10/05/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.10.2011

விட்டலன், புதிய தென்றல் மற்றும் நான்
எனது இப்பதிவில் இது சம்பந்தமாக நான் இட்ட கடைசி பின்னூட்டம் பற்றி சில வரிகள்:
தமிழ்மணத்தின் இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:
//ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே.//
அதைத்தான் நானும் காவ்யாவும் விட்டலன் போன்றவர்கள் விஷயத்தில் செய்தோம்.
நான் கேட்டுக் கொண்டபடி அம்மாதிரியான விளம்பரப் பதிவுகள் அதற்கான ஏதேனும் ஓர் அடையாளத்துடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரேனும் நிஜமாகவே தில்லாலங்கடி வேலை செய்து தமது பதிவை முகப்புப் பக்கத்திலேயே நிலைக்கச் செய்தால், நான் அவை விளம்பரப் பதிவாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பலனாய் ஒன்றுமே கூறாது விட்டுவிடும் வாய்ப்பு உண்டு.

இப்போதெல்லாம் விட்டலனோ புதிய தென்றலோ காணப்படவில்லை.

சந்தேகம் கேள் மகனே, அப்போதுதான் உனக்கு அறிவு வளரும்!!!
மகன்: அப்பா நீராவி இஞ்சின் எப்படி வேலை செய்கிறது?
தந்தை: (பேப்பர் படித்தவாறு) தெரியாது மகனே.

மகன்: உலகிலேயே அதிக மழை பொழியும் ஊர் எது?
தந்தை: (கொட்டாவி விட்டவாறு) தெரியாது மகனே.

மகன்: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?
தந்தை: கககபோ

மகன்: கொதிக்கும் நீர் முழுவதும் ஆவியாகும் வரைக்கும் உஷ்ண அளவு 100 டிகிரி செல்சியாகவே நிற்கிறது அது ஏன்?
தந்தை: நான் என்னத்தைக் கண்டேன்.

அரை மணி நேரம் மௌனம் நிலவுகிறது.

தந்தை: என்ன மகனே கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டாய்? கேள்வி கேட்டுக் கொண்டேயிரு, அப்போதுதான் அறிவு வளரும்.

Any resemblance with actual events is purely intentional!

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் கல்வி அமைச்சர்
ஒரு விவேக் படத்தில் ஒரு காட்சி. விவேக்குக்கு தவறாக ஆபரேஷன் செய்து விடுகிறார் டாக்டர். விவேக் தட்டிக் கேட்க அவர் பம்முகிறார். அப்போது அங்கு வரும் கம்பவுண்டர் “டாக்டர், நீங்கள் ப்ளஸ் டூவுல பாஸ் பண்ணிட்டீங்க” எனக்கூற, விவேக் டரியலாகிறார். படம் பெயர் யாராவது சொல்லுங்கப்பூ.

இப்போ பார்த்தால் பத்தாவது கூட பாஸ் செய்யாத கல்யாணசுந்தரம் புதுவையில் கல்வி அமைச்சர்! சட்டப்படி தவறில்லைதான், இருந்தாலும் இடிக்கிறது. இந்த அழகில் அவர் இப்போது பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் நிலையில் சமூக அறிவியல் தேர்வில் வசூல்ராஜா கிரேசி மோகன் மாதிரி இவர் சார்பில் இன்னொருவர் பரீட்சை எழுதுவதாக பீதியை கிளப்புகிறார்கள்.

அசாம் முதன் மந்திரியாக தெரிவு செய்யப்பட்ட பிரஃபூல்ல குமார் மொஹந்தாவும்தான் பிறகு ஒரு பரீட்சை சக மாணவர்களுடன் சேர்ந்து பந்தா ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே எழுதினார். நிருபர்கள் அதை கவர் செய்தனர். புதுவை கல்வி அமைச்சருக்கு மட்டும் இங்கு என்ன பிரச்சினை?

மெகா சீரியல்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
ஒரு சீரியலை தொய்வு ஏதும் இல்லாமல் கொண்டு செல்வதில் உள்ள கஷ்டம் நம்மைப் போன்ற வெளி ஆட்களுக்கு புரியாதுதான். இந்த முயற்சியில் பல டைரக்டர்கள் லேடீஸ் செண்டிமெண்டை பிழிந்தெடுக்க முயற்சி செய்து அபத்தமான அளவுக்கு செல்வதும் நடப்பதுதான். “கோபுரங்கள் சாய்வதில்லை” என்னும் அருமையான திரைப்படத்தை இப்போது கடந்த பல ஆண்டுகளாக கஸ்தூரி என்னும் சீரியலாக எடுத்து கொலை செய்வதையும் பார்க்கிறோம்.

அதே சமயம் “எங்கே பிராமணன்” போன்ற சீரியலையும் பார்க்கிறோம். எப்படி ஒரு சீரியலை எடுக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் எங்கே பிராமணன் என நான் பலமுறை சொல்லியாகி விட்டது.

இப்போது நான் மிகவும் ரசிக்கும் ஒரு சீரியல் “நாதஸ்வரம்”. அது வந்த புதிதில் நான் பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் ஆரம்ப எபிசோடுகள் பலவற்றை பார்க்கவில்லைதான். இருப்பினும் என் வீட்டம்மாவிடம் கதை சுருக்கம் பெற்றுக் கொண்டு பிறகு பார்க்க ஆரம்பித்தது முதல் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் சில எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் காட்டப்பட்டபோது சம்பந்தப்பட்ட பதிவுகளை பார்க்காமல் புறக்கணிக்கவும் செய்தேன் என்பதும் நிஜம்.

இப்போதுதான் சில நாட்களாக விட்டுப்போன ஆரம்ப எபிசோடுகளை டெக்சதீஷ் உபயத்தில் பார்த்தேன். அசந்து விட்டேன். சும்மா சொல்லப்படாது, திருமுருகன் சீரியலின் மேல் தனது முழு கண்ட்ரோலையும் வைத்துள்ளார். முதல் நான்கு எபிசோடுகளிலேயே பாத்திரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டு விட்டனர்.

கீழே நான் காட்டும் க்ளிப்பிங்க் அக்டோபர் மூன்றாம் தேதியுடையது. காவிய ரேஞ்சுக்கு இதை டைரக்டர் இயக்கியுள்ளார். கோபி, மலருக்கு இனிமேல்தான் பல சோதனைகள் வரப்போகின்றன என்றாலும், அவர்கள் இருவருமாக சேர்ந்தே அவற்றை எதிர்கொள்வார்கள் என்ற நிச்சயமும் மனதில் ஏற்படுகிறது. வசனகர்த்தாவுக்கு ஒரு சல்யூட். திருமுருகனுக்கும், கோபிக்கும் மலருக்கும், காஜாவுக்கும் ரோகிணிக்கும்தான்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

aotspr said...

"மகன்: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?
தந்தை: கககபோ"

சூப்பர் காமெடி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது