11/13/2005

பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றி

இந்தத் தலைப்பில் பதிவு போட எனக்கு தகுதி இருக்கிறதா என்பதை பற்றி மற்றவர்கள்தான் கூற வேண்டும். என்னால் ஆனது, எனக்குத் தோன்றுவதை எழுதிவிட்டு விலகுவதே. மற்றதைப் பற்றி மற்றவர்கள் (இதில் மாற்று கருத்தினரும் அடக்கம்) வேறு முறையில் கூறலாம். இது அவர்களது உரிமை.

நான் பதிவுகள் போட ஆரம்பித்து சில நாட்கள் ரொம்பப் பின்னூட்டம் இல்லாமலேயே கழிந்தன. ஆனால் இந்தப் பதிவுக்கு முதலாக இரட்டை எண்களில் பின்னூட்டங்கள் வந்தன. தமிழர்களுக்கு அறிவு பூர்வமானக் கேள்விகள் பிடிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இம்மாதிரிப் பதிவுகள் எப்போது நான் போட்டாலும் சீறிக்கொண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவற்றின் சுட்டிகள் 1, 2, 3, 4 முதலியன.

அரசியல் சம்பந்தமாகப் பதிவுகள் போட ஆரம்பித்ததும் நிலைமை சூடு பிடிக்க ஆரம்பித்தது. சோ சம்பந்தமாக நான் போட்ட இப்பதிவு 22 பின்னூட்டங்களைப் பெற்று தந்தது. காசி சார் அவர்கள் சில மாதங்கள் பிறகு என்னிடம் நேரடியாகப் பேசும்போது இப்பதிவைப் பற்றிக் குறிப்பிட்டு, என் கருத்துக்களிலிருந்து மிகவும் மாறுபடுவதாகக் கூறினார். எனக்கு அது ஒரு eye opener-ஆக இருந்தது. அதாவது கருத்து வேறுபாட்டையும் எவ்வளவு அழகான முறையில் கூற முடியும் என்பதை அவரது மென்மையான வார்த்தைகள் நிரூபித்தன.

பின்னூட்டங்கள் நிஜமாகவே சூடு பிடிக்க ஆரம்பித்தது பெரியார் அவர்கள் திருமணத்தைப் பற்றிய இப்பதிவால்தான். ஆனாலும் ஒன்று கூற வேண்டும். எதிர்த்துப் பின்னூட்டம் இட்ட அனைவரும் மிகக் கண்ணியமாகவே எழுதினர். நல்ல கருத்துப் பரிமாறல்கள் நடந்தன. பெரியார் பற்றி மற்றப் பதிவுகள் பின்வருமாறு: ஒன்று (35 பின்னூட்டங்கள்) மற்றும் இரண்டு (21 பின்னூட்டங்கள்).

தலித்துகள் எதிர்க்கொள்ளும் கொடுமைகளில் ஒன்று இரட்டைத் தம்ளர் முறை. அதை அவர்கள் எப்படி எதிர்க்கொள்ளலாம் என்பதற்கு நான் ஒரு பதிவு போட்டேன். அதற்கு 17 பின்னூட்டங்கள். ஆனால் தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாயக் காத்திருப்பில் போட்டதை பற்றி எழுதிய பதிவுக்கு 11 பின்னூட்டங்கள் மட்டுமே.

இப்போது ரெக்கார்ட் ப்ரேக்கிங் அளவுக்கு பின்னூட்டங்களை பற்றிப் பார்க்கும் முன்னால் என்னுடைய இப்பதிவை பற்றிக் கூறுவேன். இது என்னை வலைப்பதிவாளர்களுக்கு நன்றாக அடையாளம் காட்டிற்று. இது ஒரு செய் அல்லது செத்துமடி தோரணையில் போட்டப் பதிவு. என் வெளிப்படையான எண்ணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது இப்பதிவு. இதற்கு 33 பின்னூட்டங்கள்.

இப்பதிவை நான் போடும்போது பின்னூட்டங்கள் 308 வரும் என்று நினைக்கவேயில்லை. எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது இப்பதிவு. ஆனாலும் போலி டோண்டு என்ற இழிபிறவி வரக் காரணமாகி விட்டது இப்பதிவு என்பதில் எனக்கு சிறிது வருத்தமே. தர்ம் கெட்டப் பின்னூட்டங்கள் வரவில்லை என நான் சந்தோஷப்பட்டது தவறு என்று அவன் நிரூபித்தான்.

போலி டோண்டுவின் கைங்கர்யத்தால் நான் எழுதியப் பலபதிவுகள் அதிகப் பின்னூட்டங்கள் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானது இப்பதிவு. இது வரை அதற்கு 488 பின்னூட்டங்கள். இன்னும் வரும் ஏனெனில் நான் எப்போதெல்லாம் மற்ற பதிவுகளில் பின்னூட்டம் இடுகிறேனோ அதன் ஒரு நகல் இப்பதிவுக்கு வந்து விடும். கன்னிமாரா நூலகத்தில் புத்தகம் சேர்வது இம்முறையில்தான். ஆனால் இப்பதிவை போடும்போது மனக்கஷ்டத்துடன் இருந்தேன். அப்போதுதான் இணைய நண்பர்கள் எவ்வளவு அற்புத மனிதர்கள் என்பது எனக்குத் தெரிந்தது. அடேங்கப்பா எத்தனை ஆதரவு. முக்கியமாக என்னுடன் தீவிர கருத்து வேறுபாட்டுடன் இருந்தவர்கள் கொடுத்த ஆதரவு என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. மனம் பிறழ்ந்த போலி டோண்டுவை பற்றி நான் இட்ட இன்னொரு பதிவை இங்கு சுட்ட விரும்பாததற்கு காரணம் அவன் அதில் இட்ட தரம் மிக மிக தரங்கெட்டப் பின்னூட்டங்கள்தான் என்று கூறவும் வேண்டுமோ?

என் மனத்துக்கு பிடித்த பதிவு என் உள்ளங்கவர்கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பற்றி நான் இட்டதேயாகும். மனதுக்கு நிறைவை தந்தப் பதிவு அது.

இஸ்ரேலை பற்றி 5 பதிவுகள் இட்டேன், மாமனிதர் ராஜாஜியை பற்றியும் எழுதியுள்ளேன். (போலி டோண்டு கவனிக்க: நேதாஜியை பற்றி அல்ல!). என் ஆர்கைவ்ஸில் பார்த்துக் கொள்ள முடியும். சர்ச்சைக்குரிய சில பதிவுகளில் ஆண், பெண் கற்பு நிலையைப் பற்றி நான் போட்ட 3 பதிவுகள் அடங்கும். அவற்றின் சுட்டிகளையும் நான் இங்கு தர விரும்பவில்லை.

நான் மிக்க உபயோகமாக இருக்கும் என நினைத்து வாடிக்கையாளர்களை அணுகும் முறைகளை பற்றி போட்ட 10 பதிவுகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு பின்னூட்டங்களை பெறுவதில் வெற்றி பெறவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

ENNAR said...

சார் நான் பொருமையாக நீண்ட நேரம் படித்துப் பார்த்தேன் அதிக பின்னூட்டங்கள் முக்கியமல்ல நல்ல,நியாயமான, ஒழுக்கமான , நேர்மையான விமர்சனங்கள் தான் தேவை. தங்கள் பின்னோக்கும் செயலும் பாராட்டத்தக்கது.
நன்றி சார்

dondu(#11168674346665545885) said...

நன்றி என்னார் அவர்களே. பின்னூட்டங்கள் மக்களின் நாடியைப் பிடித்து பார்க்க உதவுகின்றன. அந்த வகையில் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். இன்னும் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பகுத்தறிவாளன் said...

அதிக பின்னூட்டம் பெற உங்கள் பதிவுகளிலிருந்து நான் கற்ற இரண்டை நீங்கள் இங்கே குறிப்பிட விட்டுவிட்டீர்களே!

1. ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் காத்திருந்து உடன் பதில் என்ற பெயரில்(ஆகா நன்றாக பதிலளிக்கிறார் என்று தான் நினைப்பார்கள்) மறு பின்னூட்டம் இடுவது!!!???!!

2. பின்னூட்டம் யாரும் இடவில்லையெனிலோ அல்லது தமிழ் மணத்தில் "சமீபத்தில் மறுமொழியப்பட்ட 25 ஆக்கங்கள்" லிஸ்டில் நம் பதிவு வரவில்லையெனிலோ உடன் "test" என்று பின்னூட்டம் இடுவது!!!???!!!!

என்ன இழவோ ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை. எப்படியோ போங்கள்.

dondu(#11168674346665545885) said...

"அதிக பின்னூட்டம் பெற உங்கள் பதிவுகளிலிருந்து நான் கற்ற இரண்டை நீங்கள் இங்கே குறிப்பிட விட்டுவிட்டீர்களே!"

இது என்ன சார் போங்கு. நீங்கள் கற்றுக் கொண்ட இரண்டைப் பற்றி எனக்கு எப்படி தெரியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

அட! பகுத்தறிவாளன் சொன்னதைச் செஞ்சுபார்த்துரலாமா? நாலைஞ்சுநாட்களா அந்த 'மறுமொழி அளிக்கப்பட்ட.......' பகுதியில்
என் பேரையே காணோம்:-)))))

ஆனா ஒரு சிலரோடது பத்துபதினைஞ்சுதடவை வந்திருக்கு. அதுவும் 'டெஸ்ட்' தானா?

நன்றி டோண்டு. இப்படியும் சில புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததற்கு:-)

குழலி / Kuzhali said...

அய்யா என்னார் அவர்களை வழிமொழிகின்றேன்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

துளசி அவர்களே, நான் டெஸ்ட் என்று மூன்று தடவை என்னுடைய 488-பின்னூட்டப் பதிவில் போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html மே 29 மற்றும் அக்டோபர் 24.
இத்ற்கு முக்கியக் காரணம் அவற்றுக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் போட்ட சம்பந்தப்பட்ட பதிவு தமிழ்மண தளப்பிரச்சினையால் இற்றைப்படுத்தப்படவில்லை. ஆகவே டெஸ்ட் பதிவு போட்டேன். அது எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டது.

இந்த 488-பின்னோட்டப் பதிவின் விசேஷமும் கூறியிருக்கிறேனே. இது ஒரு என்றும் பசுமையான பதிவு. ஒவ்வொரு முறையும் அது க்ளிக் செய்யப்படும்போது போலி டோண்டுவின் லீலை அம்பலம் ஆகிறது. அதில்தான் அவனுக்கு வயிற்றெரிச்சல். எத்தனை - வோட் போடுகிறான் என்பதையும் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி குழலி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாட்டாமை said...

டோண்டு அவர்களே,

இந்த பதிவில் போலி டோண்டு பற்றி தாங்கள் கூறியது

" ஆனாலும் போலி டோண்டு என்ற இழிபிறவி வரக் காரணமாகி விட்டது இப்பதிவு என்பதில் எனக்கு சிறிது வருத்தமே. தர்ம் கெட்டப் பின்னூட்டங்கள் வரவில்லை என நான் சந்தோஷப்பட்டது தவறு என்று அவன் நிரூபித்தான்.

மனம் பிறழ்ந்த போலி டோண்டுவை பற்றி நான் இட்ட இன்னொரு பதிவை இங்கு சுட்ட விரும்பாததற்கு காரணம் அவன் அதில் இட்ட தரம் மிக மிக தரங்கெட்டப் பின்னூட்டங்கள்தான் என்று கூறவும் வேண்டுமோ?"

ஆனால் சில தினங்களுக்கு முன் "நாளை உலகம் அழிந்தால்" என்ற பதிவில் போலி டோண்டு பற்றி தாங்கள் கூறியது

"-போலி டோண்டு யார் என்பது எனக்குத் தெரியும். அவர் எழுதும் தமிழ் நடை பிடிக்கும். என்னை குறிவைத்து அவர் எழுதிய சில நையாண்டிகளுக்கு நானே சிரித்துள்ளேன்.


4.போலிடோண்டு உங்களை விட சிறப்பாக எழுதுவதாக பலரும் சொல்கிறார்களே.உண்மையா?
அவருக்கு எழுதுவது நன்றாக வருகிறது. தொழில் நுட்ப அறிவுடையவர்.-"

ஏன் உங்கள் நிலையில் இந்த மாற்றம்?போலி டோண்டு பற்றி தங்கள் உண்மையான கருத்து என்ன?

dondu(#11168674346665545885) said...

மிக அருமையான கேள்விகள் நாட்டாமை அவர்களே.

வாழ்க்கை என்பது y=mx+C என்பது போல நேரடியாக இருக்காது. y²=4ax அல்லது y = A coshx/c என்பது போன்ற சமன்பாட்டில்தான் வரும்.

நீங்கள் பின் லேடனையும் போலி டோண்டுவையும் கம்பேர் செய்து கேட்டால் போலி டோண்டு தேவலாம் என்றுதான் கூற முடியும். எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான். துச்சாதனன் இழிபிறவியாயிருந்தாலும் பெரிய வீரன்தான் என்பதை வியாசரே பாரதத்தில் பல முறை வியந்து கூறுவார்.

அதே போல போலி டோண்டு இழிபிறவியாயிருந்தாலும் நன்றாக எழுதுவான் என்பதை மறுக்க முடியாது. ஐ.பி. எண்ணை காட்டிக் கொள்ளாமல் பதிவு போடுவது, ஹேக்கிங் செய்வது என்ற தொழில் நுட்பங்களிலும் தேர்ந்தவன்.

இவ்வளவு தெரிந்து என்ன பயன்? அதை துர் உபயோகம் செய்பவன் இழி பிறவிதான். நான் இரண்டு இடங்களில் கூறியதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

திறமசாலி யாராயிருந்தாலும் பாராட்டனும்னுங்கற உங்க எண்ணம் நல்லெண்ணம் தான்! எதிப்புருந்தான்யா ஒரு சுவராசியமே! டூப்ளிகேட் வந்தா அது ஒரிஜனலோட வீச்சு தானே!

dondu(#11168674346665545885) said...

"எதிப்புருந்தான்யா ஒரு சுவராசியமே! டூப்ளிகேட் வந்தா அது ஒரிஜனலோட வீச்சு தானே!"

ஆயிரத்தில் ஒரு வார்த்தை. 100% சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

நம்மள்ல நிறைய பேர் பதிவுகள படிச்சிட்டு போயிடறாங்க. சில பேர்தான் வேல மெனக்கெட்டு பின்னூட்டம் போடறத வழக்கமா வச்சிக்கிட்டிருக்காங்க.

சிலர் அவங்களோட நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்கள் எழுதினால் மட்டுமே பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்கிறாங்க..

இதெல்லாம் ப்ளாக்ல சேர்ந்து போன மூணு மாசத்துல நான் கத்துக்கிட்டது..

பின்னூட்டம் வர வரத்தான் பதிவு போடுறவங்களோட எழுதணும்கற ஆர்வமும் கூடும்.. பதிவுகளோட தரமும் கூடும்கறது என்னோட தாழ்வான எண்ணம். சரியா இருக்கணும்னு அவசியமில்ல.

சிலர் அதிக பின்னூட்டங்களை பெறவேண்டும் என்பதற்காக தரக்குறைவான அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகள போடறது நாளடைவில கூடிக்கிட்டு வருதோன்னு தோணுது..

ரெண்டு நாளைக்கி முன்னால வெளியான ஆசிப் மீரானின் படப்பதிவு ஒரு உதாரணம்.

ஆகவே நண்பர்களே வருங்காலத்தில் பதிவுகளைப் படிப்பதோடு நிற்காமல் உங்கள் எண்ணங்களை பின்னூட்டமாக கண்டிப்பாய் இடுங்கள்.

D The Dreamer said...

டோன்டு அவர்களே
//அவற்றின் சுட்டிகளையும் நான் இங்கு தர விரும்பவில்லை//

மற்ற சுட்டிகளெல்லாம் தந்து விட்டு கற்பு பற்றிய பதிவுக்கு சுட்டி தராதது ஏன்?

dondu(#11168674346665545885) said...

"மற்ற சுட்டிகளெல்லாம் தந்து விட்டு கற்பு பற்றிய பதிவுக்கு சுட்டி தராதது ஏன்?"

நுட்பமாக கவனித்து கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.கற்பை பற்றி இப்போதுதான் சில நாட்களுக்கு முன்னால் 3 பதிவுகள் போட்டேன். அவற்றின் சுட்டிகள் என் முகப்பு பக்கத்திலேயே கிடைக்கும். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் இப்பதிவில் பல சுட்டிகளை போட்டதில் சற்று களைப்பு ஏற்பட்டது. இதற்காக 3 திரைகளை திறக்க வேண்டியதாயிற்று. ஒன்று நான் பதிவு எழுதும் திரை. இன்னொன்று என் எல்லா பதிவுகளையும் காட்டும் பட்டியல். மூன்றாவது எந்தப் பதிவுக்கான சுட்டியை நான் தர நினைத்தேனோ அதன் திரை. நகல்+ஒட்டு என ஏகப்பட்ட வேலை. ஆகவேதான் தவிர்க்கலாம் என்று நினைத்த இடங்களில் அவற்றைத் தவிர்த்தேன். வேறொன்றுமில்லை. ராஜாஜி அவர்களை பற்றியும் இட்ட பதிவுகள் நேவிகேஷன் செய்தால் வெளிப்படையாக கிடைக்கும். மற்றப் பதிவுகள் பல மாதங்களுக்கு முன்னால் போட்டதால் அவற்றை வாசகர்கள் சுலபமாக பார்க்க அவற்றின் சுட்டிகளை தந்தேன். ஏனெனில் அவற்றின் தலைப்பு வெளிப்படையாக இல்லை.

நான் கூறிய விளக்கத்தை தெளிவாக கூறியுள்ளேனா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"சிலர் அதிக பின்னூட்டங்களை பெறவேண்டும் என்பதற்காக தரக்குறைவான அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகள போடறது நாளடைவில கூடிக்கிட்டு வருதோன்னு தோணுது.."

இது கவலை தரும் வளர்ச்சி. வாடிக்கையாளர்களை அணுகும் முறைக்கு நான் இட்டப் பதிவுகள் அதிகம் பார்க்கப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

//சிலர் அவங்களோட நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்கள் எழுதினால் மட்டுமே பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்கிறாங்க..
//
ஜோசப் சார் சரியா சொன்னீங்க .அதுவும் டோண்டு சாருக்கு இது ரொம்ப பொருந்தும்

dondu(#11168674346665545885) said...

"ஜோசப் சார் சரியா சொன்னீங்க .அதுவும் டோண்டு சாருக்கு இது ரொம்ப பொருந்தும்"

பின்னூட்டங்களைப் பெறுவதிலா அல்லது அளிப்பதிலா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

//பின்னூட்டங்களைப் பெறுவதிலா அல்லது அளிப்பதிலா?
//
அடேங்கப்பா!என்னிடமிருந்து இன்னொரு பின்னூட்டம் பெறுவதற்கு இப்படி ஒரு வழியா?

பெறுவதுல தாங்க நீங்க மன்னன்.நீங்க தான் எனக்கு நண்பன் இல்லியே.இருந்தாலும் இங்க நான் பின்னூட்டமிடுவதில்லையா? இந்த நட்சத்திர வாரம் முழுக்க நான் நான் எழுதிய பதிவுகளுக்கு உங்க பின்னூட்டமும் ஊக்கமும் தான் அதிகம்..யார் யார் எதப்பத்தி எழுதுறதுண்ணு ஒரு விவஸ்தை இல்லாமப் போச்சு.

(இதற்கும் எதாவது குதர்க்கக் கேள்வி கேட்டு என் பதிலை எதிர்பார்க்காதீர்கள்)

dondu(#11168674346665545885) said...

குமரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் அங்கு மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://koodal1.blogspot.com/2006/02/140.html

பின்னூட்டங்கள் அதிகம் எப்படி பெறுவது என்பது மிக உபயோகமானப் பதிவு. நானும் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் போடுகிறான் என்பதைப் பார்க்க மூன்று சோதனைகள் உண்டு. அவை:
1. ப்ளாக்கர் எண் எலிக்குட்டி சோதனையில் (mouseover) இடது பக்கம் திரையின் கீழே தெரிய வேண்டும். (என்னுடைய சரியான பதிவாளர் எண் 4800161).
2. அவ்வாறு தெரிந்தால் மட்டும் போதாது. பின்னூட்டம் இடும் பக்கத்தில் என் போட்டோவும் தெரிய வேண்டும்.
3. அத்துடன் முக்கியமாக இப்பின்னூட்டம் நான் குறிப்பிடும் என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நான் இங்கு குறிப்பிடும் பதிவு இதோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

டோண்டு,
/////
அதே போல போலி டோண்டு இழிபிறவியாயிருந்தாலும் நன்றாக எழுதுவான் என்பதை மறுக்க முடியாது.
/////
நீங்கள் சொல்வதுபோல் போலியை பொதுவாக வெறுத்தாலும் ஒருமுறை வாய்விட்டு சிரித்த நிகழ்வும் உண்டு.
நீங்கள் எலிக்குட்டியை வைத்து சோதனை செய்ய சொன்ன ஆரம்பத்தில் ஒருமுறை போலி ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு அதன் அடியில்
சொன்னது "பெயரின்மேல் எலிக்குட்டியை வைக்கவும் பிறகு அதைபிடித்து உப்பு, புளி, மிளகாய் போட்டு பொறித்து சாப்பிடவும்" . இது அன்றைய சூழலின் இறுக்கத்தை சட்டென்று உடைத்தது. படித்து விட்டு வாய்விட்டு சிரித்தேன். இந்த அளவு நகைச்சுவை உள்ளவர் உங்கள் கருத்து பிடிக்காவிட்டால் சொந்தபெயரில் எழுதாவிட்டாலும் ஏதேனும் ஒரு புனைப்பெயரிலாவது (அடுத்தவர் பெயரில் அல்ல) பதிவு துவங்கி அங்கு இவ்விதமான கிண்டல்களை(ஆபாசமானவற்றை அல்ல) போட்டிருக்கலாம் என்ற ஆதங்கமும் ஏற்பட்டது.
(போலி சொன்னது நினைவில்லை. அடிக்குறிப்பு மட்டுமே நினைவிலிருக்கிறது. ஸ்ஸ்சப்பா.. நாட்டாமைக்காக டிஸ்கி கொடுப்பதே பெரிய வேளையாக உள்ளது.)

dondu(#11168674346665545885) said...

இட்லி வடை அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூடம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/02/blog-post_113981532339051533.html

குறிப்பிட்ட அந்த தினத்தன்று நானே ஞானவெட்டியான் அவர்களுக்கு போன் செய்து பேசினேன். அவரும் சங்கடத்தில் இருந்தார். அவர் பல பதிவுகளை நோட்பேடில் போட்டுவைத்திருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாகத்தான் போட வேண்டுமென்று எண்ணியிருக்கிறார். அதற்கு ப்ளாக்கரில் வழி இருக்கிறது. போட வேண்டிய ஒரு பதிவைத் தவிர்த்து மீதியை ட்ராஃப்ட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தனி ஆணை பட்டன் உண்டு. அது தெரியாமல் அவர் எல்லாவற்றுக்கும் பப்ளிஷ் பட்டனை அமுக்கியதுதான் அவர் செய்த தவறு. அவரிடம் நான் வருங்காலத்தில் செய்ய வேண்டியதற்கான முறையைக் கூறியுள்ளேன்.

இப்போதும் கூறுகிறேன். நேரம் கிடைக்கும்போதேலாம் ஏதேனும் பதிவுக்கான எண்ணங்கள் வரும்போது, அவற்றை புதிய பதிவாக போடுவதற்கான பக்கத்தில் போய் எழுதி பிறகு ட்ராஃப்டாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். நான் அப்படித்தான் செய்கிறேன். பிறகு உசிதமான காலத்தில் வெளியிட வேண்டும். அதற்கு முன் பதிவு தேதி மற்றும் நேரம் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொள்வதும் நலம்.

நோட்பேடல்லாம் நான் உபயோகிப்பதில்லை. நேரடியாகப் பதிவுதான்.

என்னைப் பற்றி இப்பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்து என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க என்னுடைய "பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றிய" என்னுடைய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_113188854570236465.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இட்லி வடை அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூடம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/02/blog-post_113981532339051533.html

மறுபடியும் டோண்டு ராகவன்.

புது தமிழ்மணம் வரும் முன்னர் புதிதாக இடப்பட்டப் பதிவுகள் அப்போதையத் தமிழ்மணத்தால் திரட்டப்பட பல மணி நேரங்கள் ஆயின. அப்போது ஜோசஃப் அவர்கள் இதை பற்றிக் குறிப்பிட, நான் ஒரு பின்னூட்டத்தில் கிட்டத்தட்ட இவ்வாறு கூறினேன்.

"என்ன செய்வது சார், ரவுண்ட் ராபின் முறை போன்று ஏதோ ஒன்றிருக்கிறது, ஆகவே பதிவுகள் கியூவில்தான் திரட்டப்பட வேண்டும். பதிவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அதே நேரம் நம்மைப் போன்ற பெரிசுகள் அடிக்கும் கொட்டம் வேறு" என்று எழுதியிருந்ததை அவர் மிகவும் ரசித்து சிரித்தார்.

உங்களுடைய இப்பதிவில் உருவ விவரங்கள் மட்டும் சற்று மனத்தங்கலுக்கு காரணமாகி விட்டன என்று நினைக்கிறேன்.

அதே நேரம் என்னைப் பற்றிய ஒன் லைனரை மிகவும் ரசித்து சிரித்தேன்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க என்னுடைய "பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றிய" என்னுடைய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_113188854570236465.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது