என் வீட்டம்மாவை சில நாட்கள் முன்னால் கேட்டேன், நாம எப்ப ஃப்ரிட்ஜ் முதலில் வாங்கினோம் என்று. ஒரு நிமிடம் என்னைக் கூர்ந்து பார்த்தார். பிறகு கண்ணில் பல்ப் எரிவதுபோல ஒரு வெளிச்சம் மாதிரி நான் உணர்ந்தேன்.
உங்க கடைசி தங்கையின் கல்யாணத்துக்காக சென்னைக்குச் சென்றீர்கள் அல்லவா அப்போதுதான் வாங்கினேன். அதாவது 1982-ஆம் வருடம். அவள் கல்யாணம் ஜூன் நடுவில். அடுத்த மாதம் ஒரு வெள்ளியன்று ஃப்ரிட்ஜ் வீட்டுக்கு வந்தது. நான் எனது பேங்கில் லோன் போட்டு வாங்கினேன். ஆனால் எந்த வெள்ளிக்கிழமை எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தார், ஒரு விநாடிக்கு. முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது. ஆம், முதல் வெள்ளிதான், ஏனெனில் அதையடுத்த முதல் ஞாயிறன்று நீங்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தில்லி வந்து சேர்ந்தீர்கள். நீங்கள் வந்தது ஜூலை 4-ஆம் தேதி. ஆகவே ஃப்ரிட்ஜ் நம்ம வீட்டுக்கு வாங்கியது 1982, ஜூலை 2-ஆம் தேதி.
என் வீட்டம்மா சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியளித்தால், பாவம் எதிர்க்கட்சி வக்கீல். நொந்து விடுவார், இவர் விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருவதற்கு உபயோகிக்கும் முறை பற்றி.
இப்போது முதல் டிஸ்கி. இங்கு வரும் நான் டோண்டு ராகவனல்ல. சமீபத்தில் 1967-ல் ரீடர்ஸ் டைஜஸ்டில் My wife, the computer என்னும் தலைப்பில் வந்த ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நான் சொன்ன உதாரணங்கள் உண்மை. அவை இக்கட்டுரையை விளக்க என் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதே.
இப்பதிவின் நோக்கம் நாம் எவ்வாறு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறோம் என்பதைக் கூறுவதே. இந்த முறை ஆராய்ச்சியாளர்கள் சரித்திர நிகழ்வுகளின் தேதிகளை நிர்ணயம் செய்ய பயன்படுத்துகின்றனர். ஒரு அரசனது கல்வெட்டில் சில தெரிந்த வேறு பல அரசர்கள், நூல்கள் பெயர் இருந்தால், இந்த அரசனின் காலகட்டத்தை நிர்ணயிப்பதுபோல என வைத்துக் கொள்வது போலத்தான்.
நான் அடிக்கடி சமீபத்தில் 1955, 54, 52 என்றெல்லாம் எவ்வாறு எழுதுகிறேன் தெரியுமா? குறிப்பிட்ட நிகழ்வின் போது நான் எங்கிருந்தேன், அப்போது பள்ளி மாணவனாக இருந்திருந்தால் எந்த வகுப்பில், கல்லூரி மாணவனாக இருந்தால் எந்தக் கல்லூரியில் (புதுக்கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி), வேலையில் இருந்தால் சி.பி.டபிள்யூ.டி.யிலா அல்லது ஐ.டி.பி.எல்லிலா என்பதையெல்லாம் நினைவு கூற வேண்டியதுதானே. ரொம்பவும் சுலபமானச் செயலே.
உதாரணத்துக்கு இந்த ஹைப்பர்லிங்கையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த நிகழ்வு நான் Mittelstufe-I ஜெர்மன் வகுப்பில் படித்த போது வந்தது. ஆகவே என்ன ஆண்டு எழுதுவதில் பிரச்சினையல்ல. குமுதத்தில் அக்கட்டுரை வந்தபோது நான் பள்ளியிறுதி வகுப்பில் இரண்டாம் டெர்மில் இருந்தேன் (ஆண்டு 1961). என்ன, இவையெல்லாம் வெகுவிரைவில் நினைவுக்கு வரும் அவ்வளவே.
ஆனால் இந்த முறையை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் வரப்போகிறார் என அமர்க்களப்படுகிறது என வைத்துக் கொள்வோம். ஆசிரியர் மாணாக்கர்களிடம் கூறுகிறார். இதோ பாருங்கப்பா, உலகத்தின் வடிவம் என்ன என்று கேட்டால், எனது வட்டமான பொடி டப்பியை நினைவில் கொண்டு, உலகம் உருண்டை எனக்கூறிவிடுங்கள் என்கிறார். இதே போல வேறு பல கேள்விகளுக்கும் உதாரணங்களுடன் விடை சொல்லிக் கொடுக்கிறார்.
இன்ஸ்பெக்டர் வந்தார். அன்று பார்த்து ஆசிரியர் தன் பொடி டப்பியை கொண்டுவர மறந்து விட்டார். யதார்த்தமாக அடுத்த வகுப்பு ஆசிரியரின் பொடி டப்பியை இரவல் வாங்கி பயன்படுத்தினார். அப்போது பார்த்து இன்ஸ்பெக்டர் வந்து மாணவன் உப்பிலியிடம் உலகத்தின் வடிவம் என்ன எனக்கேட்க, அந்த திருவாழத்தானும் பவ்யமாக கையைக் கட்டிக் கொண்டு, “சார் இத்தனை நாள் உருண்டையாகத்தான் இருந்தது. ஆனால் இன்று மட்டும் சதுரமாகி விட்டது” எனக்கூற, அப்போதுதான் ஆசிரியர் தன் கையில் இருந்த பொடி டப்பி சதுரமானது என்பதை உணர்ந்து திகைத்தார்.
பை தி வே, ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரைக்கு உதாரணமாக நான் எடுத்துக் கொண்ட நிகழ்வு விளக்கத்துக்கு மட்டுமே என்றாலும், என் வீட்டம்மாவின் ஞாபகசக்தி முற்றிலும் வேறுவகை. அவர் ஒருவரை ஒரு முறை பார்த்தால் போதும், அவர் முகத்தை நினைவில் வைத்திருப்பார். எனக்கு அத்திறமை அவ்வளவாக இல்லை. சில முறைகளாவது பார்க்க வேண்டும் ஒருவரை. ஆனால் பிறகு ஆண்டுகள் எவ்வளவானாலும் அவரை அடையாளம் கண்டு கொள்வேன். ஸ்டார்டிங் டிரபிள் போல என வைத்துக் கொள்ளலாம்.
மனைவி வெளியில் சென்றிருக்கும்போது நான் சமையலறையிலிருந்து முந்திரிப் பருப்பு, பாதாம், திராட்சை ஆகியவற்றைத் தேட்டை போடுவதுண்டு. அவர் வீட்டுக்குள் வந்ததும் சமையலறைக்குச் செல்வார். ஆனால் அதற்கு முன்னமே என் முகக்குறியிலிருந்து ஏதோ திருட்டுவேலை செய்திருப்பதை கண்டு கொள்வார் போலிருக்கிறது. உள்ளே சென்றதும், என்னைக் கூப்பிட்டு சில பாத்திரங்கள் ஏன் இடம் மாறின எனக்கேட்பார். திருதிருவென முழிப்பதைக் கண்டதும் முந்திரிப்பருப்பு, பாதாம் திராட்சையுடன் சேர்த்து நெய்யையும் எடுத்து சாப்பிட்டதகக் குற்றம் சாட்டுவார். நெய் இல்லை என்று கூறி, மீதி மட்டும்தான் எடுத்தேன் என அசடு வழிய வேண்டும்.
இன்று எனது சமையல். அவர் தங்கை வீட்டுக்கு சென்றிருக்கிறார். குழம்புப்பொடி எங்கே என நான் ஃபோன் செய்து கேட்ட போது போட்டோக்ராஃபிக் மெமரியில் இந்த டின்னுக்கு பக்கத்தில் இந்த கிளாஸ் ஜார், அதன் பக்கத்தில் பச்சை மூடி போட்ட ஹார்லிக்ஸ் பாட்டில் என்று அடையாளம் கூறினார்.
சமையல் செய்த ஜோரில் பல பாத்திரங்கள் இடம் மாறிவிட்டன. அவர் வந்ததும் இருக்கிறது கச்சேரி. ஈஸ்வரோ ரக்ஷது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
-
பொழுதுபோக்கு நூல்களை உயர் இலக்கியம் என்று நினைத்த ஒரு காலகட்டம் 1990 வரை
தமிழ்ச்சூழலில் இருந்தது. அன்று இலக்கியம் என்பதை முன்வைக்கும்பொருட்டு
இலக்கிய முன்ன...
7 hours ago