12/02/2010

டோண்டு பதில்கள் 02.12.2010

LK
கேள்வி-1: யுனிகோட் பிரச்சனை பற்றி உங்கள் கருத்து?
பதில்: கிரந்த எழுத்துக்கள் சேர்ப்பதைத்தானே கூறுகிறீர்கள்? கூடுதலாக எழுத்துக்கள் வந்தால் என்ன பிரச்சினை? தேவையானவர்கள் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விடப்போகிறார்கள்.

விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்திரி மந்திரங்கள் ஆகியவை சரியான உச்சரிப்புடன் சொல்லப்பட வேண்டியவை. அவற்றை சொல்லும் ரிதம் முதற்கொண்டு சரியாக இருத்தல் அவசியம். அப்போதுதான் அவற்றின் பலன் கிடைக்கும். அது மட்டுமல்ல, தவறான உச்சரிப்பால் விபரீதங்கள் ஏற்படும். ஆகவே, வடமொழி தெரியாதவர்கள் அதைத் தமிழில் வைத்துப் படிக்க அந்த கிரந்த எழுத்துக்கள் தேவை.

அதனால்தானோ என்னவோ இதை பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதவர் சண்டையாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இது வருந்தத் தக்கது.

சுழியம்
கேள்வி-2: சுப்பிரமணிய சுவாமி பேட்டியில் இவ்வாறு சொல்லுகிறார்: ////''கணவரின் மரணத்துக்கு துணை போனவர்கள், பெற்ற தாயிடமே செயினை பறித்துக்கொண்டு ஓடி வந்தவர்கள் என்றெல்லாம் பார்த்ததுதான் இந்திய அரசியல்!/// அப்படியாக கணவரின் மரணத்திற்குத் துணை போனவர், பெற்ற தாயின் செயினைப் பறித்துக்கொண்டு வந்தவர் ஆகியோர் யார் யார்?
பதில்: சுப்பிரமணியன் சுவாமியிடமே இக்கேள்வியைக் கேட்டிருபது நலம், இருப்பினும் இங்கே எனக்குத் தோன்றும் பதிலை அளிக்கிறேன்.

ராமாயணத்தில் பரதன் ராமரது சிம்மாசனத்தில் அவரது பாதுகையை வைத்து 14 ஆண்டுகளாக அவருக்காக ராஜ்யத்தை காப்பாற்றி வைப்பது சாதாரண டீஃபால்ட் நிலைமையாக இருந்ததில்லை. அரியணைக்காக கூடப்பிறந்தவர்களைக் கொன்று, பெற்ற தாய் தந்தையரையே சிறையில் வைத்து, கொலை செய்வித்தவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்லா எல்லா நாடுகளிலும் நடந்துள்ளன. இலங்கை மகாவம்சத்தில் நடக்காத கொலைகளா? ஆகவே இதை இந்திய அரசியலில் மட்டுமே பார்ப்பதாக சுவாமி கூறுவது அலட்டலே.

தமிழகத்திலேயே ராணி மங்கம்மாவை அவளது மகனே தனது மனைவி ராணி மீனாட்சியின் பேச்சைக் கேட்டு சிறையில் வைத்தான். தஞ்சை நாயக்க அரசர்கள் ஒவ்வொருவராக இவ்வாறே கொலையுண்டு ஒழிந்தனர்.

ஆகவே உதாரணங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் இப்போது இருப்பவர்களை உதாரணம் காட்டுவது மான நஷ்ட வழக்குகளுக்கு தாம்பூலம் வைத்து அழைப்பதற்கு சமம்.

ஆனால் ஒன்று, இந்திரா காந்தி கொலை வழக்கில் கொலையாளிகள் சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோரின் வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவர்கள், ராஜீவே தன் அன்னையை கொலை செய்விக்க ஏற்பாடுகள் செய்திருக்கக் கூடிய சாத்தியக்கூற்றையும் வைத்து வாதாடினார் என அக்கால கட்டங்களில் பேப்பரில் படித்துள்ளேன்.


பார்வையாளன்
கேள்வி-3: தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஸ, ஷ, ஹ போன்றவற்றை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்.. இந்த எழுத்துக்கள் இல்லாமல் போவது ஆங்கில கலப்புக்கு வழி வகுக்கும் என நினைக்கிறேன்..
உதாரணமாக..பசு(s) மோதி பசு சாவு.., (j)சார்(j)ச் புச்(sh) மீது சூ(sh) வீச்சு
என எழுத ஆரம்பித்து விடுவார்கள் என அஞ்சுகிறேன்.. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?

பதில்: அவ்வாறும் சிலர் எழுதலாம். நமக்கென்ன, நாம் நன்றாக எழுதுவோமே.

அதே சமயம், ஸ்பெயின் என்பதை இசுபானியா என எழுதுபவர்கள் ஸ்டாலினை மட்டும் ஏன் இசுடாலின் என எழுதத் துணிவதில்லை என நீங்கள் யோசித்ததுண்டா?

மேலே கிரந்த எழுத்துக்கள் பற்றி இன்னொரு கேள்வியில் நான் கொடுத்த பதிலையும் பார்த்துக் கொள்ளலாம்.

கேள்வி-4: இந்த ஊழல் வரும் தேர்தலில் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்குமா?
பதில்: கடந்த 20 வருடங்களாக பார்த்து வரும் டிரெண்ட் என்னவென்றால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கட்சி மாறுகிறது. இப்போதும் அது நடக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மற்றப்படி ஊழலை எல்லாம் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு வராத வரை பொது மக்கள் கண்டுக் கொள்வதில்லை.

அப்படித்தான் சமீபத்தில் 1977-ல் அவசரநிலை கொடுமைகளை நேரடியாக அனுபவிக்காத தமிழக, ஆந்திர மக்கள் காங்கிரஸ் அதிமுக அணிக்கு லோக்சபா தேர்தலில் அமோக ஆதரவு தந்தனர். அதுவே வட இந்திய மானிலங்களில் காங்கிரஸ் பிளாங்கி அடித்தது, ஏனெனில் குடும்பக் கட்டுப்பாடு என்னும் பெயரில் பலருக்கு மானாவாரியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பலருக்கு ஃப்யூஸ் பிடுங்கப்பட்டது. அதை பொது மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை.


வஜ்ரா
கேள்வி-5: டோண்டு "கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களா?" என்பதற்கு ஒரு சிரிய விளக்க பதில் போட்டால் நன்றாக இருக்கும்.
பதில்: கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி). இந்திய மொழியான மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியவையே ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை பர்மிய மொழி, தாய் மொழி, சிங்களம் முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது[1]. பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை பல்லவ கிரந்தம் என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன.
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம். (நன்றி விக்கிபீடியா)

சமீபத்தில் 1959-60 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, எங்கள் தமிழாசிரியர் பத்மநாப ஐயங்கார் அவர்கள் எங்களுக்கு கிரந்த எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார். வடமொழியை தேவநாகரி, தெலுங்கு ஆகிய மொழிகளுடன் கூடவே கிரந்தத்திலும் எழுதலாம் என எடுத்துரைத்தார்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டப்படி வடமொழி ஸ்லோகங்களுக்கு உச்சரிப்பு ரொம்ப முக்கியம். அதில் தவறு நேர்ந்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்பதை அவர் அழுத்தமாய் சொல்லி எங்களுக்கு புரிய வைத்தார்.

கிரந்தத்துக்கு தமிழகத்தில் நீண்ட சரித்திரம் உண்டு. அதை நான் முழுமையாக கற்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே. அடுத்த ஆண்டே பொறியியல் பிரிவில் சேர்ந்ததால் பலியானது தமிழ் படிப்பே (சிறப்புத் தமிழ்).


naarayanan
கேள்வி-6: கருணாநிதியின் வீரத்தைப் பற்றிக் கூறும் போது 'ஓடாத ரயில் முன்' தண்டவாளத்தில் படுத்தது மற்றும் குடமுருட்டி குண்டு இரண்டையும் அடிக்கடி குறிப்பிடுவார்கள். இந்த குடுமுருட்டி குண்டு விவகாரம் என்பது என்ன? விளக்கவும்.
பதில்: குடமுருட்டி குண்டு என்பது ஒரு பெரிய ஜோக். இந்த உரலில் அதுபற்றிக் கூறப்பட்டுள்ளதை நான் அக்காலகட்டத்திலேயே ப்டித்துள்ளேன். சோ ரொம்ப நாட்களுக்கு அதை வைத்து கலைஞரை கலாய்த்தார்.

கேள்விகள் ஏதேனும் இருந்தால் அடுத்த முறை சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Anonymous said...

1.அன்பின் ஆழத்தை கவிதையாய் சொல்லும் “நந்தலாலா” படம் பற்றிய தங்கள் விமர்சனம்?(http://www.tamizh.ws/2010/11/nandalala-2010-mysskin-snightha-akolk.html)
2.வெறும் விளம்பர தந்திரத்தால் சன் டீவியின் எந்திரன் படம் வெற்றி பெற்றது எனும் கருத்து பற்றி?
3. தமிழ் நாட்டில் திரைப்படத்துறை ஒரு சில குழுக்களின் கையில் எனும் உலவும் கருத்தின் அடிப்படையில், இது எங்கே கொண்டு போய் விடும்?
4.இந்த 85 வயதிலும் கலைஞரின் ஞாபக சகதியின் ஆளுமை பற்றி?
5.தமிழக முதல்வரின் பிள்ளைகளில் அவரது அரசியல் வாரீசாக யார் வரவேண்டும் என்பது உங்கள் கருத்து,விளக்கத்துடன்?

எல் கே said...

இதில் வருத்தம் என்னவென்றால் இணையத்தில் உலவும் பல படித்த மேதைகளும் இன உணர்வை தூண்டிவிட்டு சண்டைதான் போடுகின்றனர்

நீச்சல்காரன் said...

இணையத்தில் அதிகமான செய்தி வலை தளங்கள் புழக்கத்தில் உள்ளன. இன்னும் அதிகரிக்க கூடும். அதிகமான செய்தி ஊடகங்கள் பெருகுவது நல்லதா கேட்டதா?

பத்மநாபன் said...

பதில்கள் நறுக் தகவல்கள் மற்றும் சுவாரஸ்யம் ...

அரசியல்வாதிகளால் சுருட்டி ஸ்விஸ் வங்கியில் போட்ட இந்திய பணத்தை மீட்க வழியே இல்லையா ?

Narayanan said...

thanks dondu sir. so 'kudamurutti' drama is just like the 'stalin - knife - railway station - unknown attacker' drama.

virutcham said...

சுவாமி அவரது ஜனதா பார்டி தளத்தில் கூறி இருக்கும் தகவல்கள் மற்றும் வேறு சில பெட்டிகளில் கூறி இருக்கும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி தரும் தகவல்கள். இது வரை யாரும் அவர் மேல் மான நஷ்ட வழக்கு போட்டா மாதிரி தெரியலை.
இதில் சில விஷயங்களுக்கு இவர் தான் வழக்கு போட்டு வைத்து இருக்கிறார். இவரது இந்த வழக்குகள் ஆதார மற்றது என்று தள்ளுபடி கூட செய்யப் படவில்லை.
அதனாலேயே அவர் தான் நம் நாட்டு சட்டத்தின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருப்பதாக சொல்லுகிறார்.

virutcham said...

என் சார்பில் ஒரு கேள்வி :
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் ஒட்டிய தெருக்களில் ஒரே தொன்னை குப்பைகள் போட்டு வைத்திருப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன ? யாராவது இதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தது உண்டா?
நான் கோவில் நிர்வாகத்துக்கு
மின்னஞ்சல் அனுப்பி பதில் இல்லை. அது சம்பந்தமான எனது பதிவு
http://www.virutcham.com/2010/11/நங்கநல்லூர்-ஆஞ்சநேயரும்/

குறையொன்றுமில்லை. said...

பதில்கள், நல்ல தகவல்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது