1/06/2005

Even a scene in a mega-serial can be a hyperlink

புறா சமாதானச் சின்னமே இல்லை.

எல்லோரும் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவதற்கு முன் நான் கொடுக்கும் ஆதாரங்களைப் பாருங்கள்.

கோன்ராட் லோரென்ட்ஸ் (Konrad Lorenz) என்பவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. அவர் எழுதியப் புத்தகம் எங்களுக்கு ஜெர்மன் டிப்ளமா பரீட்சைக்குரியப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

புத்தகத்தின் பெயர் "Er redete mit dem Vieh, den Vögeln und den Fischen"(மிருகம், பறவைகள் மற்றும் மீன்களுடன் பேசினான் அவன் (அரசன் சாலமன்)). இனி புத்தகத்திலிருந்துத் தொகுத்துத் தருகிறேன்.

இரண்டு நாய்கள் ஆவேசமாகச் சண்டை போடுகின்றன. ஒரு நாய் சளைத்து விட்டது. அது உடனே கீழே படுத்துக் கொண்டு தன் கழுத்தை இன்னொரு நாய்க்குக் காட்டுகிறது.

ஒரு கடியில் கதை முடிந்து விடும் என்று எதிர்ப்பார்த்த கோன்ராடுக்கு வியப்பு. வெற்றியின் விளிம்பில் இருக்கும் நாய் அதைக் கடிக்கவில்லை. அதையே சுற்றிச் சுற்றி வருகிறது. படுத்திருக்கும் நாய் எழுந்தவுடன் சண்டை மறுபடியும் துவங்குகிறது.

கோன்ராட் இதை Demütsgebärde (சரணாகதிச் சமிக்ஞை) என்றுக் குறிப்பிடுகிறார். நாய், ஓநாய், சிங்கம், புலி ஆகிய மிருகங்களின் பரம்பரை அணுக்களில் புதைந்துள்ள அற்புதம் இது.

ஆனால் புறாக்கள்? அதே புத்தகத்தில் கான்ராட் கூறுவதைப் பாருங்கள்.

இரண்டு புறாக்கள் ஒரே கூண்டில் இருந்தன. ஒரு புறா அமைதியான முக பாவத்துடன் வலிமையற்ற இன்னொருப் புறாவின் கழுத்தைக் கொத்திக் குதறுகிறது. ஒரே ரத்தம். இருப்பினும் கொத்துவது நிற்கவில்லை. மரணத்துக்குப் பிறகே அது நிற்கிறது.

ஆனாலும் இது அதிகம் காணக் கிடைக்காதக் காட்சிதான் ஏனெனில் சுதந்திரமாகப் பறக்கும் நிலையில் வலிமைக் குறைந்தப் புறா பறந்துச் சென்று விடும்.

இப்போது இதை நான் ஏன் கூறுகிறேன் என்றுக் கேட்பவர்களுக்கு:

நேற்று நான் பார்த்த மெட்டி ஒலிக் காட்சிதான் நான் மேலே கூறியதற்கு எனக்கு ஹைப்பர் லிங்காகச் செயல் பட்டது.

ரவிப் புறா லீலாப் புறாவைக் குத்துகிறது. லீலாப் புறாவின் அப்பாவாகிய சிதம்பரம் புறா லீலாவுக்குப் பொறுமையை உபதேசிக்கிறது. ஏன்? இந்தியப் பண்பாடாம்.

இந்தக் கூண்டில் அடைப்பட்டுக் கிடக்கும் லீலாப் புறாக்கள் தேவையானால் கட்டுப்பாடுகளை உடைக்கத் தைரியம் கொள்ளும்படிக் கதையை நடத்தத் தெரியாமல் திருமுருகன் என்னும் டைரக்டர் புறா எல்லோர் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்கிறது.

எல்லா தமிழ் சீரியலகளுமே இந்தக் குற்றத்தைத்தான் செய்கின்றன. இது பற்றிப் பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

அட இப்படியான தொடர்களில் ஏதாவது நல்ல விசயம் சொல்லப்படும் என்றா நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? பண்பாடு என்று சொல்பவர்கள், நல்ல வேளையாக சில நூற்றாண்டுகளின் முன் நம்மிடமிருந்த பண்பாடான பரத்தையர் ஒழுக்கத்தைக் காட்டவில்லை. அந்தளவில் நிம்மதியாயிருக்கோணும். புரிஞசுதா?

dondu(#4800161) said...

உங்கள் கருத்திலிருந்து நான் சற்றே மாறுபடுகிறேன். மெட்டி ஒலி மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் சில தொடர்களில் முக்கியமானது என்பது என் எண்ணம். இம்மாதிரியானத் தொடர்களில் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன் இயக்குனர் பல விஷயங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும். தவறான முறையில் கூறப்படும் கருத்துகள் இம்மாதிரியானத் தொடர்களில் எதிர் மறை விளைவுகளையே ஏற்ப்படுத்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது