Three men in a boat, to say nothing of the dog என்னும் புத்தகம் உலகப் பிரசித்தி பெற்றது. அதைப் படித்து பல தலைமுறையினர் கெக்கெக்கே என்றெல்லாம் சிரித்து அதற்காக அந்த புத்தகத்தின் அருமை தெரியாதவர்களால் பைத்தியம் என்று அழைக்கப்பட்டனர். எழுதியது Jerome K. Jerome.
இப்புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்கலாம் என முடிவு செய்துள்ளேன்.
நாங்கள் நான்கு பேர் குழுமியிருந்தோம் - ஜார்ஜ், ஹாரிஸ் மற்றும் நான் மேலும் மாண்ட்மொரென்சி. என் அறையில் நாங்கள் உட்கார்ந்து கொண்டு புகைபிடித்தவாறு வம்பளந்து கொண்டிருந்தோம். எங்கள் உடல் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை பற்றி முக்கியமாக பேசிக் கொண்டிருந்தோம்.
நாங்கள் ரொம்ப களைப்பாக இருப்பதாக உணர்ந்தோம். அது எங்கள் மனச்சஞ்சலத்தை பெருக்கியது. தன் மேல் அவ்வப்போது களைப்புணர்வு அலையலையாகப் பாய்வதாக ஹாரிஸ் கூறினான். தான் என்ன செய்கிறோம் என்பதுகூட சில சமயம் தெரிவதில்லை என்றும் அவன் கூறினான்; ஜார்ஜும் தானும் அவ்வாறே உணர்வதாகக் கூறினான். என் விஷயத்தில் எனக்கு கல்லீரல் கோளாறு உண்டு. அது பற்றி எனக்கு சந்தேகமே இல்லை. ஏனெனில் அப்போதுதான் கல்லீரலுக்கான மருந்து ஒன்றின் கையேட்டை படித்து முடித்திருந்தேன். அதில் கல்லீரல் கோளாறுகளுக்கான அத்தனை குறிகளும் என் நிலைமையுடன் முழுக்க ஒத்துப் போயின.
அதிசயம் ஆனால் உண்மை. பேட்டண்ட் செய்யப்பட்ட மருந்துகளின் விளம்பரங்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்கும் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாகவும் அதுவும் மிகக் கடுமையான அளவில் இருப்பதாகவும் எனக்கு எப்போதுமே தோன்றும். நோயின் அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை என் உணர்வுகளுடன் எப்போதுமே ஒத்துப் போயுள்ளன.
ஒரு சமயம் நான் பிரிட்டிஷ் ம்யூசியம் சென்றிருந்தேன். எனக்கு வந்த உடல் நலக் குறைவுக்கான சிகிச்சை பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தேன். அதற்கான மருத்துவப் புத்தகத்தை எடுத்து படித்தேன். அத்துடன் சும்மா இல்லாமல் வேறு பக்கங்களைப் புரட்டினேன். முதலில் எந்த நோயை பற்றி படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் அது ஒரு பயங்கர நோய் என்பது மட்டும் நினைவிருக்கிறது. அந்த நோய் என்னுள் மிகக் கடுமையான அளவில் குடியிருந்ததைக் கண்டேன்.
சிறிது நேரம் அப்படியே உறைந்து போய் அமர்ந்தேன். பிறகு மற்ற பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். டைபாய்டு கடந்த ஆறு மாதங்கலாக என்னுள் இருந்திருக்கிறது. பிறகு ஒவ்வொரு நோயாக எழுத்துவாரியாகப் பார்க்க ஆரம்பித்தேன். 26 ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிக்கும் எல்லா நோய்களும் என்னுடலில் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. காக்காய் வலிப்பு மட்டும் இல்லை. அந்த நேரத்திலும் அது மட்டும் என்னை ஏன் அலட்சியம் செய்தது என்ற விசனத்தில் ஆழ்ந்தேன். .
சட்டென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. வைத்தியக் கல்லூரி ஒன்றுக்கு நாம் எவ்வளவு உபயோகமாய் இருக்கலாம்? நான் மட்டும் கிடைத்தால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆஸ்பிடல்களையெல்லாம் சுற்ற வேண்டியதேயில்லை. நானே எனக்குள் ஒரு ஹாஸ்பிடல்தான். என்னை சுற்றி வந்தாலே மாணவர்களுக்கு மருத்துவ டிகிரி கிடைத்து விடும்.
சட்டென்று ஓர் என்ணம் உதயமாயிற்று. எல்லாவற்றிற்கும் உயிரோடிருந்தாலல்லவா? கை நாடியைப் பிடித்துப் பார்த்தேன். முதலில் நாடி அடிப்பதாகவே தெரியவில்லை. திடீரென்று அதிவேகமாக அடிக்கத் தொடங்கிற்று. எண்ணியதில் ஒரு நிமிடத்தில் அது 147 முறை அடித்ததாகத் தெரிந்தது. பிறகு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். நெஞ்சு அடித்துக் கொள்ளவேயில்லை. இப்போது உயிரோடிருக்கிறேனா, செத்துப் போனேனா என்பதே சந்தேகமாகி விட்டது. தொடையில் கிள்ளிக் கொண்டேன்; கொஞ்சம் வலித்தது. உயிர் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று தைரியம் பிறந்தது.
வாசக சாலையில் நுழையும்போது. சந்தோஷமானவனாக நுழைந்தேன். வெளியில் செல்லும்போது சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் இல்லை.
வெளியில் வந்து மெல்ல ஒரு குதிரை வண்டியைப் பிடித்து என் வைத்திய நண்பரிடம் சென்றேன். அவர் எனது நெடுநாள் நண்பர். அடிக்கடி கை பார்ப்பார்; தெர்மாமீட்டரில் வெப்ப நிலை அளந்து சொல்வார். தாகமாயிருந்தால் ஏதேனும் மிக்ஸர் கலந்து கொடுப்பார். என்னிடம் தற்சமயம் குடிகொண்டுள்ள நோய்கள் காரணமாக என்னை வைத்து அவருடைய பிராக்டீஸ் பெருகும் என்ற நல்லெண்ணத்தில் அவரிடம் சென்றேன். அவர் என்னை கேட்டார்:
"என்னய்யா, என்ன ஆச்சு உமக்கு?"
நான் சொன்னேன்: "எனக்கு வந்த வியாதியையெல்லாம் நான் உம்மிடம் கூறமுனைந்தால் நான் சொல்லி முடிப்பதற்குள் நீங்கள் செத்துப் போனாலும் போகலாம். ஆகவே எனக்கு என்ன வரவில்லை என்று கூறிவிடுகிறேன். காக்கைவலிப்பு எனக்கு வரவில்லை. ஏன் அது வரவில்லை என்பதை நான் அறியேன். அது வரவில்லை என்பது உண்மை. மற்ற எல்லா நோய்களும் எனக்கு வந்திருக்கின்றன" என்றேன்.
பின்னர் இதைக் கண்டுபிடித்த வரலாற்றைக் கூறினேன்.
அவர் என் கையைப் பிடித்துப் பார்த்தார். பிறகு நான் எதிர்ப்பார்க்காத நேரத்தில் கோழைத்தனமாக என் மார்பில் இரண்டடி அடித்தார். அது ஒரு வகைப் பரிசீலனை என்று சமாதானம் சொல்லி மருந்தும் எழுதிக் கொடுத்தார். அதை மடித்து என் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மருந்துக் கடைக்குச் சென்றேன்.
சீட்டை நீட்டினேன். கடைக்காரன் சீட்டைப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான். "இது மருந்துக் கடையல்லவா" என்று கேட்டேன். "ஆம்; இது மருந்து கடைதான். ஆனால் இதை மளிகைக் கடை அல்லது சாப்பாடு ஹோட்டல் என்று நீர் நினைத்தக் காரணம் என்ன?" என்றான் கடைக்காரன். சீட்டைப் பிரித்துப் படித்தேன்:-
1. காற்படி கைக்குத்தலரிசிச் சோறு (பருப்பு, நெய், மோர் உட்பட) இரண்டு வேளை.
2. ஓர் இளநீர், அகப்பட்டால் இரண்டு ஆரஞ்சும் சில திராட்சைப் பழங்களும்.
3. தினம் ஐந்து மைல் நடத்தல்.
4. தினம் ஒன்பது மணிக்குப் படுக்கை
5. தெரியாத விஷயங்களில் தலையிடாமல் வாலைச் சுருட்டிக் கொண்டிருத்தல்.
அவ்வாறே செய்தேன். அன்றிலிருந்து வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறது
நான் மேலே கொட்டை சாய்வெழுத்துகளில் கொடுத்திருப்பது பேராசிரியர் கல்கி அவர்கள் தன்னுடைய "ஏட்டிக்கு போட்டி" என்ற புத்தகத்தில் எழுதியது. அவர் எங்கிருந்து அதை சுட்டிருப்பார் என்பதைக் கூறவும் வேண்டுமோ? வேண்டாம், வேண்டாம்.
இப்போது சற்றே மாறிய வேறு விஷயத்துக்கு வருவோம். சுந்தா அவர்கள் சமீபத்தில் ஜூலை 1974-ல் துவங்கி கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கல்கியில் "பொன்னியின் புதல்வர்" என்ற பெயரில் தொடராக வாரா வாரம் 1976 வரை எழுதி வந்தார். அவரிடம் நான் "Three men in a boat, to say nothing of the dog" என்ற இந்த புத்தகத்தை எடுத்துச் சென்று மேலே குறிப்பிட்டப் பகுதியைக் காட்டினேன். அது தனக்கும் தெரியும் என்றும் வாழ்க்கை வரலாற்றில் தான் கண்டிப்பாக அதைப் போடுவதாகக் கூறினார். அதை உன்னிப்பாகவும் கவலையாகவும் எதிர்பார்ப்பேன் என்று கூறி விட்டு வந்தேன். அவரும் சொன்னபடியே செய்தார். ரொம்ப நல்ல மனிதர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தியடோர் பாஸ்கரன். பெங்களூர் சந்திப்பு
-
சு.தியடோர் பாஸ்கரன் தமிழ் விக்கி அன்பின் ஜெ, பெங்களுரு விஷ்ணுபுரம் இலக்கிய
வட்டம் சார்பாக எழுத்தாளர், திரைப்பட வரலாற்றாளர், சூழியல் எழுத்து முன்னோடி
திரு...
1 day ago
22 comments:
ஒரு நோயின் அறிகுறிகளைப் பற்றிப் படித்தவுடன் அந்த நோய் தனக்கும் இருப்பதுபோல் பிரமை தோன்றுவது இயற்கைதான். எனக்கும்கூட பல முறை அந்தச் சந்தேகம் வந்திருக்கிறது. சிலருக்குச் சந்தேகம் என்ற எல்லையைத் தாண்டி, சோதனை செய்த மருத்துவரே அந்த நோய் இல்லையென்று சொன்னாலும் தனக்கு அது இருப்பதாய் நம்பிக் கவலை கொள்வதும் உண்டு. அது ஒரு உளவியல் சிண்ட்ரோம், பெயர் சரியாய் நினைவில் இல்லை.
டோண்டு அவர்களே,
உங்கள் பதிவைப் பார்த்தபின் கூகிளில் தேடிப்பார்த்தேன். இந்தப் புத்தகம் கிடைத்தது.
முத்து அவர்களே. நீங்கள் கூறுவது போல இருப்பவர்களை hypochondriac என்று அழைப்பார்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன சுட்டியில் போய் பார்த்தேன். "Three men on the bummel" என்ற இன்னொரு புத்தகமும் கிடைத்தது. பிழைத்துக் கிடந்தால் அதையும் மொழிபெயர்ப்புவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதுபோல் புகழ்பெற்ற ஆங்கில மற்றும் பிற மொழிப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அளிப்பது என்பது சந்தேகமில்லாமல் தமிழுக்குச் செய்யும் ஒரு சேவைதான். இதுபோல் மொழிபெயர்க்க ஏதாவது முறையான அனுமதி பெற வேண்டுமா?, வியாபார நோக்கில்லாமல் செய்யும்போது அப்படி அனுமதி ஏதும் தேவையிராது என்றுதான் நினைக்கிறேன்.
//பிழைத்துக் கிடந்தால் அதையும் மொழிபெயர்ப்புவேன்.//
ஐயா, தாங்கள் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
என்ன ஒரு coincidence
<-------அவர்கள் கல்கியில் "பொன்னியின் புதல்வர்--->
கல்கியின் 'பொன்னியின் செல்வர்'(PDF)தான் படித்து வருகின்றேன்.
என்ன சொல்ல வர்றீங்க டோண்டு சார், கல்கி எழுதின முதல் கட்டுரையே ஈயடிச்சான் காப்பி அப்படீன்றீங்களா?
முத்து அவர்களே,
நான் மொழிபெயர்க்க நினைக்கும் இந்தப் புத்தகத்துக்கு காப்பிரைட் கிடையாது. இது பொது சொத்து. என்ன, பப்ளிஷர் யாராவது தேடி ஆர்டர் பெற்றுக் கொண்டால் சீக்கிரம் மொழி பெயர்க்கலாம். இப்போதைக்கு அவ்வாறு ஏதும் ஐடியா இல்லையாதலால் என்னுடைய வேகத்தில் செல்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி கால்கரி சிவா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிவா அவர்களே, வாழ்க்கையே பல தற்செயலான நிகழ்ச்சிகளின் தொகுப்புத்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மாயவரத்தான் அவர்களே,
அவ்வளவு அவசரப்படக்கூடாது. கல்கி அவர்களின் மொழிபெயர்ப்பு மிக அருமையானது. மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்று கூறுவது அதிகப் பொருத்தம்.
ஒரு சக மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் அவரது மொழிபெயர்ப்பு நேர்த்தியைப் பார்த்து பிரமிக்கிறேன். வல்லவரையன் வந்தியத்தேவன் பாத்திரத்தை அவர் "Three musketeers" என்னும் அலெக்ஸாந்தர் ட்யூமாவின் நாவலில் வரும் D'Artagnan பாத்திரத்தைப் போல அமைத்திருப்பார். அதே போல சிவகாமியின் சபதத்தின் பரஞ்சோதி தன் ஊரை விட்டு காஞ்சிக்கு செல்லும் படலத்தை அதே "Three musketeers" கதையிலிருந்து எடுத்து சற்றே மாற்றியமைத்துள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Good Blog!! Nice one!!
நன்றி சிவபாலன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
இது ரொம்ப சுவாரசியம் போல் உள்ளது. அடுத்த வாரம் படிக்கிறேன்.போன வாரம் நான் ஊரில் இல்லை.
நல்லது முத்து (தமிழினி) அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல முயற்சி. உலகிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை நாவல்களில் ஒன்று என்று நேரு அவர்கள் Jerome.K.Jerome இன் Three men in a boat ஐப்பற்றி குறிப்பிட்டதாக ஞாபகம்.
எத்தனை முறை படித்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் புத்தகம். My all time favourite book.
அந்த ஜெர்மன் இசை நிகழ்ச்சி episode உம், Uncle Podger சுவற்றில் படம் மாட்டியதும் மறக்கவே முடியாது.
நன்றி ஜெயஸ்ரீ அவர்களே.
அந்த ஜெர்மன் இசை நிகழ்ச்சி episode -> Three men on the bummel.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே,
three men in a boat இலும் ஒரு இசைக்கச்சேரி பற்றிய ஒரு நிகழ்வு வருகிறது. சுட்டி இதோ
http://www.litrix.com/3menboat/3menb008.htm
மன்னிக்கவும் ஜெயஸ்ரீ அவர்களே. நீங்கள் கூறியதுதான் சரி. நான் இரண்டு புத்தகங்களையும் படித்ததில் சற்றே குழம்பியிருக்கிறேன்.
சரியான தகவலைக் கூறியதற்கு நன்றி.
அன்புஇடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
இப்படி கதாசிரியர்கள் தங்களையுமறியாமல் (சிலர் தெரிந்தே கூட) பிற கதாசிரியர்களுடைய படைப்புகளை சுட்டுவிடுவதுண்டு. சிலர் நேர்மையாக (நேர்மையாவது ஒன்னாவது.. மாட்டிக்கிட்டா மானம் போயிருமேன்னுதான்) தங்களுடைய படைப்பின் முகப்பிலோ அல்லது கடைசியிலோ பட்டியலிடுவார்கள். வேறு சிலர் பிடிபட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவார்கள். ஒருவருடைய படைப்பின் கருவை மட்டும் சுட்டு தங்களுடைய கற்பனைத் திறனால் அதற்கு மேலும் மெருகூட்டுவதென்பது கற்பனையாளர்கள் மத்தியில் காணப்படுவது இயற்கை.. அதில் பெரிதாக தவறேதும் இல்லையென்பதும் என் கருத்து. ஆனால் சமீபத்தில் காவ்யா என்றொரு இளம் கற்பனையாளர் செய்ததுபோல வேறொரு கற்பனையாளரின் படைப்பிலிருந்து அப்படியே (verbatim) சில பகுதிகளை சுட்டுவிடுவதைத்தான் அயோக்கியத்தனம் என்று கூறவேண்டும். கல்கியின் படைப்பும் அத்தகையதா என்று தெரியவில்லை..
"கல்கியின் படைப்பும் அத்தகையதா என்று தெரியவில்லை.."
இல்லவே இல்லை. கல்கி கல்கிதான். அவர் செய்தது இன்ஸ்பைர் ஆகி அதை தமிழில் அருமையாகக் கொண்டு வந்தது. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாமே அவர் காலத்தில் இருந்த கதைகளின் நாடக ரூபங்களே. இந்த விஷயத்தில் கலிக்யை ஷேக்ஸ்பியருடன் தாராளமாக ஒப்பிடலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I have made a reference to this post here - http://siliconshelf.wordpress.com/2010/09/28/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/
Post a Comment