ஜனவரி 70-ல் என் இன்ஜினியரிங் தேர்வு ரிஸல்ட் வந்தது. நல்ல வேளையாக பாஸ் செய்தேன். உடனே வேலை வாய்ப்பு தேடித்தரும் அலுவலகத்தில் பதிவு செய்தேன். பிறகு வழக்கம் போல என் ஜெர்மன் படிப்பைத் தொடர்ந்தேன். வேலை? அது கிடைக்க சரியாக ஒரு வருடம் ஆயிற்று. அதே வருடம் நவம்பர் மாதம் மத்தியப் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வுகாக எனக்கு அழைப்பு வந்தது. அடுத்த ஜனவரியில் பம்பாயில் போஸ்டிங் கிடைத்தது. இந்த வேலைக்காக நான் ஒரு பைசாவும் செலவழிக்கவில்லை, போஸ்டல் ஆர்டர் என்ற ரூபத்தில். 1974 வரை பம்பாய் வாசம். அந்தக் காலக்கட்டத்தைப் பற்றி ஏற்கனவே 3 பதிவுகள் போட்டுள்ளேன். பார்க்க:
1)
2)
3)
4)
பம்பாயில் இருந்த முழுக்காலமும் குடும்பக் கவலையின்றி அறை நண்பர்களுடன் கொட்டம் அடித்தேன். வெறும் கோப்புகள் பார்க்கும் வேலை என்பதால் வேலை காரணமாக மன அழுத்தம் ஏதும் இல்லை.
சென்னையில் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள் இருந்தேன். ஒரே போஸ்டிங்தான், மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் சைட் வேலை. கட்டிடங்களின் மின்மயமாக்கம், தெரு விளக்குகள், தரையின் கீழ் கேபிள்கள் இடுவது எல்லாம்தான். நல்ல வேளையாக மராமத்து வேலையோ அல்லது ஸ்டோர்ஸ் வேலையோ இல்லை. கூரைகளுக்கு ஸ்லாப் போடும்போது மின்னிழைகள் செல்வதற்கான காண்ட்யூட் பைப்கள் போடுவதை மேற்பார்வை செய்து அளவை புத்தகத்தில் ஏற்றுவது, அவ்வப்போது காண்ட்ராக்டர் பில்கள் போடுவது என்று மூச்சு விடாது வேலை.
ஃபிரெஞ்சு வேறு கற்க ஆரம்பித்திருந்தேன். காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் இரவு 9 மணியளவில்தான் வீட்டுக்கு வர முடியும். நங்கநல்லூர் வீட்டிலிருந்து மீனம்பாக்கம் ஸ்டேஷன் வரை சைக்கிள், அங்கிருந்து கிண்டி வரை மின் ரயில், கிண்டியிலிருந்து கரையான் சாவடிக்கு பஸ், கரையான் சாவடியிலிருது ஆவடி அண்ணா சிலை வரை இன்னொரு பஸ், ஆவடியிலிருந்து சி.ஆர்.பி.எஃப். வரை இன்னொரு பஸ் என்று பயணமே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகி விடும். மாலை அல்லியான்ஸ் பிரான்சேஸில் மாலை வகுப்புக்கள் வேறு. பயண நேரத்தில்தான் பாடங்கள் படிப்பது. அலுவலகத்திலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பு என்று இருந்ததால்தான் ஃபிரெஞ்சு படிப்பு வெற்றிகரமாக முடிந்தது.
மத்தியப் பணித்துறையில் சேர்ந்த பிறகு நான் செய்த முக்கிய வேலைகள் எதுவுமே எங்கள் பொறியியல் கல்லூரிப் பாடத் திட்டத்தில் இல்லை என்பதுதான் வேடிக்கை. இருப்பினும் ஏற்கனவே அச்சடித்த ஸ்பெசிஃபிகேஷன்கள், வேலை அட்டவணைகள் எல்லாம் எங்கள் முன்னோடிகள் செய்து வைத்துவிட்டுப் போயிருந்ததால் வேலை சுலபத்தில் பிடிபட்டது. பம்பாயில் இருந்ததைப் போல் சென்னையில் பொறுப்புகள் இல்லாமல் இருக்க முடியவில்லை. கல்யாணம் வேறு ஆகியிருந்தது.
என்னுடைய வேலை அனுபவங்களைப் பற்றிக் கூறும்போது அந்நிய மொழிகள் பற்றியும் கூற வேண்டியிருக்கும். ஏனெனில் வெவ்வேறு தருணங்களில் வெவேறு மொழிகளைக் கற்றுக் கொண்டிருந்தேன். என்னுடைய எலெக்ட்ரிகல் கோட்டகப் பொறியாளருடன் இது சம்பந்தமாக நேர்ந்த அனுபவத்தை இப்பதிவில் போட்டுள்ளேன்.
சிவில் கோட்டகப் பொறியாளருடன் எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில் நட்பு இம்முறையிலேயே வந்தது. அதைப் பற்றிக் கூறும் முன்னால் பின்புலனைக் கூறுவேன். சிவிலுக்கும் எலக்ட்ரிகல்லுக்கும் எப்போதுமே ஆகாதுதான். மேலும் கோட்டகப் பொறியாளருக்கும் என்னை போன்ற இளநிலைப் பொறியாளருக்கும் எப்போதுமே கடக்க முடியாத இடைவெளி உண்டு. அந்த இடைவெளி நானும் சிவில் கோட்டகப் பொறியாளரும் பிரெxசு வகுப்புக்கு போனதால் சுலபமாகக் கடக்கப்பட்டது. பிரெஞ்சு வகுப்பில் அவர் எனக்கு ஒரு வருடம் ஜூனியர்!! பாதியில் வகுப்பை வேறு விடவேண்டியதாயிற்று. நான் மட்டும் விடாமல் தொடர்ந்துப் எல்லா பரீட்சைகளையும் பாஸ் செய்ததில் அவருக்கு என் மேல் தனி அபிமானம். எப்போதுக்கு சைட்டுக்கு வந்தாலும் என்னைக் வரவழைத்து பேசுவார். சிவில் ஏ.இ.க்களுக்கெல்லாம் எரிச்சலாக இருக்கும்.
ஒரு நாள் அவர் என்னையும் சென்னை வரை தன் ஜீப்பில் வரச் சொன்னார். அவர் பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்தேன். அவரிடம் "சார் இப்படி அனியாயமாக பிரெஞ்சு படிப்பை விட்டு விட்டீர்களே, எல்லாமே மறந்து விடுமே" என்று அங்கலாய்த்தேன். அவரும் "என்ன செய்வது ராகவன், வேலைப் பளு அம்மாதிரி. நீங்கள் கொடுத்து வைத்தவர். படிப்பை முடித்தீர்கள். இருப்பினும் நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மன் படித்தேன். இப்போது கூட ஜெர்மன் பேசுவேன்" என்றார். எனக்கு ஒரே சந்தோஷம். எங்கு ஜெர்மன் படித்தார், அந்த நிலை வரை படித்தார், எப்போது படித்தார் என்பதையெல்லாம் மடமடவென்று ஜெர்மனில் கேட்டேன். ஜீப் மேலும் அரை கிலோமீட்டர் சென்றது. அப்போது அவ்ர் மெதுவாகத் தமிழில் கூறினார். "ராகவன் உங்களுக்கு ஜெர்மனும் தெரியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் இதை நான் கூறியேயிருக்க மாட்டேன் தெரியுமா" என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்குத்தான் மிகவும் கஷ்டமாகப் போயிற்று. "மன்னிக்கவும் சார்" என்று கூற அவர் என் தோளில் தட்டி ஆறுதல் சொன்னார். உண்மையிலேயே உயர்ந்த மனிதர்.
மற்ற அனுபவங்கள் அடுத்தப் பதிவில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
20 hours ago
4 comments:
//போலீஸ் வளாகத்தில் சைட் வேலை. //
போலீஸ் வளாகத்திலேயா? பெரிய ஆளு சார் நீங்க! நாங்க எல்லாம் வெளிய பார்த்தாவே ஈவ் டீசிங்னு சொல்றாங்க.
ஹி ஹி ஹி. அதுவும் நடந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
sir,
suddenly thamizmanam is not updating my blog. what to do?
please help me
இப்போதுதான் நான் பார்த்தேன். உங்களுடைய புதுப் பதிவை.
http://pesalaam.blogspot.com/2005/12/blog-post_24.html
பச்சை விளக்கும் இருக்கிறது. மாலை 6.53-க்கு பதிவிட்டிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் 3 மணி நேரம் சர்வ சாதாரணமாக ஆகிறது.
வேண்டுமானால் பழைய பதிவு ஏதாவதற்கு டெஸ்ட் பின்னூட்டம் கொடுத்து பாருங்கள். மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கத்தில் உடனே அது இற்றைப்படுத்தப்பட வேண்டும்.
இல்லையென்றால் மன்றத்தில் ஆதரவு கேட்டு எழுதலாம், ஆனால் அதுவும் இப்போதைக்கு முடியாது என்றுதான் நினைக்கிறேன். எதற்கும் காத்திருந்து பாருங்கள். சரியாகி விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment