ஆ ஊ என்றால் உடனே சோ அவர்களை இழுப்பதே இங்குத் தமிழ்ப் பதிவுகளில் எல்லோருக்கும் வேலையாகிப் போயிற்று. இப்போது சோ உத்தி என்று வேறு கூற ஆரம்பித்து விட்டார்கள். "அவருக்கு ஆதரவாக டோண்டு எழுதுவதற்குக் காரணமே சோ அவர்கள் பார்ர்ப்பனர் என்பதுதான் என்று அவரே கூறிவிட்டார்" என்று என்னைப் பற்றி எனக்கே புதுத் தகவலே தந்து அருள் பாலிக்கிறார் ஒருவர். "என்னுடைய எழுத்துக்களிலிருந்து அதை நிரூபிக்க முடியுமா" என்று சவால் விட்டால் என்னுடைய இஸ்ரேலிய ஆதரவு நிலையைக் காரணம் காட்டி மேலும் அசடு வழிகிறார். அதே சமயம் சோவை எதிர்ப்பது அவர் பார்ப்பனர் என்பதால் இல்லை என்று வேறு எழுதி அப்பா குதிருக்குள் இல்லையென்று போட்டு உடைத்து விடுகிறார்.
அருண் அவர்கள் இந்தப்
பதிவில் நான் பார்த்தப் பின்னூட்டங்களிலிருந்து புரிந்து கொண்டது என்னவென்றால் பலருக்கு நானும் அருணும் வைக்கும் வாதங்களைப் பாயிண்ட் பை பாயிண்டுகளாக பதில் சொல்ல முடியவில்லை. அப்பதிவிலிருந்தும் வேறு சில பதிவிலிருந்தும் நான் பார்த்ததை இங்கே பட்டியலிட முயற்சிக்கிறேன். ஒரு பதிவில் இடமில்லையென்றால் பகுதி 2 கூட இப்பதிவுக்கு வரலாம்.
முதலில் அருண் அவர்கள் எழுதியது.
"(1) இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது இதிகாசங்களிலும், வேதங்களிலும் அவருக்குப் பெருத்த மரியாதையும் பண்டிதமும் உண்டு. அவற்றைப் பற்றி அவர் எழுதியிருக்கும் மஹாபாரதம் பேசுகிறது, இப்போது எழுதி வரும் இந்து மகா சமுத்திரம் போன்றவைகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
(2) தமிழ் தமிழ் என்று மொழி மேல் உள்ள வெறியினால் மற்ற மொழிகளின் மீது தார் பூசுவதோ அல்லது அதற்காக பந்த், கடையடைப்பு போன்றவை நடத்துவதோ கடுமையாய் எதிர்ப்பவர். நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது ஆசையைப் பல சமயங்களில் வெளிப்படுத்துபவர்.
(3) தீவிரவாத இயக்கங்களை பயங்கரமாய் எதிர்ப்பவர். அவற்றைப் பற்றி தனது கருத்துக்களை மிக தைரியமாய் எழுதியும் வருபவர். தீவிரவாதிகளும், கொள்ளையர்களும் …அவர்களின் தர்க்கங்களில் எள்ளளவு நியாயமிருந்தாலும், பாதை மோசமானது என்று சொல்லி துளியும் இரக்கம் காட்டாமல் எதிர்த்து வருபவர்.
(4) பி.ஜே.பி தலைவர்கள், அந்தக் கட்சி மற்றும் த.மா.கா, மூப்பனார் போன்றோரிடம் மிகப் பரிவு கொண்டிருப்பவர். இருப்பினும் அவர்களை எங்கெங்கு திட்ட வேண்டுமோ அல்லது கிண்டல் செய்ய வேண்டுமோ அங்கே தயங்காமல் அவற்றையெல்லாம் செய்து, நார் நாராய் கிழிப்பவர்.
(5) வருமானத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்தவொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ அல்லது நிறுவனங்களுக்கோத் தன்னையோ தனது பத்திரிக்கையையோ இதுவரை அடகு வைக்காமல், தைரியமாக எல்லாரைப் பற்றியும், எவற்றைப் பற்றியும் எழுதுபவர்.
(6) எந்த ஒரு தலைவரின் தனிப் படத்தையும் அட்டையில் போட்டு கௌரவிக்காத துக்ளக் மூலம், நல்லகண்ணுவின் புகைப்படத்தைப் போட்டு, அவரின் நேர்மையான அரசியலைப் பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து எழுதியவர். நேர்மையான அரசியல் தலைவர்களை, அவர்களின் திறமைகளை பாராட்டத் தயங்காதவர். தனக்குக் கருத்து ரீதியாகப் பிடிக்காத தலைவர்களிடம் கூட, பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தால்…சமயம் கிடைக்கும் போது, அதை வெளியே சொல்லத் தயங்காதவர்.
(7) இட ஒதுக்கீட்டை வைத்துத் தற்போதைய அரசியல்வாதிகள் செய்யும் ஓட்டு வங்கி அரசியலை எல்லாம் புள்ளி விவரங்களோடும், ஒரு வக்கீலின் வாதாடும் திறமையோடும் விவாதிப்பவர்.
(8) அசத்தலான நகைச்சுவையுணர்வும்,புத்தி கூர்மையும் கொண்டவர். அவர் இயக்கிய அரசியல் நகைச்சுவைப் படமான முகம்மது பின் துக்ளக், மற்றும் திரைப்படங்களைக் கிண்டலடித்து எடுத்த தொலைக்காட்சித் தொடரான சரஸ்வதியின் செல்வன் போன்றவற்றை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்குமளவுக்கு தீர்க்கதரிசனப் பார்வையோடு எழுதி,இயக்கியவர்.
(9) இது எல்லாவற்றையும் விட, சமீபத்திய குஷ்பு பிரச்சினை என்று மட்டுமல்ல, பெண்ணியம் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் எப்போதும் நக்கலும், கிண்டலும் அடிக்கக் கூடியவர். குஷ்பு சொன்ன கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், ஆனால் அவரை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
(10) அப்துல்கலாம் எது செய்தாலும் ‘ஆஹா ஓஹோ’ என்று பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுத ஆரம்பிக்கவும், எப்படி அப்துல் கலாம் எது சொன்னாலும் வியாபாரமாக்கப்படுகிறது என்று அதையும் கிண்டலடித்துத் தள்ளியவர். தமிழில் நையாண்டி, கண்ணியமான அரசியல் நகைச்சுவை போன்றவற்றில் தனி இடம் பிடித்து வைத்திருப்பவர்.
அவரது பல கருத்துக்களில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் அரசியலுக்கென்றே நடந்து வரும் பத்திரிக்கையில் கண்ணியமாகவும், வியாபார நோக்கத்திற்காக சமரசங்கள் செய்யாமலும் நடந்து வரும் ஒரே தரமான பத்திரிக்கை ‘துக்ளக்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவும் சில இடங்களில் இடறியிருக்கலாம், அவரது கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடு இல்லாமல் போகலாம்…ஆனால், தமிழகப் பத்திரிக்கையுலகிலும் இன்ன பிற கலைத்துறைகளிலும் அவருக்கென்று இருக்கும் இடம் அலாதியானது, அசைக்க முடியாதது! எல்லோருக்கும் பிடித்தமான விதமாக எந்த ஒரு மனிதராலும் இருந்து விட முடியாது…சோ மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், அவரது எழுத்தை ரசிப்பது என்பதும், அவரது பாணி அரசியல் விமர்சனமே சகுனித்தனம்,amusing என்றெல்லாம் வலைப்பதிவுலகில் அவ்வப்போது விமர்சனம் வைக்கப்படும் போது, அவரை ரசிப்பவர்களும் காரணங்களோடு பதிவு செய்வது அவசியமாகிறது. எனக்கும் கூட, சோ விமர்சகர் என்ற நிலையைத் தாண்டி த.மா.கா-தி.மு.க-ரஜினி கூட்டணியில் பெரும் ஆர்வம் காட்டியதிலும், பெண்கள் குறித்த அவரது அபிப்ராயத்திலும் கருத்து வேறுபாடுகளுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பக்குவமும், அவற்றைக் கட்டுரையாய் எழுதினால் (நன்றாக இருந்தால்) பிரசுரிக்கும் தில்லும் சோவுக்கும், அவர் நடத்தும் துக்ளக்கிற்கும் உண்டு என்று நம்புகிறேன். துக்ளக் ஹேராமைப் பற்றி எழுதிய விமர்சனத்தை, நான் கிழித்து எழுதியதைப் பிரசுரித்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. அந்தக் கட்டுரையை ஆரம்பித்த விதமே "இது நாள் வரை அரசியலும் அரசியல் சார்ந்த இடத்திலுமே குப்பைக் கொட்டிக்கொண்டிருந்த துக்ளக், நீண்ட நாட்களுக்குப் பிறகு கலையும் கலை சார்ந்த இடத்தில் கொட்டியிருக்கிறது" என்று இருக்கும். அங்ஙனமே பிரசுரமும் ஆனது."
அருண் அவர்களே, நீங்கள் என்னதான் நம்பரெல்லாம் கொடுத்து எழுதினாலும் ஒரு பூட்டப்பட்ட மனநிலையில் உள்ளவர்களுக்கு அவை புரியாது, அவற்றைப் புரிந்து கொள்ளவும் அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்தான்.
இப்போது கார்த்திக் அவர்கள் எழுதிய
இப்பதிவுக்கு வருவோம். சோ அவர்கள் எம்.பி. யாக இருந்து ஆற்றியப் பணிகளை மறுக்க இயலாத நிலையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:
"//"எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக, சோவை "வாய்ச்சொல்லில் வீரரடி" என்று சொல்ல முடியா வண்ணம்" // என்று எழுதவேண்டும் என்றால், இது என்ன அயோக்கியத்தனமாக இருக்கவேண்டும்? சரி இவருக்காக பிற எல்லாகட்சிகளிலும் இருக்கிற/இருந்த எம்.பிக்கள் கட்டிய கக்கூஸ்களை, பள்ளிகளை, போட்ட ரோடுகளை,சமத்துவ புரங்களை, மதிய உணவுகளை, பழங்குடி முன்னேற்ற ஏற்பாடுகளை எங்காவது கஷ்டப்பட்டு தேடிபிடித்து பட்டியலிட்டால் அருண் என்ன எழுதிய வாக்கியத்தை திரும்பப்பெற்றுக்கொள்வாரா?"
அதற்கு நான் அங்கு கொடுத்த பதில்:
"அதைத்தான் செய்து பாருங்களேன். அதில் பெரும்பான்மையான கேஸ்களில் சம்பந்தப்பட்ட எம்.பி. அடித்தக் கமிஷன்களும் கூடவே வரும். சோ அவர்கள் ஏதாவது கமிஷன் அடித்தார் என்று உங்களால் நாக்கின் மேல் பல் போட்டுப் பேச முடியுமா?
அதைக் கூறினால் அவர் தன் கடமையைத்தானே செய்தார் எனக் கூறி விட வேண்டியது. மற்ற எம்.பி.க்கள் செய்ததைப் பற்றிப் பேசும்போது மட்டும் ஊரில் நடக்காததையா செய்து விட்டார்கள் என சப்பைக்கட்டு கூறிக் கொள்வது. இதே வேலையாகப் போயிற்று."
இப்போது முத்து அவர்கள் எழுதிய
இப்பதிவுக்கு வருவோம்.
அவர் எழுதுகிறார்:
"இது போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்."
அதற்கு என் பதில்:
என்ன உளறல் ஐயா? நான் அவ்வாறு கூறியதை நிரூபிக்க முடியுமா? அவரைப் பற்றி மூன்று பதிவுகள் போட்டுள்ளேன். பல பதிவுகளிலும் பின்னூட்டமும் இட்டுள்ளேன். நான் கூறாத ஒன்றை கூறியதாகக் கூறுவது உங்களுக்கு அழகில்லை.
"திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை."
என் பதில்:
அதாவது நீங்கள் சோவை எதிர்ப்பதால் உங்களை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று கூறக்கூடாது அப்படித்தானே? ஆனால் என்னைப் போன்றவர்கள் சோவை ஆதரிப்பது மட்டும் எங்கள் பார்ப்பன ஆதரவைக் குறிப்பிடும் என்று நீங்கள் கூறுவதை என்னவென்று கூறுவது? அதற்கு மற்றவர்கள் போடும் பின்னூட்ட ஜிஞ்சாக்கள் காதைத் துளைக்கின்றன.
"அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?"
அதற்கு நான் இட்ட பதில்:
"சொன்னாலும் சொல்லாவிட்டாலும் லஞ்சம் வாங்குவதை விஞ்ஞான பூர்வமாகச் செய்தவர்கள் திமுகவினரே. அந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது அவற்றைப் பற்றிப் பத்திரிகைகளில் நேரடியாகப் படித்தவன் நான்.
அதே சோ 1975-ஜூன் மாதத்தில் எழுதியதைப் பற்றி நான் என் பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளேன். "வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.
கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.
ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மானில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை."
பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
இந்த ஆண்மை எந்த வேறு எவ்வளவு பத்திரிகையாளருக்கு இருக்கிறது?
துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டுத் தனக்களிக்கப்பட்ட ஃப்ண்ட்ஸ்களை பலப் பொதுக்காரியங்களுக்காக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் செலவழித்து வருகிறார். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் எல்லா தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டுதான் தன் கட்டுரைகளை எழுதுகிறார்.
ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விற்பனையை பெருக்கிக் கொள்ள இலவச பற்பொடி தரும் இக்காலத்தில், கவர்ச்சி, திரை செய்திகள், கிசு கிசுக்கள் இல்லாது இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை போட்டு வருகிறார். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதியாவது நேர்மையுடன் நடந்து கொண்டாலே பத்திரிகை உலகம் உருப்பட்டுவிடும்."
முத்து அவர்கள் மேலும் எழுதினார்:
"dondu அண்ணா, உங்களுக்கு புரிவது கடினம்..படிக்கிற மத்த ஆளுங்க புரிஞ்சுக்குவாங்க...உங்க பதிவுகளோட திரண்ட கருத்து அதுதான்...போதுமா...
மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க.. (emphasize mine)
அதற்கு நான் இட்ட பின்னூட்டம்:
"எவ்வளவு நாளைக்கு? நான் கூறிய மத்ததுகளை மறுபடியும் இங்கே திருப்பிக் கூறுவேன்.
1. நெருக்கடி நிலை வந்தப் போது (சமீபத்தில் 1975-ல்) அவர் தைரியமாக கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசியது. மற்ற பத்திரிகையாளர்கள் மாநில திமுக அரசுக்கு தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்தப்போது மத்திய அரசை விமசரிக்க உரிமை இல்லாத நிலையில் மாநில அரசையும் விமசரிக்க மாட்டேன் என்று கூறியது.
2. கருணாநிதியின் அரசை சமீபத்தில் 1976-ல் கலைத்தப் போது தைரியமாக அவர் வீட்டுக்குச் சென்று தன் ஆதரவை அவருக்குத் தெரிவித்த ஆண்மையானச் செயல். வேறு எந்தப் பத்திரிகைக்காரரும் அக்காலத்தில் அதை செய்யத் துணியவில்லை. திமுகவினர் பலரே கருணாநிதியை தவிர்த்தனர். அந்த ஆண்மையைப் பற்றிக் கேட்டேன். அதுவும் நீங்கள் பதில் கூறவேண்டிய மற்றதுதான்.
3. மற்றப் பத்திரிகைகள் எல்லாம் கிசு கிசுவெல்லாம் எழுதி அதில் ஜீவிதம் நடத்தும்போது துக்ளக் மட்டுமே தன் தரத்தைக் காப்பாறிக் கொண்டுள்ளது. அது இன்றைக்கும் தொடர்கிறது. இதுவும் நீங்கள் பதில் கூற வேண்டிய "மத்ததைச்" சேர்ந்ததுதான். இதற்கும் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
4. கேள்வி கேட்கவே பணம் வாங்கும் எம்.பி.க்களுக்கிடையில் தனக்களிக்கப்பாட்ட நிதியை இவர் நல்லக் காரியங்களுக்கு செலவழித்து பைசா விடாமல் கணக்கு காட்டுவது. எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதையும் கூறுங்கள்.
5. சமீபத்தில் 1975 என்று நான் எழுதும்போதே உங்களுக்குப் புரிந்திருக்கும், எல்லாவற்றையும் நானே அக்காலக் கட்டத்திலேயே நேரில் படித்து அறிந்தவன் என்று.
6. என்னமோ பார்ப்பனர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு என்று கூறுகிறீர்களே. வரும் பொங்கலன்று சென்னையில் இருந்தால் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வாருங்கள், வந்து பாருங்கள். ஒவ்வொரு அரசியல் வியாதியும் லாரி ஏற்பாடு செய்து பிரியாணிப் பொட்டலங்கள் கொடுத்து தங்கள் கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கும் இக்காலத்தில் அது ஒன்றும் இல்லாமலேயே அவர் கூட்டத்துக்குத் திரளும் ஆட்களைப் பாருங்கள். அதில் எல்லா ஜாதியினரும், மதத்தவரும் இருப்பதைப் பார்க்கலாம். அது வரைக்கும் நான் போட்ட இப்பதிவையும் பார்க்கவும். பார்த்துவிட்டு அதையும் அந்த மத்ததில் சேர்த்து பதில் கூறவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/thuglak-35th-anniversary-meeting-on.html
"சமீபகாலமாக பிஜேபி பிரமுகர்கள் ரகசியமாகவோ, நேரடியாகவோ கேமராவை வைத்தால் உச்சகட்ட ஆர்வத்தில் எதையாவது செய்து எசகுபிசகில் சிக்கிவிடுகிறார்கள்"
இதில் என்ன கேலியோ தெரியவில்லை. தான் சேர்ந்த கட்சியானாலும் அவர் கிண்டல் செய்யாமல் விடுவதில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. ஆனால் தன் கட்சித் தலைவரோ, அவர் மகனோ விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று ஒப்புக்கு கூறிக் கொண்டே அவர்கள் செய்வது எல்லாவற்றையும் சப்பைகட்டும் கொ.ப.செ.க்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.
சோ தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வதையும் சிலர் விமரிசனம் செய்தனர். நான் கேட்கிறேன் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தால் ஒருவரால் இவ்வாறு செய்ய முடியும் என்று?
மொத்தமாகக் கூறுகிறேன், அவர் பத்திரிகையை நாகரிகமான முறையில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் செய்கிறார் என்பதை உங்களால் மறுக்க இயலுமா?
அதுதானே முக்கியம். மற்றப்படி அவர் கருத்துக்களை ஒப்புக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவுப்படித்தான் நடக்கும்."
முத்து அவர்கள் மேலும் எழுதியது:
"சோ வோட பிளஸ்ஸை பற்றி எழுதறததுக்கு நான் எதற்கு தனிப்பதிவு போடறேன்?. நான் சொன்னது அவரோட மைனஸ்.....
பிளஸ்ஸை பத்தி எனக்கு தெரியாது ..நான் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில தங்கமா இருந்து சமுதாயத்துக்கு நச்சு கலந்தா என்ன பண்ணறது?....
கொலைகாரன் கூட பக்திமான் வேடத்தில் ஏன் சாமியார் வேடத்தில் கூட வரும் காலம் இது.... நேர்மையில்லாத புத்திசாலித்தனம் ஆட்சி செய்யும் நேரம் இது......"
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால் நான் கொடுத்த சோ அவர்கள் பற்றிய ப்ளஸ் பாயிண்டுகளைப் பற்றி அவருக்கு நிஜமாகவே ஒன்றும் தெரியாது என்பதுதான். அது தேவையும் இல்லை என்று வேறு திருவாய் மலர்ந்தருளுகிறார். சந்தடி சாக்கில் சோ அவர்களை கொலைகாரன் ரேஞ்சுக்கு வேறு உயர்த்தியாகி விட்டது. ஒரு சீனியர் வக்கீல் தன் ஜூனியருக்கு கூறிய அட்வைஸ் ஞாபகத்துக்கு வருகிறது. "While arguing before the judge and when your point is weak, thump the table and shout like hell."
கார்த்திக் அவர்கள் எழுதிய
இப்பதிவுக்கு மீண்டும் வருவோம்
அப்பதிவில் நான் மேலும் எழுதினேன்.
"சோவை எதிர்த்து பேசியவர்கள் பலர் தாங்கள் முதலில் சோ ஆதரவாளராக இருந்து பிறகு எதிர்ப்பாளராக ஆனவர்கள் எனக் கூறிக்கொண்டனர். அதை சுயபுத்தி வளர்ந்ததற்கு உதாரணமாகக் கூறினர். இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து ஒருவர், என் நெருங்கிய உறவினர், அதே மாதிரி ஏன் ஆனார் என்பதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் இங்கு கூறுவேன்.
அவர் துக்ளக்குக்கு ஒரு கடிதம் எழுதினார். போர்னோக்ராபி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் அவர் நிலை எடுத்திருந்தார். பேசாமல் தன் நிலையைக் கூறிவிட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்யாது தன் தாத்தா கூறியதாக இவ்வாறு எழுதினார். “போர்னொக்ராஃபி என்றெல்லாம் ஏன் பார்க்கிறீர்கள், அது பாட்டுக்கு அது மற்றப்படி நாட்டின் productivity-யைப் பார்க்கலாமே, அமெரிக்காவில் எல்லாம் அப்படித்தான் செய்கிறார்கள், என்று என் தாத்தா கூறுவார்” என்று எழுதப் போக சோ அவரைக் கிழித்துவிட்டார். இதில் விஷயம் என்னவென்றால் அந்த நபர் பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்னமேயே அவரது அன்னை வழி மற்றும் தந்தை வழித் தாத்தாக்கள் இருவருமே இறந்து விட்டனர். சோ எழுதுகையில் அவ்வாறு ஒரு தாத்தா இருந்ததையே சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டார். இதைப் பற்றி சோ அவர்கள் துக்ளக்கில் எழுதும்போது so and so ஊரிலிருந்து so and so இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று ஆரம்பித்து அவர் எழுதியதைக் கிழித்தார். கடைசியில் "இது அவருடைய சொந்தக் கருத்தா அல்லது தாத்தாவின் கருத்தா என்பது யோசிக்கத் தகுந்தது" என்று வேறு எழுதி விட்டார். இதைப் படித்த உடனேயே என் உறவினருக்கு எஸ்.டி.டி. கால் போட்டு இது அவர்தானா என்று கேட்க அவர் ஆமாம் என்றார். அதற்குப் பிறகு சோ மேல் மிகக் கோபம் கொண்டார், அவரை இன்றளவும் எதிர்த்து வருகிறார். இங்கும் பலருக்கு இம்மாதிரி காரணங்கள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது."
சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன் இருப்பினும் எனக்கு இது சம்பந்தமாக பல தொலைபேசிகள் வந்து விட்ட நிலையில் இதை மேலோட்டமாகக் கூறிவிடுகிறேன். நான் மேலே குறிப்பிட்ட முத்து அவர்களின் பதிவின் இறுதியில் அவர்
இப்பதிவை லிங்காகக் கொடுத்துள்ளார். அது முக்கால்வாசி என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் பதிவு, என் ஜாதியை மட்டமான ஜாதி என்று வேறு கூறுகிறது. அதை எழுதியவர் தரம் பற்றி தமிழ்மணத்தில் எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றி இங்கு பேச்சில்லை. அதை தன் பதிவில் லிங்காக வைத்திருக்கும் முத்து அவர்கள் மேல்தான் எனக்கு வருத்தம். வெறுமனே ஒப்புக்கு "என்ன ராசா இப்படி எழுதிவிட்டீர்களே" என்று செல்லமாக திட்டிவிட்டு இணைப்பை தன் பதிவில் வைத்திருக்கும் இவரது பதிவுகளுக்கு வந்து இனி நான் பின்னூட்டம் இடுவதாக இல்லை. ஆகவே அவரது பதிவுகளில் என் பெயரில் போலி டோண்டு என்ற இழி பிறவி வழக்கம் போலப் பின்னூட்டம் இட்டால் அது நான் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். தேவையானால் மீண்டும் வருவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்