12/31/2007

பாகிஸ்தான் கிளறிய மேலும் சில எண்ணங்கள்

எனது முந்தைய பதிவு பாகிஸ்தான் பற்றிய வேறு சில எண்ணங்களுக்கு வழிவகுத்தது.

உதாரணத்துக்கு நான் எழுதிய இந்த நீதிக்கதை பாகிஸ்தானில் முடிவடைகிறது. சரி, சரி அந்தக் கதை சற்று டூ மச் என்றுதான் இப்போது எனக்கும் தோன்றுகிறது. முரளி மனோஹரும் அதைத்தான் பலமுறை சொன்னான். :))))))))))

என் தந்தையின் சக நிருபர் ராமச்சந்திரன் அவர்கள் சில காலம் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். பிறகு ஹிந்துவில் கல்கத்தா நிருபராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு முறை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் ஃபீல்ட் மார்ஷல் அயூப்கானை பேட்டி எடுக்க சமீபத்தில் அறுபதுகளில் சென்றுள்ளார். கூடவே வேறு பத்திரிகை நிருபர்கள் கூட. திடீரென அவர் ராமசந்திரன் அவர்களைப் பார்த்து "உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே" எனக் கேட்க அவர் தான் அயூப் கான் கீழே பணி புரிந்திருப்பதை கூறியுள்ளார். அவ்வளவுதான் உடனே பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் அயூப்கான். பிறகு ராமச்சந்திரன் அவர்களை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு தந்து, அவ்வாறு வந்தவரை தனது விருந்தோம்பலில் திக்குமுக்காட வைத்து விட்டார். அரசு விருந்தினராக அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவர் எங்கே வேண்டுமானாலும் பாகிஸ்தானில் பயணிக்கலாம் என்று கூறி சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அவருக்கு ஒத்துழைப்பு தர ஆணை பிறப்பியுள்ளார்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நான் தில்லியில் இருந்தபோது காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா அவர்களைப் பற்றிய படம் வெளிவந்தது. காந்தி படத்தை பார்த்த எனக்கு அதையும் பார்க்கும் ஆவல் வந்தது. ஆகவே பாகிஸ்தான் ஹைகமிஷனின் கலாச்சார அதிகாரிக்கு ஃபோன் போட்டு அப்படம் ஹைகமிஷனால் தில்லியில் திரையிடப்படுமா என ஆவலுடன் கேட்டேன். மிகவும் கனிவான முறையிலேயே பதில் வந்தது. அவ்வாறு உத்தேசம் அப்போதைக்கு இல்லல என்றும், அப்படியே வந்தால் எனக்கு கண்டிப்பாக அழைப்பு அனுப்புவதாகவும் அவர் கூறினார். நான் சென்னையைச் சேர்ந்தவன் என்றதும் வணக்கம் என்று தமிழில் வேறு கூறினார்.

கம்யூனிஸ்ட் எம்.பி. ராமமூர்த்தி அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி குமுதத்தில் எழுபதுகளில் படித்திருக்கிறேன்.

வருடம் 1972. சிம்லா ஒப்பந்தத்துக்காக புட்டோ அவர்கள் தில்லியில் இருந்தார். அவருடன் கூட அவர் மந்திரிசபை சகாக்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென்று பி. ராமமூர்த்தி அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் மந்திரி, அவரைப் பார்க்க விரும்புவதாக. திகைப்படைந்தாலும் இவரும் போயிருக்கிறார். மந்திரியிடம் இவர் மரியாதையாக அழைத்து செல்லப்பட்டார். ராமமூர்த்தி அவர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசத் துவங்க, அவரோ தூய தமிழில் "என்ன ராமமூர்த்தி சார், தமிழில் பேச ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்களே" என்று கேட்டாரே பார்க்கலாம்!

பிறகுதான் தெரிந்தது, அவர் 1947 - க்கு முன் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் இருந்திருக்கிறார். ராமமூர்த்தி அவர்களும் திருவல்லிக்கேணியுடன் சம்பந்தம் உடையவர். திருவல்லிக்கேணி பாசம் விட்டுப் போகுமா? சம்பந்தப்பட்ட மந்திரியின் பெயர் ஆகா ஷஹி அல்லது ஆகா இலாஹி.

நான் ஏற்கனவே கூறியபடி பாக் டி.வி. நாடகங்கள் அருமையாகவே இருக்கும். உருது மொழியில் அவை இருப்பது மேலதிக போனஸ். தென்னிந்தியர்களுக்கு அதிகப் பாந்தமாகவும் இருக்கும், ஏனெனில் முறைப்பெண், முறை மாப்பிள்ளை கதைகள் அங்கும் அதிகம். வட இந்தியாவில் உறவு முறை திருமமணங்கள் இந்து லா பிரகாரம் தடை செய்யப்பட்டவை. அஞ்சும் மூணும் எட்டு அத்தை மகளை கட்டு என்றெல்லாம் சொன்னால் முட்டியைப் பேர்த்து விடுவார்கள். கணவனை மாமா என்று அழைத்தால் அவர்களுக்கு இதயமே நின்று விடும்.

Sardar Farooq Ahmad Khan Leghari (Urdu: سردار فاروق احمد خان لغاری) அவர்கள் பாகிஸ்தானின் அதிபராக தொண்ணூறுகளில் இருந்துள்ளார். அவர் ஒரு முறை அபத்தமாக என் கனவில் வந்தார். அவரிடம் சுத்த உருதுவில் கதைத்தேன். பாக் டி.வி. சீரியல்களை பற்றி பேச நான் ஆரம்பித்ததுமே அவை போர் என்று கலங்கினார் அவர். நான் விடவில்லையே. டைட்டில்ஸ்கள் போடும்போது உருது லிபியில் போடுவதுடன்கூடவே தேவ நாகரி லிபியிலும் போட்டால் என்னைப் போன்ற உருது தெரிந்த, ஆனல் உருதுவை தேவநாகரியில் மட்டும் படிக்க முடிந்த இந்தியர்களும் பயன் பெறுவார்களே என்று மேலும் ஆர்க்யூ செய்தேன். ஹிந்தி திரப்படங்களில் டைட்டில்களை ஆங்கிலம், தேவநாகரி மற்றும் உருதுவில் போடுவதையும் சுட்டிக்காட்டினேன். மனிதர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை. ரொம்பவும் போர் அடித்து விட்டேன் போலிருக்கிறது. கனவு வந்த சில நாட்களிலேயே அவர் அதிபர் பதவியை விட்டுவிட்டார். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Anonymous said...

இடது சாரி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மத அடிப்படை பிரிவினவாத அரசியல் நடத்துகின்றனர்? இதற்கு எதாவது தீர்வு உண்டா.
இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமை வளர்ப்பது எப்படி?

Any ideas?

dondu(#11168674346665545885) said...

போலியாக மதச்சார்பின்மை பறைசாற்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இந்து முஸ்லிம் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அதிலும் காங்கிரஸ் தனக்கு தேவையென்றால் சர்தார்ஜிகளை அழிக்கத் தயங்கவில்லை. 1984 தேர்தலில் அவர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து ஓட்டு வேட்டை ஆடியது காங்கிரஸ் கட்சி.

குஜராத் ஒன்றில்தான் கடந்த ஐந்து ஆண்டுகள் கலவரம் எதுவும் நடக்கவில்லை. அங்கு பல மக்கள் முன்னேற்றத் திட்டங்கள் நடந்து குஜராத் முன்மாதிரியான மாநிலம் ஆயிற்று என்பதை வேண்டா வெறுப்பாக திட்டக் கமிஷனும் ரிசர்வ் பேங்கும் ஒத்து கொள்ள வேண்டியதாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவிஷா said...

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஆசிஃப் இக்பால் கூட ஒரு முறை எம்.ஜி.ஆரிடம் தமிழில் பேசியதாகவும், எப்படி என்று கேட்டதற்க்கு, தனக்கு சென்னைத் தொடர்பு உண்டு என்று சொன்னதாகவும் ஒரு தகவல்! இங்கே கூட பல பாகிஸ்தானியர்கள் (50 வயது கடந்தவர்கள்) எதாவது ஒரு வழியில் இந்தியாவுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள்! நான் முன்னே பின்னூட்டமிட்டது போல், வயதான் பாக்'கிகள் இந்தியாவுடன் சொந்தம் கொண்டாட வேண்டுகிறார்கள்! Not those young ones in their 20's, 30's or even 40's. ஆச்சர்யப்படும் விதத்தில், ரொம்பவும் Religiously fanatic-ஆக இருக்கிறார்கள்! ரொம்பவும் பழமையை நேசிக்கிறார்கள்! நாமெல்லாம் 21'ம், 22'ம் நூற்றாண்டை நோக்கி செல்ல, அவர்கள் என்னவோ 10'ம் நூற்றாண்டுக்கு செல்வதாக எனக்கு தோன்றுகிறது!

dondu(#11168674346665545885) said...

ரவீஷா அவர்களே,

ஆசிஃப் இக்பால் ஹைதரபாத்துக்காக ரஞ்சி ட்ராஃபி மேட்ச் ஆடியுள்ளார். ஒரு லீக் மேட்சுக்காக சென்னை திருவல்லிக்கேணி மெரீனா மைதானத்திலும் ஆடியுள்ளார்.

மேலும் நான் சந்தித்த பாக்கிஸ்தானிக்கு அப்போதைய வயது 25. அதாவது 1955-ல் பிறந்தவர். இந்திய வாசனை துளியும் கிடையாது. இருப்பினும் அவர் ஹிந்தி படங்கள் மூலம் இந்தியாவை மதித்தவர். அது தெரிந்துதன் பாக்கிஸ்தானில் இந்தியப் படங்களை அனுமதிப்பதில்லை. அது வேறு விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dondu sir, forget about politician's stunt on secularism.

But what is YOUR stand on secularism?

Selvan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது