1971, செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை. என் பார்வைக் கோணத்தையே புரட்டிப் போட்ட அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. விடிகாலை 6 மணிக்கு பம்பாய் மாதுங்காவில் நான் தங்கியிருந்த சரஸ்வதி நிவாஸில் என் ரூம் மேட் குளத்து ஐயர் வழக்கம் போல "டோண்டு" எங்கள் வேலைக்காரனைக் கூப்பிட, நானும் வழக்கம்போல "என்ன" என்று கேட்டு எழ, எல்லாம் வழக்கம் போலவே நடந்தது. (வேலைக்காரனின் பெயரும் டோண்டுதான், அவன் ஒரு மஹாராஷ்ட்ரியன்).
எங்கள் ஃப்ளேட்டில் மொத்தம் பத்து தமிழர்கள் குடியிருந்தோம். இதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே இந்தப் பதிவில் போட்டுள்ளேன். ஆகவே இப்போது வேறு விஷயம் கூறுவேன்.
இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அந்த ஞாயிறு வரை என் நடத்தை எனக்கு அறுவை மன்னன் என்று பெயர் வாங்கித் தந்தது என்றால் மிகையாகாது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் காலங்களில் நான் கூறிய அறுவை ஜோக்குகள் மகாபிரசித்தம். அவற்றில் ஒன்றை நான் இந்தப் பதிவில் கூறியுள்ளேன். இம்மாதிரி நாளொரு வண்ணமும் பொழுதொரு அறுவையாக வாழ்ந்த நான் படிப்படியாக நண்பர்களால் தவிர்க்கப்பட்டேன். எனக்குத்தான் முதலில் அது புரியவில்லை. என்னைப் பார்த்த உடனேயே நண்பர்கள் ஓடுவது எனக்கு ஒரு விதமானப் பெருமை தருவதாகவே நம்பினேன்.
ஜனவரி 1971-ல் பம்பாய்க்கு வந்த நான் வழக்கமான அறுவை ஜோக்ஸ் சொல்ல இங்கும் என் மேல் ஒரு வித விரோத பாவமே உண்டானது. இப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தேன். இருப்பினும் தவறு என் பேரில் இருப்பதாக நினைக்கவேயில்லை. எப்படியிருக்கும்? நான் என்னவோ ரொம்ப பெர்ஃபெக்ட் ஆசாமி என்ற எண்ணத்தில்தானே நான் இருந்தேன். ஆகவே நான் மாறவில்லை.
மறுபடியும் இந்த குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைக்கே வருகிறேன். நிதானமாக எழுந்து பிறகு 11 மணி அளவில் கன்ஸர்ன்ஸுக்கு சாப்பிடச் சென்றேன். வழக்கம் போலத் தனியாகத்தான், ஏனெனில் என் சக அறைவாசிகள் என்னைத் தவிர்த்தனர்.
சாப்பாட்டுப் பந்தியில் ஒருவன் மிகப் பரிச்சயமாகத் தோன்றினான். ஆனால் அவனை நான் அதுவரை பார்த்ததேயில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. இதை பற்றி யோசித்துக் கொண்டே அவன் தன் நண்பர்களுடன் பேசுவதைக் கவனித்தேன். அவன் மட்டுமே அதிகம் பேசினான். மற்ற நண்பர்கள் அவன் பார்வையை தவிர்த்தனர். இவனோ அதைப் பற்றியெல்லா கவலையற்று அறுவை ஜோக்குகளாக அடித்து தன் ஜோக்குகளுக்கு தானே சிரித்துக் கொண்டிருந்தான்.
திடீரேன எனக்கு மின்னல் போல் ஓர் எண்ணம் வந்தது. "அடேடே இவன் என்னைப் போலவே நடந்து கொள்கிறானே" என்று தோன்றியது. அதுவும் அறுவை ஜோக்குகள் கூறும்போது அவன் செய்த முக சேஷ்டைகள் எனக்கு அறுவெறுப்பாக இருந்தன. அவன் கூட வந்த நண்பர்கள் சங்கடத்தில் நெளிந்ததைப் பார்த்ததும் என் நண்பர்கள் பலர் என் நினைவில் வந்தனர். அடடா இது வரை நாமும் இம்மாதிரித்தானே மற்றவரைப் படுத்தினோம் என்று தோன்றியது. அந்த வினாடியிலிருந்து என் வாழ்க்கை முறையே மாறியது.
சாப்பிட்டு முடிந்ததும் அறைக்குத் திரும்ப மனதில்லை. ஆகவே அரோராவில் காலைக் காட்சிக்கு சென்றேன். படம் புதிய பூமி. எம்.ஜி.ஆர். படம். மூளைக்கு வேலையில்லை. ஆகவே நான் பாட்டுக்கு என்னைப் பற்றியச் சிந்தனையில் ஆழ்ந்து போக முடிந்தது.
இது வரை நடந்ததை மாற்ற முடியாதுதான். இனிமேல் எவ்வாறு நடந்து கொள்வது என்பதைத்தானே பார்க்க வேண்டும். என்ன செய்வதென்று உடனே புலப்படாததால் அமைதி காக்க முடிவு செய்தேன். பேச்சைக் குறைத்தேன். கேட்டக் கேள்விக்கு நேரடியான பதில், இடக்கான கேள்விகளுக்கு மௌனமே பதில் என்று இருக்க ஆரம்பித்தேன். இன்னும் அதிகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன், அறையை விட்டால் கன்ஸர்ன்ஸ், அங்கிருந்து அலுவலகம், மாலை துரை லெண்டிங்க் லைப்ரரி, இரவு கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டப் பிறகு திரும்பவும் அறைக்கு செல்வது என்று ஒரு வழக்கம் செய்து கொண்டேன். ஏதாவது பேச நினைத்தால் அதை கூறத்தேவைதானா என்பதை என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டு பல முறை அதைக் கூறாமலேயே விட்டதில் பல தகராறுகள் தவிர்க்கப்பட்டன.
சரியாக ஒரு மாதம் கழித்துத்தான் என் அறை மற்றும் அலுவலக நண்பர்கள் எனக்குள் ஏற்பட்ட மாறுதல்களை உணர ஆரம்பித்தனர். என்ன ஆயிற்று என்று கேட்டவர்களுக்கு புன்னகை மட்டுமே பதிலாக அளித்தேன். மெதுவாக நண்பர்கள் என்னை ஒதுக்காமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் அவர்களைப் பேச விட்டு நான் காது கொடுத்து கேட்டேன். முடிந்தவரை என்னால் ஆன உதவிகள் செய்தேன். தேவையற்று என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவருடன் தர்க்கம் செய்து அவர்கள் முடிவை மாற்றும் என் வழக்கமான முயற்சியை அடியோடு கைவிட்டேன். ஒருவருடைய கருத்தை மற்றவர்கள் மாற்ற இயலாது, அதற்கு தேவையும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். என்னிடம் விரோத பாவம் கொண்டவர்களை அலட்சியம் செய்தேன். அது அவர்கள் எடுத்த முடிவு, நான் யார் அதை மாற்ற என்றுதான் எனக்குப் பட்டது. அதனால் ஏற்படும் கால விரயங்களும் இப்போது இல்லை. நான் பேசும்போது எதிராளி கவனிக்கவில்லை என்று தோன்றினால் பேச்சை அப்படியே நிறுத்தி விடுவேன்.
இன்று இப்பதிவை போடும்போது 34 வருடங்களுக்கு முந்தைய அந்த ஞாயிற்றுக் கிழமை இப்போதும் பசுமையாக என் மனக்கண்களின் முன்னே தோன்றுகிறது. ஏன் அந்த தினம் மட்டும் எனக்கு அவ்வாறு நடந்தது? அந்த முகம்தெரியா அறுவை மன்னனுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவன் அல்லவோ என்னை நானே உணரச் செய்தான்?
இன்று வரை அதைப் பற்றி நான் பேசியதோ எழுதியதோ இல்லை. அதை என் மனத்துக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தேன். இப்போது வெளியே எழுதியது மனத்துக்கு நிறைவை தருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
22 hours ago
26 comments:
டோண்டு சார், {முதல் முறையாய் :-) } உங்களின் இந்த பதிவு மிக நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி உஷா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்த பாதிப்புதான் எல்லோரையும் இப்பிடி வலைப்பதிவுல இம்சை பன்றீங்களா! (சும்மா தமாசு)
நன்றி சிங். செயகுமார் அவ்ர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களை மாதிரி எல்லோரும் சொல்ல ஆரம்பித்தால், ஒப்புதல் வாக்கு மூலங்களுக்காக சிறப்பு பதிவுகள் தொடங்க வேண்டியிருக்கும் ;)
நன்றி.
நன்றி வாசன் அவர்களே,
நான் கண்டு பிடித்தது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே டேல் கார்னகி, னார்மன் வின்ஸென்ட் பீல் ஆகியோர் அதை கூறிவிட்டனர். நானும் அதையெல்லாம் முன்பே படித்திருக்கிறேன். இருப்பினும் நான் அனுபவித்து அதன் உண்மையை உணர்ந்தது அந்த ஞாயிறன்றுதான். மற்றவர்கள் பார்வைக் கோணத்தில்ருந்து நாம் கூறுவதைப் பார்ப்பதே சிறப்பு என்பதை அந்த அறுவை மன்னன்தான் நிரூபித்தான். அவனை அப்புறம் என் வாழ்க்கையில் பார்க்கவேயில்லை. ஆனாலும் அவனை என்னால் மறக்க இயலவேயில்லை.
அதே போல அன்று நான் பார்த்த அந்த எம்.ஜி.ஆர். படமும் என் மனதில் நின்றுவிட்டது. அப்படத்தின் பாடல்கள் வரும்போதெல்லாம் எனக்கு அந்த ஞாயிற்றுக் கிழமைதான் நினைவுக்கு வருகிறது.
அதிருக்கட்டும். என் நண்பர் மாயவரத்தான் இப்பதிவுக்குப் பகடியாய் ஒரு பதிவு போட்டுள்ளார், மிக அருமையாக. அதைப் படித்து வாய்விட்டு சிரித்தேன். பார்க்க:http://mayavarathaan.blogspot.com/2005/12/235_04.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Don't do - மன்னிக்கவும் - உங்கள் பெயரை நீண்ட நாட்களாக இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அதென்ன - டோண்டு - என்ன ஒரு வித்தியாசமான பெயர்?
எம்ஜிஆர் படத்துக்கு மூளை தேவையில்லை என்று ரகசியமாக கடித்து விட்டீர்கள். போகட்டும். மற்ற தமிழ்ப் படங்களுக்கும் அது தேவையில்லை என்று எங்களுக்கும் தெரியும்.
பிறர் சொல்வதை காது கொடுத்து கேள் என்ற பழம்பெரும் பழமொழியை வைத்து ஒரு பதிவை ஒப்பேற்றிவிட்டாலும் - போகட்டும். நன்றாக இருக்கிற வரை அரைத்த மாவையே அரைத்தாலும் சரி.
"Don't do - மன்னிக்கவும் - உங்கள் பெயரை நீண்ட நாட்களாக இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன்."
இதில் ஆசரியமே இல்லை. பலரும் அதைத்தான் செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். டோண்டு என்பது என் அப்பா அம்மா எனக்கு வைத்த செல்லப் பெயர். என் தாத்தா பெயரை எனக்கு வைத்தார்கள். அதை என் பாட்டி கூபிட முடியாததால் எனக்கு டோண்டு என்ற பெயர். அதே போல என் பெரியப்பா பிள்ளை பெயரும் ராகவன். அவன் அம்பி என்று அழைக்கப்பட்டான். இதை பற்றி நான் இப்பதிவு போட்டுள்ளேன்.
செல்லப் பெயர் ரொம்ப உபயோகமானது. அதைப் பற்றி நான் போட்ட இன்னொரு பதிவில் அதையும் எழுதியுள்ளேன்.
"எம்ஜிஆர் படத்துக்கு மூளை தேவையில்லை என்று ரகசியமாக கடித்து விட்டீர்கள். போகட்டும். மற்ற தமிழ்ப் படங்களுக்கும் அது தேவையில்லை என்று எங்களுக்கும் தெரியும்."
இருந்தாலும் அந்த எம்.ஜி.ஆர். படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லாம் association of thoughts தானே.
"பிறர் சொல்வதை காது கொடுத்து கேள் என்ற பழம்பெரும் பழமொழியை வைத்து ஒரு பதிவை ஒப்பேற்றிவிட்டாலும் - போகட்டும். நன்றாக இருக்கிற வரை அரைத்த மாவையே அரைத்தாலும் சரி."
நன்றி. எதுவுமே நாமாக உணர்ந்தால்தான் சரியாகக் காரியம் செய்ய முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பேச்சில் தான் அறுவை மன்னராக இருக்கக்கூடாது. எழுத்தில் இருக்கலாம் என்கிறீர்களா? (ஹி.ஹி ச்சும்மா தமாசு)
"பேச்சில் தான் அறுவை மன்னராக இருக்கக்கூடாது. எழுத்தில் இருக்கலாம் என்கிறீர்களா?"
என்னுடைய காஷ்மீர் கதை எல்லோரையும் ரொம்பவேதான் பாதித்துவிட்டிருக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அடேடே இவன் என்னைப் போலவே நடந்து கொள்கிறானே"//
டோண்டு சார், பயந்துறாதீங்க. என்னையே சொல்லிக்கிட்டேன்.
நீங்க இல்ல சார். நாம எல்லாருமே ஒரு காலத்துல அப்படி இருந்தவங்கதான். கால போக்குலத்தான் 'எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்'னு விவேக் மாதிரி சொல்லிக்கறோம்.
சிலவங்க நல்லதுக்கு மாறிடராங்க.. சிலவங்க் இன்னமும் அறுவை மன்னர்களா மாறிடராங்க..
எல்லாம் காலத்தின் கொடுமை..
உண்மைதான் ஜோசஃப் அவர்களே. பல பழைய பட்ங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சில சமயம் எனக்கே ஆச்சரியமாக இருக்கும், அக்காலத்தில் இதை நான் எப்படியெல்லாம் விரும்பிப் பார்த்தேன் என்று. அவை காலத்தில் ஃப்ரீஸ் செய்யப்பட்டுள்ளன. நாம்தான் மாறிவிட்டோம்.
சுஜாதாவும் எழுதியிருக்கிறாரே, காலம் செல்லச் செல்ல பல நம் பல நிச்சயங்கள் உறுதியை இழக்கின்றன என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனுபவங்கள்தாம் நமக்கு நிறைய கற்றுத் தருகின்றன என்று நீங்களும் உணர்த்தியுள்ளீர்கள்! உணர்ந்தும் உள்ளீர்கள்!
நன்றி நாமக்கல் சிபி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mr.Dondu,
I am (one of ?)your silent reader
and I like the way you narrate things that happened or happenings. Though I differ some of your postings, generally it's interesting to read your postings (or diary, perhaps ?!).
I never write to any of my favourites, this is the first time, I write !
Well, let me come to the point. I am coming over to Chennai for vacation (from UK) this April. Is it possible to meet you and have a quick chat ? The reason why I ask is I am not a blogger and just a fan !
Regards,
Siva
siv1170@yahoo.com
நிச்சயமாக சந்திப்போம் சிவகுமார் அவர்களே. உங்கள் விவரங்களை எனக்கு தனி மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். எனக்கு பின்னூட்டங்கள் இடுவதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டு விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இவ்வளவு நாள் இந்த பதிவை படிக்காமல் இருந்தேனே...தன்னை உணர்ந்த ஒருவரின் நல்லதொரு பதிவு.
நிஜமாகவே செந்தழல் ரவி போட்டதுதானா? அதர் ஆப்ஷனை உபயோகித்து போடப்பட்டுள்ளது என் ஊகிக்கிறேன்.
ரவி போடவில்லையென்றால் தெரியப்படுத்தவும். ஆவன செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் தான் போட்டேன் டோண்டு அவர்களே.
டோண்டு சாரா இது , என்னால நம்ப முடியல
//டோண்டு சாரா இது , என்னால நம்ப முடியல//
எனது "ஆரவாரப் பேய்களெல்லாம் - டோண்டுவின் யோம்கிப்பூர்" பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஆகவே அதை இங்கே நகலெடுத்து ஒட்டுகிறேன். பதிவுக்கு பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_12.html
இப்போது சம்பந்தப்பட் பின்னூட்டம்:
dondu(#11168674346665545885) said...
//ஆமா இப்ப என்ன நடந்து விட்டது என்று மன்னிப்பு நன்றி எல்லாம் அமர்க்களப் படுகிறது. உங்கள் மனசாட்சிப்படி என்ன நினைக்கிறீர்களோ அதைச் சொல்லுகிறீர்கள்.//
மனசாட்சிப்படி சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் ரொம்பவே சத்தம் போட்டு சொல்லி வந்திருக்கிறேன் என்பதை அறியும்போது வெட்கமாக இருக்கிறது.
நான் விவரித்த என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமைதான் நினைவுக்கு வருகிறது.
நான் நினைத்தது சரி என்பதை இப்போது வரும் கருத்துக்கள் கன்ஃபர்ம் செய்கின்றன. என்ன, புரட்டிப் போட்ட அந்த வாரம் என்று வேணுமானால் இப்போது கூறலாம்.
இது சமீபத்தில் 1971-ல் நடந்த போது ஒரு நாளில் சில மணித்துளிகளே என்னை புரட்டிப் போட போதுமானதாக இருந்தன. ஆனால் அதன் பிறகு கங்கையில் நிறைய தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி விட்டது. மேலும் எனது வலைப்பூ பெரிய சைஸாக போய் விட்டதால் republish the whole blog ஒரு வாரம் எடுத்துள்ளது, அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இது சமீபத்தில் 1971-ல் நடந்த போது ஒரு நாளில் சில மணித்துளிகளே என்னை புரட்டிப் போட போதுமானதாக இருந்தன. ////
ப்ரேக்கிங் பாயிண்ட் என்று கமல் குருதிப்புணல் படத்தில் சொல்வாரே..அது போன்றது இந்த வார்த்தைகள்.. உங்களை முழுமையாக புரிந்துகொள்ளாதவர்களுக்கு இந்த பதிவு மட்டும் போதுமானது, உங்கள் உள்ளக்கிடக்கையை புரிந்துக்கொள்ள. உஷா மேடம் சொல்வதுபோல இந்த பதிவு மிகவும் பிடித்த பதிவு.
அனானி
அவுஸ்திரேலியா
இந்த பதிவொ படித்த பின்பு யென்னையெ அரியாமல் பாடம் தெரிந்து கொண்டன். மிக்க நன்றி
சுடலை ஞானம்
Post a Comment