11/19/2005

துணைவியின் பிரிவு

என் நண்பர் ரவி பாலசுப்ரமணியன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை தமிழாக்கிக் இங்கு தருகிறேன். நன்றாக இருந்தால் ஆங்கில மூலத்திற்கு பெருமை. நன்றாக இலையென்றால் என் மொழிபெயர்ப்புத்தான் அதற்கு பொறுப்பு. ஆங்கில மூலத்தை என்னுடைய ஆங்கிலப் பதிவில் போட்டுள்ளேன்.

1. அது ஒரு வானமூட்டமான சனிக்கிழமை மாலைப் பொழுது. ஒரு பறவைக் கூட்டம் பிரதான சாலை நடுவில் உணவைத் தேடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது விளையாட்டு வேறு. திடீரென ஒரு பெரிய லாரி சாலையை வேகமாகக் கடந்தது. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. ஒரு பறவை அடிப்பட்டு இறந்து விட்டது.



2. பறவைக்கும் துயரம் உண்டு. இறந்த பறவையின் அருகில் அதன் கூட்டாளி ஆண் பறவை பறந்து வந்து அமர்கிறது. தன் துணைவி இறந்து விட்டாள் என்பதை அது ஏற்க மறுக்கிறது.



3. சற்று நேரத்தில் அப்பக்கமாக இன்னொரு லாரி விரைந்து வர, காற்றில் இறந்த பறவையின் உடல் அசைய, ஆண் பறவை லாரி சென்ற பிறகு மறுபடியும் அதன் அருகில் வந்தமர்கிறது. துணைவி உயிருடன் இருப்பதாக அது எண்ணுகிறது போலும்.



4. துணைவியின் பக்கத்திலிருந்து கொண்டு கத்துகிறது ... "எழுந்திரு, என்ன ஆச்சு!?"



5. ஆனால் துணைவியால் கேட்க முடியாது. இப்போது ஆண் பறவை தன் துணைவியை தூக்க முயல்கிறது.



6. ஆனால் அதனால் முடியவில்லை. இன்னொரு கார் அப்பக்கம் வர, ஆண் பறவை சற்றே நகர்கிறது. கார் போனவுடன் மறுபடி வருகிறது, தன் துணைவியிடம்.



7. மற்றப் பறவைகள் ஆண் பறவையிடம் இது நடக்காத காரியம் என்று கூறினாலும் அது கேட்பதாக இல்லை. தண் துணைவியை எழுப்பி அவளை மறுபடி பறக்கச் செய்ய அது எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது.



8. தன் முழு சக்தியையும் ஆண் பறவை பயன்படுத்தியது, ஆனாலும்...

என்னால் அதற்கு மேல் படம் எடுக்க மனமில்லை. இந்த கலாட்டாவில் உயிருடன் இருக்கும் பறவையும் அடிப்பட்டுச் சாகப் போகிறதே என்ற கவலை வேறு. ஆகவே இறந்த பறவையைக் கையில் தூக்கி தெருவோரம் மென்மையாக வைத்தேன். ஆண் பறவை அருகே உள்ள மரக்கிளையில் அமர்ந்து தன் துணைவியை இழந்த துக்கத்தை தன் சோக கீதம் மூலம் வெளிப்படுத்தியது. தன் துணைவியின் அண்மையை விட்டுச் செல்ல அதற்கு மனமில்லை.

மனிதர்களும் அந்த அளவுக்கு உணர்கிறார்களா? தெரியவில்லையே.

ரவி அவர்களின் மின்னஞ்சலை படித்ததும் எனக்கு ராமாயணத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. இது பற்றி நான் ராஜாஜி அவர்களை பற்றிய பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதினேன்.

"அப்போது ராஜாஜி அவர்கள் "சக்கிரவர்த்தித் திருமகன்" என்றத் தலைப்பில் குழந்தைகளுக்காக ராமாயணக் கதை ஆரம்பித்தார். முதல் அத்தியாயம் "சந்தத்தைக் கண்டார்" என்றத் தலைப்பில். வால்மீகி அவர்கள் ராமகாதையை எழுதத் தூண்டிய நிகழ்ச்சியை அது விவரித்திருந்தது. இப்போது அதைத் திரும்பப் படித்தாலும் மெய் சிலிர்க்கும் எனக்கு. துணையிழந்த க்ரௌஞ்ச பட்சியின் சோகத்தால் பாதிக்கப்பட்டு வால்மீகி முனிவர் வேடனை சபிக்க, அச்சாபத்தின் வார்த்தைகள் ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து விட, வியாகூலத்தில் ஆழ்கிறார் மஹரிஷி. தேவ ரிஷி நாரதர் அவர் முன் தோன்றி அவர் செய்யவேண்டிய காரியத்தைப் பற்றிக் கூற நிகழ்ச்சிகள் விறுவிறுவென்று நகர்கின்றன."

எனக்கு தன் மின்னஞ்சலைப் பதிவாகப் போட அனுமதி அளித்த ரவி அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

27 comments:

ENNAR said...

உள்ளத்தை தொட்டுவிட்டீர்கள் சார் அருமையா பதிப்பு.
கல்காடை என்று ஒரு பறவையுண்டு அதன் ஜோடி இறந்துவிட்டால் கல்லை விழுங்கிவிட்டு பறந்து சென்று மேலிருந்து இறக்கையை மூடிக்கொண்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளுமாம் ; மற்றோரு பறவை உண்ணாமல் சத்தம் மிட்டுக்கொண்டே செத்துப்போகும். வண்டிமாடுகளில் கூட ஜோடி மாடு இறந்துவிட்டால் இளைத்துப் போய்விடும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி என்னார் அவர்களே. இதன் ஆங்கில பதிப்பையும் பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ENNAR said...

இல்லை பார்க்கிறேன்

நல்லடியார் said...

எனக்கென்னமோ நீங்கள் படங்களை மாற்றி வைத்து சொந்த கருத்தை (சரக்கை?) எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!!!

:-)

இறந்தது துணைவிப் பறவை என்று எப்படி படங்களின் மூலம் அறிந்து கொண்டீர்கள்?

;-))

"அவள் (இ)பறந்து போனோளோ" என்ற பாடலையும் பின்னனியில் இணைத்திருக்கலாம்.

(நியூ காலேஜ்லதான் தப்பிச்சுட்டீங்க. இப்பதிவிலாச்சும் ரேக்கிங் பண்ணிட வேண்டியதுதான்!)

;-)))

dondu(#11168674346665545885) said...

வருக நல்லடியார் அவர்களே,

என்னுடைய ஆங்கிலப் பதிவில் போட்டது ஒரிஜினல். எனக்கு வந்த மின்னஞ்சலிலிருந்து அதைப் போட்டேன். பிறகு தமிழிலும் போட்டேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சாதாரணமாக ஃபார்வேர்ட் செய்யப்படும் மின்னஞ்சல்களை அப்படியே ஆர்கைவ்ஸில் போட்டு விடுவேன். இதை அவ்வாறு போட முடியவில்லை. அதிலும் முக்கியமாக ராமயண நிகழ்ச்சி வேறு ஞாபகத்துக்கு வந்தது.

என்னது என்னை ரேகிங் செய்வதா? கலிகாலம்தான், நான் அல்லவோ உங்களை ரேகிங் செய்ய வேண்டும்?

பை தி வே, சென்னை வந்தால் கண்டிப்பாக தொலை பேசவும், சந்திக்க முயற்சி செய்யலாம். புதுக் கல்லூரியைப் பற்றி அதிகம் கதைக்க ஆசை. என் சென்னை தொலைபேசி எண்கள் 22312948 மற்றும் 9884012948.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

பிரிவின் துக்கத்தை வெளிப்படுத்த மிருகங்களின் சமிக்ஞ்சைகள் ஒரு ஆச்சிரியமே!

dondu(#11168674346665545885) said...

உண்மைதான் வெளிகண்ட நாதர் அவர்களே.

நான் இதே விஷயத்தை எங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் இணையதளத்தில் பதித்துள்ளேன். பார்க்க: http://www.proz.com/topic/39221

அதற்கு பின்னூட்டமாக லூசிண்டா என்பவர் எழுதியது இதோ.

"When my father died about three years ago everyone came to our house after the funeral. There was a picture of my dad on the credenza. Our Rothweiler dog (who was inseparable from my dad) went to sit in front of the picture, made a sound like a howl and cried - actual tears like a human ran down his face). If my mother, myself and a few others had not seen it, we might not have believed it.

Exactly two weeks after my dad's dead, he jumped the fence, went from our quiet street to a thoroughfare and threw himself in front of a passing truck. Some workers saw it and told us what happened. They took his dog tag, asked around to find out whom he belonged to. They brought him home to us."

அன்புடன்,
டோண்டு ராகவன்

U.P.Tharsan said...

படங்களை மாற்றிபோட்டதோ போடவில்லையோ, ஆனால் அதன்மூலம் சொன்ன கருத்து அருமை. வாழ்த்துக்கள். :-))

dondu(#11168674346665545885) said...

நன்றி தர்சன் அவர்களே. படங்களை மாற்றிப் போட்டது பற்றி நல்லடியார் அவர்கள் குறிப்பிட்டாலும் கூடவே ஸ்மையிலும் போட்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்.

நாங்கள் இருவரும் புதுக்கல்லூரியில் படித்தவர்கள் (கிட்டத்தட்ட 25 வருட இடைவெளியில், ஆனாலும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தானே). ஆகவே நட்பு முறையில் காலை வாரல் நடக்கும். கண்டுக்காதீங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

மிக அருமையான பதிவு ராகவன் சார்.

வாழ்த்துக்கள்.

பறவைகளின் பாஷையை மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜோசஃப் அவர்களே. என்ன வேடிக்கை பாருங்கள், உங்கள் பதிவுக்கு நான் பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்கும் போது இப்பதிவுக்கு வந்த உங்கள் பின்னூட்டம் கூகள் டாக் வழியாக திரை மேலே எழுந்ததைக் கண்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

U.P.Tharsan said...

//ஆகவே நட்பு முறையில் காலை வாரல் நடக்கும். கண்டுக்காதீங்க.//

ஓஓஓ.... இதுவும் ஒருவித அன்போ? :-))

dondu(#11168674346665545885) said...

ஓஓஓ.... இதுவும் ஒருவித அன்போ? :-))
நிச்சயமாக தர்சன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

பறவைகளின் துக்கம் ஒருபக்கமுன்னா இந்த ராட்வீலர் நாய் பாருங்க.
எப்படித் தற்கொலை பண்ணிக்கிச்சு.

பிரிவுன்றது எல்லா உயிர்களுக்கும் துக்கம்தான் போல.

என்றும் அன்புடன்,
துளசி.

dondu(#11168674346665545885) said...

அதிலும் ரோட்வைலர் இன நாய் ரொம்ப கோபமுடையது என்று படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

டோண்டு அவர்களுக்கு,
உங்களின் blog ரொம்ப சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு பிரயோசனமும் இருப்பதாய் தோண்றவில்லை. உங்கள் blog தலைப்பில்
“டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன்” என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால், உங்கள் blog ல் இது சம்பந்தமாக ஒன்றையும் காணோம். குருவி, நங்கநல்லூரில் மழை, என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். படிக்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நான் இதனால், உருப்படியாகத் தெரிந்து கொண்டது என்ன என்றுதான் தெரியவில்லை.
உதாரணத்திற்கு, நீங்கள் French / german பாஷையைப் பற்றி எழுதலாமே? ஏன், சிறிய பாடங்கள் கூட குடுக்கலாம்.

உருப்படியாக எழுதுங்கள் என்று விழைகிறேன். இயலாவிட்டால், முகப்பு வார்த்தைகளையாவது மாற்றி விடுங்கள். பிறரை தேவையற்று திசை திருப்புவதை தவிர்க்கலாம்.
நன்றி. ஜெயராமன்.

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு நன்றி ஜயராமன் அவர்களே. அதற்கான பதிலை நான் தனிப்பதிவாக போட்டிருக்கிறேன். பார்க்கவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள 26 சுட்டிகளையும் பொறுமையாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பிறகு உங்கள் பதிலை எழுதவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

நல்லா மனதைத் தொடும் விதத்தில் இருந்தது டோண்டு ஐயா.. இங்கே மும்பை இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில் ஏகப்பட்ட புறாக்கள் உண்டு.. ஒருமுறை நான் சென்றிருந்த போது ஒரு பறவை அடிபட்டு விட, மற்ற புறாக்கள் கூடி உதவ முற்பட்டதும், பின்னர் ஓர் இளைஞன் எடுத்துச் சென்று முதலுதவி அளித்ததும் நினைவுக்கு வருகிறது.. ஆமாம் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்களா, எலிபெண்டா குகைக்கு சென்றிருக்கிறீர்களா? இதைப்பற்றி ஏதாவது எழுதலாமே ??

மதுமிதா said...

டோண்டு அவர்களே
கருத்து உண்மை.

ராஜா மஹாகவி பர்த்ருஹரி தன்னுடைய வாழ்வில் இந்தப் பிரிவினை
சந்தித்த கதை உண்டு.
நேரம் கிடைக்கையில் இங்கே இடுகிறேன்.

எங்கள் ஊரில் நிஜமாக நடந்த ஒன்று.
மூன்றாண்டுகளுக்கு முன்பு,
ஒரு தம்பதியினர்,
மனைவி இறந்த பத்தாம் நாள் கணவர் இறந்து விட்டார்.
ஒரு தினசரி நாளிதழின் இதைப்போன்ற ஒரு குறிப்பினை
பாதுகாத்து வைத்திருந்தேன்,
கிடைத்ததும் அதனையும் இங்கிடுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

"நல்லா மனதைத் தொடும் விதத்தில் இருந்தது டோண்டு ஐயா.. இங்கே மும்பை இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில் ஏகப்பட்ட புறாக்கள் உண்டு.. ஒருமுறை நான் சென்றிருந்த போது ஒரு பறவை அடிபட்டு விட, மற்ற புறாக்கள் கூடி உதவ முற்பட்டதும், பின்னர் ஓர் இளைஞன் எடுத்துச் சென்று முதலுதவி அளித்ததும் நினைவுக்கு வருகிறது.. ஆமாம் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்களா, எலிபெண்டா குகைக்கு சென்றிருக்கிறீர்களா? இதைப்பற்றி ஏதாவது எழுதலாமே ??"

என்ன சார் இப்படிக் கேட்டு விட்டீர்கள்? பம்பாயில் நான் 1971 முதல் 1974 வரை மூன்றரை வருடங்கள் அங்கு இருந்ததைப் பற்றி 3 பதிவுகள் போட்டுள்ளேனே. பார்க்க:
1)
2)
3)

சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கான பின்னூட்டங்களையும் அவசியம் பார்க்கவும்.

நான் பம்பாயில் வசித்த போது பார்க்காத இடங்களில் எலிபெண்டா குகைகளும் அடக்கம். பம்பாயை விட்ட 17 வருடங்களுக்கு பிறகு போன போது அவற்றைப் பார்த்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுமிதா அவர்களே,

இதே போல ஒரு முனிவர் தான் வளர்த்த மானைப் பிரிய மனமின்றி இறக்க, அடுத்தப் பிறவியில் மானாகப் பிறந்தார். மானாக இருந்தாலும் பூர்வஜன்ம நினைவுடனேயே இருந்தாராம். முனிவர் பெயரை மறந்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

டோண்டு, இந்த மூன்று பதிவுகளையுமே முன்னமே படித்து விட்டேன்.. இருப்பினும் மீண்டும் ஒரு முறை படித்தேன்.. நல்லா எழுதியிருக்கீங்க.. பம்பாய் நினைவுகள் இன்னும் வருமா ???

dondu(#11168674346665545885) said...

"பம்பாய் நினைவுகள் இன்னும் வருமா ???"

கண்டிப்பாக வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இதே போல ஒரு முனிவர் தான் வளர்த்த மானைப் பிரிய மனமின்றி இறக்க, அடுத்தப் பிறவியில் மானாகப் பிறந்தார். மானாக இருந்தாலும் பூர்வஜன்ம நினைவுடனேயே இருந்தாராம். முனிவர் பெயரை மறந்து விட்டேன்."

ஆஹா வந்திருச்சு ஞாபகம். முனிவர் பெயர் ஜடபரதர். தான் இறக்கும் தருவாயில் மானை பற்றியே நினைத்துக் கொண்டு இறந்தார் அவர். எல்லா ஜீவராசிகளையும் பார்த்துக் கொள்ளும் இறைவன் அந்த மானையும் பார்த்துக் கொள்வான் என்று நினைக்காது அஞ்ஞானத்தில் இருந்ததால் அவர் மானாகப் பிறந்தார். ஆனால் கடவுளின் அருளால் மானுக்கு பூர்வ ஜன்ம நினைவுகள் இருந்தன. மான் அவ்வப்போது வருந்துமாம், தன் அஞ்ஞானத்தை நினைத்து. மான் பிறவி முடிந்ததும் பிறவிப்பெருங்கடலை நீந்தி இறைவனடி சேர்ந்தார் அந்த முனிவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இராதாக்ரிஷ்ணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nradhak.blogspot.com/2006/02/blog-post_27.html
இப்பதிவைப் பார்த்ததும் நான் போட்ட இப்பதிவு ஞாபகத்துக்கு வருகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_19.html

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய மேலே சுட்டியிடப்பட்ட பதிவில் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

M.Rishan Shareef said...

மிகவும் வருத்தத்துக்குரிய ஆனால் யோசிக்க வைக்கிற பதிவு நண்பர் ராகவன்.

இயந்திரத்தனமான நகரவாழ்க்கையில் நம் முன்னால் ஒருவன் தடுக்கிவிழுந்தால் கூடத் தூக்கிவிடத் தயங்கும் காலகட்டத்தில் ஒரு பறவை நமக்கு மனிதாபிமானத்தைக் கற்றுத்தருகிறது.

பதிவுக்கு நன்றி நண்பரே !

Avargal Unmaigal said...

டோண்டு ராகவன் சார் அவர்களுக்கு நீங்க அனுப்பிய லிங்கை பார்த்தேன் . உங்கள் பதிவில் இருந்த போட்டோவும் எனது பதிவில் இருந்த போட்டோவும் ஒரே போட்டோகிராபரால் எடுக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். நாம் இருவரும் ஒரே விஷயத்தை நமது அனுபவத்திற்கு ஏற்றவாறு பதிவு இட்டு இருக்கிறோம். நீங்கள் உங்கள் பதிவிற்க்கான விஷயத்தை உங்கள் நண்பரின் இமெயில் மூலம் கிடைக்க பெற்றதாக அறிந்தேன். அதே விஷயத்தை நான் கிழ்கண்ட ஆங்கில வலைத்தளத்தில் இருந்து பெற்று எனது வழியில் நான் வழங்கியுள்ளேன். அந்த வலைதளத்திற்கான முகவரி இதோ http://www.theearthconnection.org/blog/2009/06/a-sad-story/


எனது வலைத்தளதிற்கு வருகை தந்தற்கு மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்.
அன்புடன்,
மதுரைத்தமிழன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது