8/10/2006

ராஜாஜி என்னும் மாமனிதர் - 2

தற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா?

இப்போது மிகத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ராஜாஜி அவர்களின் கல்வித் திட்டத்தைப் பற்றிப் பேசுவேன். 1953 ஆம் வருடம் சென்னை மாகாணத்தின் நிலையைப் பார்ப்போம்:

குழந்தைகள் இரண்டு வேளையும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த முறை அமுலில் இருந்தது. பல ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கே வர இயலாத நிலை. நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. 40 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தனர். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.

அப்போது ராஜாஜி அவர்கள் முன்னிறுத்திய ஆரம்பக் கல்வி வெறும் ஏட்டளளவில் நிற்காமல் தொழில் சார்ந்ததாயிற்று. இரண்டு வேளைகளும் பள்ளி இருந்ததால், பல ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையே தவிர்த்தனர். ஏனெனில் தங்கள் தொழில்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். மேலும் இரு வேளையும் வகுப்புக்கு வர வேண்டிய நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு மட்டும் கல்வி தர முடிந்தது.

ராஜாஜி அவர்களின் திட்டம் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே வீச்சில் தீர்வு கண்டது. அதாவது, மாணவர்கள் தினம் மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்புக்கு வர வேண்டியது. அந்த தினசரி அவகாசத்தில் பெறும் கல்வி அவர்களுக்கு முழுப்பரீட்சை எழுதும் அளவுக்கு பாடம் கற்பிக்கப் போதுமானதாக இருந்தது. காலையில் ஒரு பேட்ச் வகுப்புக்கு வர வேண்டியது, மாலையில் இன்னொரு பேட்ச். இதனால் 100 பேருக்கு பதில் 200 பேருக்கு ஒரு பள்ளியில் கல்வி அளிக்க முடிந்தது. அதே கட்டிடம், அதே மற்ற வசதிகள். ஆனால் பலன் இரு மடங்குப் பேருக்கு. பிள்ளைகள் வகுப்புக்குச் செல்லாத நேரத்தில் ஏதாவது தொழில் கற்றுக் கொள்ளலாம் என்றுக் திட்டமிடப்பட்டது. பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களிடமே தொழில் கற்றுக் கொள்வதற்காக வைத்திருக்கும் பெற்றோரிடம் தினசரி 3 மணி நேரத்துக்காவது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்பது வலியுறுத்தப் பட்டது. முதலில் ஆரம்ப வகுப்புகளுக்கு மட்டும் இத்திட்டம் அமல் செய்வது என்றும், பிறகு படிபடியாக நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இதை விரிவுபடுத்தலாம் என்றும் திட்டமிடப்பட்டது. கிராமங்களில் கல்வி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே இத்திட்டம் சோதனை முறையில் அங்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப் பட்டது.

என்னத் தொழில் கற்பது? இதில் மாணவர்களது பெற்றோர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அப்போதிருந்த ஆசிரியர்கள் எல்லோரும் மக்காலே முறையில் கல்வி கற்று பேனா பிடிக்கும் வேலைகளுக்கே லாயக்காய் இருந்தனர். ஆதாரக் கல்வி அளிக்கவே பணம் இன்றிக் கஷ்டப்பட்ட அரசு கண்டிப்பாகத் தொழில் கல்வியைப் பள்ளிகளில் அளிக்கும் நிலையில் இல்லை. அதற்கான கட்டிட அல்லது வேறு வசதிகள் இல்லவே இல்லை. ராஜாஜியின் எதிர்ப்பார்ப்பு என்னவென்றால், தன் சுயநலத்துக்காகவாவது ஒரு தகப்பன் தன் மகனுக்க்குத் தான் செய்யும் தொழிலில் சிறந்தப் பயிற்சியே அளிப்பான் என்பதே.

உண்மையை கூறப்போனால் இக்கல்வி இருக்கும் வசதிகளை முடிந்த அளவுக்கு எவ்வளவு பேருக்கு அளிக்க முடியுமோ அத்தனைப் பேருக்கு அளிப்பது என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏற்கனவே கூறியது போல எந்தத் தொழிலைக் கற்பதென்பது பெற்றோர்கள் விருப்பத்துக்கே விடப்பட்டது. தச்சன் மகன் வேறு தொழில் கற்கலாம் அல்லது ஒன்றுமே கற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக யாரும் சம்பந்தப்பட்டக் குழந்தைகளை தண்டிக்கப்போவதில்லை. அத்தொழில்களில் தேர்வும் கிடையாது. அந்தத் தரத்தில் ஒரு பள்ளியால் நிச்சயம் பயிற்சி தந்திருக்க முடியாது.

ஒரு தொழில் கற்றுக் கொண்டால் கைகளுக்கு ஒருங்கிணைந்து வேலை செய்யும் திறன் வரும். மூன்று மணி நேரக் கல்வியே பரீட்சைகளில் தேர்வு பெறப் போதுமானது. ஆகவே மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வு எழுதவோ மேற்படிப்பு படிக்கவோ எந்த விதத் தடையும் இல்லை.

நிறையப் பேருக்குத் தெரியாத இன்னொரு விஷ்யம். 1953 - 54 கல்வியாண்டில் இம்முறை நிஜமாக அமலுக்கு வந்தது. பல ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர் வருகையில் முன்னேற்றத்தைப் பார்த்தனர். கூடிய சீக்கிரம் நகரங்களுக்கும் இம்முறையை விஸ்தரிக்க வேண்டும் என்றக் கோரிக்கையும் எழுந்தது.

21 ஜூன் 1953 கல்கி இதழில் கிண்டி பொறியியல் கல்லூரியின் அப்போதைய முதல்வர் கர்னல் எஸ். பால் கூறியதன் சாரம். இக்கல்விமுறை அவர் மாணவராக இருந்தப்போது யாழ்ப்பாணத்தில் காரை நகரில் செயல்பட்டது. கல்வியின் தரம் அருமை. பால் அவர்கள் சக்கிலிய மற்றும் தச்சுத் தொழிலில்களில் தேர்ச்சி பெற்றார். அது அவர் மேல் படிப்புக்குச் செல்லத் தடையாக இல்லை. சொல்லப் போனால் அவர் தன்னம்பிக்கை அதிகமானது. இவ்வாறு கூறியது பொறியியல் கல்லூரி முதல்வர்.

சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 1953-ல் பள்ளி செல்லும் வயதில் 80 லட்சம் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 70 லட்சம் பேர் கிராமத்தில். கிராமத்துக் குழந்தைகளில் 38.5 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதில்லை.மீதி 32.5 லட்சம் குழந்தைகளில் 10 லட்சம் பேர் மட்டும் கல்வியைத் தொடர்கின்றனர். மற்றவர்கள் படிப்பைப் பாதியில் விடுபவர்கள். ஆக 60 லட்சம் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு எப்படியாவது பகுதி நேர படிப்பையாவதுக் கொடுப்பதே ராஜாஜி அவர்களின் புதுக் கல்வித் திட்டத்தின் நோக்கம்.

எப்படியும் தங்கள் தொழிலில் தங்களுக்கு உதவியாக இருப்பதற்காகக் குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் பெற்றோர்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் சாதகமான மனநிலைக்கு வருவதற்காகவே எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இம்முறையை ராஜாஜி அவர்கள் எங்கிருந்தோ திடீரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது.

கையில் ஒரு தொழில் இருப்பது எவ்வளவு சுயநம்பிக்கைத் தரும் என்பதை உணர நிஜமாகவே ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக் கொண்டால் புரிந்து கொள்ளலாம். ராஜாஜி அவர்கள் கூறிய கல்விமுறை சரியானபடி நிறைவேற்றப் பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைப் பார்ப்போம். மக்காலே கல்வி முறையால் நடந்த விபரீதங்கள் இல்லாமல் போயிருக்கும்.

அவை என்ன? தகப்பன் நெற்றி வேர்வை நிலத்தில் விழப்பாடுபடுவான். பிள்ளை ஏட்டுக் கல்வி படிப்பான். டிகிரியும் வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்? அத்தனைப் பேருக்கும் வெள்ளைக் காலர் வேலைக்கு எங்குப் போவது? படித்த மாணவர்களும் கையில் அழுக்கு ஏறும் தந்தையின் தொழிலைச் செய்யும் மனநிலையில் இல்லை. மகன் பந்தாவாக ஊரைச் சுற்றி வர, தகப்பன் உடல்நிலை பாதிக்கப்படுவதுதான் மிச்சம். ராஜாஜி கூறிய முறையில் தொழிலுக்கு மரியாதை வந்திருக்கும். ஏட்டுப் படிப்பும் படித்ததால் அவர்களை யாரும் சுலபத்தில் ஏமாற்றியிருக்க முடியாது. வேலை கிடைக்கிறதோ இல்லையோ கைவசம் தொழில் இருக்கவே இருக்கிறது. இந்த அருமையானக் கல்வி முறைக்குத்தான் குலக்கல்வி என்றுப் பெயரிட்டு கூக்குரலிட்டனர். பின்னால் வந்தத் தலைவர்கள் அதை அவசரம் அவசரமாகக் கைவிட்டதுதான் பெரிய சோகம்.

ராஜாஜி அவர்கள் உடல்நிலைக் காரணமாக ஏப்ரல் 1954 - ல் ராஜினாமா செய்தார். எல்லோரும் கூறுவது போல கையெழுத்து வேட்டை காரணமாக இல்லை. அது பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

52 comments:

Ganesh said...

Excellent writeup
Looking forward for part 3.
Now that you have given stats and all, lets see how this one goes :)


Knowledge is Power!!
KKNK

-/பெயரிலி. said...

/இக்கல்விமுறை அவர் மாணவராக இருந்தப்போது யாழ்ப்பாணத்தில் காரை நகரில் செயல்பட்டது. /
அப்படியா? இது செய்தி; பால் பற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா? எந்தளவு உண்மை என்று பார்க்க விருப்பம்.

Desikan said...

அன்புள்ள டோண்டு ராகவன்,
என் அப்பா ராஜாஜியிடன் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தார். அவருக்கு ராஜாஜியுடன் கடிதத் தொடர்பு இருந்தது.
இதை வைத்து நான் முன்பு ஒரு சிறுகதை எழுதியுள்ளேன்.
http://desikann.blogspot.com/2004_11_16_desikann_archive.html

ராஜாஜி என்னும் மாமனிதர் - 3, 4, 5... பகுதிகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

உங்களுடைய "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்ற பதிவை படித்தேன். உங்கள் கருத்துகளை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். உண்மையை தைரியமாக கூறியுள்ளீர்கள். உண்மை சுடும் என்ன செய்வது.

dondu(#11168674346665545885) said...

கர்னல் பால் அவர்கள் 1953-ல் கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வராக இருந்தார். இதை நான் ஜூன் 21, 1953 கல்கி இதழில் படித்தேன். இரண்டு முழு நாட்கள் நான் கல்கி காரியாலயத்தில் கழித்தேன் என்பதை ஏற்கனவே குறிப்பிடுள்ளேன். 1952, 1953 மற்றும் 1954-ல் ராஜாஜி அவர்கள் ராஜினாமா ச்நெய்தது வரையிலானக் காலக் கட்டத்தில் வெளியானக் கல்கி இதழ்களை போட்டுப் புரட்டி எடுத்தேன். கர்னல் பால் அவர்களைப் பற்றி அதற்கு மேல் தெரியாது. நான் அக்கல்லுரி மாணவனாக 1963-ல் தான் சேர்ந்தேன். அப்போதுகூட அவரைப் பற்றிக் கேள்விப்படவில்லை. கல்கியில் வந்ததே என்னைப் பொருத்தவரை செய்தியின் நம்பகத்தன்மைக்குப் போதுமானது.
பால் அவர்கள் கூறியபடி அவர் பள்ளியில் வகுப்புகள் காலை பத்திலிருந்து மதியம் ஒரு மணி வரை நடந்தது. அந்த 3 மணிநேரக் கல்வி உயர்தரத்தில் இருந்தது என்றும் தான் தச்சு வேலை மற்றும் சக்கிலிய வேலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறியுள்ளார். தான் பெற்றத் தொழில் பயிற்சி தனக்கு நிறையத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது என்று கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தேசிகன் அவர்களே, உங்கள் கதையைப் படித்துள்ளேன். பின்னூட்டமும் இட்டிருக்கிறேனே?
அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

Dondu Sir,

It is revelation to me about the "kula kalvi" system. I stand corrected about my bad opinions about that system (I have been unlucky to live among the propagandist historians). Like me, the write up will be revelation to many other modern boys also (I hope).

I still have one big antagonistic idea against Sriman Rajaji. I could not digest his one action that has wiped away whatever good actions he and his predecessors have done to Tamilnadu - his part in bringing the DMK into power. Ofcourse he did it to destroy the Congress empire in Tamilnadu, but it has replaced good politicians with worse politicians.

SHIVAS said...

//கையில் ஒரு தொழில் இருப்பது எவ்வளவு சுயநம்பிக்கைத் தரும் என்பதை உணர நிஜமாகவே ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக் கொண்டால் புரிந்து கொள்ளலாம்//
மிகவும் சரி.

dondu(#11168674346665545885) said...

நன்றி ம்யூஸ் அவர்களே. தி.மு.க. வை பதவிக்குக் கொண்டு வர ராஜாஜி அவர்கள் செய்த உதவியைப் பற்றியும் வரும் பதிவுகளில் பேசுவேன். முதல் இரண்டு பதிவுகளில் குறிப்பிடப்பட்டவை நான் ஒரு வாரத்துக்கு முன்னால் கல்கி பத்திரிகை அலுவலகத்திலிருந்து சேகரித்தவையாகும். என்னுடைய ஆறிலிருந்து எட்டு வயது வரை நடந்த நிகழ்ச்சிகள் அவை. சமீபத்தில் 1959 - ல் சுதந்திரா கட்சி நிறுவப்பட்டபோது எனக்கு வயது 13. இனி என் நினைவிலிருந்தே எழுதுவேன். அதற்கு முன்னால் அவர் எழுதிய வியாசர் விருந்து மற்றும் சக்கரவர்த்தித் திருமகனைப் பற்றியும் எழுத வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

i disagree with the views expressed in this post.why should
children learn the occupation of their parents.what sort of social mobility one could expect then.much has been written on this issue.had it been implemented in full it would have been a disaster for tamils.thanks to periyar and others it was shelved.mr.raghavan
presents a false picture.

it is shameful that such a biased post which hides more than it reveals get 23 recommendations.i never expected that bloggers and readers would be so ignorant or naive.

மயிலாடுதுறை சிவா said...

என்னதான் நீங்கள் எழதினாலும் எங்களால் "குல கல்வி" முறையை ஏற்றக் கொள்ளமுடியாது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராசர் எதற்காக அதனை எதிர்த்து போரட வேண்டும்?
"சுய தொழில், கை தொழில் என்பது வேறு, தந்தையின் வேலையை பின்பற்றுவது வேறு"
எனக்கு தெரிந்து பிராமண சாதியை சார்ந்தவர்கள் மட்டும்தான் அதனைப் பற்றி பெருமையாக பேசுவார்கள்.
பெரும்பான்மை மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இதுப் போல பதிவுகள் உங்களின் மனத் திருப்திக்கே, இதனால் சமுதாயத்திற்கு துளி அளவும் பயன் இருக்காது என்பது என் தனிப் பட்ட கருத்து. உங்களின் எழுத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு பயன் படும் படி இருந்தால் மகிழ்ச்சி!!!
நன்றி.
மயிலாடுதுறை சிவா...

Voice on Wings said...

ravi srinivas,

//it is shameful that such a biased post which hides more than it reveals get 23 recommendations.i never expected that bloggers and readers would be so ignorant or naive.//

Let me tell you what you are ignorant of. If you hover your mouse on the stars of the rating system, you'll notice that the current rating for this post is 0/26 i.e. 13 persons have give a (+) and 13 others have given a (-). The folks have given a 50-50 verdict which is natural given the diverse audience here. Even when the total was 23 (i.e. when you observed), the score might've been 3/23 at the max (my guess is more like -1 / 1) which is quite a close verdict. Do you still consider the bloggers 'ignorant and naive'?

dondu(#11168674346665545885) said...

"எனக்கு தெரிந்து பிராமண சாதியை சார்ந்தவர்கள் மட்டும்தான் அதனைப் பற்றி பெருமையாக பேசுவார்கள்."
சாலமன் பாப்பையா பார்ப்பனரா? உங்கள் பதிவில் நீங்கள் எழுதியதைப் பார்த்துத்தான் எனக்கு ராஜாஜி அவர்களைப் பற்றி பதிவு எழுத்ம் எண்ணமே வந்தது. இரண்டு நாள் முன்பு அவருடன் தொலை பேசினேன். அவரைப் பொருத்தவரை அவர் தெளிவாகவே இருந்தார்.

நீங்கள் பைனாக்குலரைத் திருப்பிப் பார்க்கிறீர்கள். 1953 - ல் கிராமத்தில் உள்ளப் பெரும்பான்மை குழந்தைகள் பள்ளிக் கல்வியே இல்லாமல் இருந்தனர். அவர்கள் தங்கள் பெற்றோரால் குலக் கல்வி அளிக்கப்பட்டனர். ராஜாஜி செய்தது என்னவென்றால் அவர்கள் குறைந்தப் பட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது பள்ளிக்கு வரச் சொன்னதுதான். நீங்கள் நினைப்பது போல படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை பாதி நாளைக்குத் தொழில் செய்ய அனுப்பவில்லை. அதைப் புரிந்து கொண்டால் போதும். மேலும் குலக் கல்விதான் பெற வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை. வேறு ஏதாவது தொழில் கூடக் கற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது ஒன்றுமே கற்காதும் விட்டிருக்கலாம். ஏனெனில் தொழில் பயிற்சிக்கு பரீட்சை எதுவும் கிடையாது. அப்போதைய நிதி நிலைமை, இருக்கும் ஆசிரியர்களின் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கும் திறமையின்மை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது. மக்காலே முறையில் கல்வி குமாஸ்தாக்களைத்தான் உருவாக்கும். சொந்தக் காலில் நிற்கும் சக்தி அது கொடுக்காது.

ரவி சிறீனிவாஸ் அவர்களே, தமிழ் புரியாதா உங்களுக்கு? குலக்கல்வொயோ அல்லது வேறு எந்தக் கல்வியோ, குழந்தைகளின் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி பெற பரிந்துரைதான் அளிக்கப்பட்டது. அரசுக்கு அதற்கு மேல் செய்ய சக்தியில்லை. அதுதான் உண்மை. முகத்தில் அறையும் வறுமைக்காலம் அது. சுழற்சி முறையில் இரு மடங்கு குழந்தைகளுக்கு கல்வி அளிக்க நினைத்தத் திட்டம் அது. ஒழுங்காகப் பின்பற்றியிருந்தால் பலர் தொழில் பயிற்சி பெற்றிருக்கலாம். இப்போது மட்டும் என்ன மொபிலிடி வாழ்கிறதாம்? கீரிப்பட்டி தலித்துகள் கிராமத்தில்தானே முடங்கிக் கிடக்கின்றனர்?
அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

//it is shameful that such a biased post which hides more than it reveals get 23 recommendations.i never expected that bloggers and readers would be so ignorant or naive. //

Very correct! YOU are the ONLY KNOWLEDGEABLE, EXPERIENCED and INTELLIGENT person among all the bloggers. But, unfortunately, you are unable to comprehend a basic fact that 26 votes are made up of 13 positive and 13 negative votes.
It will be better if you just give your views on the subject without making monumental judgement on others along with your usual sweeping comments!!!!

enRenRum anbudan
BALA

dondu(#11168674346665545885) said...

5 பதிவுகள் இட்டுள்ளேன். அவற்றின் சுட்டிகள் (இந்த இரண்டாம் பதிவைத் தவிர்த்து) பின்வருமாறு:

முதல் பதிவு: http://dondu.blogspot.com/2005/04/1_25.html
மூன்றாம் பதிவு (இப்பதிவில் ராஜாஜி அவர்களின் கல்வித்திட்டத்தைப் பற்றி பல பின்னூட்டங்கள் வந்துள்ளன): http://dondu.blogspot.com/2005/04/3_28.html
நான்காம் பதிவு: http://dondu.blogspot.com/2005/08/4.html
ஐந்தாம் பதிவு: http://dondu.blogspot.com/2005/08/5.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆலமரம் என்ற பெயரில் பதிவுபோடும் நபருடைய பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://aalamaram.blogspot.com/2006/08/blog-post_11.html

"இதன் உண்மை வரலாறு இன்று 60 அல்லது 70 வயதானவர்களுக்கு அல்லது இது சம்பந்தமான நூல்களை படிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்."
எனக்கு வயது 60 முடிந்து விட்டது. மேலும் ராஜாஜியின் கல்வித் திட்டத்தைப் பற்றி எழுதுவதற்காகவே மெனக்கெட்டு அக்காலக் கட்ட கல்கி பத்திரிகைகளை படித்து விட்டு பதிவு போட்டவன். உங்கள் தகுதிகளைப் பற்றி இப்போது கூறவும்.

"அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்."
நான் எனது பதிவில்; எழுதியதை சரியாகப் பார்க்காமல் உளறினால் என்ன செய்வது? உண்மை நிலைமை என்னவென்றால் அக்காலக் கட்டத்தில் குழந்தைகளை பள்ளிகளுக்கே அனுப்பாமல் முழு நேரமும் குலக்கல்வி தரப்பட்டது. அவர்களிடம் போய் "ஐயா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" எனக் கூறப்பட்டது. அவ்வளவே. அதைப் புரிந்து கொள்ளாது அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ளாதது போல நடிக்கும் நீங்கள்தான் லாரி லாரியாகப் பொய்யை உதிர்க்கிறீர்கள்.

இன்னொரு விஷயம், குலக்கல்வித் திட்டம் என்பது அதன் பெயரே விஷமத்தனமாகக் கொடுக்கப்பட்டது. அதை பிடித்துக் கொண்டு நீங்கள் தொங்குவதுதான் பரிதாபம்.

"அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை!"
என்ன பைத்தியக்காரத்தனமான வாதம்? அப்படியென்றால் 1952-ல் ஏன் எல்லோரும் அவர் காலில் போய் விழுந்தார்களாம்? அவர் இருந்த இரண்டு வருடங்களும் எவ்வளவு நெருக்கடியான ஆண்டுகள் என்பதை அறிவீர்களா?

"அதாவது இராஜாஜியின் அப்பா கிராம முன்சிப் வேலை பார்க்கிறார் என்றால் மகன் இராஜாஜி பள்ளியில் படித்து, சட்டம் பயின்று, ஆங்கிலேய ஆதிக்க அரசின் சென்னை மாகாண பிரதம அமைச்சராகி, இடைக்கால அரசில் பங்கு பெற்று பதவி சுகத்தில் நெளியலாம்."
எப்படி? அன்புமணி அவர்கள் மந்திரியானது போலவா? தயாநிதி மாறன் மந்திரியானது போலவா?

"சிறந்த நிர்வாகி, அறிவுக்கடல் என புகழப்படுகிற இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பை தாங்காது பதவியை இழந்தார் என உண்மையை ஒத்துக்கொண்டால் இழுக்கு என்பதாலா?"
உண்மையான காரணம் அவர் கட்சிக்காரர்கள் யாரையுமே அரசு அலுவலகங்களிலோ, செக்ரட்டேரியட்டிலோ வரவிடவில்லை என்பதே. யாரையுமே சம்பாதிக்க விடவில்லை. அவர் கை சுத்தம் உலகறிந்ததே. அவர் பதவி விலகியதில் அவருக்கு இழுக்கு ஏதும் இல்லை. தமிழ்நாட்டுக்குத்தான் இழப்பு.

இப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய ராஜாஜி பற்றிய மீள்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"செத்து 30 வருடம் ஆகியும் மூதறிஞர் ராஜாஜி பெயருக்கு இப்படி ஒரு சக்தியா?"
அவருடைய சுதந்திரக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளின் பெருமைகளை அறிந்து கடைபிடிக்க நம்மூர் மரமண்டைகளுக்கு அவ்வளவு ஆண்டுகள் ஆயின. அவர் இன்னும் நம் இதயங்களில் உயிருடனேயே இருக்கிறார்.

அன்புடைய,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அந்த மூதேவி கண்டிப்பாகப் படித்திருப்பான் பிடில் காஸ்ட்ரோ அவர்களே. ஏனெனில் என்னுடைய முதன்மை வாசகன் அவன்தானே. எனக்கு யார் பின்னூட்டமிட்டாலும் அவர்களை மிரட்டுவதுதானே அவன் வேலை.

ராஜாஜி அவர்களை நாய் மனிதர் என ஒரு வெத்து வேட்டு பதிவு போடுகிறது. ராஜாஜி அவர்களது உயிர் நண்பர் பெரியாரிடம் அது அவ்வாறு கூறியிருந்தால் அவரிடம் அது செருப்படியே பட்டிருக்கும். விட்டுத் தள்ளௌங்கள் அம்மாதிரி இழிபிறவிகளை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பைதி வே நீங்கள் குறிப்பிட்ட ராஜாஜி அவர்களை பற்றிய எனது அப்பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஸார்,

தங்களின் இந்த கட்டுரையிலிருந்து நான் புரிந்து கொண்டது இது.

உண்மையில் ராஜாஜியின் இந்தத் திட்டம் ஒரு வகையில் குலத் தொழில் ஒழிப்புத் திட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறது.

குலத்தொழிலில் ஈடுபடுவது மேன்மையாக போதிக்கப்பட்டிருக்கக் கூடிய சூழல் இருந்த காலம் அது. அது பீ அள்ளுவதோ, அல்லது கோயிலில் மணியடிப்பதோ பரம்பரை தொழில் என்று செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இது சிலருக்கு லாபகரமானதாகவும், பெரும்பான்மையோருக்கு அவமானத்தைத் தருவதாகவும் இருந்தது. இந்தச் சூழலில் மூதறிஞரின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை அவர்களின் குலத் தொழிலிருந்து விடுபட வைத்திருக்கும். ஏனெனில், உண்மையில் இந்த திட்டம் "குலத்தொழிலில் கட்டாயத்தின் காரணமாய் ஈடுபட்டுவந்தவர்களை பள்ளிக்கு பாதி நாளாவது அனுப்பும் திட்டம்தானே தவிர", "பள்ளியில் இருப்போர்களை குலக்கல்விக்கு கட்டாயப்படுத்தும் சட்டம் இல்லை".

அதாவது இது ப்ரச்சினை எதுவும் தராத ஒருவகை ரிஸர்வேஷன். இந்த வகை ரிஸர்வேஷன் தாழ்த்தப்பட்ட ஸகோதரர்களுக்கு மிக உபயோகமாக இருந்திருக்கும். ஹ்ம்ம்ம்ம்ம்... அவர்கள் முன்னேறுவதை தடுக்கத்தானே பெரும்பாலான உயர்குல மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எப்படி இதை ஆதரிப்பார்கள்?

இருந்த போதிலும், தற்போதைய ரிஸர்வேஷன் மாற்ற முடியாத பலத்தையும், ஏற்றுக்கொள்ளுதலையும் அடைந்துவிட்ட சூழ்நிலையில், சக்ரவர்த்தியாரின் இந்தத் திட்டத்தின் மற்றொரு பகுதி இன்னும் பலனளிக்கக் கூடும்.

உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், கல்வி நிலையங்கள் இந்த கட்டமைப்பு வஸதிகளின் தேவைகளும், எண்ணிக்கைகளும், அதற்கான செலவுகளும் அதிகரிக்குமே என்கிற கவலையில் இருக்கும் போது, ஆச்சாரியாரின் இந்தத் திட்டம் கைகொடுக்கும். அதாவது பேட்ச் பேட்ச்களாக மக்கள் படிக்கலாம், அதே கட்டமைப்பு வசதிகளில். இதனால் பேட்ச் பேட்ச்களாக மாணவர்கள் மட்டுமன்றி, ஆசிரியர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி பலனும் பெறுவர். வேலையில்லா திண்டாட்டமும் ஓரளவு குறையும்.

அதுவுமன்றி, பல பணக்கார நாடுகளில் இருப்பதைவிட நமது கல்வித்தரம் அதிகம். எனவே வெளிநாட்டு மாணவர்களையும் நமது நாட்டில் கல்வி கற்க தூண்டலாம். இந்திய மாணவர்களைவிட கொஞ்சம் அதிகம் அவர்களிடம் வசூலிக்கலாம். அந்த அதிகப்படி பணத்தை இந்திய ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் தர பயன்படுத்தலாம்.

>>> .... எங்கிருந்தோ திடீரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது. <<<<

ஓ, அப்படியானால் இது முழுக்க முழுக்க மூதறிஞரின் திட்டமில்லையா. பேசாமல் ராஜாஜியென்ற பார்ப்பனரின் திட்டமாக இது அறிமுகம் ஆகாமல், இந்த திட்டத்தின் வரைவில் முக்கியமானவராகவிருந்த வேறு ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு அதிகாரியின் பெயரில் வெளியிட்டிருந்தால் இதை மக்கள் பேசாமல் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அப்படி யாரும் இல்லாவிட்டால் ஜாதி பாகுபாடுகள் பற்றி தெளிவான கருத்துக்கள் கொண்டிருந்த நம் மதிப்பிற்குரிய ஸ்ரீமான் அம்பேத்கார் அவர்களின் பெயரில் இதை வெளியிட்டிருக்கலாம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. பெரும்பாலான தாழ்த்தப்பட்ட குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்ட முடியாத சூழலில் இருக்கிறார்கள். இப்போதும் இந்த திட்டம் பலனளிக்கும்.

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஸார்,

>>> ராஜாஜி அவர்களது உயிர் நண்பர் பெரியாரிடம் அது அவ்வாறு கூறியிருந்தால் அவரிடம் அது செருப்படியே பட்டிருக்கும்.<<<<

ஸந்தேகமில்லாமல். ராமஸாமி நாயக்கர் கண்டிப்பாக செருப்பால் அடித்திருப்பார். பின்னே சும்மாவா, நாயக்கரின் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு எழுதிவைத்த சொத்துக்களையெல்லாம் ராமஸாமி நாயக்கருக்கு திருப்பிய செயல் ராஜாஜியின் தயவாலன்றோ நடந்தது? அந்த பணத்தை மூலதனமாக வைத்துக்கொண்டுதானே இப்போது கடவுள் இல்லை (ஹிந்து கடவுள்கள் மட்டும்) என்கிற வியாபாரம் நடந்துவருகிறது?

பி.கு: இந்த காமெண்டை சிறிது காலம் பொறுத்திருந்து பின்னர் போடுங்கள். ப்ரச்னையை திசை திருப்ப விரும்புபவர்கள் இதைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

enRenRum-anbudan.BALA said...

//ராஜாஜி அவர்களை நாய் மனிதர் என ஒரு வெத்து வேட்டு பதிவு போடுகிறது.
//
The person who did this, needs to be condemned by all right thinking people.

personal attacks must be avoided.

நல்லவன் said...

அய்யா!! போதும் நல்ல தலைவர்களை சந்தயில் கொண்டு வந்து விட்டீர்கள்
ஒருவர் தேவரை அசிங்கமாகவும், மற்றொருவர் ராஜாஜியை அசிங்கமாக போடுகிறார்கள் உங்கள் மீதுள்ள ஆத்திரத்தை அவர்கள் மீது காட்டு கிரார்கள். உங்களால் நல்லவர்கள் பேச்சு வாங்கவேண்டாம் பலர் மனது புண் பட வேண்டாம். நாட்டிற்காகா உழைத்த நல்லவர்களைப் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது அவர்களது தியாகமும் இவர்களுக்குத் தெரியாது இந்தியாவின் முதல் கவர்னர்ஜெனரல் இவர் தான் என்றால் அது நமக்குப் பெருமைதான் காந்தியின் சம்பந்தி இவர்தான் என்றாலும் இவர்களுக்குத் தெரியாது இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒன்றுதான் மற்றவற்றை சிந்திக்கத்தெரியாது.

dondu(#11168674346665545885) said...

"ஒருவர் தேவரை அசிங்கமாகவும், மற்றொருவர் ராஜாஜியை அசிங்கமாக போடுகிறார்கள் உங்கள் மீதுள்ள ஆத்திரத்தை அவர்கள் மீது காட்டு கிரார்கள்."
இது என்ன புதுக் கதை? ராஜாஜியை பற்றி நீங்கள் எழுதியது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்? இதில் நான் எங்கு வந்தேன்?

மற்றப்படி சில அரைவேக்காடுகள் ராஜாஜியை குறைத்து எழுவதால் எல்லாம் அவர் புகழுக்கு இழுக்கு வராது. அந்த ராஜரிஷி இவர்கள் அவதூறுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

டோண்டு சார்!

இங்க கூட உங்களை வெச்சிதான் கூத்துக் கட்டிக்கிட்டு இருக்காங்க....

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=2097

dondu(#11168674346665545885) said...

பார்த்தேன் லக்கிலுக் அவர்களே. என்னுடைய தரப்பை எடுத்து எழுதிய திருச்சி 007-க்கு என் நன்றி. என்னை எதிர்த்து அங்கு பதிவு போட்டிருப்பது போலி டோண்டு என்பது வெள்ளிடைமலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"பி.கு: இந்த காமெண்டை சிறிது காலம் பொறுத்திருந்து பின்னர் போடுங்கள். ப்ரச்னையை திசை திருப்ப விரும்புபவர்கள் இதைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துவிடுவார்கள்."
இல்லை இப்போதே போட விரும்புகிறேன். தொலைபேசியில் அதற்கு இசைவு தெரிவித்த உங்களுக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஸார்,

ராஜாஜியை இழிவுபடுத்தியேயாகவேண்டுமென கங்கணம் கட்டியிருப்பவர்கள் வேறொன்றையும் கூறுகின்றனர். அதாவது உண்மையில் ராஜாஜி பல பள்ளிகளை மூடினார் என்பது அது. இது எந்த அளவில் உண்மை?

இது பற்றி தாங்கள் ஏற்கனவே மூதறிஞர் பற்றிய பதிவில் பதிந்திருக்கலாம். அந்த பதிவிற்கான லிங்கை தயவுசெய்து அளிக்கிறீர்களா?

அப்படி அந்த லிங்கில் இதற்கான பதில் இல்லாவிட்டாலும், ஒரு தொடரின் ஒவ்வொரு பதிவின்போதும் அத்தொடர் சார்ந்த அனைத்து பதிவுகளுக்கும் லிங்க் இருந்தால் எம்போன்ற ஸாமான்யர்களுக்கு முழுமையும் படித்துணர முடியும்.

ஜோ/Joe said...

//ராஜாஜி அவர்களது உயிர் நண்பர் பெரியாரிடம் அது அவ்வாறு கூறியிருந்தால் அவரிடம் அது செருப்படியே பட்டிருக்கும்.//

பெரியார் அவர்களின் உயிர் நண்பர் ராஜாஜியிடம் நீங்கள் பெரியாரைப் பற்றி எழுதிய அவதூறுகளை காட்டியிருந்தால் உங்களை செருப்பாலடித்திருப்பாரா டோண்டு சார்!

dondu(#11168674346665545885) said...

"பெரியார் அவர்களின் உயிர் நண்பர் ராஜாஜியிடம் நீங்கள் பெரியாரைப் பற்றி எழுதிய அவதூறுகளை காட்டியிருந்தால் உங்களை செருப்பாலடித்திருப்பாரா டோண்டு சார்!"
பெரியார் அவர்களை நான் நாய் பிறவி என்று ராஜாஜியிடம் கூறியிருந்தால் கண்டிப்பாக அவர் செருப்பால் அடித்திருப்பார். ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. ராஜாஜியை நாய் மனிதர் எனக் கூறியது விடாது கருப்பு அதை அப்படியே ஒத்துக் கொண்டது ஜோவாகிய நீங்களே.

பெரியாரை எங்காவது நான் மரியாதை குறைவாக எழுதினேன் என்று உங்களால் கூறிட இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிறில் அலெக்ஸ் said...

சார்,
ஒரு அடிப்படைக் கேள்வி..

இப்ப குலவழிக் கல்வி இல்லாம நாமெல்லாம் படித்துவந்து இப்ப நல்ல நிலமைலதானே இருக்கிறோம். அப்ப எப்படி குலவழிக்கல்விதான் சிறந்த தீர்வுன்னு சொல்றீங்க?

dondu(#11168674346665545885) said...

"இப்ப குலவழிக் கல்வி இல்லாம நாமெல்லாம் படித்துவந்து இப்ப நல்ல நிலமைலதானே இருக்கிறோம். அப்ப எப்படி குலவழிக்கல்விதான் சிறந்த தீர்வுன்னு சொல்றீங்க?"

முதலில் குலக்கல்வி என்பதே அவதூறான பெயர்.

1953-ன் நிலையில் ராஜாஜி அவ்ர்கள் அளித்தத் திட்டம் சரியான முறை. அரசு வருமானம் அவ்வளவு கீழான நிலையில் இருந்தது. ஓராண்டு அனுசரிக்கப்பட்டு பெருத்த வரவேற்பையும் பெற்றது.

குலக்கல்வியில் மூழ்கடிக்கப்பட்டு, முழுதாக பள்ளி மறுக்கப்பட்ட குழந்தைகளை தினசரி 3 மணி நேரமாவது பள்ளிக்கு வரச் செய்தது அது.

இப்போதும் கூறுகிறேன். கையில் ஏதேனும் ஒரு தொழிலிருந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் இந்த அளவில் இருந்திராது என்றுதான் நான் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அதாவது உண்மையில் ராஜாஜி பல பள்ளிகளை மூடினார் என்பது அது. இது எந்த அளவில் உண்மை?"

எவ்வளவு தேடியும் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. சாலமன் பாப்பையாவையும் கேட்டு விட்டேன் அவருக்கும் தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Krishna (#24094743) said...

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் - ராஜாஜி ஒரு ஜீனியஸ். தங்களின் இந்த சேவை தொடரட்டும். இவ்வாறு தூற்றுபவர்கள் தங்களை 'சோற்றாலடித்த பிண்டங்கள்' என்றும், இன்னும் பல விஷேசமான பட்டங்களால் அழைத்தால் அகமகிழ்ந்து அவரை தலைவர் என கொண்டாடுவர். வலைபதிவில் முதுகெலும்புடன் ராஜாஜியின் உண்மையான தொண்டனாக வலம் வரும் உம் சேவை வளரட்டும்.

dondu(#11168674346665545885) said...

மிகச் சரியான வார்த்தைகள் கிருஷ்ணா அவர்களே. பை தி வே தமிழில் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். நான் ஏற்கனவே கூறியது போல பதிவுகளையும் போட ஆரம்பியுங்கள். உதாரணத்துக்கு உங்கள் பள்ளி நினைவுகளைக் கூற தமிழே ஏற்ற மொழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//எவ்வளவு தேடியும் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. சாலமன் பாப்பையாவையும் கேட்டு விட்டேன் அவருக்கும் தெரியவில்லை//

Era Rathina Giri, Thanthai PeriyarVazhvum Thondum, National Book Trust, New Delhi, 1997, p 70.


The re-entry of Rajaji as chief minister8 without even an election could have derailed Kamaraj's emerging equations with non-Brahmins. The die was cast when Rajaji, flaunting his authority, introduced a vocational educational scheme based on hereditary calling, which met with stiff opposition not only from the Dravida Kazhagam and Dravida Munnetra Kazhagam, but also from a large number of non-Brahmins in the Congress quarters. This educational pattern, aimed at imparting to school children the traditional caste occupation of their parents, came to be condemned by E V! Ramasamy as kula kalvi thittam, devised to perpetuate varnashrama dharma. Rajaji also took the drastic step of closing down nearly 6,000 schools, citing financial constraints.

சாலமன் பாப்பையாவ கேட்டா தெரியாது :)

Unknown said...

The great feature of Kamaraj rule was the ending of the retrogressive educational policies and setting the stage for universal and free schooling. Six thousand schools closed down by Rajagopalachari were revived and 12,000 schools added.The percentage of school going children in the age group between 6 and 11 increased from 45 per cent to 75 per cent within a span of seven years after he became the chief minister.

Chinna Kuthusi Thiyagarajan, 'Ainthanduth Thittangal', p 2.

dondu(#11168674346665545885) said...

"The re-entry of Rajaji as chief minister without even an election.."
அந்த நேரத்தில் ஒரு உப தேர்தல் வைக்கும் அளவுக்கு நேரமும் இல்லை, அப்படியே வைத்திருந்தாலும் ராஜாஜி அவர்கள் வெற்றி பெற்றிருந்திருக்க மாட்டார் என்பதே நிஜம். அதை நான் என் பதிவிலேயே குறிப்பிட்டேன்.

கம்யூனிஸ்டுகளை கட்டுப்படுத்தவே அவர் தேவைப்பட்டார். அவர் இருந்த இரண்டு ஆண்டுகளும் அந்தப் போராட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டன. இந்த அழகில் சென்னை நகரம் ஆந்திரர்களுக்கு போகாமல் வேறு தடுக்க வேண்டியிருந்தது.

பள்ளிகளை மூடியதில் பொருளாதாரக் காரணங்கள் கூறப்பட்டிருக்கலாம். எது எப்படியாயினும் சம்பந்தப்பட்டத் துறை செயலாளர்களின் குறிப்புகள் இல்லாது முதன் மந்திரி தன்னிச்சையாகச் செயல்படும் சாத்தியக் கூறுகள் குறைவே. மற்றப்படி மேல் விவரங்கள் தெரியாத நிலையில் நான் இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

மேலும் இப்பள்ளிகளை முடிய விஷயங்களைக் கூறும் பல குறிப்புகள் போகிற போக்கில் வேறு விஷயங்களைக் கூறும்போது கூறப்பட்டவையே.

சாலமன் பாப்பையா அவர்கள் பெயரை நான் குறிப்பிட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. மூக்கு சுந்தர் அவர்கள் தன்னுடைய பதிவு ஒன்றில் சாலமன் பாப்பையாவை அமெரிக்காவில் சந்தித்துப் பேசியதை பற்றி எழுதியிருந்தார். அதில் சாலமன் பாப்பையா அவர்கள் ராஜாஜி அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டத்தை ஆதரித்து பேசியதாக திகைப்புடன் குறிப்பிட்டிருந்தார்.

உண்மை கூறப்போனால் அந்த விஷயம்தான் என்னை கல்கி ஆஃபீஸுக்கு போக வைத்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஸார்,

திருவின் பதிவில் ஆதாரங்கள் பற்றி நான் கேட்டிருந்த கேள்விக்கு இரண்டு புத்தகங்களை கொடுத்திருந்தார்கள். இரண்டும் பெருந்தகை காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்களே. அந்த இரண்டு புத்தகங்கள் அளிக்கும் ஆதாரங்கள் நம்பகத்தன்மை கொண்டவையா, முழுமையான தகவல்கள் தருகின்றனவா என்று கண்டறிவதே உண்மை எதுவென்று கூறும்.

dondu(#11168674346665545885) said...

மகேந்திரன் அவர்களே,

நீங்கள் கொடுத்த சின்னக் குத்தூசியின் சுட்டி கார்த்திக் ராம்ஸ் ஏற்கனவே கொடுத்திருக்கிறார், ராஜாஜியை பற்றிய எனது மூன்றாம் பதிவில். பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/3_28.html
இருப்பினும் அதற்கான என் பதிலின் ஒரு பகுதியை இங்கு மீண்டும் நகலெடுத்து ஒட்டுகிறேன் (அதில் ஒரு ஸ்பெல்லிங் பிழை மட்டும் திருத்தியுள்ளேன்).
"சுட்டியளித்த கார்திக்ராம்ஸுக்கு முதல் நன்றி. ஆனால் இதில் போகிற போக்கில் ஒரு வரியில் 6000 பள்ளிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் விவரங்கள் இல்லை. ஆகக் கூடி முதல் பார்வையில் இது ராஜாஜி அவர்களைப் பற்றி ஒரு பாதகமான கருத்துக்கு வழி செய்கிறது என்பதை முதலிலேயே கூறிவிடுகிறேன். முழு விவரங்களை என் தரப்பிலிருந்தும் தேடுவேன். நிர்வாகக் கட்டாயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்கள் அறிமுகப்படுத்தியக் கல்வித் திட்டத்தில், இருப்பதை வைத்துக் கொண்டு அதிகக் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதே நோக்கமாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதி விட்டேன். கார்திக் அவர்கள் கொடுத்தச் சுட்டியும் 1997 -ல் எழுதப் பட்டது. சமகால எழுத்துக்கள் (1952 - 54) இன்னும் உபயோகமாக இருந்திருக்கும். இந்தச் சுட்டி காமராஜ் அவர்களை மையப்படுத்தியதால் ராஜாஜி பற்றிய இக்கருத்தின் மேல் விவரங்கள் இருக்காது என்பதும் புரிந்துக் கொள்ளக் கூடியதே.

"டோண்டு தன் பதிவில் ராஜாஜியைப் பற்றி ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்ற்த்தினைத் தருகிறார்." டோண்டு வேறு எப்படித் தருவான் என்று எதிர்ப்பார்த்தீர்கள்? பொதுவாக பத்திரிகைகளில் ராஜாஜி அவர்களைத் தாக்கியே விமரிசனம் வரும்போது நான் செய்வது நாணயத்தின் மறுபக்கத்தை நிலைநிறுத்தும் செயல் ஆகும்.

"காங்கிரஸ் அரசு அமைக்க கையாள்ப்பட்ட தந்திரோபாயங்கள்,தேர்தலை சந்திக்காமல் நியமன உறுப்பினராகியது இவை அவர் பிற அரசியல்வாதிகளைப் போன்றவர் என்பதை நீருபித்தன."

குடியே முழுகிவிடும் அபாயம் வந்த போது ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா? 1952-ல் காங்கிரஸ் இருந்த நிலையில் சாவகாசமாக ராஜாஜி அவர்கள் ஒரு இடைத் தேர்தலை ஏற்படுத்தி அதில் நின்று ஜெயிக்க வேண்டும் என்று கூறுவது ப்ராக்டிகல் இல்லை. தேர்தலில் நின்றிருந்தால் அவரால் ஜெயித்திருக்க முடியாது என்பதும் நிச்சயமே, ஏனெனில் அவர் மற்ற அரசியல்வாதிகளைப் போல தேவையில்லாது பெரிய வாக்குறுதிகள் அளித்ததில்லை. அப்போதையத் தேவை காங்கிரஸைக் காப்பது. ஏனெனில் அது நடந்திராதிருக்கும் பட்சத்தில் விளைவுகள் மிகவும் விரும்பத்தகாததாயிருந்திருக்கும். 1952 - ல் ராஜாஜி தேவைப்பட்டார். இரண்டு வருடங்கள் பணி புரிந்து அப்பால் சென்றார். அவ்வளவுதான். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் சென்னையைத் தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொண்டார். காரியம் முடிந்ததும் போய்க்கொண்டே இருந்தார். இலக்கியத்தில் நாட்டம் கொண்டார். மற்றவர்கள் ஆதரிக்கிறார்களோ இல்லையோ விருப்பு வெறுப்பின்றி தன் கருத்துக்களை வெளியிட்டார். இவரை ராஜரிஷி என்று கூறாது வேறு யாரைக் கூற முடியும்?

" ராஜாஜியை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியாது." மிகவும் உண்மை. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தும். மனிதமனம் என்பது சிக்கலானது.
"பெரியார் இந்தியை திணித்ததை ஆதரித்தது தவறு என்பது என் கருத்து." நான் பெரியாருக்கு எதிராக இச்செய்தியை உபயோகித்தாலும் 1965 - ல் இது காலத்தின் கட்டாயமாக அவருக்குப் பட்டிருக்க வேண்டும் இதை குறித்து மனப் போராட்டத்தையும் சந்தித்திருக்க வேண்டும். பெரியாரை அவரின் வெளிப்படையானப் பேச்சுக்காக மதிக்கும் நான் இத்தருணத்தில் ராஜாஜி அவர்களின் ஆப்த நண்பர் என்பதையும் பதிவு செய்கிறேன். காலத்தை வென்ற இவர்கள் இருவரின் நட்பும் என்னை அசத்துகின்றன. மனிதமனம் என்பது நிஜமாகவே சிக்கலானதுதான்.

விஸ்வாமித்ரா அவர்கள் எழுதுகிறார்: "The only sin Rajaji committed was being born as a Bhramin that too in Tamil Nadu." மிகவும் கசப்பான உண்மை. ஆனால் இதை எப்படி எதிர் கொள்கிறேன் என்பதை "என் வெளிப்படையான எண்ணங்கள்" என்றப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அதில் ஒரு மாற்றமும் இல்லை. இதைப் பற்றி ஒரு தகவல். நான் என் அப்பாவிடம் என் பெயரை கெஸட்டில் ராகவ ஐயங்கார் அல்லது ராகவாச்சாரி என்று மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அவர் கூடாது என்று தடுத்து விட்டார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது சான்றோர் வாக்கல்லவா?"

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது உண்மைதான் ம்யூஸ் அவர்களே. இந்த விஷயத்தில் எழுதப்பட்டவை எல்லாமே தொண்ணூறுகளில் எழுதப்பட்டவையே. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தில் ஏதேனும் வெளியாகியிருந்தால், அவற்றை பார்த்தால் நன்றாக இருக்கும்.

முக்கியமாக சின்னக் குத்தூசியின் சுட்டியைப் பற்றி நான் அளித்த பதிலைப் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//இந்த விஷயத்தில் எழுதப்பட்டவை எல்லாமே தொண்ணூறுகளில் எழுதப்பட்டவையே. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தில் ஏதேனும் வெளியாகியிருந்தால், அவற்றை பார்த்தால் நன்றாக இருக்கும்.
//

நல்ல வேளையா எதுவும் திருக்குறளுக்கு சுட்டி குடுக்கலை அதோட சமகால எழுத்துக்கு நான் எங்க போறது? :) ஆமா இதே நிலைப்பாடுதான் ராமாயணம் , மகாபாரதம் , கீதை எல்லாத்துக்குமா?

dondu(#11168674346665545885) said...

மகேந்திரன் அவர்களே,

சமகால சுட்டி என்பதற்கு மதிப்பே தனிதான். முந்தைய நாட்களில் நடந்ததை நாம் சுருக்கி தற்காலத்தில் எழுதும்போது சிலவற்றைக் கூறாமல் விட்டு விடும் அபாயம் உண்டு. மேலும் அக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டவைகளை படிக்கும்போது இருந்தது இருந்தது போல அறியும் வாய்ப்புகள் அதிகமே.

இப்போது சுந்தர பாண்டியனின் காலத்தில் மார்க்கோ போலோ எழுதியதை படித்தால் அக்காலத்து வாழ்க்கையை மிகைபடுத்தல் இல்லாது பார்க்கலாம், ஆனால் இதுவும் ஒரு லிமிட்டுக்குள்தான்.

இப்போது ராஜாஜியின் விஷயத்துக்கு வருவோம். பள்ளிகளை மூடியது பற்றிய விவரங்கள் போகிற போக்கில் வேறு விஷயங்களைப் பற்றி எழுதப்பட்டபோது கூறப்பட்டவை. முழு விவரங்கள் கிடைக்காது. இதுவே ஐம்பதுகளில் வந்த பத்திரிகைகளில் எழுதப்பட்ட விவாதங்களை படிக்க முடிந்தால் அதன் மதிப்பே தனி.

அதனால்தான் அது பற்றி அக்காலக் கட்டத்தில் செயலாக இருந்த சாலமன் பாப்பையா, மற்றும் மூத்த ஹிந்து பத்திரிகை நிருபர் ஜி. என். சீனுவாசன் (என் தந்தையின் ஜூனியர்), பத்திரிகையாளர் மலர் மன்னன் ஆகியோரைக் கேட்டேன். அவர்களால் அது பற்றிய விவரம் தர முடியவில்லை.

என்ன நடந்திருக்கும் என்ற என் ஊகத்தைத் தருகிறேன். பல பள்ளிகள் பெயரளவில் மட்டும் இருந்திருக்கும், மாணவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள், அரசு மானியம் மட்டும் சென்று கொண்டிருக்கும். மானியம் என்பது ஒவ்வொரு ஆண்டும் தனி உத்தரவில் வரவேண்டிய விஷயம் ஆதலால் அவ்வாறான பெயரளவு பள்ளிகள் மானியப் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டிருக்கும். இது என் ஊகம் மட்டுமே எனக் கூறி விடுகிறேன்.

மற்றப்படி செயலில் இருக்கும் பள்ளிகளை மூடினால் பெரிய கலவரமே வெடித்திருக்கும். அவ்வாறு ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. இது ஒரு களையெடுக்கும் செயல்பாட்டாகத்தான் இருந்திருக்கும். இப்போது அரசு புதிய பள்ளிகளை திறக்கத் தடையிருக்காது. ராஜாஜி அவர்கள் இதை செய்திராவிட்டால் அடுத்து வந்த முதல்வர் யாருமே இதை செய்திருப்பார்கள். பிறகு பள்ளிகளை திறந்திருப்பார்கள். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

நான் தந்த சுட்டிகளையும் நம்பவில்லை காமராசர் பள்ளிக்கூடம் திறந்தது தொடர்பான பின்னூட்டத்தையும் வெளியிட வில்லை, நீங்கள் சொல்லும் மூத்த பத்திரிகையாளர்களும் உதவவில்லை. இது இப்படி இருக்க உங்கள் ஊகங்களை நான் நம்புவேன் என்று நீங்கள் நம்புகிறீர்களா?. மகாபாரதம் குறித்த என் கேள்வியில் இச் சமகால ஆதாரம் தொடர்பான உங்களின் பதிலையும் எதிர்பார்கிறேன்

dondu(#11168674346665545885) said...

சரியாகப் பாருங்கள் மகேந்திரன் அவர்களே, காமராஜ் அவர்கள் பள்ளிகளைத் திறந்தது சம்பந்தமாக நீங்கள் இட்ட இரு பின்னூட்டங்களையும் வெளியிட்டுள்ளேன். அவற்றுக்கு பதிலும் கொடுத்துள்ளேன்.

மேலும், உங்கள் மூன்றாம் பின்னூட்டத்தில், இரண்டாம் பின்னூட்டத்தை மட்டுறுத்தும் பட்சத்தில் மூன்றாம் பின்னூட்டத்தை மட்டுறுத்த வேண்டாம் என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்களே. ஆகவே அதை வெளியிடவில்லை.

பிளாக்கர் பக்கங்களில் பார்த்ததில் மட்டுறுத்த ஒரு பின்னூட்டமும் தற்சமயம் இல்லை. அப்படி ஏதாவது நீங்கள் பின்னூட்டம் இட்டு வராமல் போயிருந்தால் மறுபடி இடவும். உடனே மட்டுறுத்துகிறேன்.

"இது இப்படி இருக்க உங்கள் ஊகங்களை நான் நம்புவேன் என்று நீங்கள் நம்புகிறீர்களா?."
நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை.

என்னுடைய நிலை இதுதான். ராஜாஜி அவர்கள் கண்டிப்பாக அவர் விரோதிகள் சொல்வது போல ஜாதி வெறியர் அல்ல. அதே போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று குழந்தைகளின் படிப்புடன் விளையாடுபவர் அல்ல.

மகாபாரதம், ராமாயணம் மற்றும் கீதைக்கான ட்ரீட்மெண்டே தனி. அவை நம்பிக்கையை அதாரமாகக் கொண்டவை. நம்பினால் ராமாயணம் அவதாரக் கதை, நம்பாதவற்கு வெறும் கதை. அதேதான் மஹாபாரதத்துக்கும். பலர் கூறுகிறார்கள், கீதை அவ்வளவு பெரியது, கண்ணன் அதை உபதேசிக்கும்போது மற்ற வீரர்கள் யுத்தம் செய்யாது என்ன அவல் மென்று கொண்டிருந்தார்களா என்று. அது பற்றிய பதில் என் மனதில் உண்டு. அவற்றைக் கேட்கும் பொறுமை உங்களிடம் இருக்காது என ஊகிப்பஹ்டால், அதற்கான பதிலை இங்கு அளிக்க விரும்பவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி சந்திரசேகரன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆதி said...

ராஜாஜி கீழ்ப்பாக்கத்திலுள்ள கல்கி அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து போவதுண்டு. மாலையில் அவர் தம்முடைய தியாகராயநகர் பஸ்லுல்லா சாலை வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது சில நாட்களில் அவர் போகும் காரிலேயே சாவியும் போவதுண்டு. அப்போதெல்லாம் ராஜாஜியுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஒரு சமயம் சாவி எழுதிய கட்டுரை ஒன்றைப் பாராட்டி "கிருஷ்ணமூர்த்தி மாதிரியே எழுதறீங்களே!" என்றார் ராஜாஜி. கல்கியை ராஜாஜி கிருஷ்ணாமூர்த்தி என்றுதான் குறிப்பிடுவார்.

அப்போதெல்லாம் கல்கி அவர்களின் எழுத்தில் இருந்த மோகம் காரணமாக அவர் மாதிரியே எழுதிக் கொண்டிருந்தார் சாவி. ராஜாஜியின் பரம பக்தனாகவும் சாவி இருந்தார். அவருடைய செயல்திறமை, புத்தி கூர்மை, பேச்சு, எழுத்து எல்லாவற்றையும் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்து வியப்பார்.

"ராஜாஜியின் இயல்பான நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தாலே வாழ்க்கையில் முன்னேறத் தேவையான பல பாடங்கள் நமக்குத் தானாகவே கிடைத்துவிடும்" என்று சொல்லும் சாவி, அதற்கு ஒரு உதாரணத்தையும் இங்கே விவரிக்கிறார்:

"ராஜாஜிக்கு எதையும் துல்லியமாகச் செய்ய வேண்டும். நாம் எல்லோரும்தான் சாத்துக்குடி பழம் சாப்பிடுகிறோம். ஆனால், அவர் சாப்பிடுவது ஒரு கவிதையாக இருக்கும். சாத்துக்குடியை எடுத்து, சரியாக நடுப்பகுதியில் நகத்தாலோ அல்லது கத்தியாலோ கீறி இரு கிண்ணங்களாகச் செய்து கொள்வார். பிறகு, சுளைகளைப் பந்து போல் பிரித்து எடுத்து வைத்துக் கொள்வார். பின்னர் அந்தச் சுளைகளின் மீது படர்ந்துள்ள தோல்களையும், நார்களையும் கவனமாகப் பிரித்தெடுத்து அந்தக் கிண்ணங்களில் போட்டுக் கொண்டு ஒவ்வொரு சுளையாக எடுத்துச் சாப்பிடும்போது அதிலுள்ள விதைகளை நீக்கி அந்தக் கிண்ணத்தில் வைப்பார். சாப்பிட்டு முடித்ததும் அந்த இரண்டு கிண்ணங்களையும் சேர்த்து பழையபடி ஒரு முழு சாத்துக்குடி வடிவில் கொண்டு வருவார். அப்புறம் தம்முடைய வேட்டியிலிருந்து ஒரு நூலை உருவி அந்தச் சாத்துக்குடியின் மீது பக்கோடா பொட்டலம் சுற்றுவது போல சுற்றி, பந்து போலாக்கி, அதை அப்படியே தமது ஜிப்பா பையில் பத்திரப்படுத்திக் கொள்வார். மாலையில் வீடு திரும்பும்போது ஏதாவது ஒரு குப்பைத்தொட்டி அருகில் காரை நிறுத்தச் சொல்லி, டிரைவரிடம் கொடுத்து அதில் போட்டுவிடச் சொல்வார். இப்படி எதுவானாலும் படு துல்லியமாகச் செய்வதுதான் ராஜாஜியின் வழக்கம்."

கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பல சமயங்களில் ராஜாஜி தனக்கு உணர்த்தியிருப்பதாக சாவி சொல்கிறார்.

கோகலே ஹாலில் ஒரு கூட்டம். அதில் ராஜாஜி பேசுகிறார். கல்கி அவர்களும் அதில் கலந்து கொள்ளச் சம்மதம் கொடுத்திருந்தார். அன்று கல்கியுடன் சாவியும் போயிருந்தார். போகும்போது மாம்பலத்திலுள்ள ராஜாஜியின் வீட்டில் இறங்கி அவரையும் அழைத்துச் செல்வதாகத் திட்டம். கல்கி போன சமயம், ராஜாஜி தமக்கு வந்த கடிதங்களுக்கு எந்தப் பரபரப்புமில்லாமல் சர்வ நிதானமாக பதில் எழுதிக் கொண்டிருந்தார். ராஜாஜியிடம் எப்போதுமே உரிமையோடுதான் பேசுவார் கல்கி. அவர்கள் உறவில் மரியாதை கலந்த தனிப்பாசம் இருக்கும். அன்று கூட்டத்துக்குப் போக சிறிது அவகாசமே இருந்தது. குறித்த நேரத்தில் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை கல்கி அவர்களுக்கு. "கூட்டத்துக்கு நேரமாயிடுத்தே! கடிதங்களை நாளைக்கு எழுதக்கூடாதா? இப்போது என்ன அவசரம்?" என்று ராஜாஜியை அவசரப்படுத்தினார் கல்கி.

ராஜாஜி சொன்னார்:

"கிருஷ்ணமூர்த்தி! நாளைக்கு எழுதினாப் போச்சு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்தக் கடிதத்தை எனக்கு எழுதியவர், இதே விஷயத்தை டெலிபோனில் என்னிடம் பேசியிருந்தால், 'இதுக்கு நாளைக்கு பதில் சொல்கிறேன். இப்போது போனை வையுங்க' என்றா சொல்லியிருப்பேன்? அப்போதே பதில் சொல்லித்தானே அனுப்பி இருப்பேன். போனில் பேசவோ, நேரில் வந்து பேசவோ முடியாததால்தானே கடிதம் எழுதியிருக்கிறார்கள்? லெட்டருக்கு பதில் எழுதறதை மட்டும் நான் ஏன் தள்ளிப் போடணும்?"

எவ்வளவு முக்கியமாக அறிவுரை இது!

இன்னொரு உதாரணம்:

ராஜாஜி அவர்கள் சுதந்திரா கட்சியைத் தொடங்கியிருந்த காலம். கட்சிப் பணி தொடர்பாக கல்கி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவரை பம்பாய்க்கு அனுப்பி முக்கிய தகவல் ஒன்றைத் தெரிந்து வரும்படி சொல்லியிருந்தார். 'போனவுடன் இதுபற்றி விசாரித்து உடனே பதில் தெரியப்படுத்து' என்று ஒரு கட்டளை போல் சொல்லியிருந்தார். ஆனால், பம்பாய்க்குப் போனவரோ மூன்று நாட்களாகியும் எந்தத் தகவலும் அனுப்பவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்தார். வந்தவர் அப்போதும் ராஜாஜியிடம் போன காரியம் என்ன ஆச்சு என்று சொல்லாமல் குளிக்கப் போய்விட்டார். அப்புறம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே ராஜாஜியைப் போய்ப் பார்த்தார். தனக்கு பம்பாய் போனதிலிருந்து வேலை சரியாக இருந்ததென்றும், கடிதம் எழுதக் கூட நேரம் இல்லை என்றும், மழை வேறு இடையூறாக இருந்தது என்றும் கதை அளந்தார். ராஜாஜி அவரிடம் சற்றும் கோபப்படாமல் நிதானமாகக் கேட்டார்:

'ராத்திரி எத்தனை மணிக்கு படுக்கப் போனீங்க?'

'பத்து, பத்தரை, பதினோரு மணி ஆயிடும்.'

"போஸ்ட் கார்டில் நாலு வரி எழுத அஞ்சு நிமிஷம் போதுமே! அதை எழுதி விட்டு 11.05-க்குப் படுக்கப் போய் இருக்கலாமே..."

ராஜாஜியின் இந்த அறிவுரை சாவியின் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.

இன்றும் தமக்கு வரும் கடிதங்களுக்கு முடிந்த வரை அன்றன்றே பதிலெழுத சாவி பழகிக் கொண்டிருப்பது ராஜாஜியின் இந்த அறிவுரையைக் கேட்டுத்தான்.

சூயஸ் கால்வாயில் கட்டப்பட்ட அஸ்வான் அணை பற்றிய பின்னணி விவரங்களைச் சேகரித்து சாவி கல்கியில் 'சூயஸ் கால்வாயின் கதை' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த அணை பற்றிப் பிரச்னை எழுந்திருந்த நேரம் அது.

கல்கி இதழில் அந்தக் கட்டுரை வெளியான அன்று மாலை கோபாலபுரம் 'யங்மென் அசோசியேஷ'னில் ராஜாஜி சூயஸ் கால்வாய் பிரசினை பற்றிப் பேச ஏற்பாடாகி இருந்தது. அந்தக் கூட்டத்துக்கு சாவியும் போயிருந்தார். சாவியின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சில விவரங்களை ராஜாஜி தம் உரையில் பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், மறுநாள் சாவியைப் பார்த்தபோது, "உங்க கட்டுரை எனக்கு ரொம்ப யூஸ்·புல்லா இருந்தது" என்று கூறிய அவரது பெருந்தன்மையைப் பற்றிச் சொல்லிச் சொல்லி சாவி மகிழ்ந்து போகிறார்.

யார் எழுதியது என்பதைப் பார்க்காமல், என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே பார்ப்பது, நல்ல எழுத்துக்களை யார் எழுதியிருந்தாலும் உடனே மனம் திறந்து பாராட்டுவது என்று தாம் கடைபிடித்து வரும் பழக்கத்துக்கு ராஜாஜி அவர்கள் அன்று போட்ட அஸ்திவாரமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சாவி கருதுகிறார்...

ராஜாஜி - காமராஜருக்கிடையே கருத்து வேற்றுமை இருந்த காலம். 'ராஜாஜி வேண்டும்' என்றும், 'வேண்டாம்' என்றும் காங்கிரஸ்காரர்கள் இரு கோஷ்டிகளாகப் பிளவுபட்டிருந்த நேரம். அந்தக் கசப்பு மாறாத நிலையில் காமராஜரைக் கேலி செய்து, 'மாறுவேஷத்தில் மந்திரி' என்ற நகைச்சுவைக் கட்டுரை ஒன்றை சாவி கல்கியில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்த ராஜாஜி சாவியிடம் சொன்னா: "உங்க கட்டுரை படிச்சேன். இப்ப இருக்கிற நிலையில் இதைப் படிக்கிறவங்க மனசில ஏதோ நான்தான் உங்களை இதுமாதிரி எழுதச் சொல்லியிருப்பேன்னு ஒரு தப்பபிப்ராயம் ஏற்படலாம். இனிமேல் காமராஜரைக் கேலி செய்து எழுதாதீங்க."

அரசியல் பண்புக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியுமா?

அரசியல் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தரப்படுவது அறிந்த சாவி தமிழக அரசுக்கு நிலம் கேட்டு விண்ணப்பம் போட்டிருந்தார். திரு. பக்தவத்சலம் உட்பட பல தியாகிகளுக்கு நிலம் வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தமக்கும் நிலம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சாவி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜாஜி அவர்களிடமிருந்து சாவிக்கு ஒரு 'போஸ்ட் கார்ட்' வந்தது.

முதலமைச்சர் ராஜாஜி அவர்கள் தம் கைப்பட எழுதிய கடிதம் அது :

'தியாகத்துக்கு விலை கேட்க வேண்டியது அவசியம்தானா?'

இதுதான் ராஜாஜி எழுதியிருந்த வாசகம்!

அன்று மறந்ததுதான். தியாகி நிலம் பற்றி அப்புறம் எதுவுமே கேட்கவில்லை சாவி.

இவ்வாறு மூதறிஞர் ராஜாஜி அவர்களிடமிருந்து சாவி கற்றுக் கொண்ட வாழ்க்கைக்கு அவசியமான சின்னச் சின்ன விஷயங்கள் ஏராளம்.

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு நன்றி ஆதிசேஷன் அவர்களே.

//அன்று மறந்ததுதான். தியாகி நிலம் பற்றி அப்புறம் எதுவுமே கேட்கவில்லை சாவி.//
இதுதான் ராஜாஜி அவர்களிடம் ஒரு கஷ்டமான விஷயம். பல தியாகிகளுக்கு பென்ஷன் நிஜமாகவே தேவைப்பட்டிருந்திருக்கும். இருப்பினும் இவர் பேச்சைக் கேட்டு பலர் துறந்தனர். இம்மாதிரி கஷ்டம் காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் வந்தது. இந்த இரண்டு சம்பந்திகளும் இதில் ஒரே மாதிரி நிலையெடுத்து நெருங்கியவர்களுக்கு சங்கடம் கொடுத்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஐயன் காளி said...

ஆதிசேடன்,

அப்புறம் தம்முடைய வேட்டியிலிருந்து ஒரு நூலை உருவி

அடிக்கடி சாத்துக்குடி ராஜாஜி வயிற்றுக்குள் சென்றிருந்தால், சென்றிருக்கும் உடுத்திய வேட்டி குப்பை கூடைக்கு :-) !!

யார் எழுதியது என்பதைப் பார்க்காமல், என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே பார்ப்பது, நல்ல எழுத்துக்களை யார் எழுதியிருந்தாலும் உடனே மனம் திறந்து பாராட்டுவது என்று தாம் கடைபிடித்து வரும் பழக்கத்துக்கு


பெரியோர் பெரியோராயினர் பெருமை தரும் பண்பாலே. கெட்டது பெற்றதெல்லாம் பெரியார் என்று சுயபட்டம் சூட்டிய கயவர் நட்பாலே.

பெரியோர் மாண்பு சிறக்கச் செய்யும் டோண்டு, ஆதிசேடன் பணிகள் வாழி !

dondu(#11168674346665545885) said...

//அடிக்கடி சாத்துக்குடி ராஜாஜி வயிற்றுக்குள் சென்றிருந்தால், சென்றிருக்கும் உடுத்திய வேட்டி குப்பை கூடைக்கு :-) !!//
அந்த அபாயம் இருந்திருக்காது. ஏனெனில் ராஜாஜி அவர்கள் மிகக் குறைவாகவே உணவு கொள்வார். ஒரே ஒரு இட்டலியை நான்காக வெட்டி,ஒன்றுக்கு மிளகாய்ப் பொடி, இன்னொன்றுக்கு சட்னி, மூன்றாவதுக்கு சாம்பார் என்ற கணக்கில் சாப்பிடுபவர் அவர். ஆகவே சாத்துக்குடியும் அவ்வாறுதான் உண்டிருப்பார். வேட்டியும் பிழைத்திருக்கும். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

A personal request

‘டோண்டு’ அவர்களுக்கு,
வணக்கம். ‘குலக்கல்வி’ ’தொடர்பாகக் குழுமத்தில் விவாதம் எழுந்தது; ‘அது தொழிற்கல்விக்கான முன்னோடி; நிதி ஆதாரக் குறைபாட்டினாலும், மெகாலே திட்டத்திலுள்ள ஓட்டைகளாலும் ராஜாஜி அவர்கள் குலக்கல்வியை அறிமுகம் செய்தார்’ என்றேன் நான். என் தந்தையார் சேமித்து வைத்திருந்த ‘ஸ்வராஜ்யா’ இதழ்களைக் காணவில்லை. உங்கள் வலைப்பதிவில் பல அரிய தகவல்களைக் காண்கிறேன். அவற்றை அப்படியே படியெடுத்துப் பயன்படுத்தலாமா?
பணிவுடன்,
தேவராஜன்
www.askdevraj.blogspot.com

dondu(#11168674346665545885) said...

//அவற்றை அப்படியே படியெடுத்துப் பயன்படுத்தலாமா?//
தாராளமாக.

எங்கேயிருந்து எடுத்தீர்கள் என்பதை ஹைப்பர் லிங்காகத் தரவும். அதாவது:

http://dondu.blogspot.com/2006/08/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

R.DEVARAJAN said...

ராகவன் ஸார்,

மின் தமிழ்க்குழுமத்தில் ’குலக்கல்வி’ தொடர்பான விவாதம் ஒன்றில் பங்கு பெறும்போது அது தொடர்பான ‘ஸ்வராஜ்யா’ இதழ்கள் கிடைக்கப் பெறாமையால் உங்கள் பதிவின் சில பகுதிகளை எடுத்தாள நேர்ந்தது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிந்து கொள்ள இயலாததால் அனுமதி பெற இயலவில்லை. கல்கி அலுவலகத்திலிருந்தும் உரிய விளக்கம் கிடைத்திலது. ஆகவே தான் உங்கள் பதிவுகளின் ஆதாரத்தில் விடையளித்து இழையை நிறைவு செய்தேன்.

பணிவுடன்,
தேவராஜன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது