11/07/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 2

இப்பதிவின் வரிசையின் முதல் பதிவு

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். காமராஜ் அவர்கள் படிக்காதவர் என்று அவரை எதிர்ப்பவர்களும், படிக்காத மேதை என்று அவரை ஆதரிப்பவர்களும் கூறுவார்கள். விஷயம் அவ்வளவு எளிதல்ல. காமராஜ் அவர்கள் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்தவர். நல்ல மதிப்பெண்களும் பெற்றவர். அவர் சமூகத்தில் அக்காலக் கட்டத்தில் அரசு வேலைக்கெல்லாம் ரொம்ப அடிபோடாது சொந்த வியாபாரம் செய்வதுதான் வழமையான நடைமுறை. அதன் அடிப்படையில் அவர் தனது தந்தையின் கடையை கவனிப்பதற்காக வீட்டுப் பெரியவர்கள் கூறியதன் பேரில் படிப்பை அத்துடன் முடித்துக் கொண்டவர். ஆகவே அவருக்கு ஆங்கிலம் நன்கு படிக்க வரும். பிறகு வாழ்க்கை என்னும் பள்ளியில் படித்து ஏட்டுப் படிப்பு படித்தவர்களை விட அறிவில் சிறந்து விளங்கியவர். அதிகம் படித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையே தனது நிர்வாகத் திறனால் திணற அடித்தவர்.

காமராஜரை பற்றிய இப்பதிவின் வரிசைக்கு துணையாக நான் கொண்ட புத்தகம் திரு.நமச்சிவாயம் அவர்கள் எழுதியது. அவரை காமராஜரின் பாஸ்வெல் என்று கூறுவார்கள். (பாஸ்வெல் பிரபல ஆங்கிலமொழி எழுத்தாளரான சாமுவேல் ஜான்ஸனின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்). காமராஜ் அவர்கள் தனது செயல்பாடுகளின் உச்சக் கட்டத்தில் இருந்தபோது எழுதப்பட்டது அப்புத்தகம்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக பல நிகழ்ச்சிகள் காமராஜ் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்தன. அவற்றில் என் மனதைக் கவர்ந்தவற்றிலிருந்து ஒன்றை இதோ தருவேன்.

காமராஜ் அவர்கள் இரண்டாவது வகுப்பில் படித்தபோது அவருடன் படித்தவர் ரோசல்பட்டி பெருமாள். மதிய உணவுக்காக வீடுக்கு செல்லமுடியாத தூரத்தில் வீடு. ஏதேனும் சாப்பிடக் கொண்டுவருவதுதான். அதுவும் முடியாதுபோனால் தண்ணீர் குடித்து பசியாற்றிக் கொள்ள வேண்டியதுதான். காமராஜ் அவர்களின் உயிர்த்தோழனுக்கு இந்த நிலை. காமராஜ் இது பற்றி அறிந்ததும் தனது வீட்டாரிடம் தான் இனிமேல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வரமுடியாது என்றும் ஆகவே சாப்பாடு கட்டிக் கொடுக்குமாறு கேட்டு அதன்படியே பெற்றுவந்து தன் தோழனுடன் சேர்ந்து மதிய உணவு உண்ணுவது வழக்கமாயிற்று.

ஒரு நாள் பேரன் சாப்பிடும் அழகைப் பார்க்க பாட்டி வர உண்மை அறிகிறார். காமராஜ் பெருமாளின் கஷ்டத்தை எடுத்துக் கூறுகிறார்.

இப்போது புத்தகத்திலிருந்தே கோட் செய்கிறேன்.

"மகிழ்ச்சி! பெருமை! பெருமிதம்! ஒன்றும் பிடிபடவில்லை பாட்டிக்கு!

பேரனை நெருக்கமாகத் தழுவியபடியே, கீழே பழைய இடத்திலேயே உட்கார வைக்கிறாள்! தானும் எதிரில் சப்பணமிட்டு அமர்கிறார்!

சரி, சரி, அதுக்கென்ன? உங்களுக்கு - இரண்டு பேருக்குமே நானே ஊட்டி விடுகிறேனே!"

பிறகு காமராஜ் அம்மாவிடம் இது பற்றி எதுவும் கூறவேண்டாமென கேட்டுக் கொள்ள, ஓண்ணும் பயப்படவேண்டாம், அம்மாவிடம் மட்டும் அல்ல எல்லோரிடமும் கூறலாம் என்று கூறி பாட்டி சிறுவர்கள் இருவருக்கும் ஆளுக்கு காலணா கொடுத்து விட்டுப் புறப்படுகிறார்.

பாட்டியின் உருக்கப் பரவசப் பாசப் பெருமையைக் கண்டு, கேட்டு, உணர்ந்த இரண்டு சிறுவர்களுக்கும் மெய்சிலிர்க்கிறது.

வாஞ்சையோடு, மீண்டும் ஒருமுறை சிறுவர்களைப் பார்த்து முறுவலித்தபடி வீட்டுக்கு விரைகிறார் பாட்டி. பாட்டியின் பெருமித நடை! உணர்த்துவது என்ன? பகுத்துண்டு, பல்லுயிர் ஓம்பும் செல்லப் பேரன் காமராஜ்!

இந்த இளம் வயதிலேயே என்ன ஈவு இரக்கம்? அவரது மதிய உணவு திட்டத்துக்கு இதுவும் ஒரு முன்னோடிதானே.

இவ்வரிசைப் பதிவுகள் மேலும் தொடரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இது என்ன FONT ஓ? தட்டச்சு செய்து scan செய்த மாதிரி இருக்கு

dondu(#11168674346665545885) said...

என் கண்ணுக்கு லதா எழுத்துருதானே தெரிகிறது? உங்கள் எழுத்துரு செட்டிங்ஸைப் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீனு said...

//ஆகவே அவருக்கு ஆங்கிலம் நன்கு படிக்க வரும்.//
ஆனால் பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வந்த பொழுது தனக்கு இந்தி / ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தான் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்று சமீபத்தில் ஆ.வி.யில் ஒரு (ஃபேமஸ்) பத்திரிக்கையாளார் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன்?

dondu(#11168674346665545885) said...

நீங்கள் குறிப்பிட்டதை நானும் படித்திருக்கிறேன் சீனு அவர்களே.

அதாவது பிரதம மந்திரியாக வருபவருக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று காமராஜ் அவர்களே சொன்னது. ஆகவே தான் வரவில்லை என்றும் கூறினார்.

இந்த விஷயத்தை பல தளங்களில் பார்க்க வேண்டும். ஆங்கிலம் படிப்பது வேறு, அதை சரளமாகப் பேசுவது வேறு. காமராஜ் அவர்கள் ஆங்கிலம் படித்து புரிந்து கொள்ளக் கூடியவர்தான் ஆனால் பேசுவது சற்று தகராறே. ஏனெனில் அவருக்கு சிறுவயதில் தினப்படி வாழ்க்கையில் அதற்கானப் பயிற்சி இல்லை.

ஆனால் நான் இன்னொரு காரணத்தையும் பார்க்கிறேன். காமராஜ் அவர்கள் கிங் மேக்கராக இருந்தவர். அம்மாதிரியானவர்கள் பின்புலத்திலிருந்து இயக்குவதையே விரும்புவார்கள். சில சமயங்களில் அவர்களுக்கே அரசில் பதவி வகிப்பவரை விட அதிக பலம் இருக்கும். ஆனால் அவர்களே அரசராக வரவேண்டுமானால் வேறு வகை பலங்கள் தேவைப்படும். முக்கியமாக பெருவாரியான எம்பிக்களது ஆதரவு. அறுபதுகளில் உத்திரப் பிரதேசக்காரர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு பிரதமராவதற்கு.

கண்டிப்பாக இங்கு பலப் பரீட்சைதான் நடந்திருக்கும். யதார்த்தவாதியான காமராஜுக்கே தெரியும் அது தனக்கு சாதகமாக இருக்காது என்று. ஒரு முறை தலைமைக்கு போட்டியிட்டு விட்டால் கிங்மேக்கராக திரும்ப வர முடியாது. ஆகவே தனக்கு ஆங்கிலம் பேச வராததை முன்வைத்திருக்கிறார் அவர் என்றுதான் நினைக்கிறேன். அதையேத்தான் நீங்கள் சொன்ன "(ஃபேமஸ்)" பத்திரிகையாளரிடமும் கூறியிருக்க வேண்டும்.

மற்றப்படி நான் கூறுவேன், எல்லா விஷயங்களும் சரியாக அமைந்திருந்தால் காமராஜ் அவர்கள் நல்ல பிரதம மந்திரியாக அமைந்திருப்பார். ஆங்கிலம் பேச முடியாவிட்டால் என்ன? என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறோம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<-- என் கண்ணுக்கு லதா எழுத்துருதானே தெரிகிறது? உங்கள் எழுத்துரு செட்டிங்ஸைப் பார்க்கவும்.-->

பின்னூட்டமெல்லாம் வேறு ஃபாண்டில் நன்றாகத் தெரியுது.
[பட்டென்று உடனே என் மனதில் ஜாலியாகத் தோன்றியத் பதில் - என் கண்ணுக்கு பக்கத்து சீட் ஷீலாதான் தெரியுது -))) ]

dondu(#11168674346665545885) said...

"என் கண்ணுக்கு பக்கத்து சீட் ஷீலாதான் தெரியுது"
இதை நான் "என் கண்ணுக்கு பக்கத்து சீட் ஷீலாவதுதான் தெரியுது.." என்று படித்துவிட்டு வாயில் இருந்த டீயை சுடச்சுட விழுங்கி விட்டேன்.:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது