இந்த வரிசையில் முந்தையப் பதிவு இதோ.
நமச்சிவாயம் அவர்களது புத்தகத்தில் நான் குமுதம் தொடராகப் படித்ததிலிருந்து சில நிகழ்ச்சிகள் விட்டுப் போனதாகத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, உள்ளூர் தாதா ஒருவனால் துரத்தப்பட்ட ஒருவன் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள, அந்த இடம் காமராஜ் அவர்களுக்கும் தெரியும். ஆயினும் தன்னை மிரட்டிக் கேட்ட தாதாவின் ஆட்களிடம் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று தைரியமாகச் சாதித்து ஒளிந்து கொண்டவரின் உயிரைக் காப்பாற்றினார். ஒரு வேளை நமச்சிவாயம் வேறு ஏதாவது புத்தகம் காமராஜரைப் பற்றி எழுதியதிலிருந்து நான் அதைப் படித்தேனா அல்லது, இப்புத்தகத்துக்கு ஏதேனும் தொடர்ச்சி உண்டா என்பது புரியவில்லை. ஏனெனில் 1921-ஆம் ஆண்டுக்குப் பிறகான நிகழ்ச்சிகள் காணப்படவில்லை.
அதாவது காமராஜ் அவர்களது 18-ஆம் வயதுக்குப் பிறகு நிகழ்ச்சிகள் இப்புத்தகத்தில் இல்லை. இருந்தாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு பல ஆதாரங்கள் இப்புத்தகத்திலேயே காணப்படுகின்றன. முக்கியமாக மதிய உணவுத் திட்டத்திற்கான ஆதார நிகழ்ச்சியை நான் போன பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
இப்புத்தகம் அக்காலக் கட்டத்தில் தமிழகம் இருந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அக்கால விலைவாசிகளைப் பார்த்து சுபிட்சமாக வாழ்ந்தார்கள் என்று எடை போடலாகாது. ரூபாய்க்கு 8 படி (10.2 கிலோ) அரிசி விற்றது என்று கூறுவார்கள். ஆனால் ஒரு ஆழாக்கு (8 ஆழாக்கு ஒரு படி, அதாவது 1400 கிராம்) அரிசி வாங்கக் கூட பணம் கையில் இருக்காது. சம்பளம் கூட 15-20 ரூபாய் அளவில்தான் இருக்கும். இவ்வளவும் ஏன் கூறுகிறேன் என்றால் காமராஜ் அவர்கள் சார்ந்த நாடார் குலத்தினர் தங்களை சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்ட கதையை விளக்கத்தான். பணவசதி இருந்தவர்கள் ஒவ்வொரு பிடி அரிசியாக தானம் செய்து சொந்தப் பள்ளிக்கூடம் ஏற்படுத்திக் கொண்டனர். அதுதான் பிடியரிசிப் பள்ளி என்று அறியப்பட்ட, 1885-ல் துவக்கப்பட்ட க்ஷத்திரிய வித்தியாசாலையாகும்.
இந்தப் பள்ளியைத் துவங்க விருது நகர் வியாபாரிகள் தங்களது வியாபார மகமைப் பணத்தைக் கொடுத்துப் பெரிதும் உதவினர். மகமைப் பணத்தோடு ஊர்கூடித் தேர் இழுக்கப்பட்டது. ஊர் மக்கள் ஒவ்வொரு வீட்டுப் பெண்மணிகளும் பள்ளி நிலை பெற வேளைதோறும் வித்திட்டு உதவினர்.
பள்ளிக்கூடச் செலவுக்காக ஒவ்வொரு நாளும் வேளையும் சமையல் செய்ய உலையில் அரிசி போடும்போது முதலில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு பானையில் போட்டு சேமித்தனர். இதை எல்லா வீட்டிலும் செய்தனர். சிறு துளி பெருவெள்ளமாகி மூட்டை மூட்டையாக அரிசி சேர்ந்தது. மலையென ஓங்கி உயர்ந்த அரிசி மூட்டைகள் விற்கப்பட்டன. பள்ளிச் செலவுக்கு பணம் கிடைத்தது. அதாவது தன் கையே தனக்குதவி என்று முனைப்புடன் செயல்பட்டால் என்னென்ன செய்யலாம் என்பதைக் குறிப்பிடவே இங்கே இதை கூறுகிறேன்.
பிடி அரிசியின் மகிமை பெரிது. மிகமிகப் பெரிது. இந்தப் பள்ளியில்தான் காமராஜ் படித்தார். ஆறாம் வகுப்பு வரை அப்பள்ளியில் அவர் பெற்ற அனுபவங்கள் அவரைப் புடம் போட்டன.
அப்போதே அவர் நடப்பு அரசியல்களை பற்றி தன் நண்பர்களுடன் விவாதிப்பார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் மனதை மிகவும் பாதித்திருக்கிறது. அது பற்றி விவாதங்கள் நடந்து வந்த தருணத்தில் ஒரு சடு குடு போட்டி நடந்தது. ஒரு முரட்டுப் பையன் தன்னை வெள்ளைக்காரன் என்று பீற்றிக் கொண்டு போட்டிக்கு வந்ததற்காகவே அவர் அவனது எதிர்க் கட்சியில் சேர்ந்து அவனைப் புரட்டி எடுத்து விட்டார். நல்ல உழைப்பாளியாதலால் உரம் பாய்ந்த உடல்.
ஒருமுறை ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளால் தாக்கப்பட்டு உயிரை இழக்க இருந்த ஒரு எட்டு வயது சிறுவனை தனது சமயோசித புத்தியால் காப்பாறினார் காமராஜ் அவர்கள். சிறுவனை அப்படியே கீழே தள்ளி, தான் அவன் மேல் படுத்துக் கொண்டு அவனைக் காளையின் பார்வையிலிருந்து மறைத்தார். அந்த சில நொடிகளுக்கு தனது உயிரையே பணயம் வைத்தார்.
அதே போல எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஒரு பெருவியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவனை அறுவறுப்பின்றி தொட்டுத் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்தவர் காமராஜ் அவர்கள். அதுவும் அக்காலக் கட்டத்தில் பெருவியாதி என்றால் எல்லோருமே அலறுவர். நமது காமராஜரிடம் அதன் பாச்சா பலிக்கவில்லை.
நமச்சிவாயம் அவர்கள் காமராஜ் அவர்களது அறிமுகத்தைப் பெற்றது ஒரு சுவையான கதை. 1957-தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசி முடித்து அடுத்தக் கூட்டத்துக்கு செல்ல இருந்தவர் முன்னால் இவர் தயங்கி நின்றிருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட காமராஜரிடம் தான் அடுத்த மீட்டிங்கிற்கும் கவரேஜுக்காக வரவேண்டியிருக்கும் என்று மென்று விழுங்கியபடி கூற, காமராஜர் அவரை எல்லா மீட்டிங்கிற்கும் தனது காரிலேயே அழைத்துச் செல்ல என்று ஆரம்பித்து நமச்சிவாயத்தை கடைசியில் காமராஜ் அவர்களின் பாஸ்வெல் ஆக்கி விட்டது. வாழ்க்கையில் இம்மாதிரி பல பெரிய விஷயங்களுக்கு அடிப்படையாக சாதாரண நிகழ்ச்சியே அமைந்து விடுவதை இங்கே கூறத்தான் வேண்டும்.
அடுத்தப் பதிவில் நான் சமீபத்தில் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் காமராஜ் அவர்களைப் பற்றி கேட்டதையும் படித்ததையும் பற்றிக் கூறுவேன். சோ அவர்கள் கூட காமராஜருடன் நெருங்கிப் பழகியவர். அவர் எழுதிய புத்தகம் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இப்போது தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. அது கிடைத்தவுடன் அதிலிருந்து வேறு எழுத வேண்டும். பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
5 comments:
சோ எழுதிய 'சிவகாமியின் செல்வன்' பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என நினக்கிறேன்(இதே தலைப்பில் சிவாஜி மிகைப்பட நடித்த(:) ) படமும் உண்டு). இதை நான் 1981-ல்(12 வயதில்) முசிறி நூலகத்தில் எடுத்துப் படித்தேன். இப்போது சுத்தமாக நினைவில் இல்லை. கிடைத்தால் வாங்க வேண்டும்.
காமராஜ் அவர்கள் காலமான பிறகு ஒரு புத்தகம் சோ எழுதியதைத்தான் நான் குறிப்பிட்டேன். ஒன்று செய்கிறேன், நாளை மறுபடி கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகத்துக்குப் போய் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அதாவது தன் கையே தனக்குதவி என்று முனைப்புடன் செயல்பட்டால் என்னென்ன செய்யலாம் என்பதைக் குறிப்பிடவே இங்கே இதை கூறுகிறேன்."
நீங்கள் தலித்துகளுக்கு சொந்தத்தில் டீக்கடை வைத்துக் கொள்ள அளித்த யோசனையை இங்கு சுட்டுகிறீர்களா?
கிருஷ்ணன்
ஆமாம் செர்வாண்டஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சோ எழுதிய "காமராஜை சந்தித்தேன்" என்ற நூல் தான் நீங்கள் குறிப்பிடுவது.. அதே போல பிடியரிசி திட்டம் என்பதை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியர் காமராஜர் தான்.. அனால் அதற்க்கு முன்பே ஏழைகளுக்காக, இந்த திட்டத்தை அமுல் படுத்தியவர் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் தான். இது ஒரு குறிப்புக்காக..
Post a Comment