இம்மாதம் நாகேஸ்வரராவ் பார்க்கில் நடந்த வலைப்பதிவாளர் மீட்டிங்கிற்கு சில காரணங்களால் வர இயலவில்லை. அதற்கு முத்துக்குமரனும் வந்திருந்தார் என்று படித்ததும் அவரை மிஸ் செய்து விட்டோமே என வருந்தினேன். அவர் சென்னை வருவதாக செய்தி தெரிந்ததும் அவரைப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தேன். அவரும் சந்திக்க ஆவல் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். ஆகவே அவரை மிஸ் செய்தது வருத்தமளித்தது.
ஆனால் நேற்று (03.09.2006) காலை அவர் என்னுடன் தொலைபேசினார். என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அவர் தான் வள்ளலார் நகரில் (மிண்ட்) தங்கியிருப்பதாகக் கூற, ஒரு மையமான இடமாக கண்ணகி சிலையை தேர்ந்தெடுத்தோம். மாலை ஆறரை மணிக்கு சந்திப்பதாகப் பேச்சு.
நேற்று நான் திருவல்லிக்கேணி வந்த போது மணி ஐந்து. என்றென்றும் அன்புடன் பாலா வீட்டிற்கு சென்றேன். அவர் வீட்டுக்கு போகும் வழியில் முத்து தமிழினிக்கும் போன் செய்து கண்ணகி சிலைக்கு மாலை ஆறரை மணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ள அவரும் சம்மதித்தார். பாலா வீட்டிற்கு சென்று அவரையும் என்னுடன் கன்ணகி சிலைக்கு வரச் சொல்ல அவரும் வந்தார். ஆக, ஒரு மினி வலைப்பதிவாளர் சந்திப்பு இப்படியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
நானும் பாலாவும் பைக்ராஃப்ட்ஸ் சாலையில் கோஷா ஆஸ்பத்திரியை கடக்கும் தருணத்தில் முத்துக் குமரனிடமிருந்து எனக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. கண்ணகி சிலை அருகில் இருப்பதாகக் கூறினார். கண்ணகியை கைவிடாமல் அங்கேயே இருக்கும்படி கூறி விட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்giருந்தோம். அதே தருணத்தில் முத்து தமிழினியும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். அவர் வந்த பஸ் அண்ணா சாலையிலேயே நிறுத்தப்பட, மனிதர் வாலாஜா சாலை, உழைப்பவர் சிலை என்றெல்லாம் நடந்து வந்திருக்கிறார்.
பேசிக் கொண்டே கடலை நோக்கி நடந்தோம். கடலில் கால் நனைக்க வேண்டும் என்ற என் குழந்தைத்தனமான ஆசைக்கு மதிப்பளித்து மற்றவர்கள் கூட வந்தனர். பாலா முத்துவையும் முத்துக் குமரனையும் சந்திப்பது இதுவே முதல் முறை. முத்துவை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். முத்துக்குமரன் புகை படத்திலிருந்து அவரை ஒரு கோபமுள்ள இளைஞனாக கற்பனை செய்து வைத்திருக்க அவரோ இவ்வளவு சாதுவாக இருப்பார் என நினைக்கவில்லை. ஆனால் மனிதரிடம் நிறைய விஷயம் இருக்கிறது. பல விஷயங்களில் நிலையான கருத்து உறுதியாக வைத்திருக்கிறார்.
பல விஷயங்களை பற்றிப் பேசினோம். போலியார் விஷயமும் அதில் அடக்கம். இப்பிரச்சினையை தீர்க்க முத்து தமிழினி மிகவும் மெனக்கெட்டார். அவர் தான் செய்த முயற்சிகளை பட்டியலிட்டார். அவை சுவாரசியமாகவே இருந்தன. முத்துக்குமரன் அவர்களும் தனக்கு போலி ஒரே ஒரு முறை மிரட்டல் தொனியில் எழுதியதையும் அவர் அதை தன் முறையில் கையாண்டதையும் விளக்கினார். பாலா அவர்கள் தனக்கு இரு முறை மிரட்டல் வந்ததாகக் கூறினார். நான் என்ன கூறியிருப்பேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், ஆகையால் இப்பதிவில் மறுபடியும் கூற விரும்பவில்லை.
மழை வரும் போலிருந்ததால் கடற்கரையை விட்டு வேகமாக விலகி வந்தோம். அவ்வளவு தூரம் வந்து ரத்னா கஃபேயை விட முடியுமா? திருவல்லிக்கேணிக்காரர்களான பாலாவும் நானும் வழிகாட்ட மற்ற இருவரும் கூட வந்தனர். ரத்னா கஃபேயில் முதலில் எல்லோரும் டிஃபால்டாக ஆர்டர் செய்யும் இட்லி சாம்பாருடன் துவக்கினோம். சட்னியும் வைத்தார்கள். தொடுவோமா அதை. சாம்பாரில் முக்கிய இட்லிதானே ரத்னா கஃபே ஸ்பெஷல். பாலா இட்லிக்கு மேல் ஒன்றும் வேண்டாம் மினி காப்பி போதும் என்று கூறிவிட, நான் எனக்கு பிடித்த கீ ரோஸ்ட் மசாலா தோசை ஆர்டர் செய்ய, முத்துவும் முத்துக்குமரனும் சப்பாத்தி ஆர்டர் செய்தனர். புதிய இருவருக்கும் ரத்னா கஃபே பிடித்து விட்டது என்று கூறினர்.
பெரியார், சிதம்பர தீட்சிதர்கள், இட்லி வடை, முகமூடி, இட ஒதுக்கீடு என்றெல்லாம் நாங்கள் பாட்டுக்கு தமிழ்மண விவாதங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்க, சுற்றி ஒரே கும்பல் கூடி விட்டது. எங்கள் பேச்சை கேட்க இல்லை. எப்படா இவர்கள் இடம் காலி செய்வார்கள், தாம் உட்கார என்று வந்த கூட்டம்தான் அது. ஆகவே வெளியில் வந்தோம். மணி இரவு எட்டை தாண்டி விட்டது. வெளியில் பஸ் ஒன்றும் கிடைக்கவில்லை. விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் இரண்டாம் தினமாதலால் பஸ்கள் டைவர்ட் செய்யப்பட்டிருந்தன. அங்கேயே விடை பெற்றுக் கொண்டு அவரவர் வழி சென்றோம்.
நேற்று இரவே இப்பதிவை போட முயற்சி செய்தேன். ஆனால் பிளாக்கர் ஒத்துழைக்கவில்லை. ஆகவே இப்போதுதான் போட முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
6 comments:
நல்ல பதிவு! படிக்கையில் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலை தூண்டியது. வலைப்பதிவாளர்கள் சந்திப்புகளில் தாங்கள் தொடர்ந்து கலந்துகொண்டு பதிவு எழுதுவது கூட்டங்களில் கலந்துகொள்ளாத என்னைப் போன்றவர்களுக்கு தகவல்களை தருகிறது. பதிவிற்கு நன்றி!
பதிவாளர்கள் நேரம் மற்றும் வாய்ப்பு கிட்டும்போது ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்லது. தமிழ்மனம் மட்டும் இல்லாதிருந்திருப்பின் நான் பல புதிய நண்பர்களை பெற்றிருக்க இயலாது.
இப்போதிருக்கும் நிலவரத்தில் வயது வேறுபாடுகள் ஒரு பொருட்டேயல்ல. உண்மையை கூறப்போனால் இளைய பிராயத்தினர் அதிகம் கணினி அறிவு பெற்றுள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Raghavan,
I need to recollect the discussion we had and if I think you have missed out on something, I will come back here and write about it, tomorrow.
Having a headache and going to bed early today. Thanks !
பாலா அவர்களே, பதிவின் நீளம் கருதி சுருக்க வேண்டியதாயிற்று. விட்டவை பின்னூட்டங்களில் வரும். அதுதான் சுவாரசியமாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி யாரோ அவர்களே.
இப்பின்னூட்டம் எனது இன்னொரு பதிவுக்கு போயிருக்க வேண்டியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment