நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டதற்கேற்ப இன்று மாலை 6 மணியளவில் லால்பாக் க்ளாஸ் கவுஸில் சந்திப்பதாக தீர்மானம் செய்யப்பட்டது. இன்று காலை சதாப்தியில் புறப்பட்டு 11 மணியளவில் பெங்களூர் வந்து சேர்ந்தேன். வந்தவுடன் செந்தழில் ரவி, ம்யூஸ், கோபி மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோரிடம் டெலிஃபோன் செய்து சந்திப்பை உறுதி செய்து கொண்டேன்.
மாலை 5.30 மணியளவில் அங்கு போய் சேர்ந்தேன். இன்னும் யாரும் வரவில்லை. நான் போன கேட்டிலிருந்து உள்ளே சென்றபோது ஒரு பாறை தென்பட்டது. பலர் அதில் ஏறிக் கொன்டிருந்தனர். அது 10 லட்சம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்பதை இப்போதுதான் ம்யூஸ் அவர்கள் கூறத் தெரிந்து கொண்டேன். அச்சமயம் எனக்கு அது தெரியாது. க்ளாஸ் கவுஸுக்கு போகும் மும்முரத்தில் அதை சரியாக கவனிக்கவில்லை.
மற்றவர்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் இந்த லால் பாக் 1889-ல் அப்போதைய வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் பெங்களூர் வந்ததைக் கொண்டாடும் வகையில் நிர்மாணிக்கப்பட்டது என்பதை ஒரு அறிவிப்பு போர்டிலிருந்து அறிந்து கொண்டேன். பிறகு அது 2004-ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்பதையும் அறிந்தேன்.
முதலில் ம்யூஸ் வந்தார். சற்று நேரம் கழித்து சிவப்பிரகாசம் மற்றும் குமரன் எண்ணம் வந்தனர்.அதன் பிறகு மவுல்ஸ் என்னும் சந்திரமௌலி, கோபி வந்தனர். செந்தழல் ரவி அவர்கள் புகழ் பெற்ற பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் லேட்டாக வந்தார். அவருடன் அவர் நண்பர் மோகன் குமார் என்பவரும் வந்தார். இதற்கு முன்னால் பி.எஸ்.என்.எல்-லில் டிவிஷனல் இஞ்சினியராக இருக்கும் மகாலிங்கம் வந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசினதில் நேரம் போனதே தெரியவில்லை. போட்டோகளும் எடுக்கப்பட்டன. செந்தழல் ரவி, ம்யூஸ் மற்றும் கோபி கேமரா கொண்டு வந்திருந்தனர். அவர்களிடம் போட்டோக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அவை வந்ததும் அவற்றை பதிவிலும் ஏற்றுவேன். என் மைத்துனன் வீட்டு கணினியில் நெருப்பு நரி இருக்கிறது என்று என் மருமான் ஹரீஷ் இப்போதுதான் கூறினான். படத்தை ஏற்ற முடியும் என்று நம்புகிறேன். பார்க்கலாம். எக்ஸ்ப்ளோரர் சாதாரணமாக இந்த விஷயத்தில் சொதப்புகிறது.
சிவப்பிரகாசம் பிர்லா சாஃப்டில் வேலை செய்கிறார். மவுலி சத்யம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார். ம்யூஸ் நெஸ் டெக்னாலஜி கம்பெனியை நடத்துகிறார். தொழில்நுட்ப எழுத்தில் நிபுணர். அவருக்கு நான் தென்னாட்டு வினோத் துவா என்று பெயர் வைத்துள்ளேன். செந்தழல் ரவி எல். ஜி-யில் மென்பொருளில் வேலை செய்கிறார். செல்பேசியில் முழுபடத்தையும் இறக்கிக் கொள்ளலாம் என்று காண்பித்து பிரமிப்பூட்டினார். குமரன் எண்ணம் சிஸ்டம் அனாலிஸ்டாக வேலை செய்கிறார். கோபி ஆரக்கிளில் மென்பொருள் வேலை செய்கிறார்.
பேச்சு பல விஷயங்களைத் தொட்டது. மென் பொருள் தொழில் நுட்பங்கள் பெரிதும் அடிப்பட்டன. இங்கும் போலி டோண்டுவை பற்றி பேச்சு வந்தது. அவன் யார் என்பதை நான் எனக்குத் தெரிந்த அளவில் கூறினேன். அதற்கு பிறகு அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்குத் தாவினோம்.
இதற்கிடையில் மணி 7.30 ஆகிவிட்டது. லால் பாக்கை மூட ஆரம்பித்தனர். அங்கிருந்து பேசிக் கொன்டே வெளியில் ஒரு கோட்டலுக்கு சென்றோம். போண்டா, ரவா இட்லி, மசால் தோசை, வெங்காய ஊத்தப்பம், சாதா தோசை, சாத்துக்குடி ஜூஸ், காப்பி ஆகியவை அவரவர் விருப்பத்திற்கேற்பா ஆர்டர் செய்யப்ப்பட்டன. பில் டட்ச் முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ம்யூஸும் மகாலிங்கம் அவர்களும் என்னை அன்புடன் ஆட்டோ பிடித்து அனுப்பி விட்டு பிறகே தங்கள் வழி சென்றனர். மிக நல்ல சந்திப்பு நடந்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்தேன். ஆட்டோ டிரைவர் செய்த சொதப்பலில் பெங்களூரை சற்று அதிகமாகவே சுற்றிப் பார்க்க முடிந்தது.
நான் எழுதியது முதல் படிவம் மட்டுமே. ம்யூஸ், ரவி ஆகியோர் பின்னூட்டங்கள் வழியே மேலே பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
போட்டோக்களை ஏற்றியிருக்கிறேன். ம்யூஸுக்கு நன்றி. ரவி அவர்கள் எடுத்த போட்டோக்களையும் எதிர்ப்பார்க்கிறேன். இப்போது படங்கள்.
மஹாலிங்கம், டோண்டு, குமரன் எண்ணம் மற்றும் சிவப்பிரகாசம்
ஹாய் கோபி (back to camera),மௌல்ஸ், டோண்டு, மஹாலிங்கம, சிவப்பிரகாசம் மற்றும் குமரன் எண்ணம். (டோண்டுவின் அறுவை தாங்காமல் சற்றே விலகி நிற்கின்றனர்)
ஹாய் கோபி மற்றும் செந்தழல் ரவி
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
10 hours ago
39 comments:
சுவராசியமான பதிவு. அநுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அதிக விவரங்களுக்கு,
amkblr.blogspot.com
அதிக விவரங்களுக்கு வாசியுங்கள் "திரு. GK அவர்களுக்கு ஒரு நற்செய்தி!!!...." என்ற தலைப்பில் உள்ள பதிவினை.
எம்.டி.ஆர் இல் சாப்பிடவில்லையா?
பெங்களூர் ஆட்டோ சொதப்பலா? நான் ஜனவரியில் வந்தபோது அந்த மல்லேஸ்வரம் மஷணை ஆட்டோக்காரர்கள் எங்கு கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்று சொல்ல, நான் ஏறி உட்கார்ந்து, சரி நீ எங்க போறியோ நான் அங்க வரேன், வண்டிய எடுன்னு சண்டைக்கு போனது இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது! பெங்களூரை பார்த்தவுடன் எனக்கு பம்பாய் சொர்க்கமாக தெரிகிறது.
யஷ்வந்தபூரிலிருந்து நான்கரை மணிக்கே கிளம்பிவிட்டதால் லால்பாக் பூங்காவிற்கு ஐந்தரைக்கு வந்து சேர முடிந்தது. பெங்களூர் ஒரு அழகான நகராக இருந்தது என்பதை பறைசாற்றும் ஒரே ஒரு சான்று. நேரடியாக வலைப்பதிவர்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த இடத்திற்குப் போய்விடாமல் இயற்கையின் அழகை ரஸித்துக்கொண்டே வந்தேன். 1759ல் இந்த பூங்காவை அமைத்த மஹாராஜ ராஜாதி ராஜ பூலோக சக்கரவர்த்தி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ண ராஜ உடையார், 1760ல் பெங்களூரை ஒரு ஜாகீராக ஹைதர் அலிக்கு வழங்கியபின்னால் இரண்டு செடிகளை நட்டும், மூன்று மரங்களைப் பிடுங்கிப்போட்டும் இதை பெற்றுக்கொண்டவர் தன்வயப்படுத்தினார். வரலாற்று புத்தகங்களில் அவர்பெயர் (மட்டும்) வருவதற்கும் ஏற்பாடு செய்துகொண்டார். (மைஸூர் ஸமஸ்தானத்தையே தலைவர் அயோக்யத்தனமாய் ஸ்வாஹா செய்தது வேறு கதை).
உள்ளே நுழைந்தவுடன் HMT நிறுவனத்தாரால் நிறுவப்பட்ட மலர் கடிகாரத்தைப் பார்க்கலாம். அது அந்த நிறுவனம்போலவே ஓடாமல் இருக்கிறது. அதற்குப் பின்னால் வாளை தோளில் வைத்துக்கொண்டு கம்பீரமாக குதிரையிலமர்ந்த ஒருவரின் யூரோப்பிய பாணியில் நிறுவப்பட்ட சிலை. ஹைதர் அலியாக இருக்க வாய்ப்பு அதிகம். தாடியில்லாமல் இருக்கிறார். அவர் காலத்தில் வஹாப்பிய தாலிபான்கள் நல்லவேளையாக இல்லை போலும். ஒருவேளை பெங்களூரை நிறுவிய கெம்பே கவுடரோ? பார்த்தால் அவரது சாயலும் இருக்கிறது. ஆனால்,
சிலைக்குக் கீழே பக்கவாட்டிலுள்ள சிற்பங்கள் யூரோப்பிய பாணியில் (ஃப்ரெஞ்ச்?) அமைக்கப்பட்டுள்ளன. இடிக்கிறதே. ஆனால், கெம்பே கவுடர் பெங்களூரின் எல்லைகளை அடையாளப்படுத்த நிறுவிய மண்டபங்களில் ஒன்று இங்கே இருக்கிறது. வள்ளுவம் பின்பற்றும் மக்கள் குன்றேறி அதையும் பார்த்துவிட்டு சுற்றியுள்ள செடிகளின் மறைவில் யானைப்போரைத் தேடுகிறார்கள். அந்த சிறிய குன்று பல லக்ஷம் வருடங்களுக்கு முந்தையது என்று பக்கத்தில் வைத்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் போர்ட் அறிவிக்கிறது. தமிழ் தோன்றி, மண் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியதாக இருக்கும். பள்ளியில் டார்வினை மனனம் செய்த ஞாபகத்தில் இதை உறுதிசெய்ய பக்கத்தில் த்ராவிட அல்லது தமிழ் குரங்கு ஏதேனும் இருக்குமா என்று தேடினேன். இரண்டாக இரண்டாக உட்கார்ந்துகொண்டு முயல் சேட்டை செய்பவர்கள்தான் இருந்தார்கள். அவர்களிடம்போய் கேட்டால்
"ஜோடிதொந்தரவஷ்டகஷ்டக" தோஷம்வரும் என்று கருடபுராணம் படித்துவிட்டு அன்னியன் அல்லது சுஜாதா சொல்லியிருப்பதால் வேறு பக்கம் திரும்பினேன். (தமிழ் இலக்கிய ஞானிகள் பலருக்கு சுஜாதாவே ஒரு அன்னியன்தான்.)
குதிரைவீரர்களின் சிலைகளில், குதிரை ஒரு கால் தூக்கியவாறே இருந்தால், அந்த குதிரையில் உட்கார்ந்திருப்பவர் ஏதேனும் ஒரு போரில் உயிரை விட்டிருப்பவர் என்று பொருளாம். எங்கோ படித்தது. ஒரு வேளை குதிரை காலைத் தூக்கி நின்றாடியதில் பேலன்ஸ் தவறியதால் கீழே விழுந்தும் செத்துப்போயிருக்கலாம். சிதம்பரத்தில் ஒருவரும், மதுரையில் ஒருவரும்தான்
குதிரையை காலைத் தூக்க வைக்காமல், தங்களின் ஒரு காலைத் தூக்கியவாறே நிற்கின்றனர். அவ்வளவு அழுக்கா அந்தத் தரை? மதுரைக்காரர் தன் மனைவியை அப்படியெல்லாம்
நிற்கக்கூடாது என்று சொல்லி கள்ளாட்டை ஆடி கெலித்ததாகவும் சொல்கிறார்கள். நிற்க. குதிரை நான்கு கால்களையும் தரையில் ஊண்றியவாறு இருந்தால் தலைவர் படுக்கையில் ப்ராணனை விட்டவர் என்று பொருள்.
கல் பற்றிய கதை சொன்ன தொல்பொருட்துறை, கல்லாய் இருக்கின்ற (இருந்த?) அந்த குதிரைவாகனாரைப் பற்றியும் ஒரு போர்ட் வைத்திருக்கலாம். (லால்பாக் குதிரைக்காரரின் குதிரை காலை தூக்கியுள்ளதா, இல்லையா என்பதை நேரடியாகப் போய் பார்த்துக்கொள்ளவும்.)
சுற்றிலும் மரங்கள். பரந்து விரிந்திருக்கும் பசுமை பூமியிலும், வானத்திலும். மிக மிக உயரமான மரங்கள் என்னை ப்ரம்மாண்டத்துடன் இணைத்து உயரே, கீழே, நான்கு திஸைகளிலும் பரப்பியது. பதின்ம ப்ராயத்து சிறுவன் ஒருவன்(ர்?) அங்கனம் உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்திலிருந்து உதிர்ந்து விழும் பன்னீர்புஷ்பம்போன்ற மலர்களை அவை ஒவ்வொன்றாக வீழும்போதும் பிடிப்பதற்காக ஒவ்வொருமுறையும் ஓடிக்கொண்டிருந்தது உயிருள்ள கவிதை.
குழந்தைகள் தீடீரென்று கிடைத்துவிட்ட ஸுதந்திரத்தில் கையை விரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். இறுகிய உலகத்தின் முரட்டு எல்லைகளைத் தடவி, இருட்டு மூலைகளின் முள்குத்துப்பெற்ற அவர்களது கைகளால் இயற்கையன்னையின் விரிந்த லாவண்யத்தை விரல்களினிடையே வழிந்தோடும் காற்றில் அனுபவித்து இளித்துக்கொண்டும், கிளுகிளுப்பாய் சிரித்துக்கொண்டும் இருந்தனர். அங்கனம் முன்னாலேயே ஓடி பின்னால் வரும் பெற்றோரை பார்த்தவாறே ஒரு பெண் குழந்தை பெஞ்சில் அமர்ந்திருந்தது. இயற்கை அனுபவத்தில் குழந்தைகள் முன்னாலும், பெரியோர்கள் பின்னாலும்தான் இருக்கிறார்கள். அந்த குழந்தையின் முகத்தில் எதையோ அடைந்துவிட்ட த்ருப்தியும், ஸந்தோஷமும், கிளு கிளுப்பும், கிறக்கமும். குழந்தைகளின் ஆர்கஸ அனுபவம். இயற்கையின் எழிலை ரஸிக்கத் தெரியாத பெற்றோர் உள்ளே வந்தவுடன், குழந்தைகளின் செயல்பாட்டில் தாங்கள் மனிதர்களாக இருந்ததை ஞாபகம் செய்துகொண்டனர். அவர்கள் முகத்திலும் பரவஸம். ப்ரம்மாண்டமாய் படர்ந்துவிரிந்த மரத்தடிகளில் எந்தையும் தாயும் குலவிக்கொண்டிருந்தனர். ஸ்வர்க்கம் பூலோகத்தில்தானிருக்கிறது என்பதை இறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இது தெரியாமல் குழந்தைகளின் சிரிப்பு இல்லாத ஸுவனத்தில் ஏழு கன்னிகளிடமிருந்து கிடைக்கும் காம ஸுகத்திற்காக இப்பூவை நரகமாக்கும் பதர்கள் யாரும் இங்கே தென்படவில்லை. ஒருவேளை புதர்களின் பின்னால் ஸுவனத்திற்குத் தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கலாம்.
அது ஒரு பொட்டானிக்கல் கார்டன் என்பதால் ஒவ்வொரு மரத்திலும் அதனுடைய பெயர் எழுதப்பட்டிருந்தது. ஹிந்து மதங்கள் அரச மரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக அந்த
மரத்திற்கு "ரிலீஜியஸ் இண்டிகா" என்று பெயர். பக்கத்திலிருந்த மரத்தின் பெயர் "பாஸ்டர்ட் ஸெடார்". சிவ சேனக்காரர்களுக்கோ, பஜ்ரங்க்தளத்துக்காரர்களுக்கோ தெரிந்தால் ரிலீஜியஸ் இண்டிக்காவின் புனிதம் பக்கத்தில் இருப்பவரால் குறைந்து போயிற்று என்று கடப்பாரை, நெம்புகோல்களோடு வந்துவிடுவார்கள்.
ஏறத்தாழ 240 ஏக்கர் நிலத்தில் பரந்துள்ள இந்த பசுமைசுகத்தில் ப்ளாக்கர்கள் ஜெயமோகனின் கதைமாந்தர்போல மனம்மயங்கி நிலைதடுமாறிய பாதையில் போய்விடக்கூடாது என்பதற்காக க்ளாஸ் ஹவுஸில் மாலை 6 மணிக்கு சந்திப்பது என்று முடிவாயிருந்தது நல்லதாயிற்று. வழிநெடுக நிறையவே மோகினிப்பிஸாஸுக்கள். கூட இருந்த காந்தர்வர்கள் "காதல் பிசாசே, காதல் பிசாசே" பாடிக்கொண்டிருந்தனர். ப்ரம்மச்சரிய பங்கம் ஆவதற்கு முன்னால் க்ளாஸ் ஹவுஸ் வந்தடைந்தேன். இந்த க்ளாஸ் ஹவுஸையும் க்ருஷ்ண ராஜ உடையார்தான் லண்டனிலுள்ள க்ரிஸ்டல் பேலஸின் தாக்கத்தில் கட்டியதாக ஒரு கதை. இஸ்கானில் இருக்கவேண்டிய சாண்டலியர் சோழர் கோவிலில் தொங்கவிட்டிருந்ததுபோல இந்த கண்ணாடி வீடு மினுக்கிக்கொண்டிருந்தது. உள்ளே சுத்தமாக செடிகள் இல்லை. வருடத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ பாடையலங்காரம்போல பூக்களால் நிரப்புவார்கள். மக்கள்கூட்டம் இயற்கைக்கு அஞ்சலி செலுத்த வந்துவிடும்.
சிறியதாக உள்ள நந்திகள் இந்த க்ளாஸ் ஹவுஸின் படிகளில் ஏறுவோரை பார்த்தவாறே உட்கார்ந்திருந்தன. இவற்றை அலக்ஷியம் செய்து ஏறிவிட்ட மனிதர்களை இவை திரும்பிப் பார்ப்பதே இல்லை. லால்பாக்கின் பல இடங்களில் படிகளும், படிகளின் முனையில் நந்திகளும், யானைகளும் சிறிய உருவத்தோடு மனிதர்களால் வளர்க்கப்பட்ட இயற்கையயும், இயற்கைக்கு திரும்பிவிடும் மனிதர்களையும் பார்த்தவாறே உட்கார்ந்திருக்கின்றன. இவ்வளவு மனித யத்தனத்திற்குப் பின்னாலும், இயற்கையன்னையால் தன்னை அழகுபடுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. எல்லாம் அவள் செயல். மேலேயேறும்போது ஒரு நந்தியின்மேல் லேஸாய் என் கால்பட்டும் எழுந்துவிடாமல் அப்படியே உட்கார்ந்திருந்தது. "ராமர் கால் பட்டால்மட்டும்தான் எழுந்திருப்பாயா?" என்று கேட்டதற்கு, "ராமரின் வரவை இந்த பாரதமே எதிர்பார்த்திருக்கிறது. நானும் காத்திருக்கிறேன். நீ என்ன ராமனா? நாங்களெல்லாம் அவருக்காகத்தான்
காத்திருக்கிறோம்" என்றது. "சீதை எங்கேயிருக்கிறார், தெரியுமா?" என்று கேட்டது. "தெரியாது. எங்கள் வீட்டில் எனக்குத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னபோது, யாருடைய
எதிர்காலத்தையோ எண்ணி ஒரு சோக பெருமூச்சுடன் வாக்கிங்க் போய்க்கொண்டிருந்த கிழங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அயோத்தி ராகவனைப் பற்றி மேலும் பேச்சு கொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, ஆஜானுபாகுவாய் இருகின்ற சென்னை ராகவன் கண்ணில் பட்டுவிட்டார்.
"போன்ஷே மெஸ்ஸியோ" சொல்லுவார் என்று எதிர்பார்த்தால், "ஹல்ல்ல்ல்லோ, ம்யூஸ்" என்று சந்தோஷப்பட்டார். சக ப்ளாக்கரை பார்த்த ஸந்தோஷம் அவரின் கண்களிலும், கன்னக்கதுப்புக்களிலும் தளும்பி, காற்றில் படர்ந்தது. "சமீபத்தில்" என்றவாறே ப்ளாக்கர்கள் உலகில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்பவரை சமீபத்தில் பார்த்தது மிக மிக ஆனந்த அனுபவம்.
அந்த ராகவன் போலவே இந்த ஐயங்காரின் நிறமும். கறுப்பிற்கும் இவருக்கும் விடாது இருக்கும் தொடர்பு ஒரு நகைமுரண். கை குலுக்கியதில் மனம் குலுங்கியது. குல்லுக பட்டராய் அநியாயப்படுத்தப்படுபவரின் உண்மையான பக்கங்களை வெளிப்படுத்துகிற இவர், இனி இந்த சந்திப்பிற்கு வர இருக்கும் சக பதிவர்கள் பற்றியும் ஒரு சுருக்கமான ப்ரீஃபிங் கொடுத்தார். ஆனால், நாங்கள் இருவரும் எதிர்பார்க்காத வகையில் வலைப்பதிவு வாசகர் ஒருவர் வந்தார்.
"மகாலிங்கம்" என்கிற இந்த ப்ளாக்கர்களின் வாசிப்பாளர் பெங்களூரின் ஸ்ரீ ராமபுரத்தில் இருந்து
இதற்காகவே வந்திருக்கிறார். வலைப்பதிபவர்களை மௌனமாக கவனித்தவாறே இருக்கும் கடவுளையும், மனஸாக்ஷியையும் தவிர அவர்களின் வலைப்பதிவை மௌனமாக
கவனித்துவருபவர்கள் பின்னூட்டமிடுபவர்களைவிட அதிகம் போலும். இவரும் ஒரு ரிட்டயர்ட் இன்ஜினியர். இரண்டு ரிட்டயர்ட் இன்ஜினியர்களும் நோட்டுக்களை பரிமாறிக்கொண்டிருந்தபோது, குமரன் எண்ணமும், சிவப்ரகாசமும் வந்தார்கள். பின்னூட்டம் போடும் சிவப்ரகாசத்தின் வரவால் இடம் மேலும் ப்ரகாஸமானது. குமரன் எண்ணம் அவருடைய வலைப்பதிவு போட்டாவில் இருப்பதுபோலத்தான் இருந்தார். அவரது ஃப்ரெஞ்ச் தாடியை பார்த்தபோது பின்நவீனத்துவ பாணியில் வாழைக்காய் அவியலை வோட்காவில் மூழ்கியநாகப்பாம்பு கறியில் செய்வது உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யப்படும் த்ரோகம் என்றெல்லாம் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தால், மனிதர் மிக தயங்கி தயங்கி பேசுகிறார். பின்னாலிருந்து "பே" என்று கத்தினால் என்ன செய்வார் என்று சோதனை செய்யத்தூண்டிய ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். மிக அழகான சிரிப்பு. விரியும் மேலுதட்டின் கீழ் முத்துப் பல்வரிசை கவர்கிறது.
வலைப்பதிவுலக டெண்டுல்கர் உரையாடலிலும் டெண்டுல்கர் என்பதால் பேச்சு விடுகதைகள், லேட்டரல் திங்கிங்க் என்று சுவையாக போய்க்கொண்டிருந்தது. பெரும்பாலான
கேள்விப்பந்துக்களை சிவப்ரகாஸம் வீசிக்கொண்டிருந்தார். சுவையான விஷயங்கள் பேசப்படும்போது சிரிப்பு கைதட்டிக்கொண்டிருந்தோம். உட்காருவதற்கு சரியான இடம் இல்லை என்பதாலும், தள்ளிப்போய் உட்கார்ந்தால் வரவிருக்கின்ற மற்ற ப்ளாக்கர்கள் பெரியாரிஸ்ட்டுக்களிடம் உண்மை போல எங்களையும் தேடவேண்டி வரும் என்பதாலும், நின்றுகொண்டேதான் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று அங்கே வந்த பாம்பே டையிங்க் மாடல் ஒருவர் வாயில் விரலை வைத்து என்னிடம் பேசாமல் இருக்கச் சொன்னார்.
டோண்டு அவர்கள் அருகில் வந்ததும் "உங்களை பின்னால் பார்த்தபோதுகூட என்னால் அடையாளம் காணமுடிகிறது, பார்த்தீர்களா?" என்றார். ராகுல் ட்ராவிடின் ஓப்பனிங்கை கொடுத்த அவர் ஹாய்கோபிதான். இவர் வந்தவுடன் கலகலப்பு கூடியது. ஒரு சிறுவனின் உற்சாகத்துடன் இருந்தார். யுனிக்கோடில் தமிழில் எழுத சுரதா அவர்கள்போல இவரும் உழைக்கிறார். இவர்கள் போன்றவர்களின் உழைப்பால் என் போன்ற சோம்பேறிகள் வெட்டி அரஸியல் பேசி ஜல்லி கொட்டுகிறோம். க்ருபானந்த வாரியாரின் சுவையான பேச்சுக்களை இவரது பதிவில் கேட்டு மகிழ்ந்திருப்பவர் பலர். இவரது யுனிக்கோட் முயற்சிகள் பற்றி ஒரு ஓவர்வ்யூ கொடுத்தார். தமிழ் மணத்தின் முதல் நட்சத்திர எழுத்தாளரும் இவரே.
பேசிக்கொண்டிருக்கும்போது வெள்ளை குர்தாவில், அழகிய தாடியும், படிப்பாளிகளின் அடையாளமான கண்ணாடியுடனும் மௌல்ஸ் வந்தார். ஏதேனும் கவிதைகளை டெலிவரி செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஸத்யம் கம்பனியின் ப்ரோடட்களை மட்டும்தான் இப்போது டெலிவரி செய்கிறாராம். இருந்தபோதிலும், சுருக்கமாக இவர் பேசும் ஹைக்கூ பேச்சுக்கள் "வாவ்", "வாவ்" போடவைக்கின்றன. அடுத்தமுறை ஏதேனும் கவிதை வாசிப்பார் என்று தோன்றியபோது அவர் வீட்டிலிருக்கும் கவிதை கன்னடத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் பெங்களூர் சகவாஸத்தால் பேசுகின்றது என்பது பற்றி தெரியவந்தது.
டோண்டு அவர்கள், மொழி மாற்றம் செய்கின்றபோது கண் ஜெர்மனியை பார்க்கும், மனமானது தமிழில் மொழி பெயர்க்கும், கையோ ஃப்ரெஞ்சில் மொழி பெயர்க்கும் என்றார். உடனே,
மனமானது மொழிகளை எப்படி கையாளுகின்றது என்று பேச்சு திரும்பியது. கோபி மிக தீவிரமாக பேச ஆரம்பித்தார். மனமானது எந்த மொழியிலும் யோசிப்பதில்லை, ஒருவர் பழக்கத்தின் அடிப்படையில் எந்த மொழியில் அதிக அனுபவம் இருக்கிறதோ அந்த மொழியில் "வெளிப்படுத்துகின்றார்" என்று பல்வேறு உதாரணங்கள் காட்டி பேச ஆரம்பித்தார்.
மௌல்ஸ் தன்னுடைய கம்பனிக்குத் தேவையான சில மூல டிஆர்எஃப் கோப்புக்கள் மொழி பெயர்ப்பு தேவைப்படுகின்றன என்றார். அதனால் என்ன, தாராளமாய் மொழிபெயர்த்துவிடுகிறேன் என்றார் டோண்டு. "ஆனால், ரேராகத்தான் இந்த வேலை தேவைப்படும்" என்று மௌல்ஸ் சொல்ல, "அதனால் என்ன? ரேராகவும் நான் செய்து தருகிறேன். அவ்வளவுதானே" என்று ஜோக்கடித்தார். மொழி பெயர்ப்பிற்கு தேவையான வகையில் எழுத்து இருக்க வேண்டும் என்பது பற்றி பேச்சு திரும்பியது. தரமான மொழி பெயர்ப்பாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது என்று டோண்டு வருத்தப்பட்டார். சக-தொழிலாளிகளிடம் தொழில் பற்றி பேச அவருக்கு இருக்கும் ஆதங்கம் தெரிந்தது. மார்க்ஸிடம் சொல்லியிருந்தால், "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், டோண்டு ராகவனுக்காக" என்று மாற்றிச் சொல்லியிருப்பார்.
கோபியின் பதிவுகள் பற்றி பேச்சுவந்தபோது வாரியார் பேசிய மெட்ராஸ் பாஷை, மற்றும் வாரியாரின் அரஸியல் கேலிகள், அதனால் அவருக்கு ஏற்பட்ட ப்ரச்சினைகள் என்று பேச்சு போயிற்று. வாரியாரின் பேச்சுக்கள் எல்லா வகையிலும் ரஸிப்பை ஊட்டுகின்றது. என்னப்பன் முருகன் அருளால் அவருடைய பேச்சுக்களை கோபி போன்றவர்களின் வலைப்பதிவுகள் போடுகின்றன என்றால், வாரியாரின் அருளால் அவரது பேச்சுக்களை கேலி செய்பவருக்கு அந்த பேச்சுக்களே சோறும் போடுகின்றன (நன்றி டோண்டு ஸார்.)
போண்டாவின் இழுப்பை இவ்வளவு நேரம் தாங்கிப்பிடித்ததற்குக் காரணம் செந்தழல் ரவிக்காக நாங்கள் காத்திருந்ததுதான். அவர் வருவதற்கு முன்னால் யாரேனும் அனானி வருவார் என்று காத்திருந்தோம். அனானியாக வந்தவர் காமெண்ட் ஏதும் கொடுக்காததால் அவர் வந்ததே தெரியவில்லை. செல்பேசியபோது பெங்களூர் ட்ராஃபிக்கில் இருப்பதாகவும், உலக பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு என்ன என்று அவர் கண்டுபிடித்தபின்னால்தான் வழிவிடுவேன் என்று காலம் என்னும் வாளை கையில்வைத்துக்கொண்டு ட்ராஃபிக் வேதாளம் மிரட்டுவதும் தெரியவந்தது.
மற்ற வலைப்பதிவர்கள் பற்றியும் பேச்சு வந்தது. குமரண் எண்ணம் "ஜயராமன் ரொம்ப கோபக்காரரோ?" என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜயராமன் அவர்களின் பின்னூட்டங்கள், மற்றும் பதிவுகள் படித்துவிட்டு நான் சிரித்த சிரிப்பைக் கண்டு என் உடன் வேலை பார்ப்பவர்களும், வீட்டிலிருப்போரும் என்னைப்பற்றிய அவர்களுடைய அனுமானத்தை
உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருவேளை, அவருடைய கோபமான பின்னூட்டங்கள் ஏதேனும் படித்துவிட்டு அவர் அப்படி கேட்டிருக்கலாம். அவருடைய நகைச்சுவை உணர்வை
விளக்க டோண்டு அவர்கள் ஜயராமன் ஸார் சொல்லிய ஸ்பூன் ஜோக்கை சொன்னார். மெக்ஸிக்கோ சலவைக்காரி ஜோக்கைவிட நன்றாகவே இருந்தது. (ஜயராமனின் மெயில் ஐடி வேண்டுவோர் எனக்குத் தனியாக பின்னூட்டமிடுங்கள். மெக்ஸிக்கோ சலவைக்காரி ஜோக் எனக்கே தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன். என் முகம் ஒரு கேரக்டருக்கு பொருத்தமாக
இருக்கிறது என்று இப்போதுதான் சத்யராஜ் ஃபோன் போட்டு சொன்னார்.)
ஏழரைக்குமேல் பார்க்கில் இருப்பவர்கள் ஏழரை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் விளக்குக்களை ஏளப்பண்ணிவிடுவார்கள். கிளம்பலாமா, வேண்டாமா என்று
யோசித்துக்கொண்டிருந்தபோது கிழக்கு மூலையில் திடீரென்று செந்தழல் தோன்றியது. எடுக்கவா, கோர்க்கவா என்றெல்லாம் கேட்க வாய்ப்பளிக்காமல் வந்தவுடனேயே இடத்தின் கலகலப்பை
அதிகப்படுத்தினார். அவரது எழுத்துக்கள் போலத்தான் பேச்சும் சுறுசுறுவென்று இருக்கின்றது. கூட்டத்தை இளமை டேக்ஓவர் செய்த உணர்வு. யார் பற்றியும் கவலை இல்லாமல் சடார், சடார்
என்று பேசுகிறார். ஆனால் ரசிக்கும்படியாக இருக்கிறது. கல்லூரியில் நிறைய தோழிகள் கிடைத்திருக்கும். வலைப்பதிவில் இருக்கும் ஃபோட்டாவை பார்த்ததால் சற்று அர்னால்ட் போல்
இருப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். அமீர்கான் போலிருக்கிறார் (என்று நான் இங்கு தமிழில் எழுதுவதால் அமீர்கான் கோபித்துக்கொள்ள மாட்டார்). வலைப்பதிவுலகில் அவருடைய பதிவுகளினால் சூப்பர் ஹிட் கொடுக்கிற இவர் அவருடைய எல்ஜி செல்பேசியிலும் சூப்பர் ஹிட் படங்களை ஓட விட்டுக் காண்பித்தார். எல்ஜியின் மார்க்கெட்டிங்க் டீமில் இல்லை. டெஸ்டிங்க் டீமில்தான் இருக்கிறார். அவருடன் அவருடைய நண்பரான மோகன்குமாரும் வந்திருந்தார். வலைப்பதிவு என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறினார். செந்தழல் ரவிக்குக் கம்பனி கொடுக்கப்போய் மாட்டிக்கொண்டுவிட்டோமோ என்று யோசிப்பதுபோல தோன்றியது. இவ்வளவு யோசிக்கிறவர் வலைப்பதிவிற்கு வரவேண்டும் என்று டோண்டு ஸார் அழைப்பு விடுத்தார். யோசிப்பவர் என்பதால் வலைப்பதிவுலகில் இவர் ஒரு மைனாரிட்டியாகத்தான் இருப்பார் என்கின்ற உண்மையை மறைத்துவிட்டார். கன்வெர்ஷன் என்பதும், தன் குழுவிற்கு ஆள்
சேர்ப்பதும் மதங்களில் மட்டும்தான் நடக்கவேண்டுமா என்ன?
எல்லாரும் போண்டா சாப்பிடக் கிளம்பினோம். வெளியே ஒரே ட்ராஃபிக். வேறு வேறு சத்தங்கள். ஹோட்டலில் ஸர்வரிடம் லௌட்ஸ்பீக்கர் உதவியுடன் எங்கள் ஆர்டரை சொன்னோம்.
கோபி அவருடைய காதலி இவர் வெளியே சாப்பிட்டது தெரிந்தால் வருந்துவார் என்று தயங்கினார். "அதுதான் கல்யாணம் முடிந்துவிட்டதே, பொய் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டாமா?"
என்றெல்லாம் கூறி அங்கேயிருந்த அநுபவஸ்தர்கள் அவரை பாவம் செய்ய வைத்தார்கள். "காபி, டீ குடிப்பதில்லை, பால் மட்டும்தான்" என்று கோபி என்னும் குழந்தைமுகத்தார் சொன்னார்.
ஜூஸ் குடித்தார். எந்த குழுவையும் சாராத தன்னை தேவையில்லாமல் குழுக்களில் சேர்த்து புரளி கிளப்புகிறார்கள் என்று வருத்தப்பட்டார். "எனக்கும் இதே ப்ரச்சினைதான். பேசாமல் நாம்
இருவரும் ஒரு குழுவாகிவிடுவோமா?" என்று கேட்க நினைத்தேன். ஆனால், இரண்டடி தள்ளி உட்கார்ந்திருந்த அவருடைய செல்பேசி எண் எனக்கு அப்போது தெரியவில்லை.
செந்தழல் ரவி தன்னுடைய ஊரின் பெருமைகளைக்கூற ஆரம்பித்தார். சுவையாகவே கதை சொல்லுகிறார். வாமன ரூபமுள்ள விஷ்ணு படுத்திருக்கும்கோலம் அவ்வூரில்தான் உள்ளது என்ற ஆச்சரிய தகவலை சொன்னதால் இனி அவரை ஆச்சார்ய செந்தழல் ரவி என்று யாராவது சொல்லப்போகிறார்கள். பாரியின் பெண்களான அங்கவை, சங்கவையை திருமணம் செய்துகொடுத்த
பின்னால் பாரியின் நண்பரான கவிஞர் கபிலர் பாரியின் மரணத்திற்குத் தானேகாரணம் என்கிற குற்ற உணர்வால் வடக்கிருந்து உயிர்நீத்ததும் அவருடைய ஊர்தான் என்று கூறினார். இதுபற்றி அவரே ஒரு அருமையான பதிவு போடலாம். அவ்வளவு தகவல்கள் சொன்னார்.
(இந்த கபிலரை ஆரியக்கும்பலுக்கு அடித்தளமிட்ட மனுவின் பேரனான, "கடவுளே இல்லை, எல்லாம் இயற்கைதான், வெங்காயம்" என்று சொன்ன பார்ப்பன கபிலரோடு
குழப்பிக்கொள்ளக்கூடாது. இவர் த்ராவிட கபிலர். அவர் ஆரிய கபிலர். த்ராவிட கபிலர் ஏன் ஆரிய பெயரை வைத்துக்கொண்டிருந்தார் என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் பார்ப்பனீயத்தின்
கைக்கூலிகள்.)
வேலூர்காரரான மகாலிங்கம் பெங்களூரின் ஆரம்ப கால வரலாறுகளைச் சொன்னார். பெங்களூரின் ஆரம்பகாலத்திலிருந்த ஹெச்எம்டியின் இரண்டு கம்பனிகள், ஐடிஐ என்னும் தொலைபேசி
கம்பனி, பின்னி மில்ஸ் போன்ற கம்பனிகளில் வேலை பார்க்க வந்தவர்கள்தான் பெங்களூரின் தமிழர்கள் என்ற தகவலைச் சொன்னார். (இது பற்றி எனக்கு வேறு சில தகவல்களும் உண்டு. தனி வலைப்பதிவாகப் போடவேண்டும்.)
சாப்பிட்டுமுடித்து, செல்பேசி-தொலைபேசி எண்களை தாம்பூலத்திற்குப்பதிலாக பரிமாறிக்கொண்டு கிளம்பும்போதும் குமரன் எண்ணம் என் முதுகையும், இடுப்பையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ
கேட்கத் தயங்குகிறார் என்பது தெரிந்தது. கேட்டபோது, "இல்லை, வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் உங்களை வேறுமாதிரி எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நீங்கள்
இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களே" என்றார். நான் வழக்கம்போலத்தான் இருந்தேன். இதுதான் அமைதியாக இருப்பதா என்று நினைத்துக்கொண்டிரும்போதுதான் அவர் ஏன் என் முதுகையும், இடுப்பையும் பார்த்தார் என்பது சட்டென்று தோன்றியது. முதுகில் அரிவாளையும், இடுப்பில் சைக்கிள் செயினையும் தேடியிருக்கிறார்.
"அட ஈவேரா, உம்முடைய பக்தன் என்பதால் என்னை என்னவெல்லாம் நினைத்துவிடுகிறார்கள்?"
மியுஸ், இப்படியும் எழுத முடியுமா?.....கலக்கிட்டிங்க.....
கொஞ்சம் சொல்லி குடுங்க சார்...
MTR கூட்டத்துக்கு எதிர்ப்பு ஜாஸ்தியா இருந்தது பிளமின்கோ
டோண்டு சார், நீங்கள் கால் பதித்ததால் பெங்களூர் பதிவர்கள் ஒன்றுசேர்ந்து உறவாடித் தங்கள் கருத்துப் பதிவுகளில் தடம் பதிக்கும் வண்ணம் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. இது பதிவாக (I mean ) routine நடந்தால் மிக நன்றாயிருக்கும்.
ம்யூஸ் இந்த சந்திப்புக்கு என்னையும் அழைத்தார், மிக முக்கியமான பணி காரணமாக வர முடியவில்லை. வர்ணனைகளைப் படித்த பிறகு அடுத்தமுறை கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ம்யூஸ், இந்தப் பதிவிற்கு நீங்கள் போட்டிருப்பது சாதாரண பின்னூட்டம் அல்ல, உயிரோட்டமுள்ள சொற்சித்திரங்கள்.
லால்பாக் பற்றிய வர்ணனைகளும், நகைச்சுவை இழையோடும் எள்ளல்களும் பிரமாதம். பின்ன்னூட்டத்திலேயே பின்னிட்டீங்க !
பலரும் படித்து இன்புறும் வண்ணம் இதைத் தனிப்பதிவாகவே தரலாம். பிரமாதம் போங்க!
I will be giving my reactio to comments in Tamil tomorrow, as it is quite late to day and I feel tired.
Today I went to Melkottai and Thondanuur. A separate blog post is coming up about it tomorrow.
There was another mini blogger meet with Senthazal Ravi and Kumaran Ennam. More about this tomorrow.
Regards,
Dondu N.Raghavan
டோண்டு ஐயா,
அருமையான தொகுப்பு.
//செந்தழல் ரவி, ம்யூஸ் மற்றும் கோபி கேமரா கொன்டு வந்திருந்தனர். //
ஒரு கேமரா ம்யூஸ் கிட்ட இருந்திச்சி.. இன்னொன்னு எங்க..
இன்னோன்னு தான்ணே அது :-)
ம்யூஸ்,
சந்திப்பை பற்றி கழக்கழா எழுதியிருக்கறீங்க... பேசாம நீங்க நியூஸ் ரிப்போர்டராயிடழாம்.
(வேற ஒன்னுமில்லை.. உங்க 'ஸ' மாதிரி நான் 'ழ' போட்டுப் பாத்தேன். :-P வேணாம்... தண்ணியடிச்சிட்டு பேசற மாதிரி இருக்கு.)
படங்கள் வந்து விட்டன. ம்யூஸுக்கு நன்றி. நாளை சென்னை திரும்பியதும் அவற்றை பதிவில் ஏற்றுகிறேன். மற்றவர்கள் எடுத்தப் படங்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//செந்தழல் ரவி தன்னுடைய ஊரின் பெருமைகளைக்கூற ஆரம்பித்தார். சுவையாகவே கதை சொல்லுகிறார். வாமன ரூபமுள்ள விஷ்ணு படுத்திருக்கும்கோலம் அவ்வூரில்தான் உள்ளது என்ற ஆச்சரிய தகவலை சொன்னதால் இனி அவரை ஆச்சார்ய செந்தழல் ரவி என்று யாராவது சொல்லப்போகிறார்கள்.//
வாமன ரூபமுள்ள விஷ்ணு அல்ல...
திருவரங்கநாதனைவிட பெரிய உருவமுள்ள ஆதிதிருவரங்கத்தைப் பற்றி சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். இல்லை உலகலந்த பெருமாள் கோவிலை பற்றியும் சொல்லியிருக்கலாம்.
மேலும் அந்த ஊர்தான் பொன்னியின் செல்வனில் வரும் மலையமான் (கரிகாலனின் தாத்தா) ஆண்ட ஊர்.
மேலும் மூன்று ஆழ்வார்கள் சந்தித்த ஊரும் அதுவே. அவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் காட்சி அளித்த ஊரும் அதுவே.
சிவனடியார் வேடம் பூண்டு வந்து தன்னை கொன்றவனையும் "அடியார் வேடமிட்டு வந்திருப்பதால் இவர் நம்மவர். இவருக்கு எந்த தீங்கும் வராமல் ஊர் எல்லை வரை கொண்டு விட்டுவாருங்கள்" என்று சொன்ன சைவ மன்னர் "மெய்ப்பொருள் நாயனார்" ஆண்ட ஊரும் அதுவே.
அந்த ஊரின் பெயர் திருக்கோவிலூர், தென்னாற்காடு மாவட்டம் (தற்போது விழுப்புரம் என்று நினைக்கிறேன்)
அங்கே இருக்கும் ஒரு பாறையில் (பஞ்சனாம் பாறை) இருந்து பார்த்தால் திருவண்ணாமலையில் ஏற்றும் தீபம் தெரியும்.
தான் ஒருகைதேர்ந்த எழுத்தாளர் என்பதை ம்யூஸ் மறுபடியும் நிரூபித்து விட்டார். கவித்துவமான அவரது பின்னூட்டங்களை நம்பித்தான் நான் எனது பதிவையே போட்டேன். என்னை அவர் ஏமாற்றவில்லை. அவருடைய பின்னூட்டத்தில் மிக அதிகம் ரசித்தவை:
"இரண்டாக இரண்டாக உட்கார்ந்துகொண்டு முயல் சேட்டை செய்பவர்கள்தான் இருந்தார்கள். அவர்களிடம்போய் கேட்டால்
"ஜோடிதொந்தரவஷ்டகஷ்டக" தோஷம்வரும் என்று கருடபுராணம் படித்துவிட்டு அன்னியன் அல்லது சுஜாதா சொல்லியிருப்பதால் வேறு பக்கம் திரும்பினேன். (தமிழ் இலக்கிய ஞானிகள் பலருக்கு சுஜாதாவே ஒரு அன்னியன்தான்.)"
"குதிரைவீரர்களின் சிலைகளில், குதிரை ஒரு கால் தூக்கியவாறே இருந்தால், அந்த குதிரையில் உட்கார்ந்திருப்பவர் ஏதேனும் ஒரு போரில் உயிரை விட்டிருப்பவர் என்று பொருளாம். எங்கோ படித்தது. ஒரு வேளை குதிரை காலைத் தூக்கி நின்றாடியதில் பேலன்ஸ் தவறியதால் கீழே விழுந்தும் செத்துப்போயிருக்கலாம்." (இரா முருகனை மிகவும் ஞாபகப்படுத்துகிறார்)
"குழந்தைகள் தீடீரென்று கிடைத்துவிட்ட ஸுதந்திரத்தில் கையை விரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். இறுகிய உலகத்தின் முரட்டு எல்லைகளைத் தடவி, இருட்டு மூலைகளின் முள்குத்துப்பெற்ற அவர்களது கைகளால் இயற்கையன்னையின் விரிந்த லாவண்யத்தை விரல்களினிடையே வழிந்தோடும் காற்றில் அனுபவித்து இளித்துக்கொண்டும், கிளுகிளுப்பாய் சிரித்துக்கொண்டும் இருந்தனர். அங்கனம் முன்னாலேயே ஓடி பின்னால் வரும் பெற்றோரை பார்த்தவாறே ஒரு பெண் குழந்தை பெஞ்சில் அமர்ந்திருந்தது. இயற்கை அனுபவத்தில் குழந்தைகள் முன்னாலும், பெரியோர்கள் பின்னாலும்தான் இருக்கிறார்கள். அந்த குழந்தையின் முகத்தில் எதையோ அடைந்துவிட்ட த்ருப்தியும், ஸந்தோஷமும், கிளு கிளுப்பும், கிறக்கமும். குழந்தைகளின் ஆர்கஸ அனுபவம். இயற்கையின் எழிலை ரஸிக்கத் தெரியாத பெற்றோர் உள்ளே வந்தவுடன், குழந்தைகளின் செயல்பாட்டில் தாங்கள் மனிதர்களாக இருந்ததை ஞாபகம் செய்துகொண்டனர். அவர்கள் முகத்திலும் பரவஸம்." (சுஜாதாவை நினைவுபடுத்தும் வரிகள், கூடவே ம்யூஸின் டச்)
"இது தெரியாமல் குழந்தைகளின் சிரிப்பு இல்லாத ஸுவனத்தில் ஏழு கன்னிகளிடமிருந்து கிடைக்கும் காம ஸுகத்திற்காக இப்பூவை நரகமாக்கும் பதர்கள் யாரும் இங்கே தென்படவில்லை. ஒருவேளை புதர்களின் பின்னால் ஸுவனத்திற்குத் தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கலாம்." :)))))
"ஹிந்து மதங்கள் அரச மரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக அந்த
மரத்திற்கு "ரிலீஜியஸ் இண்டிகா" என்று பெயர். பக்கத்திலிருந்த மரத்தின் பெயர் "பாஸ்டர்ட் ஸெடார்". சிவ சேனக்காரர்களுக்கோ, பஜ்ரங்க்தளத்துக்காரர்களுக்கோ தெரிந்தால் ரிலீஜியஸ் இண்டிக்காவின் புனிதம் பக்கத்தில் இருப்பவரால் குறைந்து போயிற்று என்று கடப்பாரை, நெம்புகோல்களோடு வந்துவிடுவார்கள்." :)))))
"குல்லுக பட்டராய் அநியாயப்படுத்தப்படுபவரின் உண்மையான பக்கங்களை வெளிப்படுத்துகிற இவர் ...." சுபர்ப்.
"குமரன் எண்ணம் அவருடைய வலைப்பதிவு போட்டோவில் இருப்பதுபோலத்தான் இருந்தார். அவரது ஃப்ரெஞ்ச் தாடியை பார்த்தபோது பின்நவீனத்துவ பாணியில் வாழைக்காய் அவியலை வோட்காவில் மூழ்கியநாகப்பாம்பு கறியில் செய்வது உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யப்படும் த்ரோகம் என்றெல்லாம் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தால், மனிதர் மிக தயங்கி தயங்கி பேசுகிறார். பின்னாலிருந்து "பே" என்று கத்தினால் என்ன செய்வார் என்று சோதனை செய்யத்தூண்டிய ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். மிக அழகான சிரிப்பு. விரியும் மேலுதட்டின் கீழ் முத்துப் பல்வரிசை கவர்கிறது." (எங்கிருந்து இவ்வாறு வர்ணனைகள் பிடிக்கிறீர்கள், ம்யூஸ்?)
"திடீரென்று அங்கே வந்த பாம்பே டையிங்க் மாடல் ஒருவர் வாயில் விரலை வைத்து என்னிடம் பேசாமல் இருக்கச் சொன்னார்.
டோண்டு அவர்கள் அருகில் வந்ததும் "உங்களை பின்னால் பார்த்தபோதுகூட என்னால் அடையாளம் காணமுடிகிறது, பார்த்தீர்களா?" என்றார். ராகுல் ட்ராவிடின் ஓப்பனிங்கை கொடுத்த அவர் ஹாய்கோபிதான்." (நல்ல என்ட்ரியல்லவா இது)
"பேசிக்கொண்டிருக்கும்போது வெள்ளை குர்தாவில், அழகிய தாடியும், படிப்பாளிகளின் அடையாளமான கண்ணாடியுடனும் மௌல்ஸ் வந்தார். ஏதேனும் கவிதைகளை டெலிவரி செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஸத்யம் கம்பனியின் ப்ரோடட்களை மட்டும்தான் இப்போது டெலிவரி செய்கிறாராம்." (எழுத்தோவியம் இது)
"அவருடைய (ஜயராமன்) நகைச்சுவை உணர்வை
விளக்க டோண்டு அவர்கள் ஜயராமன் ஸார் சொல்லிய ஸ்பூன் ஜோக்கை சொன்னார். மெக்ஸிக்கோ சலவைக்காரி ஜோக்கைவிட நன்றாகவே இருந்தது." (ஜயராமன் அவர்கள் எழுதிய ஜோக்கைப் பார்க்க இங்கு சுட்டவும்) http://letslaf.blogspot.com/
"ஏழரைக்குமேல் பார்க்கில் இருப்பவர்கள் ஏழரை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் விளக்குக்களை ஏளப்பண்ணிவிடுவார்கள். கிளம்பலாமா, வேண்டாமா என்று
யோசித்துக்கொண்டிருந்தபோது கிழக்கு மூலையில் திடீரென்று செந்தழல் தோன்றியது. எடுக்கவா, கோர்க்கவா என்றெல்லாம் கேட்க வாய்ப்பளிக்காமல் வந்தவுடனேயே இடத்தின் கலகலப்பை
அதிகப்படுத்தினார். அவரது எழுத்துக்கள் போலத்தான் பேச்சும் சுறுசுறுவென்று இருக்கின்றது. கூட்டத்தை இளமை டேக்ஓவர் செய்த உணர்வு. யார் பற்றியும் கவலை இல்லாமல் சடார், சடார்
என்று பேசுகிறார். ஆனால் ரசிக்கும்படியாக இருக்கிறது. கல்லூரியில் நிறைய தோழிகள் கிடைத்திருக்கும்." (இதைத்தான் மச்சம் என்று நாலடியாரும் திருக்குறளிலும் எழுதியிர்ப்பார்கள் போல- நான் தோழிகள் விஷயத்தைக் கூறுகிறேன்):)))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
ம்யுஸின் வர்ணனை பிரமாதம்.
You said it, Sivaprakasam.
Regards,
Dondu N.Raghavan
ஒரு அருமையான அனுபவத்தைத் தவற விட்டிருக்கிறேன்!
உங்களை மிஸ் செய்தேன் சுபமூகா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னால் சேர்த்தவை:
இதற்கிடையில் எல்லாரும் சேர்ந்தவாறு ஒரு ஃபோட்டா எடுக்கலாம் என்று முடிவானது. என்னுடைய கேமராவில் ஆட்டோமேட்டிக்காக படம் எடுக்கும்படி செய்ய எனக்குத் தெரியவில்லை. கோபி அந்த ஆப்ஷனை எனக்கு விளக்கினார். இதற்கிடையில் "இந்த விஷயத்தைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா?" என்று கேட்டார். ஞான சூன்யனான நான் என் ஆந்தை விழிகளால், பேந்த பேந்த முழிப்பதுகண்டு, "வேறு யாருமில்லை. நான்தான் இப்போது உங்களது கேமராவில் அதைக் கண்டுபிடித்தேன்" என்றார். அது சரி.
இதற்கிடையில் செந்தழல் ரவியும், டோண்டு ஸாரும் மசங்கல் தத்துவம் என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். மசங்கல், மசக்கை போன்றதெல்லாம் பெரியவர்களின் பேச்சு என்பதால், ஈவேரா ஈவேரா என்று காதை பொத்திக்கொண்டவாறே மகாலிங்கம் அவர்களிடம் பேச ஆரம்பித்தேன்.
Fuzzy logic-தான் தமிழில் மசங்கல் தத்துவம் என்று கூறுகிறோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தாங்கள் சொல்லியிருந்த கீழேயுள்ள விஷயம் படித்து அதிர்ந்தேன்:
ம்யூஸ் நெஸ் டெக்னாலஜி கம்பெனியை நடத்துகிறார்.
இஸ்ரயீலிலிருந்து ஆட்டோ அனுப்பப்போகிறார்கள். அது ஒரு இஸ்ரயீல் நாட்டு MNC கம்பனி. அமெரிக்காவில் தலைமையகம். பத்து நாடுகளுக்குமேல் கிளைகள். இஸ்ரேயிலின் ராணுவ மென்பொருள் அனைத்தும் தயாரிக்கிறவர்கள். உதாரணமாக, இஸ்ரேயில் நாட்டு எல்லைப்புறச் சுவர்கள் முழுவதும் மனித கண்காணிப்பு அற்றவை. முழுக்க மென்பொருட்களின் மேற்பார்வைதான். அது தவிர விமானப்படைகளுக்குத் தேவையான மென்பொருட்கள்.
அமெரிக்காவிற்கு கோக்காக் கோலா. இஸ்ரேயிலுக்கு நெஸ் டெக்னாலஜீஸ்.
பெங்களூரின் இந்திய கிளையில் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இல்லை. மற்ற கம்பனிகளுக்குத் தேவையான வேலைகள் செய்துதரும் ஸாதுவான நிறுவனமாக உள்ளது. பத்தோடு பதினொன்றாக நான் வேலைபார்ப்பது ஐபிஎம்முக்காக.
தொழில்நுட்ப எழுத்தில் நிபுணர்.
ஹிஹிஹி.
தங்கள் ஆஸிர்வாதம் பலிக்கட்டும்.
மியுஸ் அவர்களே,
நானே நெஸ் பற்றி எழுதலாம் என இருந்தேன்.....கலக்குகிறீகள்.
தென்னாட்டு வினோத் துவா எழுவதற்கென்ன மவுல்ஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மியூஸ், அமைதியாக இருந்து பல விஷயங்களை உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள்..
எனக்கு தெரிந்து 754 வார்த்தைகள் கொண்ட பெரிய பின்னூட்டம் உங்களுடையது தான்...
ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் உள்ள உள்குத்துக்கள்...
ஆன்மீகவாதிகள் / பெரியார் ஆர்வலர்கள் / திராவிட தமிழர்கள் / கருப்புசாமீ ஆசீர்வாதம் - தனிப்பதிவுகளாக - தன்னால் தேடி வரும் என்று நினைக்கிறேன்...
:)))))))
"மியூஸ், அமைதியாக இருந்து பல விஷயங்களை உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள்.."
பின்னே? பொழுதுபோகாமயா ம்யூஸுக்கு தென்னாட்டு வினோத் துவா என்று பெயர் வைத்தான் இந்த டோண்டு ராகவன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நானே நெஸ் பற்றி எழுதலாம் என இருந்தேன்
எழுதுங்களேன் மௌல்ஸ் அவர்களே. எனக்கு தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் கற்றுக் கொள்வேன்.
நெஸ் பற்றி சொல்லும்போது வேறொன்றும் சொல்ல வேண்டும். இந்த கம்பனியின் முதலாளி (ரவிவ் ஸோலார்) மும்பை குண்டு வெடிப்பை கண்டித்து கம்பனி முழுமைக்கும் மெயில் அனுப்பியிருந்தார். என்னை அதிசயிக்க வைத்த நிகழ்வு அது. பெரும்பாலான வியாபாரிகள் இதுபோன்ற அரஸியல் நிகழ்வுகளில் தலையிடுவதில்லை. தீவிரவாதம் எங்கு நடந்தாலும் கண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தது எனக்கு பிடித்தது.
இன்னொன்றும் குறிப்பிட வேண்டும். இந்த கம்பனி இஸ்ரயீலினுடையதாக இருந்தாலும் இந்தியாவிலுள்ள கிளைகளின் முழு பொறுப்பும் இந்தியர்களின் கையில்தான். எந்த அளவு நம்பிக்கை அவர்களுக்கு. இங்கனம் மற்றவர்மேல் நம்பிக்கைவைப்பவர்கள் தீவிரவாதிகளாகவது மிக மிகக் கடினம். அந்த கடினத்தையும் சில சமயங்களில் அவர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்குபவர்களை இந்திய அரஸாங்கம் ஆதரிப்பது விந்தையிலும் விந்தை. இதே போன்ற சூழல் கொண்ட வேறு எந்த கம்பனியிலும் இதை பார்க்க முடியாது. உதாரணமாக, ஹுவாவே கம்பனியின் இந்திய வேலையாட்களுக்கு மேனேஜர்கள் எல்லாரும் சீனர்கள்தான்.
உங்களின் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
எனக்கு தெரிந்து 754 வார்த்தைகள் கொண்ட பெரிய பின்னூட்டம் உங்களுடையது தான்...
சீக்கிரம் வேறு யாராவது முறியடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
வார்த்தைகளை எண்ண எம் எஸ் வேர்ட் உபயோகித்தீர்களா? :-) !!
இஸ்ரவேலர்கள் அசத்துவதற்கு கேட்க வேண்டுமா என்ன?
"வார்த்தைகளை எண்ண எம் எஸ் வேர்ட் உபயோகித்தீர்களா? :-) !!"
பின்ன, மண்டபத்திலே உட்கார்ந்து யாராவது எண்ணிக் கொடுத்திருப்பார்களா என்ன? எம்.எஸ். வேர்டேதான்.
MS Word>tools>word count
அன்புடன்,
டோண்டு ராகவன்
தன்னைப்பற்றியே விசாரம் என்பது வேதாந்தத்தின் சாரம். இங்கே, பதிவர்களைப்பற்றி பேசியே பதிவு என்பது நவீன பதிவுத்துவம். அதுதான் இப்போ ரொம்ப பாப்புலர்.
உங்கள் விஜய அறிவிப்பும், அதற்கேற்ப முஸ்திப்புக்களும், மீட்டிங் சமாசாரங்களும், படங்களும் டாப்ஹிட் பதிவுகள்.
அற்புதமாக பதிவுகள் ரொம்பவும் துர்லபமாகவே பார்க்க முடிகின்றன. படித்ததும் மனதை மயக்கும், பழசானாலும் மனசை கட்டிப்போடும் பதிவுகள் ரொம்பவும் சொல்பமாகவே அனுபவித்திருக்கிறேன்.
அதில் ராகவனின் க்ருதிகளும் கணிசமானவை.
ம்யூஸோ இப்போதெல்லாம் பின்னூட்டம் மட்டுமே போடுகிறார். அவர் முகம் ஈ.வே.ராவின் வெங்காயமாக மாறின பிறகு 'உண்மை'யாக எழுத தயங்குகிறாரோ என்னவோ?
சில சினிமாக்களில் ஹீரோக்களை விட துக்கடா நடிகர்கள் பேர் வாங்கிவிடுவார்கள். அதுபோல, ம்யூஸின் மாயாஜால தமிழ் பின்னூட்டம் இங்கே. அது என்னை மறுபடியும் படிக்கவைத்தது.
அதனால், டோண்டு சாரின் பதிவை நான் துச்சமாக்கவில்லை. ஒரு அளவுக்கு இப்படி சொன்னேன்.
பெங்களூர் சந்திப்பு மெட்றாஸ் உட்லண்ட்ஸை விட சுவையாக இருந்தது சபாஷ்.
தமிழ்காரர்கள் பெங்களூரில், பெங்களூர்காரர்கள் (உட்லண்ட்ஸ் ஓனர் ராவ்) மெட்றாஸில் சோபிப்பதை விட நன்றாக சோபிக்கிறார்கள் என்பதற்கு இந்த மீட்டிங்கும் ஒரு உதாரணம்.
ஆனால், மீட்டிங் முழுக்க நின்று கொண்டே இருந்தீர்கள் போல இருக்கிறது. அந்த தண்டனை இங்கில்லை.
அதுவும் நவக்கிரகம் மாதிரி எல்லோரும் ஏன் நிற்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கு மயிலாப்பூராக இருந்தால் மாலை நேரங்களில் உங்களுக்கு முன்னால் எண்ணை போட்டு எள் விளக்கு ஏத்தியிருப்பார்கள்.
கபிலரின் சாங்க்ய தத்துவமே ஈ.வே.ரா.வின் நாஸ்திகம் என்ற ம்யூஸின் ஜாடையான குறிப்பை வெகுவாக ரசித்தேன். அதுவே வாஸ்தவமும் கூட.
ம்யூஸ் அற்புதமான டெக்னிகல் ரைட்டராக இருக்கலாம். ஆனால், அவர் எழுதிய manual கள் கவிதைகளாக இலக்கிய பாடசாலைகளில் வைக்கப்பட வேண்டும்.
ம்யூஸின் பின்னூட்டத்தை பார்த்து, தமிழில் பல பாஷை வார்த்தைகளை கலந்து போட்டால் அது இன்னும் மினுக்கி மாயாஜாலம் பண்ணுகிறது என்பதை தூயதமிழ் ப்ரோஜக்ட் ஆட்கள் உணர்ந்திருப்பார்கள்.
ஆக, ம்யூஸ் இஸ்ரேல் கம்பனியில்.
இப்போது பல விஷயம் புரிகிறது. துலுக்கர்களின் கவனத்தை கவர்ந்த விஷயம் இது.
ம்யூஸூக்கு பெண் பார்க்கிறார்களா? சுபம் சீக்ரமேவ ப்ராப்தி ரஸ்து.
ம்யூஸ் எழுதுவதை பார்த்தால் ரொம்ப பழைய பஞ்சாங்கமாக இருப்பார் போல இருக்கிறது. லால்பாக்கில் முயல்விளையாட்டு விளையாடாத இளைஞிகளாக பார்க்க வேண்டும்.
சமீபத்திய நிலவரப்படி அந்தவகை பெண்குழந்தைகள் துர்லபமாகி 'ம்யூஸ்'இயங்களில்தான் கிடைக்கிறார்களாம்.
அந்த பெரியார்தான் கருணைசெய்யவேண்டும்.
நன்றி
வலைப்பதிவு சந்திப்புகளை பற்றி எழுதும்போது நான் சற்று அடக்கியே வாசிக்க விரும்புவேன். பிறகுதான் சுவாரசியமான பின்னூட்டங்கள் வரும் என்பது எனது அனுபவம். சென்னை சந்திப்புகளையே எடுத்துக் கொள்ளுங்கள். அப்பதிவுகளுக்கு நீங்களும் டி.பி.ஆர்.ஜோசஃபும் கொடுக்கும் பின்னுட்டங்களை எல்லோரையும் போலவே நானும் எதிர்ப்பார்க்கிறேன். பெங்களூரில் ம்யூஸ்.
ஜோசஃப் ஒரு வகை என்றால் நீங்களும் ம்யூஸும் இன்னொரு வகை. இரண்டுமே தேவைதானே.
உங்களது இந்தப் பின்னூட்டத்தில் ரசித்த வரிகள்:
"அதுவும் நவக்கிரகம் மாதிரி எல்லோரும் ஏன் நிற்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கு மயிலாப்பூராக இருந்தால் மாலை நேரங்களில் உங்களுக்கு முன்னால் எண்ணை போட்டு எள் விளக்கு ஏத்தியிருப்பார்கள்"
"ம்யூஸ் அற்புதமான டெக்னிகல் ரைட்டராக இருக்கலாம். ஆனால், அவர் எழுதிய manual கள் கவிதைகளாக இலக்கிய பாடசாலைகளில் வைக்கப்பட வேண்டும்."
"லால்பாக்கில் முயல்விளையாட்டு விளையாடாத இளைஞிகளாக பார்க்க வேண்டும். சமீபத்திய நிலவரப்படி அந்தவகை பெண்குழந்தைகள் துர்லபமாகி 'ம்யூஸ்'இயங்களில்தான் கிடைக்கிறார்களாம்."
அன்புடன்,
டோண்டு ராகவன்
இங்கு மயிலாப்பூராக இருந்தால் மாலை நேரங்களில் உங்களுக்கு முன்னால் எண்ணை போட்டு எள் விளக்கு ஏத்தியிருப்பார்கள்
:-))))) !!
சரி. அடுத்தமுறை உண்டியலோடு சந்தித்துவிடவேண்டியதுதான்.
That's agood idea Muse!
Regards,
Dondu N.Raghavan
ம்யூஸ்,
இஸ்ரேலிய கம்பெனியா? அதானே பார்த்தேன் நீங்க அந்த வக்கிர பஞ்சரோட சேர்ந்து அடிக்கிற கூத்தை.
அவரும் மதுரை பக்கம் ஒதுங்கியிருக்கார், முடிஞ்சா ஒரு மீட்டிங் போடுங்க
அவரும் மதுரை பக்கம் ஒதுங்கியிருக்கார், முடிஞ்சா ஒரு மீட்டிங் போடுங்க
அவர் மதுரையிலல்லவா இருக்கிறார்? நான் இங்கே ஏழு கடல், ஏழு மலை தாண்டி பெங்களூரில் உள்ளேன் :- ( .
இந்தவார இறுதியிலும் பெங்களூரில் இல்லை. கண்டமே தாண்டுகிறேன். ஒரு வாரம் கழித்து திரும்பியவுடன் அவர் மதுரையில் இருந்தால் தொலைபேச ஆசையாக உள்ளது.
தொலைபேசி எண் கேட்டு ஒரு மெயிலை தட்டிவிடுகிறேன். என் மெயில் ஐடி bliss192@gmail.com.
சுவாரசியமான பதிவு! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! பதிவை விட பின்னூட்டங்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது!
நான்
கபிலர்
பற்றி ஒரு பதிவிட்டு உள்ளேன்.அதற்க்கு தங்களின் பதிவிற்க்கு வந்த திரு.ம்யூஸ்சின் பின்னூடத்தையும்(ரவி கூறியவை),மற்றும் வெட்டிப் பையன் அவர்களின் பின்னூட்டத்தையும் எனது பதிவில் இட அனுமதி கோருகின்றேன்!
(இவர்களிருவரும் என் பின்னூட்டத்தைப் பார்ப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை எனவே தான் பதிவாசிரியராகிய தங்களிடம் அனுமதி கேட்கின்றேன்).
அன்புடன்...
சரவணன்.
அவரும் மதுரை பக்கம் ஒதுங்கியிருக்கார், முடிஞ்சா ஒரு மீட்டிங் போடுங்க
விடுவேனா?
ஃபோனாவது பேசலாம் என்று மெயில் அனுப்பினேன். பதிலை இஸ்ரயீலிலிருந்து போடுகிறார். திக்விஜயம் முடிந்துவிட்டதாம்.
"இஸ்ரேலிய கம்பெனியா? அதானே பார்த்தேன் நீங்க அந்த வக்கிர பஞ்சரோட சேர்ந்து அடிக்கிற கூத்தை."
அவர் பெயர் வஜ்ரா ஷங்கர். நாமே நண்பர் பெயரை இவ்வாறு திரிப்பது நியாயமா? அதற்குத்தான் விரோதிகள் உள்ளனரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அற்றைத் திங்கள்" என்று வரும் உருக்கமான பாடலைக் கேட்டு உருகாதவர் யார்? சில நாட்களுக்கு முன்னால்தான் டி.வி.யில் அவ்வையார் படம் போட்டார்கள். ஜெமினி கணேசன் அங்கவை சங்கவை காதலனாக் வந்து தனது அனுபவத்தை நிரூபித்தார். :))
சரவணன் அவர்களே, சம்பந்தப்பட்ட பதிவர்கள் தர வேண்டிய அனுமதி அது. என்னைப் பொருத்தவரை ஆட்சேபணை ஒன்றும் இல்லைதான். ஆனால் அதற்கு மேல் கூற எனக்கு அதிகாரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அவர் பெயர் வஜ்ரா ஷங்கர். நாமே நண்பர் பெயரை இவ்வாறு திரிப்பது நியாயமா? அதற்குத்தான் விரோதிகள் உள்ளனரே.
//
டோண்டு சார்...
விடுங்க...கால்கரி சொல்லும் அளவிற்கு பெயர் பாப்புலாரிட்டி ஆயிருச்சுல்ல...!!
எதுவா இருந்தாலும்...பெயரை இப்படி திரித்தால் என்ன...அதையே என் பெறுமைகளில் சேர்த்துக் கொள்வது என் இயல்பு...! வக்கிரா பஞ்சர் என்று பெயரெடுத்த வஜ்ரா என்று கொஞ்ச நாள் மாத்தி எழுதி...வலைப்பதிவு போட்டுவிட்டுப் போகின்றேன்...!! :D
"It's an old American custom to take what's meant as an insult, and turn it into a compliment."
இந்த ம்யூஸ் மிக பிரமாதமாக எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் வெளியே தலைக்காட்டாமல் இருக்கும் இவரைப் போன்றவர்கள், வெளியே வரவேண்டும்.
இதுவரை ஒரு பத்து முறை அவர் எழுதியதைப் படித்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் ரசிக்க வைக்கிறது.
மீண்டும் படிப்பேன்.
Post a Comment