12/22/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.12.2010

நண்பர்களுக்கு நன்றி
இந்தப் பதிவை போடும்போது அது அந்த குறிப்பிட்ட வகைக்கான கடைசி பதிவு என்பது எனக்கு அப்போது தெரியாது.

எனது ஹிட் கவுண்டர் 8 லட்சம் எண்ணிக்கையை தாண்டியதற்காக போட்டது அப்பதிவு. இன்று என்ன தோன்றியதோ, பேசாமல் ஹிட் கவுண்டரையே தூக்கி விட்டேன் (அப்போதிலிருந்து 27000-க்கும் மேலாக ஹிட்கள் வந்திருந்தன). அந்த ஸ்பீடில் வரும் பிப்ரவரி மாதம் போல 9 லட்சம் தாண்டியிருக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் திடீரென இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தோன்ற, கவுண்டரையே ஒரு க்ஷணநேர தீர்மானத்தில் தூக்கி விட்டேன். இப்போது விடுதலையானது போன்ற உணர்வு.

பொய்யை நிலைநிறுத்துவது மிகக்கடினம்
நான் மத்தியப் பொதுப் பணித்துறையில் வேலை செய்த போது பால் பாக்கியசாமி என்னும் ஒப்பந்தக்காரர் எனக்கு மிகப் பரிச்சயமானார். அவர் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்து அவரும் அவர் தாயும் தந்தை வீட்டாரால் விரட்டப்பட்டு அன்னையின் அன்னை வீட்டில் வளர்ந்தவர். அப்போது தான் பட்ட அவமானங்கள், தான் அவற்றை சமாளித்த விதம் எல்லாவற்றையும் என்னிடம் விவரிப்பார்.

அவர் கதை விடுவதாக எனக்கு முதலில் சந்தேகம். ஆகவே பல குறுக்கு கேள்விகள் பல தருணங்களில் வெவ்வேறு கோணங்களிலிருந்து போட்டேன். எல்லாவற்றுக்கும் பொருத்தமான பதில்களே வந்தன. உண்மையைக் கூறியிருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அப்போதுதான் உண்மை கூறுவதன் பலனை புரிந்து கொண்டேன். பொய் சொல்ல ஆரம்பித்தால் எந்த பொய்யை எங்கு யாரிடம் கூறினோம் என்றெல்லாம் நினைவில் வைக்க வேண்டும் சள்ளை பிடித்த வேலை. கால விரயம் வேறு. உண்மை கூறிவிட்டால் நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டே போகலாம்.

நான் பொறியியல் கல்லூரியில் கற்க முடியாத பல பாடங்களை அவரிடமிருந்து கற்றேன். மறக்க முடியாத மனிதர் அவர்.

உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் பொய்கள் அனேகம். அதுவும் சமயோசிதப் பொய்கள் சள்ளை பிடித்தவை. “ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களைக் கூறுவது” தவிர்க்க முடியாததாகி விடும்.

ராசா, கருணாநிதி, நீரா ராடியா ஆகிய பலே பேர்வழிகள் இனிமேல் கூறும் பொய்களை வகைப்படுத்தினாலே போதும்.

குற்றமும் எல்லா நேரத்திலும் கண்டுபிடிக்கப்படாமல் தப்பிக்காது
இதற்கு கராலரிதான் குற்றங்கள் விஷயத்திலும். மத்தியப் பொதுப்பணித்துறையில் அளவுகளை பதிக்கும் புத்தகம் (measurement book - m.book) என்பதை ஒவ்வொரு பொறியாளரும் பாவித்தாக வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் செய்யும் வேலைகளை அளவெடுப்பதை உடனுக்குடன் பதிக்க வேண்டும். மிஞ்சிப் போனால் அன்றைய நாள் முடியும் முன்னரே பதித்து விடுவது நல்லது.

என் நண்பன் கணேசன் சோம்பேறி. அவன் எல்லாவற்றையும் தனித்தாளில் குறித்துக் கொண்டு பிறகு சாவகாசமாக முந்தைய தேதியிட்டு நிரப்புவான். அவன் அவ்வாறு நிரப்பியதை ஒரு நாள் என்னிடம் எதேச்சையாகக் காட்ட, நான் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமையின் துணையால், அப்புத்தகத்தில் குறிப்பிட்ட முந்தைய தேதி ஞாயிற்றுக் கிழமையாயிற்றே என எடுத்துக் கூற அவன் மூன்றாம் பேஸ்த் அடித்தது போல ஆனான். அதை வைத்து பில்லும் அனுப்பி அது டிவிஷன் ஆஃபீசில் பாஸ் ஆகி ஒப்பந்தக்காரர் பணமும் பெற்றாயிற்று. ஆகவே தவற்றைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இல்லைதானே.

யாரும் பார்க்காதவரை க்ஷேமம் என்றுதான் அவனைத் தேற்றினேன். பல நாட்களுக்கு அவனுக்கு உதறல்தான். என்ன செய்வது. நானே அவ்வாறு ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்லி மூன்றாண்டுகளுக்கு சிக்கலில் மாட்டிக் கொண்டவன்தானே. அக்கதை இதோ.

என் அத்தையின் கணவர் திடீரென இறக்க அத்தையும் அவரது ஐந்து குழந்தைகளும் சென்னையில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் குடிபுகுந்தனர். என் வயதுடைய ஸ்ரீதர் மற்றும் என் அக்காவின் வயதுக்கு ஈடான அவன் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஸ்ரீதர் என்னைவிட 4 மாதம் சிறியவன். ஆனால் ஒரு வகுப்பு அதிகமாக படித்தான் (நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்குத் தாவியிருக்கிறான்). அவனை என் பள்ளியில்தான் தெலுங்கு மீடியம் கிளாசில் சேர்த்தார்கள். (அவன் தந்தை இறந்த சமயம் அவர் ஆந்திராவில் பத்தாண்டுகளாக போஸ்டிங்கில் இருந்தார்).

எல்லோரிடமும் அவன் எனது சொந்த தம்பி என சும்மா கூறிவைத்தேன். அது பிறகு பல சங்கடங்களை வரவழைத்தது. முதலில் என் எட்டாம் வகுப்பு உபாத்தியாயர் ஜயராம ஐயங்காரிடம் மாட்டிக் கொண்டேன். அவர் ஸ்ரீதரிடம் “உனக்கும் ராகவனுக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம்” என யதார்த்தமாகக் கேட்டு வைக்க, அந்த உண்மை விளம்பி 4 மாதம் என்றான். வாத்தியார் தான் குடித்துக் கொண்டிருந்த காப்பியை துப்பி அவருக்கு புரைக்கேறிவிட்டது. பிறகு நான் ஒருவாறு சமாளித்து “இல்லை, சார், ஒரு வயது 4 மாதங்கள்” எனக் கூறி சமாளித்தேன்.

ஸ்ரீதரின் வகுப்பாசிரியர் எவெரெஸ்ட் அவர்கள் (அவரது உண்மைப் பெயர் தெரியாது, விசு அவர்கள் மன்னிப்பார் என நினைக்கிறேன். பிறகுதான் அவர் பெயர் ஸ்ரீனிவாசாசார்லு என்பதை அறிந்து கொண்டேன்) இன்னும் டீப்பாக சென்றார். “ஆக உன் தந்தை ஆர். நரசிம்மன் இவனுக்கு தந்தை அல்லவா”? எனக்கேட்டார். நான் ஆமாம் எனச் சொல்லி வைக்க, பிறகு அவன் என்ன் அவரை தனது கார்டியனாக ஸ்கூல் அப்ப்ளிகேஷன் ஃபார்மில் குறிப்பிட்டுள்ளான் என ஒரு கூக்ளியை வீசினார். அசருவேனா நான், என் அத்தைக்கு பிள்ளைக் குழந்தை இல்லாததால் அவன் குழந்தையாக இருக்கும்போதே ஸ்வீகாரம் கொடுத்து விட்டார்கள் என ஒரு சிக்ஸர் அடித்தேன். நல்ல வேளையாக மேலே கேள்விகள் வரவில்லை. நான் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டும்வரை மனதில் லேசாக உதறல்தான்.

இதை விடுங்கள். அலுவலகத்துக்கு லேட்டாக வரும்போது காரணத்தை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் ஒரு பெண்மணி தனக்கு ப்ரெக்னன்சி டெஸ்ட் என எழுத, அவள் என்ன எழுதினாள் என்பதையும் கவன்க்காது பின்னால் வந்த 3 ஊழியர்கள் அதையே டிட்டோ என குறித்த கூத்தும் நடந்திருக்கிறது.

ஆனால் நான் இங்கு கூற விரும்புவது ஒரு சீரியசான கிரைம் விஷயம். இரண்டே கால் கிலோ தங்கத்துக்காக கொலை செய்த நேமி சந்த் என்ற குற்றவாளி மாட்டியதும் மேலே சொன்னது போலத்தான். செல்பேசி Tower lapping signal என்ற தொழில் நுட்பம் பற்றி அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் முக்கியமாக மாட்டியிருந்திருக்கிறான்.

ஆனால் இச்செய்தியை நான் இங்கே கொணர்வதற்கான முக்கியக் காரணமே வேறு. இறந்துபோன சுரேஷ்குமாரின் குடும்பம் அனாதையாக நின்றது. சுரேஷ்குமாரிடம் நகைகளை விற்பதற்காக கொடுத்து வைத்திருந்த சுனிலிடம் போலீசார் அந்த நகைகளை திருப்பிக் கொடுத்து விட்டு ஒரு வேண்டுகோள் வைத்தனர். அதாவது மனிதாபிமான அடிப்படையில் இறந்தவர் குடும்பத்துக்கு ஏதேனும் உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் சுரேஷ் குமாரின் வாரிசுகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார். அது மட்டுமல்ல, இறந்தவரின் மகன்கள் படிக்கும் தனியார் பள்ளியின் நிர்வாகி அந்த மாணவர்கள் பிளஸ் டூ வரைக்கும் தனது பள்ளீயிலேயே இலவசமாக படிக்க உதவி செய்துள்ளார். மனித மனத்தின் அதல பாதாள வீழ்ச்சியை காட்டிய இதே குற்றம், அதே மனித மனத்தின் எவரெஸ்ட் உச்சியையும் காட்டியுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

pt said...

நண்பர்களுக்கு நன்றி
இந்தப் பதிவை போடும்போது அது அந்த குறிப்பிட்ட வகைக்கான கடைசி பதிவு என்பது எனக்கு அப்போது தெரியாது.

எனது ஹிட் கவுண்டர் 8 லட்சம் எண்ணிக்கையை தாண்டியதற்காக போட்டது அப்பதிவு. இன்று என்ன தோன்றியதோ, பேசாமல் ஹிட் கவுண்டரையே தூக்கி விட்டேன் (அப்போதிலிருந்து 27000-க்கும் மேலாக ஹிட்கள் வந்திருந்தன). அந்த ஸ்பீடில் வரும் பிப்ரவரி மாதம் போல 9 லட்சம் தாண்டியிருக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் திடீரென இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தோன்ற, கவுண்டரையே ஒரு க்ஷணநேர தீர்மானத்தில் தூக்கி விட்டேன். இப்போது விடுதலையானது போன்ற உணர்வு.

congrats

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது