1/06/2007

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 4

இந்த வரிசையில் வந்த முதல் மூன்று பதிவுகள்:
1)
2)
3)

என் தமக்கையார் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்கு வந்த தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். என் தமக்கை அப்போது பாட்டு கிளாசுக்காக சாதகம் செய்து கொண்டிருந்தார். ஒரு கீர்த்தனையை பாடினார். உறவினர் அது என்ன ராகம் என்று கேட்க அவர் ராகத்தின் பெயர் டக்கா என்று கூறினார். உடனே அந்த உறவினர் ரொம்ப சீரியஸாக இம்மாதிரி ஊர்பேர் தெரியாத ராகமெல்லாம் ஏன் பாட வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டார். எல்லோருக்கும் தெரிந்த ராகங்களான காம்போதி, கல்யாணி, தோடி ஆகிய ராகங்களே பாடினால் போதும் என்று உபதேசம் வேறு.

இந்த அழகில் அவர் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்தான். இந்த நிகழ்ச்சியை ஏன் கூறினேன் என்றால், ஒருவர் அட்வைஸ் செய்யும்போது அவர் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறாரா என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது பற்றிப் பேசுகையில் ஒரு வடிவேலு படம் ஞாபகத்துக்கு வருகிறது. சீட்டாட்டம் பற்றி ஒன்றுமே அறியாது, மும்முரமாக ஆடிக் கொண்டிருந்தவர் கையிலிருந்து சீட்டைப் பிடுங்கி கீழே போட்டு அவர் எல்லா பணத்தையும் இழந்ததும், "சீட்டாட்டத்தில் வெற்றி தோல்வி ஜகஜம் என்று வேறு பேசி வெறுப்பேற்றுகிறார். பிறகுதான் தனக்கு சீட்டுக் கட்டுகளில் எவ்வளவு கார்டுகள் இருக்கும் என்பது கூடத் தெரியாது என்பதை தோற்றவரிடம் கூறி நன்கு உதை வாங்குகிறார்.

இப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அது கண்டிப்பாக அவ்வாறு அட்வைஸ் செய்பவர்களை குறிவைத்து அல்ல. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதைக் கேட்டு நடந்து சந்தியில் நிற்கப் போகிறவர்களைப் பற்றித்தான் இப்பதிவு பேசும். என் தமக்கை விஷயத்தில் அவர் அந்த உறவினர் கூறியதை லட்சியமே செய்யவில்லை. அவர் பாட்டுக்கு தனக்கு சரி என்று தோன்றுவதையும் தனது பாட்டு ஆசிரியர் கூறியதையும் கடைபிடித்து சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.

இவ்வாறு விஷயம் புரியாது அட்வைஸ் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தாங்கள் செய்ய நினைப்பதை விவாதிக்காமல் தவிர்ப்பதே நலம். அது சற்று கடினம்தான். ஏனெனில் அவ்வாறு அட்வைஸ் செய்பவர்கள் தாங்கள் தவறான கருத்தை கூறுகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களே அதை முழுமையாக நம்புபவர்கள். அதுவும் ஒன்றுமே தெரியாதவன் யாரோ எங்கோ வேறு சூழ்நிலையில் எழுதியதை படித்து கருத்து கூறும்போது தான் கூறுவதில் உறுதியாக இருக்கும் மன்னர்கள் (அல்லது மன்னிகள்).

இதைத்தான் "The certainty of the ignorant" என்று கூறுவார்கள்.

இன்னும் ஆபத்தானவர்கள், தங்களுக்கு நிறைய கைவைத்தியம் தெரியும் என நம்பி மற்றவர்கள் மேல் அதைத் திணிப்பவர்கள். உங்களுக்கு நான் கூறியது புரியாவிட்டால் பொது இடத்தில் மற்றவர்கள் முன்னிலையில் இரண்டு தும்மல் போடுங்கள். ஜலதோஷம், அதனுடன் சேர்ந்த அல்லது சேராத தலை/மூட்டு/முதுகு வலிகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வைத்திய ஆலோசனைகள் தாராளமாக வழங்கப்படும்.

மேலும் கூறுவேன்.

10 comments:

Prakash said...

உங்களின் அனுபவங்கள் எங்களை போன்ற இளைய தலை முறைக்கு சரியான படிப்பினை.
டோண்டு சார் உங்கள் அற்புதமான அனுபவ கட்டுரைகள் தொடரட்டும்.

உங்களின் ரசிகன்
பிரகாஷ்

Nepolian said...

great articles dondu sir,
please continue your excellent service.
it seems now a days you have reduced your contribution to tamil blog world.please do post more.

dondu(#4800161) said...

பின்னூட்டத்துக்கு நன்றி பிரகாஷ் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

Thanks Nepolian, will do.

Regards,
Dondu N.Raghavan

Jay said...

உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு பள்ளியில் படித்த கட்டுறை 'வெற்றிக்கு என்ன வழி' ஞாபகம் வருகிறது.

இது ஒரு நல்ல ஊக்குவிக்கும் பதிவு.

டோண்டு ஐயாவுக்கு, எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

dondu(#4800161) said...

நன்றி ஜே அவர்களே, உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sivaprakasam said...

<--- அவ்வாறு அட்வைஸ் செய்பவர்களை குறிவைத்து அல்ல. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதைக் கேட்டு நடந்து சந்தியில் நிற்கப் போகிறவர்களைப் பற்றித்தான் இப்பதிவு பேசும். -->
அங்க நிக்கறீங்க நீங்க(அதாவது மிகச் சரியாகச் சொல்கிறீர்கள்)

dondu(#4800161) said...

வாருங்கள் சிவப்பிரகாசம் அவர்களே. அம்மாதிரி சந்தியில் நின்ற ஒருவனை நான் அறிவேன். அவன் பேங்க் ஒன்றில் அதிகாரி. அவனது நண்பன் ஜே.கே. எனப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விசிறி. ஜேகே எங்கோ எப்போதோ எந்த சூழ்நிலையிலோ எழுதியதை வைத்து இவனிடம் அந்த நண்பன் தீவிரமாகப் பேசியிருக்கிறான். வாழ்க்கை எல்லாம் மாயை, பேங்க் உத்தியோகத்தால் எல்லாம் ஆத்மா உயர்வடையாது என்று வடை கடித்து கொண்டே டீயை உறிஞ்சி கொண்டு பேசியிருக்கிறான். அவனுக்கு ஏதேனும் இம்மாதிரி பிதற்றுவதே வேலை.

இந்த அசடுக்கு அது தெரியாது பேங்க் வேலையை உதறிவிட்டு நிஜமாகவே சந்தியில் நின்றது. பிறகு சேது ரேஞ்சுக்கு புலம்பி ஒரு மழை நிறைந்த பகலில் நடுத்தெருவில் உயிரை விட்டது.

போதனை செய்தவன் அவன் பாட்டுக்கு அமெரிக்கா போய் புரொஃபசராக இன்னமும் கொடி கட்டிப் பறக்கிறான்.

இந்த வரிகளை தட்டச்சு செய்யும் போது என் கோபம் அடக்க முடியாது வருகிறது, போதனை செய்தவன் மேல் அல்ல, அந்த அசட்டு மனிதன் மேல்தான் என் கோபம்.

நம்ப முடியாது போனாலும் இது 100% நிஜம். இப்பதிவைப் போட அதுவே மூல காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலசந்தர் கணேசன். said...

மற்றவர்கள் முன்னிலையில் இரண்டு தும்மல் போடுங்கள். ஜலதோஷம், அதனுடன் சேர்ந்த அல்லது சேராத தலை/மூட்டு/முதுகு வலிகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வைத்திய ஆலோசனைகள் தாராளமாக வழங்கப்படும்

ஹா ஹா ஹா

Anonymous said...

"இந்த நிகழ்ச்சியை ஏன் கூறினேன் என்றால், ஒருவர் அட்வைஸ் செய்யும்போது அவர் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறாரா என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்."

100% correct.
Munivelu

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது