நண்பர் மதுசூதனன் அவர்களது இப்பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை இங்கு விரிவாக்குகிறேன். முதலில் அங்கு இட்ட பின்னூட்டம் இதோ. (பதிவை எழுதும் இத்தருணத்தில் அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது).
"ஏதாவது ஒரு துறையில் திடீரென பெரிய முன்னேற்றம் வந்து அதில் வேலை செய்பபர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதில் வேலை செய்பவர்களை அதிக சம்பளம் கொடுத்துத்தான் அமர்த்துவார்கள். உதாரணத்துக்கு அமெரிக்காவில் வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பே. ஆகவே அவ்வாறு வேலைக்கு வருபவர்களுக்கு அதிக சம்பளம். அதே போல ப்ளம்பர்களுக்கு நல்ல கிராக்கி. அவர்கள் வருவாய் பல சமயங்களில் கல்லூரி பேராசிரியரின் சம்பளத்தையும் மிஞ்சி விடும். இது பற்றி பாதி நகைச்சுவையாகவும் பாதி வயிற்றெரிச்சலாகவும் அங்கு பலர் எழுதி விட்டனர்.
இப்போது இங்கே பொட்டி தட்டும் வேலைக்கு வருவோம். நமது மதிப்பு நமக்கு தெரியவில்லை என்பதே நிஜம். நமக்கு இயற்கையாகவே லாஜிக்கில் திறமை உண்டு. அத்துடன் ஆங்கில அறிவையும் சேர்த்து கொள்ளுங்கள். ஆகவேதான் அவுட்சோர்சிங்கிற்கு இந்தியாவை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல சம்பளம் தரவும் தயாராக உள்ளனர். வெளிநாட்டு கம்பெனிகளில் உள்ள ரொட்டீன் வேலைகளுக்கெல்லம் அவுட்சோர்சிங் வந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு இந்த நிலை அப்படியே இருக்கும் வாய்ப்பு உண்டு.
ஆக சம்பளம் கூடக்கூட வசதிகளை பெருக்கி கொள்கின்றனர். அதற்கான விலையையும் தரத் தயாராக உள்ளதால் பல சேவைகளின் விலைவாசிகள் கூடுகின்றன என்பது ஓரளவுக்கு உண்மையே. அதற்கு என்ன செய்ய முடியும்?
இது பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் வருகிறது. அங்கு இன்னும் விரிவாக எழுதுகிறேன்".
இப்போது இப்பதிவுக்கு வருவோம்.
சமீபத்தில் 1956-ல் "அமெரிக்கா அழைக்கிறது" என்னும் தலைப்பில் திருமதி காந்திமதி அவர்கள் தனது அமெரிக்க அனுபவங்களை ஆனந்த விகடனில் ஒரு தொடரில் எழுதி வந்தார். அவர் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரி இவரை தான் வேலை செய்யும் இடங்களுக்கு தனது படகு போன்ற காரில் ஏற்றிச் சென்றார். ஆம், இடங்கள்தான். அப்போதுதான் காந்திமதி அவர்களுக்கு வீட்டு சொந்தக்காரி பல வீடுகளில் பாத்திரம் கழுவி, துணி தோய்த்து, வீடு மெழுகி சம்பாதிப்பவர் என்ற உண்மை உறைத்ததாம். பல இடங்களில் வீடுகளில் உள்ள மனிதர்கள் வெளியே சென்றிருப்பார்கள். இந்த அம்மணி தனக்கு கொடுக்கப்பட்ட மாற்று சாவியை வைத்து வீட்டைத் திறந்து வேலை செய்து விட்டு செல்ல வேண்டியது. வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (உதாரணத்துக்கு ஒரு மணி நேரம்). ஆகவே அதற்கான சம்பளம் ஏற்கனவே ஒரு கவரில் வைத்து விட்டு சென்றிருப்பார் வேலை தருபவர். இந்த அம்மணி அதை தன் பையில் போட்டு கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான் பாக்கி. காந்திமதி அவர்கள் கூடச் சென்ற தினம் வேலை செய்த் பெண்மணி அவரை ஹாலில் உட்கார வைத்து விட்டு டி.வி.யை ஆன் செய்து விட்டு, குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு கூல் ட்ரிங்கை இவர் கையில் திணிக்கிறார். அந்த உரிமையும் உண்டு.
காரணம் என்ன? மேலே கூறிய ஆள் பற்றாக்குறைதான். அங்கும் ஓரளவுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னும்போது வெளிநாடுகளிலிருந்து வேலையாளர்களள வருவித்து கொள்கின்றனர். மெக்சிகோக்காரர்கள் பலர் சாரிசாரியாக வருகின்றனர். அவர்களில் பலரிடம் தேவையான வேலை அனுமதி ஆவணங்கள் இருக்காது. ஆகவே அவர்கள் ரகசிய முறையில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு கட்டை சம்பளம்தான். வேலை உத்திரவாதமும் இல்லை. ஏனெனில் இருக்கும் குறிப்பிட்ட வேலைகலுக்கு பலர் போட்டி இடுகின்றனர். இதுதான் ஐயா உலகம். இது சரியா தவறா என்று கூற நாம் யார்?
இன்னொரு சுவையான உதாரணம் அகாதா கிறிஸ்டியின் "4.50 from Paddington" என்னும் நாவலில் பார்க்கலாம். அதில் வரும் லூசி என்னும் பெண்மணி கணிதத் துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் அக்காலக்கட்டத்திற்கேற்ப இங்கிலாந்தின் நிலையை அவதானித்து தேர்ந்தெடுத்த வேலை மேலே சொன்ன வீட்டுவேலைதான். அவர் விஷயம் வேறு. அவர் ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே ஹவுஸ்கீப்பராக செல்வார். அக்காலத்தில் சம்பந்தப்பட்ட வீட்டினர் சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வர். பல சமயங்களில் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பர். அவர்கள் வீட்டு நிர்வாகத்தை அவர் அச்சமயத்தில் சரியான நிலையில் நடத்துவார். ஆனால் அவரிடம் என்ன கஷ்டம் என்றால் எங்குமே நிரந்தரமாக இருக்க மாட்டார். எவ்வளவு சம்பளம் தருவதாகக் கூறினாலும் அவரிடம் அது நடக்காது. ஏனெனில் அடுத்து பல மாதங்களுக்கு அவரை ஏற்கனவே பலர் புக் செய்திருப்பார்கள். பெண்மணியின் சௌகரியத்துக்கு ஒரு குறையும் இல்லை. அவர்பாட்டுக்கு வேலைகளை கச்சிதமாகச் செய்துவிட்டு தனது கணித அறிவை மேம்படுத்தும் வேலையில் இருப்பார். இது பாட்டுக்கு இது, அதுபாட்டுக்கு அது என்று இருக்கும் இவர் என்னைக் கவர்ந்தார். அகாதா கிறிஸ்டியின் அந்த நாவலை நான் சமீபத்தில் 1966-ல் படித்ததிலிருந்து இவரே என் ரோல் மாடல்.
அவரைப்போல நான் இருக்க முயற்சி செய்ததைப் பற்றி எனது ஐ.டி.பி.எல். நினைவுகளில் எழுதியுள்ளேன். என்ன, அவரைப் பற்றி அங்கு பெயரிட்டு குறிப்பிடவில்லை. ஆகவே இத்தருணத்தில் கூறிவிட்டேன். இப்போது மட்டும் என்ன, அதே நிலைதான் தொடர்கிறது.
அதாவது வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவைப்படும் என்பதைத் தீர்மானித்து அதை அவர்களுக்கு அளிப்பதுதான் அது. அதே சமயம் அதற்கான விலையையும் பெற்றுவிட வேண்டும். அதைத்தான் நண்பர் மாசிவக்குமாரிடம் கூறினேன். சில நாட்களுக்கு முன்னால் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவருக்கு சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்படி ஒரு கோரிக்கை வந்துள்ளதால் என்ன ரேட் கேட்கலாம் என்பதைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் அவருக்கு கூறிய ஆலோசனையின்படி நடந்து அவர் அந்த வேலையும் செய்து பணமும் பெற்றதை பிறகு எனக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரிடம் கூறிய முக்கிய ஆலோசனையே ரேட்டை கணிசமாக உயர்த்திச் சொல்ல சொன்னதுதான். அதில் உறுதியாக இருக்குமாறு அறிவுரை கூறினேன். அவ்வாறே செய்தார். ஏனெனில் சீன மொழிபெயர்ப்பாளர்கள் அதுவும் நண்பர் சிவகுமார் அளவுக்கு பொறியியல் பின்னணி உள்ளவர்கள் சென்னையில் இல்லை என்றே கூறிவிடலாம். சாதாரணமாக அவர் ரொம்ப சாஃப்ட் பேர்வழி. அவரை விட்டால் அடிமாட்டு விலைக்கு செய்திருப்பார். ஆகவேதான் எனது அறிவுரையை வலியுறுத்தி கூறினேன். அதே சப்ளை மற்றும் டிமாண்ட் கோட்பாடுதான்.
அதே போலத்தான் மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அதிக சம்பளம். இதை பொறாமையுடன் பார்த்து விமரிசனம் செய்வது "கற்றது தமிழ்" என்னும் படத்தில் இருப்பதாக அறிகிறேன். இதில் இன்னொரு வேடிக்கை. படத்தை எடுத்தவரோ, அதில் நடித்தவர்களோ பெறுவது பெரிய சம்பளங்கள். அது யாருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் ஜெமினி நிறுவனம் எடுத்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. அவர்களது பல படங்களில் ஏழைகள் நல்லவர் எனவும் பணக்காரர்கள் சாதாரணமாகக் கெட்டவர்கள் என்றும் படமாக்கப்பட்டிருக்கும். அதைக் கூறியே வாசன் இன்னும் பெரிய பணக்காரர் ஆனதுதான் நடந்தது. தனது படங்களில் புரட்சி பேசும் தங்கர் பச்சான், ஒரு மேக்கப் பெண்மணி தனது சம்பளத்தை தருமாறு வற்புறுத்தியதால் அப்பெண்மணி செய்தது வேசித்தனம் என்னும் கூறும் அளவுக்கு சென்றது பெரிய நகைமுரண்தானே. அதே சமயம் அப்படத்தில் அவர் பெற்றது என்னவோ பெரிய சம்பளம்தானே.
வாசனை பற்றி எனது கருத்து? அவர் மேதை. அவரைத்தான் நாம் ரோல்மாடலாக வைத்து கொள்ள வேண்டும். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு மார்க்கெட் ரேட்டை விட அதிக சம்பளம் கொடுத்தவர் அவர். அதே சமயம் தனது விஷயங்களையும் பார்த்து கொண்டவர் அவர். அவரிடம் மேலே நான் இப்பதிவில் குறிப்பிட்ட விஷயத்தை குறித்து சிலர் கேட்ட கேள்விகளுக்கு அவர்வ் அளித்த பதிலை நினைவிலிருந்து தருகிறேன். "ஐயா ஒரு சராசரி மனிதன் வேலையிலிருந்து களைத்து வரும்போது அவனுக்கு உல்லாசம் தேவைப்படுகிறது. அவன் மனதுக்கு பிடித்த விஷயத்தை சொன்னால்தான் அவன் படத்துக்கு வருவான். நான் குறி வைப்பது தரை டிக்கெட்டுக்கு வரும் ரசிகர்களே. படம் பிடித்திருந்தால் பல முறை பார்ப்பார்கள். ஆனால் பால்கனி சீட்காரர்கள் ஒரு முறைக்கு மேல் ஒரே படத்துக்கு வருவது அபூர்வம். அதிலும் அவர்கள் முடிதால் ஓசி பாஸ் பெற முயற்சிப்பவர்கள்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
4 hours ago