இந்தப் பதிவு மூன்று பழைய பதிவுகளை ஒன்று சேர்த்து மீள் பதிவு. அவ்வாறு போடுவதற்கு காரணம், இரண்டு மொழிகளையும் வேகமாகக் கற்பதில் நான் ஒரே முறையையே கையாண்டேன். அதை எடுத்துக் காட்டவே இந்த மொத்தப் பதிவு. இன்னொரு காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பழைய பதிவுகளை வகைபடுத்த இந்த முறைதான் எனக்கு தெரியும்.
முதலில் ஜெர்மன் கற்று கொண்ட கதை
1969, ஜூலை 1. எல்லோரும் எங்கள் முதல் ஜெர்மன் வகுப்புக்காக உட்கார்ந்திருந்தோம். சரியாக 9 மணிக்கு மிடுக்காக உள்ளே நுழைந்தார் எங்கள் ஆசிரியர் சர்மா அவர்கள். சிறு அறிமுகம் - 1 நிமிடத்திற்கு, ஆங்கிலத்தில். அதில் அவர் கூறியதன் சாராம்சம் தான் இனி ஜெர்மனில்தான் பேசப் போவதாகவும் அம்மொழியிலேயே ஜெர்மன் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
உடனே பாடத்தை ஆரம்பித்து விட்டார். முதலில் பாடத்தை அவர் நிறுத்தி நிதானமாக உரக்கப் படித்தார். பிறகு எங்களை அதே உச்சரிப்புடன் படிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம், தட்டுத் தடுமாறிப் படிக்க ஆரம்பித்தோம். பயிற்சி மிக உபயோகமாக இருந்தது. இது புது முறையைச் சார்ந்தது என்பதை அறிந்தோம். பிறகு டேப் ரிக்கார்டர் வழியே ஒரு ஜெர்மானியரின் உச்சரிப்பையும் பெற்றோம். எல்லாவற்றையும் கான்டக்ஸுடன் படித்துக் கேட்டதால் ஜெர்மன் மொழி எங்களை அறியாமலேயே எங்களிடம் குடி புகுந்தது.
கூடவே உரக்க நாங்களும் பாடத்தைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. பலருக்கு உரக்கக் கத்துவதில் கூச்சம். ஆகவே உதட்டை மட்டும் அசைத்தனர். ஆனால் நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரை சர்மா தன் தெளிவானக் குரலில் ஜெர்மனில் எதைக் கூறினாலும் எனக்குப் புரிய ஆரம்பித்தது.
மெதுவாக வகுப்பில் மாணவர் நிலை ஒரு சமன்பாட்டுக்கு வரத் துவங்கியது. முதலில் வகுப்பறையில் உட்காரக்கூட இடம் இருக்காது. ஓரிரு வாரத்திலேயே சட சடவென்று பல மாணவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்தினர். மிஞ்சியவர்கள் அபார முன்னேற்றம் அடைந்தனர்.
நான் சேர்ந்தது Grundstufe - 1 வகுப்பில். ஒவ்வொருக் கல்வியாண்டிலும் இரண்டு செமஸ்டர்கள். முதல் செமஸ்டர் தேர்வு நவம்பர் 1969-லும், இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் 1970-லும் நடப்பதாகத் திட்டம். அப்போது G - 1 சான்றிதழ் கிடைக்கும்.
இப்போது நான் ஒரு காரியம் செய்தேன். வாரத்துக்கு மூன்று வகுப்புகள், காலை 8-லிருந்து 9 வரை. மீனம்பாகத்திலிருந்து மாம்பலத்துக்கு மின் ரயில் வண்டியில் பயணம், அங்கிருந்து அண்ணா சாலை டி.வி.எஸுக்கு பேருந்துப் பயணம். ஆக, பயண நேரம் ஒரு மணிக்கு மேல். அப்போது விளையாட்டாக அடுத்தப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்து, அதில் கூறப்பட்டப் பயிற்சிகளைச் செய்யத் தலைப் பட்டேன். ஒரு வேளை ஏதாவது ஒரு நாள் வகுப்புக்குச் செல்ல முடியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம். ஆனால் நடந்ததென்னவென்றால் முதல் செமஸ்டர் முடியும் முன்னரே முழுப் புத்தகத்தையும் எல்லப் பயிற்சிகளையும் எழுத்தால் செய்து முடித்து விட்டேன். இப்போது ஜெர்மனில் நானே வாக்கியங்களை உருவாகிப் பேச ஆரம்பித்தேன். முதலில் என்னை வியப்புடன் பார்த்த சர்மா அவர்கள் என்னுடன் ஜெர்மனில் பேச ஆரம்பித்தார். நான் செய்தத் தவறுகளை நாசூக்காகத் திருத்தினார். மொழி வகுப்புகளில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய டிக்டேஷன் எனக்கு ஒரு ஒரு விளையாட்டாயிற்று.
நவம்பர் 1969-ல் ஒரு நாள் மாலை 7 மணிக்கு முதல் செமஸ்டர் தேர்வு. சித்ரா திரையரங்கில் பாமா விஜயம் பகல் நேரக் காட்சியைப் பார்த்து விட்டு, மாலை தேர்வுக்குச் சென்றால் எல்லா மாணவர்களும் கடைசி நேரக் கொந்தளிப்பில். நான் பாட்டுக்கு ஒரு ஜெர்மன் தினசரிப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து விட்டு இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மையரின் கட்சிக்குத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று என் நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்டது. பரீட்சை முடிவு வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
இன்னொரு போனஸ். முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அடுத்த வகுப்புக்கான முதல் மாதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. (மாதக் கட்டணம் 12 ரூபாய்!). ஆனால் ஒரு நிபந்தனை. பின் வரும் எல்லா மாதத் தேர்விலும் முதல் வகுப்பு மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அம்மாதத்திலிருந்து கட்டணம் கட்ட நேரிடும். நான் முதல் செமச்டருக்காகக் கட்டிய நான்கு மாதக் கட்டணமான 48 ரூபாய்களுக்கு மேல் ஒரு பைசாவும் கட்டவில்லை. வெறுமனே பரீட்சைக் கட்டணம் (ரூ. 10) மட்டுமே கட்டினேன்.
நவம்பர் 1969-ல் இரண்டாம் செமஸ்டர். கல்யாணி ஜானகிராமன் என்ற ஒரு அருமையானப் பெண்மணி வகுப்பெடுத்தார். ஏப்ரல் 1970-ல் இரண்டாம் செமஸ்டர் தேர்விலும் தேறி அடுத்த வகுப்புக்கான கட்டணத்திலிருந்து விலக்குப் பெற்றேன். இப்போது G - 2 வகுப்பை ஒரே செமஸ்டரில் முடிக்கத் திட்டமிட்டு, வாரத்துக்கு 5 நாள் வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சியாமளா அவர்கள். வயலின் வித்தகர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் பெண். (மாதக் கட்டணம் 18 ரூபாய்கள், நான் கட்டவில்லை). பாதி செமஸ்டரில் Mittelstufe - 1 வகுப்புக்கானப் புத்தகம் வாங்கி பயிற்சிகளைச் செய்யலாமா என்று தேசிகனுடன் ஆலோசனை செய்ததில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு உதவி செய்தார். அவ்வகுப்பில் கடைசி மாதத்துக்கு மட்டும் வகுப்புக்குச் சென்றேன். சர்மாதான் ஆசிரியர். பிறகு நடந்ததுதான் தமாஷ். இரண்டு பரீட்சைகளையும் சில நாட்கள் இடைவெளியில் எழுதி இரண்டிலும் முதல் பரிசு பெற்றேன். முதல் பரிட்சை (G-2) அன்றுப் பார்த்தப் படம் சிராக் என்ற ஹிந்திப் படம், அடுத்தப் பரீட்சை (M1) தினத்தன்றுப் பார்த்தது லட்சுமி கல்யாணம்!
தேசிகன் எனக்குச் செய்த உதவி அளவற்றது. எம்- 1 வகுப்பில் கடைசி ஒரு மாதம் படித்ததற்குக் கட்டணம் பெற மறுத்து விட்டார். ஆக நான் ஜெர்மன் வகுப்புக்களுக்காக கட்டிய மொத்தப் பணம் 48 ரூபாய்கள்தான்.
1971 ஜனவரியில் மத்தியப் பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பதவி நியமனம் பெற்றேன். வேலை பம்பாயில். அங்கிருந்த மேக்ஸ் ம்யுல்லர் பவன் என்னைக் கவரவில்லை. தவறு என்னுடையதுதான். சென்னை மேக்ஸ் ம்யுல்லர் பவனை மறக்க இயலவில்லை. அவ்வாண்டு ஜூலையில் பூனா மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்தியாவிலேயே மிகச் சிறப்பானது அது. முழு நேரப் பாடங்கள் அங்கே. நான் எம்- 2 வகுப்புக்கானத் தேர்வை பிரைவேட்டாக எழுத முடியுமா என்றுக் கேட்டிருந்தேன். கடிதம் எழுதியது ஆங்கிலத்தில். அவர்கள் பதில் வந்ததோ ஜெர்மனில். இம்மாதிரி அவர்களுக்கு ஒரு கடிதமும் வந்ததில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். நானும் ஜெர்மனில் எழுத, அவர்கள் பதில் போட, ஆகஸ்டில் எம்- 2 எழுதி தேர்ச்சிப் பெற்றேன். இரண்டாம் ரேங்க்தான் கிடைத்தது. நவம்பரில் ஒரு டிப்ளொமா பரீட்சைக்குப் பணம் கட்டி நவம்பரில் அதிலும் தேர்ச்சி பெற்றேன். இது ம்யூனிக் சர்வகலாசாலைக்காக கதே இன்ஸ்டிட்யூட்டால் உலகெங்கும் உள்ள பல தேர்வு மையங்களில் நடத்தப் படும் தேர்வு. விடைத் தாள்கள் ஜெர்மனியில் மதிப்பீடு செய்யப் படும். பூனாவும் தேர்வு மையங்களில் ஒன்று.
அத்துடன் ஜெர்மன் பரிட்சைகள் என்னைப் பொருத்தவரை முடிவுக்கு வந்தன. பிறகு ஜெர்மனில் புத்தகங்கள் படிப்பதே வேலையாகப் போயிற்று. ஆனால் மொழி பெயர்ப்பு வேலைகள் ஒன்றும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதைச் செய்ய 1975-ல் தான் வாய்ப்பு கிடைத்தது. 1974-ல் எனக்குச் சென்னைக்கே மாற்றல் வந்து விட்டது. தேசிகன்தான் வழக்கம் போல மொழி பெயர்ப்பு வேலைகள் பெறுவதற்கும் உதவினார். எப்போது அவரைப் பார்த்தாலும் என்னுடன் ஜெர்மனிலேயே பேசுவார்.
1975-ல் ஃபிரெஞ்சு கற்பதற்காக சென்னை அல்லியான்ஸ் ஃபிரான்சேஸில் சேர்ந்தேன் அந்தக் கதையை இப்போது பார்ப்போமா?
எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வேன். இந்த மொழியை பகுதி நேரத்தில் கற்றுக் கொள்ள அல்லியான்ஸ் ஃபிரான்சேஸை விடச் சிறந்த இடம் வேறில்லை. ஜே.என்.யூ. படிப்பை இதற்குச் சமமாகச் சொல்லலாம். ஆனால் அதில் படிக்க ரொம்ப மெனக்கெட வேண்டும். ப்ளஸ் 2 முடித்த பிறகு பி.ஏ. மற்றும் எம்.ஏ. (ஃபிரெஞ்சு படிக்க வேண்டும்). எல்லோராலும் முடிகிற காரியம் இல்லை.
ஜூலை 1975-ல் செர்டிஃபிகா வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சாரதா லாற்டே. அவரைப் பற்றி ஏற்கனவே நான் முன்னொரு பதிவில் எழுதியதை இங்கே மறுபடியும் பதிக்கிறேன்.
"சாரதா அவர்கள் வகுப்பு எடுப்பதே கவிதை போன்று ஒரு அழகு. மாணவர்களின் சந்தேகங்களை மிக அன்புடன் தீர்த்து வைப்பார். மொத்தம் நான்கு நிலைகளில் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை "செர்டிபிகா", "ப்ரே டிப்ளோம்", "டிப்ளோம்" மற்றும் "டிப்ளோம் ஸுபேரியேர்" ஆகும்.
வாரத்துக்கு நான்கு முறை மாலை வகுப்புகள். ஒவ்வொரு நிலைக்கும் வருடத்தை மூன்றாகப் பிரித்து பிரெஞ்ச் கற்பிக்கப் பட்டது. அவசரக் குடுக்கையான நான் ஆர்வக் கோளாறில் முதல் மூன்று மாதத்திலேயே முதல் நிலைப் புத்தகத்தில் உள்ள எல்லா பயிற்சிகளையும் எழுத்தில் செய்து முடித்து அதன் பின் இரண்டாம் நிலைக்கானப் புத்தகத்தையும் முடித்தேன்.
மூன்றாம் நிலைக்கானப் புத்தகத்தை வாங்கப் போனால் ஒரே ரவுஸுதான், முதல் நிலை மாணவன் மூன்றாம் நிலை புத்தகத்தை எப்படி வாங்குவதென்று. சாரதா அவர்கள் துணையை நாட அவர் அலட்டிக் கொள்ளாமல் தானே அப்புத்தகத்தைத் தன் பெயரில் வாங்கிக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.
இரண்டாம் நிலைக்கான வகுப்பில் இரண்டாம் டெர்முக்கு வந்தபோது எங்கள் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கலைக்கப்பட்டது. நாங்கள் வேறு வகுப்பு நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்று ஆலோசனை கூறப்பட்டது.
ஆனால் என்னால் அது முடியாத காரியமாயிற்று. மறுபடியும் சாரதா அவர்கள் உதவி செய்தார். இரண்டாம் நிலைக்கான மூன்றாவது டெர்மில் என்னை சேர்த்து விட்டார். அந்த ஆசிரியரோ ஒரே வாரத்தில் சாரதா அவர்களை அழைத்து இவனது முன்னேற்றம் ராட்சசத்தனமாக இருக்கிறது, மூன்றாம் நிலைக்கு அனுப்பலாம் என சிபாரிசு செய்தார். சாரதா அவர்களும் என்னை தன் கணவர் நடத்திய மூன்றாம் நிலைக்கான கடைசி டெர்ம் வகுப்பில் சேர்த்து விட்டார். இவ்வாறாக மொத்தம் 4 டெர்ம்கள் தாவல்.நானும் அவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன் (Tres honorable). இரண்டாம் நிலைத் தேர்வு எழுதவே இல்லை.
நான்காம் நிலைக்கான இறுதித் தேர்வு சமயத்தில் ஸாரதாவும் அவர் கணவரும் ஸ்பெயினுக்கு மாற்றம் பெற்றனர்.
ஏதோ ஒரு தேவதையைப் போல வந்து சாரதா அவர்கள் எனக்கு உதவிகள் செய்திராவிட்டால் நான் சாதாரணப் பொறியாளனாகவே ஓய்வு பெற்றிருப்பேன். வாழ்க்கை அற்புதமயமானது."
அங்கு தேசிகன், இங்கு சாரதா. அவர் வகுப்பில் வரிசைக் கிரமத்தில் கேள்விகள் கேட்பார். என் முறை வரும்போது மட்டும் என்னை அடக்கி விட்டு என் பக்கத்து மாணவருக்குத் தாவி விடுவார். முதல் முறை நான் திகைப்புடன் பார்த்தபோது என்னிடம் "மற்றவர்கள் முதலில் முயற்சிக்கட்டும், உங்கள் முறை எல்லோருக்கும் கடைசிதான். நீங்கள் விடை கூறி விடுவீர்கள். அதனால் மற்றவருக்குப் பயனில்லை" என்று வேகமாக ஃபிரெஞ்சில் கூறி விட்டார். அடுத்த நாள் ஒரு டெஸ்ட் வைப்பதாக ஒரு சமயம் கூறியபோது நான் அவரிடம் அன்று என்னால் வர இயலாது என்று வருத்தத்துடன் கூற, உடனே டெஸ்டை அதற்கு அடுத்த நாளுக்குத் தள்ளிப் போட்டார். இவரை ஆசிரியையாக அடைய முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இப்போது திரும்பிப் பார்க்கும்போது நான் ஜெர்மனிலும் ஃபிரெஞ்சிலும் ஒரே யுக்தியைக் கையாண்டுள்ளேன் என்று புரிகிறது. எல்லாப் பாடப் பயிற்சிகளையும் எழுத்து ரூபத்தில் செய்து முடிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட மொழியில் பேசத் தயங்கவே கூடாது. பாடங்களை வகுப்புக்கு வரும் முன்னரே படித்து வைத்து விட்டால் ரொம்ப உத்தமம். உண்மையைக் கூறப் போனால் வகுப்பு என்னைப் பொருத்தவரை ஒரு விளையாட்டாயிற்று. இங்கும் டிக்டேஷன் ஒரு நண்பனாகவே இருந்தது. இரண்டாம் மாதத்திலேயே நூலகத்திலிருந்துப் புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். அவற்றால் என் ஃபிரெஞ்சு இன்னும் கூர்மையடைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கும் போதனா மொழி ஃபிரெஞ்சுதான். அம்மாதிரி இத்தாலிய வகுப்பு இல்லாததால் நான் இப்போது திரிசங்குச் சொர்க்கத்தில் அதைப் பற்றிப் பின்னொரு பதிவில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வரலாற்றை நேர்மையாகக் கற்பது…
-
வரலாறு இந்தியாவில் மிக அதிகமாகப்பேசப்படும் விஷயம், ஆனால் மிகமிகக் குறைவாகக்
கற்கப்படுவதும்கூட. நாம் வரலாற்றை நம் இன,மொழி, மத மேட்டிமைவாதத்திற்காக
மட்டுமே க...
8 hours ago
7 comments:
நான் ஜெர்மன் கற்றுக்கொள்ள பெரிதாக கஷ்டப்பட வில்லை.. அதனையும் ஒரு பதிவாக இடுகிறேன்.
வணக்கம் கொழுவி அவர்களே. அதையேதான் நானும் கூறுகிறேன். இரண்டு மொழிகளையும் கற்க நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் விளையாட்டாக எடுக்கப்பட்டவையேயாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் நாட்டாமை அவர்களே.
முதலில் நான் ஏன் ஜெர்மன் வகுப்பில் சேர்ந்தேன் என்ற காரணத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. இருப்பினும் இங்கு மறுபடியும் கூறுவேன்.
ஜூன் 1969. ஐந்தாம் ஆண்டு பரீட்சை ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங்களில் நான் தேரவில்லை - கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரிகல் மெஷினெரி. நாங்கள் படித்த ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைப்பு பாடத் திட்டத்தில் கடைசி 3 ஆண்டுகள் ரொம்ப முக்கியம் வாய்ந்தவையாகும். அதில் வரும் மதிப்பெண்களை வைத்துத்தான் எங்களுக்கு கிளாஸ் நிர்ணயம் செய்வார்கள். அதில் முக்கிய கண்டிஷன் மூன்று ஆண்டுகள் படிப்பை சரியாக 3 ஆண்டுகளில் எல்லா பாடங்களிலும் பாஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்ன மதிப்பெண்கள் எடுத்தாலும் இரண்டாம் வகுப்புதான். ஆகவே எனது முதல் வகுப்பு கனவுகள் கானல் நீராயின. ரொம்பவும் நொந்துப் போன நிலையில் இருந்தேன். அடுத்த பரீட்சை நவம்பர் மாதம்தான்.
அப்போதுதான் என் தந்தை என்னிடம் கூறினார், "பரவாயில்லை, இதற்காக ரொம்ப வருத்தப்படாதே. என்னிடம் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் க்ளாஸ் ஆரம்பிக்கப் போவதாக அங்கிருந்து கையேடு வந்திருக்கிறது. சும்மா வீட்டில் டிப்ரஸ்டாக உட்கார்ந்திருப்பதை விட பேசாமல் ஜெர்மன் க்ளாஸில் சேர்வதுதானே" என்று கேட்டார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் உங்களுக்கு தெரியுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆம் நாட்டாமை அவர்களே. "தேசிகன் என்னும் மாமனிதர்" என்ற பதிவில் இதை குறிப்பிட்டுள்ளேன். தேசிகன் என்பவர் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நிர்வாக அதிகாரியாக அக்காலக் கட்டத்தில் இருந்தவர். அந்தப் பதிவும் மீள்பதிவுக்காகக் காத்திருக்கிறது.
பொறியியல் தேர்வில் பாஸ் செய்திருந்தால் மின் வாரியத்தில் ஜூனியர் இஞ்சினியராகச் சேர்ந்திருப்பேன். அவ்வருடம் பாஸ் செய்து அப்ளை செய்பவர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்தது. பம்பாய்க்கோ, பிறகு தில்லிக்கோ சென்றிருக்க மாட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் S.E. ஆக ஓய்வு பெற்றிருப்பேன்.
ஆனால் இப்போது செயலுடன் இருக்கும் வரை கைவசம் வேலை, சம்பாதிப்பது பல மடங்கு தொகை. ஜெர்மன் மொழியில் பெற்ற வெற்றிகள் மற்றும் பரிசுகள் வாழ்க்கையில் எனக்கு ஊக்கம் அளித்தன.
வாழ்க்கை அற்புதமயமானது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெங்கடேஷ் ஷர்மா அவர்களே,
1969-ஆம் வருடம் பவுன் விலை 120 ரூபாய் அளவில் இருந்தது. அந்த காலத்து விலைவாசிகளைப் போல ஐம்பது மடங்கு இக்கால விலைவாசிகள். அப்படியானால் 12 ரூபாய் ஃபீஸ் 600 ரூபாய்க்கு சமம். ஆனால் இப்போதைய ஃபீஸ் மாதம் 2000-க்கு குறையாது என்றுதான் கேள்விப்படுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல யோசனை நாட்டாமை அவர்களே. பரிசீலிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஊக்கமளிக்கும் பதிவு..
( நானும் பிரெஞ்ச் படிச்சேன்.. இப்ப மறந்துபோச்சு எல்லாமே.. Une promenade dan la foret தவிர.:) )
Post a Comment