அபு முஹை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://abumuhai.blogspot.com/2006/07/blog-post.html
"உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்."
உண்மையாகக் கூறவேண்டுமென்றால் ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும். அவ்வாறு மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால் வானவர்கள் என்ன செய்வார்கள் என்ற குரான் பதிவு ஏதும் கைவசம் உண்டா?

"ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது."
அதே போல கணவன் மறுத்தால் மனைவியும் வேறு எங்கும் செல்லக்கூடும் என்பதையும் அன்றாடச் செய்திகளில் பார்க்கிறோமே?

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வகையிலும் அது என்னுடைய அப்பதிவுக்கும் ரெலெவண்ட் ஆனதாலும் அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்பு நிலை - 3ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கயல்விழி said...

இங்கே பால்யவிவாகம் பற்றி ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். அது நின்று போனதற்கு வேறு சில முக்கியக்காரணங்களும் உண்டு.

1. திருமணமானதும் அந்த சிறுமியின் படிப்புக்கு உத்திரவாதம் இல்லை. ஆண் மட்டும் படிக்க முடியும், பிறகு அந்த பெண்ணின் படிப்பு?

2. சிறுவயதிலேயே குழந்தை பெறுவதால் பெண்களுக்கு பிரசவத்தில் சிக்கல் அதிகமாகிறது. வயதுக்கு வந்ததுமே ஒரு பெண், குழந்தை பிறப்புக்கு உடலாலும், மனதாலும் தயாராவதில்லை. மருத்துவர்களும் குழந்தைப்பிறப்புக்கு ஏற்ற வயதாக 18-25 குறிப்பிடுகிறார்கள். மேலும் குழந்தை பிறக்கும் போது அதன் பராமரிப்பு முழுக்க முழுக்க பெண்களை சேர்கிறது. பிறகு எப்படி படிப்பது?

dondu(#11168674346665545885) said...

//மருத்துவர்களும் குழந்தைப்பிறப்புக்கு ஏற்ற வயதாக 18-25 குறிப்பிடுகிறார்கள்.//

ஆனால் இப்போது 30 வயதிலும் திருமணமாகாத பெண்கள் உள்ளனரே. பிறகு திருமணம் ஆகி பிரசவம் ஆனால் சிக்கல்கள் வேறு ரூபங்களில் வருகின்றனவே.

அப்படியே இருப்பினும் வயதுக்கு வருவதற்கும் திருமணம் ஆவதற்கும் உள்ள இடைகாலத்தில் பெண்ணின் அந்த தேவை என்ன ஆகிறது? ஓர் ஆண் சகஜமாக செய்வதை ஏற்கும் சமூகம் பெண்ணுக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடு வைப்பதைத்தான் இப்பதிவு விவாதிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கயல்விழி said...

//ஆனால் இப்போது 30 வயதிலும் திருமணமாகாத பெண்கள் உள்ளனரே. பிறகு திருமணம் ஆகி பிரசவம் ஆனால் சிக்கல்கள் வேறு ரூபங்களில் வருகின்றனவே.//

35 வயது வரைக்கும் சிக்கல்கள் வருவதில்லை. I am concerned more with educating the girl than anything else.

//அப்படியே இருப்பினும் வயதுக்கு வருவதற்கும் திருமணம் ஆவதற்கும் உள்ள இடைகாலத்தில் பெண்ணின் அந்த தேவை என்ன ஆகிறது? //

அப்படியே இருப்பதை விட வேறென்ன செய்ய முடியும்? இங்கே சிலர் ஆணுக்கும் கற்பு உண்டு என்று வாதிட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் விவாதத்துக்கு தான் சரியாக இருக்கும்.நிஜத்தில் நடப்பது அதுவல்ல, பெண்களிடமிருந்து மட்டும் தான் கற்பு ஸ்டாண்டர்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது