11/09/2006

ஹைப்பர்லிங்குகளை மொழிபெயர்க்கக் கூடாது

முந்தைய ஹைப்பர்லிங்குகளுக்கு இப்பதிவை பார்க்கவும்.

இன்னொரு ஹைப்பெர்லிங்க் பற்றி இங்கு பேசப் போகிறேன். இதுவும் பழைய பதிவே. போன ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்டது.

நான் சமீபத்தில் 2001-ல் தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தபோது கணினி பற்றிய எனது அறிவு பூஜ்யம். ஹைப்பர்லிங்க் என்ற வார்த்தை கூட கேள்விப்பட்டதில்லை. அப்போது சென்னைக்கு எனது தில்லி வாடிக்கையாளர் ஒரு கோப்பை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப, எனது நண்பர் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து எனக்கு தந்தார். பிறகு மொழி பெயர்ப்பை எழுதி அவரிடம் கொடுக்க, அவர் கணினியில் சேமித்துவைத்திருந்த அக்கோப்பின் நகலில் மொழிபெயர்ப்பை ஓவர்டைப் செய்ய ஆரம்பித்தார். அப்போது தான் அவரிடமிருந்து ஹைப்பர்லிங்க் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன். அதில் உள்ள ஹைப்பர் லிங்கை நான் மொழிபெயர்த்திருந்தேன். அது கூடாது என்று நண்பர் கூறினார்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன், ஹைப்பர்லிங்குகளை மொழி பெயர்க்கக் கூடாது என்பது மொழிப் பெயர்ப்பாளர்களின் முதல் தாரக மந்திரமாகும் என்று. மீறி மொழி பெயர்த்தால் என்ன ஆகும்? அவ்வாறு மொழிப் பெயர்க்கப்பட்ட ஹைப்பர்லிங்குகள் வேலை செய்யாது, அவ்வளவுதான்.

மனித மூளையைக் கணினியுடன் ஒப்பிடுவார்கள். ஆனால் மொழிப் பெயர்த்தாலும் இங்கு ஹைபர்லிங்குகள் வேலை செய்யும். உதாரணம்? இதோ என் வாழ்க்கையில் வந்த இன்னொரு ஹைபர்லிங்க்.

சமீபத்தில் 1982-ல் நான் டில்லியில் ஒரு பஞ்சாபியின் வீட்டில் (பண்டாரி) குடியிருந்தேன். ஒரு நாள் வீட்டிற்குள் நுழையும்போது தூர்தர்ஷனில் ஒரு நாடகம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் ஒருவன் இன்னொரு வீட்டில் இருந்துக் கொண்டுத் தன் வீட்டிற்கு ஃபோன் செய்துக் கொண்டிருப்பான். அவன் அருகில் ஒரு பெண்மணி நின்றுக் கொண்டிருப்பாள்.

ஃபோனில் இவன் தன் மனைவியிடம் "ஆஃபிஸில் வேலை அதிகம், ஆகவே நான் இன்று வீட்டுக்கு வர இயலாது" என்றுக் கூறுவான்.

உடனே விளம்பர இடைவேளை.

இதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த நான் வீட்டுக்காரரிடம் கூறினேன்:

"இப்போது அந்தப் பெண்மணி இவனை வீட்டைவிட்டு வெளியேற்றுவாள். நாடகமும் அத்துடன் முடிவடையும்." அவர் என்னைத் திகைப்புடன் பார்த்தார். பிறகு நான் நாடகம் எப்படி ஆரம்பித்தது என்பதை கூறி அந்த சீன் வரை என்ன நடந்தது என்பதையும் கூறினேன்.

அதற்குள் விளம்பர இடைவேளை முடிந்தது. நாடகம் தொடர்ந்தது. நான் கூறியபடியே நடந்தது. நாடகமும் முடிந்தது. பஞ்சாபிக்குத் திகைப்பில் பேச்சே வரவில்லை.

அவர்: "ராகவன் எப்படி இவ்வாறு சரியாகக் கூறினீர்கள்? இந்த நாடகம் எனக்கு தெரிந்து தூர்தர்ஷனில் முதன் முறையாக ஒளிபரப்பப்படுகிறது."

நான்: "பண்டாரி அவர்களே, சமீபத்தில் 1956-ல் இதே ஹிந்தி நாடகத்தின் தமிழாக்கத்தை அகில இந்திய ரேடியோ நாடக சம்மேளனத்தில் கேட்டிருக்கிறேன். அதிலும் ஃபோனில் அவன் இதையே தமிழில் கூறுவான். அந்தப் பெண்மணியும் அவனைத் தமிழில் திட்டி வெளியே அனுப்புவாள்.

இங்கு அதையே இந்தியில் செய்தாள் அவ்வளவுதான்."

ஆக இன்றைய ஹைபர் லிங்க்: "ஆஃபிஸில் வேலை அதிகம், ஆகவே நான் இன்று வீட்டுக்கு வர இயலாது". இது தமிழ் மற்றும் இந்தியில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

செந்தழல் ரவி said...

போனபதிவாவது பரவாயில்லை..இந்த பதிவு சரக்கில்லாமல் சுத்த மொக்கையாக உள்ளது.

dondu(#4800161) said...

நீங்கள் கூறுவது சுவாரசியமாக இருக்கிறது செந்தழல் ரவி அவர்களே.

ஒரே ஒரு டயலாக் அதுவும் ஹிந்தியில் கேட்டதை மனது கண்ணிமைக்கும் நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்து, 26 ஆண்டுகளுக்கு முன்னால் ரேடியோவில் கேட்ட தமிழ் டயலாக்குடன் மேட்ச் செய்து அந்த நாடகத்தையே கண்முன்னால் கொண்டு வரச் செய்துள்ளது. இத்தனை விஷயங்களும் இந்த வரிகளை நீங்கள் படிக்கும் நேரத்துக்குள் நடந்துள்ளன.

இது ஹைப்பர்லிங்க் இல்லையேன்றால் வேறு எதை ஹைப்பர்லிங் என்று கூறுவீர்கள்?

ஆடுதுறை ரகு, என்றென்றும் அன்புடன் பாலா விஷயத்தில் நடந்த ஹைப்பர் லிங்குகள், எல்லோரும் ஐய்யங்கார்களாக இருந்ததால் சாத்தியமாயிற்று என்று பலர் உளறினர்.

ஆனால் இதை என்னவென்று கூறுவீர்கள்?

இப்பதிவை புதிதாக இட்டுக் கட்டியெல்லாம் போடவில்லை. போன மாதம் ஜூலை மாதம் போட்டதை இப்போது வகைபடுத்தும் முகமாகவே திரும்ப இடுகிறேன். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

செந்தழல் ரவி said...

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதிவுகளை வைத்திருந்தால் அதை பிலாகர் தின்றுவிடும் என்று கூறுகிறார்கள்...அது உண்மையா ? நமது ஆர்ச்கைவ் எவ்வளவு நாளைக்கு இருக்கும் ? வகைப்படுத்துதல் என்பது, மீள்பதிவாக ஆக்கிவிட்டால் போதுமா ? அப்போது எல்லா பதிவுகளையும் மீள்பதிவாக்க வேண்டுமா ? அல்லது தனியாக சேமிக்கவேண்டுமா ?

dondu(#4800161) said...

பிளாக்கர் மனம் வைத்தால் புதுபதிவுகள் கூடக் காணாமல் போய்விடும். முக்கியமாக நீண்ட தலைப்பு வைக்கக் கூடாது. ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருத்தல் நலம்.

மற்றப்படி மீள்பதிவு செய்வது வேறு ஒரு காரணத்துக்கு. போன ஆண்டு புது தமிழ்மணம் உருவானது. அப்போது பழைய தமிழ்மணத்திலிருந்து சில பதிவுகளை வகைப்படுத்த முடிந்தது. சில அப்படியே தங்கி விட்டன. அவை பார்க்கக் கிடைக்கும்தான், பின்னூட்டங்களும் இடலாம், ஆனால் மறுமொழியாக்கப்பட்ட ஆக்க்ங்களில் அவை வராது. சில பதிவுகள் நான் இப்போதைய வாசகரும் படித்து எதிர்வினை தரக் கூடும் என்று நினைப்பதை மீள்பதிவாக ஆக்குவது வழக்கம். அந்த வரிசையில்தான் ஹைப்பர்லிங்குகள் வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Harry Potter said...

வீட்டுக்காரர் பண்டாரி அசந்து போயிருப்பாரே?

முகம்மது யூனுஸ்

Gopalakrishnudu(#07148244463938149692) said...

Truth is stranger than fiction, isn't it?

GK

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது