4/20/2006

வாடிகையாளரை அணுகும் முறைகள் - 10

இது ஒரு மீள்பதிவு. புது தமிழ்மணத்தில் பழையப் பதிவுகளை அப்படியே இற்றைப்படுத்த இயலாததால் அவ்வப்போது நான் முக்கியம் எனக் கருதும் பதிவுகளை மீள் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் நான் தற்சமயம் ஒரு குறுக்கு வழியை பாவித்திருக்கிறேன். வாடிக்கையாளர்களை அணுகும் பதிவுகள் போட்டது பத்து. அதில் இந்த பத்தாம் பதிவில் முந்தைய ஒன்பதின் சுட்டிகள் வந்து விட்டதால் இதை மட்டும் இற்றைப்படுத்தினால் போதும்.

பத்தாம் பதிவு
வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் இப்போது விரிவாகப் பேசுவேன்.

இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. இந்தப் பணம் வந்துதான் உலை கொதிக்க வேண்டும் என்ற நிலையும் வந்தாயிற்று. பிறகு வர வேண்டிய தொகைகளை வசூலிப்பதில் என்ன தயக்கம்? இருந்தாலும் பலருக்கு இதில்தான் பிரச்சினை. வேலையை சூரத்தனமாக முடித்து விடுவார்கள். பில்லையும் அனுப்பி விடுவார்கள். பிறகு வசூல் செய்ய வாடிக்கையாளரிடம் தொங்க வேண்டிய நிலை.

அவ்வாறு இல்லாது கறாராக வசூல் செய்தால்தான் பிழைக்க முடியும்.

முதல் விதி: புதிய வாடிக்கையாளராக இருந்தால் முதலில் முன்பணம் பெற முயற்சிக்க வேண்டும். சில வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அளவில் வேலை வைத்திருப்பதாக புருடா விட்டு ரேட்டை குறைக்க முயற்சி செய்வதைப் பற்றி ஏற்கனவே என் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இப்போது குறிப்பிடும் வாடிக்கையாளர்கள் நிஜமாகவே பெரிய அளவில் வேலை வைத்திருப்பவர்கள். இதற்கு நான் கொடுக்கும் உதாரணம் தில்லியருகில் காஸியாபாத்தில் இருக்கும் ஸ்ரீராம் பிஸ்டன்ஸ். அவர்களிடம் நான் தினசரி வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. 8 மணி நேரம் கொண்ட ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் என்று பேச்சு. இங்கு நான் என்ன செய்தேன் என்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை பில் கொடுத்து விடுவேன். அதுவே ஒரு கணிசமான தொகை. பிறகு தொடர்ந்து வேலை செய்வேன். அவ்வப்போது இன்டெர்காம் வழியாக சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகள் தலைவர்களுடன் பேசி பில்லை நகர்த்துவேன். இதற்குள் இன்னொரு 10 நாட்கள் கடந்திருக்கும். இன்னொரு பில். அதே மாதிரி செயல் முறைகள். செக்குகளை நேரடியாகவே பெற்று விடுவேன். அதிலும் தில்லி செக்குகளாகப் பெற வேண்டும். காஸியாபாத் செக்குகளுக்கு வங்கிக் கட்டணங்கள் உண்டு.

இவ்வாறு செய்யும்போது எல்லோருடனும் நல்ல நட்புறவு வைத்து கொள்வது முக்கியம். எல்லோருடனும் சுமுகமாகப் பேச வேண்டும். செக் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இது மிக முக்கியம். காரியம் ஆனதும் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடக்கூடாது. யார் எப்போது முக்கியம் என்று இப்போதே தெரியாது.

சென்னையில் நிறுவனங்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். புது வாடிக்கையாளர் என்றால் நான் ஏற்கனவே கூறியபடி முன்பணம் கேட்டு பெறுவேன். கேட்கும் முறையில் கேட்டால் கிடைக்கும். நிறுவனம் என்றால் மொழிபெயர்ப்பை மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்புவேன். பிறகு பில்லை கூரியர் மூலம் அனுப்புவேன். தனியாராக இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று கொண்டுதான் மின்னஞ்சல் அனுப்புவேன். அதற்கு சம்பந்தப்பட்டவர் என் வீட்டிற்கு வருவர். பணம் கொடுத்ததும் அவர்கள் முன்னாலேயே அவர்களுக்கு இணைப்புடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவேன். பிறகு அவர்கள் என் கணியிலேயே தங்கள் முகவரிக்கு மின்னஞ்சல் வந்து சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்க்கச் செய்வேன். பிறகு என்ன, அவர் தன்னிடத்திற்கு சென்று ப்ரின்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

அவரால் நான் இருக்கும் இடத்துக்கு வர இயலவில்லையா? அதனால் என்ன. என் பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கொள்வேன். பிறகு வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கு சென்று பணம் பெற்றுக் கொண்டதும் அவர் கணினியிலேயே என் மின்னஞ்சலைத் திறந்து இணைப்பாகக் கொடுத்துள்ளக் கோப்பை அவருடைய வன்தகட்டில் இறக்கி விடுவேன்.

மறுபடியும் நிறுவனங்கள் பக்கம் வருவோம். பில்லை கூரியரில் அனுப்பிய பிறகு, அது வந்து சேர்ந்ததா என்பதை தொலைபேசியில் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். எப்போது பணம் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் சுமுகமான தோரணையில் செய்ய வேண்டும். செக் கூரியரில் வந்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தொலைபேசி மூலம் நன்றி கூற வேண்டும்.

அவ்வளவுதான் விஷயம். நான் செயல்படும் கடந்த 30 வருடங்களாக ஓரிரு முறைகள்தான் பணம் வசூல் செய்வதில் பின்னடைவு.

இன்னொரு விஷயம். வருடம் 20,000 ரூபாய்களுக்கு மேல் பில் தொகை சென்றால், வாடிக்கையாளர் எனக்கு தரும் தொகையிலிருந்து வருமானவரி பிடித்தம் செய்யவேண்டும் என்பது சட்டம். அவ்வாறே செய்தும் விடுவார்கள். அதற்கான சான்றிதழ் படிவம் 16-ல் பெற்று, அதையும் நாம் வருமான வரி அதிகாரிகளிடம் நம் ரிடர்ன்ஸுடன் சமர்ப்பிக்க வேண்டும். பிடித்தம் செய்துவிடும் நிறுவனங்கள் சான்றிதழ் கொடுக்க அழும்பு செய்வார்கள். அவர்களிடம் விடாது அதைப் பெற வேண்டியதும் முக்கியம். அப்போது கூட சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும்.

பில் தொகையை கொடுப்பதில் சுணக்கம் காட்டும் வாடிக்கையாளர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் பற்றி இப்போது பார்ப்போமா?

மார்ச் 2001-ல் செய்த வேலைக்கு செக் நவம்பர் 2001-ல் தான் கிடைத்தது. வாடிக்கையாளர் சொன்ன காரணம்: அமெரிக்காவில் 9/11-ல் நடந்த குண்டு வீச்சினால் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வரும் செக்குகள் தாமதமாயினவாம், இது எப்படி இருக்கு? அதே வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நான் போன் செய்து முதலாளியுடன் பேச வேண்டும் எனக் கேட்க, அவர் பாங்குக்குப் போயிருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மனைவி? அவரும் பாங்குக்குத்தான் அவருடன் சென்றிருக்கிறார் எனக் கூறப்பட்டது. அக்கௌண்டன்ட்? பாங்குக்குத்தான். அக்கௌண்ட்ஸ் க்ளர்க்? பாங்குக்கே. பாவம் பாங்க் மானேஜர். இத்தனை பேர் ஒன்றாக வந்தால் அவர் என்ன செய்வார்?

இம்மாதிரி புருடாக்கள் சர்வ சாதாரணம். இதையெல்லாம் மீறித்தான் நாம் குப்பை கொட்ட வேண்டும். என்ன செய்வது? அதுதான் வாழ்க்கை.

இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகிறது. இதுவரை இந்த விஷயத்தில் நான் இப்பதிவையும் சேர்த்து பத்து பதிவுகள் போட்டுள்ளேன். மீதி ஒன்பது பதிவுகளின் சுட்டி மற்றும் ஒவ்வொன்றுக்குமான சுருக்கமும் முதல் பகுதியில் கொடுக்கப்பட்டது. அவற்றில் கொடுக்கப்பட்ட வரிசை எண்கள் சுமாராக மற்றப் பகுதி எண்களுடன் ஒரு எண் வித்தியாசத்தில் ஒத்துப் போகின்றன. அவை இதோ:

1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.

2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் அன்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பதுத தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்றுக கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.

3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.

4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொருப் பதிவில் கூறுவேன்.

5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன. அவை பற்றிப் பிறகு.

7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.

8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.

மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்துக் கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை.

இஃது எத்தனை பகுதிகளாக வரும் என்பதோ, விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக வருமோ அல்லது விட்டு விட்டு வருமோ என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. சோ, சுஜாதா, பெரியார், பார்ப்பனீயம், இஸ்ரேல், ஹைப்பர் லிங்குகள் ஆகியவையுங்கூட நடுவில் தேவைக்கேற்ப வரலாம் என்பதையும் கூறி விடுகிறேன்.

அதே போல வரவும் செய்தன என்று நான் இப்பதிவை இற்றைபடுத்தும்போது கூறுகிறேன்.


பகுதி - 9
பகுதி - 8
பகுதி - 7
பகுதி - 6
பகுதி - 5
பகுதி - 4
பகுதி - 3
பகுதி - 2
பகுதி - 1

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

பழூர் கார்த்தி said...

அருமையான, உபயோகமான பதிவு டோண்டு ஐயா. நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகளின் மூலம் முந்தைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். உங்களின் முப்பது ஆண்டு அனுபவங்கள் இப்பதிவுகளின் மூலம் வெளிவருவது நன்று.

வாழ்த்துக்கள் !

dondu(#11168674346665545885) said...

நன்றி சோம்பேறி பையன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கூத்தாடி said...

சூப்பர் ,வேலை மட்டுமே செய்து கொண்டும், செய்த வேலைக்கு காசு கேட்க கூட கூச்சப்படுவேன்.உங்கள் பதிவு எனக்கு உதவும் என்று எண்ணுகிறேன்.
நன்றி

dondu(#11168674346665545885) said...

கூத்தாடி அவர்களே, நாம் எதைச் சரியாகச் செய்யவில்லை எனொஅதை புரிந்து கொள்வது முதல் படியே. பிறகு அதை சரியாகச் செய்ய முயற்சிக்கலாம். அவ்வாறே செய்யுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

test

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

சொந்தத் தொழில் என்றாலும் துட்டு வசூல் செய்ய சாமர்த்தியம் வேண்டும் என்று விளக்கியதற்க்கு நன்றி.

dondu(#11168674346665545885) said...

இல்லாவிட்டால் சங்குதான் சிவா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலசந்தர் கணேசன். said...

பதிவு மிக அருமை. பின்னூட்டங்கள் மிக மிக அருமை.

இல்லாவிட்டால் சங்குதான் சிவா அவர்களே

ஆனால் இந்த வரி எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி பாலசந்தர் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தினகர் அவர்களே,

நீங்கள் கூறுவதை பற்றி படித்துள்ளேன். அதிகம் தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மா.சிவகுமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://masivakumar.blogspot.com/2006/06/blog-post_21.html#comments

சொந்தத் தொழில் ஆரம்பிப்பது என்பது ஒரு சவாலான வேலைதான். நானும் அதை செய்தவன் என்ற முறையில் உங்களது இப்பதிவை நான் சுவாரசியமாகப் படித்தேன். எடுத்த காரியத்திலேயே கண்ணாக இருப்பது முக்கியம்.

உங்களது மற்றப் பதிவுகளையும் பார்த்ததில் ஒன்று கூறுவேன்.

சிக்கனமாக இருந்து அனாவசியமான செலவுகளை குறைக்கிறீர்கள் என்பதெல்லாம் சரிதான். இருப்பினும் ஓரளவுக்கு மேல் பல அவசியமான செலவுகளைத் தவிர்ப்பதும் சில சமயம் நடந்து விடுகிறது. முக்கியமாக நீங்கள் எல்லா இடங்களுக்கும் மடிக்கணினி மற்றும் முக்கியமான கோப்புகள், சி.டி.க்கள் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு பஸ்சில் செல்கிறீர்கள். இது எவ்வளவு ஆபத்தான விஷயம் தெரியுமா?

அதை விடுங்கள், இம்மாதிரி வியர்த்து விறுவிறுத்து வாடிக்கையாளர் இடத்துக்குப் போனால் உங்கள் மேல் அவருக்கு என்ன அபிப்பிராயம் வரும் என நினைக்கிறீர்கள்?

அதற்காக கார் எல்லாம் வாங்க முடியாது என்று நீங்கள் கூறலாம். தேவையேயில்லை. இப்போது டூரிஸ்ட் டாக்சிகள் பல வந்து விட்டன. 30 கிலோமீட்டர், 5 மணி என்ற கணக்கில் அவை வருகின்றன. அதற்கு இப்போதைய மார்க்கெட் விலை 350 ரூபாய் மட்டுமே. அதிகம் ஆகும் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் ஐந்து ரூபாய், ஒவ்வொரு மணிக்கும் 40 ரூபாய் அவ்வளவுதான். இதற்கான பணத்தை உங்கள் வாடிக்கையாளர் பில்லில் நேரடியாக அல்லது மறைமுகமாக சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். மேலும் இந்த வகை செலவினங்களை உங்கள் வருட வருமானத்திலிருந்து கழித்தால், வரியும் மிச்சமாகும். உதாரணத்துக்கு நீங்கள் 10,000 ரூபாய் செலவழித்தால் அந்த அளவு வருமானத்துக்கான வரி 2500 ரூபாய் (நீங்கள் டாப் பிராக்கெட்டில் இருப்பீர்கள் என்ற அனுமானம்) மிச்சம். வேறு வகையில் கூற வேண்டுமானால், 7500 ரூபாய் கொடுத்து 10,000 ரூபாய்க்கான சேவை பெறுகிறீர்கள். அந்த 7500 ரூபாயும் நீங்கள் செலவழிக்கப் போவதில்லை.

"வாடிக்கையாளரை அணுகும் முறைகள்" என்ற தலைப்பில் பத்து பதிவுகள் போட்டுள்ளேன். பத்தாவதற்கான சுட்டி இதோ: http://dondu.blogspot.com/2006/04/10.html

அதிலேயே அதற்கு முந்தைய 9 பதிவுகளுக்கான சுட்டிகள் உண்டு. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவன்தான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்டப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/10.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

K said...

திரு. டோண்டு அவர்களே, உங்கள் வலைப்பதிவை சில மாதங்களாக வாசித்து வருகிறேன். பொதுவாக அவ்வப்போது எழுதப்படும் பதிவுகளை மட்டுமே படிக்கும் பழக்கமுள்ளவன் நான். "வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள்" என்ற தலைப்பின் வசீகரத்தால் இந்தத் தொகுப்பைப் படித்தபின் உங்கள் மேல் மிகுந்த மரியாதை வருகிறது. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். என்னைப் போன்ற இளையவர்களுக்கு சுவாரசியமாக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் இருக்கும். மிக்க நன்றி. - காளிதாசன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது