நான் எனது இந்தப் பதிவை பல மாதங்களாகவே முன்வரைவாக வைத்திருந்தேன். அதை எப்படி வெளியிடுவது என்பதில் சிறு குழப்பம்.
பிறகு அந்த இடுகையை இட்டதும்தான் புரிந்தது, இது சம்பந்தமாகப் பலரும் பலவிதமாக யோசித்து வந்திருக்கிறார்கள் என்று. நான் அதில் கூறியது மாதிரி நடந்து கொள்வது சுயநலமாகக் கருதப்படுமோ என்று சிலர் கேள்வி எழுப்பினர். அவ்வாறு எழும் கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இப்பதிவு.
இந்த உலகமே தன்னலத்தில்தான் இயங்குகிறது என்று எனது பிரெஞ்சு பேராசிரியர் லாற்டே கூறுவார். தாயின் அன்புகூட அதிலிருந்து தப்பவில்லை என்றும் அவர் கூறினார். அதுவும் ஒரு பார்வை கோணமே. அது பற்றிப் பேசவே இப்பதிவு.
தாழ்வு மனப்பான்மையில் இருப்பவருக்கு உதவுவது நமது கடமையில்லையா என்று ஒருவர் கேட்டார். நான் சுருக்கமாக அது என் வேலையில்லை என்று கூறி விட்டேன். சிலருக்கு என் மேல் கோபம் கூட வந்திருக்கும். அதைப் பற்றியும் விவரிக்க வேண்டும். ஆகவே இப்பதிவு.
பழைய ஏற்பாட்டில் "போ, போய் உன் இனத்தைப் பெருக்கிக் கொள்" என்று கடவுள் மனிதனிடம் கூறியதாக வரும். இந்த அறிவுறை எல்லா இனங்களுக்கும் பொருந்தும். மனிதன் தோன்றுவதற்கு பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே பல ஜீவராசிகள் தோன்றின, அழிந்தன. மனிதனே இல்லாமல் போனாலும் இந்த வேலை நடக்கும். ஜீவராசிகள் அழிந்ததற்கு இனப்பெருக்கம் இல்லாததும் ஒரு முக்கியக் காரணமே. அந்த இனப்பெருக்க வேலையில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்டவருக்கு இன்பமாக இருந்ததால்தான். அவர்கள் அந்த வேலையிலேயே ஈடுபட்டனர். ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அவளுக்கு அது மகிழ்ச்சியை தருவதாலும் அந்த வேலையும் விடாது நடக்கிறது.
ஒரு சிவசங்கரி நாவலில் படித்த ஞாபகம். ஒரு வயதான மூதாட்டி திருமணமே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் இளம் பெண்ணிடம் "ஆம்பளை சுகம்னா என்னன்னு தெரியுமா? பால் கொடுப்பதன் சந்தோஷம் புரியுமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டிருப்பாள். அதே போல ஆண்களுக்கு பொம்பளைசுகம் இருப்பதால்தானே இனப்பெருக்கமே ஏற்படுகிறது?
ஆக, எல்லாவித வேலைகளுக்கும் ஒரு உந்துதல் சக்தி தேவைப்படுகிறது என்று கூறுவதற்காகத்தான் மேலே சற்று வெளிப்படையாக எழுதினேன்.
சுருக்கமாகக் கூறப் புகுந்தால். தன்னலமே எல்லாவற்றுக்கும் உந்துதல். மற்றவர்களது தன்னலத்தை சரியான பாதையில் செலுத்தி, தனக்கு சாதகமாகக் காரியம் செய்வித்து கொள்வதே புத்திசாலியின் அழகு. அதை மோட்டிவேட் செய்வது என்றும் கூறலாம். வாழு, வாழ விடு என்றும் கூறலாம். என்னிடம் உதவி கேட்பவனுக்கு உதவி செய்வதால் எனக்கும் நலம் ஏற்படும் என்று வெளிப்படையாகத் தெரிந்து விட்டால் நான் ஏன் மறுக்கப் போகிறேன்? என்னை மாதிரித்தானே மற்றவரும்?
ஆனால் இந்த மாசோகிஸ்டு ஆசாமிகள் இருக்கிறார்களே, அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். "என்ன அடிச்சாலும் இவன் அழல்ல, இவன் ரொம்ப நல்லவண்டா" என்பதற்காகவெல்லாம் ஃபீலிங்ஸ் ஆனால் வடிவேலு ரேஞ்சில் உதை வாங்க வேண்டியதுதான். ஆகவே நான் ரொம்ப கெட்டவன் என்று முதலிலேயே டிஸ்கி போட்டு விடுகிறேன். :))))
"என்னத்த, வேல, செஞ்சு" என்று சோம்பித் திரிபவர்கள் வேறு ரகம். அவர்கள் சோம்பலில் இன்பம் காண்பவர்கள். அவர்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் சில தியாக மனப்பான்மை உள்ள மாசோகிஸ்டுகள் உதவிக்கு வருவார்கள் என்று திமிரில் இருப்பவர்கள். அந்தத் திமிரை அடக்கவாவது அவர்கள் அண்மையைத் துறப்பது நலம்.
அதிலும் இந்த தமிழ் சீரியல்கள் செய்யும் அலம்பல்கள் ரொம்பத்தான் ஓவர். உதாரணத்துக்கு இந்தக் "கோலங்கள்" சீரியலையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அபி மாதிரி எரிச்சல் தரும் கேரக்டரை பார்க்கவே இயலாது. அவருக்கு மிக அண்மையில் இரண்டாவதாக வருபவர் தொல்காப்பியன். இதுகள் ரெண்டும் சேர்ந்து அடிக்கும் கூத்தைக் காணவே சகிக்கவில்லை. இவர்கள் பார்வையாளர்களின் மாசோகிஸ்ட் உணர்வுகளுக்கு தீனி போடுகிறார்கள். அவ்வளவே. இதில் சீரியல் தயாரிப்பாளர்கள் நல்ல பணம் பண்ணுகிறார்கள், ஆனால் பார்வையாளர்கள் தங்கள் மன தைரியத்தை இழக்கிறார்கள். "மெட்டி ஒலி" இன்னொரு கொடுமை! "அலைகள்" ஐயையோ.
சீரியல்களை பார்ப்பதை இப்போது நான் விட்டுவிட்டதில் மிக நிம்மதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் நான் பாட்டுக்கு என் அறையில் அமர்ந்து மொழிபெயர்ப்பு வேலைகளை செய்வதில் நல்ல லாபம். ஆனாலும் பக்கத்து அறையிலிருந்து வரும் வசனங்கள் அவ்வப்போது தொந்திரவு செய்கின்றனதான். இதில் என்ன கஷ்டம் என்றால், நான் குறிப்பிட்ட மூன்று சீரியல்களும் மிக நல்ல முறையில் படமாக்கப்பட்டவையே.அதுவே செவ்வாயன்று இரவில் வந்து கொண்டிருந்த மகா கண்றாவியான சென்னை தொலைக்காட்சி நிலைய நாடகங்கள் என்றால் இவ்வளவு பாதிப்புகள் இராது, ஏனெனில் அவற்றைப் பார்க்க அவ்வளவு பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா?
பல படங்களை நான் அவை தேவையற்ற அசட்டு தியாகத்தை வலியுறுத்தியதாலேயே பார்க்க மறுத்தவன். அவற்றைப் பற்றி பின்னொரு முறை பதிவு போடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
5 comments:
// "மெட்டி ஒலி" இன்னொரு கொடுமை!//
தாங்கள் மெட்டி ஒலியின் ரசிகர் என்றல்லவா ரா.கா.கி. குழுமத்தில் கூறியதாக ஞாபகம். :-) உஜாலாவிற்கு மாறி விட்டீர்களா என்ன?
மற்றபடி நீங்கள் சொன்ன மாதிரி இந்த சீரியல்கள் பலவும் துன்புறும் கதாநாயகர்களையே பிரதான படுத்துகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதுவும் காட்சி அமைப்பிலும், கதைப் போக்கிலும் ஏகப்பட்ட 'க்ளிஷே'க்கள் வேறு.
மிக நன்றாக இருக்கிறது கட்டுரை.
//இந்த உலகமே தன்னலத்தில்தான் இயங்குகிறது //
survival of the fittest என்ற கோனத்தில் தன்னைத் தானே 'தகுதி' உள்ளவனாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். ஆனால் அந்த தன்னலம் அடுத்தவர்க்கு பயனுள்ளதாக இருப்பது அவசியம். நமது உணவை நாம் சம்பாதிக்கின்றோம். அது இயல்பு. அது இன்னொருவரின் உணவாக (அத்தியாவசிய) இருக்க வேண்டும் என்று நினைப்பது சமூகப் பொறுப்பு.
சுயநலத்தையும் தாண்டி சில சமூகப் பொறுப்புகளை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டி இருக்கிறது.
(உ-ம்) எனது அணியில் இருக்கும் சக தொழிலாளி தாழ்வு மனப்பாண்மையினால் பாதிப்பைடந்தால், மொத்த அணியின் உற்பத்தி திறன் குறைகின்றது. நான் இரண்டு வகையாக முடிவு எடுக்கலாம். அவருடன் counselling செய்து அவரின் உற்பத்தி திறனை கூட்ட வழி காணலாம் (அ) அவரை நீக்கி விட்டு வேறு திறமையான ஒருவரை சேர்த்து அணியின் உற்பத்தி திறனைக் கூட்டலாம்.
முதலில் முதலாம் வாய்ப்பை முயற்ச்சித்துவிட்டு இரண்டாவதை தேர்ந்தெடுக்கலாம். இரண்டுக்கும் நடுவில் உள்ள கோட்டை அவரவரின் 'தன்னலமற்ற' சிந்தனை தீர்மானிக்கின்றது.
//
அதுவே செவ்வாயன்று இரவில் வந்து கொண்டிருந்த மகா கண்றாவியான சென்னை தொலைக்காட்சி நிலைய நாடகங்கள் என்றால் இவ்வளவு பாதிப்புகள் இராது, ஏனெனில் அவற்றைப் பார்க்க அவ்வளவு பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா?
//
அந்த கன்றாவி சீரியலையும் பார்த்து சிலர், சார், இன்ன தேதியன்று ஒளிபரப்பான இந்த நாடகத்தில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் ஓடவில்லை என்று எதிரொலியில் கடிதம் வேற போடுவார்கள். அதில் அதை படித்து காண்பித்த பெண்ணிடம், மேல படிம்மா...இனிமே இந்த மாதிரி தவறுகள் நடக்காது என்று சொல்லிவிட்டுப் போவார்...ஆசிரியர், சுவாமி சிவானந்தா சாலை!
சோம்பேறித்தனத்தின் உச்சகட்டங்கள் இதெல்லாம்.
"தாங்கள் மெட்டி ஒலியின் ரசிகர் என்றல்லவா ரா.கா.கி. குழுமத்தில் கூறியதாக ஞாபகம். :-)"
அதுதான் பிரச்சினையே. மிக நன்றாக எடுத்தார்கள். முக்கியமாக கோபி கேரக்டர் ஒரு காவியம். ஆகவேதான் இந்த எதிர்மறை விஷயங்கள் மிகக் கவலையளிப்பதாக உள்ளன.
ஆனால் அதில் உள்ள பல எதிர்மறை விஷயங்களை சாடி அப்போதே பதிவுகள் போட்டிருக்கிறேன். முக்கியமாக லீலா கேரக்டருக்கு சிதம்பரம் செய்யும் உபதேசங்கள்.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/even-scene-in-mega-serial-can-be.html
சரோ பற்றி எழுதியதற்கு பார்க்க:
http://dondu.blogspot.com/2005/06/blog-post_22.html
மற்றப்படி நீங்கள் கூறியது போல அவரவருக்கான தன்னலத்தின் கோட்டை அவரவரே தீர்மானிக்க வேண்டும் என்பதும் நிஜமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அந்த கன்றாவி சீரியலையும் பார்த்து சிலர், சார், இன்ன தேதியன்று ஒளிபரப்பான இந்த நாடகத்தில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் ஓடவில்லை என்று எதிரொலியில் கடிதம் வேற போடுவார்கள்."
:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அதிலும் இந்த தமிழ் சீரியல்கள் செய்யும் அலம்பல்கள் ரொம்பத்தான் ஓவர். உதாரணத்துக்கு இந்தக் "கோலங்கள்" சீரியலையே எடுத்துக் கொள்ளுங்கள்."
அந்தக் கொடுமையையும் பாத்தீங்களா, கஷ்டம்தான். :))))))))
தங்கம்மா
Post a Comment